என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN 22

Member
May 5, 2026
51
35
18
Tamilnadu
தங்கள் வீட்டிற்கு வந்திருந்த தங்களது மகள் மற்றும் மருமகளை மிகவும் மகிழ்ச்சியாக வரவேற்று உபசரித்தார்கள் விஜயன் மற்றும் கண்மணி.

அவர்களது வருகைத் தங்களுக்கு ஆனந்தத்தை தருவித்து இருந்தாலும் கூடத் தங்களது மகளின் பொலிவிழந்த முகத்தைக் காணத் தவறவில்லை அவர்கள்.

ஆனாலும் மருமகனை வைத்துக் கொண்டு அவளிடம் அதைப் பற்றிக் கேட்க முடியாது என்றெண்ணிப் பொதுவான விஷயங்களைப் பேசினர் வசுமதியின் பெற்றோர்.

சிறிது நேரம் கழிந்த பின்னர்,”சரிங்க அத்தை, மாமா! எனக்குப் பேப்பர் கரெக்ஷன் பண்ற வேலையும், அடுத்த மாசத்துக்கானப் பாடத் திட்டத்தை டிசைன் பண்ற வேலையும் இருக்கு. அதனால் நான் இப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன். இன்னொரு நாள் இங்கே வர்றப்போ தங்கிட்டுப் போற மாதிரி பார்த்துட்டு வர்றேன்”என்று தன் மாமனார் மற்றும் மாமியாரிடம் சொல்லி விட்டு,

“ஓகே வசு. நான் கிளம்புறேன்”என்று தன் மனைவியிடம் கூறினான் சம்யுக்தன்.

”சரிங்க. நீங்கப் பார்த்துப் பத்திரமாக வண்டியை ஓட்டிட்டுப் போங்க”என்று கூறிப் புன்னகை முகமாகவே அவனை வழியனுப்பி வைத்தாள் வசுமதி.

அவன் சென்றவுடனேயே,”நீ ஏன் டி இப்படி முகம் வாடிப் போய்ப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிற? இதுக்காகவா நாங்க உன்னை அவங்க வீட்டுக்கு மருமகளாக அனுப்பி வச்சோம்? என்னடி இதெல்லாம்? நீ மாப்பிள்ளைக் கூடச் சந்தோஷமாக இருக்கியா? இல்லையா?”என மகளிடம் ஆதங்கத்துடன் வினவினார் கண்மணி.

அதற்கு ஒரு விரக்திச் சிரிப்பை உதிர்த்து,”ம்ஹூம். இல்லைம்மா. ஆனால் அவர் என்னைச் சந்தோஷமாகத் தான் பார்த்துக்கிறார்! என்னை நல்லபடியாக நடத்துறார்! அதே மாதிரி என்னோட புகுந்த வீட்டாளுங்களும் எனக்கு எந்தக் குறையும் வைக்கிறது இல்லை! ஆனாலும் என்னால் அவர் கூடச் சந்தோஷமாக, இணக்கமாக வாழ முடியலைம்மா!”என்று சொல்லிக் கால்கள் மடிந்து தரையில் அமர்ந்து கதறி அழத் தொடங்கி விட்டிருந்தாள்.

அதைக் கேட்டதும் தாங்கள் ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள் அவளது பெற்றோர்.

மகளின் அழுகை இன்னும் நின்றபாடில்லை என்பதை அவதானித்து, துரிதமாக செயல்பட்டு,

“வசு! நீ என்னம்மா சொல்ற? உன் அழுகையை நிறுத்திட்டு இங்கே அம்மாவைப் பாரு!”என்று அவளது கன்னம் தட்டித் தன்னைப் பார்க்க வைக்க முயன்றார் கண்மணி.

ஆனால் அவரது குரலுக்கும், செயலுக்கும் அசைந்து கொடுக்காமல், தொடர்ந்து பெருங்குரலெடுத்து அழுது கரைந்து கொண்டிருந்தாள் வசுமதி.

அவளது கதறல் சத்தத்தைக் கேட்டு அக்கம், பக்கத்தில் இருப்பவர்கள் தங்களிடம் வந்து என்னவென்று விசாரிக்க வாய்ப்புண்டு என்பதைச் சிந்தித்து உடனே செயல்பட்டுத் தங்கள் வீட்டின் கதவுகளை மூடித் தாழ்ப்பாள் போட்டு விட்டு வந்து,

“ஏன்ம்மா? உனக்கு என்ன தான் ஆச்சு? எதனால் உன்னால் மாப்பிள்ளைக் கூட இணக்கமாக இருக்க முடியலை? எது உன்னைத் தடுத்துட்டு இருக்கு? அதுக்கு என்னக் காரணம்?”என்று அவளிடம் மன்றாடிக் கேட்டார் விஜயன்.

“நீங்க எனக்குச் சொல்லிக் கொடுத்து நடிக்க வச்சது தான் எல்லாத்துக்கும் காரணம்ப்பா!”எனக் கூச்சலிட்டாள் வசுமதி.

அதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்து போயினர் அவளது தாயும், தந்தையும்.

”நீங்க சம்யுக்தனோட குணாதிசயம் மாதிரியே என்னோடதும் இருக்குன்னு அவர்கிட்டேயும், அவரோட வீட்டாளுங்க கிட்டேயும் சொல்லி என்னை நடிக்கச் சொன்னீங்கள்ல? அது தான் என்னோட இந்த நிலைமைக்கு முக்கியமான காரணம்! ஏன்னா, நான் அவர் மாதிரி நடிச்சு, நடிச்சு என்னால் என்னோட இயல்பான குணத்தை வெளியே காட்டிக்கவே முடியாமல் உள்ளேயே மறைச்சு வச்சு என்னோட சுயத்தை இழந்து அந்த வீட்டில் நடமாடிக்கிட்டு இருக்கேன்! அதனாலேயே என்னால் அவர்கிட்ட எந்த விஷயத்திலும் உண்மையாக நடந்துக்க முடியலை! அவர் மேல் நான் வச்சிருக்கிற காதலை வெளிப்படுத்தனும்னு நினைக்கும் போது எல்லாம் என்னால் அதைச் செய்யவே முடியலை! நான் எவ்வளவோ முயற்சி செஞ்சிப் பார்த்துட்டேன்! உங்ககிட்ட வெட்கத்தை விட்டுச் சொல்றேன்! என்னால் அவரை ஆசையாக, காதலாகத் தொடக் கூட முடியலை!”என்றவளால் அதற்கு மேலும் எதையும் அடக்கி வைக்க முடியாமல் பைத்தியம் பிடித்தவளைப் போல் அந்த வீடே அதிரும் அளவிற்குக் கத்தினாள் வசுமதி.

அவளது அலறல் ஓலத்தைக் கேட்ட பெற்றோருக்கு ஈரக்குலையே நடுங்கிப் போய் விட்டது என்றால், அவள் கூறிய விஷயங்கள் யாவும் அவர்களை மொத்தமாக நிலைகுலையச் செய்து விட்டிருந்தது எனலாம்!

தாங்களும் இடிந்து போய்த் தரையில் உட்கார்ந்து விட்டார்கள் விஜயன் மற்றும் கண்மணி.

“இந்தக் கல்யாணத்துக்கு முன்னாடி நான் கொஞ்சம் பணம் சம்பாதிச்சி இருந்தாலும் கூட என்னோட சுயத்தை இழக்காமல், எனக்குப் பிடிச்சதைப் பேசிட்டுச், பிடிச்ச விஷயங்களைச் செஞ்சிட்டுக் கொஞ்ச, நஞ்ச நிம்மதியோட வாழ்ந்துட்டு இருந்தேன்! ஆனால் இப்போ எல்லாத்துக்கும் நடிக்க வேண்டியாதாக இருக்கு! நான் என்னோட சுயத்தையே, இயல்பையே மறந்துட்டு உயிர் இருந்தும் பொணம் மாதிரி அந்த வீட்டில் வளைய வந்துட்டு இருக்கேன்! அவங்க எல்லாரும் எங்கிட்ட’நீ ஏன் இப்படி மெலிஞ்சிப் போயிருக்கிற? நீ நைட் சரியாகத் தூங்குறது இல்லையா?’ அப்படின்னு எல்லாம் அப்பப்போ கேட்கும் போது உண்மையைச் சொல்லிடலாம்ன்னுக் கூட யோசிச்சு இருக்கேன்! ஆனால் அதைக் கூடச் சொல்லத் தைரியம் இல்லாமல் சுத்திட்டு இருக்கேன்! என் புருஷன் கூட இப்போவெல்லாம் எங்கிட்ட நார்மலாக நடந்துக்கிறார்! அதே மாதிரி, ஏன் இன்னும் குழந்தைப் பெத்துக்காம இருக்கீங்கன்னு ஒரு வார்த்தை அத்தையும், மாமாவும் எங்கிட்ட இப்போ வரைக்கும் கேட்டதே இல்லை! அதை வேற யாரையும் எங்கிட்ட கேட்க விட்டதும் இல்லை! இப்படியெல்லாம் பாசமாக இருக்கிறவங்க கூட என்னால் உண்மையாக வாழ முடியலையேன்னு எனக்கு ரொம்பக் குற்ற உணர்ச்சியாக இருக்கு! அதனாலேயே என்னால் அங்கே இருக்க முடியலை! அதனால் தான் இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும்! தீர்வு தெரிஞ்சாகனும்னு உங்களைப் பார்த்து எல்லாத்தையும் சொல்லித் தீர்வுக் கேட்டுட்டுப் போக வந்திருக்கேன்! எனக்கு இதுக்கு ஒரு தீர்வைக் கண்டுபிடிச்சு சொல்லுங்க! நான் அவர் கூட ரொம்ப வருஷம் சந்தோஷமாக வாழனும்னு ஆசைப்பட்றேன்!”என்று அவர்களிடம் இறைஞ்சினாள் வசுமதி.

தனது உள்ளக் குமுறல்கள் அனைத்தையும் இப்போது வெடித்து வெளியேற்றி விட்ட நிம்மதியில் பயங்கர அழுத்தத்தின் பிடியில் இருந்ததால் அடுத்த நிமிடமே தன் கண்கள் சொருக மயக்கம் போட்டு விழுந்து விடவும்,

உடனே அவளைத் தாங்கிப் பிடித்து முகத்தில் தண்ணீரை அடித்து அவளைக் கண் விழிக்கச் செய்ய முயன்றனர் அவளது பெற்றோர்.

அவர்களது முயற்சிக்குப் பலனளிக்கும் வகையில் தனது இமைகளை மெல்லத் திறந்திருந்தாள் வசுமதி.

உடனே,”வசு! எங்களைப் பாரும்மா! உனக்கு எதுவும் ஆகலை தானே? உன்னை இப்படி பார்க்க எங்க உடம்பு எல்லாம் பதறுதுடி!”எனத் தங்கள் மகளின் நிலையைக் கண்டுத் தலையிலடித்துக் கொண்டு அழுதார் கண்மணி.

“நீயும் என்னம்மா இவ கூடச் சேர்ந்து அழுதுகிட்டு இருக்கிற? எனக்கு நெஞ்சு வலியே வந்துடும் போலிருக்கு! முதல்ல இவளுக்குக் குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடு”என்று அவருக்கு அறிவுறுத்தினார் விஜயன்.

“சரிங்க. இவளை முதல்லக் கைத்தாங்கலாகப் பிடிச்சு எழுப்பி அழைச்சிட்டுப் போய்க் கட்டிலில் உட்கார வைக்கலாம். வாங்க”என அவரிடம் சொல்லவும்,

உடனே தானும் மனைவியுடன் சேர்ந்து மகளைக் கைத்தாங்கலாகப் பிடித்து எழுப்பி அவளைக் கொஞ்சம், கொஞ்சமாக அடியெடுத்து வைத்து நடக்கச் செய்துக் கட்டிலில் அமர்த்தி விட்டு,

“நான் இவளைப் பார்த்துக்கிறேன். நீ எலுமிச்சம்பழம் ஜூஸ் போட்டு எடுத்துட்டு வா”என்று கூறிக் கண்மணியை அனுப்பி வைத்தார் விஜயன்.

கட்டிலின் மெத்தையில் அரை மயக்கத்தில் இருந்த மகளைப் பார்க்கையில் தனது கண்ணிலிருந்து உதிரம் வழிவதைப் போன்றதொரு வலியை உணர்ந்தவரோ,

“நாங்க தப்புபப் பண்ணிட்டோம் வசு! உனக்குப் பணக்கார வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்கனும்னு நினைச்சோம்! ஆனால் அதனால் நீ உன்னையே இழந்துடுவேன்னு நினைச்சுப் பார்க்காமல் விட்டுட்டோம்! நாங்க செஞ்ச தப்பை நாங்களே சரி பண்ண முயற்சி செய்றோம்மா! உனக்கு அந்தப் பையன் வேண்டாம்! டிவோர்ஸூக்கு அப்ளைப் பண்ணிடலாம்!”என்று தனது கசங்கிய முகத்துடன், தழுதழுத்தக் குரலுடன் சொல்ல,

அதைக் கேட்டதும் அந்த அரை மயக்கத்திலும் கூட,”எனக்கு டிவோர்ஸ் வேண்டாம்ப்பா! நான் அவர் கூடத் தான் வாழ ஆசைப்பட்றேன்! நான் அவரை விட்டு எப்பவும் பிரிய மாட்டேன்!”எனப் பிதற்றத் தொடங்கி விட்டாள் வசுமதி.

அவளது பிதற்றலைக் கேட்ட வண்ணம் அங்கு வந்து சேர்ந்திருந்த கண்மணியோ,”இவ என்னங்க இப்படி சொல்லிட்டு இருக்கிறாள்? இதுக்கு மேலேயும் இவளை அந்தப் பையன் கூடவும், அவன் வீட்டாளுங்க கூடவும் எப்படி இருக்க வைக்கிறது? இதுக்கப்பறம் அதை என்னால் நினைச்சுக் கூடப் பார்க்க முடியாது! அதனால் இவ சொல்றதை எல்லாம் காதில் வாங்கிக்காமல் டிவோர்ஸ் வாங்கிறதுக்கு ஒரு நல்ல வக்கீலைத் தேடுங்க!”என்று கணவரிடம் கூறிக் கொண்டு இருக்கும் போதே,

வசுமதிக்கு எங்கேயிருந்து தான் அந்த நேரத்தில் அவ்வளவு பலம் வந்ததோ அவரது கரத்திலிருந்த தம்ளரைத் தட்டி விட்டிருந்தாள்!

அதில் அவர்கள் இருவரும் திகைத்துப் போய் மகளைப் பார்க்கவும்,

அவளோ,“என்ன சொன்னீங்க? நான் சொல்ற எதையும் காதில் வாங்கிக்கக் கூடாதா? நீங்க சொல்றதை மட்டும் தான் நான் கேட்டு நடக்கனுமா? அப்படி நடந்து தான் இப்போ இப்படி பைத்தியக்காரி மாதிரி உங்க கிட்ட வந்து புலம்பிட்டு இருக்கேன்! இப்பவும் உங்களுக்குப் புத்தி வரலையா? அப்போ எப்போ தான் வரும்? இப்போதாவது என் வாழ்க்கைக்கான முடிவுகளை என்னை எடுக்க விடுங்களேன்! என் பேச்சு எதையும் கேட்காமல் எல்லாத்தையும் நீங்களே முடிவு செஞ்சி என்னை அது படி நடக்க வைக்கிறதில் உங்களுக்கு அப்படி என்ன சந்தோஷம்? சொல்லுங்க!”என்று தன் பெற்றோரிடம் சரமாரியாக கேள்விக் கணைகளைத் தொடுத்தாள்.

அவளது அந்த ஆங்கார அவதாரத்தைப் பார்த்த விஜயனும், கண்மணியும் பிரம்மைப் பிடித்ததைப் போன்ற நிலைக்கு உள்ளாகி விட்டு இருந்தனர்.

“வசு”என்ற தாயின் அழைப்பைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்,”இனிமேல் எனக்கும், என் புருஷனுக்கும் விவாகரத்து வாங்கித் தர்றதைப் பத்தி நினைச்சுப் பார்ப்பீங்களா?”என்று அவர்களிடம் அழுத்தமாக வினவினாள் மகள்.

அதில் மென்மேலும் அதிர்ச்சிப் பரவித் தங்களது முகங்கள் இரண்டும் வெளிறிப் போய் விடச் செய்வதறியாது, தங்களது கையாலாகாத தனத்தை எண்ணி நொந்து போய் அவளுக்குப் பதில் சொல்லத் திராணியில்லாமல் நின்றிருந்தார்கள் விஜயன் மற்றும் கண்மணி.

- தொடரும்
 
Last edited by a moderator:

Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.