• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 24

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-24

அன்றைய காலைச் சமையலில் ஈடுபட்டிருந்தார் மஞ்சுளா. எப்போதும் போல அவருக்கு உதவிகளைச் செய்துகொண்டிருந்தாள் இலக்கியா.

அவள் மனதிலோ வலியும் வேதனையும் மட்டுமே நிறைந்து கிடந்தது. அதனால் உண்டான மனச்சோர்வு உடலையும் தாக்கியதில் உற்சாகத்தை முற்றிலுமாக இழந்திருந்தாள். அந்தளவுக்குக் கணவனின் கடுமையும், சுடுசொற்களும் அவளைப் பாதித்திருந்தன.

அன்று அவன் வீசிய சொல்லம்புகள் ஒருபுறம் வதைத்தாலும், எல்லாவற்றையும் மறந்து அவள் முகம் பார்க்கமாட்டானா? பார்த்துச் சிரிக்க மாட்டானா? பழையபடி மாறமாட்டானா? என்று தவித்தது மறுபக்க மனது. அவளிடம் மன்னிப்புக் கேட்கவேண்டாம், பேசினாலே போதுமே என்று ஏக்கம் கொண்டது ரோசம் கெட்ட காதல் நெஞ்சம்!

சூரியனைப் பார்த்து மலரும் தாமரையாய் அவனின் முகம் பார்த்து மலர்ந்தவள் இன்று அவனின் முகத்திருப்பலில் வாடி வதங்கிப் போனாள்.

ஆரம்பத்தில் அவளிடம் கடுமை காட்டினாலும் பிறகு எவ்வளவு இன்பமாகக் கழிந்தது அவர்களின் நாட்கள். அதேபோன்ற இன்பமான நாட்களை மீண்டும் அவளுக்கு மீட்டுத் தரமாட்டானா என்கிற ஏக்கத்தோடு கணவனைப் பார்த்தாள் இலக்கியா. அவனோ இறுகிப்போய் எங்கோ பார்வையைப் பதித்தபடி வராண்டாவில் அமர்ந்திருந்தான்.

கண்களில் துருத்த கண்ணீரோடு அடுப்படிக்கு நடந்தவளை, “லக்கி..” என்று அழைத்தபடி, அவளிடம் வந்தார் மகேஸ்வரி.

அவளின் கையைப் பற்றி, “நான் போய்வரட்டுமா லக்கிம்மா?” என்று கேட்டார்.

எங்கே? என்கிற கேள்வி எழுந்தாலும் அதைக் கேட்கும் ஆர்வம் இல்லாததில் பெயருக்கு தலையை ஆட்டினாள் இலக்கியா.

“என் மகளையும் பேத்தியையும் நான் பார்த்துவிட்டு வரும்போது, நீயும் எனக்கு நல்ல செய்தி சொல்லவேண்டும், சரிதானா?” என்று அவளின் கன்னம் வருடி அவர் சொன்னபோது, அதிர்ச்சியில் விரிந்த விழிகளோடு சட்டெனக் கணவனைத்தான் திரும்பிப் பார்த்தாள் இலக்கியா.

ஐயோ.. மகி மிஸ் எங்கே போகிறார் என்று தெரிந்தால் அவன் இன்னும் கோபப்படப் போகிறானே என்று அவள் பதறுகையிலேயே, “அங்கே என்ன பார்க்கிறாய்? தர்சனையா? அவனிடம் நான் வெள்ளிக்கிழமையே எல்லாம் பேசிவிட்டேன்.” என்றார் மகேஸ்வரி.

இப்போது அதிர்ச்சியோடு அவரைப் பார்த்து விழித்தாள் இலக்கியா.

வெள்ளிக்கிழமை.. வெள்ளி.. ஆமாம்.. அன்றுதான் அவள் கோவிலுக்குப் போய்விட்டு வந்தாள். அன்றுதான் கணவன் அவளிடம் கோபத்தைக் காட்டினான். கோபத்தை மட்டுமல்ல அபாண்டமாகவும் அவளைக் குற்றவாளியாக்கினான்.

அதற்குக் காரணம் மகேஸ்வரி வெண்பாவை அவனுக்கு நினைவூட்டியதா? அதனால்தான் அவளைப்போட்டு அந்த வாட்டு வாட்டினானா?

அவளுக்கும் முகத்தில் வெந்நீரை ஊற்றியது போலிருந்தது வெண்பாவின் நினைவுகள்.

எப்படி மறந்தாள்? அவனுடைய முதல் காதலை, முதல் மனைவியை எல்லாம் எப்படி மறந்தாள்? தன் மனதில் பூத்த காதலை மறைப்பதிலேயே குறியாக இருந்தவள் இதையெல்லாம் மறந்து போனாளா? அல்லது அந்தக் காதலே அதையெல்லாம் ஒதுக்கச் செய்துவிட்டதா?

ஆனால், அவன் இன்னும் அதையெல்லாம் மறக்கவில்லையே! மறந்திருக்க, இப்படி அவளை அவனால் குதறியிருக்க முடியுமா?

அவளின் கணவன் இன்னொருத்திக்குச் சொந்தமாக இருந்தவன்! அவள் சாய்ந்து சுகம் கண்ட முடிக்கற்றைகள் நிறைந்த மார்பில் முதலும் ஒருத்தி சாய்ந்திருக்கிறாள்! அவனுடைய வலிய கரங்கள் இன்னொருத்தியின் இடையையும் வளைத்திருக்கிறது. அந்த அழுத்தமான உதடுகள் இன்னொருத்தியின்..சீச்சி..!!

நெஞ்சுக்குள் குமட்டிக்கொண்டு வந்தது.

ஆனால், இவ்வளவு நாட்களும் அதையெல்லாம் மறந்துவிட்டு அவனோடு ஒன்றினாளே. தூய அன்பை அவன்மேல் அளவின்றிக் காட்டினாளே. அவனுக்கு ஒன்று என்றால் நானும் உயிரோடு இருக்கமாட்டேன் என்று துடித்தாளே.. அவனைத் தவிர வேறு நினைவுகளை மனதில் சுமந்ததே இல்லையே! பிடிக்காத திருமணமாக இருந்தாலும் அவனைப் பிடித்து வாழ்ந்தாளே!

இதற்கெல்லாம் கிடைத்த பரிசு, கணவனின் வாயால் கிடைத்த அபாண்டமான பழிச்சொற்கள!

இவ்வளவு நாட்களும் எதற்காக இந்தக் கோபம் என்று யோசித்து யோசித்துக் குழம்பித் தவித்தவளுக்கு இன்று காரணம் புரிந்தபோது மனம் வெகுண்டது.
என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் அவளைப் பற்றி? நெஞ்சுக்குள் பெரும் பிரளயம் ஒன்றே நடக்கத் தொடங்கியது அவளுக்கு.

கோபக்காரக் கணவன் ஏதோ கோபத்தில் வார்த்தைகளைத் தவறவிட்டுவிட்டான் என்று தன்னைச் சமாதானம் செய்ய முயன்று கொண்டிருந்தவள் இப்போது கொதித்துப் போனாள்.

கொதிநிலையின் உச்சத்தில் இருந்தவளுக்கு, மகேஸ்வரி போய்வருகிறேன் என்று சொன்னதோ, அவளை அணைத்து உச்சியில் முத்தமிட்டதோ, சிலையாக நின்றவளை தர்சன் புதிராகப் பார்த்ததோ எதுவுமே கண்ணிலும் படவில்லை. கருத்திலும் பதியவில்லை.

விறுவிறு என்று மாடியேறி தங்களின் அறைக்குள் நுழைந்தவளுக்கு அந்த அறையே அன்னியமாக இருந்தது.

இதே அறையில் அவளுடைய கணவன் இன்னொருத்தியோடு வாழ்ந்திருக்கிறான். அதே வாழ்க்கையை, அவளை மனதில் சுமந்துகொண்டு இவளோடும் வாழ்ந்திருக்கிறான். நெஞ்சுக்குள் தீப்பிடித்தது அவளுக்கு.

அழுகையும் ஆத்திரமும் அருவருப்பும் சேர்ந்தே வந்தது.

சற்று நேரத்திலேயே மேலே வந்தான் தர்சன். “வெளியூருக்குப் போகிறவரை வாசல் வரை வந்து வழியனுப்பவேண்டும் என்கிற மரியாதை கூடவா இல்லை?” என்றான் குற்றம் சாட்டும் குரலில்.

“ஏன்? நான் வந்து வழியனுப்பா விட்டால் அவர் போகமாட்டாரோ?” என்றாள் குத்தலாக.

வியப்போடு மனைவியைப் பார்த்தான் தர்சன். அடுத்தவரை குத்திப் பேசுவதோ அலட்சியம் செய்வதோ மனைவியின் குணம் அல்லவே.

“என்ன பேசுகிறாய் நீ? போய்வருகிறேன் என்று சொல்கிறார் அவர். நீயோ வாயை மூடிக்கொண்டு நிற்கிறாய். இது போதாது என்று விறுவிறு என்று இங்கே வந்துவிட்டாய். இதெல்லாம் என்ன பழக்கம்?”

“ஓ..! உங்கள் முன்னாள் மனைவியின் அம்மாவுக்குத் தகுந்த மரியாதை கொடுக்கவில்லை என்றதும் கோபம் வந்துவிட்டது போல..” என்று அப்போதும் குறையாத ஏளனத்தோடு கேட்டாள் இலக்கியா.

அதிர்ச்சியோடு மனைவியைப் பார்த்தான் தர்சன். அவளும் நேர்கொண்ட பார்வையை விலக்கிக் கொள்ளவில்லை. அந்தப் பார்வையும் அவளிடத்தில் புதிது.

“நான் என்ன சொல்கிறேன் நீ என்ன பேசுகிறாய்..? கண்டபடி எதையும் உளறாதே..” புருவச் சுளிப்போடு அவன் சொன்னபோது,

“ஆமாமாம்! நான் பேசுவது எல்லாமே உளறலாகத்தான் இருக்கும். அப்போ யாரின் பேச்சு உங்களுக்கு இனிக்கும்? உங்களை விட்டுவிட்டு ஓடினாளே, அவளின் பேச்சா?”

தர்சனின் முகம் இறுகிக் கருத்தது. அவமானத்தில் சிவந்தது. அவனுக்கு விழுந்த மரண அடியை, அவன் வாழ்க்கையின் கறுப்புப் பக்கத்தை, அவன் பட்ட அவமானத்தைக் குத்திக் காட்டிய மனைவியை விழிகளால் உறுத்தத்தான். “தேவை இல்லாததுகளைப் பேசி என்னை மிருகம் ஆக்காதே!” என்றான் கடினப்பட்ட குரலில்.

“இப்போது மட்டும் மனிதனாக இருப்பதாக நினைப்போ?” என்று வெடித்தாள் இலக்கியா.

“இன்னொருத்தியை மனதில் வைத்துக்கொண்டு என்னோடு வாழ்வதும், அவளின் நினைவில் என்னை உதாசீனப்படுத்துவதும், அவமானப் படுத்துவதும் நல்ல மனிதன் செய்யும் செயலா? இதைவிடக் கேவலம் ஒரு பெண்ணுக்கு வேறு என்ன இருக்க முடியும்?” ஆவேசத்தோடு அவள் கேட்டபோது சில கணங்கள் பதில் சொல்ல இயலவில்லை அவனால்.

வேகமாகவே தன்னைச் சமாளித்துக்கொண்டு, “எவளையும் மனதில் வைத்துக்கொண்டு உன்னோடு வாழவில்லை என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்!” என்றான் அழுத்தமான குரலில் எரிச்சல் மிக.

“அப்படி எவளையும் நினைக்காதவர் தான் இந்த ஒரு வாரமாக என்னைப் போட்டு அந்தப்பாடு படுத்தினீர்களா? அவள் எவனையோ கூட்டிக்கொண்டு ஓடினால் என்னைச் சந்தேகப் படுவீர்களா? நான் கோவிலுக்குப் போனால் யாரோடும் ஊரை சுற்றுகிறேன் என்பீர்களா? உங்கள் அண்ணியின் கால் தூசுக்கு நான் வரமாட்டேனா? அந்தளவுக்கு எதில் குறைந்துபோனேன்? ஒழுக்கத்திலா? பழக்கத்திலா? அல்லது உங்களைக் கவனித்துக் கொள்வதிலா? நான் காட்டிய அன்பிலா? நேசத்திலா? பாசத்திலா? சொல்லுங்கள்! எதில் உங்களுக்குக் குறை வைத்தேன்.” அவனின் சட்டையைப் பிடிக்காத குறையாகக் கேட்டாள் இலக்கியா.

அவளின் எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல இயலாமல் போனதில் உண்டான எரிச்சலில், “என்னவோ என்னைக் காதலித்து, கட்டினால் என்னைத்தான் கட்டுவேன் என்று ஒற்றைக்காலில் நின்று கட்டியவள் போல் பேசுகிறாயே. என்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னவள் தானே நீ!” என்று கேட்ட கணவனை வெறித்தாள் இலக்கியா.

இதையே எத்தனை தடவை சொல்லிக்காட்டுவான்?

“ஆமாம்! உங்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னேன் தான். என் கணவன் எனக்கு மட்டுமே சொந்தமானவராக, என்னை மட்டுமே நினைப்பவராக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். நான் மட்டுமே அவரின் உலகமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்படியான எனக்கு இரண்டாம் தாரமாக வருவது பிடிக்கவில்லை. தாரமாக வாழலாம், ஆனால் இரண்டாம் தரமாக வாழமுடியாது. அதைச் சொன்னேன் தான். அதிலே என்ன தப்பு? உங்களைப் போல மனதில் ஒருத்தியை வைத்துக்கொண்டு இன்னொருத்தியை மணப்பதுதான் தப்பு! அசிங்கம்! கேவலம்!” என்றாள் இலக்கியா கொதிப்பின் உச்சத்தில் நின்று.

ஊமையடி ஒன்று அவன் மனதில் மிக ஆழமாய் விழுந்ததில் அதிர்ச்சியை மறைக்க முடியாமல் மனைவியை வெறித்தான் தர்சன். .

“ஆரம்பத்தில் பிடிக்காமல் உங்களோடு வாழ்ந்தாலும் பிறகு பிறகு நான் மாறவில்லையா? உங்கள் மீது உயிரையே வைக்கவில்லையா? எங்கே என்னைப் பார்த்துச் சொல்லுங்கள், உங்களோடு நான் வாழ்ந்த வாழ்க்கை பொய் என்று. பிடிக்காமல் வாழ்ந்தேன் என்று.” என்று அவள் கேட்டபோது அவனால் மறுமொழி சொல்ல முடியவில்லை.

அவளின் அன்பில் மூழ்கி, அதில் திளைத்து தன்னையே தொலைத்தவனால் நீ என்னுடன் வாழ்ந்த வாழ்க்கை பொய் என்று எப்படிச் சொல்லமுடியும்? அதற்காக அவள் சொல்லும் குற்றச் சாட்டும் உண்மை அல்லவே!
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
“எங்கள் வீட்டில் பணம் மட்டும்தான் இல்லை. மற்றும்படி மானம், மரியாதை, சுயகவுரவம், தன்மானம் எல்லாமே நிறைந்து கிடக்கிறது. ஒழுக்கம்.. அது உங்களை விடச் சற்று அதிகமாகவே என்னிடம் இருக்கிறது. என்னை என்ன அந்த வெண்பா மாதிரி ஒழுக்கம் கெட்டவள் என்று நினைத்தீர்களோ?” என்று அவள் கேட்டபோது, தர்சனுக்கு மெல்லிய கோபம் எட்டிப் பார்த்தது.

“எதற்கு நீ தேவையில்லாமல் அவளை இழுக்கிறாய்? என்னையும் உன்னையும் பற்றி மட்டும் பேசு!” என்றான் அவன்.

“அட அட அட! அவளைப் பற்றி ஒன்று சொன்னதும் எவ்வளவு கோபம் வருகிறது உங்களுக்கு? இப்படி உடலால் என்னோடும் மனதால் அவளோடும் வாழ அசிங்கமாக இல்லை?”

“லயா!!” என்று புலியின் சீற்றத்துடன் உறுமினான் தர்சன். அவன் விழிகளோ ரெத்தக் கட்டியெனச் சிவந்தது! அவளின் கன்னத்தில் அறையும் வேகம் எழுந்தாலும் கைகளைப் பொத்தி, கண்களை இறுக மூடித்திறந்து தன்னை அடக்கினான்.

“பேசுவதை யோசித்துப் பேசு. வார்த்தைகளை விடாதே சொல்லிவிட்டேன்!” என்றான் ஆத்திரத்தை அடக்கிய குரலில்.

“இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்? சொல்லுங்கள் என்ன செய்வீர்கள்?” என்றாள் அவளும் அடங்காமல்.

அவளின் பெயரையே இன்றுதான், அதுவும் கோபத்தில் தான் முதன் முதலாகச் சொல்கிறான் என்கிற கோபமும் இப்போது சேர்ந்துகொண்டது.

“உண்மையைச் சொன்னதற்கே உங்களுக்கு இவ்வளவு கோபம் வருகிறதே, என்மீது அபாண்டமாகப் பழியைப் போட்டீர்களே, அப்போது எனக்கு எப்படி இருந்திருக்கும்? என்னிடமே இவ்வளவு பேசுகிறவர் அவளைப் போட்டு என்ன பாடு படுத்தினீர்களோ யாருக்குத் தெரியும். நான்தான் ஏழை வீட்டில் பிறந்து தொலைத்துவிட்டேன். பிடிக்கிறதோ இல்லையோ எல்லாக் கருமத்தையும் பொறுத்துப் போகும் நிலையில் இருக்கிறேன். என்னைப்போல எல்லாவற்றையும் பொறுத்து வாழவேண்டும் என்று அவளுக்கும் தலையெழுத்தா என்ன? அதுதான் ஓடிவிட்டாள். இப்படி வார்த்தைகளை விசமாகக் கொட்டும் உங்களோடு யாரால்தான் வாழமுடியும்? எவளுமே வாழமாட்டாள்! கடைசிவரை..” என்று சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவளது காதில் பூச்சி பறக்க சுழன்று சென்று ஒரு மூலையில் விழுந்தாள் இலக்கியா.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அந்தளவு வேகமாக அவள் கன்னத்தில் அறைந்திருந்தான் தர்சன்.

“இனியும் வாயை திறந்தாய் என்றால் கொன்றே விடுவேன்!” என்று உறுமிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறினான்.

தர்சனின் கைபேசி அலறியது. இதோடு பலமுறை அது தொண்டைத்தண்ணி வற்றும் அளவுக்குக் கத்தியும் திரும்பியும் பார்க்கவில்லை அவன்.

அழைப்பது அன்னை என்று தெரிந்தாலும் அவன் இருந்த மனநிலையில் யாருடனும் பேசும் நிலையில் இல்லை அவன்.

அந்தளவுக்கு மனைவியின் பேச்சில் அவன் மனம் புழுங்கிக்கொண்டே இருந்தது. அதுவும், வெண்பா சொன்ன அதே வார்த்தைகளையே கொஞ்சம் மாற்றி ‘உங்களோடு யார்தான் வாழ்வார்கள்’ என்று அவள் கேட்டது அவனை மிகவுமே பாதித்தது.

இப்படி அவன் நேசம் வைக்கும் பெண்கள் எல்லோருமே சொல்லும் அளவுக்கு அவன் என்ன கொடூரனா?

திரும்பவும் விமலனின் பெயரைச் சொல்லி சத்தமிட்டது கைபேசி. எடுப்போமா வேண்டாமா என்று அவன் பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருக்கையிலேயே ஓய்ந்துபோன அது மீண்டும் மஞ்சுளாவின் பெயரோடு அலறியது.

அதற்கு மேலும் பொறுக்கமுடியாது அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்தவன், “என்னம்மா? மனிதனை ஒழுங்காக ஒரு வேலையைப் பார்க்க விடமாட்டீர்களா?” என்று சிடுசிடுத்தான்.

“அங்கே நீ வேலை பார்த்துக் கிழித்தது போதும். உடனேயே கிளம்பி ஆஸ்பத்திரிக்கு வா..” என்றார் அவர்.

மனம் பதற, “ஏன்? யாருக்கு என்னம்மா..?” என்று குரலிலும் அந்தப் பதட்டம் தொற்றக்கேட்டான் தர்சன். மனைவிக்கு வேறு கையை நீட்டியது நினைவில் வந்து அவனை இன்னும் பதற வைத்தது.

“லக்கிக்கு..” என்று அவர் சொல்லி முடிக்க முதலே நெஞ்சமும் உடலும் குலுங்க, “அவளுக்கு என்னம்மா?” என்று அவசரமாகக் கேட்டவன், அங்கே மேசையில் கிடந்த கார் திறப்போடு வாசலுக்கு ஓடத் தொடங்கியிருந்தான்.

“நீ அப்பா ஆகப்போகிறாய் தர்சா..” என்றார் அவர் துள்ளலும் துடிப்பும் நிறைந்த குரலில்.

அவசர பிரேக் போட்டது போல் நடை நிற்க, “என்னம்மா சொல்கிறீர்கள்? சும்மா விளையாடாதீர்கள்.” நம்ப இயலாத ஆச்சரியமும் மகிழ்ச்சியும் நிறைந்த குரலில் சற்றே சத்தமாகவே கூவினான் தர்சன்.

“மடையா! இந்த விசயத்தில் யாராவது விளையாடுவார்களா? உடனேயே உனக்குச் சொல்லவேண்டும் என்று எவ்வளவு நேரமாகக் கூப்பிடுகிறேன். நீ எடுத்தால் தானே! முதலில் விரைவாக வா. அவள் இங்கே முடியாமல் படுத்திருக்கிறாள். இதில் நீ வேறு அவளைக் கைநீட்டி அடித்திருக்கிறாய்.” என்றவரின் குரலில் இப்போது கோபமும் குற்றச்சாட்டும் கலந்திருந்தது.

ஆனால், அதையெல்லாம் உணரும் நிலையில் அவன் இல்லை. “இதோ.. இன்னும் பத்து நிமிடங்களில் அங்கிருப்பேன்..” என்றுவிட்டு கைபேசியை அணைத்தவனின் கையில் கார் சீறிப் பாய்ந்தது.

கார் வீதியில் சென்றாலும் அவனோ வானத்தில் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தான். அந்தளவுக்குச் சந்தோசமாக, மகிழ்ச்சியாக, பூரிப்பாக இருந்தது அவனுக்கு. நான் அப்பா ஆகப்போகிறேன் என்று நினைக்கப் பெருமையாகக் கூட இருந்தது.

உடனேயே மனைவியைக் காணவேண்டும், அவளைக் கட்டிக்கொண்டு இந்தச் சந்தோசத்தை அனுபவிக்கவேண்டும் என்று உடலின் அத்தனை அணுக்களும் துடித்தன.

இனி என் வாழ்க்கை வெறுமைதான், பட்ட மரம்தான், பொட்டல் காடுதான் என்கிற நிலை மாறி அவனது வாழ்க்கையைச் சோலையாக மாற்றிவிட்டாளே!

அவனோடு வாழ்ந்து, அவனையும் அப்பாவாக்கி, மற்றவர்களைப் போல ஒரு குடும்பஸ்தனாக மாற்றியவளின் மீது நேசம், பாசம், ஆசை அனைத்தும் அணையை உடைத்த வெள்ளமாக, அதுவரை நாளும் அவனைத் தடுத்துக்கொண்டிருந்த அத்தனை தளைகளையும் தாண்டி பெருக்கெடுத்தது.

அதுவரை காலமும் அவன் மனதில் இருந்த கசப்புக்கள், நடந்த அவமானங்கள், வெறுப்புக்கள் அனைத்துமே விலக, உடலும் மனமும் இலகுவாவதை அவனால் நன்றாகவே உணர முடிந்தது.

இதையெல்லாம் பரிசளித்தவள் அவன் மனைவி!

அவளைக் கட்டிய நாளில் இருந்து முழுமையான இல்லறத்தை முழுமனதோடு வழங்கியவளின் மீது இவ்வளவு நாட்களாகக் கோபத்தைக் காட்டிவிட்டோமே என்று மனம் தவித்தது.

அதெல்லாம் போதாது என்று இன்று கையை வேறு நீட்டிவிட்டோமே.. எப்படித் துடித்தாளோ.. எந்தளவுக்கு வலித்ததோ என்று துடித்தான்.

இதுவரை நாளும் அவன் செய்த தவறுகளுக்கு எல்லாம் பிராயச்சித்தமாக அவளை அவனது உள்ளங்கையில்.. அல்ல அல்ல நெஞ்சில் வைத்துத் தாங்கவேண்டும் என்று எண்ணியவன், அவன் சொன்ன பத்து நிமிடங்களுக்கு முதலே வைத்தியசாலைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

தாயை தேடியபடி வேகமாக உள்ளே விரைந்தான் தர்சன். அங்கே மஞ்சுளா மட்டுமில்லை மொத்தக் குடும்பமுமே மலர்ந்த முகங்களோடு நின்றது.

அவனைக் கண்டதும் வேகமாக முன்னே வந்து, “வாழ்த்துக்கள்டா தர்சா..” என்று
கட்டிக்கொண்ட சகோதரர்கள் அவன் கண்ணில் படவே இல்லை.

“எங்கேம்மா இருக்கிறாள்?”விழிகள் மனைவி இருக்குமிடத்தைத் தேட மஞ்சுளாவிடம் கேட்டான்.

அவன் கேள்விக்குப் பதிலைச் சொல்லாது, “அடிப்பதையும் அடித்துவிட்டு இப்போ மட்டும் எதற்கு அவளைத் தேடுகிறாய்? இதென்ன பழக்கம்? இப்படி நீ அடிக்கத்தான் அவளை உனக்குக் கட்டி வைத்தோமா?” என்று ஆத்திரப் பட்டார் மஞ்சுளா.

அவரின் கேள்விகளைப் பொருட்படுத்தாது நாலாபுறமும் விழிகளைச் சுழற்றி மனைவி இருக்குமிடத்தைத் தேடியவன், ராகினி ஒரு அறையில் இருந்து வெளியே வருவதைக் கண்டுவிட்டு அங்கே விரைந்தான்.
 
Top Bottom