அத்தியாயம் 30 :
மறுநாள் காலை, விடிந்தும் விடியாததுமாய் பூங்கொடியின் தந்தை கதிரேசன் மற்றும் தாய் தனலட்சுமி வீட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. குலதெய்வம் கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்பதால், அதிகாலையிலேயே அனைவரும் தயாராகத் தொடங்கினர்.
ஆனால், அந்த இரு "பாதிக்கப்பட்ட" ஜீவன்களான இளமாறனும், பொற்செழியனும் மட்டும் கண்ணில் தூக்கமே இல்லாமல் சோம்பலாக அமர்ந்திருந்தனர்.
"என்னடா மச்சி, ஒரு முடிவோடதான் இருக்காங்களா? நிஜமாவே ஒரு வாரம் கழிக்கணுமா?" என பல் துலக்கும் போது கூட, பூங்கொடியின் அண்ணன் பொற்செழியன், தன் தங்கை கணவனான இளமாறனிடம் புலம்பிக் கொண்டிருந்தான்.
"டேய், எங்க அக்கா அல்லிராணி சொல்றதைப் பார்த்தா அப்படித்தான் தெரியுது. ஆனா எனக்கு என்னவோ இதுல ஏதோ ஒரு தில்லுமுல்லு இருக்கிற மாதிரி தோணுதுடா," என இளமாறன் சந்தேகத்தைக் கிளப்ப, பொற்செழியன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
"என்ன சொல்ற மாறா? ஒருவேளை நம்மள சோதிக்கிறாங்களோ?" என பேசிக்கொண்டிருக்கும் போதே
அங்கே வந்த செந்தூர் பாண்டியன், "என்னடா ரெண்டு பேரும் காலங்காத்தால பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க? சீக்கிரம் கிளம்புங்க, வேன் வந்துடும்!" என அதட்டினான்.
இளஞ்செழியனும் அவனுடன் சேர்ந்து அவர்களை அவசரப்படுத்தினான்.
அனைவரும் வேனில் ஏறி அமர்ந்தனர். புது மணமக்கள் என்பதால் இளமாறன் - பூங்கொடி மற்றும் பொற்செழியன் - ஜெயராணி ஜோடிகளைத் தனித்தனியாக அமர வைத்தனர்.
வழக்கமாக அரட்டை அடிக்கும் பொற்செழியன், இப்போது தன் மனைவி ஜெயராணியின் முகத்தைப் பார்க்கவே தயங்கித் தலை குனிந்து அமர்ந்திருந்தான்.
இதைப் பார்த்த பூங்கொடி, இளமாறனின் காதில் மெதுவாக, "அத்தான்... எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரியா இருக்காரு?" எனக் கேட்க,
இளமாறன் கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்கிக் கொண்டு, "அது... அவருக்குக் கோவில்னாலே ஒரு பயம், அதான் பக்தி வந்துடுச்சு," என மொட்டையாகச் சொல்லிச் சமாளித்தான்.
கோவிலை அடைந்ததும், விசேஷ பூஜைகள் நடந்தன. இளமாறனின் தந்தை சுப்பிரமணி முன்னின்று அனைத்தையும் கவனித்துக் கொண்டார். முருகவள்ளியும் தனலட்சுமியும் சாமி கும்பிடும்போது, "இந்தக் குழந்தைகள் எல்லாம் நல்லா இருக்கணும்," என வேண்டிக் கொண்டனர்.
பூஜை முடிந்து அனைவரும் கோவிலின் ஒரு ஓரத்தில் அமர்ந்து பிரசாதம் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது செந்தூர் பாண்டியன் தற்செயலாக தன் போனில் எதையோ பார்த்துவிட்டு, "அடடா! நான் ஒரு விஷயத்தை கவனிக்காம விட்டுட்டேனே!" என சத்தமாகச் சொன்னான்.
அனைவர் கவனமும் அவன் பக்கம் திரும்பியது. இளமாறனும் பொற்செழியனும் 'என்னவோ நடக்கப் போகுது' என்பது போல அலர்ட் ஆனார்கள்.
"என்ன அத்தான் என்ன ஆச்சு?" என செந்தூரின் மனைவி அல்லிராணி கேட்க, செந்தூர் சிரித்துக்கொண்டே சொன்னான், "இல்லை அல்லி... அந்த ஜோசியர் கிட்ட நேத்து ராத்திரி திரும்பப் பேசினேன். அவர் அவசரத்துல அடுத்த வார திங்கட்கிழமைன்னு தப்பா சொல்லிட்டாராம். இன்னைக்கு ராத்திரியே நல்ல நேரம் இருக்காம்!"
இதை கேட்டதும் பொற்செழியன் கையில் இருந்த தயிர் சாதம் அப்படியே கீழே விழப் பார்த்தது.
இளமாறன் "அப்பாடா!" என பெருமூச்சு விட்டான்.
பொற்செழியன் சட்டென எழுந்து செந்தூரின் கையைப் பிடித்து, "நிஜமாவா அண்ணே ? நிஜமாத்தான் சொல்றியா? மறுபடியும் ஏப்ரல் பூல் பண்ணலையே?" என உணர்ச்சிவசப்பட்டுக் கேட்க, அங்கிருந்த பெண்கள் அனைவரும் வெடித்துச் சிரித்தனர்.
இளஞ்செழியன், "டேய் பாவிங்களா! உங்கள ஓட்டுறதுக்காக நாங்க எல்லாரும் (செந்தூர், இளஞ்செழியன், தீபிகா அல்லிராணி) சேர்ந்து போட்ட பிளான்டா இது.
நீங்க ரெண்டு பேரும் மேல வந்து பண்ண அலும்பு இருக்கே... அதுக்கு இது தேவைதான்!"
பூங்கொடியும் ஜெயராணியும் கூட இந்த விளையாட்டில் கூட்டு என்பதை அறிந்ததும், இளமாறன் தன் தலையில் அடித்துக்கொண்டான்.
"அப்போ நேத்து ராத்திரி முழுக்க நாங்க பட்ட கஷ்டம் எல்லாம் உங்களுக்கு வேடிக்கையா போச்சா?"
"ஆமா! உங்க முகத்தைப் பார்க்கவே அவ்ளோ ரகளையா இருந்துச்சு," என தீபிகா கிண்டல் செய்ய, பொற்செழியன் நிம்மதியுடன் அமர்ந்தான்.
"சரி மச்சான்... என்ன வேணா பண்ணுங்க. இன்னைக்கு ராத்திரி 'கன்பார்ம்' தானே? அது போதும் எனக்கு!" என நினைத்தான் இளமாறன்.
அன்றைய பொழுது முழுவதும் கலாய்ப்புகளும், கேலிகளுமாய் கழிந்தது. ஒரு வழியாக அந்த இரு ஜோடிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இரவு நெருங்க நெருங்க, இளமாறனுக்கும் பொற்செழியனுக்கும் ஒரு பக்கம் மகிழ்ச்சியும், இன்னொரு பக்கம் சிறு பதற்றமும் தொற்றிக் கொண்டது...
Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 30
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 30
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.