என்னைக் களவாட வந்தவளே - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113

அத்தியாயம் 7:



இளமாறன் அவர்களைப் பத்திரமாக அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.


வீட்டின் வாசலில் அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்த செந்தூரன், பொற்செழியன் மற்றும் இளஞ்செழியன் மூவரும், இளமாறனின் இறுகிய முகத்தையும் பூங்கொடியின் கலங்கிய விழிகளையும் பார்த்ததுமே ஏதோ விபரீதம் என்று உணர்ந்து கொண்டனர்.


"என்னடா இளமாறா? ஏன் மூணு பேரும் ஒரு மாதிரி வர்றீங்க? வழியில என்னாச்சு?" என செந்தூரன் எழுந்து வந்து கேட்டான்.


ஜெயராணி நடந்தவற்றைத் திக்கித் திணறிச் சொல்ல, செந்தூரனின் கண்கள் சிவந்தன.

பொற்செழியன் ஆத்திரத்தில் கையை முறுக்கினான்.
"அந்த கருணாகரனுக்கு இவ்வளவு தைரியமா? என் தங்கை மேலயே கை வைக்கப் பாப்பானா அவன்?" என இரைச்சலிட்டான் பொற்செழியன்.

சத்தத்தைக் கேட்டு உள்ளே இருந்து கதிரேசனும், தன் தளர்ந்த நடையுடன் கர்ப்பிணியான அல்லிராணியும் வெளிவந்தனர்.

"எல்லாரும் கொஞ்சம் அமைதியா இருங்க. இப்போ எதுக்கு இவ்வளவு சத்தம்?" என்றார் கதிரேசன்.

"அப்பா... அந்த கருணாகரன் பஸ்ல கொடிய வம்பு இழுத்திருக்கான். இளமாறன் அவன அடிச்சுத் தள்ளிட்டான்.

ஆனா அவன் போகும்போது சும்மா போகல, நம்ம குடும்பத்தையே சிதைப்பேன் அப்படின்னு சவால் விட்டுட்டு போயிருக்கான்," என்றான் இளஞ்செழியன் ஆவேசமாக.


அல்லிராணி மெதுவாகப் பூங்கொடியின் அருகில் வந்து அவளை அணைத்துக் கொண்டாள். "பயப்படாத கொடி, நாங்க எல்லாரும் இருக்கும்போது உனக்கு ஒரு குறையும் வராது," எனத் தேற்றினாள்.


செந்தூரன் இளமாறனின் தோளில் கை வைத்தான். "நீ பண்ணது சரிதான் மச்சான். ஆனா கருணாகரன் சாதாரண ஆள் கிடையாது.

அவன் பின்னாடி பெரிய அரசியல் பலம் இருக்கு. இப்போதைக்கு நாம நிதானமா இருக்கணும்," என்றான் பொறுப்பாக.


"நிதானமாவது... மண்ணாங்கட்டியாவது! அண்ணி கர்ப்பமா இருக்காங்க.

இந்த நேரத்துல வந்து அவன் மிரட்டுறான். அவனை இப்போவே போய் கவனிச்சாதான் அடங்குவான்!" என பொற்செழியன் கிளம்பினான்.

"பொறு செழியா!" என செந்தூரன் அதிகாரத்துடன் குரலை உயர்த்தினான். "வீட்ல வளைகாப்பு நடக்கப் போகுது. அடிதடிக்கி இப்போ போறது சரி இல்ல. அவன் என்ன பண்ணுவான்னு கவனிப்போம்," என்றான்.


அன்றிரவு...
யாரும் சரியாக உறங்கவில்லை. கருணாகரன் சாதாரணமாக எதையும் விடுபவன் அல்ல என்பது ஊருக்கே தெரியும்.

அவன் தன் அடியாட்கள் மூலம் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவியது.


மறுநாள் காலை, கதிரேசன் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து கருணாகரனின் ஆட்கள் மூவர் இறங்கினர். அவர்கள் கையில் ஒரு நோட்டீஸ் இருந்தது.


செந்தூரன் வெளியே வந்தான். "என்ன விஷயம்?"
"இது கருணாகரன் ஐயா கொடுத்தனுப்பினது.

உங்க நிலத்துல பாதி அவரோடதுன்னு கேஸ் போட்டிருக்காரு. அந்த இடத்துல இப்போ வேலை செய்யக்கூடாதுன்னு ஸ்டே ஆர்டர் வாங்கியாச்சு.

மரியாதையா அந்தப் பட்டாவைக் கொடுத்துட்டா பிரச்சனையை முடிச்சுக்கலாம்னு சொன்னாரு," என்றான் ஒருவன் திமிராக.


"நிலமா? அது எங்க தாத்தா காலத்து சொத்துடா! அதுக்கு அவன் எப்படி சொந்தம் கொண்டாட முடியும்?" எனப் பாய்ந்து வந்தான் இளஞ்செழியன்.


"அதை கோர்ட்ல பார்த்துக்கோங்க. அப்புறம்... இளமாறன் கிட்ட சொல்லிடுங்க, அவன் போட்ட ஒரு ஒரு அடிக்கும் வட்டியும் முதலுமா வசூலிக்கப்படும்!" என மிரட்டிவிட்டு அவர்கள் சென்றனர்.


செந்தூரன் அந்த நோட்டீஸைப் பார்த்தான். கருணாகரன் நேரடியாக மோதாமல், அவர்களின் வாழ்வாதாரமான நிலத்தைத் தாக்கி, குடும்பத்தை நிலைகுலைய வைக்கத் திட்டமிடுகிறான் என்பது அவனுக்குப் புரிந்தது.


அல்லிராணி அறைக்குள் இருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்கு வயிற்றிலிருந்த குழந்தையை நினைத்து ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும், மறுபுறம் தன் குடும்பத்திற்குத் வந்திருக்கும் இந்த ஆபத்தை நினைத்து வருந்தினாள்.


அவள் செந்தூரனிடம் வந்து, "அத்தான்... இது என்ன அந்தப் பாவி நம்ம நிலத்தை அபகரிக்கப் பார்க்குறானே?" என வருந்தினாள்.


செந்தூரன் அவள் கையைப் பற்றிக்கொண்டு, "நீ எதைப்பத்தியும் கவலைப்படாத அல்லி. உன் புருஷன், உன் தம்பி, உன் கொழுந்தன்னு இத்தனை பேரு இருக்கோம்.

எவன் வந்தாலும் பாத்துக்கலாம். நீ சந்தோஷமா இரு, அதுதான் இப்போ முக்கியம்," என்றான் ஆறுதலாக.

இதை கேட்ட இளமாறன் கொதித்து போனான். என்னோட மோத தைரியம் இல்லாம என் மாமா குடும்பத்துல பிரச்னை பண்ண பாக்குறானா? அவனுக்கு இருக்கு என அடுத்து என்ன செய்யலாம் என தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தான்.

அனைவரும் கதிரேசன் வீட்டில் தான் இருந்தனர். இளமாறனும் அங்கு தான் இருந்தான்.

பூங்கொடியின் மனது மட்டும் அடங்கவில்லை. "தன் மேலிருந்த வக்கிரமான பார்வையால் தானே, அண்ணனுக்கும் அத்தானுக்கும் இவ்வளவு பெரிய நிலப் பிரச்சனை வந்தது?" என்ற எண்ணம் அவளை அரித்துக் கொண்டே இருந்தது.


அன்று இரவு நிலா வெளிச்சம் முற்றத்தில் படர்ந்திருந்தது. இளமாறன் தனது பைக்கைச் சரி செய்துவிட்டு, வீட்டின் பின்புறம் இருக்கும் தென்னந்தோப்பிற்கு அருகே அமர்ந்திருந்தான்.

அங்கே தேம்பித் தேம்பி அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினான்.


இருட்டில் சுவரோரம் அமர்ந்து முகம் புதைத்து அழுது கொண்டிருந்தாள் பூங்கொடி.

இளமாறன் பதறிப்போய் அவளருகே சென்றான். "கொடி... என்னாச்சு? ஏன் அழற? யாராவது ஏதாவது சொன்னாங்களா?" என அவளது தோளைத் தொட்டுத் திருப்பினான்.


அவனைப் பார்த்ததும் பூங்கொடியின் அழுகை இன்னும் அதிகரித்தது. சட்டென்று அவன் மார்பில் சாய்ந்து கொண்டு தேம்பினாள்.

"எல்லாம் என்னாலதான் அத்தான்... அன்னைக்கு நான் மட்டும் பஸ்ல வரலைன்னா... இல்ல, அவன் பேசும்போது நான் அமைதியா இருந்திருந்தா இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது.

அண்ணி இந்த நிலைமையில இருக்கும்போது அவங்களுக்கு எவ்வளவு மன உளைச்சல்... நம்ம நிலமும் இப்போ வம்புக்கு நிக்குது... எல்லாம் என்னாலதான்!" என தேம்பினாள்.


இளமாறன் அவளது கண்ணீரைத் தன் விரல்களால் துடைத்து விட்டான். அவனது பார்வை மென்மையாகவும் அதே சமயம் காதலுடனும் அவளை வருடியது.


"இங்க பாரு கொடி... என் கண்ணை நேரா பாரு," என அவளது முகத்தை நிமிர்த்தினான்.


"அந்தப் பொறுக்கி பேசினதுக்கு நீ எப்படி பொறுப்பாக முடியும்? அவன் பண்ணது அராஜகம். அதைத் தட்டிக் கேட்கிறது எங்க கடமை. நீ ஒன்னும் வேற்று மனுஷி கிடையாது. உனக்காகப் போராடுறதுல எங்க எல்லாருக்கும் பெருமைதான்."


"ஆனாலும் அத்தான்..." என அவள் மீண்டும் விக்க, இளமாறன் அவள் இதழ்களில் தன் விரலை வைத்துத் தடுத்தான்.


"இனிமே ஒரு சொட்டுக் கண்ணீர் வரக்கூடாது. உன்னோட இந்த அழுகையைப் பார்த்தா, எனக்கு அன்னைக்கு அடிச்சதை விட அதிகமா வலிக்குது.

உன் அத்தான் இருக்கும்போது உன்னை எவன் தொட முடியும்?"
அவன் குரலில் இருந்த உறுதியும், அவனது அண்மையும் பூங்கொடியின் பயத்தைப் போக்கி ஒருவித சிலிர்ப்பைத் தந்தது.

அவள் மெல்ல அவனது சட்டையைப் பிடித்துக் கொண்டு நெருங்கி நின்றாள்.


"நிஜமாவா அத்தான்? எனக்கு பயமா இருக்கு... அந்த கருணாகரன் ஏதாவது கெடுதல் பண்ணிடுவானோன்னு," என்றாள் மெல்லிய குரலில்.


இளமாறன் குறும்புச் சிரிப்பு ஒன்றை உதிர்த்தான். அவளது காதோரம் சரிந்து ரகசியமாகச் சொன்னான், "உன் அத்தான் யாருன்னு உனக்குத் தெரியாதுல்ல? வேணா ஒரு ரகசியம் சொல்லவா? அந்த கருணாகரன் மிரட்டலை விட, இப்போ நீ இப்படி அழறது தான் எனக்குப் பெரிய கவலையா இருக்கு.

ஏன்னா... நீ அழுதா இந்த இளமாறனோட உலகம் அப்படியே நின்னுடும்."
அவனது மூச்சுக்காற்று அவள் கன்னத்தில் பட, பூங்கொடியின் முகம் சட்டென்று சிவந்தது.


"போங்க அத்தான்... எப்பவும் இப்படியே தான் பேசி சமாளிப்பீங்க," என அவனை லேசாகத் தள்ளினாள்.


இளமாறன் விடவில்லை. அவள் கையைப் பற்றிக் கொண்டு, "இது வெறும் பேச்சு இல்லை கொடி... உன் மேல வச்சிருக்கக் காதல்.

சீக்கிரம் இந்த நிலப் பிரச்சனையை முடிச்சுட்டு, அக்காக்கு குழந்தை பிறந்த கையோட, உன்னைக் கல்யாணம் பண்ணி என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகணும்னு ஆசையா இருக்கு.

அதுவரைக்கும் என் செல்லக்குட்டி பயப்படாம இருக்குமா?"
பூங்கொடி நாணத்துடன் தலையசைத்தாள்.

அந்த நிலவொளியில் இளமாறனின் தோளில் தலை சாய்த்து நின்ற போது, அவளுக்குள் இருந்த எல்லா பயமும் மறைந்து, ஒரு பாதுகாப்பு உணர்வு மேலோங்கியது.
 

Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.