உந்தன் நெஞ்சில் உயிராக 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
125
33
Chennai
உந்தன் உயிராக 4

மாலை நேரம் மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தது.

மண்வாசனை கலந்த குளிர்ந்த காற்று வீசியது. திராட்சைக் கொடிகளுக்கு இடையே பந்தல் கட்டியிருந்த கம்பிகளைத் தொட்டு காற்று சலசலவென்று ஒலி எழுப்பியது.

திராட்சை தோட்டத்திற்கு அடுத்ததாக இருக்கும் செண்டுமல்லித் தோட்டத்திற்கு நடுவில் கட்டியிருந்த பரண் மீது வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தான் திகழோவியன்.

வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவர்,

"தம்பி இன்னும் பந்தல் கட்டுறதாங்க?” என்று கேட்டான்.

திகழோவியன் தலை கூட உயர்த்தவில்லை.

“நீங்க போங்கங்ண்ணா… நாளைக்கு பாக்கலாம்.”

“சாயங்காலம் ஆயிடுச்சுங்க,” என்று திகழோவியன் கோபமாக சொல்கிறானோ என அவன் தலையை சொறிந்திட...

“சொன்னேன்லங்க… போங்கங்க.”

அவனின் குரலில் இருந்த கடுமை காரணமாக, எதுவும் பேசாமல் மற்ற வேலைக்காரர்களுடன் வெளியேறிவிட்டான்.

அவர்கள் சென்ற பிறகு தோட்டம் முழுவதும் அமைதி.

அந்த அமைதிக்குள் திகழோவியனின் மூச்சின் சத்தம் மட்டுமே காற்றோடு கலந்தது.

“சே… என்னடா இது…” என்று தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.

செந்தாழினியின் முகம் அவன் நினைவில் தெளிவாக மிதந்தது.

“மாமா…”

அவள் அழைத்த அந்த ஒரு வார்த்தை அவன் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

“மாமாவா…?” என்று தன்னைத்தானே கேலி செய்தபடி சிரித்தான். அவளின் அந்த அழைப்புக்கு அவன் ஏங்கிய நாட்கள் உண்டு. அப்போதெல்லாம் உயிரில் கரைந்து காதலாய் அவள் சொல்ல, அவள்மீது நேசம் கொண்டு கிடந்த நாட்கள் தற்போது அவனை எள்ளி நகையாடின.

“மாமா…ன்னு கூப்பிடுற அளவுக்கு இன்னும் நம்ம உறவு பக்கமிருக்கா?”

அவன் குரல் உடைந்தது. தொண்டையில் வலி மொத்தமும் சுருண்டது.

அன்று இந்த அழைப்பே தவறென்று அவ்வளவுக்கு பேசியவள், இன்று எப்படி... எந்த உரிமையில் அவ்வாறு அழைத்தாள் எனும் கோபம் மிதமிஞ்சியது அவனுள். திகழோவியனின் கண்களில் மருதாணியின் தடம்.

அந்த நேரம் தோட்டத்தின் வெளியே வண்டி நின்ற சத்தம். நிகழ் கலைத்தாலும் யாரென்று பார்க்கவில்லை அவன்.

“திகழு…” மெதுவாக அழைக்கும் குரல்.

திகழோவியன் தலையை தூக்கிப் பார்த்தான்.

அங்கிருந்து நடந்து வந்தவன் மணி.

“என்னடா இக்கட்டிக்கே உட்காந்திருக்க?” என்று அருகில் வந்து கேட்டான்.

“சும்மா.”

“சும்மாவா…?” திகழின் அருகே அமர்ந்தான் மணி.

“வீட்டுல உன்ன தேடுறாங்க.”

திகழோவியன் முகம் கடினமாயிற்று.

“யாரு தேடுறாங்க?”

“உன்ற அம்மா.”

“……”

“சாப்பிட வரலன்னு சொன்னாங்க.”

“பசியில்ல.”

சொல்லிய நண்பனை மணி ஆழ்ந்துப் பார்த்தான்.

“திகழு… என்னாச்சு?”

“ஒண்ணுமில்ல.”

“எதுவும் இல்லன்னு சொல்றவனோட மொவம் இப்படியா இருக்கும்?”

திகழோவியன் அமைதியாக இருந்தான். என்னவென்று பதில் சொல்வது?

"செந்தாவை பார்த்தியா?” மணி மெதுவாகக் கேட்டான்.

திகழோவியன் மேலும் இறுகினான். அவள் பெயரே அவனை கடினமாக்க போதுமானதாக இருந்தது.

"பக்கத்து வீடு... பார்க்காம எப்படி?" என்ற திகழோவியன், "எங்கட்டாச்சும் ஓடிப்போவனும் போல இருக்குடா" என்றான்.

"திகழ்...!"

"மூச்சு முட்டுது மணி. இங்க இருக்க எல்லாம் என்னோடது. ஆனால் எனக்கு சொந்தமில்லாத நினைப்பு. உரிமை இல்லாத இரத்த பந்தம். என்ன செய்யட்டும் நானு" என்ற திகழோவியன், "அண்ணாக்காகவும், அம்மாவுக்காவும் இக்கட்டிக்கு இருக்கேன்" என்றான்.

மணிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சில கணங்கள் நண்பனின் முகம் பார்த்தவாறே மௌனமாகிவிட்டான்.

“யாரு சொன்னது?” அமைதியை விலக்கி திகழோவியனே பேசியிருந்தான்.

“ஸ்கூல் பக்கமா வந்திருந்தேன்… தூரத்துல பார்த்தேன்.”

“ஹ்ம்ம்... அவள்தான் நிதாவோட கிளாஸ் மிஸ். பேச வேண்டியதாகிப்போடுச்சு.” முகத்தில் அப்பட்டமான விருப்பமின்மை. அவளைப்பற்றி பேச்சுக்கூட வேண்டாமெனும் எண்ணம்.

"உன் சடவுக்கு அது மட்டும் காரணமில்லனு நினைக்கிறேன்" என்ற மணியை அசையாது பார்த்தவன்,

"அப்பப்போ பேருக்கு ஏத்தமாறி அறிவுமணி அறிவோடதான் யோசிக்கிற" என்றான்.

"பேச்சை மாத்தாம என்னன்னு சொல்லுடா!"

"கவலைப்பட காரணமா இல்லை" என்ற திகழோவியன், "எனக்கு அவரை பார்த்தாலே கோவமா வருதுடா. முடியல. என் வீடே எனக்கு அந்நியமா இருக்க காரணம் அவர் தான. அவரை மன்னிக்க முடியலன்னாலும், அவர் பண்ணதை மன்னிக்கவே முடியாதோன்னு பயமா இருக்குடா... இப்படியே இருந்தா இந்த அழுத்தம் என் நெஞ்சை வெடிக்க வச்சிடுற கணக்கா தெரியுது" என்ற திகழோவியன், "எக்கட்டிக்காச்சும் போயி சத்தமிட்டு கத்தனும் போலிருக்கு" என்றான்.

"உன் மனசு புரியுதுடா. ஆனா உனக்கே இவ்ளோக்கு புரியுதே! கடந்து வர முயற்சி பண்ணு" என்றான் மணி.

"முடியும் தோணல. நெருஞ்சி முள்ளாட்டம் உள்ளுக்க குத்திக்கிட்டேதான் இருக்கப்போவுது" என்றவன், சுகிர்தனனிடமிருந்து அழைப்பு வரவே அலைபேசியை ஏற்று காதில் வைத்தான்.

"சொல்லுங்கண்ணா!"

"இன்னும் வீட்டுக்கு போவலையா?" என்ற சுகிர்தன், "நான் வேணுமின்னாக்கா கெளம்பி வரட்டுமா திகழு?" எனக் கேட்டான்.

"அதெல்லாம் ஒன்னுமில்லங். இப்போ வீட்டுக்கு போயிடுவேனுங்க. நீங்க போன வேலையை முடிச்சிட்டு வாங்கங். நான் சௌரியமா இருக்கேனுங்க" என்று சுகிர்தன் அடுத்த கேள்வி கேட்டுவிடக் கூடாதென்று தனது நலன் குறித்தும் கூறினான் திகழோவியன்.

"உச்சியில உனக்கு கால் பண்ணது அம்மா திகழு. நீ என்ன பேசுனன்னு தெரியல. ஆனா அப்போலேர்ந்து ஒரேயிடத்துல உட்கார்ந்து அழுதுட்டு இருக்காங்க" என்ற சுகிர்தன்,

"என்னம்மா இருந்தாலும் மனசுக்குள்ளவே வச்சு அழுத்திக்காம என்கிட்ட சொல்லு திகழு. நீ ஒத்தையா நிக்க அண்ணன்னு நானு என்னத்துக்கு இருக்கோணும்" என்றதோடு, "இன்னமும் உனக்கு என்னையவ அண்ணனா ஏத்துக்க முடியலையா?" என்றான்.

"அச்சோ அண்ணா... அப்படியில்லங்கங்க" என்ற திகழோவியன், "போன காரியம் முடிஞ்சுதுன்னா வெடுக்குன்னு வந்துடுங்ண்ணா" என்றான்.

திகழோவியனின் இறுதி குரல் முற்றிலும் உடைந்திருந்தது.

"திகழு..."

"அழுவையா வருதுங்க" என்ற திகழோவியன் தனது கரகரத்த தொண்டையை சுகிர்தனனுக்கு காட்டப்பிடிக்காது இணைப்பைத் துண்டித்திருந்தான்.

"மச்சான்" என்று மணி திகழின் தோள் மீது கை வைத்திட...

"என்னால முடியல மணி. இன்னும் தாங்குறதுக்கு என்னயிருக்கு தெரியல" என்றான்.

"அந்த நாளையே கடந்து வந்தாச்சு. இதுக்குமேல என்ன? எல்லாத்தையும் ஒரு கை பார்த்துப்புடுவோம்" என நண்பனை அணைத்து முதுகினை தட்டிக்கொடுத்தான் மணி.

திகழோவியனின் அலைப்புறும் மனம் சமன்படும் வரை தட்டிக் கொடுத்தபடி தன்னுடைய அணைப்பில் வைத்திருந்த மணி, நேரம் இரவு ஒன்பது தாண்டி சென்று கொண்டிருப்பதைக் கவனித்து,

"வீட்டுக்கு போவோம் டா" என்றான்.

திகழோவியனும் மனதின் சில பாரத்தை நண்பனிடம் இறக்கி வைத்த தெளிவில், சரியென தலையசைத்தான்.

திகழோவியனை வீட்டு வாசலில் இறக்கிவிட்ட மணி,

"எதையும் நெனக்காம சாப்பிட்டு தூங்குடா. எல்லாம் சரியாப்போவும்" என்று தனது இல்லம் நோக்கிச் சென்றான்.

ஒன்பது மணிக்கெல்லாம் வீட்டின் அரவம் அடங்கிவிடும். இன்று விளக்கு ஒளிர்ந்துக் கொண்டிருந்தது.

தனக்கான காத்திருத்தலென உணர்ந்த திகழோவியன், மூச்சினை இழுத்து வெளியேற்றியவனாக வீட்டிற்குள் சென்றான்.

வாயில் கடந்த தாழ்வாரத்து இருக்கையிலே ராஜேந்திரன் அமர்ந்திருந்தார்.

அவரை கண்டும் காணாது திகழ் உள்ளே செல்ல...

"காலையில வூடு தாண்டி போனவன். இதுதான் வர நேரமாக்கும்?" தனது கணீரென்ற குரலால் அழுத்தமாகக் கேட்டார்.

காதில் வாங்காதவனாக சென்றுவிட்டான்.

முற்றம் தூணில் சாய்ந்து அமர்ந்திருந்த காமாட்சி, திகழின் அரவத்தில் வேகமாக புடவையால் முகத்தை அழுந்தத் துடைத்தவராக எழுந்து வந்தார்.

"ஏன் கண்ணு என்ற மேல என்னமாச்சும் கோவமா சாமி?" என்று மகனின் கையை பிடித்து வினவினார்.

தன்னுடைய கையை பிடித்திருந்த காமாட்சியின் கையை பார்த்த திகழுக்கு உள்ளம் உடையும் உணர்வு.

"என் கை புடிக்க உங்களுக்கு இத்தனை நாளாச்சாம்மா?" மனம் தாங்காது கேட்டுவிட்டான். காமாட்சி அதிர்ந்தவராக மகனை தன்னுடைய மார்போடு அழுத்திக் கொண்டவராக கதறினார்.

"எஞ்சாமி உன் முகத்தை பார்க்க முடியாம மருவி நிக்கிறேன். என்னத்த சொல்லி என்னத்த சரிப்பண்ண முடியும். உன்ற ஐயன் பண்ண தப்புல எனக்கும் பங்கிருக்குன்னு நெனச்சிருக்கியோ, அதனாலதான் அம்மான்னு சொல்லவே யோசிக்கிறன்னு நானும் விலகி நின்னுப்புட்டேன். என்னைய மன்னிச்சிடு கண்ணு" என்றவர் அழுகையோடு அவனின் கன்னம் பற்றி நெற்றியில் தன்னுடைய முதல் முத்தத்தைப் பதித்தார்.

பெற்ற அன்னையிடமிருந்து கிடைக்கும் முதல் ஸ்பரிசம், முதல் முத்தம்... இதம் என்பதை தாண்டி நிம்மதி எனும் உணர்வு மனதெங்கும் பரவ கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டவன், தாயை முதல்முறையாக அணைத்துக் கொண்டான்.

"அவங்க போன்ல இருந்து நீங்க பண்ணியிருக்கீங்க தெரியாதுங்கம்மா. அவங்களை பேசுறன்னு உங்களை பேசிட்டேன். மன்னிச்சிக்கிடுங்க" என்றான்.

"என்னைய நீதான் கண்ணு மன்னிக்கணும். அந்த மனுஷன் பண்ணதெல்லாம் தெரிஞ்சும் இன்னமும் அமைதியா இருக்கனே" என்ற காமாட்சி, "அம்மாக்கு உண்மையிலே அவங்க பண்ண காரியம் தெரியாது சாமி" என்றார்.

இரண்டரை வருடத்திற்கு முன்பே அவன் அறிந்தது. இருப்பினும் உண்மை தெரிந்த பின்னர் அந்த வலியிலிருந்து மீள தனிமை வேண்டுமாக இருக்க, விலகி இருந்துவிட்டான்.

ஈன்ற வேளையில் கூட மகனை கையிலேந்தியதில்லை. இந்த வயதில் அவனை அரவணைக்க மனம் விரும்பினாலும், விலகலை விரும்பும் மகனுக்கு, நெருங்கிச் சென்று தானும் மன வேதனையை அதிகரிக்கக் கூடாதென காமாட்சியும் தள்ளி நின்று ஓரிரு வார்த்தை பேச்சோடு இருந்து கொண்டார். நெஞ்சம் முட்டும் ஏக்கம் வலி கொடுத்த போதும், மகனின் மனதுக்கு அமைதியும், நடந்ததை ஏற்கும் பக்குவத்தையும் கொடுக்க வேண்டுமென.

"அம்மா..."

மனதிலிருந்து அழைக்கின்றான். காமாட்சியின் அடி வயிற்றில் பெரும் வலி.

"திகழு" என்றவருக்கு நெஞ்சடைக்கும் உணர்வு.

இருவரும் உணர்வின் பிடியில் தவித்திருக்க...

நிதன்யாவை தூங்க வைப்பதற்காக அறையிலிருந்த சுவிதா காமாட்சியின் கதறலில் தான் வெளியில் வந்திருந்தாள்.

காமாட்சி தன்னுடைய மகன் இயல்பாய் தன்னுடன் இணங்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சுவிதா அறிந்ததே! அவர்களுக்குள் இந்த கணம் இயல்பை ஏற்படுத்திவிடுமென்று அமைதியாக பார்த்தபடி நின்றுகொண்டாள்.

இருவரும் மேலும் மேலும் பழைய நிகழ்வுகளின் தாக்கத்தினுள் நுழைவது புரிய, தன்னுடைய பேச்சினால் மீட்டெடுத்தாள்.

"திகழு காலையிலிருந்து சாப்பிடல அத்த. மொத என் கொழுந்தன் வயிறை கவனிங்க" என்ற சுவிதா, சமையலறைக்குள் சென்றாள்.

"மறந்துட்டேன் சாமி. வாய்யா சாப்பிடு" என்று காமாட்சி திகழோவியனை உணவு கூடத்திற்கு அழைத்துச் செல்ல, சுவிதா உணவினை எடுத்து வைத்திருந்தாள்.

உணவினை தட்டிலிட்டு பிசைந்து தானே அவனின் வாயின் அருகே உணவடங்கிய கையினை நீட்டியிருந்தார் காமாட்சி.

ஊட்டிவிட்டு உண்பது புதிதல்ல. ஆனால் பெற்ற அன்னையின் கையால் உண்ண கிடைத்தது இன்று தான்.

ஒற்றை கண்ணிலிருந்து நீர் இறங்க காமாட்சி நீட்டிய உணவை வாய் திறந்து வாங்கிக்கொண்டான் திகழோவியன்.

அக்கணம் அவன்மீது அன்பு வைத்து பெற்ற அன்னைக்கு ஈடாக தன்னை தாங்கியவரின் நினைவு நெஞ்சின் மேலெழும்ப கண்கள் கரித்துக் கொண்டு வந்தன.

தனக்கு நேர்ந்ததெல்லாம் மனதில் வலம் வர...

"அவங்களும் இருந்தவரை என்னைய என் கையால சாப்பிட விட்டதில்லங். கோவமிருக்கு. அவங்க காட்டுன அன்பு" என நிறுத்தி, "இல்லாதவங்க மேல கோவப்பட்டு என்னவாகப்போவுது. அனுபவச்சது எல்லாம் அதிகம்னாலும் நான் இழந்தது எதுவும் இல்லைன்னு ஆகிடாதில்ல" என்றான்.

காமாட்சிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை, கலங்கிய கண்களை துடைத்தவராக ஒரு கையால் மகனின் தலையை தனது வயிற்றில் புதைத்துக் கொண்டார்.

திகழோவியனின் வார்த்தைகள் ஒன்றுமில்லாமல் இருக்கலாம். ஆனால் பொருள் புரிந்தவர்களுக்கு பெரும் வலி.

சுவிதா காமாட்சியின் மீது கை வைக்க...

"ஒண்ணுமில்ல சுவி. எம் புள்ளை என்கிட்ட பேசுறதுல மனசு நிறைஞ்சுப்போவுது" என்றார்.

அனைத்தையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ராஜேந்திரனுக்கு, மகனின் வலி புரிந்தாலும் தன்னுடைய செயல் தவறென்ற எண்ணம் இப்போதும் தோன்றவில்லை.

"போதுங்ம்மா" என்ற திகழ் எழுந்துகொள்ள, "இன்னும் கொஞ்சம் சாப்பிடு கண்ணு" என்றார் காமாட்சி.

"நீங்க சாப்பிடுங்க" என்றவன் அவரை அமர வைத்து பரிமாறினான்.

என்றைக்கும் இல்லாது அன்று காமாட்சி கூடுதலாக உணவு உண்பதை உணர்ந்த சுவிதாவுக்கு அவரின் இத்தனை வருட ஏக்கம் பிடிபட நெஞ்சம் கனத்தது.

காமாட்சி போதுமென சொல்லாது தான் வைக்க வைக்க சாப்பிட்டுக்கொண்டே இருக்க, தன்னுடைய அருகாமை வேண்டிய அவரின் தவிப்பு திகழோவியனை மனம் வெதும்ப வைத்தது.

இரவில் இவ்வளவு வேண்டாமென்று அவனாக நிறுத்தும் வரை அவர் போதுமென்று சொல்லவில்லை.

மகனின் கையால் கிடைக்காது கிட்டிய பாக்கியம். இன்னும் வேண்டுமென்றுதான் இருவருக்கும் தோன்றியது.

"இன்னைக்கு என்கூட தூங்குறீங்ளாங்ம்மா?" பெற்ற அன்னையின் கைவளைவில் தூங்க வேண்டுமென்ற ஏக்கம் அவனது கண்களில்.

இதற்குகூட மகனை தவிக்க விட்டிருக்கோமே என்று உயிர்வலி கொண்ட காமாட்சி,

"ரூமுக்கு போ கண்ணு. இதெல்லாம் எடுத்து வைக்க சுவிக்கு உதவிட்டு வர்றேன்" என்றார்.

சரியென திகழோவியன் திரும்பிட,

"நீங்க போங்கத்த... நான் பார்த்துக்கிறேன்" என்று சுவிதா காமாட்சியை தடுத்தவளாக அவனின் பின்னால் அனுப்பி வைத்தார்.

திகழ் மாடியேற படிகளில் கால் வைத்திட...

"உனக்கு கல்யாணம் பண்ணலாம நினைக்கிறேன். உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா, பழசை நினைச்சி சுத்திக்கிட்டு கெடக்க நேரமிருக்காது" என்றார் ராஜேந்திரன்.

அவரை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்த திகழோவியன்...

"இனியும் என் வாழ்க்கையில முடிவு எடுக்க நீங்க யாரு?" எனக் கேட்டிருந்தான்.

ராஜேந்திரன் உடல் இறுக முறைத்திட...

"வேணாம் சாமி" என்று அவனின் கரத்தைப் பற்றினார் காமாட்சி.

"நான் இங்கயிருக்கிறதால நீங்க பண்ணது சரின்னு ஏத்துக்கிட்டு மறந்துட்டேன்னு கிடையாது. என்ற அம்மாவுக்காகவும் அண்ணனுக்காகவும், அவங்க சொல்லுக்காகவும் தான் இக்கட்டிக்கு இருக்கேன். உங்களை எப்பவும் என்னால மன்னிக்க முடியாது" என விறுவிறுவென இரண்டிரண்டு படிகளாகத் தாவி மேலே சென்று மறைந்திருந்தான்.

காமாட்சி மகனின் பின்னால் செல்வதா இல்லை கணவரை பார்ப்பதா என்று கைகளை பிசைந்துகொண்டு நின்றிருக்க...

"ஒழுங்கா கல்யாணத்துக்கு சம்மதிக்க சொல்லு" என்று சொல்லிவிட்டு நகர்ந்திருந்தார் ராஜேந்திரன்.


நெஞ்சில் உயிர் நிறையும்...
 
Last edited:

Author: STN - 03
Article Title: உந்தன் நெஞ்சில் உயிராக 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
ஐ திங்க் இவர் அவன் பிறந்ததும் அவர் தங்கச்சி கிட்ட கொடுத்து இருக்கணும்னு தோணுது.....
அவனை அம்மாவா வளர்த்தவங்க இப்ப இல்ல போல......

அது தான் திகழ் அண்ணனும் இன்னும் என்னை அண்ணான ஏத்துக்க முடியலையா அப்படின்னு கேட்டு இருக்கார்.....

ராஜன் ஓட தங்கையும் இவங்க பக்கத்தில் தான் இருந்து இருப்பாங்க....