என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 18

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN 22

Member
May 5, 2026
51
35
18
Tamilnadu
அவர்கள் தனக்குப் பதிலளிக்காமல் இருப்பதைக் கண்டு,”நான் கேட்கிறேன்ல? பதில் சொல்லுங்க!”எனத் தன் பெற்றோரிடம் ஆங்காரமாக வினவினாள் வசுமதி.

உடனே தங்களைத் திகைப்பில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டு,”ஹாங்! நாங்க இனிமேல் இந்த விவாகரத்தைப் பத்திப் பேச மாட்டோம் வசு! நீ முதல்ல ஏதாவது குடி!”என்று அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் கண்மணி.

“சரிம்மா. இப்போ லெமன் ஜூஸ் கொண்டு வாங்க”என அவரிடம் ஏவலாக கூறி விட்டுக் கட்டிலில் சாவகாசமாக அமர்ந்து கொண்ட மகளைத் திகிலுடன் பார்த்து விட்டு அடுக்களைக்குச் சென்றார்.

அவரைப் போலவே தனக்கும் மகளின் இந்த அவதாரம் திகைப்பைக் கொடுத்திருக்க,”நீ ஏன்ம்மா இப்படியெல்லாம் நடந்துக்கிற? எங்களுக்கு உன்னைப் பார்த்தால் பயமாக இருக்கு. எதுவாக இருந்தாலும் கத்தாமல் அமைதியாக பேசு வசு”என்று அவளுக்குச் சற்றுத் தள்ளி அமர்ந்து கொண்டு மெல்லிய குரலில் அறிவுரை வழங்கினார் விஜயன்.

உடனே புன்னகையுடன்,”நான் என்றைக்காவது உங்க கிட்ட இப்படி குரலை உயர்த்திச் சத்தமாகப் பேசி இருக்கேனாப்பா? நீங்க சொன்னதுக்கு எல்லாம் சரி, சரின்னு தானே கேட்டு இருக்கேன்! ஆனால் நீங்க ரெண்டு பேரும் மட்டும் நான் சொல்வதை ஏன் புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க? நான் தான் தெளிவாகச் சொல்றேனே! அப்பறமும் நீங்க டிவோர்ஸ், அது, இதுன்னுப் பேசினால் எனக்கு எப்படி இருக்கும் சொல்லுங்க? அதான் நானும் கத்திப் பேச வேண்டியதாகப் போச்சு! இல்லைன்னா நானும் அமைதியாகத் தான் இருந்து இருப்பேன்!”என்று தந்தையிடம் விளக்கினாள் வசுமதி.

அதே சமயம் தனது கையில் எலுமிச்சம்பழச் சாறு நிறைந்த தம்ளரை எடுத்துக் கொண்டு அங்கு வந்து சேர்ந்திருந்தார் கண்மணி.

“அதைக் கொடுங்கம்மா. எனக்கு ரொம்ப தாகமாக இருக்கு. பசிக்க வேற செய்யுது. சீக்கிரம் சமைங்க. நான் சாப்பிட்டுத் தூங்கனும்”என்றவளோ,

அந்தப் பழச்சாறைப் பருகத் தொடங்கி விட்டாள் வசுமதி.

அவளது செயலை அமைதியாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் அவளது பெற்றோர்.

பழச்சாறு முழுவதையும் பருகி முடித்து விட்டுத் தம்ளரைத் தன் தாயிடம் கொடுத்தவளோ,

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? என் வீட்டுக்காரர் உங்க ரெண்டு பேரையும் என்கிட்டே குறை சொல்லிப் பேசினார்”என்று அவர்களது அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளாதே, அவர்களைப் பார்க்கச் சொல்லாதே! அவர்களால் தான் உனக்கு இப்படித் தலைவலி வருகிறது எனக் கூறியதையும், அதற்காகத் தனது புகுந்த வீட்டார் அனைவரின் முன்னிலையிலும் அவனைக் கடிந்து கொண்டதையும் அவர்களிடம் விவரித்து முடித்தாள் வசுமதி.

அதைக் கேட்ட விஜயனும், கண்மணியும் தங்களது மகள் தங்களுக்காக அவளது கணவணிடமே சண்டை பிடித்துள்ளாள் என்பதை எண்ணிக் கொஞ்சமாக மனம் மகிழ்ந்து போயினர்.

“அப்படியா வசு? நீ எங்களுக்காக உன் புருஷனையே எடுத்தெறிஞ்சுப் பேசினியா?”எனக் கேட்டார் தந்தை.

“ஆமாப்பா. நான் உங்களைப் பத்தின கவலையே இல்லாமல் இருக்கேன்னு நினைச்சு ஃபீல் பண்ணீங்க தானே? ஆனால் உங்களுக்காக நான் அவரையே எடுத்தெறிஞ்சுப் பேசிட்டேன் பார்த்தீங்களா?”என்று பெருமையுடன் கூறினாள் வசுமதி.

“ம்ஹ்ம். அப்போ மாப்பிள்ளைக்கு எங்க மேலே நல்ல அபிப்பிராயம் இல்லையாம்மா?”எனக் குற்றக் குறுகுறுப்புடன் வினவினார் விஜயன்.

அதில் உடனே தலையை உயர்த்தி,”அப்படியெல்லாம் இல்லம்மா. நீங்க எனக்கு அட்வைஸ் பண்றது அவருக்குப் பிடிக்கலை. அதனால் எனக்கு ரொம்ப மன அழுத்தம் வருது, தலைவலி வருதுன்னு அவர் ஃபீல் பண்றார்! அதான்! வேற ஒன்னும் இல்லை!”என்றவளிடம்,

“அப்படின்னா சரிம்மா. நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக இருக்கீங்களா?”என இலைமறை காயாக விஷயத்தைக் கேட்டுத் தெரிந்து கொள்ள விழைந்தார் கண்மணி.

அதைக் கேட்டதும் அவளது கரங்கள் நடுங்கத் தொடங்கி இருந்தது.

ஏனெனில் அவளது மனதிற்குள் சமீபமாக இருந்து கொண்டு அவளைத் தலைவலிக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாக்கிக் கொண்டும், அவளைப் பயமுறுத்திக் கொண்டும் இருக்கும் ஒரே விஷயம் அது தானே?

அதையே தனது தாய் தன்னிடம் கேட்டு விட்டதை அவதானித்து, அதற்குப் பதிலளிக்க முடியாமல் கண்களில் நீர் நிறைந்துப் போயிற்று வசுமதிக்கு.

அதைக் கண்டதும் அவள் சற்று முன்னர் எடுத்திருந்த அவதாரத்தை மீண்டும் எடுத்து விடுவாளோ? என்ற பயத்தில்,”உனக்கு அதைப் பத்திச் சொல்ல விருப்பம் இல்லைன்னா வேண்டாம்மா. நாங்க உன்னை எதைக் கேட்டும் தொந்தரவு பண்ண மாட்டோம். நீ ரெஸ்ட் எடு”என்று அவளை அமைதிப்படுத்தும் விதமாகப் பேசினார் விஜயன்.

“நான் அப்போவே சொன்னேன் தானேம்மா? நான் அவர் கூடச் சந்தோஷமாக வாழலைன்னு! அவரும், நாலு சுவத்துக்குள்ளே சேர்ந்து வாழ்ந்தால் தானே எங்களுக்குக் குழந்தைப் பிறக்கும்? இல்லைன்னா எப்படி குழந்தை வரும்? அதை நினைச்சு நான் உள்ளுக்குள்ளேயே புழுங்கிச் செத்துட்டு இருக்கும் போது தான் நீங்க எங்கிட்ட குழந்தையைப் பத்தின பேச்சை எடுத்தீங்க! அதனால் தான் எனக்கு அடிக்கடி தலைவலி வருது! தூக்கம் கெட்டுப் போச்சு! அதை நினைச்சுத் தான் அவரும் உங்க கிட்ட பேச்சு வார்த்தை வச்சுக்கக் கூடாதுன்னுச் சொன்னார்! போதுமா? நாங்க எங்க தனிப்பட்ட வாழ்க்கையை ஒன்றாக வாழலை! அதனால் குழந்தையும் வர வாய்ப்பில்லை!”என்று அவர்களிடம் திட்டவட்டமாகப் பதிலளித்தாள் மகள்.

அதைக் கேட்டதும் மனதளவில் உடைந்து, தளர்ந்து போய் விட்டார்கள் அவளது பெற்றோர்.

“நாங்க வேணும்னா மாப்பிள்ளை கிட்டே இதைப் பத்திப் பேசட்டுமா?”என்று அவளிடம் கேட்டார் கண்மணி.

அதில் உதட்டைக் கோணலாக வளைத்து,“அவர் கிட்டே என்னன்னுப் பேசுவீங்க? என் பொண்ணைத் தள்ளி வைக்காமல் குடும்பம் நடத்திக் குழந்தைப் பெத்துக்கோங்கன்னாப் பேசுவீங்க?”என்று எல்லளாக கேட்டிருந்தாள் வசுமதி.

அதைக் கேட்டவுடன் தங்களது காதைக் கைகளால் மூடிக் கொண்டனர்.

“நீங்க எங்க அந்தரங்கத்தைப் பத்தி, குழந்தையைப் பத்திக், கேட்கும் போதும், பேசும் போதும் எனக்கும் இப்படித் தான் அருவருப்பாக இருக்கும்!”என விரக்தியாக கூறினாள்.

அதில் மொத்தமாக கூனிக் குறுகிப் போய் விட்டனர் விஜயன் மற்றும் கண்மணி.

இதே நேரத்தில் தனது வீட்டில் தன்னுடைய வினாத்தாள் திருத்தும் வேலையையும், பாடத் திட்டத்தை தயார் செய்யும் வேலையையும் முடித்து விட்டுத் தன் மனைவிக்குச் செல்பேசி அழைப்பு விடுத்தான் சம்யுக்தன்.

அதன் ஒலி கேட்டதுமே,”என் மொபைல் அடிக்குது”எனத் தன் செல்பேசியைத் தேடி எடுத்து அழைப்பது யாரென்றுப் பார்த்து விட்டு,“அவர் தான் கூப்பிட்றார்”என்று கண்களில் பரவசத்துடன் மொழிந்தாள் வசுமதி.

“நீ உன் ரூமில் போய்ப் பேசு”என்று அவளை அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு அவளது நிலையை எண்ணி வருத்தத்துடன் தங்களுக்குள் பேசத் தொடங்கினார்கள் விஜயன் மற்றும் கண்மணி.

அதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லாதவளோ, தன் அறையில் போடப்பட்டிருந்த மெத்தையில் அமர்ந்து கொண்டுத் தன் கணவனின் அழைப்பை ஏற்று,”ஹலோ”என்க,

“ஹலோ மதி! நீங்க என்னப் பண்றீங்க? சாப்பிட்டீங்களா?”என அவளிடம் விசாரித்தான் சம்யுக்தன்.

அதில் உள்ளம் குளிர்ந்து போய்,”இன்னும் இல்லைங்க. ஜூஸ் தான் குடிச்சேன். சாப்பிடலை. நீங்க சாப்பிட்டீங்களா?”என்றாள் வசுமதி.

“நான் சாப்பிட்டு என் வேலையை முடிச்சிட்டுத் தான் உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். ஆனால் நீங்க இன்னும் சாப்பிடலைன்னு சொல்றீங்களே!”எனக் குறைபட,

“ஆமாங்க. ஆனால் சீக்கிரம் சாப்பிட்டுட்றேன்”என்று அவனுக்கு உறுதி அளிக்க,

“சரிங்க”என்றவனிடம்,

“நான் உங்களுக்கு நாளைக்குக் கால் செஞ்சிப் பேசவா?”எனக் கேட்டாள் வசுமதி.

“ஓகே. குட் நைட் மதி”என்றிருந்தான் சம்யுக்தன்.

“குட் நைட் ங்க”என்றுரைத்து அழைப்பை வைத்து விட்டு ஒரு சங்கல்பத்தை மனதில் இருத்திக் கொண்டு வெளியே வந்தவளைப் பார்த்ததும்,

தங்களது உரையாடலை நிறுத்தி விட்டு,“மாப்பிள்ளை என்ன சொன்னார் வசு?” என்று வினவினார் விஜயன்.

“நான் சாப்பிட்டேனான்னு விசாரிச்சார் ப்பா. வேற ஒன்னுமில்லை”எனக் கூற,

“இன்னைக்குப் பணியாரம் ஊத்துறேன். அதுக்குத் தொட்டுக்கத் தேங்காய்ச் சட்னி அரைச்சிட்டேன்”என்றுரைத்து விட்டு இரவு உணவைத் தயாரித்தார் கண்மணி.

அதை உண்டு முடித்து விட்டு மூவரும் உறங்கச் சென்றார்கள்.

அடுத்த நாள் காலையில் தங்களது வீட்டின் மாடியில் நின்றிருந்த மகளிடம்,”இங்கே என்னப் பண்ற வசு?”என்று விசாரித்தார் விஜயன்.

“சும்மா ஒரு விஷயத்தைப் பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்ப்பா. அம்மா எங்க?”என்றவளிடம்,

“இதோ வந்துட்டேன்”என்று அங்கே வந்திருந்தார் கண்மணி.

“நான் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ஒரு விஷயம் பேசனும்!”என்றவளின் தீவிரமான முக பாவனையைக் கலக்கத்துடன் பார்த்தார்கள் அவளது பெற்றோர்.

“நீங்க என்னை நினைச்சும், என்னோட வாழ்க்கையை நினைச்சும் பயப்பட்றீங்க தானே?”என்றவளுக்கு ‘ஆமாம்’ என்று பதிலளிக்கும் வகையில் தலையை அசைத்தனர்.

உடனே,”அப்போ நான் என் புருஷன் கிட்டே எல்லா உண்மையையும் சொல்லப் போறேன்”எனத் தீர்க்கமாக கூறினாள் வசுமதி.

அதைக் கேட்டதும் மற்றவர்களுக்கு உடல் வெடவெடக்கத் தொடங்கி விட்டது.

“ஏன்டி உன் வாழ்க்கையில் நீயே மண்ணை வாரிப் போட்டுக்கனும்னு ஆசைப்பட்றியா?”எனக் கேட்டார் கண்மணி.

“அதுக்காக என்னால் கடைசி வரைக்கும் இப்படியே இருந்து விட முடியாதும்மா! என்னால் அவர் பக்கத்தில் போக முடியலை. அப்படி போக டிரை பண்ணாலே எனக்கு மூச்சு முட்டுது!”என்றுரைக்க,

“இங்கே பாரு வசு. நீ இப்போ குற்ற உணர்ச்சியில் இருக்கே. அதனால் தான் இப்படியெல்லாம் யோசனை வருது! மூச்சு முட்டுது எல்லாம்! ஆனால் இன்னும் கொஞ்ச நாள் போனால் எல்லாம் சரி ஆகிடும். அதுக்கு முன்னாடி அவசரப்படாதே!”என மகளுக்கு அறிவுரை வழங்க முயன்றார் விஜயன்.

“நான் இன்னும் எவ்வளவு நாள் வெயிட் பண்ணனும்ப்பா? என்னோட அத்தை, மாமா ஏதோ நல்ல மனுஷங்க. என் மனசைப் புரிஞ்சி நடந்துக்கிறதால் குழந்தை விஷயத்தை ஒரு பிரச்சினையாக உருவாக்கலை! ஆனால் நமக்குக் குழந்தை வரலையே இன்னும்னு எனக்கே அதை நினைச்சு ஏக்கமாக இருக்குப்பா! இதுக்கு மேலேயும் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தால் என் புருஷன் கூடக் கடைசி வரைக்கும் என்னால் வாழவே முடியாமல் போயிடும் போலிருக்கு”என்றவளிடம்,

“நீ மாப்பிள்ளை கிட்டே உண்மையைச் சொன்னதுக்கு அப்பறம் அவர் உன்னை மொத்தமாக வெறுத்துட்டா என்னப் பண்ணுவ?”என்று வினவினார் கண்மணி.

அதற்குப் பதில் தெரியாமல் விழிக்கவும்,

“நாம இதைச் சாயந்தரம் பொறுமையாக உட்கார்ந்து பேசுவோம் வசு. நான் இப்போ வேலைக்குக் கிளம்பறேன்”என மகளிடம் உரைத்து விட்டு,

“நீ வந்து எனக்குச் சாப்பாடு பரிமாறிட்டு டிஃபன் பாக்ஸிலும் மதியத்துக்குச் சாப்பாடு வச்சுக் கொடு”என்று மனைவியிடம் சொல்லி அவரைத் தன்னுடனேயே அழைத்துப் போய் விட்டார் விஜயன்.

ஆனால் அவர்கள் சென்ற பிறகும் தந்தையின் கேள்வியில் ஆணி அடித்தாற் போன்று மூளை செயலிழந்து போய் மாடியின் சுவற்றைப் பற்றித் தன்னைச் சமநிலைபடுத்திக் கொள்ள முயற்சித்தவளோ, தன்னைக் கொஞ்சம், கொஞ்சமாகத் தலைவலி ஆக்கிரமித்து அதன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விட்டதை உணர்ந்தாள் வசுமதி.

- தொடரும்
 
Last edited by a moderator:

Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 18
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.