• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 1

STN - 29

Member
குழலில் காற்றாகினாள்

குழல் - 1

சென்னையின் உள்ளார்ந்த பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் தனிப் பொலிவுடன் உயர்ந்து நின்றது அந்த கட்டிடம்.

சாகரம் டிவி

ஒரு ஆணும் பெண்ணும் தங்களின் கரங்களில் கொடிபோல் உயர்த்திப் பிடித்திருக்க இருவரின் பிடிமானத்திற்கு மத்தியில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்தப் பெயர்.

தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான தனியார் தொலைக்காட்சி சேனல்.

அன்றைய நாள் அந்த குறிப்பிட்ட ஸ்டூடியோவிற்கு பார்வையாளர்கள் சென்று கொண்டிருந்தனர். முன் அனுமதிச்சீட்டு பெற்றவர்கள் சோதனை செய்து உள்ளே அனுப்பப்பட்டனர்.

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நேர்த்தியாக செட் போடப்பட்டு ஜொலி ஜொலித்துக் கொண்டிருந்த அந்த அரங்கத்திற்குள் பார்வையாளர்கள் சென்று அமரத் தொடங்கி இருந்தனர்.

தமிழ்நாட்டைத் தாண்டி உலக அளவில் மிகவும் பிரபலமாக உள்ள ஓர் நிகழ்ச்சி நடைபெறப் போகும் அரங்கம்தான் அது.

அந்த அலங்கரிக்கப்பட்ட மேடையின் மேலே ‘குயில்களின் கூடாரம்’ என்று அழகுத் தமிழில் டிஜிட்டல் எழுத்துக்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.

ஆம்… மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சிதான் அது.

வெற்றிகரமாக ஐந்து சீசன்களை முடித்து ஆறாவது சீசனில் காலடி எடுத்து வைத்திருக்கும் பிரபல நிகழ்ச்சி.

நிகழ்ச்சியின் இயக்குனரும், ஒளிப்பதிவாளரும், உதவியாளர்களும் தயார்நிலையில் இருந்தனர்.

இசைக்குழுவின் நபர்கள் தங்களது இசைக்கருவிகளுடன் அவர்களுக்கான இடத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கு வரும் போட்டியாளர்களும் அவர்களுக்கான இடத்தில் வந்து அமர்ந்திருந்தனர்.

உதவியாளினி நீட்டிய கண்ணாடியில் தன்னை ஒருமுறை சரி பார்த்து திருத்தம் செய்து கொண்டு மேடை ஏறி இருந்தாள் நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ரித்திகா.

இயக்குனர் தனது பெருவிரலை உயர்த்தி ரோல் கேமரா என்று சத்தமிட்டிருக்க சிரித்த முகமாக நிகழ்ச்சியை தொடங்கி இருந்தாள் ரித்திகா.

வணக்கம் மக்களே..!

உங்களின் அபிமான குயில்களின் கூடாரம் குக்கூ நிகழ்ச்சிக்கு உங்கள் அனைவரையும் வரவேற்பது உங்கள் ரித்திகா…

தனது வழமையான வார்த்தைகளுடன் நிகழ்ச்சியை தொடங்கி இருந்தாள்.

வழியும் வியர்வையை துடைத்தபடி அரக்க பறக்க அந்த அரங்கத்தை நோக்கி ஓடி வந்து கொண்டிருந்தாள் திலோத்தமா.

அரங்கத்தின் வெளியே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் தனது அனுமதிச் சீட்டினை நீட்டினாள்.

“என்னம்மா..? இன்னைக்கு லேட்டா..?”

சிரித்தபடியே கேட்டவரிடம் புன்னகையோடு தலையசைத்தவளுக்கு நிற்காமல் மூச்சு வாங்கியது.

“ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ணிட்டாங்களாண்ணா..?”

“இப்போதான்மா ஸ்டார்ட் ஆச்சு… ஒன்னும் பிரச்சனை இல்ல… அப்படியே ஓரமா போய் உன்னோட இடத்துல உக்காந்துக்கோ…”

அடிக்கடி அவளை பார்த்து பரிச்சயமாகி இருந்த நபர் என்பதால் சலுகையாக உள்ளே அனுப்பி வைத்தார்.

கூடுதலாக‌ “இப்படி மூச்சு வாங்குது… தண்ணி குடிச்சிட்டு போ…” என்று தனது தண்ணீர் போத்தலை அவளிடம் நீட்ட அதனை வாங்கி வேகமாய் பருகியவள் நன்றி கூறி வாயை துடைத்தபடி ஓரமாக நுழைந்து வழக்கமாக அவள் அமரும் இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

அவள் உள்ளே நுழைந்த வேளையில்தான் நடுவர்களை ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தாள் தொகுப்பாளினி.

‘நல்லவேளை… சரியான நேரத்துக்கு வந்துட்டேன்…’

நிம்மதி பெருமூச்சு விட்டவள் தன்னை நிதானப்படுத்தி அமர்ந்து கொண்டாள்.

திலோத்தமா…

அளவான உயரம்.. எழிலான உடல்வாகு… கண்ணை கொத்தாத மெல்லிய சிவந்த நிறம்… உருண்டையான முகம்…அடர்ந்த சுருண்ட தலைமுடி… பளிச்சென கவர்ந்திழுக்கும் பளிங்கு கண்கள்…பார்த்தவுடன் பச்செக் என மனதில் ஒட்டிக் கொள்ளும் பாந்தமான முகம்…

ஆக மொத்தத்தில் சாமுத்திரிகா லட்சணங்கள் பொருந்திய ஓர் அழகுப்பெண்.

சிறு வயதாக இருக்கும்போது ஒரு விபத்தில் தாய் தகப்பனை பறி கொடுத்து தாய்மாமனின் வீட்டில் உபரியாக இணைத்துக் கொள்ளப்பட்டவள்.

மாமனுக்கு அவள்மேல் பாசம் உண்டு என்றாலும் அத்தையின் அராஜகத்தின் முன் அவரது அன்பு செல்லுபடி ஆவதில்லை.

“நாமளும் தலைநாள்ல பொட்டப் புள்ளைய பெத்து வச்சிருக்கோம். மாச சம்பளத்துல சராசரி வாழ்க்கை ஓட்டுற நமக்கு இவ கூடுதல் சுமை… உங்களுக்கு புரியுதா இல்லையா..? வளர்த்து ஆளாக்கி படிக்க வைக்கிறது ஒரு பக்கம் இருந்தாலும் கட்டிக் கொடுக்கணும். நாம பெத்ததுக்கு சேர்த்து வைக்கவே முழி பிதுங்குது. இதுல இவளையும் வச்சுக்கிட்டு என்ன பண்றது..? நான் பேச ஆரம்பிச்சா காது செவிடான மாதிரியே கடந்து போயிர வேண்டியது. இப்ப சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க. அடுத்த வருஷம் எல்லாம் காசு செலவு பண்ணி படிக்க வைக்க முடியாது. கவர்மெண்ட் பள்ளிக்கூடம்தான். நீங்க உங்க தங்கச்சி மகளையே பார்த்துட்டு இருந்தா நானும் என் புள்ளையும் தெருவுல நிக்க வேண்டியதுதான்…”

அருந்ததியின் விடாத நச்சரிப்பும் புலம்பலும் திலோத்தமாவின் காதுகளையும் எட்டத்தான் செய்தன.

ரோஷத்தையும் கோபத்தையும் காட்டும் இடத்தில் அவள் இல்லை. அவளுக்கு ஒண்டிக் கொள்ள ஒரு இடம் வேண்டும். பெண்ணாக பிறந்துவிட்டாள். விறைத்துக் கொண்டு வெளியில் சென்று தனித்து வாழும் வயதும் பக்குவமும் இன்னும் அவளுக்கு வந்திருக்கவில்லை.

பல்லைக் கடித்து தன் நாட்களை நகர்த்தினாள். ஆனால் படிப்பில் மட்டும் மிகவும் சுட்டி. படிப்பு ஒன்றே தன் எதிர்காலத்தை நிலைநிறுத்தும் என்று மனதில் தெளிவாக ஆழப் பதிந்து விட்டதால் வெறிகொண்டு படித்தாள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்டத்தில் முதல் மாணவியாக வந்திருந்தாள்.

அவளது அடுத்த இரண்டு வருட படிப்பிற்கான முழு கல்விச் செலவையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ள அரசுப் பள்ளியில் அவளை சேர்க்க வேண்டும் என்று ஆடிக்கொண்டிருந்த அருந்ததியின் வாய் தன்னிச்சையாகவே மூடிக்கொண்டது.

பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்களுடன் வெளியேறி ஒரு நல்ல கல்லூரியில் உதவித்தொகை மூலம் எப்படியேனும் உள்ளே நுழைந்து விடவேண்டும் என்று அரும்பாடுட்டு படித்தவள் நினைத்ததில் வெற்றியும் கண்டாள். பள்ளியின் முதல் மாணவி என்பதை தாண்டி மாநிலத்தின் மூன்றாவது இடத்திற்கு வந்திருந்தாள்.

முதன்மையான அரசு கல்லூரியில் முழுமையான அரசாங்க உதவித்தொகையுடன் அவள் ஆசைப்பட்ட மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பில் இடம் கிடைத்தது.

கண்களையும் கவனத்தையும் எங்கும் திசை திருப்பாமல் மீண்டும் கல்வியே கண்ணாக தனது முழு கவனத்தையும் பதித்து வெறிகொண்டு படித்து கோல்ட் மெடலெஸ்ட்டாக அந்த கல்லூரியில் இருந்து வெளியேறி இருந்தாள்.

அவளது மதிப்பெண்களுக்கு கேம்பஸ் மூலம் உடனடியாக ஒரு பெரிய நிறுவனத்தில் பணியும் கிடைத்தது. சென்னைக்கு குடிபெயர்ந்திருந்தாள். தனித்து நின்றபோது தாங்கிப் பிடித்த தனது மாமா குடும்பத்தின்மீது இன்றளவும் அபிமானம் உண்டு.

அவ்வப்போது சென்று வருவாள். உறவு என்று சொல்லிக்கொள்ள அவர்கள் மட்டுமே துணை. அவர்களையும் முழுமையாக தள்ளி வைத்துவிட முடியாது அல்லவா.

அவள் அத்தை அருந்ததிக்கு அவள் திருமண விஷயத்தில் ஒரு பெரும் பாரம் நீங்கிய உணர்வு. அவளுக்கு தேவையானவற்றை அவளே பார்த்துக் கொள்வாளே... மாப்பிள்ளை பார்க்கும் வேலையை கொடுத்தால் அதை மட்டும் வேண்டுமானால் பொறுப்போடு எடுத்துச் செய்யலாம் என்ற அளவில்தான் அவளது சிந்தனை. அது திலோத்தமாவிற்கும் தெரியும்.

அத்தையின் மீதோ மாமாவின் குடும்பத்தின் மீது அவளுக்கு கோபமோ வருத்தமோ வருவதில்லை. நடைமுறை எதார்த்த வாழ்க்கையின் நிதர்சனத்தை தான் அருந்ததி யோசித்து இருக்கிறார். உண்மைதானே… தனக்கு மிஞ்சிதான் தானதர்மம். தனக்கே பற்றாக்குறையில் இருக்கும்போது ஒண்டிக் கொண்டவளையும் அரவணைத்து வாழ வேண்டும் என்ற எண்ணம் சராசரி மனித மனதில் எழுந்து விடாதல்லவா.

இன்று நல்ல சம்பளத்தில் நல்ல நிறுவனத்தில் நிறைவான வேலையில் அமர்ந்திருக்கிறாள் திலோத்தமா.

ஆயிற்று… சென்னைவாசியாக மாறி நான்கு வருடங்கள் ஓடி இருந்தன.

சலனமற்று சபலமற்று ஒரே நேர்கோட்டில் ஓடிக் கொண்டிருந்தவள் தன் வாழ்க்கைத் தரத்தை நிலைநிறுத்திக் கொண்டபின் விழிகளை அகல விரித்து உலகின் அழகியலை ஆராய ஆரம்பித்தாள்.

ஆராய ஆரம்பித்ததின் பலன்..??

கடந்த மூன்று ஆண்டுகளாக குக்கூ (குயில்களின் கூடாரம் என்பதுதான் மக்களிடையே சுருக்கமாக குக்கூ என்று செல்லமாக அழைக்கப்படுகிறது) நிகழ்ச்சியின் தீவிர ரசிகையாக மாறிப் போயிருக்கிறாள்.

இசையின் மீது அத்தனை வேட்கையா..?

ஆம்… அந்த ஒற்றை இசையின் மீது…

அந்த இசைக்கு உயிர் கொடுப்பவன் மீது…

பிரபலமான இந்த இசை நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ஆரம்பித்து அந்த சீசன் முழுமையாக நடைபெறும் ஆறு மாத காலமும் அவள் வாழ்வும் மனமும் தனி அழகு பெற்று ஜொலிக்கும் காலங்கள்.

ஒற்றை நிகழ்ச்சியைகூட தவறவிட்டதில்லை… எத்தனை வேலைகள் இருந்தாலும் பறந்து ஓடி வந்து விடுவாள்.

நேரலையாக அந்த இசை சங்கமத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதை தாண்டி நேரடியாக அவனைப் பார்க்க வேண்டும்.

அவனுக்காகத்தான் இந்த ஓட்டமும்… வேட்கையும்.

இதோ நிகழ்ச்சி ஆரம்பித்தாயிற்று…

அனைவரின் விழிகளும் போட்டியாளர்களின் மீதும் அவர்கள் பாடும் பாடல்கள் மீதும் லயித்திருக்க… அவள் விழிகள் மட்டும் அவனிடம்.

யார் அவன்..??

தனது இசையால் அனைவரின் இதயங்களையும் சாறாய் பிழிந்து மாற்று லோகத்திற்கு அழைத்துச் செல்லும் வித்தைகளை தன்னகத்தே கொண்டிருப்பவன் அவன்.

அனைவரின் விழிகளும் நேர்கொண்டு ஆவலாக போட்டியாளரை நோக்கியிருக்க அவள் விழிகளோ பக்கவாட்டாக திரும்பி இசைக்குழுவில் ஒருவனாக அமர்ந்திருக்கும் அவனின் மீது காதலாக படித்திருந்தன.

அவன்…

அமரவர்மன்…

புல்லாங்குழல் கலைஞன்…

நேரடியாக கிருஷ்ண பரமாத்மாவிடமே வித்தைகளை கற்றுக் கொண்டானோ என்று யோசிக்கும் அளவிற்கு அவன் நாபிக் கபலத்திலிருந்து குழலின் ஆற்றுவாய் துளை வழியே ஊதி வெளியேற்றும் அந்த காற்றும் துளைகளை தொட்டுத் தொட்டு மீட்டும் அந்த விரல்களும் செய்யும் வர்ணஜாலங்களில் தங்களை தொலைக்காதவர்கள் இருக்கவே முடியாது.

அனைவருக்கும் அவனது இசையின்மீது மயக்கம் என்றால் அவளுக்கோ இசைப்பவன் மீதும் கூடுதல் மயக்கம்.

இசைக்குழுக்கான சீருடையுடன் அமர்ந்திருந்தவனை அவள் விழிகள் வேட்கையோடு வேட்டையாடின.

மெரூன் நிறத்தில் வெள்ளைப் பூக்களை தெளித்ததை போன்ற சட்டையும் இளமஞ்சள் நிற டெனிம் பேண்ட்டும் அணிந்து அமர்ந்திருந்தவன் மற்ற சக கலைஞர்களைத் தாண்டி அவள் கண்களுக்கு தனித்துவமாகத் தெரிந்தான்.

வழக்கம்போன்றே கண்களில் கூலர்ஸ்.

நெற்றியைத் தாண்டி புருவத்தோடு போர் செய்யத் துடிக்கும் அடர்ந்த சிகை.

இறுக்கமான சிவந்த முகம்… எப்போதாவது அதிசயமாக விரியும் இதழ்கள்… நடுவர்கள் பாராட்டும்போது தவிர்க்க முடியாமல் அந்த இதழ்கள் கொஞ்சமே கொஞ்சம் விரியும்.

செதுக்கி நேர் செய்த நாசியும் அழுத்தமான இதழ்களும் இன்னும் கூடுதல் கவர்ச்சி அவனுக்கு.

வலது கையில் ஓர் வெள்ளி காப்பு… வலது மோதிர விரலில் ஒரு வெள்ளி மோதிரம்.

அவளது பார்வையில் அவனது அளவீடுகள் அவ்வளவே…

இசையை சுவாசித்து வாழ்பவன் என்பது அவனது நுணுக்கங்களில் தெளிவாகத் தெரியும்.

முதல் பாடல் ஆரம்பமானது…

அமரவர்மனின் புல்லாங்குழல் இசையோடு…

அவள் விழிகள் அவன்மீதே சிமிட்டாது பதிந்திருக்க இசைச் சாமரம் அவனிடம் வீசத் தொடங்கியிருந்தது.

வளையோசை கலகலகலவென பாடலுக்கான குழலிசையை அவன் மீட்டத் தொடங்கி இருக்க அனைவரின் பார்வையும் அவன் மீதுதான்.

அவளோ இதழ் விரிந்த புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இசையின் முடிவில் பாடல் தொடங்க பார்வைகள் அனைத்தும் போட்டியாளரின் மேல் பதிந்து போயிருந்தது.

திலோத்தமாவின் விழிகள் மட்டும் அந்த ஒருவன் மீதே படிந்து போயிருந்தது.

இங்கு வந்து அமரும் போதெல்லாம் அவள் விழிகள் அவனில் மட்டுமே முழுமை பெற்று நின்றிருக்கும்.

பாடுபவர்கள் யார்? என்ன பாடல் பாடுகிறார்கள்..? என்ற கவனமெல்லாம் இரண்டாம் பட்சம் மூன்றாம் பட்சமாக தள்ளி வைக்கப்படும்.

அவள் ஓடி வருவது அவனைப் பார்க்க மட்டும்தானே…

இசைக்காத நேரங்களில் விரல்களால் கன்னத்தில் தட்டுவதும், புல்லாங்குழல் கொண்டு தொடையில் மெல்ல தட்டுவதும், ஒற்றைக் கையால் தலையை கோதுவதும், பாடல் பாடுபவரின் மீது முழு கவனத்தை வைத்திருப்பதுமாக அவனது செய்கைகளையும், பாவனைகளையும் செப்பமாக ரசித்துக்கொண்டே இருப்பாள் திலோத்தமா.

மூன்று ஆண்டுகளாக எட்ட நின்று இதே ரசனைதான்…

நெருங்கிச் செல்ல மனம் துடியாய் துடித்தாலும் தயக்கம் பெரும் தடை போடுகிறது…

எந்தப் புள்ளியில் அவன்மீது விழுந்த பார்வை காதலாக மாறிப் போனது என்று அவளுக்கு தெரியாது…

அப்படி ஒருத்தி தன்னை உருகி உருகி காதலிக்கிறாள்… தவறாமல் நிகழ்வுகளில் கலந்து கொண்டு விழிகளால் தன்னை உரித்து உப்புக் கண்டம் போட்டுக் கொண்டிருக்கிறாள்… காதல் பார்வையால் தன்னை கபளீகரம் செய்கிறாள் என்பதை பற்றி எல்லாம் அவன் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

நிகழ்ச்சி முடிந்து தனது குழு நண்பர்களோடு பேசி சிரித்தபடி பக்கவாட்டுப் பகுதியில் அவன் கடந்து செல்லும்வரை அவள்
விழிகள் அவனையே துரத்திக் கொண்டிருக்கும்.

வார்த்தைகளுக்கு வேலை இன்றி விழிகளின் வழியே மட்டும் தனது காதலை சிந்தி சிதறடித்துக் கொண்டிருக்கும் இவள் காதல் பயணத்தின் அடுத்த நிலை..???

(தொடரும்)
 
Top Bottom