உலா வரும் வெண்ணிலா
அத்தியாயம் 1
"குட் மார்னிங் சார்!" என்ற குரல்கள் அவன் அலுவலகத்தின் கதவை திறந்ததில் இருந்து அவனது அறைக்குள் சென்று மூடிக் கொள்ளும் வரை தொடர்ந்து கேட்க, சிறு தலையசைப்புடன் தான் கடந்து வந்து அமர்ந்தான் அதிரன்.
கதவை தட்டும் சத்தம் கேட்டு, "யாஹ்! கமின்!" என்ற அதிரன் குரலுக்கு,
"வெல்கம் சார்!" என அவன் முன் பூங்கொத்தை நீட்டி நின்றார் பூபாலநாதன்.
"சார்!" என புன்னகையுடன் எழுந்த அதிரன்,
"தேங்க் யூ சோ மச் சார்!" என வாங்கிக் கொண்டு,
"நீங்க இல்லைனா இன்னைக்கு இதெல்லாம் சாத்தியமில்லை" என்றான் அவரிடம்.
"இருக்கட்டும் பா. நம்பகமான கையில தான் இந்த ஆபீஸை குடுத்துருக்கேன்னு ஒரு திருப்தியோட நான் கிளம்புறேன்!" என்றார் பூபாலநாதன்.
"உங்க நம்பிக்கையை நிச்சயம் காப்பாத்துவேன் சார்!" என அவருக்கு விடைகொடுத்து வந்து மீண்டும் தன் இடத்தில் அதிரன் அமர,
"சார் மீட்டிங்!" என அவனுக்கு நியாபகப்படுத்த என வந்து நின்றான் ஒருவன்.
"ஹ்ம்! ஐ க்நொவ்! ஸ்டாப்ஸ் அசம்பிள் ஆகட்டும். நான் வந்துடுறேன்!" என்று சொல்ல, ஒவ்வொருவராய் எப்பொழுதும் மீட்டிங் நடக்கும் அறைக்கும் சென்றிருந்தனர்.
இறுதியாய் அனைத்தையும் ஒருமுறை பார்த்துக் கொண்டு, என்ன பேச வேண்டும் என்ற முடிவையும் எடுத்துக் கொண்டு அந்த அறைக்குள் நுழைந்தான் அதிரன்.
அது ஒரு அதிவேக தொழில்முறை இயந்திரங்களைக் கொண்ட பெரிய அளவிலான தையல் தொழிற்சாலை.
ஆண் பெண் என மொத்தம் இருனூறுக்கும் அதிக அளவிலான தொழிலாளர்களைக் கொண்ட தொழிற்சாலையும் கூடாது.
செங்கல்பட்டில் ஆடை உற்பத்தி முதல் தையல், வெட்டுதல், முடித்தல் என அனைத்தையும் உள்ளடக்கிய இடம்.
சீருடைகள், ஆடைகள், பிற துணி பொருட்கள் என மொத்தமாய் உற்பத்தி செய்யுமிடம். அதற்கென்றே சிறப்பு தையல் இயந்திரங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலை ஆரம்பித்து இருபது வருடங்களைக் கடந்திருக்க, பூபாலநாதன் தந்தை காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது இவருக்கு அடுத்து திறம்பட நடத்த யாருமின்றி தொழிற்சாலை அதிரன் கைகளுக்கு மாறி இருந்தது.
தந்தை தொழிலை நடத்தி வந்த அதிரன் திடீரென எடுத்த முடிவு தான் இந்த தொழிற்சாலையை கைப்பற்றியதும் கூட.
இப்பொழுதும் அதன் சிந்தனைகளோடு கலந்துரையாடல் நடக்கும் அறைக்குள் வர, அங்கு கேட்ட முணுமுணுவென்ற சத்தம் அவன் வருகையில் அடங்கி இருந்தது.
"வெல்கம் சார்!" என்ற பொதுவான அனைவரின் குரலுக்கும் தலையசைத்து புன்னகைத்து நன்றி கூறியவன்,
"இங்க தாமஸ்?" என்று கேட்கவும் தாமஸ் அவன்முன் வந்து நின்றார்.
"பூபாலன் சார் சொன்னாங்க. நீங்க தான் ப்ரோடக்ஷன் டீம் கண்ட்ரோல்னு" என்று அறிமுகம் எடுத்துக் கொண்டவன் முக்கியப் பணியில் உள்ளவர்களை எல்லாம் தெரிந்து கொண்டிருக்க,
"எக்ஸ்க்யூஸ் மீ சார்!" என மூச்சுவாங்க வந்து நின்றாள் ஒரு பெண்.
"ஹ்ம்!" என தலையசைத்து கேள்வியாய் அதிரன் அவளைப் பார்க்க, சில நொடி பார்வைகளுக்கு பின் தெளிந்து,
"குட் மார்னிங் சார்! நான் அஞ்சனா" என அவனிடம் கூறி அனைவரையும் பார்த்து இன்னும் மூச்சு வாங்க அவள் நிற்க,
"என்னம்மா இன்னைக்கு தான் லேட்டா வருவியா நீ?" என்றார் தாமஸ் அந்த பெண்ணிடம்.
"சாரி ண்ணா பைக் ஸ்டார்ட் ஆகல!" என மெதுவாய் அவனிடம் கூறி அதிரனை அவள் பார்க்க, அவனும் இவர்களை தான் கவனித்து நின்றான்.
"எப்பவும் நேரத்துக்கு வர்ற பொண்ணு சார். இன்னைக்கு தான்..." என்றான் தாமஸ் அந்த பெண்ணிற்கு பரிந்து பேசி.
"இவங்க ஃபினிஷிங் டீம்ல லீடரா இருக்காங்க!" என்றும் அவனுக்கு அறிமுகப்படுத்த,
"ஹெலோ சார்! இனி லேட்டா வரமாட்டேன்!" என்றவளுக்கு ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்து மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தவன் அடுத்தடுத்து தனக்கு தேவையான கேள்விகள் அவர்களின் குழப்பம் பிரச்சனை என கேட்டறிந்து குறித்து வைத்துக் கொண்டான்.
"நான் அதிரன் ஹரிச்சந்திரன். எனக்கு இந்த இடம் ரொம்பவே புதுசு. உங்ககிட்ட தான் நான் கத்துக்க போறேன். உங்களை நம்பி தான் இந்த கம்பெனியை டேக்ஓவர் பண்ணியிருக்கேன். சோ பாத்துக்கலாம் தானே எல்லாரும்?" என்று அதிரன் புன்னகைத்து கேட்க, அனைவருமே அதில் சம்மதமாய் புன்னகைத்தனர்.
"ப்ரோடக்ஷன் எப்பவும் போல சரியான நேரத்துக்கு டெலிவரி பண்ணனும். குவாலிட்டில எந்த காம்ப்ரமைஸ்ஸும் வேண்டாம். நல்லா போய்ட்டு இருக்க கம்பெனி தான். சோ அதே பேரை நாம கண்டின்யூ பண்ணிக்கிட்டா ஆல் இஸ் வெல்!" என அவனுக்கு தேவையானதை எல்லாம் கேட்டுக் கொண்டான் அனைவரிடமும் தன்மையும் உரிமையுமாய்.
"ஓகே போலாம்!" என்று சொல்லிய அதிரன்,
"தாமஸ்! அந்தந்த டீம் ஹெட்டை மட்டும் நான் பாக்கலாமா?" என கேட்க,
"கண்டிப்பா சார்!" என்ற தாமஸ் மற்றவர்களை அனுப்பிவிட்டு அந்தந்த பணியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களை மட்டும் நிற்க வைத்தான்.
ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் வேலை, பொறுப்பு என தாமஸ் தெரிவிக்க,
"குட்!" என கேட்டுக் கொண்டவன், தனக்கு தேவையான விவரங்களை தினமும் மாலை உற்பத்தி விவரம் அளவு வரை அனுப்பி வைத்துவிட்டு செல்ல சொல்ல, அதற்கும் சம்மதித்தனர் அனைவரும்.
அதன்பின் தான் மீட்டிங் நிறைவுற்ற நிம்மதியுமே! அதற்கே மணி பண்ணிரெண்டை தொட இருந்தது.
அனைவரும் வெளியேற அந்த அறையில் தாமஸ் அதிரன் மட்டும் இருந்தனர்.
"சாப்பிட எதாவது சொல்லவா சார்?" தாமஸ் கேட்க,
"உங்க வயசென்ன?" என்றான் அவனிடம் அதிரன்.
"சார்!" என விழித்து,
"இருபத்து ஏழு!" என்றான் தாமஸ்.
"தேங்க் காட்! எனக்கும் அதே தான். நீங்க... இல்ல நீ அதிரன் இல்ல அதினே கூப்பிடலாம்!" என்று அதிரன் சொல்லவும் அதிர்ச்சியாய் தாமஸ் பார்க்க,
"எனக்கு நேட்டிவ் நியர் காஞ்சிபுரம் தாமஸ். இங்க இந்த ஏரியாக்கு நான் புதுசு தான். கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே!" என்று கண் சிமிட்டி அதிரன் கேட்க, ஆச்சர்யமாய் பார்த்தான் தாமஸ் அவனை.
"ஹெல்ப்னா பெரிய ஹெல்ப்லாம் இல்லை. ஜஸ்ட் பிரண்ட்லி டாக் வேணும்ல? அதுக்கு தான். வேற யார்கிட்ட கேட்குறதுன்னு தெரில. உன் முகம் தான் பத்து பொருத்தமும் பக்கவா இருக்கு" என்றும் அதிரன் சொல்ல,
"சார்!" என வாயடைத்துப் பார்த்தான் அவனை தாமஸ்.
"ப்ச்! இப்ப தானே சொன்னேன். ஓகே! இன்னைக்கு போகட்டும். ஈவ்னிங் நீயும் நானும் வெளில போறோம் ஓகே?" என்று சொல்லி, தாமஸ் அசையாமல் நிற்கவும்,
"போய் வேலையை பாரு டா!" என்று அதிரன் சொல்ல,
"சாரி சாரி சார்!" என ஓடினான் அவன். அதில் புன்னகைத்து பின்னோடு வந்தான் அதிரன்.
"ண்ணா!" என வெளி வந்த தாமஸ் அருகே அஞ்சனா வந்தவள் நோட்டைக் காட்டி என்னவோ கேட்க, அவர்களைக் கடந்து தன் அறைக்குள் சென்றுவிட்டான் அதிரன்.
"ஓஹ்! ஓகே ண்ணா. நேத்து நான் சீக்கிரமே போனதால அதை நோட் பண்ணல இல்ல. அதான் டாலி ஆகல. இப்ப ஓகே!" என்று தாமஸிடம் கூறிய அஞ்சனா,
"சார் எதுவும் சொன்னாங்களா?" என்றாள் அவனிடம்.
"எதுவும்னா?"
"அதான் நான் லேட்டா வந்ததுக்கு"
"இல்ல அஞ்சனா. முதல் நாள் இல்லயா. பெருசா எடுத்துக்கல போல. ஆனா முதல்ல எப்படி அவங்க மனசுல பதியிறோம்ன்றது தான் முக்கியம். நாளைல இருந்து கொஞ்சம் கவனமா இரு!" என்றான் தாமஸ்.
"ஹ்ம் சரி ண்ணா!" என்றவளுக்கு இப்பொழுதும் தன் அண்ணன் மேல் அத்தனை கோபம் வந்தது இப்படி முதல் நாளே வந்தவன் முன் மன்னிப்பு கேட்டு நிற்க வைத்து விட்டானே என்று நினைத்து.
"நான் வர்றதுக்கு முன்னாடி என்ன பேசினாங்க? டெரர் டைப்பா? அப்படி இல்லைன்னு தான் தோணுது!" என்றும் அவளே அவனிடம் கேட்க,
"இன்னும் அனலைஸ் பண்ண முடியல ம்மா. எதுவும் போட்டு வாங்குறவறா கூட இருக்கலாம் இல்ல? நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும். போக போக தெரிஞ்சிப்போம்!" என்றான் அவன்.
"ஹ்ம்! ஆனா எனக்கு சாரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு ண்ணா!" என அஞ்சனா சொல்ல,
"அவர் இந்த பக்கமே வந்தது இல்லையாம். சொந்த ஊர் காஞ்சிபுரம் போல. நீ வேனா அந்த பக்கம் எதுவும் போயிருக்கியான்னு யோசிச்சு பாரு!" என போகிற போக்கில் அவன் சொல்லி செல்ல,
"ஓஹ்!" என தலையில் தட்டிக் கொண்டாள் அஞ்சனா.
அதன்பின் வேலைகள் எல்லாம் துரிதமாய் நடக்க, அவரவர் வேலையில் அத்தனை கவனமாய் நின்றனர்.
உணவு இடைவெளியில் பெரும்பாலானவர்கள் ஒன்றாய் அமர்ந்து உண்ணும் வகையில் சாப்பிடும் இடமும் இருக்க, வேலையை பாதியில் விடாமல் முடித்து தாமதமாய் வருபவர்கள் என அடுத்த அரை மணி நேரத்தில் ஆங்காங்கே வந்து அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க,
தாமஸுடம் பேசி சிரித்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் அஞ்சனா. சரியாய் அதே நேரம் அதிரனும் அங்கே வருகை தர,
"சார்!" என எழ இருந்த தாமஸ் தோளில் கைவைத்து அமர வைத்தவன், எழுந்து கொள்ளப் பார்த்த அஞ்சனாவிடமும் "சிட்!" என்று சொல்லி கையையும் அசைக்க,
"நீங்க ரூம்ல சாப்பிடலாமே!" என்றான் தாமஸ்.
"ஏன்? கம்ஃபோர்ட்டா இல்லையா?" அதிரன் கேட்க, ஆம் என்று தலையாட்டி அஞ்சனாவின் அதிர்ச்சியான பார்வையில்,
"ச்சே! இல்ல இல்ல!" என வேகமாய்
தலையாட்டி இருந்தான் தாமஸ். அதிரன் அதில் சிரிக்க,
"அண்ணா என்னவோ சொதப்புறார்!" என அஞ்சனா எழுந்து அங்கிருந்து நகன்று செல்லப் பார்க்க,
"ப்ச்! அஞ்சனா!" என்று அதட்டலாய் அழைத்தது அதிரன்.
'என்னையா?' என அதிர்ந்து விழித்தவளை,
"என்ன ரொம்ப பண்றிங்க ரெண்டு பேரும்? பேசாம சாப்பிட போறிங்களா இல்லையா?" என்று மிரட்டலாய் கூறி தானும் அமர்ந்து டிரைவர் வாங்கி வந்த உணவைப் பிரித்தான் அதிரன்.
"ஹோட்டல் சாப்பாடா சார்? வீட்டுல இருந்து கொண்டு வர மாட்டிங்களா?"
என்று தாமஸ் கேட்டுவிட்டு நாக்கையும் கடித்துக் கொள்ள, சாப்பிட்டு எழுந்து சென்றுவிட்டால் போதும் என்ற நிலையில் இருந்தாள் அஞ்சனா.
"யார் சமைக்குறது?" என்று அதிரன் சிரித்தவன்,
"அம்மா அப்பா எல்லாம் ஊர்ல இருக்காங்க" என்றான்.
"ஓஹ்! அப்ப வைஃப்?" தாமஸ் கேட்க,
"அவ வரல" என்றான் அதிரன்.
"ஏன் சார்?" என்று அப்போதும் தாமஸ் கேட்க,
"இதெல்லாம் தேவையா ண்ணா உங்களுக்கு?" என்று அஞ்சனா பார்க்க,
"இன்னும் என் லைஃப்க்குள்ள அப்படி யாரும் வரலைனு சொன்னேன்" என்று அதிரன் தெளிவாய் சொல்ல, சன்னமாய் அஞ்சனா புன்னகைக்கும் சத்தத்தில் தாமஸ் அதிரன் இருவரின் பார்வையும் அவளிடம் வந்திருந்தது.