என்னைக் களவாட வந்தவளே - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் 4:

இருவரும் கண்களால் பேசிக் கொண்டிருந்த அந்த நிமிடத்தில், பின்புறம் திடீரென ஹாரன் சத்தம் கேட்டது.

“யாருடா? இந்த நேரத்துல நந்தி மாதிரி வந்துகிட்டு?” என எரிச்சலுடன் திரும்பிப் பார்த்தான் இளமாறன்.

பைக்கிலிருந்து இறங்கினார்கள் செந்தூரனும் பொற்செழியனும்.

“என்ன மாப்பிள்ளை… பகல் கனவா?”
என்று சொல்லிக்கொண்டே முதுகில் தட்டினான் பொற்செழியன்.

“இவனுங்க வேற… ஒன்னுக்கு மூணு பேரு இருந்துட்டு நம்மள கொஞ்ச நேரமாவது சந்தோஷமா இருக்க விட மாட்டானுங்க” என்று மனதுக்குள் புலம்பிய மாறன், வெளியில் பல்லைக் காட்டி சிரித்தான்.

“என்னடா மாப்ள, பகல்லயே மோகினி பிசாசு ஏதும் அடிச்சிருச்சா? முகமே சரி இல்லையே?” என்று நக்கலடித்தான் செந்தூரன்.

“ஆமாடா… இப்போ தான் ஒரு மோகினி பிசாசு வெள்ளை கலர் சுடிதார் போட்டுக்கிட்டு உங்க வீட்டுக்குள்ள போனா…”
என்று சொல்ல வந்தவன் தன்னை சுதாரித்துக்கொண்டு,

“மச்சான்… உனக்கு கல்யாணம்னு சும்மா விட்டுட்டு போறேன். இல்லன்னா அவ்ளோ தான்.

என் அக்கா முகத்துக்காக உன்ன விட்டுட்டு போறேன் மச்சான்,”
என்று சொல்லிக்கொண்டே பைக்கை கிளப்பிச் சென்றுவிட்டான்.

இருவரும் சிரித்தபடியே வீட்டிற்குள் சென்றனர்.

---

திருமண நாளும் விடிந்தது.

அன்று காலை 7.30 முதல் 8.00 மணிக்குள் முகூர்த்தம். அந்த ஊரில் பெரும்பாலான திருமணங்கள் இராமநாதபுரம் வழிவிடு முருகன் ஆலயத்தில் தான் நடைபெறும்.

இவர்களுக்கும் அதேபோல் அனைவரும் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.

இன்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. இவர்களைப் போலவே பலர் தங்களின் திருமணத்தை நடத்த உள்ளே திரண்டிருந்தனர்.

பெண்ணை அழைத்து வந்து கல்யாணப் புடவை, மாலை என அனைத்தையும் கொடுத்து பூங்கொடியுடன் அனுப்பினர்.

அல்லிராணிக்கு தங்கை அருகில் இருந்ததால் சிறிது படபடப்பு குறைந்தது.

அடுத்து மாப்பிள்ளை அழைப்பு.

செந்தூரனுக்கு கையில் காப்பு, மறுகையில் கைக்கடிகாரம், மோதிரம், கழுத்தில் செயின் என அனைத்தையும் அணிவித்த இளமாறன், மாப்பிள்ளையை அழைத்து வந்து மணமேடையில் அமர்த்தினான்.

அல்லிராணியை அழகு நிலைய பெண்கள் மிதமான ஒப்பனையுடன் அழகாக அலங்கரித்து, சிவப்பு நிற புடவையில் தயாராக்கினர்.

பூங்கொடி மணப்பெண்ணை மெல்ல அழைத்து வந்து செந்தூரன் அருகில் அமர்த்தினாள்.

செந்தூரனும் அல்லிராணியும் சிறுவயதிலிருந்தே தூரமாக நின்று பார்த்துக் கொள்வதோடு நிறுத்திக் கொண்டவர்கள். அதனால் இருவருக்குமே சிறு பதட்டம் இருந்தது.

ஊர் தலைவர் தாலியை எடுத்து மணமகன் கையில் கொடுத்தார்.

பெரியோர்கள் அனைவரின் ஆசிகளுடன் அல்லிராணியின் கழுத்தில் பொன் தாலியை இரண்டு முடிச்சுகளாக கட்டினான் செந்தூரன். மூன்றாவது முடிச்சை பூங்கொடி இட்டாள்.

மணமக்களுக்கு பின்னால் நின்றிருந்த இளமாறனும் பூங்கொடியும் பட்டுச் சேலை, வேஷ்டி, சட்டையில் அனைவரின் கண்களையும் கவர்ந்தனர்.

இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

---

பின்னர் பெரிய திருமண மண்டபத்தில் விருந்து தடபுடலாக நடைபெற்றது.

மட்டன் பிரியாணி, தால்சா,
சிக்கன் 65, முட்டை பொரியல், மீன் பொரியல், தலக்கறி, சாம்பார், கூட்டுப் பொரியல், கேசரி என விருந்து கலை கட்டியது.

ஊரின் பெரிய தலைகள், சொந்த பந்தங்கள் என கூட்டம் அலைமோதியது.

கதிரேசனும் சுப்பிரமணியும் அனைவரையும் கவனித்து வழியனுப்பி வைத்தனர்.

---

மாலையில் மணமகன் வீட்டிற்கு, வெள்ளிக் குத்து விளக்கை கைகளில் பிடித்துக்கொண்டு வலது காலை எடுத்து வைத்து மணமக்கள் இருவரும் வீட்டிற்குள் நுழைந்தனர்.

மணமக்களுக்கு பால் பழம் கொடுக்கப்பட்டது. சீர் வரிசைகள் அடுக்கி வைக்கப்பட்டன.

அல்லிராணியை சிறிது நேரம் ஓய்வெடுக்க பூங்கொடியுடன் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

பூங்கொடி அவளின் அத்தாச்சியை அறையில் விட்டுவிட்டு வெளியே வரும்போது, பக்கத்து அறையிலிருந்து ஒரு கரம் அவளது கைகளைப் பிடித்து உள்ளே இழுத்தது.

அவள் பதறி கத்த போக, அவளின் வாயில் கை வைத்து மூடினான் இளமாறன்.

அவனைப் பார்த்து இன்னும் பயந்தவள், அவன் கைகளை எடுத்ததும்,
“என்ன அத்தான்… நீங்க யாராச்சும் பாத்துட்டா என்ன நினைப்பாங்க?”
என்று சொல்லிக்கொண்டே அவன் மார்பில் நாலு குத்து குத்தினாள்.

“அய்யோ அம்மா! அடியே இன்னைக்கே என்ன போட்டு தள்ள பிளான் ஏதும் போட்டுட்டியா?”
என்று சொல்லிக்கொண்டே அவளை சுவரோடு சாய்த்தான்.

பூங்கொடி மிரண்ட விழிகளுடன் அவனைப் பார்க்க, அந்த கண்களின் மேல் தனது முதல் அச்சாரத்தை ஒரு முத்தமாக பதித்தான்.

பின்பு அவளது கன்னத்தைப் பிடித்து கிள்ளினான்.

அவன் கைகளைத் தட்டிவிட்டு,
“நான் போறேன் அத்தான்… யாராவது உள்ள வந்துட்டா?”
என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசலில் பொற்செழியன் குரல் கேட்டது.

அண்ணன் பார்த்துவிட்டால் தவறாக நினைப்பாரோ என்ற எண்ணமே பூங்கொடியின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

பொற்செழியன் அறைக்குள் நுழைய முயன்றபோது, இளமாறன் அவளை கதவின் பின்னால் மறைத்து அவனை வாசலிலேயே நிறுத்தினான்.

“நீ என்ன மாப்ள இங்க பண்ற?”
“அங்க உன்ன காணோம்னு அத்தை கேட்டாங்க,”
என்று சொல்லிக்கொண்டே உள்ளே வர முயன்றான்.

“நான் முதலிரவுக்கு அறையை தயார் பண்ணிட்டு இருக்கேன்.
நீ சின்ன பிள்ளை. இங்கலாம் வரக்கூடாது. போய் சின்ன பசங்களோட கோலி விளையாடு!”
என்று விரட்டினான் இளமாறன்.

“ஏன்டா! நீயும் நானும் காலேஜ் ஒன்னா தான் படிச்சு முடிச்சோம்.
நான் உனக்கு ஒரு மாசம் முன்னாடி பிறந்தவன்டா!
என்னையவே சின்ன பசங்க கூட விளையாட சொல்ற உனக்கு எவ்ளோ கொழுப்பு இருக்கணும்?”
என்று பொறிந்து தள்ளினான் பொற்செழியன்.

அவர்களின் வாக்குவாதத்தை கேட்டுக் கொண்டிருந்த பூங்கொடிக்கு இதயம் வெளியே வந்துவிடும் அளவிற்கு பயம் வந்தது.

அவளின் அழுகையை ஓரக் கண் பார்த்த இளமாறன் கோபமடைந்து,
“இப்போ அதுக்கு என்னடா? நான் என் மச்சானுக்காக அறை தயார் பண்றேன்.
நீ போய் வேற வேலை இருந்தா பாரு,”
என்று கடுப்பாக விரட்டினான்.

இளமாறனின் முகத்தை குறுகுறுவென பார்த்த பொற்செழியன்,
“இவன் முழியே சரி இல்லையே,”
என்று நினைத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டான்.

அப்போதுதான் பூங்கொடிக்கு மூச்சு வந்தது.

உள்ளே வந்த இளமாறன் மீது கோபமாக நான்கு அடிகள் வைத்தவள்,
“போங்க அத்தான்! எல்லாம் உங்களால தான் நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா?
உங்க கூட இனி பேசவே மாட்டேன்,”
என்று சொல்லிவிட்டு அவன் பதிலை கேட்காமல் அறைக்குள் ஓடிவிட்டாள்.

இளமாறன் பெருமூச்சு விட்டான்.
“ஷப்பா… சாமி! ஒரு இரண்டு நிமிஷம் பேச போனது குத்தமாடா?
அப்புறம் என் கைல மாட்டுவடி… அப்போ வச்சுக்கிறேன்,”
என்று புலம்பிக்கொண்டே வேலையை கவனித்தான்.

---

நல்ல நேரம் பார்த்து மணமக்களை முதலிரவு அறைக்குள் அனுப்பி வைத்தனர்.

செந்தூரன் அமைதியாக வந்து கட்டிலில் அமர்ந்து அவளை பார்த்தான்.

அல்லிராணிக்கு தயக்கத்தில் கால்கள் பின்னின.

இரண்டு அடி தூரத்தை கடப்பதே பெரும்பாடு போல பயத்துடன் நின்றாள் அவள்.

அவளை பார்த்து சிரித்தவன் எழுந்து அவள் அருகில் வந்தான்.

“என்னை இன்னைக்கு தான் முதல் தடவ பாக்குற மாதிரி ஏன் இவ்ளோ பயம்?”
என்று கேட்டு அவள் கைகளைப் பிடித்தான்.

அவனின் தொடுகையில் பயத்துடன் சேர்ந்து நாணமும் அவளுக்கு ஒட்டிக்கொண்டது.
தலை குனிந்தபடியே நின்றாள்.

அவன் அவளைக் கட்டிலில் அமர வைத்து அருகில் அமர்ந்தான்.

“நமக்கு சின்ன வயசுலயே பேசி முடிச்சுடாங்க.
ஆனா நாம ரொம்ப பேசிப் பழகுனது இல்ல.
அதான் உனக்கு ஒரு மாதிரி இருக்கு.

அதுக்காக முதலிரவ தள்ளி வைக்கலாம்னு ஏதாவது நினைச்சு
உன்னோட அத்தானை ஏமாத்திராத.

உன்ன நினச்சே தான் வாழ்க்கை முழுசும் வாழப் போறேன்.
என்னை ஏமாத்திராத அல்லி…”

அவளின் இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.

அதை கண்டவனின் இதழ்கள் அவளின் இதழ்களை நோக்கி குனிந்தன.

ஒரு நீண்ட முத்தத்தால் அவளின் இதழ்களில் கவிதை எழுதினான் அவளின் கணவன்.

இல்லறம் இனிதே ஆரம்பமானது.


“உன் கழுத்தில்
மாலை இட…
உன் இரண்டு தோளை தொட
என்ன தவம் செஞ்சேனோ… என் மாமா…
வண்ணக்கிளி கைய தொட
சின்ன சின்ன கோலம் இட…
உள்ளம் மட்டும்
உன் வழியே நானே…
உள்ளம் மட்டும்
உன் வழியே நானே…”
 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

thanga then mozhi

Active member
May 6, 2026
160
131
43
Cheyyar
இந்த இளமாறன் கொடியை கொஞ்ச நேரத்தில் பயமுறுத்தி விட்டுட்டான்
 
  • Love
Reactions: STN -18