என்னைக் களவாட வந்தவளே - 14

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113



அத்தியாயம் 14:



சீட்டைப் பார்த்த அதிர்ச்சியில் தீபிகா அப்படியே சிலையாக உறைந்து நின்றாள். மறுமுனையில் போனில், "தீபி... தீபி... என்னாச்சு? ஏன் பதிலே இல்லை?" எனச் செழியனின் குரல் பதற்றமாகக் கேட்டது.


நடுங்கும் கைகளால் போனை எடுத்தவள், விபரத்தைச் சொன்னாள். செழியனின் முகம் கோபத்தில் இறுகியது. "தீபி, அந்தச் சீட்டைத் தூக்கிப் போடு. நீ பயப்படுறதுதான் அவனுக்கு வேணும். நான் இப்பவே அங்கே வர்றேன்," என்றான்.


"வேண்டாம் செழியன், விடியற்காலையில நிச்சயம். இப்போ நீங்க வந்தா வீட்ல பெரியவங்களுக்குத் தெரிஞ்சு பதற்றம் ஆகிடும். நான் பார்த்துக்கிறேன்," என அவளச் சமாதானம் செய்தாள்.

ஆனால் செழியன் சும்மா இருக்கவில்லை.

நிச்சயதார்த்த காலை...

கோவை மாநகரமே விழாக்கோலம் பூண்டது போலிருந்தது அந்தப் பிரம்மாண்ட மண்டபம். உறவினர்கள், நண்பர்கள் என கூட்டம் அலைமோதியது.


தீபிகா பச்சை நிறப் பட்டுச் சேலையில், ஜொலிக்கும் நகைகளுடன் அமர்ந்திருந்தாள். ஆனால் அவளது கண்கள் மட்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தன.

பரத் சொன்ன மிரட்டல் அவள் அடிமனதில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.


செழியன் தன் குடும்பத்துடன் கம்பீரமாக மண்டபத்திற்குள் நுழைந்தான். பட்டு வேட்டி, சட்டையில் அவன் ஒரு ராஜகுமாரன் போலவே தெரிந்தான்.

தீபிகாவைப் பார்த்ததும் அவளது பயத்தை உணர்ந்தவன், யாருக்கும் தெரியாமல் அவளுக்கு 'தம்ப்ஸ் அப்' (Thumbs up) காட்டி, 'நான் இருக்கேன்' என்று சைகை செய்தான்.


சடங்குகள் தொடங்கி, இருவரும் மோதிரம் மாற்றிக் கொள்ளும் தருணம் வந்தது. பெரியவர்கள் ஆசி வழங்கத் தயாராக நின்றனர்.

திடீரென மண்டபத்தின் வாசலில் ஒரு கார் வந்து உரசி நின்றது. உள்ளே இருந்து பரத் மற்றும் அவனது நண்பர்கள் ஒரு பத்து பேர் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.

மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
"நிறுத்துங்க!" எனப் பரத் கத்தினான். "இந்த நிச்சயம் நடக்காது. தீபிகா என்னோட சொத்து. அவளை இந்தச் சாதாரண ஆளுக்கு எப்படிக் கொடுக்கலாம்?" என இளங்கோவனைப் பார்த்துச் சத்தம் போட்டான்.


இளமாறனும் பொற்செழியனும் முன்னால் வர முயல, செழியன் அவர்களைத் தடுத்துத் தான் மட்டும் முன்னால் சென்றான்.


செழியன் நிதானமாகப் பரத் முன்னால் போய் நின்றான். "பரத்... இவ்வளவு தூரம் வந்துட்டியே, உன்னைச் சும்மா அனுப்பக் கூடாது. இது சொத்து பிரச்சினை இல்லை, இது ரெண்டு மனசோட காதல்.

தீபிகாவுக்கு உன் மேல அன்பு இல்லைன்னு அவளே சொல்லிட்டா. அதுக்கப்புறமும் இப்படி ரவுடித்தனம் பண்றது உனக்கே அசிங்கமா இல்லையா?" என்றான்.


"ஏய்! வசதி இல்லாதவன் நீ... உனக்கெல்லாம் அறிவுரை சொல்லத் தகுதி இல்லைடா," எனப் பரத் கையை ஓங்கினான்.
சட்டெனப் பரத்தின் கையைப் பிடித்துத் முறுக்கிய செழியன்,

அவன் காதோரம் குனிந்து ரகசியமாகச் சொன்னான், "நீ நேத்து அனுப்பின சீட்டு என் கைக்கு வந்துடுச்சு பரத். நீ பண்ணின அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும், உன் பிசினஸ்ல இருக்குற பிளாக் மணி விபரத்தையும் ஆதாரத்தோட போலீசுக்கு அனுப்பத் தயாரா இருக்கேன்.


இப்போ நீ அமைதியா இங்கிருந்து போகலைன்னா, நிச்சயம் முடிஞ்சு நீ போற இடம் மண்டபமா இருக்காது... ஜெயிலா இருக்கும்!"
செழியனின் கண்களில் தெரிந்த அந்தத் தீவிரம் பரத்தை நிலைகுலையச் செய்தது.

அவன் இப்படி ஒரு 'பேக்-அப்' வைத்திருப்பான் என்று பரத் எதிர்பார்க்கவில்லை.

பரத்தின் முகம் வெளுத்தது. தன் நண்பர்களிடம் "வா போலாம்..." என முணுமுணுத்துவிட்டு, அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினான்.


மண்டபத்தில் இருந்தவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். இளங்கோவன் செழியனின் கையைப் பிடித்துக் கொண்டு, "மன்னிச்சிருங்க மாப்பிள்ளை... இவனால இவ்வளவு ரகளை ஆகும்னு நினைக்கல," என்றார் வருத்தமாக.


"பரவாயில்லை மாமா. இனி அவன் வரமாட்டான்," எனப் புன்னகைத்த இளஞ்செழியன், மேடைக்குச் சென்று தீபிகாவின் அருகில் நின்றான்.

மேளதாளங்கள் முழங்க, தீபிகாவின் மெல்லிய விரலில் வைர மோதிரத்தை அணிவித்தான் செழியன். தீபிகாவும் கண்ணீரும் புன்னகையும் கலந்த முகத்தோடு செழியனுக்கு மோதிரம் அணிவித்தாள்.


பூங்கொடியும் ஜெயராணியும் தீபிகாவுடன் அறிமுகமாகி அவளை தங்கள் வீட்டில் ஒருவராக என்ன வைத்தனர்.


மிதுன் ஓடி வந்து, "சித்தப்பா! அப்புறம் என்ன? ஸ்வீட் எடு கொண்டாடு!" எனச் சத்தம் போட, அரங்கமே சிரிப்பலையில் நனைந்தது. அவனை பார்த்த தூரிகாவும் கை தட்டி சிரித்தாள்.


சிறிது நேரம் கழித்து, தீபிகா செழியனிடம் மெல்லக் கேட்டாள், "நிஜமாவே அவன் மேல போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறீங்களா?" செழியன் சிரித்துக் கொண்டே, "இல்ல தீபி... அவன் பண்ணின சில தகிடுதத்தங்கள் பத்தித் தெரியும். அதை வச்சு சும்மா ஒரு 'பிட்டிங்' போட்டேன்.

அவன் பயந்துட்டான். ஆனா இனிமேலாவது அவன் திருந்துவான்னு நம்புறேன்," என்றான்.


"நீங்க ரொம்ப புத்திசாலி செழியன்!" என அவள் வியந்து பார்க்க,
"நம்ம காதலைக் காப்பாத்த நான் எதுனாலும் செய்வேன் தீபி," என அவன் அவளது கையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டான்.


திருமணம் அடுத்த மாதம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், விதி இவர்களுக்காக ஒரு புதிய விளையாட்டை வைத்திருந்தது. செழியனின் குடும்பத்திற்கு ஒரு புதிய சிக்கல் வரப்போவதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை.

அல்லிராணி, ஜெயராணி, பூங்கொடியும் அன்றே வேலை இருப்பதால் செந்தூர் பாண்டியன் உடன் கிளம்பினர்.

நிச்சயதார்த்தம் முடிந்து அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, அடுத்த நாள் இளஞ்செழியனின் குடும்பம் மட்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தது. காரில் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தவர்களின் அமைதியைக் குலைத்தது ஒரு தொலைபேசி அழைப்பு.


இளமாறனின் போன் விடாமல் ஒலிக்க, அதை எடுத்தவன் முகம் ஒரு நொடியில் வெளுத்துப் போனது.

"என்னது? விபத்தா? எப்படி... இப்போ எங்க இருக்காங்க?" என அவன் பதற, காரில் இருந்த அனைவரின் கவனமும் இளமாறன் பக்கம் திரும்பியது.

"என்னடா ஆச்சு?" என சுப்பிரமணி பதற்றமாகக் கேட்க, இளமாறன் தடுமாறினான்.


"அப்பா... நம்ம பூங்கொடியும், ஜெயராணியும் ஸ்கூட்டியில வரும்போது ஒரு கார் மோதிடுச்சாம். இப்போ ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்காங்கலாம்!" என சொன்னவனுக்கு ஒரு நிமிடம் உலகமே நின்று விட்டது.

மகிழ்ச்சியில் இருந்த குடும்பம் அப்படியே நிலைகுலைந்தது.

செழியன் காரை வேகமாக மருத்துவமனை நோக்கித் திருப்பினான். தீபிகாவுக்குத் தகவல் சொல்லக் கூட அவனுக்குத் தோன்றவில்லை.
மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கே ஜெயராணிக்கு கையில் பலமான அடிபட்டு கட்டுப் போடப்பட்டிருந்தது.

ஆனால் பூங்கொடிக்குத் தான் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுத் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்தாள்.


"எல்லாம் என் தப்பு தான்... அவங்களை நானே கூட்டிட்டு வந்திருக்கணும்," என செந்தூரன் அழுதுகொண்டிருக்க, செழியன் அவனைத் தேற்றினான்.


அல்லிராணி தலையில் அடித்துக் கொண்டு கதறினாள்.

"அண்ணி, பயப்படாதீங்க. அவளுக்கு ஒன்னும் ஆகாது," என்று சொன்னாலும் செழியனின் மனதுக்குள் ஒரு சந்தேகம் ஓடிக்கொண்டே இருந்தது.

இளமாறன் நிலையை சொல்லில் வடிக்க முடியாது. சேரில் வந்து அமர்ந்தவன் யாரிடமும் பேசவில்லை. அமைதியாக கண்களை மூடி அமர்ந்து கொண்டான்.


செழியன் விபத்து நடந்த இடத்திற்குச் சென்று விசாரித்தபோது, ஒரு அதிர்ச்சியான தகவல் கிடைத்தது. மோதிய கார் நிற்காமல் சென்றுவிட்டது என்றும், அதன் நம்பர் பிளேட் மறைக்கப்பட்டிருந்தது என்றும் அங்கிருந்தவர்கள் சொன்னார்கள்.


செழியன் உடனே தன் நண்பரான இன்ஸ்பெக்டர் ரவிக்கு போன் செய்தான். "ரவி, இது தற்செயலா நடந்த விபத்து மாதிரி தெரியல. கொஞ்சம் சிசிடிவி செக் பண்ணிச் சொல்லு," என்றான்.


சிறிது நேரத்தில் ரவி கூப்பிட்டார். "செழியா... அந்த கார் பரத்தோட ஒரு அடியாளுக்குச் சொந்தமானதுன்னு தெரியுது. அவன் நிச்சயம் முடிஞ்ச கையோட உன் குடும்பத்தைப் பழிவாங்கப் பார்த்திருக்கான்."


செழியனின் கண்கள் சிவந்தன. கோபத்தில் அவன் கைகள் முறுக்கேறின. "பரத்... நீ தீபிகாவை அடையப் பார்த்தாதுக்கே உன்ன சும்மா விட்டு இருக்க கூடாது. என் குடும்பத்து மேல கை வச்சுட்ட... இனி நீ உயிரோட இருக்கமாட்ட!" என கர்ஜித்தான்.



விஷயம் கேள்விப்பட்டு தீபிகா தன் பெற்றோருடன் மருத்துவமனைக்கு ஓடி வந்தாள். அங்கே பூங்கொடியின் நிலையைக் கண்டு துடித்துப் போனாள். செழியனின் முகத்தில் இருந்த ஆவேசத்தைக் கண்டவள், அவனிடம் தனியாகப் பேசினாள்.


"செழியன், இது பரத் வேலைதான்னு எனக்குத் தெரியும். அவன் என் கிட்ட போன்ல பேசினான். 'உன் நிச்சயதார்த்தப் பரிசா உன் புகுந்த வீட்டுப் பொண்ணை அனுப்பி வச்சிருக்கேன்'னு சிரிச்சான். அவனை விடாதீங்க செழியன்!" என ஆவேசமாகக் கூறினாள்.


தன் காதலி இவ்வளவு தைரியமாகப் பேசுவதைக் கண்ட செழியன், "நீ கவலைப்படாத தீபி. அவனுக்கு எப்படிப் பதில் சொல்லணும்னு எனக்குத் தெரியும். இனி அவன் இந்த ஊர்லயே இருக்கமாட்டான்," என்றான்.


ஜெயராணிக்கு நினைவு திரும்பியதும், அவளிடம் நலம் விசாரித்து விட்டுச் செழியன் கிளம்பினான்.

வெளியே அமர்ந்திருந்த இளமாறன், பொற்செழியனிடன் விஷயத்தை கூறினான் இளஞ்செழியன். இளமாறனின் கண்கள் சிவந்தது.

அவர்கள் நேராகச் சென்றது பரத்தின் ரகசியத் தங்குமிடத்திற்கு. அங்கே தன் நண்பர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த பரத், செழியனையும் மற்ற இருவரையும் எதிர்பார்க்கவில்லை.


ஒரே உதையில் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான் செழியன்.
"என்னடா... பொம்பளைப் பிள்ளைங்க மேல கார் ஏத்துறது தான் உன் வீரமா?" எனக் கேட்டு பரத்தின் சட்டையைப் பிடித்துத் தூக்கினான்.


பரத் திமிரப் பார்க்க, இளமாறனும் பொற்செழியனும் பரத்தின் அடியார்களைக் கவனித்துக் கொண்டனர். செழியன் பரத்தை சரமாரியாகத் தாக்கினான்.


"இனிமே தீபி நிழல் கூட உன் மேல படக்கூடாது. போலீஸ் உன்னைத் தேடி வந்துட்டு இருக்காங்க. அந்த கார் டிரைவர் எல்லாத்தையும் ஒத்துக்கிட்டான். உன்னை இப்போதைக்கு விடப்போறது இல்லை," என அடித்துத் துவைத்தான்.


பரத் கைது செய்யப்பட்டுச் சிறைக்கு அனுப்பப்பட்டான். அவனது சொத்துக்கள் பல முறைகேடாகச் சேர்த்தவை என நிரூபிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.


மருத்துவமனையிலிருந்து ஜெயராணி பூரண குணமடைந்து வீடு திரும்பினர். ஆனால் பூங்கொடிக்கு நினைவு திரும்பவே பல நாட்கள் ஆனது.

அவள் நார்மல் வார்டுக்கு மாறியதும் அனைவரையும் பார்க்க அனுமதித்தனர். அனைவரும் வந்து அவளை நலம் விசாரிக்க அவளின் கண்கள் ஒருவனை தேடியது.

எல்லோரும் சென்ற பின்பு வந்தான் இளமாறன். அவனை பார்த்து சோபயாக புன்னகை செய்தாள். என்ன அத்தான் ரொம்ப பயந்துட்டீங்களா? என அவனின் தாடியை பிடித்து இழுத்தபடி கேட்டாள்.

"இத்தனை நாளும் செத்து பொழச்சேன்டி... எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா? " என முகத்தை மூடிக்கொண்டு அழுதான்.

அவனின் அழுகையில் கரைந்தவள், அத்தான் எனக்கு ஒன்னும் இல்ல இங்க பாருங்க என அவன் தலையை நிமிர்ந்துத்தினாள்.

அவன் கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்து பார்த்தான். அய்யோ! அத்தான் அழுத மூஞ்சிய பாக்க சகிக்கல... என கூறி சிரித்தாள்.

போடி! என கண்களை துடைத்து கொண்டு அவனும் சிரித்தபடி அவள் நெற்றியில் இதழ் ஒற்றினான்.


அடுத்து வந்த வாரங்களில் அவளின் உடல்நிலையும் சரியாகி நலமுடன் வீடு திரும்பினாள்...
 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 14
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.