• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் மன்னவன் நீதானோ - 3

Vishakini

Moderator
Staff member
என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 3

சௌமிகா எல்லோருடனும் வெகு இயல்பாகவும் மரியாதையாகவும் பழகும் அவளுடைய சுபாவத்தினால் பல்கலையில் அவள் பல நண்பர்களை சம்பாதித்து இருந்தாள். அதேபோல அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் பலருடனும் அவள் அன்பாக பழகினாலும் இவளுடைய வயதை ஒத்த முன்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரியும் சாந்தியுடன் நெருக்கமாக பழகினாள். இருவரும் ஒன்றாக கடைகளுக்குச் சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள், மாலை நேரங்களில் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் இருக்கும் பூங்காவில் இருந்து அரட்டை அடிப்பார்கள், வார இறுதி நாட்களில் உடற்பயிற்சிக் கூடத்தில் உடற்பயிற்சி செய்வார்கள்.

அன்று சனிக்கிழமை, காலை உணவாக அப்பம் செய்திருந்தார் சகுந்தலா. அகிலனுக்கு விருப்பமான முட்டை அப்பம் சிலதை செய்ததும் “சௌமி இந்த அப்பத்தை பத்மாவிடம் கொடுத்துவிட்டு வா. அகிலனுக்கு அப்பம் விருப்பம், அவன் சாப்பிட முதல் கொடுக்க வேணும்” என்றவாறு அவற்றை ஓர் பாத்திரத்தில் வைத்து மூடி அவளிடம் கொடுத்தார்.

அவனுடன் காரில் கம்பஸுக்கு சென்று நான்கைந்து மாதங்கள் கடந்திருக்கும், அவனை அவள் திரும்ப சந்திக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அங்கே அவன் இருப்பான் என்பதால் அவள் அங்கு செல்லத் சற்று தயங்கினாள் எனவே “நீங்கள் கொண்டு போங்களன் பெரியம்மா” என்றாள்.

“பெரியப்பா இப்ப சாப்பிட வருவார், அவருக்கு அப்பம் செய்ய வேணும் எங்களுக்கும் செய்ய வேணும். ஆற முதல் கொண்டு போ சௌமி” என அவர் அவசரப்படுத்தினார்.

அவனைப் பார்க்க வேண்டும் போல ஓர் ஆர்வம் அவளுக்கு இருந்தாலும், ஏதோ ஓர் வித தயக்கமும் இருந்தது. எனவே ஓர் வித தயக்கமும் அவனைக் காணும் ஆவலும் கலந்த உணர்வுடன் அங்கே சென்று அழைப்பு மணியை அழுத்தி விட்டு நின்றாள்.

கதவைத் திறந்த அகிலன் இவளைப் பார்த்து ‘என்ன?’ என்பது போல புருவம் உயர்த்திப் பார்த்தான்.

அவன் அங்கே இருப்பான் என்பது தெரிந்தாலும், அவன் வந்து கதவைத் திறந்ததும், அவளுக்கு சிறு பட படப்பு ஏற்பட்டது.

“பத்மா ஆண்டி நிக்கிறாவா?” என அவனைப் பாராது உணவுப் பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டு கேட்டாள்.

“ஓம்... அம்மா சமைத்துக் கொண்டு நிற்கிறா” என்றான் அவன்.

காலிங் பெல் சத்தம் கேட்ட பத்மா சமையல் அறையில் இருந்தவாறு “அகில் ஆரது…?” எனக் கேட்டார்.

“ம்...” என பதில் ஏதும் கூறாது, யோசித்தவாறு நின்றவனின் பார்வை அவளில் தான் படிந்திருந்தது. அவளுக்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது, உடனே “நான் சௌமிகா…”என்றவாறு அவனைப் பார்த்தவள் “இதில அப்பம் இருக்கு… பெரியம்மா தந்தவா… இந்தாங்க...” என்றவாறு பாத்திரத்தை நீட்டினாள்.

உடனே “ஓ.. உள்ள வாங்க” என்றவாறு வழியை விட்டான்.

“இல்லை, நான் போகணும்....” என்றவள் கதவுக்கு வெளியிலேயே நின்றாள்.

அதற்குள் பத்மா வந்து அவளைப் பார்த்ததும் “சௌமியா… வா… ஏன் வெளியில நிக்கிறாய் உள்ள வா” என்றார். அவள் உள்ளே வரவும் அகிலன் தன் அறைக்குள் சென்று விட்டான்.

“இதில அப்பம் இருக்கு, பெரியம்மா தந்து விட்டவா...” என்றாள். பத்மா அந்த பாத்திரத்தை வாங்கியவாறு “உட்கார் சௌமி” என்றார்.

“இல்லை.. நான் போயிட்டு வாறன் ஆண்டி” என்று கூறி விட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

அவள் சென்றதும் “அகில் சாப்பிட வா...” என அவனை அழைத்தார் பத்மா.

அவன் வந்து சாப்பிட உட்கார்ந்ததும் அப்பத்தைப் பரிமாறியபடி “அகில் உனக்கு சௌமியை தெரிய இல்லையா?” என வினாவினார்.

அவன் முட்டை அப்பத்தை சுவைத்த படி “அது… தெரியுமம்மா…” என்றான்.

அதைக் கேட்டதும் அவர் “நான் ‘ஆரு வந்திருக்கிறது’ எண்டு கேட்க, நீ ஒண்டும் சொல்லாமல் நிண்டாய்…” எனக் கேட்டார்.


“ம்…” என இழுத்தவன் “அப்பம் நல்லாயிருக்கு… நீங்களும் சாப்பிடுங்க…” என்றான்.

“நான் சாப்பிடுறது இருக்கட்டும் நீ சொல்லு…” என்றார் அவர்.

“அவளுக்கு முன்னால அவளின்ர பெயரை நான் எப்படி சொல்ல ஏலும்…?” எனக் கேட்டான்.

“ஏன் சொன்னால் என்ன…? அவள் இஞ்ச வந்து ஒரு வருஷமாகப் போகுது, அவளோட கதைக்காமல் இருக்க ஏலாது தானே … அண்டைக்கு அவளை கம்பஸுக்கு கூட்டிக் கொண்டு போன போது நீ அவளோட கதைக்கேல்லையா?” என்றார் ஆச்சரியத்துடன்.

“இல்லை…”

“ஏன்” எனக் கேட்டார்.

“என்ன கதைக்கிறது?” என்றான்.

“புதிதாக அறிமுகமாகிறவர்கள் எவ்வளவோ கதைக்கலாம், அவளின்ர பெயரைக் கேட்டிருக்கலாம், படிப்பைப் பற்றி விசாரித்திருக்கலாம், புது ஊர், புது நண்பர்களை பற்றி கதைச்சிருக்கலாம்” என்றார் அவர் ஆற்றாமையோடு.

“ம்..ம்… இனிக் கதைக்கிறனம்மா…” என்றான் அவன் சாதாரணமாக.

“எவ்வளவு பேரோட பழகிறாய்… எத்தனை பேருக்கு படிப்பிக்கிறாய்… எப்படித் தான் இதை எல்லாம் செய்கிறாயோ எனக்குத் தெரியேல்ல” என்றார் அவர் சிறு எரிச்சலுடன்.

அகிலன் எல்லோருடனும் இலகுவாக பேசிட மாட்டான், புதியவர்களுடன் கதைத்துப் பழக சிறிது காலம் எடுக்கும், அதனால் அவனுக்கு ஒரு சில நண்பர்கள் தான் இருக்கிறார்கள். அவன் அவர்களுடன் தான் மிகவும் நெருக்கமாக இருப்பான். அவன் தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு என இருப்பவன். தேவை இல்லாமல் அடுத்தவர்களுடைய விடயங்களில் தலையிடமாட்டான். காலையில் எழுந்தவுடன் அவர்களின் வீட்டு பால்கனியில் உட்கார்ந்தவாறு அங்கே இருந்து பார்ப்பதற்கு அழகாகத் தெரியும் கடலை ரசித்தவண்ணம், அவனுக்கு பிடித்தவாறு தேநீர் தயாரித்து பரிமாறும் தாயாருடன் கதைத்தவாறு அதை அருந்துவான். அதன் பின்னர் கீழ்தளத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்வான், சில நேரங்களில் அருகில் உள்ள கடற்கரைக்குச் சென்று கடல் காற்றை அனுபவித்தவாறு நடப்பான். அதன் பின்னர் வீட்டுக்கு வந்து அன்றைய நாளிதழை வாசித்துவிட்டு குளித்து தயாராகி சாப்பிட்ட பின்னர் பல்கலைக்குச் செல்வான். மாலை நேரங்களில் வீட்டுக்கு வருபவன் சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு, சட்டப் புத்தகங்கள் வாசித்தல், முக்கியமான வழக்குகளின் தீர்ப்புகளை வாசித்தல், ஆய்வுக் கட்டுரைகள் எழுதுதல், மாணவர்களுக்கு படிப்பிப்பதற்கு ஆயத்தம் செய்தல், போன்றவற்றில் நேரத்தை செலவிடுவான். வார இறுதி நாட்களில் பாதிக்கப்பட்ட, சட்ட உதவிகளைப் பெற பண பலம் இல்லாதவர்களுக்காக இலவச சட்ட உதவிகளை வழங்கல், சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இலவச கருத்தரங்குகளை வழங்கல் போன்றவற்றை அவனுடைய மாணவர்களுடன் சேர்ந்து செய்வான். இவ்வாறாக அவன் சட்டம் சார்ந்த ஏதாவது வேலைகளைச் செய்து கொண்டு எந்த நேரமும் பிஸியாகவே இருப்பவன் தாயாரிடமும் மிகுந்த அன்பும் வைத்திருக்கிறான். அவருக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தல், அவர் விரும்பும் இடங்களுக்கு அழைத்துச் செல்லல் போன்றவற்றையும் அவன் செய்யத் தவறியது இல்லை.

……………………

அங்கிருந்து கிளம்பிய சௌமி, அரை மணித்தியாலம் ஆவது அவனுக்கருகில் உட்கார்ந்து இருந்து காரில் பயணம் செய்திருந்த போதும், முகத்துக்கு நேரே அவன் தனது பெயரைத் தாயாரிடம் கூறாமல் தவிர்த்ததை ஓர் விதமான அவமானமாக உணர்ந்தாள். எனது பெயரை சொல்வதில் அவனுக்கு அப்படி என்ன கௌரவக் குறைச்சல்…? அன்றும் இப்படித் தான் என்னுடன் கதைக்காமல் என்னை அவமானப்படுத்தினான்...ஏன் இப்படி நடந்து கொள்கிறான்…’ என எண்ணியபடி அவனை மனதுக்குள் திட்டியவாறு அங்கிருந்து வெளியேறி, தனது வீட்டுக்குச் சென்றவள், நேரே தனது அறைக்குச் சென்று அங்கிருந்த கட்டிலில் அமர்ந்து தன்னை ஆசுவாசப்படுத்த முயன்றாள்.

அகிலனைப் பார்க்க தனது மனது விரும்பிதையும், அவனைக் கண்டதும் அவள் மனதில் ஓர் இனிமையான உணர்வு பரவியதையும் நினைத்த உடனே தன் மீதே அவளுக்கு கோபம் ஏற்பட்டது.

சௌமிகாவிற்கு மீன் போன்ற நீண்ட அழகிய கண்கள், வில் போன்று வளைந்த புருவம், எடுப்பான நாசி, ஸ்ட்ராபெர்ரி நிற இதழ்கள், நல்ல உயரம், மெல்லிய அழகிய இடையை கொண்ட அளவான உடல் என சகலரையும் கவரும் அழகு கொண்டவள். அவளைச் சுற்றி உள்ளவர்கள் அவளின் அழகைப் பற்றி அவளிடம் கூறினால் அவள் அதை காதில் வாங்க மாட்டாள். தான் அழகி என்ற எந்தவிதமான கர்வமும் இல்லால் எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவாள். அதே போல் மற்றவர்களும் தன்னுடன் பழக வேண்டும் என விரும்புவாள். தன்னைக் கவர்ந்த ஒருத்தன் தன்னிடம் சாதாரணமாக கதைக்க கூட இல்லை என்பதில் அவளின் மனம் வெகுவாக வாடிவிட்டது. அவனுடன் காரில் சென்ற அன்றிலிருந்து, எந்த நேரமும் மனதில் அவன் நினைவுகள் தான். கொஞ்ச நாட்கள் அதிலிருந்து அவளால் மீளவே முடியவில்லை. சில நாட்களாகத் தான் அவள் அதிலிருந்து சற்று மீண்டிருந்தாள். முதல் பார்வையிலேயே அவளே அறியாமல் அவளின் இதயத்தில் அவன் ஆழ வேரூன்றிவிட்டான். அதனால் தான் அவனின் சிறு சிறு செயல்களும் அவளுக்கு, அவன் தன்னை தவிர்க்கிறான் என்பது போல் ஓர் எண்ணத்தை உண்டாக்கி கோபத்தை ஏற்படுத்தியது.


சகுந்தலா “சௌமி சாப்பிட வா…” என்றதும், தான் இதைப்பற்றி யோசித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், தனது அன்றைய நாள் கெட்டு விடும் என உணர்ந்தவள் “வாறன் பெரியம்மா...” என்றவாறு வெளியே வந்து அவருடன் கதைத்தவாறு அவர் செய்து தந்திருந்த ஆப்பத்தை சாப்பிட்ட பின்னர், சாந்தியையும் அழைத்துக் கொண்டு கடைத்தெருவிற்கு சென்று தனக்குத் தேவையானவற்றை வாங்கினாள்.

அவளுக்கு முதலாம் ஆண்டு பரீட்சை நெருங்கிக் கொண்டு இருப்பதால், அவள் வேறு எந்த விடயங்களிலும் தனது கவனத்தை சிதற விடாமல், தனது பெற்றோரின் விருப்பப்படி சிறந்த பெறுபேற்றைப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், ஒரு நிமிடத்தையும் வீணாக்காமல் இரவு பகலாகப் படித்தாள். அவள் எதிர்பார்த்தது போல பரீட்சையை மிகவும் திருப்திகரமாக செய்தவள், இரண்டு மாத விடுமுறையை பெற்றவர்களுடன் சகோதரனுடனும் கழிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்குச் சென்றாள்.

தாய் கமலா அவளுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து அன்பாக பரிமாறினார், தந்தை அவளுக்குப் பிடித்த பழ வகைகள், பலகாரங்கள் போன்றவற்றை வாங்கிக் கொடுத்தார். அவள், தனது பெரியம்மா வீட்டில், பல்கலைக்கழகத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை பெற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டாள், நண்பர்கள் உறவினர்கள் வீடு, கோவில் திருவிழாக்கள் போன்றவற்றிற்குச் சென்று வந்தாள். தம்பி விக்ரம் படிப்பதற்கு உதவி செய்தாள். அவனை எப்படியும் டாக்டராக ஆக்க வேண்டும் என்பதே அவளின் கனவாக இருந்தது, எனவே அவனுடைய படிப்பில் மிகுந்த அக்கறை எடுத்து அவனுக்கு இலகுவாக புரியும் விதமாக ஒவ்வொன்றையும் விளங்கப் படுத்துவாள். இடையிடையே அகிலனைப் பற்றிய நினைவுகளும் வராமல் இல்லை. அவன் மீது சிறு வருத்தம் இருந்தாலும் அவனுடைய நினைவுகள் வரும் போது, உடலில் ஓர் இனம் புரியாத உணர்வு ஏற்பட்டு, மனம் பரவசமாகி விடும் அவளுக்கு. அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் எழும்.

இவ்வாறு இரண்டு மாத விடுமுறையையும் மிகவும் மகிழ்ச்சியாக கழித்துவிட்டு கொழும்புக்கு வந்தவளுக்கு பல்கலையும் வீடுமாக நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.
 
Top Bottom