• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இன்னுயிராவாய் என்னுயிரே - 33 (இறுதி அத்தியாயம்)

Vishakini

Moderator
Staff member
அத்தியாயம்-33

“நமக்குள் மன்னிப்பு எல்லாம் எதற்கு லயா? வெண்பாவை வா என்று எதற்காகக் கூப்பிட்டேன் என்று நீ புரிந்து கொண்டாலே போதும். அதோடு, இதையெல்லாம் முதலே சொல்லாமல் விட்டது என் தவறும் தானே. அப்போ நானும் மன்னிப்புக் கேட்கவா?” என்று அவன் கேட்டபோது,

“இல்லையில்லை..” என்றாள் அவள் விழுந்தடித்துக்கொண்டு.

அதில் அவன் முகத்தில் புன்னகை அரும்பியது. அதைப்பார்த்துவிட்டு சட்டென்று அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள் இலக்கியா.

அதிசயமாக மனைவியைப் பார்த்தான் தர்சன். அவனிடம் அன்பை கொட்டிய நாட்களில் கூட அவள் இப்படி நடந்துகொண்டது இல்லை. ஆனாலும், அவளின் அந்த நெருக்கத்தை அவன் மனம் உள்ளூர வெகுவாக ரசித்தது.

அவளோ அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவனைத் தன்னோடு சேர்த்து அணைத்தாள்.

அவனது அனுமதி இன்றியே அவன் கைகளும் அவளை வளைக்க, “இன்றைக்கு என்னடி ஆச்சு உனக்கு?” என்று கிறங்கிப்போய்க் கேட்டான்.

“ம்.. இந்த முரடன் மேல் பைத்தியம் ஆச்சாம்..” என்று செல்லம் கொஞ்சியவள், “நாம் நம் வீட்டுக்கே போகலாமா அத்தான்?” என்றாள் கெஞ்சலாக.

“ஏனாம்? என் லயாவுக்கு இங்கே என்ன குறையாம்? இங்கே என்றால் காலநேரம் பார்க்காமல், யாரும் வந்து விடுவார்களோ என்கிற பயமில்லாமல் கொஞ்சிக் குலாவலாமே..” என்றான் கண்ணைச் சிமிட்டி, குறும்பாக நகைத்தபடி.

அவளுக்கும் இங்கேயே இருக்க விருப்பம்தான். அவனோடு எப்போதுமே தொற்றிக்கொண்டு திரிய ஆசைதான். ஆனால், இவ்வளவு தூரம் வெண்பாவை பற்றியும், அவன் செய்த பிழைகளைப் பற்றியும் சொல்கிறான் என்றால், மனதுக்குள் அதையெல்லாம் நினைத்து வருந்துகிறான் என்றுதானே அர்த்தம். தன்னால் தான் வெண்பாவுக்கும் இந்த நிலை என்கிற குற்றக் குறுகுறுப்பில் தவிப்பவனை இன்னும் வேதனைப்படுத்தும் விதமாக அல்லவா, அவனை அவன் குடும்பத்திலிருந்து பிரித்துக்கொண்டு வந்துவிட்டாள். அதை அவள் நிவர்த்திச் செய்யவேண்டாமா?

“அங்கேயும் நம்முடைய அறைக்குள் யார் வரப்போகிறார்களாம்? இல்லாவிட்டாலும் நீங்கள் தள்ளியிருந்து விரதம் காக்கிற ஆள் பாருங்கள். எங்கே இருந்தாலும் இந்தக் கொஞ்சலும் குலாவளும் குறையாது. அதனால் அங்கேயே போகலாம்.” என்று, அப்போதும் அங்கே செல்வதிலேயே குறியாக இருந்தாள் இலக்கியா.

“வெண்பா இன்னும் அங்கேதான் இருக்கிறாள்.”

“அவள் இருந்தால் என்ன அத்தான். நாம் நம்பாட்டுக்கு இருக்கலாமே. அது நம் வீடு. அவள் அங்கு வந்திருக்கும் விருந்தாளி. விருந்தாளிக்காக நாம் வீட்டை விட்டு வெளியேற முடியுமா என்ன?”

முதலில் வெண்பா மேலிருந்த வெறுப்பு இப்போது குறைந்திருந்தாலும், அவளை மதிக்கத் தோன்றவில்லை இலக்கியாவுக்கு. மனதில் வேறொருவன் இருந்ததினால் தர்சனின் தாலியை அவள் கழட்டியதை கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டவளால், கணவனின் குடும்பத்தைப் பழிவாங்கும் எண்ணத்தோடு அமலனின் திருமணத்தன்று அவள் வெளியேறியதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

அதோடு, கணவன் தாலிகட்டிய ஒருத்தியை பார்க்கவோ, அவளோடு பேசவோ, சுமூகமாகப் போகவோ என்றைக்குமே இலக்கியாவால் முடியாது!

ஆனால், கணவனுக்காக, அவன் மன நிம்மதிக்காக இந்த ஒருமாதம் அவளால் வெண்பாவை பொறுக்க இயலுமே!

தர்சனுக்கும் மனைவி தனக்காகப் பேசுகிறாள் என்று புரிந்தது. வெண்பா இருக்கும் வீட்டில் கணமும் இருக்கமாட்டேன் என்று அன்று வீட்டை விட்டே வெளியேறியவள், இன்று அதே வீட்டுக்குப் போகலாம் என்கிறாள் என்றால், அதன் காரணம் அவள் அவன்மேல் வைத்திருக்கும் அன்பும் நம்பிக்கையும் அல்லவா! அப்படியானவளின் மனதை வருத்தும் ஒரு செயலை இனியும் அவன் செய்வதா?

“கொஞ்ச நாட்கள் இங்கே இருக்கலாம் லயா. புதிய கடைக்கான வேலைகளும் இருக்கிறது. அங்கே இருந்தால், உன்னை விட்டுவிட்டு வந்து என்னால் இங்கே நிம்மதியாக வேலை பார்க்க முடியாது. அதோடு, அப்பா அம்மாவிடம் இங்கே இருக்கப்போகிறோம் என்று சொல்லி, வீட்டுப் பொருட்கள் முதல்கொண்டு எல்லாவற்றையும் மாற்றிவிட்டு திரும்ப அங்கே வருகிறோம் என்றால் என்னைத் துரத்தித் துரத்தித்தான் அடிப்பார்கள்.” என்றான், ஏதோ அவர்களுக்கு எல்லாம் பயந்தவன் போல்.

இதெல்லாம் அவனுக்கு ஒரு விசயமே அல்லதான் என்றாலும், அவன் சொன்னதுபோல இங்கே இருக்க என்று வந்தாயிற்று. பிறகு எதற்கு வந்த உடனேயே ஓடுவான் என்று எண்ணியவள், “மாமாவும் மாமியும் என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்களோ தெரியாது அத்தான்..” என்றாள் குரலில் கவலை தொனிக்க.

“அவர்கள் ஒன்றுமே நினைக்க மாட்டார்கள். அதனால் சும்மா சும்மா எதையாவது நினைத்து கவலைப் படாதே!” என்று அதட்டினான் தர்சன்.

“என்றாலும்..” என்று மனச் சுணக்கத்தோடு அவள் இழுக்க, “நான் இப்படித் தனியாகப் போகப்போகிறேன் என்று சொன்னபோது, அப்பா என்ன சொன்னார் தெரியுமா? அம்மா அப்பா எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு மனைவியும் முக்கியம் என்றார். அதோடு, என் மருமகளைப் பற்றி எனக்குத் தெரியும். அதனால் அவள் மனம் நோகாதபடிக்கு நீ நடந்துகொள். அவள் எங்கள் மனம் நோகாமல் நடந்துகொள்வாள் என்றார் லயா. அம்மாவைப் பற்றி நான் சொல்லவே தேவையில்லை. இப்போது சொல் அவர்கள் உன்னைப்பற்றித் தவறாக நினைப்பார்களா?” என்று அவன் கேட்டபோது,

இல்லை என்பதாகத் தலையாட்டியவளின் விழிகள் நெகிழ்ச்சியில் கலங்கத் தொடங்கியது.

அவளின் மனநிலையை மாற்ற எண்ணி, “நான் நிம்மதியாகத் தூங்கி இரண்டு நாட்கள் ஆகிறது. வருகிறாயா இருவருமாகத் தூங்கலாம்..” என்று கள்ளச் சிரிப்புடன் கேட்டான் தர்சன்.

அவன் முகத்திலும் களைப்புத் தென்படவே, “வருகிறேன். ஆனால், எந்தச் சேட்டையும் செய்யாமல் உறங்கவேண்டும். இல்லை என்றால் அடிதான் வாங்குவீர்கள்.” என்றவள், கணவனோடு உறங்கச் சென்றாள்.




“அத்தான், எழுந்திருங்கள். விட்டால் கும்பகர்ணன் மாதிரி தூங்கிவீர்கள் போலவே..” என்று அவனைத் தட்டி எழுப்பினாள் இலக்கியா.

“இன்னும் கொஞ்சநேரம் தூங்கவிடு லயா..” என்று, தூக்கம் நிறைந்த கரகரப்பான குரலில் சொன்னவனின் கையொன்று நீண்டுவந்து அவளின் இடையை வளைத்தது.

“முடியாது! பிறகு இரவுக்கு நித்திரை வராது அத்தான். எழுந்திருங்கள்.”

“இன்று இரவுக்குச் சிவராத்திரி என்றபடியால் தான் இப்போதே தூங்கிக் கொள்கிறேன்.” என்றான் அவன்.

“என்னது? இன்றைக்குச் சிவராத்திரியா? இருக்காதே..” என்று அவள் குழம்பும்போதே, கண்கள் மூடியிருந்தபோதும் அவன் உடல் சிரிப்பில் குலுங்கியது.

அப்போதுதான் அவன் சொன்னதன் அர்த்தம் புரிய, முகம் சிவந்துபோனது அவளுக்கு. “உங்களை..!” என்று பல்லைக் கடித்த மனைவியை, தன்னருகே சாய்த்துக்கொண்டான் தர்சன்.

அவனை அண்டிப் படுத்துக்கொண்டே, “ஐயோ அத்தான்! உங்களை எழும்பச் சொன்னால் என்னையும் படுக்க வைக்கிறீர்களே..” என்றாள் பொய்யான சலிப்போடு.

அவளின் கழுத்தருகே நெருங்கி வாசம் பிடித்தபடியே, “குளித்தாயா?” என்று அவன் கேட்க,

“ம்ம்..” என்று, அவனுடைய சூடான மூச்சுக்காற்றினால் உண்டான சிலிர்ப்பில் முணுமுணுத்தாள் அவள்.

“என்னையும் கூப்பிட்டு இருக்கலாமே..”

“எங்கே?” புரியாமல் கேட்டாள் லயா.

“குளிக்கத்தான்..” என்றான் அந்தக் கள்ளன்.

இலக்கியாவுக்கோ சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது. அவன் தோளில் செல்லமாக அடித்து, “உங்களைத் திருத்தவே முடியாது அத்தான்..” என்றாள் சிரிப்பும் சிணுங்களுமாக.

அவளின் அந்தக் கரத்தைப் பற்றித் தன் கழுத்தைச் சுற்றிப் போட்டுவிட்டவனின் வாயோ, “கட்டிய புருசனையே கைநீட்டி அடிக்கிறாயா? பொறு பொறு. என் மகள் வரட்டும். அவளிடம் சொல்லிக் கொடுக்கிறேன் உன்னை!” என்றது. கையோ அவளின் வயிற்றை இதமாகத் தடவிக்கொடுத்தது.

“பிறக்கப்போவது என் மகன். அவன் வரட்டும், அவனைக்கொண்டே உங்களுக்கு அடி போடுகிறேன்.” என்றாள் அவள்.

“எனக்கு மகள்தான் வேண்டும்!”

“எனக்கு மகன்தான் வேண்டும்!”

“இல்லை மகள்!”

“முடியாது! மகன்தான் வருவான்.”

“பார்க்கலாமா?”

“பார்க்கலாம்.”

“நான் சொல்வதுபோல் மகள் பிறந்தால் என்ன தருவாய்?”

“அடுத்ததாக ஒரு மகனைப் பெற்றுத் தருகிறேன்.” என்றவள், “மகன் பிறந்தால் நீங்கள் என்ன தருவீர்கள்?” என்று கேட்டாள்.

“இன்னொரு மகளுக்கும் உன்னை அம்மா ஆக்குகிறேன்டி. சரியா..” என்றவனின் பேச்சுப் புரிந்தபோது, அவளுக்கு வெட்கத்தோடு சிரிப்பும் போட்டிபோட்டுக்கொண்டு வந்தது.

அப்படியே எத்தனை பிள்ளைகளைப் பெறுவானாம்? என்று நினைக்கையிலேயே, அவன் எத்தனைக்கும் தயார்தான் என்று எண்ணம் ஓடியது அவளுக்கு.

சேச்சே! இதென்ன வெட்கம் கெட்ட நினைப்பு என்று மனதுக்குள் தன்னையே அதட்டியவள், “உங்களை என்ன செய்தால் தகும்?” என்று அவனிடம் பொய்க்கோபம் காட்டினாள்.

“என்ன வேண்டுமானாலும் செய் என்றுதானே நானும் சொல்கிறேன். நீதான் ஒன்றுமே செய்யமாட்டேன் என்கிறாய். என்னையாவது செய்யவிடு.” என்றவனின் உதடுகள் அவளின் கழுத்து வளைவுக்குள் நுழைந்துகொண்டது.

சிலிர்ப்புடன் நெளிந்தவளின் உதடுகளோ, “அத்..தான்..” என்று சிணுங்கியது.

“உன் அத்தானுக்கு என்னவாம்..” கழுத்திலிருந்து கன்னக்கதுப்புக்கு உதடுகளை நகர்த்தியபடி, கிறக்கமாகக் கேட்டவனின் மீசையின் குறுகுறுப்பும், உதடுகளின் இம்சையும் அவளைச் சொர்க்கலோகத்துக்கே அழைத்துச் சென்றது.

இவனை விட்டால் இதோடு நிறுத்தமாட்டான் என்று எண்ணியவள் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். “உங்களுக்காக மெனக்கெட்டு கேசரி எல்லாம் செய்து வைத்துவிட்டு எழுப்ப வந்தால், நீங்கள் உங்கள் வேலையை ஆரம்பிக்கிறீர்களே அத்தான். முதலில் எழுந்திருங்கள்.” என்றவளின் இதழ்களை வேகமாக அணைத்துக்கொண்டன அவனுடைய உதடுகள்.

அதில் உள்ளம் மயங்கினாலும், “ம்..ம்..” என்று சிணுங்கி, முயன்று அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள், “அநியாயம் செய்கிறீர்கள் அத்தான்.” என்று குற்றப் பத்திரிக்கை வாசித்தாள்.

“நீதானே கேசரி செய்ததாகச் சொன்னாய்..”

“அதற்கு?”

“அதைத்தான் ருசி பார்த்தேன்.” என்று மயக்கத்தோடு சொன்னவனின் விரல்கள் அவளின் செவ்விதழ்களைத் தடவிக்கொடுத்தது.

“தேனை விடச் சுவையாக இருந்தது.” என்றவன், மீண்டும் மீண்டும் அதைச் சுவைக்கத் தவறவில்லை.

கணவனின் கையணைப்போடு இதழணைப்பும் சேர்ந்துகொண்டதில் முற்றிலுமாக மயங்கிப்போனவள், அவனைக் கட்டிலில் இருந்து எழுப்புவதற்குள் படாத பாடு பட்டுத்தான் போனாள்.

குளித்துவிட்டு வந்தவனுக்குக் கேசரியையும், தேநீரையும் ஆர்வமாகக் கொடுத்து, “எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் அத்தான்? இரவுக்குப் பிட்டும் சாம்பாரும் கூட வைத்துவிட்டேன்.” என்று இலக்கியா சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே, அமலனின் கார் வந்து நின்றது.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அதிலிருந்து மஞ்சுளாவும் சந்திராவும் இறங்கி வந்தனர்.

அவர்களைக் கண்டதும் வியப்பும் மகிழ்ச்சியுமாக, “அம்மா.. அத்தை.. வாருங்கள் வாருங்கள்..” என்றபடி, வாசலுக்கு விரைந்தாள் இலக்கியா.

“வாருங்கள் அமலன் மச்சான்..” என்று அமலனையும் வரவேற்கத் தவறவில்லை அவள்.

“எப்படிம்மா இருக்கிறாய்? வீடு பிடித்ததா? இவனுடைய அவசரத்துக்கு இந்த வீடுதான் வாங்கக் கிடைத்தது. பெரிய வீடாக வாங்கலாம், கொஞ்சம் பொறுடா என்றால் எங்கே, இவன் கேட்டால் தானே. சரிதான் என்று, இதையே வாங்கி உங்கள் பொருட்களை எல்லாம் கொண்டுவந்து வைத்துவிட்டேன்.” என்றான் அமலன்.

“நன்றாக இருக்கிறோம் மச்சான். வீடும் பிடித்தது.” என்றவளுக்கு, அங்கே தாய்வீட்டில் வைத்து கணவனுக்கு அமலன் ஏன் அழைத்தான் என்பதும் புரிந்தது.

அதோடு, தனிக்குடித்தனம் போகிறார்களே என்று முகத்தைத் திருப்பாமல் எல்லோருமாகச் சேர்ந்து செய்திருக்கிறார்கள் என்று நினைக்கையில் சந்தோசமாகவும் இருந்தது.

“என்னமா.. சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்திருக்கிறீர்கள்?” என்று தாயிடம் கேட்டான் தர்சன்.

மகனுக்குப் பதில் சொல்லாமல், “பார்த்தீர்களா சம்பந்தியம்மா, என் மகன் வீட்டுக்கு வந்தவர்களை வரவேற்கும் அழகை. இங்கே எதற்காக வந்தீர்கள் என்று மறைமுகமாகக் கேட்கிறான். அந்த லட்சணத்தில் இருக்கிறது என் வளர்ப்பு” என்றார் மஞ்சுளா சந்திராவிடம்.

தாயின் பேச்சில் விரிந்த புன்னகையோடு, “வாருங்கள் அத்தை..” என்று மாமியாரை வரவேற்றவன், தாயின் கையைப் பற்றி, “வரவேண்டும் வரவேண்டும் மஞ்சு மகாராணி!” என்றான் பொய்யான பணிவோடு.
 
Last edited by a moderator:

Vishakini

Moderator
Staff member
அவனிடம் இருந்து கையை உதறிக்கொண்டு, “போடா! நீயொன்றும் என்னை வரவேற்கத் தேவையில்லை. நான் என் மருமகளைப் பார்க்கத்தான் வந்தேன்.” என்றவர், “எப்படி இருக்கிறாய் லக்கிம்மா?” என்று அன்போடு அவளை விசாரித்தார்.

அந்த அன்பில், கணவனோடு தனியாக வந்தது பிழையோ என்கிற குற்ற உணர்ச்சி பெருக, “அது அத்தை.. நான்.. தனியாக..” என்று இலக்கியா தடுமாறினாள்.

“இந்தத் தடிமாடோடு தனியாக இருக்க உனக்குப் பயமாக இருக்கிறதா?” என்று, அவளை முந்திக்கொண்டு கேட்டார் மஞ்சுளா.

அவரின் முயற்சி புரிந்தாலும், கணவனை அவர் தடிமாடு என்றதில் சிரிப்பு வந்துவிட அவனைப் பார்த்துக் கேலியாகச் சிரித்துவிட்டு, “அப்படியெல்லாம் இல்லை அத்தை.” என்றாள் இலக்கியா.

இங்கே என்ன சிரிப்பு என்பதாக மனைவியை முறைத்தாலும் தர்சனின் முகத்திலும் புன்னகை அரும்பியது.

“ஆனால் அத்தை..” என்று இலக்கியா மீண்டும் ஆரம்பிக்க, “இங்கே பார் லக்கி. கண்டதையும் யோசித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே. புதிதாகத் திருமணம் ஆனவர்கள் நீங்கள். அதனால் கொஞ்ச நாட்களுக்கு இங்கேயே இருங்கள். பிள்ளைப் பேற்றுக்கு அங்கே வந்துவிட வேண்டும். ஏன் என்றால்..” என்றவருக்கு மெலிதாகக் கண்கள் கலங்கியது.

சட்டென்று தன்னை மீட்டுக்கொண்டவர் மகனைப் பார்த்து முறைத்துவிட்டு, மருமகளிடம் திரும்பி, “எனக்கு உன்னை விட்டுவிட்டு இருக்க முடியாது.” என்று முடித்தார்.

சின்ன மகனின் பிரிவில் வேதனையுற்றாலும் அவளுக்காகப் பார்க்கிறார் என்று புரிந்ததில் விழிகள் கலங்கியது லக்கிக்கு. “சரியத்தை..” என்றாள் நெகிழ்ந்துவிட்ட குரலில்.

“அதுவரைக்கும் உன்னைப் பார்த்துக்கொள்ள ராமண்ணாவின் மனைவியை இங்கே வரச் சொல்கிறேன். சமையலுக்கும், வீட்டை பார்த்துக்கொள்வதற்கும் உதவியாக இருப்பாள்.” என்றார் அவர்.

“அவ்வப்போது நாங்களும் வந்துவந்து பார்க்கிறோம். உன் அம்மா அப்பாவும் வருவார்கள். உன் புருஷன் அவர்களுக்கும் ஒரு கார் வாங்க ஏற்பாடு செய்திருக்கிறான். அதனால், நீ எதற்கும் யோசிக்கக் கூடாது. சந்தோசமாக இரு. பிறக்கப்போகும் எங்களின் பேரனையோ பேத்தியையோ நல்லபடியாகப் பெற்றுத் தரவேண்டியது மட்டும்தான் உன் வேலை!” என்று அவர் சொன்னபோது, சற்றுநேரம் பேச்சற்று வாயடைத்து நின்றுவிட்டாள் இலக்கியா.

வலக்கரம் செய்வதை இடக்கரம் அறியாதாம். அப்படி, கணவன் அவள் வீட்டுக்குச் செய்வதை அவளிடம் சொல்லவே இல்லையே! அவளாக வாய்விட்டு எதையும் கேட்காமலேயே அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறானே!

அந்தநேரத்து மௌனத்தைக் கலைக்க எண்ணி, “ஏன்மா லக்கி. உன் வீடு தேடி வந்திருக்கிறோம், எங்களுக்கு ஒன்றும் தராமல் உன் புருஷன் மட்டும் கேசரி சாப்பிடுகிறான். நீயாவது அதில் கொஞ்சத்தை எங்களுக்கும் காட்டுவது?” என்று கேலியாகச் சொன்ன அமலன், தம்பியின் தட்டிலிருந்த கேசரியில் கொஞ்சத்தைக் கிள்ளி தன் வாயில் போட்டுக்கொண்டான்.

கேசரித் தட்டை அமலனுக்கு எதிர்புறமாக நகர்த்தியபடி, “அது எனக்கு மட்டும் தான். உனக்கெல்லாம் தரமுடியாது. போடா!” என்றான் தர்சன்.

அவன் செயலில் சிரித்தபடி, “விட்டால் சின்னப்பிள்ளை மாதிரி நிலத்தில் விழுந்துகிடந்தது அழுவீர்கள் போலவே அத்தான்..” என்று கணவனைக் கேலி செய்த இலக்கியா,

“உங்கள் எல்லோரையும் கண்ட சந்தோசத்தில் எல்லாவற்றையும் மறந்தே போனேன் அமலன் மச்சான். கொஞ்சம் பொறுங்கள், இதோ எல்லோருக்கும் எடுத்து வருகிறேன்..” என்றுவிட்டு உள்ளே விரைந்தாள்.

எப்படி இருக்கிறார்களோ, என்ன நடக்கிறதோ என்று பயந்தபடி அவர்களைப் பார்க்கவந்த மஞ்சுளா, மகன் மருமகளிடம் தெரிந்த அந்த அன்யோன்யத்தில் மிகவும் சந்தோசமாக, நிம்மதியாக உணர்ந்தார்.

சம்பந்தி வீட்டினரின் முன்னால் மகளிடம் எதுவுமே பேசமுடியாமல் நின்ற சந்திரா மகளின் பின்னோடு சமையலறைக்குச் சென்றார்.

“இதெல்லாம் என்ன பழக்கம் லக்கி? எதற்காக இப்படித் தனியாக வந்தீர்கள்? கூட்டுக் குடும்பமாக இருந்தவர்களை நீ பிரித்துவிட்டாய் என்று சொல்ல மாட்டார்களா? இப்படியா உன்னை வளர்த்தோம். உன் மாமியார் நல்லவராக இருக்கப்போய் அன்பாக நடந்துகொள்கிறார். இதுவே வேறு யாருமாக இருந்தால் என்ன ஆகிறது? மரியாதையாக மாப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு அங்கே வந்து சேருகிற வழியைப்பார்.” என்று பொரியத்தொடங்கினார்.

“அதம்மா..” என்று ஆரம்பித்தவளை பேச விடாது,

“அதோடு வயிற்றில் பிள்ளையை வைத்துக்கொண்டு இங்கே தனியாக இருந்து என்ன செய்யப் போகிறாய்? உன்னை யார் பார்த்துக் கொள்வார்கள்? அங்கே வீட்டில்வைத்து நீ ஒன்றுமே என்னிடம் சொல்லவில்லையே.” என்று கேள்விகளாக அடுக்கத் தொடங்கினார் அவர்.

தாயிடம் என்ன சொன்னாலும் இனி எடுபடாது என்று அறிந்தவள், அங்குக் கைகளில் பைகளோடு வந்த கணவனைக் கண்டுவிட்டு, “அத்தான், இங்கே வாருங்கள். அம்மா என்னவோ உங்களிடம் கேட்க வேண்டுமாம்.” என்று, அழைத்தாள்.

மனைவியின் விழிகளில் தெரிந்த குறும்பையும், மாமியார் அவளைப் பார்த்து முறைத்ததையும் கண்டவனுக்கு மனைவியை எண்ணிச் சிரிப்புத்தான் வந்தது.

தாயிடம் இருந்து தப்பிக்க அவனிடம் அவரை மாட்டிவிடுகிறாள்.

வெளியே ஒன்றையும் காட்டிக்கொள்ளாமல், “என்ன அத்தை?” என்று கேட்டவனிடம்,

“ஒன்றுமில்லை தம்பி..” என்றார் அவர் கூச்சத்தோடு.

மகளிடம் போல் மருமகனிடம் எகிறவா முடியும்?

“அவளை நான்தான் இங்கே கூட்டிக்கொண்டு வந்தேன் அத்தை. குழந்தை பிறக்கும் நேரத்தில் திரும்பவும் அங்கே வந்துவிடுவோம். அதுவரை அவளை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன். அதனால் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள். கார் வந்ததும் விரும்பியநேரம் இங்கே வந்துபோங்கள்.” என்றான் தர்சன், அவர் மனம் அறிந்தவனாய்.

“சரி தம்பி.” என்று, உடனேயே ஏற்றுக்கொண்டார் அவர். வேறு வழி?

தர்சன் சமையலறையில் இருந்து வெளியேற, அதற்கு மேலும் தாயருகில் நின்று பேச்சு வாங்க விரும்பாமல் கேசரியோடு ஹாலுக்கு விரைந்தாள் இலக்கியா.

சந்திராவுக்கும் அதுவரை நேரமும் மனதில் இருந்த பாரம் இறங்கியது. மருமகனே மகளை விட்டுக்கொடுக்காமல் பேசும்போது அவருக்கு வேறு என்ன கவலை? வேறு என்னதான் வேண்டும்?
 

Vishakini

Moderator
Staff member
எங்கே இருந்தாலும் மகளும் மருமகனும் சந்தோசமாக இருந்தால் போதும் என்று நினைத்தவர், எல்லோருக்கும் தேநீர் ஊற்றி எடுத்துக்கொண்டு தானும் ஹாலுக்குச் சென்றார்.

கேசரியை சுவைத்துவிட்டு, “மிகவும் ருசியாக இருக்கிறதே லக்கி. நான் செய்தால் வேறு சுவையில் வருமே. எப்படிச் செய்தாய் என்று பிறகு எனக்குச் சொல்லு.” என்று மஞ்சுளா சொன்னபோது, தர்சனின் விழிகள் குறும்போடு மனைவியின் இதழ்களைத் தொட்டு மீண்டன.

எல்லோரையும் வைத்துக்கொண்டு பார்க்கும் பார்வையைப் பார்!

செல்லமாக அவனை முறைத்தவளின் கன்னங்களில் சிவப்பு ஏறத்தொடங்க, அதை மற்றவர்களுக்குக் காட்டாதிருக்கப் பெருமுயற்சி எடுக்கவேண்டி இருந்தது அவளுக்கு.

“அம்மாதான் எனக்குக் காட்டித் தந்தார்கள் அத்தை.” என்றவள், “இன்னும் கொஞ்சம் சாப்பிடுங்கள்.” என்றபடி, அவர் தட்டில் கேசரியை வைத்தாள்.

“போடு போடு. சாப்பிடச் சாப்பிட இன்னும் சாப்பிடவேண்டும் போல்தான் இருக்கிறது.” என்று வாங்கிக்கொண்டார் அவர்.

“வெண்பா எப்படி இருக்கிறாள்?” என்று திடீரென்று இலக்கியா கேட்கவும், அதுவரை கேசரியை உண்பதில் முனைப்பாக இருந்த மஞ்சுளா, சட்டென்று நிமிர்ந்து மருமகளைப் பார்த்தார்.

அவள் அவரைப் பார்த்துப் புன்னகைக்க, அவர் முகமும் மலர்ந்தது. “நன்றாக இருக்கிறாளம்மா. மகிக்கும் இங்கே வர விருப்பம்தான். ஆனால், அவளை விட்டுவிட்டு வர முடியாது என்றுதான் அங்கே நிற்கிறாள். அடுத்தமுறை நான் நின்றுகொண்டு அவளை அனுப்பி வைக்கிறேன்.” என்றார் அவர்.

அப்படியே நேரம் ஏதேதோ பேச்சில் நகர, இரவு ஏழுமணி ஆகிவிட்டதைக் கவனித்து, “கிளம்புவோமா சம்பந்தியம்மா…” என்று சந்திராவிடம் கேட்டார் மஞ்சுளா.

“என்னத்தை இது? இன்றே போகவேண்டுமா? இரவுக்குத் தங்கிவிட்டு நாளைக்குப் போகலாமே. என்ன அத்தான் சும்மா இருக்கிறீர்கள். சொல்லுங்களேன்.” என்று மாமியாரிடம் ஆரம்பித்துக் கணவனிடம் முடித்தாள் லக்கி.

“அதுதானே அம்மா. இப்போதே இருட்டிவிட்டது. அதோடு, அமலனுக்கும் களைப்பாக இருக்குமே. உடனேயே திரும்பும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்?” என்றான் தர்சன்.

“அவசரம் இல்லாமல்? அங்கே, சம்பந்தியம்மா வீட்டில் யார் வேலைகளைப் பார்ப்பது? அதோடு, அமலனுக்கும் நாளைக்கு என்னவோ அலுவலாம். அப்பா நானில்லாமல் மாத்திரை மருந்துகளைக் கவனித்துப் போடமாட்டார்.” என்றார் மஞ்சுளா.

“பிறகு எதற்கு இங்கே இவ்வளவு அவசரமாக வந்தீர்கள்?”

நீங்கள் இருவரும் சண்டையைப் பிடித்துக்கொண்டு எதிரும் புதிருமாக இருக்கிறீர்களோ என்று பயந்துபோய் ஓடிவந்தோம் என்றா சொல்ல முடியும்?

“அது.. என் மருமகளை நீ எப்படி வைத்திருக்கிறாய் என்று பார்க்க வேண்டாமா? வீடு வாசல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டாமா? அதுதான் வந்தோம். தனிக்குடித்தனம் அனுப்பினால், உன்னைத் திரும்பியும் பார்க்கமாட்டோம் என்று நினைத்தாயா?” என்றபடி எழுந்துகொண்டார் அவர்.

லக்கியின் அருகில் வந்து, “கவனமாக இரு.” என்றவர், மகனை நெருங்கி, “நீங்கள் இருவரும் என்றைக்கும் சந்தோசமாக இருக்கவேண்டும் கண்ணா..” என்றார் நெகிழ்ந்துவிட்ட குரலில்.

அதுவரை நேரமும் இருந்த விளையாட்டுத்தனம் மறைய தர்சனும் தாயை அன்போடு அணைத்துக்கொண்டான். “கட்டாயம் அம்மா. எங்களைப் பற்றி யோசிக்காமல் நீங்கள் நிம்மதியாகப் போய்வாருங்கள்.” என்றவன்,

“கவனமாகக் காரை ஓட்டு அமலா. வேகம் வேண்டாம்.” என்றான் தமையனிடம்.

“சரிடா பெரிய மனுசா..” என்ற அமலன் தம்பியை அணைத்து, “இனியென்னடா.. உன் காட்டில் மழைதான்! ஜமாய்!” என்று அவன் காதருகில் முணுமுணுத்தான்.

“டேய்!” என்று சிரித்த தர்சன், “போடா! போய்க் காரை எடுக்கிற வழியைப்பார்!” என்று தமையனை அனுப்பி வைத்தான்.

ஒருவழியாக அவர்களை வழியனுப்பிவிட்டு, வீட்டுக்குள் வந்து தர்சன் கதவடைத்ததும், திடீரென்று ஒருவிதக் கூச்சமும் வெட்கமும் இலக்கியாவைச் சூழ்ந்தது.

வேகமாகப் படுக்கையறைக்குள் புகுந்துகொண்டவளை ரகசியப் புன்னகையுடன் பின்தொடர்ந்தான் தர்சன்.

அந்தச் சிரிப்பே அவளைச் சிவக்க வைக்க, சமையல் கட்டுக்குள் நழுவப்பார்த்தவளின் கையை எட்டிப் பற்றினான் தர்சன். “எங்கே ஓடப் பார்க்கிறாய்?”

“வேலை இருக்கிறது..” என்று முணுமுணுத்தவள் அவன் முகம் பாராமல் கையை விடுவித்துக்கொள்ள முயல,

“அதை என் முகம் பார்த்துச் சொல்வது.” என்றான் அவன் சிரிப்புடன்.

ஏனோ அதைச்செய்ய அவளால் முடியவில்லை.

கணவனும் புதியவன் அல்ல! அவர்களுக்குள் நடக்கும் காதல் களியாட்டங்களும் புதியன அல்ல!

ஆனாலும் ஏன் இந்த வெட்கம்?

தெரியவில்லை!

ஆனால், அவன் முகம் பார்க்க மட்டும் அவளால் இயலவே இல்லை!

குனிந்த தலை நிமிராது நின்றவளின் அருகில் வந்தவன், அவளின் நாடியை ஒற்றை விரலால் பற்றி நிமிர்த்தி, “என்னைக் கவனிப்பதும் உன் வேலைதான்.” என்றான் மோகனப் புன்னகையோடு.

ஏதோ அவனை அவள் பட்டினி போட்டது போலல்லவா இருக்கிறது அவன் பேச்சு. மகா பொல்லாதவன்!

அவனை முறைக்க எண்ணி விழிகளை உயர்த்தியவள் அவன் விழிகளில் தெரிந்த குறும்பில் மலர்ந்து சிரித்தாள்.

வெட்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, அவனை நெருங்கிக் கைகளை அவன் கழுத்துக்கு மாலையாக்கி, அவன் முகத்தைத் தன் முகம் நோக்கி இழுத்தபடி, “என் பிரியனுக்கு இப்போது என்ன வேண்டுமாம்?” என்று கொஞ்சினாள் அவன் பஞ்சவர்ணக்கிளி.

அவளின் ‘பிரியனில்’ மயங்கி, “என்ன கேட்டாலும் தருவாயா?” என்று கேட்டான் அவன்.

“தருவேனே..”

“நெற்றியில் ஒரு முத்தம்?”

ஆசையோடு தன் ரோஜா இதழ்களை அவன் நெற்றியில் ஒற்றியெடுத்தாள் இலக்கியா.

“கண்களுக்கும் வேண்டுமாம்..”

வெட்கப்புன்னகை அரும்ப, தன்னுடைய ஈர உதடுகளை அவன் கண்களில் அவள் பதித்தபோது, தர்சனின் கைகள் மனைவியைச் சுற்றி வளைத்தன.

அவளின் செவ்விதழ்களையே அவன் விழிகள் விழுங்க, “கன்னங்களை மட்டும் ஏன் விட்டு வைத்திருக்கிறாய்?” என்று மயக்கத்தோடு கேட்டான்.

வெட்கச்சிரிப்போடு அவனது இருபக்கக் கன்னங்களிலும் முத்தமிட்டவளுக்கு, அடுத்து அவன் எங்கே வருவான் என்று தெரியாமலா இருக்கும்?

அவளின் நினைப்பைப் பொய்யாக்காமல், “உதடுகள் மட்டும் என்ன பாவம் செய்ததாம்?” என்றான் அவளை விழுங்கும் பார்வையோடு.

சட்டெனச் சிவந்தாள் இலக்கியா. ஆனாலும், கணவனின் விழிகளில் தெரிந்த தாபத்தில், மென்மையாக.. மிக மிக மென்மையாக அவன் இதழ்களோடு தன் பட்டிதழ்களை அவள் பொருத்திய நொடியில், அதுவரை நேரமும் அவள் தோள்களைப் பற்றியிருந்த தர்சனின் விரல்கள் நகம்பட அழுந்தின.

அந்த அழுத்தத்தில் செங்கொழுந்தாகவே மாறிப்போனவள், சிவந்துவிட்ட முகத்தை அவன் மார்பில் மறைத்துக்கொண்டாள்.

“என் லயா..” என்றபடி, வேட்கையுடன் அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டவனின் மார்பு ரோமங்கள் அவள் கன்னத்தில் உரசி, அவளுக்குள் தீமூட்டி, அவன் தேவைகளைச் சொல்லின!

அதைத் தீர்த்துவைக்கக் காத்திருந்தவளுக்கு வெட்கத்தை விட்டு அதைச் சொல்லும் வழி தெரியாமல் போனதில், தேனூறும் இதழ்களை அவன் நெஞ்சத்தில் அழுத்தமாகப் பதித்தாள்.

அதற்குமேலும் பொறுமை அற்றவனாய், ஒரு வேகத்துடன் மனைவியின் முகத்தை நிமிர்த்தி, நெருப்பெனக் கொதித்த தன் உதடுகளால் அவள் இதழ்களைச் சிறை செய்தவன், அவள் பூமேனிக்குள் தன் தேடல்களைத் தொடங்கி, அவளுக்குள் தொலைந்தே போனான்!

முற்றும்!
 
Top Bottom