உந்தன் நெஞ்சில் உயிராக 8

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 03

Active member
Staff member
Nov 12, 2025
40
125
33
Chennai
உந்தன் உயிராக 8

கதறல் சத்தம் கேட்டு வெளிவந்த திகழோவியனுக்கு செந்தாழினி செய்து வைத்த காரியம் பதற வைத்தது.

தளர்ந்து திண்ணையில் சரிந்தவனுக்கு... அவனது இதயம் அதிகத்திற்கும் துடிப்பை கூட்டியிருந்தது.

அவளை வெறுக்கின்றான். அவள் மீது அதீத கோபம் கொண்டுள்ளான். இருப்பினும் அவன் தனக்குள் மடிய வைத்துவிட்டதாக நினைத்திருந்த காதல், இக்கணம் அவளுக்கு ஒன்றென்றதும், அதுவும் தனக்காக இப்படியொன்றை செய்திருக்கிறாள் என்றதும், நெஞ்சத்தில் ஓரத்தில் எங்கோ ஓர் மூளையில் சிறு புள்ளியாய் கரை ஒதுங்கியிருந்த அவள் மீதான அவனது நேசம் வீறுகொண்டு பொங்கி ஊற்றெடுத்தது.

அவனுக்கு அவனது விருப்பத்திற்கு அமைந்த முதல் விஷயம் அவனது காதல் மட்டுமே!

அந்த காதலும் கைசேர முடியாத சிக்கல் கோலமாக ஆனதற்கு மூலம் அவன் கொண்ட பந்தமே!

நினைக்க தவிர்த்த காலம் அவனின் குமுறலாய் நெஞ்சில் அலை மோதத் துவங்கியது.

நதியில் நடக்கும் நிலவின் நகலாய் அவனுள் அவள். மழையில் நனையும் ஒளியின் துகளாய் இருவரின் ஒருமித்த காதல்.

கோயம்புத்தூருக்கு கிழக்கில் பத்தொன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சூலூர் நகராட்சி.

தொண்டாமுத்தூரிலிருந்து பயண நேரம் ஒரு மணி நேரத்திற்கும் அதிகம்.

ராஜேந்திரனின் தங்கை கல்யாணி வாக்கப்பட்டு சென்ற ஊர்.

கல்யாணிக்கு பிள்ளையில்லை என்ற பெரும் கவலையை தீர்த்து வைத்து, அவரது வாழ்வின் வசந்தமாக வந்து உதித்தவன் தான் திகழோவியன்.

தவமிருந்து கிடைத்த வரமென்பதால் கல்யாணிக்கு உலகமே திகழோவியன் தான். ஒரு நொடி கூட தனது பார்வையை மகனின் மீதிருந்து விலக்கிடமாட்டார்.

மகன் மீது அப்படியொரு பாசம். அவர் திகழ் மீது காட்டும் அன்பையும், அக்கறையையும் மற்ற பிள்ளைகள் பார்த்தால் நிச்சயம் தனக்கும் இவரே அம்மாவாக கிடைத்திருக்கலாம் என்ற ஏக்கம் ஒரு நொடியேனும் மனதில் தோன்றுவதை தவிர்க்க முடியாது.

தன்னுடைய கையிலும், மடியிலும் வைத்து மார்போடு சுமந்த மகனை முதல்முறை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, மகனை பிரிந்து வீட்டிலிருக்க முடியாது, அரசுப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர் அந்த வேலையை விட்டுவிட்டு, திகழை சேர்த்த தனியார் பள்ளியில் ஆசிரியராக சேர்ந்தார்.

"பாசங்கிற பேர்ல நீ பண்ற ஒன்னும் சரியில்லை கல்யாணி" என்று கணவன் கோவிந்தன் சொல்வதையெல்லாம் அவர் கண்டுகொள்வதே இல்லை.

தெருவில் இறங்கி மற்ற பிள்ளைகளுடன் விளையாடினால் விழுந்து அடிபடுமெனும் காரணத்துக்காக வீட்டிலே தன்னுடன் மட்டுமே விளையாட அனுமதிப்பார். அவனுக்கு வேண்டிய அனைத்து விளையாட்டுப் பொருட்களையும் நிரப்புவதற்கே தனியாக ஒரு அறையை கட்ட சொல்லி நச்சரித்து கோவிந்தனை செய்து முடிக்க வைத்தார்.

"அவன் விஷியத்துல அம்மாங்கிற எல்லையை மீறி நீ போயிக்கிட்டு இருக்கவ" என்ற கோவிந்தனின் கடிதலெல்லாம் கல்யாணி பொருட்டாகவே ஏற்பதில்லை.

கோவிந்தனுடன் கூட மகனை விடமாட்டார். ஒட்டுப்புல் போன்று அவன் வளரும் வரை இடுப்பிலே வைத்துக்கொண்டு சுற்றியவர்.

"ஒருகட்டத்துல உன் பாசம் அவனுக்கு விஷமா தெரியும்" என்று கோவிந்தன் எடுத்துக்கூறிய எதுவும் கல்யாணியை அசைத்துப் பார்க்கவில்லை.

மலடி எனும் சொல் கொடுத்த வலி... அந்த வலியை போக்க அவதரித்த உயிர். இறைவன் கொடுத்த இன்பம். கல்யாணியின் சொர்க்கம் திகழோவியன். தனக்கு அவன் மட்டுமே என நினைக்கும் கல்யாணியின் உலகம் திகழோவியன் மட்டுமே!

அந்த உலகத்தில் தாயும் மகனும் மட்டுமே!

தற்போது அவன் இரண்டாம் ஆண்டு கல்லூரி செல்லும் இளைஞன். ஆனால் இப்போதும் மகனை தன்னுடைய கை வளைவில் வைத்துக்கொண்டு தான் கல்யாணி உறங்குவார்.

மகன் மீதான மனைவியின் அன்பில் கோவிந்தனுக்கு எப்போதும் எரிச்சல் தான். கல்யாணி எந்தளவிற்கு மகனுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாரோ அதே அளவுக்கு கோவிந்தன் தள்ளி நின்றார்.

சிறுவயதில் அன்னையுடனே இருப்பது எந்தளவிற்கு மகிழ்வாக இருந்ததோ... அதேயளவு மகிழ்வு வளர்ந்தவனாகியப் பின்பு இருந்தாலும், அந்தந்த வயதிற்குரிய செயல்கள் யாவும் செய்திட முடியாத பெரும் ஆதங்கம் திகழோவியனுக்கு இருந்தது.

தாங்கள் படிக்கும் பள்ளியின் ஆசிரியரின் மகன் என்பதற்காகவே அதிக நட்பு வட்டம் இருந்ததில்லை.

காலை பள்ளிக்கு அன்னையுடன் செல்பவன் மாலை அவருடனே திரும்புவான்.

சிறப்பு வகுப்புகள் இருக்கும் நாட்களில் கூட, கல்யாணி மகனுக்காகக் காத்திருந்து அழைத்து வருவார்.

மற்ற மாணவர்கள் போன்று சேட்டை செய்துகொண்டு பள்ளி வாகனத்தில் பயணம் செய்ததில்லை. அரட்டை அடித்துக்கொண்டு நண்பர்களுடன் குழுவாக சைக்கிளில் பள்ளி சென்றதில்லை.

பள்ளி முடிந்ததும் சிறிது நேரம் மைதானத்தில் விளையாடி களைத்ததில்லை.

மதிய உணவை பகிர்ந்து உண்டதில்லை. நண்பர்களிடம் சண்டையிட்டது இல்லை. பெண் தோழிகளேன யாரும் இருந்ததில்லை.

அன்னையின் அன்பு ஒன்று மட்டுமே எல்லையில்லாமல் கிடைக்கப்பெற்றவனுக்கு வயதுக்குரிய மற்றவை யாவும் தொலைதூர நட்சத்திரம் தான்.

பள்ளியில் மாணவன் யாருடனும் சில நிமிடங்களுக்கு அதிகமாக நின்று பேசிவிட்டால் கூட, மகனை அழைத்து, அவனுடன் ஏதும் தகராறா என்ன ஏதென்று கேட்டு அனுப்பி வைப்பார்.

வளர வளர தாய்ப்பாசம் அவனுக்கு அவரது கைச்சிறையாகத்தான் தோன்றியது. இருப்பினும், அவரின் அளவற்ற அன்புக்கு மத்தியில் கிடைக்கப்பெறா சந்தோஷங்கள் யாவும் மதிப்பிழந்தவையாகிப்போயின.

அன்னையின் அன்புக்கு மேல் வேறென்ன வேண்டுமென்று நினைத்தே, அவருக்காக மற்ற ஆசைகளை துறக்க பழகிக்கொண்டான்.

அன்னையின் அளவற்ற அன்பில் அப்படியொரு கர்வம் அவனுக்கு.

வீட்டின் பின்கட்டில் இடையில் கட்டிய துண்டும், மேலணிந்திருந்த கையில்லா பணியனுமாக கல் மேடையில் அமர்ந்திருந்தவனுக்கு தலையில் சீயக்காய் தேய்த்துக் கொண்டிருந்தார் கல்யாணி.

"ம்மா... மெதுவாங்ம்மா!"

"அச்சோ கண்ணு வலிச்சுப்புடுச்சா" என்ற கல்யாணி, "பொறந்தநாளு அதுவுமா வலிக்க வச்சிப்புட்டனே, மெல்லத் தேய்க்கிறேன்" என்றவராக பொறுமையாக தேய்த்து, தலையில் தண்ணீரை ஊற்றும் முன்பு நீரின் சூட்டினை தொட்டுப் பார்த்து, குவளையால் மொண்டு, அவனின் கண்ணுக்கு மேல் நெற்றியில் கை வைத்து மறைத்தவராக தலையில் ஊற்றினார்.

"நானென்ன சின்னக் குழந்தைங்களாங்மா?" திகழோவியன் கேட்க,

"உனக்கே ஒரு புள்ளை பொறந்தாலும் என்ட்ர கைக்கும் மனசுக்கும் நீ குழந்தைதான் கண்ணு" என்று அவனின் கன்னம் பற்றி உச்சியில் முத்தம் வைத்தார்.

"கொடுத்து வச்சவனுங்மா நானு" என்ற திகழோவியன், "என் ஃப்ரெண்ட்சுக்கெல்லாம் பொறாமைங்க... உங்களை மாதிரி அவுங்க அம்மாலாம் சாஃப்ட்டா இல்லைன்னு" என்றான். முகம் கொள்ளா சிரிப்புடன்.

"மத்தவங்களுக்கு ஈசியா கிடைச்சிட்ட மாதிரி நீ கிடைக்க நான் பல சங்கடத்தை தாண்டி வர வேண்டியதிருச்சு தங்கம்" என்றவர், அவனின் தலையை தன்னுடைய புடவை தலைப்பால் துவட்டி விட்டவர்...

"எண்ணெய் வச்சு ஊத்தியிருக்கு. திரும்ப தலைக்கு தண்ணி ஊத்தக்கூடாது கன்னுக்குட்டி. உடம்புக்கு மட்டும் சோப்புப்போட்டு குளிச்சிப்போட்டு சட்டுன்னு வந்துப்புடு" என்றார்.

"தலைக்கும் நானே தேய்ச்சிகிறேணுங்க சொன்னா எங்க கேட்டீங்" என்று எழுந்து குளியலறைக்குள் சென்று கதவடைத்தான்.

"நானே குளிக்க வச்சிப்புடுறேன் சொல்றேன்... நீ எங்க கேட்ட" என்றார் கல்யாணி.

"ஆமா இன்னும் அவன் மொக்கு பாப்பான்னு உனக்கு நெனப்பா" என்று வந்த கோவிந்தன்,

"வேலைக்கு நேரமாச்சு வந்து சோத்தை போடுடி" என்றார்.

"என்ட்ர புள்ளைக்கூட செத்த சிரிச்சிப் பேசிப்புட்டா உம்மட மனசுக்கு பொறுக்காதே" என்ற கல்யாணி, "முத்துபுள்ள மடார்ன்னு வந்து சேரு... அதிக நேரத்துக்கு தண்ணியில நிக்காத" என திகழிடம் குரல் கொடுத்தவராக உள்ளே சென்றார்.

கல்யாணி கோவிந்தனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருக்க... திகழோவியன் குளித்துவிட்டு வந்தான்.

"கன்னுக்குட்டிக்கு வாழ்த்து சொல்லுங்க" என்ற கல்யாணி, மகனின் பின்னே சென்றுவிட்டார்.

செல்லும் மனைவியை ஒரு பார்வை பார்த்த கோவிந்தன் உணவை முழுதாக முடிக்காது எழுந்து சென்றுவிட்டார்.

"சொக்கா பொத்தானை நான் போட்டுக்க மாட்டேனுங்களா?" என்றவன் பேச்சை காதிலே வாங்காத கல்யாணி, அவனுக்கு தலை சீவி, நெற்றியில் விபூதி பூசிய பின்னரே நகர்ந்தார்.

"வா தங்கம் சாப்பிடுவ" என்று வெளியேறியவர், நிமிடங்கள் பல கடந்தும் மகன் தன் பின்னால் வராததால் மீண்டும் அறைக்குள் சென்றார்.

அன்று கல்லூரி விடுமுறை தினமென்பதால் அவனது கல்லூரி நண்பர்கள் வரிசையாக அழைத்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர்.

"இன்னும் என்ன கண்ணு பேச்சு. யாரது?"

"நம்ம மணி தானுங்மா" என்ற திகழோவியன், "சொல்லியிருக்கேனுங்களே! நம்ம மாமா ஊருதாங்க இவனும்" என்றான்.

"இருக்கட்டும்... வச்சிப்புட்டு வா தங்கம்" என்று தானே அலைபேசியை வாங்கி அழைப்பினைத் துண்டித்தவராக, மொத்தமாக அணைத்து தனது கையோடு வைத்துக்கொண்டவராக மகனை கூட்டிச் சென்றார்.

"யாருகிட்டயும் நெருங்கி பழகாத சாமி. அளவா வச்சிக்கோணும்" என்றவாறே, உணவினை தட்டிலிட்டு தானே ஊட்டிவிட்டார்.

"நானே" என்றவனை பார்வையால் அடக்கி, "கொள்ள வயசானாலும் நான் ஊட்டி நீ சாப்பிடுறதுல இந்த அம்மாவுக்கு சந்தோஷம் கண்ணு" என்றார்.

புன்னகைத்தபடி வீட்டை ஒரு பார்வை பார்த்தவன்,

"அப்பா போயாச்சுங்களா?" என்றான்.

"போயிருப்பாரு!"

"இந்த வருஷமும் அப்பா எனக்கு வாழ்த்து சொல்லலங்க." திகழின் முகம் வாடுவதை பொறுக்காது,

"கூறுகெட்ட மனுஷன். அவரு கிடக்கறாரு. உனக்கு அம்மா நானிருக்கேன் கண்ணு. நீ எதுக்கும் வெதும்பக்கூடாது" என்றவர், "கோயிலுக்கு போய் வருவோம்" என்றார்.

"சரிங்ம்மா" என்றவன் எழும்பிட,

"அம்மா இன்னும் சாப்பிடல கண்ணு" என்றார் கல்யாணி.

"சாரிங்மா! ஏதோ நெனப்புல கேட்காம விட்டேனுங்" என்று அவரருகில் மீண்டும் அமர்ந்து ஒரு வாய் உணவை அவருக்கு வாயில் வைத்தான்.

வீட்டிலிருக்கும் நேரம் முதல் வாய் உணவு திகழோவியனை ஊட்ட வைத்தே உண்பார். அதில் அவருக்கு அலாதி பேரின்பம்.

"சரி கண்ணு நான் சட்டுன்னு சாப்பிட்டுபோட்டு வர்றேன். நீ எம்மட வண்டியை வெளியத்தள்ளு" என்றார்.

"பெரிய பைக்ல போவலாங்க... நான் ஓட்டுறேன்."

பெரிய ஆண்களுக்கு மட்டுமில்லை... சிறு வயது ஆண் பிள்ளைகளுக்கூட இருசக்கர வாகனத்தின் மீது அப்படியென்ன பெரும் விருப்பமென்று தெரியவில்லை. அதில் பயணிப்பதே அவர்களுக்கு தனி உவகை போலும். அதிலும் சொந்த வண்டி வைத்திருந்தால், தான் பெரிய ஹீரோ எனும் நினைப்பு வேறு அவர்களுக்கு வந்துவிடும்.

"காலேஜுக்கு பைக்ல போறேனுங்க... வாங்கித் தர்றீங்களா" என அத்தனை ஆசையாகக் கேட்டானென்று, உடனடியாக வாங்கிக் கொடுத்த கல்யாணி, இதுவரை ஒருநாளும் அவனை அந்த வண்டியில் கல்லூரிக்கு செல்ல அனுமதித்தது இல்லை.

"ரோட்ல எத்தனை ஆக்சிடென்ட் பார்க்கிறோம் கண்ணு. நாம ஒழுங்கா போனாலும் எதிரா வர்றவன் ஒழுங்கா வருவியாங்கிற... நீ பாதுகாப்பா காலேஜ் பஸ்லே போய் வந்துக்க சாமி. அப்படி பஸ்ல போவ விருப்பமில்லின்னா நான் கொண்டாந்து விட்டுப்போட்டு கூட்டியாரேன்" என்றார்.

அவரின் அக்கறை புரிந்தாலும் அக்கணம் அவனுக்கு ஆயாசமாகத்தான் வந்தது.

"அப்புறம் என்னத்துக்குங்மா கேட்டதும் வண்டி வாங்கிக் கொடுத்தீங்க?" என முதல் முறையாக அவரிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினான்.

"என்ட்ர சாமி நீ கேட்டு எதுவும் கிடைக்கலன்னு இருக்கக்கூடாது தங்கம்" என்றார். வாஞ்சையாக அவன் முகம் தடவி.

"என்ட்ர அப்புனுக்குட்டிக்கு கோவமெல்லாம் வருதே" என்று முத்தம் வைத்தவர், "உன்ற விஷயத்துல நான் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம்னு பண்ணாமாட்டேங் கண்ணு" என்றார்.

"போங்கங்மா... பாசத்தாலே கொலைப்பன்றீங்கங்" என்று எழுந்து சென்றிருந்தான்.

அதன் பின்னர் அவனை தினமும் தங்கள் தெருவிலே, சிறு பிள்ளைகள் மாலை நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதைப்போன்று ஓட்ட வைப்பார். தனது கண்காணிப்பில்.

"இன்னுமடா நீ வளரல" என தெரு நண்பர்கள் கேலி செய்ய, அந்த வண்டியை கையிலெடுப்பதையே நிறுத்திவிட்டான்.

இன்று பிறந்தநாள், கேட்டால் கல்யாணி ஒப்புக்கொள்வாரென நினைத்து அவன் கேட்க, அப்போதும் அவர் தானே தனது ஸ்கூட்டியில் கோவிலுக்கு அழைத்துச் சென்று வந்தார்.

அதட்டி, மிரட்டி, திட்டியபடி நடந்துகொள்வராக இருந்தால் மற்ற பிள்ளைகள் போன்று இவனும், "நீங்க என்ன சொல்றது வேணாம்னு, நான் செய்வேன்" என வீம்பு பிடிப்பவனாக இருந்திருப்பானோ என்னவோ? ஆனால் இவரோ ஒரு வார்த்தை கடியாது பாசத்தை கொட்டும்போது அவனால் அமைதியாகத்தான் இருக்க முடிகிறது.

அன்பு அடிபணிய வைக்கும் சக்தியல்லவா. திகழோவியன் கல்யாணியின் தாயன்புக்கு ஈடாக மொத்தமாக தன்னையே ஒப்புவித்தவனாக அடிபணிந்திருந்தான்.

அன்றைய தினம் மாலை போல் தான் அவனிடம் அலைபேசியை திருப்பிக் கொடுத்தார்.

"நீங்கதான் வச்சிருந்தீங்களாங்மா? இது தெரியாம என் ரூம் முழுக்க தேடிக்கிட்டு கிடந்தேனுங்க" என்றவாறு வாங்கி அலைபேசியை உயிர்பித்தான்.

"ஏன் ஆஃப் ஆகியிருக்கு?"

"தெரியல தங்கோ... நீ என்னன்னு பாரு. ராத்திரிக்கு உனக்கு பிடிச்ச கோழிச்சாறு வைக்கிறேன்" என்று நகர்ந்தவர்,

"மாமா" என்று திகழோவியன் சொல்லியதில் பதறி அவனின் அருகில் ஓடி வந்திருந்தார்.

"என்னாச்சுங்மா? எதுக்கு இப்படி ஓடியாரிங்க?"

"யாரு அண்ணனா... கொண்டா நான் பேசுறேன்" என்றவர், "என்னவோ சொன்னாருங்க மாமா... காதுல கேட்கலையே! என்னன்னு கேட்டுப்புட்டு தாரேனுங்க" என திகழ் சொல்லி முடிக்கும் முன்பு அலைபேசியை அவனது கையிலிருந்து பறித்திருந்தார்.

"சொல்லுங்ண்ணா! அக்கட்டிக்கு எல்லாரும் சௌரியமாங்?" எனக் கேட்டுக்கொண்டே திகழோவியனை விட்டு தள்ளிச் சென்றார்.

அப்போதுதான் வேலை முடிந்து வந்த கோவிந்தன்,

"நீயென்னடா தடத்தை மறிச்சிக்கிட்டு நிக்கிற?" என்றவரின் கேள்வியில் நகர்ந்து நின்றான்.

"அப்பா!" கோவிந்தன் அவனைத் தாண்டிக்கொண்டுச் செல்ல திகழ் கூப்பிட்டிருந்தான்.

நின்றவர் என்ன ஏதென்று கேட்கவில்லை. அவனே பேசினான்.

"இன்னைக்கு என்ட்ர பொறந்தநாளுங்க..."

"அதுக்கு?"

"நீங்க இதுவரைக்கு ஒரு வருஷம் கூட எனக்கு வாழ்த்து சொன்னது இல்லங்களே..." தயக்கமாகத்தான் கேட்டான். அவர் என்றும் அவனது முகம் பார்த்து மகனென்று பேசியதில்லை. அவன் இருக்குமிடத்தில் இருந்ததுமில்லை.

"அது ஒண்ணுதான் குறையா?" என்றவர் உள்ளே சென்றுவிட்டார்.

ஒரு மகனாக அவனின் சிறிய ஆசை. அதைக்கூட அவரால் செய்ய முடியாத அளவுக்கு, அதிலும் தானே வாய் திறந்து கேட்டும்... திகழோவியனுக்கு மனது கனத்துப்போனது.

தாயன்பு அதிகத்திற்கும் கிடைத்தாலும், தந்தையன்பு திகழோவியனுக்கு எட்டாகனிதான்.

கல்யாணி எங்கென்று பார்த்தான். அவர் ராஜேந்திரனிடம் அலைபேசியில் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தார்.

"அம்மாவுக்கு அவுங்க அண்ணன்னா பாசம், மாறுவதிலாம் அதிகம் தான். ஆனாட்டுக்கு என்னைய ஏன் அவர்கிட்ட பேசவே விடமாட்டேங்கிறாங்க. அத்தைக்கும் நான்னா கொள்ளப்பிரியம்" என்று முணுமுணுத்துவனாக கல்யாணியையைப் பார்த்திருந்தான்.

சில நிமிடங்களில் அவனின் அருகில் வந்தவர்,

"இந்தா கண்ணு... மாமா உனக்கு வாழ்த்து சொல்லணுமாம்" என்று அலைபேசியை அவனிடம் கொடுத்தவர், அவன் ராஜேந்திரனிடம் பேசிய ஒரு நிமிடமும் அவனுடனே நின்றிருந்தார்.

"மாமா என்ன சாமி சொன்னாரு?"

"பொறந்தநாளு வாழ்த்துதாங்மா" என்று அலைபேசியை சட்டைப்பையில் வைத்தவன், "நான் ஒண்ணு கேக்கட்டுங்கலாங்மா?" என்றான்.

"அம்மாகிட்ட கேக்க என்ன கண்ணு யோசனை?"

"மாமா வீட்டுக்கு நீங்க போறீங்க வாரீங்க... மாமாவும் உங்களுக்கு ஏதுமாச்சுன்னா சட்டு சட்டுன்னு செஞ்சிக்கொடுக்கிறாரு. அப்புறம்
ஏங்மா என்னைய மாமா வூட்டுக்கு லீவுக்கு கூட அனுப்ப மாட்டேங்கிறீங்க. சுதிர்தன் மாமா மட்டும் இக்கட்டி நம்ம வூட்டுக்கு வர்றாங்க" என்றான்.

"என்ன திகழு இன்னைக்கு நிறைய கேள்வியா கேட்குறியாட்டுக்கு" என்ற கல்யாணி, "உன்ற அத்தை உன்னை நல்லாவே பார்த்துக்கிடுவாங்க. இருந்தாலும் நீ என்ட்ர கைக்குள்ள, என்ட்ர கண்பார்வையிலே இருக்கிறமாறி வராதே சாமி. எனக்கும் நீயில்லாம இந்த வூடு வெறிச்சோடி வெதுக்குன்னு இருக்குமே" என்றார்.

"எனக்கும் வயசாவுதுங்மா... இன்னமும் குழந்தையாவே ட்ரீட் பண்றீங்க... போங்கங்" என்று முகம் திருப்பினான்.

"நான் வாழுறதே உனக்காகத்தான் கண்ணு..." என்று கல்யாணி கண்கள் கசக்கிட...

"எனக்கும் உங்களைவிட எதுவும் பெருசில்லைங்க... வயசுக்கேத்த ஆசை தோணுதுங்களே. அதான் கேட்டுப்புட்டேன்" என்று அவரை சமாதானம் செய்தான்.

மொத்ததில் திகழோவியன் என்பவன் கல்யாணியின் நிழலாகத்தான் அவரின் நிழலிலே வளர்ந்தான்.

மற்ற பிள்ளைகள் போன்று வயது சுதந்திரம் வேண்டுமென நினைத்தாலும், கல்யாணியின் சிறு முகச்சுணக்கம் கூட அவனை அவருக்குள் அடக்கி வைக்க போதுமானதாக இருந்தது.

கல்யாணியைத் தாண்டி அவனுக்கு நெருக்கமான முதல் உறவு செந்தாழினி.

திகழோவியன் படிக்கும் கல்லூரியில் தான் அவளும் முதலாமாண்டு படிக்கின்றாள். அவனது துறையே!

எதிர்பாராமல் ஏற்பட்ட அறிமுகம் காதலாக உருவம் கொண்டிருந்தது.

உன் இல்லாமை...

என்னை தேட வைக்கிறதென்றால்...
என்னுள், நீ வாழ்கிறாயென்று அர்த்தம்.



நெஞ்சில் உயிர் நிறையும்...
 

Author: STN - 03
Article Title: உந்தன் நெஞ்சில் உயிராக 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
பாசம் வைக்கலாம் தப்பு இல்ல...பட் இது எப்படி சரியாகும்?????
உங்க பாசம், அன்பு, உணர்வுனு இருந்தா.....அவன் உணர்வுகளுக்கு எங்க இடம்?????
அவனோட சின்ன சின்ன ஆசைகள் கூட மதிக்காம இப்படி கைசிறையில் வெச்சி அவனை கஷ்டம் தான் படுத்தறாங்க கல்யாணி......

கோவிந்தன் பண்றது சரி இல்ல.....
அப்பவே தடுத்து இருக்கலாம் இல்ல