• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

குழலில் காற்றாகினாள் - 15

STN - 29

Member
குழல் - 15

ஆயிற்று… நான்கு நாட்கள்… கண்மூடித் திறக்கும் முன் ஓடியே போயிருந்தன.

அன்று அமரனின் சாட்டையடி வார்த்தைகளை இதயத்தில் ரத்தம் கசிய வாங்கிச் சென்றவள்தான். அதன் பிறகு அவன் எதிரில் அவள் வந்திருக்கவே இல்லை. அவள் குரலை தொலைத்து, மங்கலாக மனதில் பதிந்துபோன அந்த பிம்பத்தை தொலைத்து, அவளை உச்சிவரை நுகர்ந்து ரசித்த வாசத்தை தொலைத்து, அர்த்தமற்ற அடிகளை பதித்தபடி தனது நிமிடங்களை நகர்த்திக் கொண்டிருக்கிறான் அமரன்.

மூன்று நாட்களில் மூச்சு முட்டிப் போனவனுக்கு நான்காவது நாளை நகர்த்தவே முடியவில்லை. இப்படி ஒரு பெரிய விலகல் அவளிடம் எழ வேண்டும் என்றுதான் அன்று அப்படி பேசி இருந்தான். அவன் நினைத்ததுதான் நடந்திருக்கிறது. ஆனால் அவனால் மகிழ முடியவில்லையே.

இரவு நேரத்தில் எதிர் பால்கனியில் தெரியும் வெளிச்சக் கீற்று அவன் இதயத்தில் இறங்கி ஏகாந்த புத்துணர்வை உடலில் புகுத்தி கிச்சு கிச்சு மூட்டி சிலிர்ப்படையச் செய்யும். இன்று எதிர்வீடு அவன் இதயத்தை போன்றே இருண்டு கிடக்கிறது.

முந்தைய நாளில் இருந்து இளங்கோவும் அவனிடம் பேசுவதில்லை. நண்பர்கள் இருவருக்கும் அவளை முன்னிறுத்திதானே அத்தனை சண்டை நிகழ்ந்தது.

“ஏன்டா..? ஏன்டா இப்படி இருக்க..? பார்வை தொலைஞ்சு போனா மனசாட்சி, உணர்வு, அன்பு இந்த மாதிரி நல்ல விஷயங்கள் எல்லாமே மொத்தமா தொலைஞ்சு போயிடுமா..? அவளை கொன்னு பொணமாதானே வீட்டை விட்டு வெளியே அனுப்புன. நீ நினைச்சது நடந்துருச்சு… போய்ட்டா… மொத்தமா இங்கே இருந்து போயிட்டா... தங்கை பாசம்னா என்னென்னு மனப்பூர்வமா காட்டின ஒரு நல்ல பொண்ண வார்த்தையாலேயே அடிச்சு விரட்டிட்டியே… இப்போ உனக்கு நிம்மதியா..? அவ உன்கிட்ட மனசதானடா கேட்டா… பிடிக்கலைன்னா கொடுக்காம ஒதுங்கிப் போய் இருக்கலாமே… என்ன வார்த்தை வேணுனாலும் பேசுவியா..?”

விடாமல் கத்திக் கொண்டிருந்த இளங்கோவின் வார்த்தைகளுக்கு பதில் பேசாமல் சிலையாக அமர்ந்திருந்தான் அமரன். பிரதிபலிப்புகளை காட்டாத அந்த பாறை போன்ற முகம் அவனுக்கு பழக்கப்பட்ட ஒன்றுதான். ஆனால் இதயத்திற்குள் கொந்தளிக்கும் இடி ஓசையை அவன் மட்டுமே அறிவான். பல வலிகளை தாங்கி பழக்கப்பட்டவனுக்கு இதுவும் பழகிப் போயிருந்தது. ஆனால் இதுவரை சுமக்காத பெருவலியில் இதயம் கனத்தது.

சமீப நாட்களாக இவன் மனம் அவளை நோக்கிச் சாய்ந்து சரிந்து போனது இவனுக்கு நன்றாகவே தெரியும். அந்த மங்கலான எதிர் வீட்டு பால்கனி ஒளி, எதிரில் வரைந்து வைத்த நிழல் பிம்பம் போன்ற அவளது உருவம், அவளது குரல், அவனுக்குள் ஊடுருவி இறங்கிப் போன அவளது வாசம் என்று அவனுக்குள் மொத்தமாக இறங்கிப் போயிருந்தாள் திலோத்தமா.

அவள் காதல் புரிந்தது… நேசம் புரிந்தது… அதிலிருந்த நிஜம் புரிந்தது… இதற்குமுன் அவன் அழகிற்காகவும் வசதிக்காகவும் நெருங்கி வந்த பெண்கள் அவனிடம் இருந்த குறையினால் நடைமுறை எதார்த்தத்தோடு விலகிப் போயினர். இதுதானே எதார்த்தம் என்று எண்ணி தனக்குத்தானே சமாதானம் கூறிக் கொள்வான்.

பிடிபடாத வெற்றுப் பார்வையோடு வாழும் ஒருவனுடன் காலம் முழுக்க கைகோர்த்து வாழ முடியும் என்பது நிதர்சனத்தில் சாத்தியம் இல்லை என்பது அவனது மூளை உணர்த்தும் உண்மை. தன்மேல் நிஜநேசம் கொண்ட ஒருத்தி தன்னோடு பயணிக்க தொடங்கியபின் அவள் வாழ்க்கை முழுக்க நிறைய தியாகங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். இயல்பாக பெண்களுக்கே இருக்கும் ஆசைகளை துறக்க வேண்டும்.

இல்லற வாழ்க்கையில் தியாகங்களை தாண்டி குடும்பம் குழந்தைகள் என்ற அடுத்தடுத்த நகர்வுகளில் அவள் எதிர்கொள்ளப் போகும் வலிகளும் சவால்களும் காலம் முழுக்க தோள்மேல் சுமையாகி அவனும் கூடுதலாய் ஏறிக்கொள்ள அவளது காலம் முழுக்க பாரத்தை சுமந்து அந்த வாழ்க்கை அவளுக்கு சுகிக்காது என்று ஆழ்ந்து நம்பினான் அமரன்.

இந்த எண்ணம் தவறு என்று கூற முடியாது. இதுதான் நிதர்சனம்... தனக்காக தன்மேல் கொண்ட நேசத்திற்காக ஒரு பெண்ணின் அழகிய வாழ்க்கை இருள் அடைந்து போவதா..? இதைத்தான் அவன் மனம் அவனிடம் கேள்வியாக தொடுத்துக் கொண்டே இருந்தது.

அடுத்த பெண்ணின் நல்வாழ்வுக்காக இவன் ஏன் உருகுகிறான்..? இவனும் அவளை நேசிக்கிறானே.

அருகில் அமர்த்தி அக்கறையான வார்த்தைகளால் இவற்றை கூறினால் அவளிடம் எடுபடுமா..? இன்னும் கூடுதலாக காதல் கொள்வாள். அவனை பிரியவே மாட்டேன் என்று அடம்பிடிப்பாள்.

வார்த்தைகளுக்கு எப்போதுமே வலு அதிகம்… வீரியமும் அதிகம்... நாக்கைவிட கொடுமையான விஷம் கொண்ட பாம்பு உலகில் இல்லவே இல்லை. அந்த நாக்கு சொடுக்கும் வார்த்தைகள் மட்டுமே வாழ்வின் வர்ணங்களை மாற்றும் வல்லமை படைத்தவை. ஆதலால் விரும்பியே அதனை கையில் எடுத்தான்… வேண்டுமென்றே அவள் இதயத்தில் அடித்தான்.

இதோ அவன் நினைத்தது நடந்துபோனது. ஆனால் காதல் கொண்ட சிறு இதயம் தாங்க முடியாமல் கனத்து தவிக்கிறது. கூடுதலாக உயிர் நண்பனின் சுடுவார்த்தைகளும் இரவு உறக்கத்தையும் சேர்த்து பறித்துக் கொள்கின்றன.

தனக்காகவே தன்மேல் கொண்ட நலனுக்காகவே தனது நண்பனின் வாழ்க்கையும் பறிபோகிறதோ என்ற குற்றஉணர்வு நெருஞ்சி முள்ளாய் இவன் இதயத்தில் நெடுநாட்களாய் தேங்கி நிற்கிறது. தனக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்துச் சென்றுவிட்டால் தன் நண்பன் தனித்துப் போவானே என்றுதானே இளங்கோகூட தனது திருமணத்தைப் பற்றி யோசிப்பதே இல்லை.

அனைத்திற்கும் தீர்வு காண வேண்டும் என்று முழுமையாக யோசித்துவிட்டான் அமரன். வருடக் கணக்காய் இதயத்தோடு ஒன்றிப் போன நட்பினை அத்தனை எளிதில் புறந்தள்ள முடியாது. பேசிப் பேசிக் கரைத்து தான் அவனுக்கான வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும். ஆனால் நெஞ்சில் முளைத்துப் போன இந்த காதலை உள்ளுக்குள் போட்டு பூட்டிக் கொள்ள முடியும். சம்பந்தப்பட்டவளை தள்ளி நிறுத்த முடியும். அதற்கான முதல் முயற்சியில் வெற்றியும் பெற்றுவிட்டான் அமரன்.

வெறுத்துச் சென்றாளா..? வேண்டாம் என்று சென்றாளா..? என்று புரியாத நிலையில்தான் தவித்துக் கொண்டிருக்கிறான் இளங்கோவும். எத்தனையோ முறை அழைத்துப் பார்த்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை.

“நான் என்னம்மா தப்பு பண்ணினேன்..? என்னையும் ஏன் ஒதுக்கிட்ட..?” பிரியம் கொண்ட சகோதரனாக மனம் குமுறினான் இளங்கோ.

குறுஞ்செய்திகள் அனுப்பிப் பார்த்தான். அவை பார்க்கப்படவே இல்லை.

பொறுத்துப் பார்த்தவன் ரஞ்சனிக்கு அழைத்திருந்தான்.

சரியான சந்தர்ப்பத்தை அமைத்துக் கொண்டு அவளை நேரில் சந்தித்து தான் அவள் மேல் கொண்ட நேசத்தைப் பற்றி தெரிவிக்க வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தவன் தன் நண்பன் செய்த செயலால் தனக்குள் பூத்திருந்த காதலையும் மனதோடு அமிழ்த்து வைத்துக் கொண்டான்.

ரஞ்சனி திலோத்தமாவிற்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவள் என்பதும் தன் தோழியின்மேல் எத்தனை அன்பு கொண்டவள் என்பதும் இவனுக்கு தெரியும். அமரனின் செயலில் அளவு கடந்த கோபத்தில் நிச்சயமாக இருப்பாள். அவன்மேல் உள்ள வெறுப்பை அப்படியே தன்னிடமும் திருப்புவாள்… திணிப்பாள்… அத்தோடு தனக்குள் உதித்த காதலை அவளிடம் கூறினால் நிச்சயமாக மறுப்பாள் என்றும் புரிந்தது. அது பற்றி பேசும் எண்ணமும் தற்போது உதித்திருக்கவில்லை.

திலோத்தமாவை பற்றி தெரிந்து கொள்வதற்காக மட்டுமே அவளுக்கு அழைத்தான்.

“நாலு நாளாச்சு… வீட்டு பக்கம் வரல… அவ வீட்லயும் இல்ல… என் போன் அட்டென்ட் பண்றதே இல்ல… அவகூட பேசணும்… அவகிட்ட போன் குடு…”

தேவையற்ற வார்த்தை ஜாலமின்றி அளவெடுத்தது போன்ற வார்த்தைக் கோர்வையுடன் தள்ளி நின்ற நிலையிலேயே பேசினான் இளங்கோ.

“அவ இல்ல… ட்ரைனிங் போயிட்டா…”

அதைவிட அளவெடுத்த வார்த்தை அவளிடம்.

“எங்கே..?”

“பெங்களூர்…”

“ஏன் பொய் சொல்ற ரஞ்சனி..?”

“நான் ஏன் பொய் சொல்லணும்..?” என்றவளின் குரல் ஓங்கி ஒலித்தது.

“அவ ட்ரைனிங் போய் நாலு நாளாச்சு.. வர்றதுக்கு இன்னும் மூனு நாள் ஆகும்…”

“என்கிட்ட எதார்த்தமா போன்ல பேசி இந்த விபரத்தை சொல்லி இருக்கலாமே… என்னை ஏன் அவாய்ட் பண்றா..?”

“அதை என்கிட்ட கேட்டா எனக்கு என்ன தெரியும்..? நாலு நாளைக்கு முன்னால ஆபீஸ் வேலை முடிஞ்சு இங்கே வந்தா. அவளுக்கு பெங்களூர்ல ஒரு வாரம் ட்ரைனிங் போட்டு இருக்கிறதா சொல்லிட்டு கிளம்பி போயிட்டா… எனக்கு தெரிஞ்சது அவ்வளவுதான்…”

“நீ பேசறதுல உண்மை இருக்கிற மாதிரி எனக்கு தெரியல…”

“தெரியலன்னா அதுக்காக நான் ஒன்னும் பண்ண முடியாது… ஒரு விஷயம் மட்டும் நல்லா புரியுது… ஏதோ ஒரு வகையில உங்க பிரண்ட் அவ மனசை நோகடிச்சிருக்கார்… சரிதானே…”

“அவ உன்கிட்ட எதுவும் சொல்லலையா..?”

“அப்போ எதுவோ நடந்திருக்கு… என்ன நடந்துச்சு..?”

“ரஞ்சனி… தெரியாத மாதிரியே கேக்காத… அவன் பேசினது தப்புதான்… நேத்துல இருந்து நானும் அவன்கூட பேசறது இல்ல.. ஆனா ஒரு உண்மையை சொல்றேன்… இந்த நாலு நாளா திலோவை அமரன் ரொம்ப மிஸ் பண்றான். வெளியில காட்டிக்கல… ஆனா என்னால அவனை உணர முடியும். எனக்கு நிச்சயமா தெரியும்… அவனுக்கு அவமேல காதல் இருக்கு… ஏதோ ஒரு வேகத்துல அப்படி வார்த்தைகளை கொட்டி பேசிட்டான்… அதுக்காக அப்படியே விட்டுட்டு போய்டுவாளா..? அவன்தான் வேணும்னு பிடிவாதம் இருந்தா நிறைய கஷ்டங்களை கடந்து வரணும்னு ஏற்கனவே அவகிட்ட படிச்சு படிச்சு சொன்னேனே… எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டுதானே அவனை நெருங்கினா… அப்புறம் கோவிச்சுட்டு போனா என்ன அர்த்தம்..?”

ஆதங்கமான அவனது வார்த்தைகள் சீற்றமாகத்தான் முடிந்திருந்தன.

“ஓ… உங்க பிரண்டு கொட்டிக்கிட்டே இருப்பார்… இவ குனிஞ்சுக்கிட்டே போகணுமோ..? அப்படி என்ன பெரிய சமஸ்தானத்து ராஜாவாம் அவர்..? கண்ணு தெரியாதப்பவே இவ்வளவு திமிர்… எல்லார் மாதிரியும் பார்வை தெளிவா இருந்தா பல்லக்குலதான் பவனி வந்திருப்பார் இல்லையா..? அதுக்குதான் கடவுள் இந்த நிலைமையில உட்கார வச்சிருக்கார்…”

இவள் பேசி முடிக்கவில்லை… “ஏய்ய்ய்…” என்று இவள் காது ஜவ்வே அறுந்து விழும் அளவுக்கு சத்தமிட்டு கத்தி இருந்தான் இளங்கோ.

ஒரு நொடி உலுக்கி விழுந்திருந்தாள் ரஞ்சனி.

“போன்ல பேசினதால நீ தப்பிச்ச… இதுவே என் முன்னால நீ இருந்திருந்தா உன் மூஞ்சி முகரை எல்லாம் பேத்திருப்பேன்… அவன் குருடனாவே இருந்துட்டுப் போறான்… அவனுக்கு பார்வையா நான் இருப்பேன்டி… எப்பவும் இருப்பேன்... அவனப்பத்தி பேசுற தகுதி எல்லாம் உனக்கு கிடையாது. இனி ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை அவனைப் பத்தி தப்பா ஏதாவது உன் வாயில வந்தது உன்னை கொன்னு போட்டுருவேன்… ச்சீ…”

கோபத்தோடு வெறுப்பையும் கலந்து பேசியவன் பட்டென இணைப்பை துண்டித்திருந்தான்.

ரஞ்சனியின்மேல் அளவு கடந்த கோபம் பொங்கியது இளங்கோவிற்கு. இவளையா..? இவளையா என் மனம் நேசித்தது..? அவன் குறையைக்கூட நேசித்த திலோத்தமாவின் தோழிதானா இவள்..?

உண்மையான நட்பு உள்ளார்ந்து பார்க்கும். என் நண்பனை உள்ளார்ந்து பார்த்ததால் அவன் திலோவின் மேல் கொண்டுள்ள நேசமும் இதயத்திற்குள் பூட்டி வைத்துக்கொண்டு அவன் படும் வேதனையும் என்னால் உணர முடிகிறது.
இந்த பிரிவு அவர்களை இணைக்கும் என்று என் மனம் நம்பியது.

ஆனால் சிறு பிரிவையும் பிளவாய் மற்றும் நச்சுத்தன்மை பொருந்திய நட்புதான் திலோவிற்கு வாய்த்திருக்கிறது… அந்த நட்பு அவளுக்கு இனிக்கலாம். ஆனால் அப்படிப்பட்ட ஒருத்தியின் காதல் எனக்கு வேண்டாம்… வேண்டவே வேண்டாம்.

கண்களை அழுத்தமாக மூடித் திறந்து தன்னை சமன்படுத்திக் கொண்டவன் உடைந்து போய் வீட்டில் அமர்ந்திருக்கும் தன் நண்பனுக்கு கடையிலேயே உணவு வாங்கிக் கொண்டு அவனை சமாதானப்படுத்த அங்கிருந்து கிளம்பி இருந்தான்.

அவர்களுக்குள் ஏது பெரும் பிரிவு..?

இவன் அடித்தால் அவன் வாங்கிக் கொள்ளுவதும் அவன் திட்டினால் இவன் ஏற்றுக் கொள்வதும் அவர்களது நடைமுறை வாழ்வின் கலந்துபோன ஒன்றுதானே. வழக்கம் போன்றே நண்பர்கள் சமாதானமாகி இருந்தனர்.

அடுத்த இரண்டு நாட்களும் வெறுமையாகவே கழிந்து போயின. மறுநாள் காலை வெவ்வேறு மனத்தாங்கல்களை இதயத்தில் இருத்தியபடி விட்டேற்றியாகத்தான் விடிந்தது.

செடிகளுக்கு நீர் பாய்ச்ச வெளிக்கதவை இளங்கோ திறந்தபோது மீண்டும் வெளிச்சக்கீற்று அந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்திருந்தது.

ஆம்… அதே சிரித்த முகத்தோடு உள்ளே நுழைந்திருந்தாள் திலோத்தமா.

(தொடரும்)
 
Top Bottom