ஒரு காதல் கனா காண்போம் - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 91

Member
Jun 12, 2026
48
27
18
காலங்கள் நகர, ஆங்கிலேயர்களின் கடும் சட்டதிட்டங்கள் இன்னும் கடுமையாய் இந்தியர்களை பலியாக்கியது.

ஓய்வே இல்லாமல் வேலை வாங்குவது, கிட்டத்தட்ட இயந்திரத்தை போல் மனிதர்களை நிற்க விடாமல், எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்க, தொழிலதிபர்களின் வேலை நேரங்கள் நீட்டிக்கப்பட்டது.

நாட்டில் ஆங்காங்கே ஒவ்வொரு மூலையிலும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சிகளும், போராட்டங்களும், எதிர் குரல்களும் வளர்ந்துக் கொண்டே வந்த சமயம்.

இதுவரை பெரிதாக நெடுவயல் கிராமத்தை பாதிக்காத ஆங்கிலேயர்களின் சட்ட திட்டங்கள், தற்போது இன்னும் கொடூரமாக டேவிட் என்ற அதிகாரியால் அரங்கேறியது.

நூற்பாலைகளில் இருந்து நெய்யப்படும் ஆடைகள், நெடுவயல் கிராமத்தில் பிரதானமாக செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் விலங்கு தோல் பொருட்கள் என்று அனைத்தும் உற்பத்தி செய்யப்பட்டு, அப்படியே படகுகள் மூலம் இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் வெளிநாடுகளில் நினைத்தும் பார்த்திட முடியாத அளவு பெரும் வரவேற்பை பெற்றது.

அந்நியர்கள் எவ்வளவு விலை கொடுத்து வேண்டுமானாலும் இந்திய பொருட்களை வாங்க தயாராக இருந்தனர்.

அதன் காரணமாகவே வேலை நேரம் அதிகரிக்கப்பட்டு மக்கள் ஓய்வில்லாமல் வேலையில் அமர்த்தப்பட்டனர்.

‘தன் பொறுப்பில் இருக்கும் இந்தப் பகுதியில் இருந்து அதிக அளவிலான பொருட்களை ஏற்றுமதி செய்ய வேண்டும்.’ என்று திட்டம் தீட்டிய டேவிட் விக்டர் மக்களை கடுமையாக வேலை வாங்கினான்.

“வேலை நிக்கவே கூடாது. பண்ணிரெண்டு மணி நேரம் முடிஞ்சதும் ஒரு மணி நேரம் எல்லாருக்கும் ஓய்வு.

திரும்பவும் ராத்திரி முழுக்க நிக்காம தோலை பிரிச்சு வேலைய பாத்துட்டே இருக்கணும்.” என்று டேவிட் ஆணையிட்டான்.

மேலும் பத்து வயதிற்கு மேல் இருக்கும் சிறார்கள் அத்தனை பேரும் தொழிற்சாலைகளில் வேலைக்காக இழுக்கப்பட்டனர்.

பெண்களும் சிறுமிகளும் நூற்பாலைகளில் பணியமர்த்தப்பட்டனர்.

தொழிற்சாலைகளில் சற்றே வயது முதிர்ந்தவர்கள் ,இந்தக் கடுமையான வேலை நேரத்தின் தாக்கத்தால் உடல் சோர்ந்து போய் பல்வேறு உபாதைகளுக்கு உட்பட்டனர்.

அப்போதும் “நிக்காத. எந்திரிச்சு போய் வேலையை பாரு.” என்று விடாது துன்புறுத்தப்பட்டனர்.

இதனை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்த இளங்கோவனுக்கு, ஆங்கிலேயர்களின் மீதும் அவர்கள் அடக்கு முறையின் மீதும் பெரும் கோபம் கொண்டிருந்தான்.

“ஓயாம ஓடிட்டே இருக்க, எங்கள மனுஷங்கனு நினைச்சிங்களா? இல்ல நீங்க வாங்கி போட்டு இருக்க இந்த இயந்திரம்னு நினைச்சீங்களா?

முன்ன விட இப்ப வேலை நேரம் அதிகம். ஆனா ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான் ஓய்வுனா, உங்களால இந்த வேலையை செய்ய முடியுமா?

எங்களுக்கு ஓய்வு நேரம் அதிகம் வேணும். எங்க கூலி அதிகம் வேணும்.” என்று இந்த சட்ட திட்டங்களுக்கு எதிராக கேள்வி எழுப்பினான் இளங்கோவன்.

“கூலி அதிகம் வேணுமா டா உனக்கு? இத்தனை பேரும் சரின்னு தலையாட்டிட்டு போகும் போது உனக்கு மட்டும் என்ன டா திமிரு?” என்று வெயிலில் அவனை கட்டி வைத்து, முதுகு தோலை உரித்தது எல்லாம் வேறு கதை.

‘அவர்களுக்காக வேலை செய்வது மட்டுமே தங்கள் வாழ்வின் இலக்கு.’ என்று மக்களின் வாழ்வியலை மாற்றி வரும் ஆங்கிலேயர்களின் நோக்கம், இளங்கோவனின் மனதில் ஒரு அடங்காத வெறியை ஏற்றியது.

அந்த சமயம் தான், தமிழகத்தில் இப்படி பல்வேறு இடங்களில் நடக்கும் அநீதிகளை எதிர்த்து ஒரு வலுவான கூட்டம் உருவானது.

விடுதலைக்காக போராடும் இளைஞர்கள் ஒன்றாக திரட்டப்பட்டு, அகிம்சை வழியை விடுத்து, போராட்டங்களில் பங்கு பெறும் பெரும் இயக்கமாக மாறியது.

இப்படி ஒரு வாய்ப்பிற்காக தானே இத்தனை நாட்களாக காத்திருந்தான் இளங்கோவன். தற்போது வாய்ப்பு கிடைத்ததும் ‘தானும் அந்த இயக்கத்தில் ஒருவனாக மாற வேண்டும். வெள்ளையர்களுக்கு எதிராக போராட வேண்டும்.’ என்று முடிவெடுத்தான்.

“டேய் மாப்ள. நான் மெட்ராஸ்ல உருவாகியிருக்க விடுதலை இயக்கத்துல சேரலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் டா.” என்று அலகுவேலிடம் முதலில் தன் முடிவை இளங்கோவன் கூறினான்.

“என்ன விளையாடுறியா டா? இந்த போராட்டம், ரத்தம், சுதந்திரம் இதெல்லாம் பேச்சுக்கு வேனா நல்லா இருக்கும். ஆனா வாழ்க்கைக்கு ஒத்து வராது.

களத்துல நின்னு போராடி குண்டடிப்பட்டு சாகப் போறியா? உனக்குன்னு குடும்பம் இருக்கு. பொறுப்பு இருக்கு. அது எல்லாத்தையும் விட, உன்னையே நம்பி ஒரு பொண்ணு இருக்கு.

அத்தனையும் விட்டுட்டு நீ ஏதோ தியாகி மாதிரி போய் போராட போறேன்னு சொல்ற?” என்றான் அழகுவேல்.

“ஏன் இதுவரைக்கும் நாட்டுல எங்கெங்கையே போராடி உயிரை விட்டவங்களுக்கு எல்லாம் குடும்பம் புள்ள குட்டி இல்லையா? இல்ல அவங்க எல்லாம் தான் மனுஷங்க இல்லையா?

இப்படி ஒவ்வொருத்தரும் அவங்க அவங்க சுயநலத்துக்காக பணிஞ்சு போறதுனால தான் நம்ம அவங்க ஷூ காலுக்கு கீழையே இருக்கோம். அவங்க நம்மள மிதிச்சுக்கிட்டே இருக்காங்க. நம்ம மிதி பட்டுக்கிட்டே இருக்கோம்.

வாழ்வோ சாவோ போராடி பார்க்கிறதுல தான் வீரம் இருக்கு.” என்று கூறிய இளங்கோவன் அவன் முடிவில் உறுதியாக இருந்தான்.

வீட்டிற்கு ஒற்றை பிள்ளையாக வளர்க்கப்பட்ட இளங்கோவனின் தந்தை அன்பழகன், மகனின் முடிவை கேட்டு பெரும் கோபம் கொண்டார்.

“இதெல்லாம் வயசு கோளாறு. எதிர்ல மலை மாதிரி நிக்கிறவங்கள, சின்ன எறும்பு படை நீங்க போய் சரிக்க முடியுமா?

உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு. ஒழுங்கா நாங்க பார்க்கிற பொண்ண கல்யாணம் பண்ணிட்டு குடும்பம் நடத்துற வழிய பாரு.” என்று கண்டிப்பாக கூறிவிட்டார் அன்பழகன்.

“நான் என் முடிவுல உறுதியா இருக்கேன். என்ன ஆனாலும் சரி, இங்கையே கிடந்து இவனுங்க கிட்ட அடியும் உதையும் வாங்கி சாவுறதுக்கு, ரெண்டுல ஒன்னு முயற்சி பண்ணி பாத்துட்டு செத்து போறேன்.

உங்கள மாதிரி நானும் கோழையா இருந்தா, நாளைக்கு என் பையனும் என்ன மாதிரி தான் இருப்பான்.

இன்னைக்கு என்ன மாதிரி இளைஞர்கள் எடுக்கிற ஒரு துணிச்சலான முடிவு, நாளைக்கு இந்த பூமியில் பிறக்க போற ஒவ்வொரு உயிருக்கும் சுதந்திரமான சுவாசத்தை கொடுக்கும்னா, அதுக்கு எத்தனை பேர் ரத்தம் இந்த மண்ணில் சிந்துனாலூம் தப்பில்லை.” என்று தந்தையை எதிர்த்து நின்றான் இளங்கோவன்.

“வீரமா பேச வேணா நல்லா இருக்கும். ஆனா இதெல்லாம் சுத்த முட்டாள் தனம்.” என்று அன்பழகனும் விடாமல் சரிக்கு சரி நின்றார்.

“அடிமையா இருந்து உங்க ரத்தத்துல இருக்க மான ரோஷம் எல்லாமே செத்துப் போச்சு பா. நீங்க என்ன சொன்னாலும் சரி நான் விடுதலை இயக்கத்தில் சேர தான் போறேன்.” என்று தன் முடிவில் உறுதியாக நின்ற மகனை கண்டு அன்பழகனுக்கு நெஞ்செல்லாம் அடைத்தது.

அவன் அன்னை பாரிஜாதமும், “நீ எனக்கு ஒத்த புள்ள. உனக்கு ஏதாவது நடந்துட்டா எங்களுக்குன்னு யாரு டா இருக்கா?” என்று கண்ணீர் சிந்தி கேட்டுக் கூட இளங்கோவனின் மனம் இளவில்லை.

தந்தையின் கண்டிப்பிற்கும் அடங்கவில்லை. தாயின் பாச பிணைப்பிற்கும் அடங்கவில்லை அவன்.

போராடும் வெறி, மண்ணை நேசிக்கும் இளைஞனாக அவனுக்குள் ஒவ்வொரு நாளும் ஊற்றெடுத்து கொண்டே இருந்தது.

அந்த வெறி அவனையே மறக்க வைத்துவிட்டது என்பது தான் உண்மை.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

“இப்படி யார் பேச்சையும் கேட்காம நீ விடுதலை இயக்கத்தில் சேரனும்னு ஒத்த காலில் நிக்கிறது நல்லா இருக்கா மாப்ள?

அந்த பொண்ணு கிட்ட இத பத்தி பேசிட்டியா? பாவம் இப்போ இவனுங்க போட்டு வச்சிருக்க புது சட்டத்தினால, வீட்டிலிருந்து அந்த பொண்ண வேலைக்கும் அனுப்புறது இல்ல.

இந்த நேரத்தில் நீயும் போய் இப்படி சொன்னா அந்த பொண்ணு என்ன பண்ணும்? கொஞ்சமாவது யோசி டா.” என்று வேலை முடித்து அந்த இரவு நேரமும் கடற்கரையில் நண்பனிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அழகுவேல்.

இளங்கோவனும் சிறிது நாட்களாக தொழிற்சாலைக்கும் செல்லாமல், தீவிரமாக இயக்கத்தில் சேரும் ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான்.

காதர் யாஸ்மினை ‘பள்ளிக்கு செல்ல வேண்டாம்.’ என்று கூறி வீட்டிலேயே அடைத்து வைத்திருப்பதால் அவளையும் காணக் கிடைப்பதில்லை.

தூரத்திலேனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதால் கிடைக்கும் சில வினாடி அமைதியையும் தொலைத்து தான் சுற்றித் திரிந்தான் இளங்கோவன்.

ஆயினும் காதலுக்காக அவன் லட்சியத்தை மாற்றிக் கொள்ள தயாராக இல்லை. ஆனால் அவன் லட்சியம் எங்கு வரை அவனை கொண்டு சென்று நிறுத்தும்? எதை எல்லாம் இழக்க வைக்கும்? என்று தான் தெரியவில்லை.

புறப்படுவதற்கு முன் எப்படியேனும் அவளை ஒரு முறை கண்டு, ‘தான் செல்லும் செய்தியை கூறி விட முடியுமா?’ என்று தான் அவனும் நாட்களாக தவம் இருக்கிறான்.

காந்தமாய் ஈர்க்கும் அவள் இரு விழிகளை கண்டு வெகு நாட்கள் ஆனது போல், அவன் மனம் ஏக்கம் கொண்டு வாடியது.

சிறைப்பட்டிருக்கும் அவளை காணும் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவனை காண, அவளும் தானே மீனாய் துடிக்கிறாள்.

நிசப்தமான அந்த கடற்கரையில் திடீரென்று கேட்ட மெல்லிய கொலுசொலியில், அதுவரை அவன் மனதிற்குள் மட்டும் இருந்தவள், நேரிலும் வந்து நின்றாள் அவன் முன்பு.

யாஸ்மினை கண்டதும் அழகுவேல் எதுவும் பேசாது அவர்களுக்கான தனிமையை கொடுத்து அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட, இளங்கோவன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து அசையாமல் அவள் கண்களையே பார்த்தான்.

அந்த நடுநிசி இரவு வேளையில், வீட்டில் அனைவரும் உறங்கியதும் யாருக்கும் தெரியாமல் ‘அவனை இன்று எப்படியும் கண்டுவிட வேண்டும்.’ என்ற நோக்கத்தில் வந்து நின்ற யாஸ்மினும் விழிகள் கலங்க அவனை தான் ஏறிட்டாள்.

வினாடிகள் கடந்து நிமிடங்களாக, வார்த்தைகளால் வடிக்க முடியா உணர்வுகளை இருவரது விழிகளும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்திக் கொண்டிருக்க, அந்த அமைதியை முதலில் கலைத்தவள் யாஸ்மின்.

அவன் அருகில் வேகமாய் சென்று அவன் நெஞ்சோடு அணைந்து கொண்டவள் விழிகள் ஈரத்தை சுரக்க, தானும் அவளை அணைத்துக் கொண்டான் இளங்கோவன்.

இருவருக்கும் அது முதல் அனைப்பு. அதில் பிரிவின் வலியும், ஏக்கமும் தான் முற்றிலும் நிறைந்திருந்தது.

“திரும்ப உங்கள பார்க்கவே முடியாது நினைச்சேன் தெரியுமா?” என்று அழுகைக்கு இடையே தேம்பிய நிலையில் வந்து விழுந்தது அவள் வார்த்தைகள்.

அவனிடம் பதில் இல்லை. மாறாக அவன் அணைப்பில் இன்னும் இருக்கம் தான் கூடியது.

“உன்கிட்ட நான் ஒன்னு சொல்லணும் யாஸ்மின்.” என்றவனது கூற்றில் அவனிடமிருந்து விலகி நிமிர்ந்து அவன் விழிகளையும் நோக்கினாள் யாஸ்மின்.

“மெட்ராஸ் மாகாணத்தில தமிழ் மக்கள் சார்பா இளைஞர்கள ஒன்னு சேர்த்து ஒரு விடுதலை இயக்கம் ஆரம்பிச்சிருக்காங்க.

நான் அதுல சேரப் போறேன்.” என்று இளங்கோவன் கூறியதில் அவனிடமிருந்து சிறிது சிறிதாக விலகியவள், உடல் அதிர்ச்சியில் நடுங்கியது.

தன்னவன் ‘நாட்டின் விடுதலையின் மீது அதிக ஆர்வம் உள்ளவன். அதற்காக போராடுபவன்.’ என்று அவள் அறிவாள்.

ஆனால் இப்படி இயக்கத்தில் சேர்ப்பவர்கள், வெளிப்படையாக ஆங்கிலேயர்களை எதிர்த்து அவர்களுடன் சண்டையிட்டு உயிரை மாய்த்துக் கொள்வதாக தந்தை எப்போதோ கூறிய நினைவு, தற்போது சரியாக அவள் மூளை வேறு எடுத்து கொடுத்தது.

சிலையாய் அதிர்ச்சியில் ஸ்தம்பித்தவளின் தோள் பற்றி அவன் உலுக்க, “நீ..நீ..நீங்க என்ன சொல்றிங்க?” தொண்டை அடைக்க மெல்லிய குரலில் கேட்டாள்.

“ஆமா யாஸ்மின். இங்க இருந்தா என்னோட இந்த நோக்கத்த நிறைவேத்த முடியாது. ஆதான் நான் இயக்கத்துல சேர போறேன். அதுக்கான ஏற்பாட தான் செஞ்சுட்டு இருக்கேன்.” என்று அவன் மீண்டும் கூறியதில் அவள் மீண்டும் வெடித்து அழுதாள்.

அவளின் திடீர் அழுகையில் குழம்பி பதறிய இளங்கோவன், “ஏய். யாஸ்மின் என்னாச்சு? ஏன் இப்படி அழுகுற?” என்று கேட்டான்.

தன் கண்ணம் தொடும் அவன் கையை தட்டி விட்டவளுக்கு, அவள் காதலை அடைய இடையில் இருக்கும் ஒவ்வொரு கதவுகளும் மூடிக்கொள்வதாய் தோன்றியது.

“இந்த முடிவ எடுக்கும் போது ஒரு நிமிஷம் கூட உங்களுக்கு நானோ நம்ம காதலோ நியாபகத்துக்கு வரவே இல்லையா?” என்றவள் கேள்வியில் அவள் பயம் ஏன் என்று அவனுக்கும் புரிந்தது.

“யாஸ்மின் நீ பயப்படுற மாதிரி எதவும் நடக்காது. நம்ம மண்ணுல சுதந்திர காத்த ஸ்வாசிக்கிற நாள் ரொம்ப தூரத்துல இல்ல…” என்று அவளை தேற்ற பார்த்தான்.

“அப்ப நம்ம காதல். அதுக்கு என்ன பதில் சொல்லுவிங்க? எங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ண மாப்ள பாக்குறாங்க.

வாச படிய தாண்ட கூட விடாம என்ன பூட்டி வெச்சுருக்காங்க. ஒவ்வொரு முறை என்ன பொண்ணு பாக்க வரும் போதும், உயிர கையில பிடிச்சுட்டு நிக்கிறேன்.

நரகத்துல வாழுற மாதிரி தினமும் வாழ்ந்துட்டு இருக்கேன். இப்ப கூட உங்கள பாத்தே ஆகனும்னு யாருக்கும் தெரியாம வந்துருக்கேன்.” என்று படபடவென தன் மனதில் இருப்பதை அழுகையோடு கொட்டி முடித்தாள்.

அவள் கூறியவற்றை எல்லாம் கேட்டு அதிர்ந்தவனிடம் மீண்டும் மௌனம் மட்டுமே‌.

அவனை பிடித்து உலுக்கியவள், “சொல்லுங்க. உங்களுக்கு நம்ம காதல விட உங்க லட்சியம் முக்கியமா? ஒருவேளை…. ஒருவேளை உங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சுனா? என் நிலைமை என்ன?” என்று பைத்தியம் பிடித்தவளை போல் கத்தியவளை தேற்ற அவனுக்கும் வழி தெரியவில்லை.

அவள் ஒன்றும் குழந்தை இல்லையே. ‘எனக்கு ஒன்றும் ஆகாது. பத்திரமாக வந்து விடுவேன்.’ என்று உரைத்து சென்றால் நம்பிவிட.

“ஏன் அமைதியா இருக்கிங்க? உங்களுக்கு இந்த கொள்கை லட்சியம் தான் முக்கியம்னா எதுக்காக என்ன பாத்திங்க?

வேண்டாம் வேண்டாம்னு விலகி போன என் பின்னாடி ஏன் வந்திங்க? சொல்லுங்க?” என்று அவன் சட்டையை பிடித்து கேட்டவள் புறம் தான் நியாயமும்.

ஆவேசமாக அவனை உலுக்கியவள் ஒரு கட்டத்திற்கு மேல் முற்றிலுமாக உடைந்து மீண்டும் அவன் நெஞ்சிலேயே தஞ்சம் புகுந்தாள்.

இளங்கோவனுக்கும் தன் தவறு அப்போது புரிந்தது.

இருவருக்குள்ளும் இருக்கும் இந்த வேறுபாடுகளே, தங்கள் காதல் சேர்வதற்கு பின்னாளில் பெரும் போராட்டமாக மாறும் என்று மறுத்தவளை வம்படியாக காதலில் விழ செய்தவன் இளங்கோவன்.

தற்போது அவனே தன்னை மறந்து அனைத்தையும் மறந்து, தன் நாட்டுக்காக போராட செல்கிறேன் என்று சொன்னால், அவள் எப்படி ஏற்றுக்கொள்வாள் என்று அவன் மனம் இடித்துரைத்தது.

உறவுகள், சுற்றம், சுய இன்ப துன்பங்கள் என்று அனைத்தும் மறந்து போராட்ட வெறியை மட்டுமே கொண்டிருந்த அவன் மனது, அவன் நோக்கத்திற்காக அவள் காதலையும் மறந்து விட்டதா?

-கனா 🤎
 

Author: STN - 91
Article Title: ஒரு காதல் கனா காண்போம் - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இளங்கோ ஏண்டா இப்படி?????
பாவம் டா யாஸ் 🥺🥺🥺🥺🥺....காதர் ஏன் இந்த திடீர் முடிவு?????
 
  • Love
Reactions: STN - 91