என்னைக் களவாட வந்தவளே - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113



அத்தியாயம் 11:



இளஞ்செழியன் தீபாவுடன் பேசிவிட்டு மகிழ்ச்சியுடன் வீட்டிற்குள் நுழைந்தான். அவனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியைக் கண்ட அனைவரும் அவனை இமைக்காமல் பார்த்தனர்.


இளஞ்செழியன் ரொம்ப யாரிடமும் பேச மாட்டான்; சிரிக்க மாட்டான். அவனின் முகத்தை இப்படிப் பல வருடங்கள் கழித்துப் பார்த்ததில் மற்ற எல்லோர் முகத்திலும் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது.



இளமாறன், "மச்சான், ரொம்ப நாள் கழித்து உங்க முகத்துல ஒரு சந்தோஷம் தெரியுதே!" என கிண்டல் செய்தான்.


இளஞ்செழியன் விரும்பியது வீட்டில் யாருக்கும் தெரியாது.
அவன் கோயம்புத்தூரில் பொறியியல் படிக்கும்போதுதான் காதல் வயப்பட்டான்.


அதனால், இதைப் பற்றி வீட்டினர் அறிந்திருக்கவில்லை. "இந்த விஷயத்தை திடீரென எப்படி கூறுவது?" எனத் தயங்கினான் இளஞ்செழியன்.



முருகவள்ளி, அனைவருக்கும் பாயாசம் செய்து வந்து ஜெயராணி மற்றும் பூங்கொடியை அழைத்து அனைவருக்கும் பரிமாறக் கூறினார்.


எல்லோரும் பாயாசம் உண்ண, இளஞ்செழியன் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.



அவனின் அருகில் வந்து அமர்ந்த செந்தூர் பாண்டியன், "என்ன ஆச்சுடா? என்னவா இருந்தாலும் சொல்லு, பார்த்துக்கலாம்," எனத் தைரியமளித்தான்.


இதற்கு மேல் மறைத்தால் நன்றாக இருக்காது என நினைத்தவன், தன்னுடைய காதல் கதை, பிரிந்தது, இப்போது அவள் பேசியது, அவர்கள் வீட்டில் திருமணத்திற்குச் சம்மதித்தது என அனைத்தையும் கூறி முடித்தான்.



"என்னது! பத்து வருடமாக இளஞ்செழியன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறானா?" என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.


எல்லோர் முகத்தையும் கண்ட இளஞ்செழியன், "எல்லாரும் என்னை மன்னிச்சிருங்க. உங்க எல்லார் கிட்டயும் சொல்லாம இருந்தது தப்புதான்," என மன்னிப்பை வேண்டினான்.



கதிரேசன், "சரி விடுப்பா, அதான் கல்யாணமே வேண்டாம்னு சொன்னியா. இப்போ என்ன? அந்தப் பொண்ணு வீட்டுல போய் பேசி கல்யாண தேதியைக் குறிச்சிட்டு வந்துடுவோம்," எனக் கூறி அவன் நெஞ்சில் பாலை வார்த்தார்.


அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி; அவன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்வதில்.

இளமாறன் நிமிர்ந்து பூங்கொடியைப் பார்த்தான். பின்பு கைப்பேசியில் அவளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினான். சத்தம் கேட்டதும் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள் பூங்கொடி.


"இன்று மாலை குளத்தங்கரை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள மரத்தடிக்கு வாடி என் பொண்டாட்டி," என மனதில் வாசித்தவளுக்கு அவனின் 'பொண்டாட்டி'யில் வெட்கம் வந்தது.



அவளின் முகத்தைப் பார்த்தவனுக்கோ கால்கள் தரையில் நிற்கவில்லை. அவளுக்கு அதற்கு மேல் அங்கு நிற்க முடியாமல் கூச்சம் வந்து தடுக்க, மீதிப் பாயாசத்தை எடுப்பது போல் அடுப்பாங்கரைக்குள் நுழைந்தாள்.


அனைவரும் பேசி முடித்து, "அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை நல்ல நாளாக உள்ளது; அன்றைக்கே பெண் வீட்டிற்குச் சென்று வரலாம்," எனக் கூறிவிட்டு கதிரேசன் இல்லத்தினர் வீடு திரும்பினர்.



கதிரவன் மெல்ல மெல்ல மேகத்திற்குள் மறையத் தொடங்கியிருந்தான்.
பூங்கொடி, அவளின் அம்மாவிடம் கோவிலுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு ஸ்கூட்டியில் பாவாடை தாவணியில் கிளம்பினாள்.


இளமாறன் அவளுக்கு முன்பாகவே வந்து மரத்தடியில் அமர்ந்திருந்தான். அந்த கோவில் ஊருக்கு வெளியில் உள்ளது.


விசேஷ நாட்களில் மட்டுமே ஆட்கள் வருவர். அதனால், கண்ணுக்கெட்டிய தூரம் வரை இவர்கள் இருவரையும் தவிர ஒருவரும் தென்படவில்லை.


பூங்கொடி ஸ்கூட்டியை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து அவன் அருகில் அமர்ந்தாள். இளமாறன் கண் எடுக்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.



"என்னத்தான் இது பார்வை? எனக்கு ஒரு மாதிரியா இருக்கு," என அவன் தோளில் தட்டினாள்.

அவன் சிரித்துக் கொண்டே அவளை இழுத்துத் தன் மார்பில் சாய்த்தான். அவள் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அவளின் நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.


"அத்தான்! உங்களுக்கு இன்னைக்கு என்னாச்சு? பார்வையே சரியில்லை, நடந்துக்கிறதும் சரியில்லை," என அவனை வம்புழுத்தாள்.


அவளின் கேள்வியில் தலையைக் கோதி கண்ணக்குழி தெரிய அழகாகச் சிரித்தான்.

அவன் சிரிப்பில் ஒரு நிமிடம் மயங்கியவள், "இப்படிச் சிரிச்சே மயக்காம என்னன்னு சொல்லுங்க அத்தான்," என அவன் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்.



"அதை ஏண்டி கேட்குற? அப்பாவி மாதிரி உங்க வீட்டுல ரெண்டு பேரு இருந்தாலும், திடீர்னு ஒரே நாள்ல அவனுங்க ரெண்டு பேருக்கும் ஒண்ணா கல்யாணம்னு சொல்லிட்டீங்க.

இங்கே நான் ஒருத்தன் இருக்கிறது யார் கண்ணுக்காவது தெரியுதா?" எனப் புலம்பித் தள்ளினான்.


அதனைக் கேட்டு வாய்திறந்துச் சத்தமாகச் சிரித்தவள், "ரொம்ப அலையாத மாறன் அத்தான்! நீதானே நம்ம லேட்டா கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொன்ன?" என அவனைப் பார்த்துக் கண்ணடித்தாள்.



"அடி பாவி! இவனுங்க ரெண்டு பேரும் வீட்டுல இருக்கும்போதே அதற்குள்ள நமக்கு எதுக்கு மேரேஜ்னு நினைச்சேன்," எனச் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டு கூறினான்.


"சரி அத்தான், இப்போ நம்ம மேரேஜுக்கு என்ன அவசரம்? மெதுவா பண்ணலாம்," என அவனைச் சீண்டினாள்.


அதில் கடுப்பானவன், "ஏண்டி, என் நிலைமை தெரியாம பேசிட்டு இருக்க! அதெல்லாம் உனக்குச் சொன்னா புரியாது.


நான் பேசாம ஒரு காவி வேட்டி வாங்கி கட்டிட்டு காசி, ராமேஸ்வரம்னு எங்கேயாச்சும் போறேன்," எனக் கூறி எழுந்தான்.


அவனின் கைகளைப் பிடித்து அமர வைத்தவள், "காசி ரொம்ப தூரம் அத்தான். ராமேஸ்வரம் ரொம்பப் பக்கம், ஒரு மணி நேரம் தான் ஆகும். இப்பவே கிளம்புங்க. நான் போய் காவி வேட்டி வாங்கிட்டு வந்துடுறேன்," எனச் சிரிக்காமல் கூறினாள்.



அதில் மேலும் கடுப்பானவன், "மவளே! உனக்கு எவ்ளோ கொழுப்பு! இனிமே 'அத்தான்', 'பொத்தான்'னு வாடி உன்னை வச்சுக்கிறேன்," என அவளின் காதைப் பிடித்துத் திருகினான்.


"அய்யோ! அம்மா! என்னை கொல்லப் பார்க்கிறாங்க, யாராச்சும் வந்து காப்பாத்துங்க!" எனக் கத்தினாள்.



"அடியேய்!" என அவளின் வாயில் கை வைத்து மூடியவன், "என்ன ஏண்டி போலீஸ்ல மாட்டி விடப் பார்க்கிற?" என அலறினான்.


அவனின் முக பாவனையால் கலகலவெனச் சிரித்தவள், அவனை இழுத்துக் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தாள்.


"மௌனங்கள் பேசும்
மொழியில்லை - நம்
கண்கள் பேசும்
கவிதைக்கு!

ஆயிரம் நிலவுகள்
வானில் இருக்கலாம்...
ஆனால், என்
அருகில் இருக்கும்
ஒற்றை நிலவு நீ!

கடிகார முட்கள்
நகர மறுக்கின்றன - நீ
என்னோடு இருக்கும்
அந்தப் பொற்கணங்களில்!

உன் புன்னகைத் தூறலில்
நனைந்து கொள்கிறேன்...
வாழ்நாள் முழுவதும்
குடை இல்லாமல்!... "



 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.