அத்தியாயம் 8:
கருணாகரன் தொடுத்த நிலப் பிரச்சனை ஊர் பஞ்சாயத்து வரை சென்றது. செந்தூரன் தனது தம்பிகளான பொற்செழியன் மற்றும் இளஞ்செழியனுடன் சேர்ந்து சட்ட ரீதியான ஆவணங்களைத் தயார் செய்து கொண்டிருந்தான்.
ஆனால் கருணாகரனோ அதிகார பலத்தைப் பயன்படுத்தி ஊர் பொதுமக்களிடையே செந்தூரனின் குடும்பத்தைப் பற்றித் தவறான வதந்திகளைப் பரப்பத் தொடங்கினான்.
ஒரு வாரம் கழித்து, அதிகாலை நேரம். செந்தூரனின் குடும்பத்தினர் அனைவரும் நிலத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு அதிர்ச்சியான செய்தி வந்தது.
அவர்களின் விளைநிலத்தில் கருணாகரனின் ஆட்கள் வேலி அமைத்துக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
"அண்ணே! அவன் வரம்பு மீறிட்டான். இனிமே பொறுமையா இருந்தா நம்ம நிலம் நமக்கு இல்லாம போயிடும்," என ஆவேசமாக அரிவாளைத் தூக்கினான் பொற்செழியன்.
"பொறு செழியா... ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுன்னு சும்மாவா சொன்னாங்க? நாம நேரா அங்க போறோம், ஆனா சண்டையிட இல்ல, நியாயத்தைக் கேட்க," என அமைதிப்படுத்தினான் செந்தூர் பாண்டியன்.
அனைவரும் நிலத்திற்கு விரைந்தனர். அங்கே கருணாகரன் தனது அடியாட்களுடன் நின்றுகொண்டு, வேலி போடுவதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.
"கருணாகரன்! இது முறையற்ற செயல். கோர்ட்ல கேஸ் இருக்கும்போது நீ எப்படி வேலி போடலாம்?" என கர்ஜித்தான் செந்தூரன்.
கருணாகரன் நக்கலாகச் சிரித்தான். "உன் மச்சான் இளமாறன் அடிச்ச அடிக்கு இதுதான்டா மருந்து. இந்த நிலத்தை நீங்க காப்பாத்தணும்னா, உன் தங்கை பூங்கொடியை எனக்குக் கட்டித் தரணும்.
இல்லன்னா, இந்த ஊர்லயே உங்களை அகதியாக்கிடுவேன்!"
இந்த வார்த்தையைக் கேட்டதும், பின்னால் வந்த இளமாறன் பாய்ந்து சென்று கருணாகரனின் சட்டையைப் பிடித்தான்.
"இன்னொரு தடவை என் வீட்டுப் பொண்ணு பேரை உன் வாயால சொன்னே... உன் நாக்கை அறுத்துடுவேன்டா!" என கர்சித்தான்.
சூழல் கலவரமாக மாறியது. கருணாகரனின் ஆட்கள் இளமாறனைத் தாக்க வர, இளஞ்செழியனும் பொற்செழியனும் அரணாக நின்றனர்.
இவர்கள் நால்வரும் ஒரு பக்கம், கருணாகரனின் படை ஒரு பக்கம் என அந்த இடமே போர்க்களமானது.
வீட்டில் இருந்த அல்லிராணிக்கும் பூங்கொடிக்கும் விஷயம் தெரிய வந்தது. ஆறாவது மாதம் என்பதால் அல்லிராணியை நகர வேண்டாம் என்று கூறியிருந்தனர்.
ஆனால், தன் கணவனும் தம்பிகளும் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த அல்லிராணி, பூங்கொடியுடன் வண்டியில் நிலத்திற்கு வந்தாள்.
அங்கே சண்டை தீவிரமடைவதைப் பார்த்த அல்லிராணி, உரத்த குரலில் கத்தினாள்.
"நிறுத்துங்க எல்லாரும்! ஒரு நிமிஷம் கையை எடுங்க!"
கர்ப்பிணியான அவள் குரலில் இருந்த அதிகாரமும், அவளது நிலையும் அங்கிருந்தவர்களை ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க வைத்தது.
செந்தூரன் பதறிப்போய் அவளருகே ஓடினான். "அல்லி! நீ எதுக்கு இங்க வந்த? உனக்கு உடம்பு என்னாகும்?"அவளை அழைத்தான்.
அல்லிராணி கருணாகரனை நேராகப் பார்த்துப் பேசினாள். "கருணாகரன் அவர்களே... இந்த நிலத்துக்கான ஒரிஜினல் பத்திரம் உங்க அப்பாவால என் மாமனாருக்குக் கைமாற்றப்பட்டது கிடையாது.
இது எங்க தாத்தா காலத்துச் சொத்துன்னு உங்களுக்குத் தெரியும். நீங்க இப்போ பண்றது அராஜகம். நான் இப்போவே போலீஸ் கமிஷனருக்கு போன் பண்ணிட்டேன்.
அவங்க கிளம்பி வந்துட்டு இருக்காங்க. உங்களோட அரசியல் செல்வாக்கு இங்க செல்லாது."
அவள் கையில் இருந்த போனில் ஏற்கனவே ரெக்கார்டிங் ஓடிக்கொண்டிருந்தது.
கருணாகரன் பேசிய மிரட்டல்கள் அனைத்தும் அதில் பதிவாகியிருந்தது.
"பொம்பளப் புள்ளதானேன்னு பார்த்தா... ரொம்பத் துள்ளுற," என கருணாகரன் பல்லைக் கடித்தான்.
"பெண் நினைச்சா எதையும் சாதிப்பா. என் குடும்பத்தை அழிக்க நினைச்சா, நான் எதுக்குமே தயங்க மாட்டேன்," எனத் தீர்க்கமாகச் சொன்னாள் அல்லிராணி.
காவல்துறை அங்கு வந்ததும், தகுந்த ஆதாரங்கள் இல்லாததால் கருணாகரனை எச்சரித்து அனுப்பி வைத்தனர். தற்காலிகமாகப் பிரச்சனை ஓய்ந்தது போலத் தெரிந்தாலும், கருணாகரனின் கண்களில் வஞ்சம் குறையவில்லை.
அன்று மாலை வீட்டின் முற்றத்தில் அனைவரும் அமர்ந்திருந்தனர்.
"அல்லி... இன்னைக்கு நீ பண்ணது பெரிய காரியம். ஆனா இனிமே ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். கருணாகரன் காயம் பட்ட புலி மாதிரி காத்துட்டு இருப்பான்," என்றார் கதிரேசன் கவலையுடன்.
செந்தூரன் அல்லிராணியின் கைகளைப் பிடித்துக் கொண்டான். "என் பொண்டாட்டி இவ்வளவு தைரியசாலின்னு இன்னைக்குத்தான் தெரிஞ்சது. ஆனா இனிமே நீயும் பாப்பாவும் தான் எனக்கு முக்கியம். வெளிய எங்கும் தனியா போகாதே."
இளமாறன் பூங்கொடியைப் பார்த்து, "பயப்படாதே கொடி... உன் அண்ணன்களும், இந்த அத்தானும் இருக்கும் வரை உனக்கு ஒரு துரும்பும் படாது," எனத் தைரியம் கூறினான்.
அந்த இருளில், தூரத்தில் ஒரு கார் நின்றிருந்தது. அதில் இருந்த கருணாகரன், "இன்னைக்கு நீங்க ஜெயிச்சுட்டதா சந்தோஷப்பட்டுக்கோங்க. ஆனா அந்த வாரிசு மண்ணுல விழும்போது என் ஆட்டம் ஆரம்பமாகும்," என முணுமுணுத்துவிட்டுச் சென்றான்.
நாட்கள் உருண்டோடின. அல்லிராணிக்கு ஏழாம் மாதம் பிறந்தது. செந்தூரனின் குடும்பத்தினர் அனைவரும் அவளுக்கு வளைகாப்பு நடத்தத் தீர்மானித்தனர். ஊரே வியக்கும்படி மிக விமரிசையாக வளைகாப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.
வீடு முழுவதும் மாவிலை தோரணங்களாலும், பூச்சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பன்னீர் வாசனையும், சந்தன வாசனையும் காற்றோடு கலந்து வீசியது. அல்லிராணி பட்டுப் புடவை உடுத்தி, தலையில் மல்லிகைப்பூச் சூடி, தேவதையாய் அமர்ந்திருந்தாள்.
"ஏன் அல்லி... இன்னைக்கு உன் முகம் இன்னும் அதிகமா ஜொலிக்குது," என செந்தூரன் அவள் அருகே வந்து மெல்லிய குரலில் சொன்னான்.
"உங்க பாப்பா வரப்போற சந்தோஷம் அத்தான்," என அவள் சிரித்தபடி அவன் கையை மெல்ல அழுத்த, செந்தூரனின் கண்கள் கனிந்தன.
தனலட்சுமியும், முருகவள்ளியும் வந்து அல்லிராணியின் கைகளில் அடுக்கடுக்காக வளையல்களைப் போட்டனர். ஒவ்வொரு வளையல் சத்தமும் ஒரு மங்கல இசையாக அந்த அறையில் ஒலித்தது.
விருந்தினர்களுக்குப் பரிமாறும் வேலைகளை இளமாறனும், பொற்செழியனும், இளஞ்செழியனும் முன்னின்று கவனித்துக் கொண்டனர். பூங்கொடி அழகிய தாவணியில் வலம் வந்து கொண்டிருந்தாள். அவள் வேலை செய்யும் அழகையே ரசித்துக் கொண்டிருந்தான் இளமாறன்.
"என்ன தாய்மாமன் அவர்களே... பரிமாற வந்த இடத்துல யாரையோ பார்த்துட்டு அப்படியே நின்னுட்டீங்க?" என இளஞ்செழியன் இளமாறனைக் கிண்டல் செய்ய, இளமாறன் அசட்டுச் சிரிப்பு சிரித்தான்.
மெதுவாக பூங்கொடியின் அருகில் சென்ற இளமாறன், "இந்த வளைகாப்பு முடிஞ்ச உடனே, அடுத்த விசேஷம் நம்ம வீட்ல தான். அதுக்கும் இதே மாதிரி நீ அழகா ரெடியாகணும், ஆனா நீ தான் அங்க உட்கார்ந்திருக்கணும்," என ரகசியமாகச் சொன்னான்.
பூங்கொடி முகம் சிவந்து, "இப்போ எதுக்கு இதெல்லாம்... முன்னாடி போய் நில்லுங்க," எனச் சொல்லிவிட்டு ஓடினாள்.
மகிழ்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும், இளமாறன் விழிப்புடனேயே இருந்தான். வீட்டின் வெளிப்பகுதியில் பொற்செழியனும் இளஞ்செழியனும் ஆட்களைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, வளைகாப்பு உணவில் கலப்பதற்காக ஒரு அந்நிய நபர் சமையலறைப் பக்கம் நுழைய முயன்றான். கருணாகரன் அனுப்பிய ஆள் அவன். அல்லிராணியின் உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஏதோ ஒன்றை உணவில் கலப்பதே அவனது நோக்கம்.
சந்தேகமடைந்த பொற்செழியன் அவனை வழிமறித்தான். "யார் நீ? உன்னை இங்க பார்த்ததே இல்லையே?"
அந்த ஆள் பதற்றத்தில் தடுமாற, அவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு செந்தூரனிடம் வந்தான் பொற்செழியன். "அண்ணே... இவன் சமையலறைப் பக்கம் ஏதோ விஷமத்தனம் பண்ணப் பார்த்தான்." அருகில் இருந்த இளமாறனும் அவர்களுடன் வந்தான்.
செந்தூரனின் முகம் சட்டென்று மாறியது. கருணாகரன் சொன்ன 'வாரிசு மண்ணில் விழும்போது என் ஆட்டம் ஆரம்பமாகும்' என்ற வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்தன.
அந்த ஆளின் சட்டையைப் பிடித்து உலுக்கினான் செந்தூரன். "யார் அனுப்பினது உன்னை? உண்மையச் சொல்லு!"
"ஐயா... கருணாகரன் ஐயா தான் இதை அல்லிம்மா சாப்பாட்டுல கலக்கச் சொன்னாரு. இது கருச்சிதைவு ஏற்படுற மருந்து," என அவன் அழுதபடி சொல்ல, செந்தூரனின் கண்கள் நெருப்பாய் மாறின.
அதிர்ச்சியில் உறைந்து நின்ற கதிரேசனும் சுப்ரமணியும் அவனை முறைத்தனர். பூங்கொடியும், ஜெயராணியும் அல்லிராணியைச் சூழ்ந்து கொண்டனர்.
செந்தூரன் தன் தம்பிகளிடம் சொன்னான், "செழியா... இவனை போலீஸ்ல ஒப்படைங்க. பொற்செழியா நீ இங்க பாதுகாப்புக்கு இரு. நானும் இளமாறனும் அந்த கருணாகரனுக்கு ஒரு முடிவு பண்ணிட்டு வர்றோம்."
"வேணாம் அத்தான்... இன்னைக்கு ஒரு விசேஷ நாள். நீங்க போனா பிரச்சனை பெருசாகும்," என அல்லிராணி பயந்து போய் தடுத்தாள்.
செந்தூரன் அவள் அருகில் குனிந்து, "இல்ல அல்லி... இவன் என் குழந்தையைத் தொடப் பார்த்திருக்கான்.
ஒரு அப்பாவா அவனை நான் தண்டிக்கலன்னா எனக்குத் தூக்கமே வராது. ஆனா சண்டை போட மாட்டேன்... இனி அவன் உன் பக்கத்துல கூட வர முடியாத அளவுக்கு ஒரு வழி பண்ணிட்டு வர்றேன்," எனச் சொல்லிவிட்டுத் இளமாறனுடன் காரில் கிளம்பினான்.
கருணாகரனின் பங்களா அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதிக்கு பின்னால் ஒரு பெரிய சதித்திட்டம் தோற்ற ஆத்திரத்தில் அவன் மதுவருந்திக் கொண்டிருந்தான். அப்போது வீட்டின் முன் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.
செந்தூரனும் இளமாறனும் சிங்கமென இறங்கி உள்ளே நுழைந்தனர். கருணாகரனின் ஆட்கள் அவர்களைத் தடுக்க முயல, இளமாறன் தன் ஒற்றைக் கையாலேயே அவர்களைத் தள்ளிவிட்டு வழி ஏற்படுத்தினான்.
"கருணாகரன்! வெளியே வாடா!" செந்தூரனின் குரல் அந்த வீட்டின் சுவர்களில் மோதி எதிரொலித்தது.
நக்கலாகச் சிரித்துக்கொண்டே மாடியிலிருந்து கீழே வந்தான் கருணாகரன்.
"என்ன செந்தூரா? வளைகாப்பு முடிஞ்சுதா? என் ஆளு கொண்டு வந்த மருந்து வேலை செஞ்சதா இல்லையா?" இந்த வார்த்தையைக் கேட்டதும் செந்தூரனின் பொறுமை எல்லை கடந்தது. ஓடிச் சென்று கருணாகரனின் சட்டையைப் பிடித்து சுவரோடு சேர்த்தான்.
"ஏய்! நிலத்துக்காகப் போட்டி போடு, நேருக்கு நேர் மோது. ஆனா பிறக்காத ஒரு உயிரைப் பழிவாங்க நினைச்ச பாத்தியா... நீயெல்லாம் மனுஷனா?" எனக் கேட்டான் இளமாறன்.
கருணாகரன் திமிறினான். "பின்ன என்னடா? அந்த நிலத்தை வெச்சு என் கௌரவத்தையே காலி பண்ணிட்டீங்க. உன் வாரிசு மட்டும் உசத்தியா?"
அப்போது இளமாறன் முன்னால் வந்து, தன் கையில் இருந்த ஒரு கவரை டேபிள் மீது வீசினான். "இங்க பாருடா கருணாகரன்... நீ பண்ணின அத்தனை அராஜகத்துக்கும் இதுதான் முடிவு. அந்த ஆள் கொடுத்த வாக்குமூலம் வீடியோவா எங்ககிட்ட இருக்கு.
அதுமட்டும் இல்லாம, உன்னோட பெட்ரோல் பங்க் நிலம் அரசாங்கப் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சு கட்டினதுக்கான ஆதாரமும் இப்போ என்கிட்ட இருக்கு."
கருணாகரன் முகம் வெளுத்துப் போனது. "என்ன மிரட்டுறியா?"
"இல்ல, எச்சரிக்கிறோம்!" என்றான் இளமாறன் குரலை உயர்த்தி. "இப்போவே போலீஸ் கமிஷனர் ஆபீஸ்க்கு இந்த ஆதாரமெல்லாம் போகப்போகுது.
அடுத்த ஒரு மணி நேரத்துல நீ கம்பி எண்ணுவ. நிலமும் போயிடும், உன் பதவியும் போயிடும். இதிலிருந்து நீ தப்பிக்கணும்னா ஒரே ஒரு வழிதான்."
"என்ன வழி?" எனப் பதற்றத்துடன் கேட்டான் கருணாகரன்.
"இப்போவே உன் கையால, அந்த நிலம் பூரணமா எங்க குடும்பத்துக்கே சொந்தம்னு எழுதித் தரணும்.
ஊர் பஞ்சாயத்துல நீ செஞ்ச தப்பை ஒப்புக்கணும். இல்லன்னா, வளைகாப்பு முடிஞ்ச கையோடு உன் வீட்டு வாசல்ல போலீஸ் வண்டி நிக்கும்," எனத் தீர்க்கமாகச் சொன்னான் இளமாறன்.
தன் வாழ்நாள் முழுவதும் சேர்த்த சொத்துகளும் கௌரவமும் பறிபோகும் என்று உணர்ந்த கருணாகரன், வேறு வழியின்றிப் பணிந்தான். அவமானத்தால் தலைகுனிந்தபடி ஆவணங்களில் கையெழுத்திட்டான்.
Author: Vishakini
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: என்னைக் களவாட வந்தவளே - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.