என்னைக் களவாட வந்தவளே - 24

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113




அத்தியாயம் 24:




தீபிகாவிடம் சிக்கிக்கொண்ட பவித்ரா, தான் பிடிபட்டுவிட்டதை உணர்ந்து அங்கிருந்து வெளியேறினாலும், அவள் மனதுக்குள் வஞ்சகம் மட்டும் குறையவே இல்லை. கோயம்புத்தூரில் இருக்கும் தன் அப்பா கலையரனுக்கு போன் செய்தாள்.

"அப்பா! அங்க என்னை மதிக்கவே இல்லை. பூங்கொடிங்கிற அந்தப் பொண்ணு என்னைத் துடைப்பத்தால அடிக்க வந்துச்சு. என்னை விட அந்தப் பொண்ணுதான் இளமாறனுக்கு வேணுமாம். என் மானமே போச்சுப்பா!" என விஷத்தை விதைத்தாள்.


கலையரசன் முன்கோபி. தன் மகளின் கண்களில் கண்ணீரைப் பார்த்ததும் அவர் ரத்தம் கொதித்தது. உடனடியாகத் தன் வண்டியை எடுத்துக்கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள தீபிகா - இளஞ்செழியன் வீட்டிற்கு வந்து இறங்கினார்.

அப்பொழுது சுப்பிரமணியும் இளமாறானும் கதிரேசனுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

வாசல் கதவைத் தட்டிவிட்டு, உள்ளே இருந்தவர்களை வெளியே இழுக்காத குறையாகச் சத்தமிட்டார் கலையரசன். "வெளியே வாங்கடா எல்லாரும்! என் பொண்ணை அசிங்கப்படுத்திட்டு இங்க என்ன வெட்டி பேச்சு?" என சத்தம்போட்டார்.


சத்தம் கேட்டு இளஞ்செழியன், தீபிகா, இளமாறன், கதிரேசன் மற்றும் சுப்பிரமணி என அனைவரும் வெளியே வந்தனர்.


"என்னாச்சு? ஏன் இப்படி ஆவேசப்படுறீங்க?" எனச் சுப்பிரமணி அமைதியாகக் கேட்க, கலையரசன் அவர் சட்டையைப் பிடிக்காத குறையாக நெருங்கிச் சென்றார்.


"என்ன நடக்குதுன்னு தெரியாத மாதிரி கேக்குறீங்களா? என் பொண்ணு பவித்ரா என்ன இந்தக் குடும்பத்துக்கு அந்நியமா? அவளை இங்க எதுக்கு வரவழைச்சு அசிங்கப்படுத்தினீங்க? அந்தப் பூங்கொடி யாரு என் பொண்ணு மேல கை வைக்க?" எனக் கத்தினார்.


தீபிகா குறுக்கிட்டு, "மாமா... நீங்க தப்பாப் புரிஞ்சுக்கிட்டீங்க. பவித்ராதான் இங்கே பொய் சொன்னா..." எனச் சொல்ல வர, "நீ வாயை மூடு தீபி! புருஷன் வீட்டுக்குப் போனதும் பிறந்த வீட்டு உறவு கசக்குதா உனக்கு?" என அவளை அடக்கினார்.


அப்போது இளமாறன் முன்னால் வந்தான். "நிறுத்துங்க! உங்க பொண்ணு மேல தப்பை வச்சுக்கிட்டு இங்க வந்து சத்தம் போடுறதுல அர்த்தமே இல்லை. பவித்ரா என் கையைப் பிடிச்சு லவ் பண்றேன்னு சொன்னப்போ பூங்கொடி தடுத்ததுல எந்தத் தப்பும் இல்லை. ஏன்னா பூங்கொடி என் முறைப்பெண்!"


"முறைப்பெண்ணா இருந்தா என்னடா? என் பொண்ணு என்ன அவளை விடக் குறைஞ்சவளா? இவளைத் துரத்திட்டு அவளைக் கட்டிக்கப்போறியா?" என கலையரசன் ஆத்திரத்தில் கையை ஓங்க, இளமாறன் அதை லாவகமாகப் பிடித்தான்.


அங்கு நின்ற பூங்கொடியை கையை பிடித்து இழுத்தவன், "நீங்க பெரியவருன்னு பார்க்குறேன். என்னை பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நான் பூங்கொடியைத் தான் விரும்புறேன் என உண்மையை போட்டு உடைத்தான்.


அதிர்ந்து போன கலையரசன், "இதை நான் சும்மா விடமாட்டேன்டா! என் தம்பி இளங்கோவன் கூடச் சேர்ந்து நீங்க எல்லாரும் காய் நகர்த்துறீங்கன்னு எனக்குத் தெரியும். பாக்குறேன்... இந்தத் கல்யாணம் எப்படி நடக்குதுன்னு!" எனச் சபதமிட்டுவிட்டுப் பவித்ராவை இழுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.


வீட்டில் ஒருவித அமைதி நிலவியது. பூங்கொடி அழுதுகொண்டே உள்ளே ஓடினாள். இளமாறன் அவளைத் தேடிச் சென்றான்.

அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து நிற்க அங்கு வந்த பொற்செழியன் அவர்களை சமாதானப் படுத்தினான்.

கலையரசன் ஆவேசமாகச் சென்ற பிறகு, பூங்கொடியின் மனம் ஆறவில்லை. தான் காரணமாய் இவ்வளவு பெரிய ரகளை நடந்ததே என்ற குற்ற உணர்ச்சியும், பவித்ராவின் தந்தை பேசிய பேச்சும் அவளை உடைத்துப்போட்டிருந்தது.


நேராகத் தோட்டத்தின் ஒரு பழைய கிணற்றடிச் சுவரில் அமர்ந்து விம்மி விம்மி அழுதுகொண்டிருந்தாள்.
அவள் எங்கே இருப்பாள் என்று இளமாறனுக்குத் தெரியும். மெல்ல அவளுக்குப் பின்னால் வந்து நின்றவன், "ஏய் குந்தாணி! இன்னும் எவ்வளவு நேரம் தான் இப்படி அழுதுட்டே இருப்ப? , அப்படியே கிணத்துல விழுந்துராத..." என அவளது வழக்கமான பாணியில் கிண்டல் செய்தான்.



பூங்கொடி கண்ணீரோடு திரும்பிப் பார்த்தாள். "போங்க அத்தான்! உங்களால தான் எனக்கு இவ்வளவு பேச்சு. நீங்க மட்டும் அன்னைக்கு அந்தப் பொண்ணு கிட்டச் சிரிச்சுப் பேசாம இருந்திருந்தா, அவ ஏன் இவ்வளவு தூரம் ஆசைப்படப் போறா? இப்போ பாரு, அவரு வந்து எல்லாரையும் மிரட்டிட்டுப் போறாரு..." எனச் சண்டையிட்டாள்.



இளமாறன் அவளருகே அமர்ந்து, அவளது சிறு கையைப் பற்றினான். "அடியேய் வாயாடி! நான் அந்தப் பொண்ணு கிட்ட எப்போ சிரிச்சுப் பேசுனேன்? ஏதோ விருந்தாளி வந்திருக்கான்னு ஒரு மரியாதைக்குப் பேசினேன்.


அதுக்காக இப்படியா? இதோ பாரு பூங்கொடி... உலகத்துல எவன் வந்து தடுத்தாலும், நான் கட்டிக்கப் போறது உன்னை மட்டும்தான். அதை இன்னைக்கு ஊரே பார்க்கச் சொல்லிட்டேன்ல? அப்புறம் என்ன பயம்?"



பூங்கொடி முகம் சிவக்க அவனைப் பார்த்தாள். "ஆமா... எல்லாரு முன்னாடியும் என்னமோ பெரிய ஹீரோ மாதிரி கையப் பிடிச்சு இழுத்துச் சொன்னியே... அப்போ உனக்கு வெக்கமா இல்லையா?" எனச் செல்லமாகச் சிணுங்கினாள்.


"வெக்கமா? எனக்கா? என் பொண்டாட்டி கையப் பிடிக்கிறதுக்கு எதுக்குடி வெக்கம்? ஆனா... கையப் பிடிச்சப்போ உனக்கு மட்டும் ஒரு மாதிரி சிலிர்த்துச்சே... அதை நான் கவனிச்சேன்!" என அவன் கண்ணடிக்க, பூங்கொடி அவனது மார்பில் லேசாகக் குத்தினாள்.


"போங்க அத்தான்... உங்களுக்கு எப்பவுமே நக்கல்தான்!" என்றவள், அவன் தோளில் தலை சாய்த்துக்கொண்டாள். அந்த அமைதியான மாலைப் பொழுதில், மாமரங்களின் நிழலில் இருவருக்கும் இடையிலான இடைவெளி மெல்லக் குறைந்தது.


இளமாறன் அவளது முகத்தை மென்மையாகத் தூக்கினான். அழுது சிவந்திருந்த அவளது கண்கள் இப்போது காதலில் கசிந்திருந்தன. "இனிமே அழுவ?" என அவன் மிக மெல்லிய குரலில் கேட்க, பூங்கொடி "மாட்டேன்" என்பது போலத் தலையசைத்தாள்.


அவளது நடுக்கத்தை உணர்ந்த இளமாறன், மெல்லத் தலை குனிந்து, அவளது நெற்றியில் இதழ் பதித்தான். அந்த ஸ்பரிசத்தில் பூங்கொடி தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அடுத்த நொடி, அவன் அவளது இதழ்களைத் தன் இதழ்களால் சிறை செய்தான்.


அந்த முத்தத்தில் இத்தனை நாள் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டுக்கொண்ட சண்டைகள், கோபங்கள், பொறாமைகள் அனைத்தும் கரைந்து காதலாக மாறியது.


பூங்கொடி அவன் சட்டையை இறுகப் பற்றிக்கொள்ள, அந்தத் தோட்டம் அவர்களின் மௌனமான காதலுக்குச் சாட்சியானது.


சிறிது நேரம் கழித்து விலகியவன், "இப்போ சொல்லு... பவித்ரா அப்பாவைக் கூட்டிட்டு வருவாளா இல்ல பீரங்கியைக் கூட்டிட்டு வருவாளா?" என மீண்டும் வம்புக்கு இழுக்க, பூங்கொடி வெட்கத்தில் அவனை அடித்துவிட்டு வீட்டிற்குள் ஓடினாள்.



வீட்டிற்குள் வந்த இருவரையும் பிடித்து கொண்டார் சுப்பிரமணி. பூங்கொடி மாமா கிட்ட ஏன்டா முன்னாடியே சொல்லல என வருத்தமாக கேட்டார்.


மாமா அது... வந்து... என தடுமாறினாள் பூங்கொடி. அவளின் நிலையை உணர்ந்த மாறன் அப்பா இப்போ என்ன காதல் தான பண்ணோம் என முறைத்தான்.


அதில் சிரித்தவர், சரிடா படவா அப்பா கிட்ட முன்னாடியே சொல்றதுக்கு என்ன என அவனை திட்டிவிட்டு, சரி மச்சான்! ஜெயராணிக்கும் பூங்கொடிக்கும் அப்போ ஒன்னாவே கல்யாணத்த வச்சுருவோம் என கதிரேசனை பார்த்து கூறினார்.



அவரும் சிரித்து கொண்டே சம்மதமாக தலை அசைத்தார். அனைவர் முகத்திலும் புன்னகை அரும்பியது. தனலட்சுமி உடனே போனை எடுத்து முருகவள்ளிக்கு விஷயத்தை கூறினார். அவருக்கும் மகிழ்ச்சியே...


பூங்கொடியின் கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தது....

உடனே அறைக்குள் சென்று ஜெயராணிக்கு அழைத்தாள்...

 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 24
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Love
Reactions: Magizh kutty