குழலில் காற்றாகினாள் - 2

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 29

Member
May 5, 2026
30
83
6
Tamilnadu
குழல் - 2

“திலோ… சாப்பிட வர்றியா இல்லையாடி...
எனக்கு ரொம்ப பசிக்குது…”

ஒற்றை சோபாவில் குத்துக்காலிட்டு அமர்ந்தபடி கைப்பேசியில் லயித்திருந்த திலோத்தமாவை அழைத்திருந்தாள் அவளது தோழி ரஞ்சனி.

இருவரும் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரே பெண்கள் விடுதியில்‌ ஒரே அறையில் தங்கி இருந்தவர்கள். வெவ்வேறு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள். மெல்லிய புன்னகையோடு ஆரம்பித்து நட்பாகப் பழகி ஒரு கட்டத்தில் நெருங்கிய தோழிகளாக மாறி இருந்தவர்கள்.

இருவரின் நெருக்கத்திற்கும் பொதுவான ஒற்றுமை ஒன்று உண்டென்றால் ரஞ்சனியும்கூட திலோத்தமாவை போன்றே சித்தப்பாவின் குடும்பத்தோடு ஒன்றி வாழ்ந்தவள். இன்று தனக்கென ஒரு சம்பாத்தியத்தை ஏற்படுத்தி சுதந்திர பறவையாக மாறி இருக்கிறாள். இருவருக்கும் அடிப்படை ஒன்றுதான் என்பதால் இயல்பாகவே இணக்கம் ஏற்பட்டுப் போனது.

ஓரளவு நல்ல சம்பாத்தியத்தில் நிலைபெற்றவர்களுக்கு விடுதி உணவில் விருப்பமின்மை தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி கொண்டால் என்ன என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருந்தது. அதன்படியே இருவருக்கும் பொதுவான ஒரு இடத்தில் அவர்களுக்கென்று ஒரு தனி வீட்டை பார்த்துக் கொண்டு குடியேறி இருந்தனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் ஒன்றாகத்தான் வசிக்கின்றனர். இருவருக்குமே அவரவர் அலுவலகத்திற்கு செல்லும் தூரம் ஓரளவு பக்கம் என்பதால் பொதுவான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். சொந்த வீட்டில் இருப்பது போன்ற ஒரு சுகத்துடன் விருப்பப்பட்ட உணவுகளை இருவருமே இணைந்து தயாரித்து ஒருவருக்கு ஒருவர் துணையாக மகிழ்ச்சியாக நாட்களை நகர்த்துகின்றனர்.

தயாரித்த உணவு சமையல் மேஜையில் இருக்க தோழியின் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவள் எரிச்சலோடு எழுந்து அவள் அருகில் சென்றாள்.

கண்கள் சிரிக்க அதை தாண்டி ரசிக்க இதழ்கள் விரிந்திருக்க கைப்பேசியில் கவனம் பதித்திருந்தவளை பார்த்தபடியே என்ன பார்க்கிறாள் என்று எட்டிப் பார்த்தாள் ரஞ்சனி.

சுந்தரி கண்ணால் ஒரு சேதி…
சொல்லடி இன்னாள் நல்ல தேதி…

இந்த பாடலின் புல்லாங்குழல் இசைதான் ஒலித்துக் கொண்டிருந்தது.

இசைத்துக் கொண்டிருந்தவன் அமரவர்மன்.

அவனுக்கென்ற தனி யூடியூப் சேனலில் அவனது பதிவு வெளிவந்திருந்தது.

இழுத்து பெருமூச்சு விட்டவள் “நினைச்சேன்… உலகத்தை மறந்து உத்து உத்து பாக்குறேன்னா இதை தவிர வேற எதை பார்க்கப் போற..? ஏன்டி உனக்கு போரே அடிக்காதா..?” அங்கலாய்ப்புடன் கேட்டபடி அருகில் அமர்ந்தாள் ரஞ்சனி.

“இசையை கேட்டு யாருக்காவது போரடிக்குமா..? இசைக்கு மயங்காதவங்க உலகத்துல இருக்காங்களா என்ன..? அதிலும் புல்லாங்குழல் இசை நம்ம தேவலோகத்துக்கே இழுத்துட்டுப் போற ஃபீலை கொடுக்கும்… அதெல்லாம் ரசிச்சு அனுபவிக்கணும்டி…”

“நீ இசையை மட்டுமா ரசிக்கிற…?”

தோழியின் கேள்விக்கு விழி உயர்த்திப் பார்த்தவள் வெட்கத்தோடு சிரித்தாள்.

“தெரியுதுல்ல அப்புறம் என்ன கேள்வி..?”

சொன்னபடியே முடிந்து போயிருந்த இசையை மீண்டும் தொடக்கத்தில் இருந்து கேட்கத் தொடங்கியிருந்தாள்.

“ப்ரோக்ராமுக்கு வரும்போது கம்பல்சரி கண்ணுல கூலர்ஸ் போட்டுக்கிறார். ஆனா அவரோட சேனல்ல வேற மாதிரி எப்படி இருக்காரு பாரு. ரொம்பவே ரேரான ப்ளூ ஐஸ். அந்த கண்ணு எவ்வளவு ஷார்ப் பாத்தியா..? இதே மாதிரியே ஸ்டுடியோவுக்கும் வரலாம். ஆனா அது ஒரு அழகு… இது ஒரு அழகு…”

ரசனையோடு பேசியவளை நெற்றி உயர்த்தி அயர்ச்சியாய் பார்த்தாள் ரஞ்சனி.

“இப்படியே கண்ணுல பார்த்தே காலத்தை ஓட்டிடலாம்னு இருக்கியாடி..?”

“ப்ச்… நெருங்க முடியல… உள்ளுக்குள்ள ஏதோ உறுத்தி தடுக்குது… நோ… நாட் இன்ட்ரஸ்ட்டட்… இந்த வார்த்தையை தாண்டி கேவலமான பார்வை இப்படி ஏதாவது ஒன்னு வந்துருமோன்னு மனசுக்குள்ள பயமா இருக்கு. அதுக்கு தள்ளி நின்னு இப்படி பார்க்கிறதுல ஒரு சந்தோஷம்… இன்பமான வலி…”

சொன்னவளை பிரமிப்பாகத்தான் பார்த்தாள் ரஞ்சனி.

“அமர்மேல உனக்கு இருக்கிறது காதல்னு உணர்ந்து எவ்வளவு நாள் இருக்கும்..?”

“இரண்டரை வருஷம்… கொஞ்சம் அதிகமாகூட இருக்கலாம்…”

“அவரோட சேனல்ல அவருக்கு எவ்வளவு சப்ஸ்க்ரைபர்ஸ்னு பார்த்தேல்ல. அதுல கேர்ள்ஸ் 75% இருக்காங்க. இதையெல்லாம் தாண்டி அவருக்கு ஒரு தனி கிரஷ் இருக்கு. நிறைய பேருக்கு அவரை பிடிக்கும். இதுல யாரை வேணும்னாலும் அவர் செலக்ட் பண்ணி இருக்கலாம். இவங்க இல்லாமகூட அவருக்கு வேற ஒரு காதல் இருக்கலாம். இதுக்கு எல்லாம் வாய்ப்பில்லைன்னு நினைக்கிறியா..?”

நிதர்சனத்தை கேட்டாள் ரஞ்சனி. திலோவின் முகத்தில் ஒருவித வாட்டம்… அதை தாண்டிய ஒரு புன்னகை.

“ஆனா எனக்குள்ள ஒரு இன்டியூஷன்.. அவர் யாரையும் லவ் பண்ணி இருக்க மாட்டார் அப்படின்னு உள்ளே ஒரு பட்சி சொல்லுதே…”

“உன் பட்சி சொல்றதை மட்டும் வச்சு முடிவு பண்ணிடாதே… இப்பவே நீ லேட்தான். இவ்வளவு காதல் அவர்மேல இருக்குன்னா அதை வெளிப்படுத்துறதுல உனக்கு என்னடி தயக்கம்..?”

“கரெக்ட்தான்டி… இப்படியே காலத்தை ஓட்டிட முடியாது…தள்ளி நின்னு கண்ணுல பார்த்து மட்டும் காதலை வளர்த்துட முடியாது. நெருங்கணும்… அவர் பக்கத்துல இன்னும் நெருங்கணும். அதுக்குத்தான் வேற ஒரு ஐடியா பண்ணிட்டேன்…?”

“என்னடி..?”

ஆர்வமாக கேட்டாள் ரஞ்சனி.

“அவரோட வீடு சாலிகிராமத்தில இருக்கு. அவருக்கே அவருக்குன்னு அவர் ஆசையா உருவாக்கிக்கிட்ட ஒரு குட்டி மாளிகை. அவர்கூட அவரோட ஃப்ரெண்ட் வயலினிஸ்ட் இளங்கோ அவரும் கூட இருக்கார். அவங்க ரெண்டு பேருதான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணை. ப்ரோக்ராம்ஸ்யும் சரி சேனல்லயும் சரி ரெண்டு பேரும் சேர்ந்துதான் மியூசிக் பண்ணுவாங்க. ரெண்டு பேரும் நகமும் சதையும் மாதிரி. நான் பார்த்தவரைக்கும் அமர் இன்ட்ரோவர்ட்… இளங்கோவை தவிர மத்தவங்ககிட்ட ரொம்ப நெருங்கிப் பேசி பார்த்ததில்ல…”

“ஏகப்பட்ட விஷயங்களை கேதர் பண்ணி வச்சிருக்க… உன்னோட ஐடியா என்னன்னு இன்னும் சொல்லலையே..?”

“சாலிகிராமத்துல அவர் வீட்டுக்கு எதிர்த்த மாதிரி சின்னதா ஒரு வீடு இருக்கு. அந்த வீட்டை வாடகைக்கு பேசி முடிச்சிட்டேன்…”

திக்கென்ற அதிர்வுடன் அவளை பார்த்தாள் ரஞ்சனி.

“ஏய் பைத்தியம்… சாலிகிராமம் எங்கே இருக்கு..? நம்ம ரெண்டு பேரோட ஆஃபீஸ் எங்க இருக்கு..? அங்கே வீட்டை மாத்தி என்னடி பண்றது..? தினம் 2 மணி நேரம் டிராவல் பண்ணி வரணும். அதெல்லாம் எனக்கு சாத்தியமே இல்ல. உன் இஷ்டத்துக்கு நீயே ஏதாவது முடிவு பண்ணிடுவியா..?”

சுள்ளென பாய்ந்தாள் ரஞ்சனி.

“என்னை முழுசா பேச விடுடி… உன்னை கஷ்டப்பட சொல்லல. நான் அங்கே ஷிஃப்டாக போறேன்னுதான் சொன்னேன்…”

சொன்னவளை பதிலற்று அதிர்ச்சியோடு பார்த்தாள் ரஞ்சனி.

“சுயநலமா யோசிக்கலடி. என்னோட விருப்பத்துக்காக உன்னை கஷ்டப்படுத்த என்னால முடியாது. இங்கே இருந்துதான் நம்ம ரெண்டு பேருக்குமே ஆபீஸ் பக்கம்… எனக்கும் தெரியும்… ஆனா ரெண்டரை வருஷமா அவரோட ப்ரோக்ராம்ஸ் எங்க நடக்குது குக்கூ ப்ரோக்ராம் எப்போ எல்லாம் நடக்குது இப்படி தேடி தேடி ஓடி ஓடி கூட்டத்தில ஒருத்தியா உட்கார்ந்து இனிமேலும் என்னால நாட்களை நகர்த்த முடியாது இல்லையா. நான் யாருன்னுகூட அவருக்கு தெரியாது. முதல்ல நான் யாருன்னு அவருக்கு தெரியணும். ஜஸ்ட் அவர் பார்வையாவது என்மேல படணும். அதுக்கு முதல்ல நான் அவருக்கு நெருக்கமா போய் நிக்கணும். அதுக்காகத்தான் கஷ்டப்பட்டு ரெண்டு மாசமா அலைஞ்சு அந்த ஹவுஸ் ஓனர்கிட்ட கெஞ்சி அந்த வீட்டை ரெடி பண்ணி இருக்கேன். மாடி போர்ஷன்தான். எனக்கு அளவான சின்ன வீடு. ஆனா வாடகை எக்கச்சக்கம். ஏன்னா ஏரியா அப்படி. பரவாயில்ல… என் ஒருத்தியோட தேவை போக பெருசா ஒன்னும் செலவு பண்றது இல்ல. வாடகை கொடுத்துட்டுப் போறேன். இப்போதைக்கு அவர் பக்கத்துல போகணும்… கொஞ்சம் கொஞ்சமா என்னை அவருக்கு புரிய வைக்கணும். இதை தவிர எனக்கு வேற வழி தெரியலடி. நானே இந்த பேச்சை ஆரம்பிக்கணும்னு நினைச்சேன். நீ கேட்டதால இப்பவே சொல்லிட்டேன். அடுத்த வாரம் அங்கே ஷிஃப்ட் ஆகலாம்னு இருக்கேன்…”

நிதானமாக பேசியவள் தனது தோழியின் கரத்தைப் பற்றி தனது உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டாள்.

எதுவும் பேசாமல் அமைதியாக தரையை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் ரஞ்சனி.

“ரஞ்சி… என் மேல கோபமா..?”

அவள் தாடையை பற்றி நிமிர்த்தி தன்னை பார்க்கச் செய்தாள் திலோத்தமா.

“உன்னை பிரிஞ்சு தனியா போய் இருக்கிறது எனக்கு வலிதான். ஆனா அமரை விட்டு தள்ளியே இருந்தா அவர் எனக்கு கிடைக்காமலே போயிடுவார்னு பயமா இருக்குடி. என்னோட சுயநலத்துக்காக உன்னையும் அவ்வளவு தூரம் இழுத்துட்டுப் போக மனசு வரல. அதனாலதான் எனக்கு மட்டுமே ஒரு வீடு பார்த்துட்டேன்…”

“உன்னால தினமும் காலையில ரெண்டு மணி நேரம் சாயந்திரம் ரெண்டு மணி நேரம் ட்ராவல் பண்ண முடியுமா..? இது சாத்தியமாடி..?”

ஆதங்கத்தோடு கேட்டாள் ரஞ்சனி.

“அமருக்காக என்ன வேணாலும் பண்ணுவேன்டி…”

எதுவும் பேசாமல் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தாள் ரஞ்சனி.

“நாம பழக ஆரம்பிச்ச நாள்ல இருந்து உன்னோட நிதானம் தெளிவு ஒவ்வொரு விஷயத்திலும் நீ காட்டுற கான்சன்ட்ரேஷன் இப்படி எல்லாத்தையுமே பார்த்து பிரமிச்சு இருக்கேன்டி. ஆனா காதல் அப்படின்னு வரும்போது நீ ரொம்ப தெளிவா இருப்பேன்னு நினைச்சேன். இப்படி ஒன் சைடா இவ்வளவு காலம் உன்னை யாருன்னே அடையாளம் காட்டாம ஒருத்தரை மனசுபூரா சுமந்துட்டு வாழறது பைத்தியக்காரத்தனமா தோணலையா..?”

“இனிமே அந்த பைத்தியகாரத்தனம் வேணான்னுதானடி அடுத்த கட்ட நடவடிக்கையில இறங்கி இருக்கேன். நீ சொல்றது உண்மைதான். அம்மா அப்பா இல்லாம ஒவ்வொரு சூழ்நிலையிலயும் ரொம்ப நிதானமா தெளிவாதான் ஒவ்வொரு விஷயத்திலும் மூவ் பண்ணியிருக்கேன். ஆனா எனக்குள்ளேயும் ஆசைகள் ஏக்கங்கள் எவ்வளவு கொட்டிக் கிடக்குது தெரியுமா..? எனக்கான குறிக்கோளை அச்சீவ் பண்றவரைக்கும் வேற எதுலயுமே கவனத்தை திசை திருப்பக் கூடாதுன்னு நிக்காம ஓடிட்டே இருந்திருக்கேன். நின்னு மூச்சுவிட ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அழகு நிறைஞ்ச இந்த உலகத்துல சந்தோஷமா பிரியப்பட்ட மாதிரி வாழணும்னு மனசு முழுக்க வேட்கை. அன்புக்கு நிறைய ஏங்கி இருக்கேன்டி. என்மேல எனக்கே எனக்காக மட்டும் அன்பு செலுத்துற ஒருத்தர் வேணும்… அவர் எதிர்கால துணையா இருக்கணும்… அந்த காதல்ல நான் என்னையே மறந்து வாழணும்… இப்படி எனக்குள்ள நிறைய ஏக்கம்… எந்த புள்ளியில ஆரம்பிச்சதுன்னு தெரியாது. அமர்மேல எதுக்கு அப்படி ஒரு காதல் வந்ததுன்னு இப்பவரைக்கும் புரியல… காதல் காரணம் பார்த்து வர்றதில்லையே. அமர்மேல வந்துருச்சு… அவரைத் தாண்டி வேற ஒருத்தனை என்னோட வாழ்க்கையில என்னால யோசிக்கவே முடியாது. நான் ஒன்னும் விபரம் தெரியாத சின்னப் பொண்ணு இல்ல. எத்தனையோ கடந்து இன்னைக்கு நிலையா நிக்கிற அளவுக்கு வந்துட்டேன். இந்த விஷயத்துல ஜெயிக்கணும்… ஜெயிச்சிடுவேனாடி…?”

இறுதியாக கேட்ட வார்த்தையில் அவளது குரல் மொத்தமாக தழுதழுத்திருந்தது.

தன் தோழியின் இரு கைகளையும் இறுக்கமாக பற்றிக் கொண்டாள் ரஞ்சனி.

‘உன் காதல் ஸ்ட்ராங்தானே… அப்போ அதை நம்பு… உன்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. நீ சொன்ன மாதிரி என்னால அவ்வளவு லாங் டிராவல் பண்ண முடியாது. உன் காதல் புரியணும்னா நீ அமர் பக்கத்துல இருக்கறதுதான் சரி. எப்படியாவது உன் மனசை அவருக்கு புரிய வை… வாரம் ஒருமுறை நீயும் நானும்
இங்கேயோ அங்கேயோ மீட் பண்ணிக்கலாம்…”

சிரிப்போடு கூறிய தோழியை இறுக்கி அணைத்துக் கொண்டாள் திலோத்தமா.


(தொடரும்)
 
Last edited by a moderator:

Author: STN - 29
Article Title: குழலில் காற்றாகினாள் - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.