அத்தியாயம் 17:
ஆற்றங்கரையின் அந்தி சாயும் வேளை. இளமாறனின் பிடியிலிருந்து தப்பிக்க ஓடிய பூங்கொடி, மணலில் கால் தடுமாறி விழப் போக, மின்னல் வேகத்தில் அவளைத் தாங்கிப் பிடித்தான் இளமாறன்.
அவள் இடை வளைவில் அவனது கரம் அழுத்தமாகப் பதிந்தது.
அவள் மூச்சு வாங்க, அவன் மார்போடு ஒட்டியிருந்தாள்.
"என்கிட்டயே ஓடுறியா கொடி? உனக்குத் தெரியாதா... இந்த மாறன் குறி வச்சா தப்பாதுன்னு?" அவனது குரல் கரகரப்பாக அவள் காதோரம் ஒலித்தது.
பூங்கொடி நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். ஓடிய வேகத்தில் அவளது முகம் சிவந்து, நெற்றியில் சிறு வியர்வைத் துளிகள் அரும்பியிருந்தன.
"விடுங்க அத்தான்... யாராவது பாக்கப் போறாங்க," எனச் சொல்லும் போதே அவளது கைகள் அவன் சட்டையை இன்னும் பலமாகப் பற்றிக்கொண்டன.
"யாருமே இல்லாத இந்த இடத்துக்கு உன்னை எதுக்கு கூட்டிட்டு வந்தேன்னு நினைக்கிற?" என்றவன், அவளை அப்படியே தூக்கிச் சென்று அருகில் இருந்த ஒரு பெரிய மரத்தின் மறைவில் நிறுத்தினான்.
அவளை மரத்திற்கும் தனக்கும் இடையில் சிறைபிடித்தான். அவனது கண்களில் தெரிந்த தீவிரம் பூங்கொடியை நிலைகுலையச் செய்தது. அவனது விரல்கள் மெல்ல அவள் முகத்தை வருடி, இதழ் ஓரம் தங்கியிருந்த நீர் திவலையைத் துடைத்தது.
"அத்தான்... என்ன பண்றீங்க?" என அவள் தழுதழுத்தாள்.
"ரொம்ப நாளா கேட்கணும்னு நினைச்சேன் கொடி... இந்த வேலையெல்லாம் முடிஞ்சு நாம எப்போ ஒண்ணா வாழப் போறோம்? இனிமே என்னால பொறுமையா இருக்க முடியாது," என்றான் அவன்.
அவனது பார்வை அவள் இதழ்களில் நிலை குத்தியிருந்தது.
பூங்கொடி வெட்கத்தில் தலை குனிய, அவன் அவளது தாடையை மெல்ல உயர்த்தி, "இப்ப ஏன் கண்ணை மூடிக்கிட்ட? என் கண்ணைப் பார்த்து பதில் சொல்லு," என அவளை மேலும் நெருங்கினான்.
அவனது மூச்சுக்காற்று அவள் முகத்தில் சூடாகப் படர, அவள் உடல் மெல்ல நடுங்கியது.
சற்றும் எதிர்பாராத கணத்தில், இளமாறன் அவளது நெற்றியில் அழுத்தி முத்தமிட்டான். அந்த ஸ்பரிசம் அப்படியே இறங்கி அவளது மூக்கு நுனியைத் தொட, பூங்கொடியின் இதழ்கள் மெலிதாகத் துடித்தன.
அவனது கைகள் அவள் இடையிலிருந்து மெல்ல முதுகிற்குப் படர்ந்து, அவளைத் தன்னோடு இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டது.
"அத்தான்... போதும்..." என்று அவள் முனகினாலும், அவனது அணைப்பிலிருந்து விலகும் எண்ணம் அவளுக்கு இல்லை.
இளமாறன் அவளது காதோரம் குனிந்து, "இன்னும் ஆரம்பிக்கவே இல்லை... அதுக்குள்ள போதும்னு சொன்னா எப்படி?" என்று கிசுகிசுத்தான். அவனது இதழ்கள் அவள் கழுத்துச் சரிவில் மெல்ல உரசிய போது, பூங்கொடி மெய்மறந்து அவனது தோளில் தன் நகங்களைப் பதித்தாள்.
அடுத்த நொடி, அவன் மெல்ல குனிந்து, பூங்கொடியின் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான். ஒரு மின் அதிர்ச்சி அவள் உடல் முழுவதும் பாய்ந்தது.
அவள் கண்கள் தானாக மூடிக்கொண்டன. மென்மையாகத் தொடங்கிய அந்த முத்தம், மெல்ல ஆழமாகியது. அவளது இதழ்களின் மிருதுவான ஸ்பரிசம் அவனுக்குள் ஒரு போதையைத் தந்தது.
பூங்கொடியும் மெல்ல ஒத்துழைக்கத் தொடங்க, இருவரும் அந்த கணத்தில் தங்களை மறந்து போயினர். காற்றும், ஆற்றின் ஓசையும், இருண்ட மரங்களின் சலசலப்பும் மட்டுமே அந்த காதலின் சாட்சிகளாய் இருந்தன.
நீண்ட நேரத்திற்குப் பிறகு, இளமாறன் மெதுவாக விலகி, அவளது சிவந்த இதழ்களைப் பார்த்தான். "சீக்கிரம் நம்ம கல்யாணத் தேதியை குறிக்கச் சொல்லணும். இல்லன்னா நான் எதாவது பண்ணிடுவேன் போல," எனச் சிரித்தான்.
பூங்கொடி அவன் மார்பில் முகம் புதைத்து, "போங்க அத்தான்... நீங்க ரொம்ப மோசம்," என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.
மாலை மறைந்து இருள் மெல்லக் கவியத் தொடங்கியிருக்க, இளமாறன் அவளை மெதுவாக ஜீப்பை நோக்கி அழைத்துச் சென்றான்.
ஆனால் இருவர் மனதிலும் அந்த மாலை நேரத்தின் வெம்மை குறையாமல் இருந்தது.
வீட்டுக்கு வந்த பூங்கொடிக்கு யாரையும் பார்க்க முடியவில்லை. எனக்கு தலை வலிக்குதுமா என அன்னையிடம் பொய் கூறிவிட்டு அறைக்குள் சென்று மறைந்தாள்.
அப்பொழுது அவளது அலைபேசி அழைத்தது. இளமாறன் தான் அழைத்தான். அழைப்பை ஏற்று காதில் வைத்தவளுக்கு வெட்கத்தில் பேச்சு வரவில்லை.
"அடியேய் என் பொண்டாட்டி என்னடி பண்ற?" என்ற மாறனின் குரல் சரசமாக அவள் காதில் ஒலித்தது.
அத்தான்...! என பேச ஆரம்பித்தவளுக்கு அடுத்த வார்த்தை என்ன கூற என தெரியாமல் நின்றாள்.
சொல்லுடி செல்லம் உன் அத்தானுக்கு என்ன வச்சுருக்க? என கேட்டான்.
கொடியோ "போங்க அத்தான் நீங்க இப்போல்லாம் பேசுறது நடந்துக்குறது ஒன்னும் சரி இல்ல..." என அவனை திட்டினாள்.
மாறன், "ஆமா கொடி இப்போல்லாம் ராத்திரி தூக்கமே வர மாட்டிங்குதுடி... உன் நெனப்பாவே இருக்கு... என்னடி பண்ணுன என்னைய?..."
அவன் சொன்னதை கேட்டவளுக்கு வெட்கம் பிடிங்கி தின்றது...
உடனே அலைபேசியை அனைத்தவள் கட்டிலில் குப்புற விழுந்து முகத்தை மூடிக் கொண்டாள்.
அவளின் கண்களுக்குள் வந்து சிரித்தான் அவளின் கண்ணாளன்...
பூங்கொடி அவளின் டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தாள்...
மனசத் திருடின மச்சான்!
வெள்ளரிக்கா பிஞ்சு போல
வெயிலுக்குள்ள நீ வரப்போ - உன்
வேர்வை வாசம் கூட எனக்கு
வேப்பம்பூ தேனா இனிக்குதடா!
ஆத்து தண்ணி பாயுற சத்தம்
காதுக்குள்ள கேக்கலையே - உன்
ஆசை குரல் கேட்ட பின்னால
வேறெதுவும் உள்ளப் போகலையே!
கையில வச்ச வளையல் சத்தம்
கலகலன்னு பாடச்சொல்லும் - நீ
கண்ணு மேல கண்ண வச்சா
கையும் காலும் ஓடச்சொல்லும்!
வாழை மடல் விரிச்சது போல
வாசல்ல நான் காத்திருப்பேன் - நீ
ஊரு விட்டு ஊரு போனாலும்
உன் நெனப்புலதான் நான் பிழைப்பேன்!
முத்து மாரியம்மன் திருவிழாவ விட -
உன்முரட்டுப் பார்வ தான் எனக்குப் பிடிக்கும்!
காலமெல்லாம் உன் நிழலா - என்
காலடி உன் பின்னாடியே நடக்கும்!
Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.