என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN 22

Member
May 5, 2026
51
35
18
Tamilnadu
அதைக் கேட்டப் பெண்ணவளுக்குள் சந்தோஷச் சாரல்கள் துளிர்த்து விடவும்,”ஒரு பத்து நிமிஷத்தில் வந்துடுவேன்ங்க”என்று கூறி அந்த அழைப்பைத் துண்டித்து விட்டு உற்சாகமாக வேலையைத் தொடர்ந்தாள் பிரார்த்தனா.

அதே சமயம், தான் அவளிடம் கூறிய வார்த்தைகளை எண்ணித், தன்னை நினைத்து, தானே ஆச்சரியப்பட்டுப் போனான் சம்யுக்தன்.

தன்னால் எப்படி இவ்வாறெல்லாம் பேச முடிந்தது என்று யோசிக்க ஆரம்பித்து விட்டான்.

இங்கே தனது உடன் பணிபுரியும் பேராசிரியைத் தன்னிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவரது வேலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டு அதை வெற்றிகரமாகச் செய்து முடித்து விட்டுத் துறைத் தலைவரின் அறைக்குச் சென்று அந்தக் கோப்பை வைத்து விட்டுத் தன் கணவனைத் தேடி கல்லூரியின் பார்க்கிங் ஏரியாவிற்கு வந்து சேர்ந்திருந்தாள் பிரார்த்தனா.

தன்னைக் கண்டதுமே புத்துணர்ச்சி அடைந்த கணவனைப் பார்த்து அவளது முகத்தில் இன்னும் மகிழ்ச்சித் தாண்டவமாடியது. ஆனால் அதை அவனிடம் காட்டிக் கொள்ளாமல்,

“ஒரே தலைவலி! சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம்”என்றுரைக்க,

“ம்ஹ்ம். பைக்கில் ஏறு”என்றதுமே, வண்டியில் ஏறி அமர்ந்து கொண்டாள் பிரார்த்தனா.

உடனே அந்த இரு சக்கர வாகனத்தை மிதமான வேகத்துடன் இயக்கத் தொடங்கினான் சம்யுக்தன்.

தங்கள் இல்லத்தை அடையும் வரை இருவருமே எதுவும் பேசவில்லை.

தனது கோரிக்கையை மனைவி ஏற்கவில்லை என்பது ஞாபகம் வந்து விட்டதால் மௌனமாகவே வண்டியை ஓட்டினான் சம்யுக்தன்.

அதைப் புரிந்து கொண்டுத் தானும் எதையும் பேசி அவனைச் சீண்டாமல் இருந்து கொண்டாள் பிரார்த்தனா.

சில நிமிடப் பயணத்திற்குப் பிறகுத் தங்களது இல்லத்தை வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே பிரவேசித்தனர்.

அவர்களை ஆராய்ச்சிப் பார்வைப் பார்த்து விட்டுத் தன் மருமகளின் முகத்தில் சோபை கூடி இருப்பதைக் கண்டதும் நிம்மதியுற்றார் கலாவதி.

“உங்களுக்காகத் தான் காத்திருந்தேன்”என்று அவர்களிடம் கூறியவரோ,

“அதுவும் நீ வேற இன்னைக்குச் சாயந்தரம் வர்றதுக்கு லேட் ஆகும்ன்னுச் சொன்னியா? அதான். மணியைப் பார்த்துட்டு இருந்தேன்!”என்று மருமகளிடம் கூறவும்,

“என்னோட வேலை எப்பவோ முடிஞ்சிருச்சுத்தை. என் கூட வேலைப் பார்க்கிற ஸ்டாஃபுக்கு எமர்ஜென்சின்னு அவங்க கிளம்ப வேண்டியதாகப் போயிடுச்சு. அதனால் நான் அவங்க வேலையை பார்த்துக் கொடுத்துட்டு வந்தேன். அதான் லேட் ஆயிடுச்சு!”என்று அவரிடம் தெரிவித்தாள் பிரார்த்தனா.

“ஓஹோ சரி. ஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க”என அவர்களை அறைக்கு அனுப்பி வைக்கவும்,

அங்கே தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு வரவேற்பறைக்கு வந்தவர்களுக்குக் காப்பிக் கலக்கிக் கொடுக்க அதைப் பருகத் தொடங்கி விட்டனர் சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனா.

அதே நேரத்தில் வீட்டை அடைந்து இருந்தான் பிரதீபன்.

“ஹாய்ண்ணா!”,

“ஹாய் அண்ணி”என்று அவர்களிடம் உரைக்க,

“ஹாய் பிரதீபா!”என்ற மனைவியைப் பின்பற்றி,

“ஹாய்டா”என்றிருந்தான் சம்யுக்தன்.

அவனுக்கும் காப்பியைக் கலக்கிக் கொடுத்து விட்டு,”வாக்கிங் போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போன மனுஷன் இவ்வளவு நேரம் என்னைப் பண்றாருன்னுத் தெரியலையே! யாராவது அவருக்கு ஃபோன் போட்டு வீட்டுக்கு வரச் சொல்லுங்க”என்று தன் இரு மகன்களிடம் அறிவுறுத்தினார் கலாவதி.

எப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டாலும் மறக்காமல் செல்பேசியை உடன் கொண்டு செல்லுமாறு அவர்களால் அறிவுறுத்தப்பட்டு இருந்தார் ஜெயராம்.

உடனே தனது கைப்பேசியில் தந்தைக்கு அழைத்து,”ஹலோ அப்பா. வாக்கிங் போனது போதும். வீட்டுக்கு வாங்க”என்று வலியுறுத்தி விட்டு அழைப்பை வைத்திருந்தான் சம்யுக்தன்.

அதன் பிறகு மூவரும் தங்களது காப்பியைக் குடித்து விட்டு அறைக்குத் திரும்பிய நேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தார் ஜெயராம்.

“ஏங்க! இருட்ட ஆரம்பிச்சிடுச்சது கூடத் தெரியாமல் அப்படி எவ்வளவு நேரம் தான் வாக்கிங் போவீங்க? முதல்ல போய் முகத்தைக் கழுவிட்டு வாங்க”என்று அவரைக் கடிந்து கொண்டார் கலாவதி.

“சரிம்மா. நம்மப் பக்கத்து வீட்டுக்காரரும் வாக்கிங் வந்தார். அவர் கூடவே பேசிட்டு நடந்ததில் நேரம் போனதே தெரியலை. அதான், லேட் ஆயிடுச்சு”என்று கூறி அவரைச் சமாதானப்படுத்தி விட்டு முகம் கழுவச் சென்றார்.

அவரது பேச்சுக் குரலைக் கேட்டதும்,”அப்பா வந்தாச்சு போல”என்றான் சம்யுக்தன்.

“ம்ஹ்ம். என்னோட ஸ்கூல் ஃப்ரண்ட் ஒருத்தியைப் பார்க்கனும்னு ரொம்ப நாளாக யோசிச்சிட்டு இருந்தேன். அவ நம்பர் இப்போ வரைக்கும் கிடைக்காமல் இருந்துச்சு. இன்னைக்குத் தான் என் இன்னொரு ஃப்ரண்ட் அவளோட நம்பரை அனுப்பினாள். நான் அவளை நேரில் பார்த்துப் பேசலாம்னு இருக்கேன்! அவளோட ஊருக் கொஞ்சம் தூரம் தான்! அடுத்த வாரம் போய்ப் பார்த்துப் பேசிட்டு வந்துடவா?”என்று அவனிடம் கேட்டாள் பிரார்த்தனா.

உடனே,”நாம இன்னும் மறு வீட்டு விருந்து சடங்கை முடிக்கலை. முதல்ல அதை முடிச்சிக்கலாம். அப்போ தான் நம்மளை எங்கே வேணும்னாலும் நம்ம வீட்டாளுங்க ஃப்ரீயாகப் போக விடுவாங்க”என்றவனின் கூற்றும் ஏற்றுக் கொள்ளும் படியாக இருந்ததால் அதை அடுத்த நாளே தங்களது இரண்டு குடும்பங்களிடமும் தெரிவித்து விட்டார்கள் இருவரும்.


இடையிடையே தனது மகளுக்கு அழைத்து நலம் விசாரித்த கோமளாவோ,”நீ இன்னும் வேலைக்குப் போயிட்டுத் தான் இருக்கியா டி? உனக்குப் பிடிச்சுத் தானஏ இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டே? அப்பறம் குழந்தைப் பெத்துக்கனும்ன்ற ஆசை வரலையா? அதுக்குத் தயாராகனும்னுத் தோனலையா?”என்று அவளிடம் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

அதைக் கேட்டதும் தனது மனதில் சுருக்கென்று வலி எடுப்பதை உணர்ந்து,”ப்ச்! ஆமாம்மா. எனக்குப் பிடிச்சு தான் இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கிட்டேன். நான் இல்லைன்னு சொல்லலை! ஆனால் இன்னும் எங்களுக்கு மறு வீட்டு விருந்து, தாலி பிரிச்சுக் கோர்க்கிறதுன்னு எதுவுமே நடக்கலை தானே? அதெல்லாம் முடியட்டும். அதுக்கப்புறம் குழந்தையைப் பத்தி யோசிக்கிறேன்”என்று அவரிடம் கடுமையாக கூறி விட்டாள் பிரார்த்தனா.

உடனே தனது முகம் வாடிப் போய்,”சரிடி. நான் உன்னைக் கட்டாயப்படுத்தலை! நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாகத் தானே இருக்கீங்க?”எனக் கேட்டார் கோமளா.

அதில் தனது கோபத்தைக் குறைத்துக் கொண்டு,”உங்ககிட்ட கோபமாகப் பேசினதுக்குச் சாரிம்மா”என்றவளோ,

“நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமாகத் தான் இருக்கோம்மா. அது, அது, அந்தந்த நேரத்தில் கரெக்டா நடந்துடும். நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாதீங்க! சரியா?”என்றதும் தான், அவளது அன்னையின் மனதில் இருந்த பாரம் நீங்கியது.

“சரிடி”என்று அழைப்பை வைத்து விட்டு, அதை தன் கணவரிடம் உரைத்து விட்டார் கோமளா.

பிரார்த்தனாவின் பெற்றோர் இருவரும் தங்களது சம்பந்தி வீட்டாருடன் சேர்ந்து ஒரு விடுமுறை நாளில் தங்கள் வீட்டு மொட்டை மாடியிலேயே ஒரு கொட்டகையைப் போட்டு அதில் இரு வீட்டாரின் உறவினர்களையும் அழைத்து விருந்து வைக்கத் திட்டமிட்டனர்.

அந்தப் பொறுப்பைத் தங்களது மற்றக் குடும்ப உறுப்பினர்கள் பார்த்துக் கொள்ளத் தாங்கள் இருவரும் எந்தவித அழுத்தமும் இன்றி வேலைக்குச் சென்று வந்தனர் சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனா.

“நீயும் எங்க வீட்டில் நடக்கிற விருந்துக்கு வா உதி”எனத் தோழியிடம் கேட்டுக் கொள்ள,

“அதுக்கென்ன? வந்துட்டா போச்சு பிரனா. லீவ் நாளில் தானே விருந்து வைக்கிறீங்க?”என்று அவளிடம் விசாரித்தாள் உத்ரா.

“ஆமாம். ஏற்கனவே நாங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு நிறைய லீவ் எடுத்தாச்சு. இப்போ எக்ஸாம் டைம் வேற. அதனால் தான் லீவ் நாளில் வைக்கச் சொல்லிட்டோம்”என்றுரைத்தாள் பிரார்த்தனா.

“அப்போ சரி”என்றாள் தோழி.

அதற்குப் பிறகான நாட்களில் மறு வீட்டு விருந்திற்காகத் தங்களது மகளும், மருமகனும் அணிந்து கொள்ள வேண்டிய புது துணிகளை வாங்கிக் கொண்டுத் தங்களது மகளின் புகுந்த வீட்டிற்கு வந்திருந்தார்கள் சக்திவேல் மற்றும் கோமளா.

அவர்களை வரவேற்றுக் காப்பிக் கொடுத்து உபசரித்து விட்டு,”இப்போதாவது இவங்க ரெண்டு பேருக்கும் இந்தச் சம்பிரதாயத்தைப் பண்றதுக்குச் சம்மதம் சொல்லனும்னு மனசு வந்துச்சே!”என்று சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனாவைப் பார்த்துப் பொருமலுடன் மொழிந்தார் கலாவதி.

அதில் அவரைச் சங்கடத்துடன் ஏறிட்டனர் அவர்களது சம்பந்தி வீட்டார்.

அதைக் கண்டதும் தனது மனைவியைக் கண்களால் அடக்கி விட்டு,”என்னென்ன சாப்பாட்டு வகை எல்லாம் சேர்க்கலாம்னுக் கலந்து பேசிட்டு லிஸ்ட் போட்டுட்டு அதைக் கேட்டரிங் ஆளுங்க கிட்ட கொடுத்துடலாம் சம்பந்தி”என்று பேச்சை மாற்றினார் ஜெயராம்.

“ம்மா! இனிமேல் நீங்க சொல்ற எல்லா சடங்கையும் நாங்க கண்டிப்பாக செய்வோம். அதனால் நீங்க இப்படி புலம்பத் தேவையில்லை”என்று அவருக்கு அறிவுறுத்தினான் சம்யுக்தன்.

அதைக் கேட்டவுடன்,”உங்ககிட்ட பயங்கரமான மாற்றம் வந்திருக்கே!”என அனைவரின் முன்னிலையிலும் அவனிடம் வெளிப்பட்ட மாற்றத்தைப் பாராட்டினாள் பிரார்த்தனா.

“ம்ஹ்ம்”என அதை மெலிதானப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான் அவளது கணவன்.

அவ்விருவரின் உரையாடல்கள் மற்றும் பரிபாஷைகளையும் கண்டு ஆச்சரியம் அடைந்து தான் போயினர் பிரார்த்தனாவின் பெற்றோர்.

அவர்களது வியப்பைக் கண்டதும்,”இதெல்லாம் எங்களுக்குப் பழகிப் போச்சு! நீங்க இப்போ தான், இதை முதல் தடவையாகப் பார்க்கிறதால் அதிர்ச்சி ஆகிட்டீங்க! கவலைப்படாதீங்க! உங்களுக்கும் இதெல்லாம் போகப், போகப் பழகிடும்”என்று அவர்களிடம் தன் கண்களில் குறும்பு கொப்பளிக்கத் தெரிவித்தான் பிரதீபன்.

அதைக் கேட்டு உடனே தனது தொண்டையைச் செருமி விட்டுத் தம்பியை முறைத்துப் பார்த்தான் சம்யுக்தன்.

அதில் அவனும் தனது வாலைச் சுருட்டி வைத்துக் கொண்டு அமைதியாகி விட்டிருந்தான்.

இந்தக் கலாட்டாவைப் பார்த்ததும் வழக்கம் போல தன் முத்துப் பற்கள் தெரியச் சத்தமாக நகைத்து விட்டாள் பிரார்த்தனா.

அதில் அவளைப் பார்த்த மற்றவர்களுக்கும் சிரிப்புத் தொற்றிக் கொண்டது.

அவர்களைப் பின்பற்றித் தானும் குறுநகை உதிர்த்தான் சம்யுக்தன்.

அதை அவதானித்து விட்டதுமே, மற்றவர்கள் அறியாமல் அவனைப் பார்த்து நொடி நேரத்தில் கண்ணடித்து விட்டு இயல்பாகி விட்டாள் பிரார்த்தனா.

தனது மனையாளின் அந்த எதிர்பாராத செயலைக் கண்டு விதிர்த்துப் போய் விட்டிருந்தான் சம்யுக்தன்.

அதற்குப் பிறகு அவனால் அவளை ஏறிட்டுப் பார்க்கவே முடியாத அளவிற்கு அவனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.

அதை தன் சிகையைக் கோதிக் கொடுப்பதன் மூலமாகச் சரிப்படுத்திக் கொண்டுத் தன் மனைவியைப் போலியாக முறைத்து விட்டுத் தங்கள் மறு வீட்டு விருந்திற்கானப் பேச்சு வார்த்தையில் கவனத்தைப் பதித்துக் கொண்டான் சம்யுக்தன்.

சில நிமிடப் பேச்சு வார்த்தையிலேயே மறு வீட்டு விருந்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து விட்டார்கள் அனைவரும்.

அந்த விருந்து முடிந்ததும் தனது தோழியைப் பார்க்கச் செல்வதாகப் பொய்யுரைத்து விட்டு வசுமதியின் பெற்றோரைப் பார்க்கச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தாள் பிரார்த்தனா.

- தொடரும்
 
Last edited by a moderator:

Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.