இன்னுயிராவாய் என்னுயிரே - 3

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
அத்தியாயம்-3

ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்ற மகேஸ்வரி தன்னை ஒருவழியாக அதிலிருந்து மீட்டுக்கொண்டார்.

“அண்ணி, உண்மையாகத்தான் சொல்கிறீர்களா?” மஞ்சுளா சொன்னதை இன்னமும் நம்பமுடியாமல் கேட்டார்.

“பின்னே? இதில் யாராவது விளையாடுவார்களா?” என்ற மஞ்சுளா, “என்னப்பா, நான் சொன்னது சரிதானே? நீங்களும் ஒருதடவை உங்கள் வாயால் சொல்லுங்கள். அதன் பிறகாவது உங்கள் தங்கை நம்பட்டும்.” என்றார் கணவனிடம்.

வெண்பாவை ஒருமுறை பார்த்துவிட்டு, “நீ சொன்னால் அது பிழையாக இருக்குமா மஞ்சு.” என்றார் ராஜசேகரும்.

அப்போதும் ஆச்சரியம் விலகாமல் நின்ற தங்கையிடம் திரும்பி, “இதில் நீ இவ்வளவு ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது மகி? இந்த வீட்டுக்கு மருமகளாகும் உரிமை அவளுக்கு உண்டுதானே..” என்றார்.

கண்கள் பனிக்கத் தலையை மட்டும் ஆமோதிப்பாக அசைத்தார் மகேஸ்வரி. சொல்லாமல் கொள்ளாமல் அந்த வீட்டை விட்டு வெளியேறி பத்து வருடங்கள் கழித்து வந்தபோதும், எந்தவிதக் கோபமும் இன்றித் தன் மகளை மருமகளாக ஏற்றுக்கொள்ளும் அண்ணனின் பெருந்தன்மையை எண்ணி வாயடைத்துப் போனது அவருக்கு.

“சரி, நீங்கள் எல்லோரும் கதைத்துக்கொண்டு இருங்கள். நான் வருகிறேன், மீட்டிங்க்கு நேரமாகிவிட்டது..” என்றபடி எழுந்த ராஜசேகர், ஏதோ நினைவு வந்தவராகத் தங்கையின் புறமாகத் திரும்பினார்.

“நீ வெண்பாவுடன் தனியாக அங்கே இருக்கவேண்டாம். இங்கேயே வந்துவிடு.” என்றார்.

அதில் மகேஸ்வரிக்கும் உடன்பாடு இருந்தாலும், அண்ணி என்ன சொல்வாரோ என்கிற தயக்கத்துடன் மஞ்சுளாவைப் பார்த்தார்.

“என்னை எதற்குப் பார்க்கிறாய் மகி. இன்றிலிருந்தே இங்கேயே இருங்கள். மாலை அமலன் வந்ததும் அவனும் தர்சனுமாக உங்களின் பொருட்களை இங்கே கொண்டுவரட்டும்.” என்றார் மஞ்சுளா.

அதற்கு மகேஸ்வரி சம்மதித்த பிறகே ராஜசேகர் தன் வேலைகளைக் கவனிக்கச் சென்றார்.

“வா மகி, பேசிக்கொண்டே சமையலைக் கவனிக்கலாம். நீயும் வா வெண்பா..” என்றபடி முன்னால் நடந்தார் மஞ்சுளா.

மகேஸ்வரியும் ராகினியும் அவரோடு சென்றுவிட, எதிர்பாராமல் தன் வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் திடீர் மாற்றங்களை ஜீரணிக்க முடியாமல் அதிர்ந்துபோய் நின்றிருந்தாள் வெண்பா.

அதுவும், தன்னுடைய விருப்பு வெறுப்புக்களைப் பற்றிச் சற்றும் யோசியாது, தன்னிடம் எதைப்பற்றியும் கலந்து ஆலோசிக்காமல் முடிவுகளை எடுக்கும் தாய் மேல் பெரும் ஆத்திரம் பொங்கியது அவளுக்கு.

தமையனும் வெளியே சென்றுவிட்டதைக் கவனித்த தர்சனோ இதழ்களில் பூத்த சின்னச் சிரிப்புடன் வெண்பாவை நெருங்கினான்.

விழிகள் மின்ன, “என்னுடனான திருமணத்துக்குத் தயாராக இரு என் அத்தை மகளே!” என்றான் அவள் கன்னத்தைத் தன் ஒற்றை விரலால் தட்டி.

சும்மாவே திகைத்து நின்றவளுக்கு அவனது செய்கையும் பேச்சும் பெரும் திகைப்பைக் கொடுத்தது.

விரிந்த விழிகளில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தெரிய அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

இந்த வீட்டில் உள்ளவர்கள் அவளைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உயிரற்ற ஜடப் பொருள் என்றா? அல்லது எடுப்பார் கைப்பிள்ளை என்றா?

திருமணம் என்பது என்ன? ஒரு ஆணும் பெண்ணும் மனமுவந்து மாற்றிக்கொள்ளும் மணமாலை அல்லவா?

அப்படியிருக்கையில் அந்தப் பெண்ணிடம் சம்மதம் கேட்கவேண்டும் என்கிற அடிப்படை நியதி கூடவா இவர்களுக்குத் தெரியாமல் போனது?

மனம் கொதித்தது வெண்பாவுக்கு!

வீட்டுப் பெரியவர்கள் தான் அப்படி என்றால் அவள் முன்னால் நிற்பவனோ அதற்கு மேலே அல்லவா போகிறான்.

அவனைக் கட்டிக்கொள்வதாக அவள் சொன்னாளா? பிறகு என்ன தைரியத்தில் அவளிடமே திருமணத்துக்குத் தயாராக இருக்கச் சொல்கிறான்?

அவன் எதைச் சொன்னாலும் கேட்கும் இடத்தில் அவள் இருக்கிறாள் என்கிற திமிரா அவனுக்கு?
என்ன அநியாயம் என்று வெகுண்டது உள்ளம்.

அவளை, அவளின் உணர்வுகளை, அவளின் விருப்பத்தை மதியாத இந்த வீட்டுக்கு அவள் மருமகள் ஆவதா?

தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் இவனுக்கு அவள் மனைவியாவதா?

நடக்காது! நடக்கக்கூடாது என்று மனம் சிலுப்பிக்கொள்ள, “போயும் போயும் திமிர் பிடித்த உங்களையா நான் கட்டிக்கொள்வது? நடக்கவே நடக்காது!” என்றாள் அவளும் அலட்சியமாக.

அதைக்கேட்ட தர்சனின் முகம் இறுகிப் போனது!

“அதென்ன போயும் போயும்? அவ்வளவு இளக்காரமா உனக்கு? இந்த வாய்க்காகவே நான் தான்டி உன் கழுத்தில் தாலி கட்டுவேன்!” என்று அவன் உறுமிக்கொண்டு இருக்கையிலேயே, “வெண்பா..!” என்று மஞ்சுளாவின் குரல் உள்ளிருந்து கேட்டது.

அவனது உறுமலில் சற்றும் பயப்படாமல் தர்சனை நேராகப் பார்த்தாள் வெண்பா.

“இந்த உலகத்தில் இருக்கும் கடைசி ஆண்மகன் நீங்கள் தான் என்கிற நிலை வந்தாலும் உங்களைக் கட்டவே மாட்டேன்! எனக்கு உங்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை!” என்று வெறுப்புடன் மொழிந்துவிட்டு அங்கிருந்து நகரப் பார்த்தவளின் கையைத் தர்சனின் இரும்புக் கரம் இறுக்கமாகப் பற்றியது.

அவளை இன்னும் நெருங்கி, அவள் முகத்தருகே குனிந்து, “என்னைத் தவிர வேறு எவனையும் உனக்குப் பிடிக்கவே கூடாது! அப்படி எவனையாவது முதலில் பிடித்திருந்தாலும் அவனை இன்றோடு மறந்துவிடு! உனக்கு நான்தான்டி புருஷன்!” என்றான் கடுமையான குரலில்.

அவன் விழிகளில் தெரிந்த சீற்றத்தில் நெஞ்சுக்குள் சில்லிட்டாலும், “உங்களை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொன்ன பிறகும் என்னைத்தான் கட்டுவேன் என்கிறீர்களே, உங்களுக்கு என்ன வேறு பெண்களே கிடைக்கவில்லையா?” என்று ஏளனத்தோடு கேட்டுவிட்டாள் வெண்பா.

அது அவனது தன்மானத்தைச் சீண்டிப் பார்த்தது. “எனக்கா பெண்ணில்லை? நான் நினைத்தால் ஒன்றென்ன ஓராயிரம் பெண்ணையும் கட்டுவேன்! கை சொடுக்கினால் போதும், காலில் விழுவதற்குப் பல பெண்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நீதான் எனக்கு மனைவி! உன்னைக் கட்டி உன் வாயை அடக்கிக் காட்டுகிறேன். அதை உன்னால் என்ன அந்தப் பரலோகத்தில் இருக்கும் உன்னைப் பெற்ற அப்பாவால் கூட மாற்ற முடியாது!” என்று அழுத்தமான குரலில் சொல்லிவிட்டுச் சென்றான் தர்சன்.

அவனது முதுகையே வெறுப்புடன் பார்த்தாள் வெண்பா. அவனைப் பிடிக்கவில்லை என்று தெளிவாகச் சொன்னபிறகும் நீதான் என் மனைவி என்று திமிராகச் சொல்லும் அவனது காட்டுமிராண்டித் தனத்தை முற்றிலுமாக வெறுத்தாள்.

ஏன் அவளுக்கு அவனைப் பிடிக்கவில்லை என்கிற காரணத்தைக் கூட அவன் அறிய முயலவில்லையே! அந்தளவுக்கு அவளிடம் அலட்சியமா?

மனம் சீறிச் சினந்தது அவளுக்கு.

இதற்கெல்லாம் காரணம் அவளின் தாயல்லவா. மொத்த ஆத்திரமும் தாயிடம் திரும்ப அவரிடம் விரைந்தாள்.

அங்கே சமையலறையில் மஞ்சுளாவுடன் எதையோ அளவளாவி கொண்டிருந்த தாயின் கையைப் பிடித்து ஒரே இழுவையாக இழுத்துக்கொண்டு அந்த வீட்டின் தோட்டத்துக்குச் சென்றாள்.

“ப்ச்! என்ன வெண்பா பழக்கம் இது? பேசிக்கொண்டு இருக்கும்போது இடையில் இப்படி இழுத்துக்கொண்டு வந்தால் அண்ணி என்ன நினைப்பார்கள்?” என்ற தாயை முறைத்தாள் மகள்.

“அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்று யார் யாருக்காகவோ யோசிக்கிறீர்களே, நீங்கள் பெற்ற மகள் என்னைப் பற்றிக் கொஞ்சமும் யோசிக்க மாட்டீர்களா அம்மா?” என்றாள் ஆத்திரத்தோடு.

அதைக்கேட்ட மகேஸ்வரிக்குச் சிரிப்புத்தான் வந்தது.

“போடி விசரி! உன்னைப் பற்றி யோசிக்காமல் நான் வேறு யாரைப் பற்றி யோசிக்கப் போகிறேன்?”

“அப்படி என்னைப் பற்றி யோசித்திருந்தால் எனக்குப் பிடிக்காத இந்த வீட்டுக்கு வந்திருப்பீர்களா? இங்கேயே இருப்பதற்குச் சம்மதம் தான் சொல்லியிருப்பீர்களா? இதில் கல்யாணம் வேறு! யாரைக்கேட்டு முடிவு செய்தீர்கள்? எனக்கு இங்கே எதுவுமே பிடிக்கவில்லை. வாருங்கள் நாம் நம் வீட்டுக்குப் போகலாம். இல்லையில்லை, நாங்கள் கொழும்புக்கே திரும்பப் போவோம்.” என்ற மகளை இப்போது மகேஸ்வரி முறைத்தார்.

“கொழும்பில் ஒரு ஆண் துணை இல்லாமல் எவ்வளவு பயத்தோடு இருந்தோம் என்பதை மறந்துவிட்டாயா வெண்பா? இங்கே என்றால் உன் மாமாவும் மச்சான்களும் இருக்கிறார்கள். அவர்களைத் தாண்டி நம்மை யாராவது துன்புறுத்த முடியுமா? நீயே சொல்லு! நமக்குப் பாதுகாப்பு மட்டுமில்லை உனக்கு நல்ல வாழ்க்கையும் அமையப் போகிறது என்று நான் சந்தோசமாக இருக்க, நீயானால் இப்படிச் சொல்கிறாயே..” என்று அவளுக்குத் தன் எண்ணத்தைப் புரியவைக்க முயன்றார் அன்னை.
 
Last edited by a moderator:

Author: Vishakini
Article Title: இன்னுயிராவாய் என்னுயிரே - 3
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
தாயின் பேச்சைக் கேட்டவளின் முகத்தில் இளக்காரமான புன்னகை ஒன்று தோன்றியது.

“எங்கே? இங்கே நமக்குப் பாதுகாப்புக் கிடைக்குமா? கிழிக்கும்! அந்தத் தர்சன் என்ன சொன்னான் தெரியுமா? தாயும் மகளும் இந்த வீட்டை விட்டு இனி எங்கும் போக முடியாது என்றான். போனால் காலை அடித்து முறிப்பானாம். போதாக் குறைக்கு என் கழுத்தில் அவன்தான் தாலியைக் கட்டுவானாம். இப்படியெல்லாம் சொல்கிறவன் இருக்கும் வீட்டில் எங்கேமா பாதுகாப்பு இருக்கும்? வாருங்கள் கொழும்புக்கே நாம் திரும்பிப் போகலாம்.” என்று கொழும்பு செல்வதிலேயே குறியாக இருந்தாள் வெண்பா.

“என்னது? தர்சன் உன்னைக் கட்டுவேன் என்றானா? அண்ணி அமலனுக்கு உன்னைக் கேட்கிறார் என்றுதானே நினைத்தேன்…” என்று சொன்னவர், “சரி விடு. அமலனுக்கு என்றால் என்ன தர்சனுக்கு என்றால் என்ன, என் அண்ணன் பிள்ளைகள் தானே இருவரும்.” என்றார் தொடர்ந்து.

அதைக் கேட்டவளுக்கோ இருந்த கொஞ்சப் பொறுமையும் பறந்தது.

“ஐயோ அம்மா! இந்தக் கல்யாணமே வேண்டாம் என்கிறேன் நான். நீங்களானால் அவனுக்கா இவனுக்கா என்று என்னை ஏலம் போடுகிறீர்கள். நீங்கள் ஏலம் போட நான் என்ன ஏலப்பொருளா?” என்றாள் கொதிப்புடன்.

“இனி நீ அடிதான் வாங்கப் போகிறாய். இரண்டு மூன்று முறை மாப்பிள்ளைகள் இருந்தால் யாருக்குப் பெண்ணைக் கொடுப்பது என்று யோசிப்பது வழமைதான். அதற்கு உன்னை ஏலம் போடுவது என்று அர்த்தமாகுமா? சும்மா சும்மா அலட்டாமல் பேசாமல் இரு!”

“நான் பேசாமல் இருக்க நீங்கள் என்ன யாருக்கோவா மாப்பிள்ளை பார்க்கிறீர்கள்? எனக்குத்தானே. பிறகு எப்படி நான் பேசாமல் இருப்பது?”

“சரிடி! உனக்குத்தான் கல்யாணம். நீயே சொல்லு. உனக்கு யாரைப் பிடித்திருக்கிறது? அமலனையா? தர்சனையா?” பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டார் மகேஸ்வரி.

“எனக்கு எவனையும் பிடிக்கவில்லை!” என்றாள் முகத்தில் பிடிவாதம் துலங்க.அப்போதுதான் மகள் அண்ணன் மக்களை ஒருமையில் விளிப்பதை உணர்ந்தவர் மகளை முறைத்தார்.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
“முதலில் வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கப் பழகு! அவர்கள் உன் மச்சான்கள்.” என்றார் கண்டிப்பான குரலில்.

“அவர்கள் என் மச்சான்கள் என்று இன்னும் எத்தனை தடவைதான் சொல்வீர்கள்? அமலன் மச்சானுக்கு மரியாதை கொடுத்தாலும் கொடுப்பேனே தவிர அந்த விசரன் தர்சனுக்கு முடியவே முடியாது. எருமை மாடு!” என்றாள் ஆத்திரத்துடன்.

“அவனிடமும் நீ இப்படிப் பேசியிருப்பாய். அதுதான் அவனும் உன்னிடம் எதையாவது சும்மா சொல்லியிருப்பான்.” என்ற தாயைக் கோபத்துடன் பார்த்தாள் மகள்.

“உங்கள் மகள் நான் சொல்வதை நம்ப மாட்டீர்களா அம்மா? இப்போது.. சற்று முன்தான் சொன்னான்.. அவனைத் தவிர வேறு யாரையும் நான் கட்ட விடமாட்டானாம்.” என்று சொல்கையிலேயே அவள் குரல் கமறியது.

அதில் மகேஸ்வரியின் மனமும் இளக, மகளின் தலையை ஆதுரத்துடன் தடவிக் கொடுத்தார்.

ஆனாலும், மகளின் பேச்சைக் கேட்டவருக்குக் குழப்பமாகவும் இருந்தது. தர்சன் விளையாட்டுக்குச் சொன்னானா அல்லது மெய்யாகவே சொன்னானா என்று அவராலும் பிரித்தறிய முடியவில்லை.

மனக் குழப்பத்தை மகளிடம் காட்டிக் கொள்ளாமல், “உன்னை நம்பாமல் வேறு யாரை நம்பப் போகிறேன் வெண்பா. சரி விடு. தர்சனைப் பற்றி அண்ணியின் காதில் போடுகிறேன். அவர் அவனிடம் கேட்டுச் சொல்லட்டும்.” என்றார் தன்மையாக.

தாயின் தன்மையான பேச்சுத் தைரியத்தைக் கொடுக்க, “ஐயோ அம்மா! யாரைப் பற்றியும் அத்தையிடம் சொல்லவேண்டாம். முதலில் நீங்கள் இந்தத் திருமணப் பேச்சையே நிறுத்துங்கள். நான் இந்த வீட்டு ஆண்கள் யாரையுமே கட்டமாட்டேன்!” என்று அறிவித்தாள் உறுதியான குரலில்.

அதைக்கேட்ட மகேஸ்வரிக்கு மீண்டும் கோபம் வந்தது.

“சின்னப் பெண்ணாயிற்றே என்று உன் பேச்சைக் கேட்டால் அர்த்தமில்லாமல் உளறுகிறாய். வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியுமா உனக்கு? அதில் எத்தனை பிரச்சினைகளைச் சந்திக்கவேண்டி வரும் என்று தெரியுமா? சொந்தத்தில் கட்டிக் கொடுத்தால் நீயும் சந்தோசமாக இருப்பாய், நானும் நிம்மதியாக இருக்கலாம் என்று பார்த்தால், இப்படி அறிவில்லாமல் பேசுகிறாயே. என் அண்ணன் பிள்ளைகளைக் கட்டமாட்டேன் என்று சொல்வதற்கு ஒரு காரணத்தைச் சொல்லு. அது சரியாக இருந்தால் நீ சொன்னதைப் பற்றி யோசிக்கிறேன்.”

தாயின் கேள்விக்குப் பதில் இல்லாமல் சிறிதுநேரம் மௌனம் காத்தாள் வெண்பா. பிறகு, “முன்னரெல்லாம் தர்சன் என்னை எப்போது பார்த்தாலும் அழ வைப்பானே, அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா?” என்று கேட்கும்போதே, சிறுபிள்ளைத் தனமாகக் கேட்கிறோம் என்று விளங்கியதில் அவள் குரல் உள்ளே போனது.

மகள் திருமணம் வேண்டாம் என்று சொன்னதில் அதுவரை மனதளவில் தவித்துக் கொண்டிருந்தவருக்கு, அவளின் கேள்வியில் சிரிப்புத்தான் வந்தது. இவள் இதற்கா இவ்வளவு பயந்தாள் என்று நினைத்த மாத்திரத்தில் அதுவரை நேரமும் மனதிலிருந்த கலக்கமும் விலகியது.

“உன் பேச்சு உனக்கே சிறுபிள்ளைத் தனமாகத் தெரியவில்லையா வெண்பா?” என்று, மனதில் இருந்த பாரம் அகன்றதில் புன்னகையுடன் கேட்டார் அன்னை.

“சரிம்மா. அது சிறு பிள்ளைத் தனம் என்றால், எதற்காக நீங்கள் இந்த வீட்டை விட்டுப் போனீர்கள். இங்கே இருக்க முடியாது என்றுதானே. அப்படியான வீட்டில் என்னைத் தள்ளப் பார்க்கிறீர்களே.” என்று கேட்டாள்.

“நான் வெளியேறியதற்கு அண்ணி காரணமில்லை வெண்பா. என் அவசரப் புத்தியும் அனுபவம் இல்லாத நிலையும் தான் காரணம். அப்படிப் போனதால் நாம் பட்ட பாடு உனக்கும் தெரியும். அதே கஷ்டத்தை நீயும் அனுபவிக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன். அதோடு இப்போது உன் அத்தையைப் பார்த்தாய் தானே. அவரும் திருந்திவிட்டார். காலம் எல்லோரையும் மாற்றும்.” என்று நிதானமான குரலில் விளக்கியவர், “அதென்ன தள்ளிவிடப் பார்க்கிறேன் அது இது என்கிறாய். எதைக் கதைப்பதாக இருந்தாலும் யோசித்துக் கதை!” என்றார் அதட்டலாக.

தன் மேல் உயிரையே வைத்து தனக்காகவே வாழும் அம்மாவைப் பற்றி அப்படிச் சொன்னது தவறுதான் என்று புரிந்தாலும், தாய் சொல்வதுபோல் அந்த வீட்டுக்கு மருமகள் ஆவதை அவளால் எண்ணிப் பார்க்கவே முடியவில்லை.

“நீங்கள் என்ன சொன்னாலும் சரிதான். எனக்கு இந்த வீட்டில் திருமணம் வேண்டாம்!” என்றாள் பிடிவாத குரலில்.

“அடித்துப் பல்லைக் கழட்டிவிடுவேன் ராஸ்கல். ஒரே பிள்ளை, அப்பாவும் இல்லை என்று செல்லம் தந்ததுதான் நான் செய்த பிழை. அதுதான் இந்தளவு உன்னை வாய் பேச வைக்கிறது. மகள் சொல்வதையும் காது கொடுத்துக் கேட்போம் என்று பார்த்தால், அரைக்காசுக்குப் பெறுமதி இல்லாத விசயங்களைப் பேசுகிறாய். எனக்குத் தெரியும் உனக்கு என்ன நல்லது செய்யவேண்டும் என்று. நீ பெண் பிள்ளையாக அடங்கி ஒடுங்கி ஒழுங்காக இரு!” என்றார் அதட்டலாக.

தாயின் கடுமையில் கண்ணைக் கரித்தது அவளுக்கு. அதோடு, அதற்குமேலும் தாயிடம் எதைச் சொன்னாலும் அவர் கேட்கப் போவதில்லை என்பதும் நன்றாகவே விளங்கியது. அவள் பிடிவாதக்காரி என்றால், அந்தப் பிடிவாதம் தாயிடம் இருந்துதான் அவளுக்கே வந்திருக்கிறது என்பதை அவளே அறிவாள்.
 

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,629
6,856
113
எனவே தன் பேச்சின் போக்கை மாற்றி, “சரிம்மா. நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. ஆனால், எனக்கு இப்போது திருமணம் செய்யவே பிடிக்கவில்லை. ஒரு வருடம்.. என்றவள் தாயின் முறைப்பில், “ஒரு ஆறுமாதமாவது போகட்டும் அம்மா. நான் வேலைக்குப் போகவேண்டும். நீங்களும் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னீர்களே. அதன் பிறகு பார்க்கலாம்..” என்றாள் சமாளிப்பாக.

“அங்கே வீட்டில் தனியாக இருப்பாய் என்பதால் தான் வேலைக்குப் போகச் சம்மதித்தேன். இனி அது தேவைப் படாது. அதனால் ராகினிக்கு உதவியாக வீட்டிலேயே இரு. அதோடு திருமணம் என்றால் உடனேயேவா நடக்கப் போகிறது.. என்றாலும் அண்ணாவிடம் சொல்கிறேன்..” என்றவர், “சரி வா. நாம் இவ்வளவு நேரம் தனியாக நின்று கதைப்பது சரியில்லை. அண்ணி ஏதும் நினைக்கப் போகிறார்.” என்றவர் மகளோடு சமையலறைக்குச் சென்றார்.

அங்கே இவர்களைக் கண்டதும், “என்ன வெண்பா? அம்மாவிடம் என்ன சொன்னாய்?” என்று கேட்டார் மஞ்சுளா.

“ஒன்றுமில்லை அத்தை..” என்று அவள் முணுமுணுக்க, “தனக்கு இப்போது திருமணம் வேண்டாமாம் அண்ணி. இன்னும் ஆறுமாதம் போகட்டும் என்கிறாள்.” என்றார் அவள் தாயார்.

“இவ்வளவுதானா? சரி ஆறு மாதம் கழித்தே திருமணத்தை வைக்கலாம் சரியா. அமலனும் பின்னேரம் வந்துவிடுவான். அவனிடமும் கேட்டுவிட்டு நாளை குறிப்போம்.” என்றார் அவர்.

அவரின் பேச்சில் யாருக்கு வெண்பாவைக் கேட்டார் என்று தெளிவாகப் புரிய, “அண்ணி, எதற்கும் நீங்கள் தர்சனையும் கேளுங்களேன். எனக்கு யாருக்கு என்றாலும் சரிதான். அவள் இந்த வீட்டுக்கு மருமகளாக வந்தாலே போதும்.” என்றார் மகேஸ்வரி.

அடுப்பில் இருந்த கறியைக் கிண்டிக் கொண்டிருந்த மஞ்சுளா சட்டெனத் திரும்பிப் பார்த்தார். “ஏன், வெண்பாவுக்குத் தர்சனையா பிடித்திருக்கிறது?”

“ஐயோ.. அப்படி எதுவுமேயில்லை..” என்றாள் வெண்பா விழுந்தடித்துக்கொண்டு.

அவளின் பாவனையில் சிரித்துவிட்டார் மஞ்சுளா. வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்த ராகினிக்கும் புன்னகை அரும்பியது.

“ஏன்மா, உனக்கு என் மகனைப் பார்த்தால் அவ்வளவு பயமா?”

“அப்படி இல்லை அத்தை..” என்று அவள் சொல்லவும், “பின்னே..” என்றபடி மகேஸ்வரியைப் பார்த்தார் அவர்.

“இல்லை அண்ணி.. ஏதோ தர்சன் அவனைத்தான் இவள் கட்டவேண்டும் என்று சொன்னானாம். விளையாட்டுக்குச் சொன்னானா என்ன ஏது என்று தெரியவில்லை. அதுதான் உங்களிடம் சொன்னேன்.”

“அதுதானா.. அவனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டுத்தான் மகி. அவன் பேச்சை நீ காதில் வாங்காதே வெண்பா. இதுவரை அமலனுக்கே பெண் பார்க்க வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும் என்றவன் தனக்குப் பெண் பார்ப்பானா” என்றார் மஞ்சுளா.

“எதற்கும் அண்ணி, நீங்கள் ஒரு தடவை தர்சனைக் கேட்டுவிடுங்கள்.” என்று மீண்டும் வலியுறுத்தினார் மகேஸ்வரி.

ஏனோ அவருக்குத் தர்சனின் பேச்சை விளையாட்டாக எண்ண முடியவில்லை. அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினார்.

“சரி மகி. நான் கேட்கிறேன்..” என்ற மஞ்சுளா, மகனைப் பற்றி நன்றாகவே அறிந்திருந்தவர் ஆகையால் அதை ஒரு விடயமாகவே பொருட்படுத்தவில்லை.


ஒரு கார் அவர்களின் வீட்டுக்கு முன்னால் சீறிக்கொண்டு வந்து நின்றது.

“அமலன் வந்துவிட்டார் அத்தை..” என்று ராகினி சொல்லி முடிக்க முதலே காரின் கதவைத் திறந்துகொண்டு வேகமாக இறங்கினான் அமலன்.

நெடு நெடுவென உயர்ந்து, உயரத்துக்கு ஏற்ற உடல் கட்டுடன் மூக்குக் கண்ணாடி அணிந்து, வெள்ளையும் நீலமும் கட்டம் போட்ட ‘ஷர்ட்’இன் முழுக்கை முக்கால் கையாக மடித்து விடப்பட்டிருக்க நீல நிற ஜீன்ஸில் வந்தவனின் முகமோ நிறைந்த புன்னகையைப் பூசியிருந்தது.

மகேஸ்வரியைக் கண்டுவிட்டு, விரிந்த புன்னகையுடன், “அத்தை..!” என்றபடி விரைந்து வந்தவன், பாசத்தோடு அவரைக் கட்டிக் கொண்டான்.

“அமலா, நன்றாக இருக்கிறாயா கண்ணா?” என்று கேட்டவருக்கு, அண்ணன் மக்கள் மூவருமே தன் மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள் என்று நினைத்த மாத்திரத்தில் நெஞ்சம் விம்ம விழிகள் பனித்தது

“எனக்கு என்ன அத்தை. நான் நன்றாக இருக்கிறேன்.” என்றவன் அருகிலிருந்த வெண்பாவைப் பார்த்துவிட்டு, “ஹேய் வெள்ளை ரோஜா! என்ன இவ்வளவு உயரமாக வளர்ந்திருக்கிறாய். எழுந்திரு, நீயா நானா உயரம் என்று பார்க்கலாம்..” என்று குதூகலத்துடன் சொன்னவன், அவள் கையைப் பிடித்து எழுப்பினான்.

அவன் ‘வெள்ளை ரோஜா’ என்று அழைத்ததிலேயே அவள் முகம் பெரிதாகப் புன்னகையைப் பூசியது. அதோடு எந்தவிதப் பாசாங்கும் இன்றி, சிறுவயதில் பழகியதைப் போலவே இப்போதும் பழகியவனை இன்னுமின்னும் பிடித்தது.

“போங்கள் மச்சான். நீங்கள் தான் பனைமரம் மாதிரி வளர்ந்து இருக்கிறீர்கள்.” என்றவளும், அவன் அருகில் நின்று அவர்கள் இருவரினதும் உயர வித்தியாசத்தை அளவிடத் தவறவில்லை.

சற்று முன் தோட்டத்தில் வைத்து ‘இந்த வீட்டு ஆண்களைக் கட்டிக்கொள்ளவே மாட்டேன்’ என்று அந்தக் கத்துக் கத்திய மகள் இப்போது அமலனின் அருகில் புன்னகை அரசியாக நிற்பதைப் பார்த்து அயர்ந்து நின்றார் மகேஸ்வரி.

மஞ்சுளாவோ, அருகருகே நின்ற அமலன் வெண்பாவினது ஜோடிப் பொருத்தத்தில் மனம் குளிர்ந்தே போனார். தான் கண்டதை கண்ணசைவால் மகேஸ்வரிக்கும் ராகினிக்கும் உணர்த்தவும் தவறவில்லை அவர்.அவர்களுக்குமே அந்த இருவரினதும் அருமையான ஜோடிப் பொருத்தத்தில் அவ்வளவு திருப்தியாக இருந்தது.