அத்தியாயம் 5:
கிழக்கே கதிரவன் தன் ஒளிக்கற்றைகளை மலை முகடுகளில் படரவிட, வானம் செந்நிறமாகக் காட்சியளித்தது.
முதல் நாள் திருமணக் களைப்பில் இருந்த அனைவரும் சிறிது தாமதமாகவே எழுந்தனர்.
ஆனால், இங்கு ஒருவனுக்கு மட்டும் இரவு முழுவதும் உறக்கமே வரவில்லை. இளமாறனின் கண்களுக்குள் பூங்கொடியின் அழுத விழிகளே மீண்டும் மீண்டும் தோன்றி அவனை இம்சித்தன.
இன்று மறுவீட்டு அழைப்பிற்கு அவளும் வருவாள். அப்போது எப்படியாவது அவளைச் சமாதானம் செய்துவிட வேண்டும் என எண்ணிக் கொண்டே குளித்துவிட்டுத் தன் அறையை விட்டு வெளியே வந்தான்.
சமையலறையில் முருகவள்ளி பரபரப்பாகச் சமைத்துக் கொண்டிருந்தார். அவருடன் சில உறவுப் பெண்களும் உதவி செய்து கொண்டிருந்தனர்.
அதைக் கவனித்துவிட்டு வெளியே வந்த இளமாறன், தன் தந்தையைப் பார்த்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தான்.
அப்போது பின்புறம் சத்தம் கேட்க, இருவரும் திரும்பிப் பார்த்தனர். அங்கே பூங்கொடி இரவு உடையில் (Night-dress), மேலே ஒரு துப்பட்டாவை அணிந்து கொண்டு வாசலில் காலணியைக் கழற்றிக் கொண்டிருந்தாள்.
அவளை அந்த உடையில் பார்த்த இளமாறனுக்கு இன்ப அதிர்ச்சியில் இதயம் துடித்தது.
பூங்கொடியைப் பார்த்த அவளின் மாமா சுப்ரமணி, "வாடா கண்ணு... என்னடா அதுக்குள்ள தூங்கி முழிச்சுட்ட? என் மருமகளா இது!" என வாஞ்சையுடன் கேட்டு அவளின் தலையைக் கோதினார்.
"அத்தாச்சி போனை இங்கேயே மறந்து வச்சிட்டு போயிட்டாங்களாம் மாமா. அதான் என்னை எடுத்துட்டு வரச் சொன்னாங்க," எனத் தன் மாமாவிடம் புன்னகையுடன் கூறியவள், அருகில் நின்றவனை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.
அவளின் பார்வையில் ஒரு நிமிடம் திகைத்து நின்றவன், "இதோ வந்துறேன் பா" என தந்தையிடம் சொல்லிவிட்டு, அவளை வழிமறிக்க ஓடினான்.
அவன் திடீரென வருவதைக் கண்டு பூங்கொடி மிரண்டு இரண்டு அடி பின்னால் வைக்க, அவளின் கையைப் பற்றி இழுத்துச் சென்று மறைவான ஒரு சுவரோரம் நிறுத்தினான்.
அவளைப் போக விடாமல் இரண்டு கைகளையும் சுவற்றில் ஊன்றி வழிமறித்தவன், அவளைப் பார்த்துக் கண்ணடித்து, கன்னத்தில் குழி விழ அழகாகச் சிரித்தான்.
அவனின் செயலில் ஒரு நொடி மயங்கி நின்றவளுக்கு, பிறகுதான் நேற்று இரவு நடந்தது நினைவுக்கு வந்தது. சட்டென்று அவனை முறைத்தாள்.
அவளின் பார்வையை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத இளமாறன், அவளை மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு, "அடியே கொடி! காலைலயே இப்படி டிரஸ் பண்ணிட்டு வந்து அத்தானோட மூடயே மாத்துறியே..." என வம்பிழுத்து,
அவளின் கழுத்தின் கீழ் இருந்த மச்சத்தில் அழுத்தமாக ஒரு முத்தம் வைத்தான்.பூங்கொடிக்கு மேனி எல்லாம் கூசி சிலிர்த்தது.
அவனின் முத்தத்தில் கண் மூடி கிறங்கி நின்றவளின் தோற்றம் இளமாறனை பித்தம் கொள்ள வைத்தது.
மூடியிருந்த அவளது இமைகளின் மேலே மற்றொரு முத்தம் வைத்தான்.
அப்போது படக்கென கண்களைத் திறந்த பூங்கொடி அவனை முறைத்தபடி, "போடா எருமை மாடு! உன்னால நைட்டு எல்லாம் பயத்துல தூக்கமே வரல தெரியுமா?" எனத் திட்டினாள்.
"எதெ...போடா வா முன்னாடி எல்லாம் அத்தான், மாமான்னு கொஞ்சுவ? இப்போ இப்படி திட்டுற?" எனப் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
"நீ பண்ண வேலைக்கு உன்னைத் திட்டாம வேற என்ன செய்யணும்?" எனக் கூறியவளின் இடுப்போடு கை கோர்த்து இழுத்தவன், "என்னடி வாய் ரொம்ப நீளுது... இந்த வாயை அப்படியே..." என அவளது உதட்டை நோக்கி குனிந்தான்.
அவனைச் சட்டென்று தள்ளிவிட்டு, "போடா லூசு அத்தான்!" எனத் திட்டிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டாள், பூங்கொடி. இளமாறனின் புன்னகை இன்னும் விரிந்தது.
வீட்டின் உள்ளே சென்ற பூங்கொடி, அல்லிராணியின் அறையில் இருந்த மொபைலை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அப்போது அங்கு வந்த ஜெயராணி அவளின் காதருகே சென்று, "என்னடி பூவு? தோட்டத்துப் பக்கம் ஒரே சத்தமா இருந்துச்சே..." என வம்பு வளர்த்தாள்.
அந்தக் கேள்வியால் திகைத்த பூங்கொடி, "உங்க வீட்டுப் பல்லி கத்துச்சு அத்தாச்சி... அதான் அதை அடிச்சு சூப் வைக்கலாம்ன்னு பார்த்தேன். அதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுச்சு," எனக் கூறிவிட்டு கண்ணடித்தாள்.
"எதே பல்லி சூப்பா? நீ செஞ்சாலும் செய்வடி...!" எனச் சிரித்துக் கொண்டே இருவரும் ஹாலில் வந்து அமர்ந்தனர்.
முருகவள்ளி பூங்கொடிக்குக் காபி கொடுக்க, அதைப் பருகிவிட்டு, "நான் பிறகு வருகிறேன் அத்தை" என கூறி சென்று விட்டாள் மாறாத புன்னகையுடன்...
பூங்கொடி அங்கிருந்து சென்ற பிறகும் இளமாறன் அந்தச் சுவற்றையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.
அவளின் திட்டுகளும், அந்தச் சிறு மிரட்சியும் அவனுக்குள் இன்னும் காதலைத் தூண்டியது.
அவன் வீட்டிற்குள் நுழையும் போது, ஹாலில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
ஜெயராணி அவனைப் பார்த்து ஒரு குறும்புப் புன்னகையுடன்,
"என்ன அண்ணா... முகம் ரொம்ப பிரகாசமா இருக்கு? தோட்டத்துல ஏதும் அபூர்வமான பூவை பார்த்தியா என்ன?" என அவனை வம்பிழுக்க, இளமாறன் மழுப்பலாகச் சிரித்துக் கொண்டே தன் தந்தையின் அருகே அமர்ந்தான்.
மறுபுறம், பூங்கொடி தன் வீட்டிற்குச் சென்றும் அமைதியாக இருக்க முடியவில்லை.
இளமாறன் கொடுத்த அந்த முத்தத்தின் வெப்பம் இன்னும் அவளின் கன்னத்தில் அப்படியே இருந்தது.
கண்ணாடியின் முன் நின்று தன் கழுத்தின் கீழ் இருந்த மச்சத்தைத் தொட்டுப் பார்த்தவள், "ராட்சசன்... எப்படி எல்லாம் அதிரடியா பண்றான்!" எனத் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.
ஆனாலும், அவளின் உதடுகளில் அவளையும் மீறி ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
சிறிது நேரத்தில் மறுவீட்டு அழைப்பிற்காக இளமாறனின் வீட்டிற்கு அனைவரும் வந்தனர்.
பட்டு வேட்டி சட்டையில் இளமாறன் கம்பீரமாக நுழைய, அவனது கண்கள் மட்டும் யாரையோ தேடி அலைந்தன.
பூங்கொடி ஒரு இளஞ்சிவப்பு நிறப் பட்டுப் புடவையில், மல்லிகைச் சரம் சூடி, தேவதை போல வந்தாள்.
அவளைப் பார்த்த இளமாறன் ஒரு நிமிடம் இமையைத் தட்ட மறந்து நின்றான்.
அவள் அருகில் வந்ததும், யாரும் கவனிக்காத நேரத்தில் குனிந்து, "புடவைல ரொம்ப அழகா இருக்கடி... ஆனா காலையில அந்த நைட்டியில பார்த்ததுதான் இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு!" என ரகசியமாகக் கூறினான்.
பூங்கொடி சட்டென்று சிவந்து போனாள். "அறிவே இல்ல உங்களுக்கு... பெரியவங்க முன்னாடி நிக்கிறோம்ன்ற பயமாவது இருக்கா?" என மெல்லிய குரலில் கடிந்து கொண்டாள்.
"காதல்ல பயம் வந்தா அது காதலே இல்லடி கொடி..." என அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, பூங்கொடியின் அண்ணன் செந்தூரனும் அல்லிராணியும் அங்கே வர, இருவரும் சட்டென்று விலகி அமைதி காத்தனர்.
விருந்து உபசாரங்கள் முடிந்து, இரவும் வந்தது. அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது, இளமாறன் நைசாகப் பூங்கொடியை தேடிச் சென்றான்.
அங்கே அவள் தனியாக மொட்டை மாடியில் நின்று நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் பின்னால் சென்று அவளின் தோளில் கை வைக்க, அவள் திடுக்கிட்டுத் திரும்பினாள்.
"நீங்களா? இங்கே எதுக்கு வந்திங்க அத்தான்? யாராவது பார்த்தா தப்பா நினைக்கப் போறாங்க," என அவள் பதற, அவளோ அவளை இன்னும் நெருக்கமாக இழுத்தான்.
"யார் பார்த்தா என்ன? நீ என் பொண்டாட்டியாகப் போறவ... உன்கிட்ட பேச எனக்கு எதுக்கு பயம்?" என அவளின் விழிகளைப் பார்த்துக் கேட்டான்.
அவளின் பிடிவாதம் மெல்ல மெல்லக் கரையத் தொடங்கியது. "நிஜமாவே என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமா மாறா?" என முதல்முறையாக அவனது பெயரைச் சொல்லி உருக்கமாகக் கேட்டாள்.
அவன் அவளின் கைகளைத் தன் நெஞ்சின் மீது வைத்து, "இந்தத் துடிப்பு சொல்றது உனக்குக் கேக்கலையா? உன் கோபம், உன் திட்டு, உன் சிரிப்பு எல்லாமே எனக்கு உயிர் தான் பூ...
உன்னை அழ வச்சது தப்புதான், இனி ஒருபோதும் நீ இப்படி அழ கூடாது என கூறி அவளை தோளோடு அணைத்துக் கொண்டான்.
நிலவின் ஒளியில் அவளின் முகம் இன்னும் அழகாக மின்னியது. பூங்கொடி மெதுவாக அவனது தோளில் தலைசாய்க்க, அந்த இரவு அவர்கள் காதலுக்கு மௌன சாட்சியாய் நின்றது.
"என் விழி பார்க்கும் திசையெல்லாம்
உன் பிம்பம் தான் தெரிகிறது...
என் சுவாசம் தீரும் வரை - உன் அன்பு மட்டும் எனக்குப் போதுமடி!"
Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.