என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 16

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN 22

Member
May 5, 2026
51
35
18
Tamilnadu
அடுத்த நாள் காலையில் தன்னுடைய கண்களைக் கசக்கிக் கொண்டே வேலையைப் பார்க்கத் தொடங்கி இருக்க,

”என்னாச்சுங்க? நீங்க ஏன் உங்க கண்ணைப் போட்டு இப்படி கசக்கிட்டு இருக்கீங்க? தூசி எதுவும் விழுந்துருச்சா?”என மனைவியிடம் அக்கறையாக வினவினான் சம்யுக்தன்.

அவனது கரிசனையில் கண்ணீர் கரித்துக் கொண்டு வந்திருந்தாலும் கூட,”இல்லைங்க. நைட் சரியாகத் தூங்கலை. அதான்”என்றுரைக்க,

“இதுக்குத் தான் உங்க வீட்டுக்குப் போக வேண்டாம்னு சொன்னேன். அவங்க ஏதோ சொல்லி உங்க மனசைக் குழப்பி விட்டுட்டாங்க. அதனால் தான் நைட் முழுக்க எதையோ நினைச்சுத் தூங்காமல் இருந்து இருக்கீங்க”என்று கூறியவனிடம்,

“போதும்! கொஞ்சம் நிறுத்துறீங்களா? என்ன விட்டா ரொம்ப ஓவராகப் பேசிட்டுப் போறீங்க! அவங்க என்னோட அப்பா, அம்மா! உங்களுக்கு மாமனார், மாமியார்! அது உங்களுக்கு ஞாபகம் இருக்கா முதல்ல? உங்க வாய்க்கு வந்தபடி அவங்களைப் பேசுறீங்க!”என்று அவனிடம் பொரிந்து தள்ளி விட்டிருந்தாள் வசுமதி.

அதைக் கேட்டு அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான் சம்யுக்தன்.

அவனைப் போலவே, ஜெயராம், கலாவதி மற்றும் பிரதீபனும் கூடத் திடுக்கிட்டுப் போயினர்.

“நான் எந்த தப்பான நோக்கத்திலும் சொல்லலைங்க! உங்க மேலே இருந்த அக்கறையால் தான்”என்றவனைக் கையை உயர்த்தி தடுத்து,

“இப்படியே அக்கறைன்னுச் சொல்லிச், சொல்லித் தான் எங்கப்பா, அம்மா மேலே எனக்கு வெறுப்பை உண்டாக்கப் பார்க்கிறீங்கன்னு எனக்குத் தோணுது? உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? என் மேல் அக்கறை இருந்தால் என்னைச் சந்தோஷமாக வச்சுக்கனும். அதை விட்டுட்டு எங்கப்பா, அம்மாவைக் குறைச் சொல்லக் கூடாது! எந்தப் பெத்தவங்களாவது அவங்கப் பொண்ணுக்குக் கெட்டது சொல்லித் தருவாங்களா? நீங்க ஏன் அவங்களையே எல்லாத்துக்கும் குற்றம் சொல்லிட்டு இருக்கீங்க? இனிமேல் அவங்களை ஏதாவது சொன்னீங்கன்னா நான் உங்களையும், இந்த வீட்டையும் விட்டுட்டுப் போயிடுவேன்!”என்று அவனுக்கு அழுத்தமாக வலியுறுத்தி விட்டு அறைக்குச் சென்று விட்டாள் வசுமதி.

அவளிடம் மன்னிப்புக் கேட்கக் கூட மறந்து அவமானத்தில் முகம் சுருங்க மதிய உணவை எடுக்காமலேயே வீட்டிலிருந்து கிளம்பி வேலைக்குச் சென்று விட்டான் சம்யுக்தன்.

ஆனால், தன் முகத்தில் எப்போதும் சாந்தம் மிளிர, அதிர்ந்து பேசாத பெண்ணவள் இப்போது தனது குரலை உயர்த்திப் பேசியதைக் கண்டு அதிர்ந்தாலும், அவளது வார்த்தைகளில் இருந்த நிதர்சனம் மற்றும் நியாயத்தையும் புரிந்து கொண்டார்கள் வசுமதியின் புகுந்த வீட்டினர்.

தங்கள் மகன் வேலை முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்ததும் அவனைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம், இப்போது வீட்டிலிருக்கும் மருமகளை ஆசுவாசப்படுத்தலாம் என்று முடிவெடுத்தார்கள் ஜெயராம் மற்றும் கலாவதி.

“அண்ணா லன்ச் பாக்ஸை இங்கேயே மறந்து வச்சிட்டுப் போயிட்டார்!”என்ற பிரதீபனிடம்,

“ப்ச்! இவனை வச்சிட்டு என்னப் பண்றதுன்னுத் தெரியலை”என மூத்த மகனின் செயலை எண்ணி நொந்து போனார்கள் இருவரும்.

“அண்ணிக்கு இவ்வளவு கோபம் வரும்னு நான் இப்போ தான் முதல் முறையாகப் பார்க்கிறேன்!”என்று அவர்களிடம் வியப்புடன் கூறினான்.

“நாங்களும் அதே மனநிலையில் தான் இருக்கோம். உனக்குக் காலேஜூக்கு நேரமாச்சு. நீ கிளம்பு. நாங்க ரெண்டு பேரும் உங்க அண்ணியையும், அண்ணனையும் சமாதானம் பண்ணிக்கிறோம்”என்றுரைத்து அவனைக் கல்லூரிக்கு அனுப்பி வைத்து விட்டுத் தங்களது மருமகளின் அனுமதியுடன் அவளது அறைக்குள் நுழைந்தவர்களை மிகவும் தர்ம சங்கடத்துடன் பார்த்தாள் வசுமதி.

அதை அறிந்ததும், அவளது அருகில் அமர்ந்து, அவளின் கரத்தை தனது கரங்களுக்குள் வைத்துக் கொண்டு,”நீ பேசியதில் எதுவுமே தப்பு இல்லைம்மா. அதனால் நீ சங்கடப்பட வேண்டிய அவசியமே இல்லை!”என அவளிடம் கனிவாக மொழிந்தார் கலாவதி.

அதில் அவளுக்குக் கண்ணீர் வரத் தொடங்கி விட்டது.

“என்னைப் புரிஞ்சிக்கிட்டதுக்கு ரொம்ப நன்றித்தை, நன்றி மாமா. நான் அவர் கிட்ட ரொம்ப கோபமாகப் பேசிட்டேன். அதுக்கு என்னை மன்னிச்சிருங்க!”என்றாள் வசுமதி.

“பரவாயில்லைம்மா. தன்னோட பெத்தவங்களை அவமதிப்பாகப் பேசுவதை யாராக இருந்தாலும் ஏத்துக்க மாட்டாங்க! நாங்க அவனைக் கண்டிச்சு வைக்கிறோம்! நீ வருத்தப்படாதே”என்று அவளிடம் ஆதூரமாக கூறினார் ஜெயராம்.

அதைக் கேட்டவளோ நெகிழ்ந்து போய் அவர்களிடம் தன் தயக்கத்தை உதறி நன்றாகப் பேசவும்,

தாங்களும் அவளிடம் சில, பல ஆறுதல் வார்த்தைகளைப் பேசி விட்டு அறையிலிருந்து வெளியேறினர்.

அதே நேரத்தில் தனது கல்லூரியில் உணவு இடைவேளையின் போது சிற்றுண்டிச் சாலையில் அமர்ந்து அங்கே வாங்கியிருந்த உணவை உண்டு கொண்டிருந்தான் சம்யுக்தன்.

அவனது முகம் வெகுவாக இறுக்கத்தை தத்தெடுத்து இருந்தது.

அப்போது தனது செல்பேசி ஒலிப்பதைக் கேட்டதும், அதை எடுத்துப் பார்க்க, அவனது அன்னை தான் அழைத்து இருந்தார்.

உடனே அழைப்பை ஏற்றுக் காதில் வைக்க,”ஹலோ சம்யு! லன்ச் பாக்ஸை வீட்டிலேயே வச்சிட்டுப் போயிட்ட தானே. ஏன்டா இப்படி பண்ற? சாப்பிட்டியா? இல்லையா?”என்று அவனிடம் ஆதங்கத்துடன் கேட்டார் கலாவதி.

“சாப்பிட்டுட்டு இருக்கேன்ம்மா”என்றான் அழுத்தமாக.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை! காலையில் உன்னை வசு கத்தினதை நினைச்சுக் கோபத்தில் இருக்கியா?”என்று வருத்தத்துடன் வினவ,

“நான் யார் மேலேயும் கோபத்தில் இல்லம்மா”என மொழிந்தான் சம்யுக்தன்.

“அழுத்தக்காரன்”என்று முணுமுணுத்து விட்டு,

“அவ பேசின எதையும் மனசில் வச்சுக்காதே! அவ ரொம்ப ஃபீல் பண்ணி உன்னை அப்படிக் கத்தினதுக்காக எங்க கிட்ட மன்னிப்புக் கேட்டாள். அதனால் நீ சாயந்தரம் வீட்டுக்கு வந்ததுக்கு அப்பறமும் அவ மேலே கோபப்படாமல் இயல்பாகப் பேசு!”என்று மகனுக்கு புத்திமதி உரைத்து விட்டு அழைப்பை வைத்தார் கலாவதி.

அவரது சொற்களைக் கேட்ட பின்னர் அவனுமே தனது தவறை உணர்ந்து விட்டு மாலையில் வீட்டிற்குச் சென்றதும் முதல் வேலையாக மனைவியிடம் மன்னிப்புக் கேட்டு விட்டான் சம்யுக்தன்.

அதில் தனது கோபம் எல்லாம் மாயமாய் மறைந்து விடவும்,”அச்சோ! இருக்கட்டும்ங்க! சாரி எல்லாம் கேட்காதீங்க. நானும் உங்களை ரொம்ப ஹர்ட் பண்ணிப் பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்க”எனத் தானும் அவனிடம் மன்னிப்புக் கோரினாள் வசுமதி.

“பரவாயில்லைங்க”எனச் சிறு புன்னகையுடன் கூற,

அதற்குப் பிறகு அவர்கள் தங்களின் சண்டைகளை மறந்து பழையபடி நன்றாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.

அதை அவதானித்த சம்யுக்தனின் குடும்பத்தாரும் தங்களது சஞ்சலத்தைக் கைவிட்டு விட்டனர்.

அடுத்து வந்த நாட்களில், வசுமதியை அவளது பெற்றோரிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தும் வேலையை அடியோடு நிறுத்தி விட்டிருந்தான் சம்யுக்தன்.

ஏனெனில் மனைவிக்குப் பிடிக்காததைச் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

அதனாலேயே அவளுக்கு எந்த அறிவுரையும் கூறவில்லை அவன்.

அடுத்து வந்த அவனது அனைத்து நற்பண்புகளையும் கண்டு மிகவும் ரசித்தாள் வசுமதி.

ஆனால், அவளால் தன் ஆருயிர்க் கணவனுடன் உடலளவில் சேரவே முடியவில்லை என்பதை எண்ணி, எண்ணி மனம் வெதும்பிப் போய்ப் பித்துப் பிடித்ததைப் போன்று உலவிக் கொண்டிருந்தாள்.

தங்களது மகனும், மருமகளும் இன்னும் உடலளவில் இணையவில்லை என்பதை அறியாத கலாவதியோ, தனது மருமகளுக்கு ஏதோ உடல்நலம் சரியில்லை என்று தவறாகப் புரிந்து கொண்டு,

“உனக்கு என்னாச்சு வசு? நீ வர, வர மெலிஞ்சிக்கிட்டே போறியே! எனக்கு உன்னை நினைச்சா ரொம்ப கவலையாக இருக்கு! உனக்கு எந்தப் பிரச்சினை இருந்தாலும் எங்கிட்ட சொல்லு வசு”என்றவரைப் பாவமாகப் பார்த்து,

“எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லத்தை”என்றாள் வசுமதி.

“அப்போ நீ உங்கப்பா, அம்மாவைப் பார்த்து ரொம்ப நாளாகுதுல்ல? என்ன தான், என் பையன் கிட்டே நீ எப்படி கோபமாகப் பேசி இருந்தாலும் கூட அவங்களைப் பார்க்கனும்னு ஒரு தடவை கூடக் கேட்கவே இல்லை. நாளைக்கு உன் புருஷனுக்கு லீவ் தான். அதனால் நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வர்றீங்களா?”என்றதுமே,

அவளுக்கு ஒரு யோசனை தோன்றி விட்டிருக்க,”சரிங்கத்தை. ஆனால் அவர் என்னை அங்கே விட்டுட்டு வந்துரட்டும். நான் அங்கே ஒரு நாள் மட்டும் தங்கிட்டு வர்றேன்”என்றுரைக்க,

அதை அப்படியே தனது வீட்டாரிடம் பகிர்ந்து கொண்டவரோ, தன் மகனையும் தனியாக அழைத்து,”வசு அவளோட பெத்தவங்க வீட்டில் எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்கிட்டு வரட்டும். அதைப் பத்தி நீ அவகிட்ட எதுவும் கேட்க கூடாது”என அறிவுறுத்தி அவனுடன் மருமகளை அவளது வீட்டிற்கு அனுப்பி வைத்தார் கலாவதி.

ஆனால் அந்தப் பயணம் தான் அவளது வாழ்நாளின் இறுதிப் பயணமாக இருக்கப் போவதை அறியாமல் தனது கணவனுடன் தனது பிறந்தகத்திற்கு வந்து சேர்ந்திருந்தாள் வசுமதி.

- தொடரும்
 
Last edited by a moderator:

Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 16
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.