என்னைக் களவாட வந்தவளே - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113




அத்தியாயம் 21:



நாட்கள் அதன் போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன. பூங்கொடி வீட்டில் விசேஷம். தீபிகா - இளஞ்செழியன் திருமணம் முடிந்து சில மாதங்கள் ஆனதால் தீபிகாவிற்கு கயிறு பெருக்குதல் ஏற்பாடு செய்து இருந்தனர்.


காலையிலிருந்தே அல்லிராணியும் தனலட்சுமியும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக பூங்கொடியும் உதவி செய்து கொண்டிருந்தாள்.


தீபிகா திருமணப் புடவையில் தயாராகக் கண்ணாடி முன்பு நின்று தலையை சீவிக் கொண்டிருந்தாள்.


அப்பொழுது அவளைப் பின்புறம் இருந்து ஒரு கரம் அணைத்தது. அதில் சிலிர்ப்புடன் திரும்பியவள், இளஞ்செழியனை பார்த்துக் கண்ணடித்தாள்.


அவனும் பட்டு வேஷ்டியில் தயாராகி நின்று இருந்தான். "ஹேய்! தீபி, நாம திரும்பவும் கல்யாணம் செய்யப் போறோம்!" எனக் கூறிச் சிரித்தான்.

"ஏன்? அதுல சாருக்கு ரொம்ப வருத்தமோ?" என கிண்டலடித்தாள்.
"ஆமா, எத்தனை வாட்டி ஒரே பொண்ணைக் கட்டுறது? உனக்கு வேற தங்கச்சி இல்ல, இல்லாட்டி கொழுந்தியாவ கரெக்ட் பண்ணிருக்கலாம்!" என அப்பாவி போல் முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.


"அடேய், உன்ன மவனே! உனக்கு அவ்வளோ கொழுப்பு இருக்கணும்? இன்னொரு பொண்ணு வேணுமா?" என வலிக்குமாறு அவன் கன்னத்தில் கடித்தாள்.


"ராட்சசி, சிக்கன் வேணும்னா கேளுடி! அதுக்கு ஏன் என்ன கடிக்கிற?" என அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.


அதில் அவன் மேலே மோதி நின்றவள், "ஐயோ போதும்! செழியன்! லேட் ஆயிடும். எல்லாரும் வந்துருவாங்க!" என அவனை விலக்கினாள்.


அவன் விட்டால் தானே? மேலும் அவளைத் தன்னுடன் இறுக்கி, அவளின் இதழ்களைச் சிறை செய்தான். அவனின் முத்தத்தில் அவள் கிறங்கி நிற்க, அவனின் கைகள் எல்லை மீறியது.


அதில் அவன் கையைத் தட்டிவிட்டவள், "போதும் செழியன்! சேலை கசங்கிடும்!" என அவனை அடித்தாள்.

"உன்ன இந்த புடவையில பார்த்ததும் அத்தான் அப்படியே மயங்கிட்டேன்டி!" என அவளைக் கொஞ்சினான்.


அந்நேரம் பாடார் எனக் கதவு திறக்கவும் இருவரும் பதறி விலகினர். "சித்தப்பா!" எனக் கத்திக் கொண்டே மிதுவும், தூரிகாவும் ஓடி வந்தனர்.


அவர்களைக் கண்டு சிரித்த தீபிகா, "மிதுன்! உங்க சித்தப்பாவ இங்க இருந்து கூட்டிட்டு போ. என்ன கிளம்பவே விட மாட்டார்!" எனப் புகார் வாசித்தாள் சிறு பிள்ளையைப் போல்.


அவள் கூறியதில் டென்ஷனான மிதுன், "சித்தப்பா வாங்க என் கூட. அப்பா உங்களைக் கூப்பிடுறாங்க!" என அவனை கையோடு இழுத்துச் சென்று விட்டான்.


அதைப் பார்த்துச் சிரித்த தூரிகாவைத் தூக்கிக் கட்டிலில் அமர வைத்து கிளம்பத் தொடங்கினாள் தீபிகா.


அவள் கிளம்புவதைப் பார்த்த தூரிகாவோ, "சித்தி எனக்கும் மேக்கப் போட்டு விடுங்க, பூ வைக்கணும்!" என அவளின் சேலையைப் பிடித்து இழுத்தாள்.


அதில் சிரித்த தீபி, அவளுக்கும் அழகாகத் தலை சீவி, பூ வைத்து, விட்டு மேக்கப் செய்து அவளைக் கண்ணாடி முன்பு நிறுத்தினாள்.



தூரிகா தன் கண்களை அழகாக விரித்து, "நான் சூப்பரா இருக்கேன்ல?" எனக் கூறிவிட்டுத் தன் அன்னையிடம் காட்ட ஓடிவிட்டாள். தீபிகாவும் தயாராகி அறையை விட்டு வெளியில் வந்தாள்.



இளமாறன் கைபேசியைப் பார்த்துக் கொண்டே தன் மாமனின் வீட்டிற்குள் நுழைந்தான். அறையில் எதையோ எடுக்கச் சென்ற பூங்கொடியும் இவனைக் கவனிக்காமல் வர, இருவரும் மோதினர்.


விழப்பார்த்த பூங்கொடியைச் சட்டெனப் பிடித்திருந்தது இளமாறனின் கரம்.


அதில் நிம்மதி அடைந்தவள், "அத்தான்! வரும் போது பார்த்து வர்றது இல்லையா? இப்படி தான் ஒரு வயசு பொண்ணு மேல வந்து மோதுவாங்காளா?" என கீழே விழுகாத தெனாவட்டில் அவனை வம்புக்கு இழுத்தாள்.


"அடியேய்! வாயாடி! நீ முதல்ல பார்த்து வந்தியாடி?" என அவளை நிமிர்த்தியவன் வேணுமென்றே கையை உதறி, "ஐயோ, அம்மா என் கை போச்சே! என்னா வெயிட்டு... கம்மியா சாப்டுடி குந்தாணி... இப்படியே இருந்தா என் நிலைமை ரொம்ப கஷ்டம் தான் போலயே..." என இடுப்பில் கை வைத்து அவளை ஓரக் கண்ணால் பார்த்து கண்ணடித்தான்.



அதில் கடுப்பான பூங்கொடி, "ஏன்டா கருவாயா? நானும் போனாப் போகுது நம்ம அத்தான்னு பார்த்தா, குந்தாணி-ன்னு சொல்றியா?" என அவன் முடியைப் பிடித்து இழுத்தாள்.


"ஆ...! வலிக்குது விடுடி! இனிமேல் அப்படிச் சொல்ல மாட்டேன், விடு..." எனக் கத்தினான்.



அவள் கத்தியதில் ஓடி வந்த செந்தூர் பாண்டியன், "பாப்பா...! என்னது இது? அவன் முடியை விடு!" என அதட்டவும் கைகளை எடுத்தாள்.



"ஏன்யா மச்சான், அத கொஞ்சம் சீக்கிரம் வந்து சொல்ல மாட்டியா? கொஞ்சம் விட்டுருந்தா உன் தொங்கச்சி... மொத்த முடியையும் கையாலயே பிச்சு எடுத்திருப்பா!" எனத் தலையைத் தேய்த்தவன், "இதுல வேற பாப்பாவாம்... அப்படியே தொட்டில்ல போட்டுத் தாலாட்டு பாடுங்க!" எனக் கடுப்புடன் கூறினான்.



"அண்ணா! அத்தான் கிட்டச் சொல்லி வைங்க. உங்களுக்காகத் தான் விட்டுட்டுப் போறேன்!" என அவனைத் தீயாக முறைத்து விட்டுச் சென்று விட்டாள்.

அவன் போன திசையைப் பார்த்துச் சிரித்த இருவரும் வேலையைக் கவனிக்கச் சென்றனர்.



சிறிது நேரத்தில் சுப்ரமணி, முருகவள்ளி, ஜெயராணி என அனைவரும் வந்தனர். ஜெயராணி தோட்டத்தில் பின்புறம் எலுமிச்சை பறிக்கச் சென்றாள்.
அப்பொழுது தான் வாழை இலை வாங்கச் சென்றிருந்த பொற்செழியன் பைக்கை வந்து நிறுத்தினான்.


ஜெயராணி அவன் வந்ததைக் கவனிக்கவில்லை. அவள் படுதீவிரமாக எலுமிச்சை பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கவனித்த பொற்செழியனின் கண்கள் மின்னின. இலையை பைக்கிலே வைத்து விட்டு வேகமாக அவள் அருகில் சென்று நின்றான்.



திடீரெனத் தன் பின்னால் கேட்ட சத்தத்தில் அரண்டு, கையிலிருந்த கூடையைக் கீழே போட்டவள், அங்கிருந்த கல் தடுக்கி விழுந்து விட்டாள்.



அதில் பதறியவன், வேகமாக வந்து அவளின் கைகளைப் பிடித்துத் தூக்கினான். "சாரிடா ஜெயா... பயந்துட்டியா?" எனக் கேட்டு அசடு வழியச் சிரித்தான்.



ஜெயராணி நிலைதடுமாறி அவன் மேல் சாய, பொற்செழியன் அவளை இறுக்கப் பற்றிக்கொண்டான். அவள் இதயம் பயத்தில் படபடவென அடித்துக்கொண்டது.



"விடுங்க..." என முணுமுணுத்தபடி அவனிடமிருந்து விலக முயன்றாள்.
"பயப்படறியேன்னு தான் மெதுவா வந்தேன், ஆனா நீ இப்படி விழுந்துடுவேன்னு நினைக்கல ஜெயா," என்றான் பொற்செழியன், அவளது விழிகளை நேராகப் பார்த்தபடி. அவனது பார்வையில் இருந்த தீவிரம் அவளை என்னவோ செய்தது.



"நீங்க எதுக்கு இப்போ இங்க வந்தீங்க? அத்தை திட்டுவாங்க, விடுங்க முதல்ல," எனச் செல்லமாகக் கோபித்துக் கொண்டாள்.



அவள் கைகளைப் பிடித்துத் தூக்கிவிட்டவன், கீழே சிதறிக் கிடந்த எலுமிச்சை பழங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கூடையில் போட்டான். "உன் அத்தை திட்டமாட்டாங்க, ஏன்னா அவங்கதான் என்னை இலை வாங்கிட்டு வரச் சொன்னாங்க.


அப்படியே தோட்டம் பக்கம் போனா ஒரு 'அதிசயத்தைப்' பார்க்கலாம்னு சொன்னாங்க, அதான் வந்தேன்," என அவளைப் பார்த்து ஒற்றைக் கண்ணால் சைகை செய்தான்.



ஜெயராணிக்கு முகம் சிவந்தது. "பெரிய அதிசயம் தான் போங்க! கையை விடுங்க, நான் உள்ள போறேன் அத்தான்," எனச் சிணுங்கினாள்.



"இருடி... அதுக்குள்ள என்ன அவசரம்? இங்க பாரு, உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்தேன்," எனத் தன் சட்டையில் இருந்த சிறிய மல்லிகைப் பூச் சரத்தை எடுத்துக் காட்டினான்.



அவள் ஆசையாக அதை வாங்க எத்தனிக்க, "அப்படியே தரமாட்டேன்... நான் தான் வச்சு விடுவேன்," என அடம் பிடித்தான். வேறு வழியின்றி அவள் தலை குனிய, அவன் மென்மையாக அவள் கூந்தலில் பூவைச் சூட்டினான். அந்த நொடி இருவருக்கும் இடையே ஒரு மெல்லிய மௌனம் நிலவியது.



அப்பொழுது, "ஏய் பொற்செழியா! இலை எங்கடா?" எனத் தூரத்தில் கதிரேசனனின் குரல் கேட்க, இருவரும் சட்டென விலகினர்.


"இதோ வர்றேன்பா!" எனக் கத்தியபடி, எலுமிச்சை கூடையை அவளிடம் கொடுத்துவிட்டு, ஒரு கள்ளச் சிரிப்புடன் பைக்கை நோக்கி ஓடினான் பொற்செழியன்.


ஜெயராணி தன் கூந்தலில் இருந்த பூவைத் தொட்டுப் பார்த்தபடி, அவன் போவதையே வைத்த விழி வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


சிறிது நேரத்தில் தீபிகா வீட்டினர் அனைவரும் வந்து விட்டனர்.
விசேஷம் களைகட்டத் தொடங்கியது. தீபிகாவும் இளஞ்செழியனும் அமர்ந்திருக்க, உறவுகள் சூழ கயிறு பெருக்குதல் வைபவம் இனிதே அரங்கேறியது.



ஆனால், ஒரு ஓரத்தில் பூங்கொடியும் இளமாறனும் இன்னும் ஒருவரையொருவர் வம்புக்கு இழுத்துக் கொண்டே இருந்தனர்.



"நிசப்தம் நிலவிய
என் இதயக் காட்டில்,
சத்தமில்லாமல் நுழைந்த
சந்தனக் காற்றே...
என்னைக் களவாட வந்தவளே!

விழிகளால் நீ வீசிய
நீலப் பார்வையில்,
விழுந்து போனது என்
வீம்பு மட்டுமல்ல - நான்
சேமித்து வைத்திருந்த
சிந்தனைகளும் தான்!


ஒற்றைச் சொல்லால்
உயிர் வருடிச் சென்றாய்...
உன்னைக் கைதி செய்ய
நினைத்த என்னை,
உன் புன்னகையில்
கைதியாக்கிப் போனாய்!


களவாடியது என் மனதை என்றால்
காவல்துறைக்குச் சென்றிருப்பேன்...
நீ களவாடியதோ
என் உயிரை - இப்போது
நான் எங்கே செல்வேன்?


உன் இதயச் சிறையிலேயே
ஆயுள் தண்டனை கொடுத்துவிடு...
மீண்டும் ஒருமுறை
என்னைக் களவாட வராதபடி...!"

 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 21
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty