• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் அன்புக்கு நன்றி! - கதைத்திரி

Status
Not open for further replies.

நிதனிபிரபு

Administrator
Staff member
“நான் புள்ளைப் பூச்சியா உனக்கு?

“எனக்கு அப்பிடித்தான்!”

அவன் மனம் நிறைந்து போயிற்று. நிமிர்ந்து அவள் முகம் பார்த்து, “நீ சந்தோசமா இருக்கிறியா நிரல்?” என்றான்.

“என்ன புதுசா?” மெல்லிய வியப்புடன் வினவினாள்.

“தெரியா! நான் உன்ன சந்தோசமா வச்சிருக்கிறனா?” ஒற்றைக் கையில் தலையை ஏந்தி, மறு கையால் அவள் கன்னம் வருடியபடி தன் ஆழ்ந்த குரலில் வினவினான்.

பதில் சொல்லாமல் விழியுயர்த்தி அவனைப் பார்த்த நிரல்யா அவன் புறமாய்த் திரும்பி, “நான் உங்களைச் சந்தோசமா வச்சிருக்கிறனா? என்னோட நீங்க சந்தோசமா இருக்கிறீங்களா?” என்று திருப்பிக் கேட்டாள்.

“சந்தோசமா இருக்கிறனா? அதுக்கும் மேல நிரல்! இதைவிட வேற ஒண்டுமே வேண்டாம் எனக்கு.”

“உங்கட நண்டுக் குட்டிய?”

“அடிதான் வாங்குவாய். என்ர நண்டுக்குட்டி, நீ, நான், மாமா, மாமி. போதும் எனக்கு இந்த வாழ்க்கை!” என்றான் நிறைவாக.

“எனக்கும் அப்பிடித்தான் மச்சான். சொல்லத் தெரியேல்ல. ஆனா நீங்க போதும் எனக்கு!” என்றாள் அவளும்.

இறுக்கமில்லாமல் அவளை அணைத்துக்கொண்டான் அனந்தன். அவன் கையணைப்புக்குள் கிடந்தவளுக்கும் விலகும் எண்ணமில்லை.

மாதங்கள் ஓடி மறைய அவனுடைய நண்டுக்குட்டி இந்தப் பூமிக்கு வந்து சேர்ந்திருந்தாள். வாழ்க்கை இன்னுமின்னும் அழகாயிற்று.

இதற்குள் ருக்க்ஷி பிள்ளைகளோடு இலண்டனுக்குப் போய்ச் சேர்ந்திருந்தாள். அடுத்த நான்காம் மாதம் அவள் தாய்மை அடைந்திருக்கும் செய்தி வந்து சேரவும் இன்னுமே சந்தோசமாயிற்று.

சிசிர வீடியோ கோலில் அழைத்துச் சொன்னபோது வாழ்த்தினைச் சொல்லிவிட்டு, “எத்தின மாதமாம்?” என்று இயல்பாய் வினவினாள்.

“நாலு மாதமாம்.”

“ருக்க்ஷி அங்க வந்தும் நாலு மாதம் தானே?” என்றவளால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

“நிரா!” என்று அதட்டிய சிசிரவின் முகம் சிவந்து போயிற்று. முகம் திருப்பி அவளைப் பாராமல் கேசம் கோதினான். அவனையே பார்த்திருந்த நிரல்யா அடக்கமாட்டாமல் நகைத்தாள். அவன் எவ்வளவு அதட்டியும் அடங்கவில்லை. ருக்க்ஷி அவள் சிரிப்பை எதிர்கொள்ள இயலாமல் எழுந்து ஓடி இருந்தாள்.

“லண்டனுக்கு போய் நல்ல உழைக்கிறீங்க போலயே!” அவள் அவனை விடவில்லை.

“நிரா ப்ளீஸ்!”

அதே அறையில் சற்றுத் தள்ளி அமர்ந்திருந்து லாப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஆனந்தனின் உதட்டிலும் மெல்லிய முறுவல் அரும்பிற்று.

அன்று சிசிரவை எதிர்கொள்ளவே அந்தப்பாடு பட்டவள் இன்று அவனை விடாமல் ஒட்டுகிறாள். காலத்தோடு நேர்ந்து அவன் காதலும் கொடுத்த மாற்றம் இது! மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.

“இப்பதானே விளங்குது. ருக்க்ஷிய என்னத்துக்கு அவ்வளவு அவசரமாக் கூப்பிட்டனீங்க எண்டு.” என்று இன்னும் அவள் அவனை விடவில்லை.

அவளுக்கு மனத்தில் அத்தனை நிறைவு. கடந்துகொண்டிருந்த காலம் அவர்கள் எல்லோர் வாழ்க்கையையும் மெல்ல மெல்ல அழகாய் மாற்றிக்கொண்டிருந்தது.

அன்று அவளைக் கடத்திக்கொண்டு மொட்டை மாடிக்கு வந்திருந்தான் அனந்தன்.

“மச்சான், அம்மா பாத்தா என்ன நினைப்பா?” அவர் ஏற்கனவே இன்னும் கொஞ்ச நாள்களுக்குத் தள்ளி இருக்கும்படி இவளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.

“அவா ஏன் மொட்டை மாடிக்கு வரப்போறா?”

“ஆனா…” என்று இவள் ஆரம்பிக்கையிலேயே, “என்ன ஆனா?” என்று அவன் அதட்டிக்கொண்டு வரவும் பக்கென்று வாயை மூடிக்கொண்டாள்.

“நண்டுக்குட்டி எழும்பினா என்னைத் தேடுவா.”

“தேட முதல் உன்னை அனுப்பிறன். இப்ப பேசாம இரடி!” இத்தனை நாள் பிரிவு அவனைக் கோபம் கொள்ள வைத்தது.

அவளுக்கும் கணவனின் அணைப்பும் அண்மையும் தேவையாய் இருக்க, அவனுக்கு இசைந்தபடி, “பிறகு ஒரு றால்(இறால்) குட்டி வந்திடும் மச்சான், பரவாயில்லையா?” என்றாள் சிரிப்புடன்.

“பிறகு ஒரு கனவாய்க் குட்டிக்கும் சேர்த்து ஏற்பாடு செய்றன்.” என்றவனின் பேச்சில் சத்தமாகவே சிரித்தாள் நிரல்யா.

“இது பகல் மச்சான்.”

“இரவாக்கினா ஓகேதானே?” என்றவன் அவன் அறையை இரவாக்கி இருளில் அவளை விழுங்கினான்.

அதன் பலன் அடுத்து வந்த மாதங்களில் அவள் வயிற்றில் இறால் குட்டியும் கனவாய்க் குட்டியும் ஒன்றாய் உதித்திருந்தனர்.

அன்றிலிருந்து சிசிரவின் அழைப்பை அவள் ஏற்பதே இல்லை. பின்னே மகளுக்கு ஒரு வயதாகும் நேரத்தில் அடுத்து இரட்டைக் குழந்தைகளாம் என்று அறிந்தால் விடுவானா?

அன்று சச்சினிக்குப் பிறந்தநாள். வேறு வழியில்லை. அழைத்து வாழ்த்தாமல் இருக்க முடியாது. யாரையும் பார்க்காது சச்சினியை மட்டுமே பார்த்து இவள் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்ல, “எங்க, ருக்க்ஷி வந்து நாலு மதம் தானே எண்டு சொன்ன அந்த முகத்தைப் பாப்பம்.” என்றான் சிசிர வேண்டுமென்றே.
“சிசிர!” முகம் சிவக்க அதட்டினாள் அவள்.

அவன் விடவில்லை. “நான் அடுத்த பிள்ளை பெத்தாலும் ரெண்டு வருசத்தில மூண்டு பிள்ளைகளை வச்சிருக்கப் போற நீங்க எல்லாம் இனி வாயத் திறக்கக் கூடாது!” என்று அவளைத் தன்னால் முடிந்தவரையில் ஓட்டிவிட்டே விட்டான் சிசிர.

“போச்சு போச்சு! மானமே போச்சு. எல்லாம் உங்களால!” வீட்டுக்கு வந்த அனந்தனிடம் அவள் ஏறுப்பட, “அவன் கிடந்தான் விசரன். உன்ர மச்சான் எங்கயும் உழைப்பை இரட்டிப்பா போடுறவனாம் எண்டு அடுத்த முறை கதைக்கேக்க சொல்லிவிடு! ஒற்றை ஒற்றையாப் பெத்தவன் எல்லாம் கதைக்க வாறான். நாங்க அடுத்த முறை மூண்டா இறக்கிறம்.” என்றதும் கொலைவெறியாகிப்போனாள் நிரல்யா.

ருக்க்ஷியின் பிள்ளைப் பேற்றுக்கு சிசிரவின் அப்பாவும் மாமியும் லண்டனுக்குச் சென்று சேர்ந்திருந்தார்கள். அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள் ருக்க்ஷி. இப்போதெல்லாம் எந்தச் சங்கடமும் இல்லாமல், தடுமாற்றங்களும் இல்லாமல் சிசிர குடும்பத்தோடு நிரல்யா கதைக்குமளவுக்கு மாறியிருந்தாள்.

அவள் வாழும் வாழ்க்கை, அவள் முகத்தில் தெரியும் பூரிப்பு, அனந்தன் மீது அவள் உயிராக இருப்பது எல்லாம் சேர்ந்து சிசிரவின் காயங்களை ஆற்றியிருந்தன.

இப்போது அவர்களுக்கிடையில் இருப்பது ஒரு அற்புதமான அன்பு. கறந்த பாலின் தூய்மை அதில் இருக்கும். எங்கிருந்தாலும் மற்றவரின் நலனுக்காய் அவர்கள் உள்ளம் வேண்டிக்கொண்டே இருக்கும். அந்த அன்பு களங்கப்படாமல் கறை படியாமல் அவர்களின் கடைசி மூச்சு வரையில் அவர்களோடு வாழ்ந்துகொண்டேதானிருக்கும். அந்த வரம் அவர்களுக்கு அமைந்த அருமையான துணைகளினால் உண்டானது.

வருடங்கள் ஓடின! அன்றும் ஏழாலைக்குப் புறப்பட்டான் அனந்தன். இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு அவன் கழுத்தில் நண்டுக்குட்டி அமர்ந்திருந்து அவன் தலையை இறுக்கிப் பற்றியிருக்க, அவன் இரண்டு கைகளிலும் இறால் குட்டியையும் கனவாய்க் குட்டியையும் தூக்கியிருந்தான். அருகில் சின்ன முறுவலோடு நடந்து வந்துகொண்டிருந்த நிரல்யாவின் வயிறு இலேசாய் மேடிட ஆரம்பித்திருந்தது, அவள் ஆசைப்பட்ட சிங்கக்குட்டிக்காக!

அங்கே வாசலில் சற்று முன்னர் குளித்துவிட்டு வந்த அனந்தனின் அடர் சிவப்பு நிற பஜிரோ, தான் உயிராய் நேசிக்கும் தன் குடும்பத்தை ஏந்திக்கொண்டு செல்வதற்காகத் துள்ளலோடு காத்திருந்தது.

முற்றும்.
 
Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் ஹாய் ஹாய்,

ஒரு வழியா கதை முடிச்சிட்டேன்ன்ன்ன்ன். என்னவோ நிறைய எல்லாம் சொல்ல ஆசைப்பட்டேன். இப்ப எதுவுமே நினைவில் இல்ல.

நான் நினைச்ச மாதிரியே, நான் ஆசைப்பட்ட மாதிரியே கதையை எழுதி முடிச்சிட்டேன். அதைவிட இவ்வளவு வேகமாக… ‘பரவாயில்லை, நிதா நீ கெட்டிக்காரிதான்’ என்று நானே என் தோள் தட்டிக்கொள்ளும் தருணம்.

அதற்குக் காரணமாக இருந்த உங்க எல்லோரினதும் அன்புக்கும் நன்றி! அதுவும் என் குரூப்பில் கலகலத்து, செல்லச் சண்டைகள் பிடித்து, எப்போ அடுத்த அத்தியாயமென்று கேட்டு கேட்டு என்னை எழுத வைத்த உங்க எல்லோருக்கும் என் பிரத்தியேகமான அன்பும் நன்றியும்.

இந்தக் கதையைக் குறித்து என்னால் சொல்ல முடிந்த இரண்டே இரண்டு வார்த்தைகள் மட்டுமே: அன்பு அலாதியானது! அவ்வளவுதான்.

முதலில் கரை சேராக் கனவிது என்றுதான் இந்தக் கதைக்குத் தலைப்பு வைத்திருந்தேன். தலைப்பு கதையைச் சொல்லிவிடும் என்பதாலும், இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்றும்தான் ‘உன் அன்புக்கு நன்றி’ என்று வைத்தேன்.

இப்போது யோசித்துப் பார்க்கையில் இந்தத் தலைப்பை விட இந்தக் கதைக்கு இன்னொரு தலைப்பு பொருத்தமாக இருக்கவே முடியாது என்றுதான் தோன்றுகிறது. அத்தனை அழகாய் பொருந்திப் போயிற்று.

அடுத்த மிக முக்கியமான விடயம். கதையை எழுதி முடித்த பிறகுதான் உங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஆவலாகக் காத்திருந்தேன். இது என்னுடைய 25 வது நாவல். 25 என்பது ஒரு மைல்கல்தான் இல்லையா? என்ன நினைக்கிறீர்கள்? 25வது கதை என்று சொல்லும் தகுதி இந்த நாவலுக்கு உண்டுதானே?

நாவல் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

சிசிர: இந்த நாவலிலேயே எனக்கு மிக மிகப் பிடித்த பாத்திரம். அவனுடைய செக் செக் சேர்ட்டுக்கும் சுருண்ட குழல்களுக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. (ஹாஹா நிறையப்பேர் கம்பு கட்டையுடன் வருவீர்கள் என்று தெரியும். கதையோடு சேர்த்து என்னையும் வெளிப்படுத்தி இருக்கிறேன்.)

அனந்தன்: நான் ரசித்து ருசித்து வடித்த பாத்திரம். தைரியம், திடம், துணிவு என்கிற அத்தனையின் பின்னேயும் அன்புக்காய் ஏங்கும் கோபக்கார குழந்தை அவன்.

உண்மையில் இந்தக் கதையின் நாயகன் அனந்தன்தான். ஆனால் கதையில் குறைவாக வந்ததும் அவன்தான். ஆனாலும், கதை முழுக்க அவன் ஆதிக்கம் இருக்கும்.

நிரல்யா: எந்த மெனக்கெடல்களும் இல்லாமல் அவளை அவளாகவே இந்த நாவலில் வாழவிட வேண்டும் என்று எண்ணிய ஒருத்தி.

வேறு என்ன சொல்ல? அடுத்த 10 நாள்களுக்கு மட்டுமே கதை சைட்டில் இருக்கும். மீண்டும் இன்னொரு கதையுடன் சந்திக்கும் வரையில்,

நட்புடன் நிதா.
 
Status
Not open for further replies.
Top Bottom