குழலில் காற்றாகினாள் - 26

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 29

Member
May 5, 2026
30
83
6
Tamilnadu
குழல் - 26

மறுநாள் முழுக்க வசதியூட்டப்பட்ட தனி அறையில் சகல பாதுகாப்புகளுடன் முழுமையான மேற்பார்வையுடன் மயக்க நிலையிலேயே படுக்க வைக்கப்பட்டிருந்தான் அமரன். அவனைப் பிரத்தியேகமாக கவனித்துக் கொள்ள இரண்டு செவிலியர்கள் அனுமதிக்க பட்டிருந்தனர். திலோவிற்கு சிகிச்சை ஆரம்பித்த நாள் முதலே அவர்கள் இருவரும் இந்த தொடர் சிகிச்சையில் முழுக்க பயணித்து வந்திருந்தனர்.

மிகவும் நம்பகமான செவிலியர்கள் அவர்கள் என்பதால் ரேஷ்மா அவர்களிடம் மட்டும் அந்த பொறுப்பினை ஒப்படைத்து இருந்தார். அவனை அவ்வப்போது வந்து மானிட்டர் செய்து ரிப்போர்ட்களை அனுப்பி கொண்டிருந்தனர் இருவரும்.

அன்று மதியத்திற்கு மேல் அவனது ரிப்போர்களை குறிப்பெடுத்துக் கொண்டிருந்த ஒரு செவிலிப் பெண்ணை நெருங்கி வந்தாள் மற்றொரு செவிலிப்பெண்.

“என்னாச்சு..? இப்போவரைக்கும் எல்லாம் ஓகேதானே…”

“எல்லாம் கரெக்டாதான் இருக்கு… எப்படியும் காலையில விடியறதுக்குள்ள இவருக்கு நினைவு திரும்பிடும். நாளைக்கு கட்டு பிரிச்சுடுவாங்க…”

பேசியபடியே இருவரும் அவனுக்கு சற்றுத் தள்ளியிருந்த ஒரு இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டனர்.

இருவரும் மும்பைவாசிகள் என்பதால் ஹிந்தியில்தான் பேசிக் கொண்டனர்.

“ரேஷ்மா மேடம் அவங்களோட சர்வீஸ்ல ஒரு புது வரலாற்றை பதிக்கப் போறாங்க…”

“ஆமாமா… ரொம்ப ரிஸ்க்கான விஷயத்தை கையில எடுத்து அதையும் சக்சஸ்ஃபுல்லா பண்ணிட்டாங்களே…”

“ஆரம்பத்துல மேடம் ரொம்ப யோசிச்சாங்க… ஏன் முடியாதுன்னுகூட சொன்னாங்க… ஆனா அந்த பொண்ணுதான் விடாம போராடி அவங்க மனசை கரைச்சா…”

“எவ்ளோ பெரிய விஷயம்ல… எவ்வளவு காதல் இருந்திருக்கணும்… இவருக்கு பார்வை கிடைக்கணும்னே சீக்கிரமா கல்யாணம் பண்ணி அதே வேகத்துல கர்ப்பமும் ஆகி அதைவிட வேகமா அதை தாரை வார்த்து கொடுக்கிறது அவ்வளவு ஈஸியா என்ன..?”

“உண்மைதான்டி… அந்த பொண்ணு ஏற்கனவே எல்லாத்தையும் தெளிவா பிளான் பண்ணிதானே பண்ணி இருக்கா. ஆனா அவ நினைச்சது எல்லாமே வரிசையா சக்ஸஸ் ஆயிடுச்சே. எல்லாத்துக்கும் பின்னாடி என்ன இருக்கு..? அந்த பொண்ணு இவர்மேல வச்சிருக்கிற காதல்… அடேயப்பா… காதல் எந்த எல்லைவரைக்கும் போகும்னு இந்த பொண்ணை பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்…”

“இந்த ஆளுக்காக என்ன வேணாலும் செய்யலாம்… ஆள் எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்கான்னு பாத்தியா..?”

“ஏய்… அழகு அப்படிங்கிறது ஒரு எல்லையோட நின்னு போயிடும்… இந்த பொண்ணு அழகுல விழுந்தெல்லாம் இத்தனையும் பண்ணல. அதை தாண்டி ஆத்மார்த்தமான உணர்வு. ஒரு பொண்ணு தன் கணவனுக்கு கண் பார்வை வரணும்னு உருவான சில நாட்களே ஆன கருவை அப்படியே தூக்கி கொடுக்கிறது எல்லாம் சின்ன விஷயம் இல்லடி. அதை பண்றதுக்கு முன்னால அந்த பொண்ணு மனசு எவ்வளவு துடிச்சிருக்கும். அதையெல்லாம் தாண்டி செஞ்சிருக்கான்னா அவ புருஷன்மேல அவ வச்சிருக்கிற அந்த காதல்…”

“அதுக்கு இந்த மனுஷனும் சம்மதிச்சுட்டாரே…”

“ரெண்டு பேருக்கும் வயசாயிடுச்சா என்ன..? நினைச்சா எத்தனை பிள்ளை வேணும்னாலும் பெத்துக்கலாம்… பார்வை வரணும்ங்கிற ஆசையில இவரும் ஓகே சொல்லி இருப்பார். ஆனா இவரைவிட அந்த பொண்ணுக்குதானே வலி அதிகமா இருக்கும்…”

“என்ன இருந்தாலும் ஒரு குழந்தையை பலி கொடுத்து பார்வையை மீட்டெடுக்கிறது அதுவும் அவங்களோட சொந்த குழந்தையை பலி கொடுக்கிறதுக்கு தில்லு வேணும். ரொம்ப கஷ்டமான விஷயம்தான்… இந்த ஆளுக்கு பார்வை வந்தா போதும்னு குழந்தையையும் தூக்கி கொடுக்க சம்மதிச்சுட்டார் பாத்தியா..?”

“இதைவிட்டா இவருக்கு பார்வை வர்றதுக்கு வேற மார்க்கமே இல்லைன்னு தெளிவா தெரிஞ்சு போச்சே. அதனால ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசி தெளிவா முடிவெடுத்து பண்ணி இருக்காங்க… இவர் குழந்தையால இப்போ பார்வை கிடைச்சிருக்கு… இதை பெரிய தப்புன்னு சொல்லிட முடியாது…”

“சரிடி…டைம் ஆச்சு… சாப்பிட போலாமா..? எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுதான் அடுத்த ரிப்போர்ட் எடுக்கணும்…”

“ம்ம்… ஓகே…”

பேசியபடியே அவர்கள் வெளியேறிச் சென்றிருக்க ஆழ்ந்த மயக்கத்தில் படுத்திருந்தவனின் இரு விழிகளில் இருந்தும் கண்ணீர் கோடாய் இறங்கி காதுமடலை நனைத்திருந்தது.

ஆழ்ந்த மயக்கத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு நினைவு திரும்பிக் கொண்டிருந்த வேளையில்தான் இந்த செவிலிப் பெண்கள் இருவரும் அறைக்குள் நுழைந்து பேசத் தொடங்கி இருந்தனர்.

அமரனுக்கு ஹிந்தி நல்ல பரிச்சயமான மொழி என்பதால் அவர்கள் பேசிய அனைத்தும் அவனுக்கு தெளிவாக காதில் விழுந்திருந்தது.

தனக்கு கண் பார்வை கிடைப்பதற்கு பின்னணியில் நடந்து முடிந்த அனைத்து விபரங்களையும் அறியப் பெற்றவன் இதயம் முழுக்க அமிலத்தில் தோய்த்து எடுத்ததுபோல் வலி கொண்டு துடித்தான்.

அசைந்து கொடுக்க உடல் இடம் கொடுக்கவில்லை… ஆனால் மூளை தெளிவாக விழித்துக் கொண்டது. கட்டு போடப்பட்டிருந்த கண்களில் கண்ணீர் தேங்கி தெப்பமிட்டது. இதயத்தின் பேயலறலில் மீண்டும் மூளை சோர்வாகி மயக்கத்திற்கு சென்றிருந்தான்.

மறுநாள் அதிகாலையிலேயே எழுந்து இளங்கோவையும் இழுத்துக் கொண்டு அருகில் இருந்த ஒரு கோவிலுக்கு சென்றிருந்தாள் திலோத்தமா. இருவருமே பரபரப்பும் பரவசமுமாக ஒருவித சில்லிட்ட நிலையில் இருந்தனர்.

“அண்ணா… நம்ம அமர் இந்த உலகத்தை பல வருஷம் கழிச்சு பார்க்கப் போறார்… உங்களை சின்ன பையனா பார்த்தது… அந்த முகம் அவர் மனசுக்குள்ள பதிஞ்சு போயிருக்கும். அதை வச்சு உங்களை கற்பனையா ஒரு உருவமா மனசுக்குள்ள செதுக்கி வச்சிருப்பார். ஆனா என் குரல் என் வாசம் என் காதல் இதை தாண்டி என்னை அவருக்கு தெரியாது. நான் எப்படி இருப்பேன்னு அவருக்குள்ள கற்பனையாகூட ஒரு உருவத்தை பதிச்சு வச்சுக்கலேன்னு சொல்லி இருக்கார். ஆனா நூறு பேரை நிக்க வச்சாலும் அதுல என்னை தனியா கண்டுபிடிப்பார்… காரணம் எங்க காதல்…”

சிலாகித்துப் பேசியவளை இதழ் விரிந்த சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

“நம்ம ரெண்டு பேரையும் பார்த்து அவர் எப்படி ஃபீல் ஆவார்ணா… டாக்டர் வேற நிறைய விஷயம் சொல்லி இருக்காங்க. அவர் அழக்கூடாதாம்… எமோஷனல் ஆகக்கூடாதாம்… டென்ஷனாகக் கூடாதாம்… நிறைய வெளிச்சம் படக்கூடாதாம்… எக்ஸட்ரா எக்ஸட்ரா… குறிப்பா நாம அவர் முன்னால அழுதுடவே கூடாதுன்னு சொல்லி வச்சிருக்காங்க… ஆனா எமோஷன்சை எப்படி கண்ட்ரோல் பண்ணி அங்க நிக்க போறேன்னு எனக்கே தெரியலண்ணா…”

“ஆமாடா… எனக்கும் அதே பதட்டம்தான்… அவன் கண் திறந்து நம்மை பார்க்கும்போது அழுகையை எப்படி கண்ட்ரோல் பண்ண முடியும்..? ஆனா பண்ணிதான் ஆகணும்… உடனடியா அந்த கண்களுக்கு நிறைய அழுத்தம் கொடுத்துடக்கூடாது… அதனாலதான் டாக்டர் இன்னும் 40 நாளாவது இங்கேயே இருந்து மருந்தெல்லாம் போட்டுட்டு போலாம்னு சொல்றாங்க… நீதான் இன்னும் நாலு நாள்ல கிளம்பிடலாம்னு அடமா சொல்ற…

“நம்ம வீட்ல வச்சு பாத்துக்கலாம்ணா…”

“இருந்தாலும் இங்கே அவங்க கண்காணிப்புல தெளிவா பாத்துட்டு போயிட்டா காலம் முழுக்க நமக்கு பிரச்சனை இருக்காதுல்லம்மா…”

“முதல்ல அவரோட கண் கட்டை பிரிக்கட்டும். டாக்டர் என்ன சொல்றாங்களோ அது எப்படி பண்ணிக்கலாம்…”

இருவரும் பேசியபடியே மீண்டும் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தனர்.

இருவரையுமே ரேஷ்மா அழைப்பதாக கூறி செவிலிப்பெண் கூறிச் செல்ல அறைக்குள் நுழைந்தனர் இருவரும்.

ரேஷ்மா, ஜாய் இருவருமே அங்குதான் அமர்ந்திருந்தனர்.

“இன்னும் கொஞ்ச நேரத்துல கட்டு பிரிச்சிடலாம்… நேத்து லேட் நைட் அவருக்கு நினைவு திரும்பிடுச்சு. இப்ப நார்மலாதான் இருக்கார். நான் சொன்னதுதான்… வெளிச்சம் அதிகம் தாக்காத இடத்தில வச்சுதான் எல்லாமே பண்ணப் போறோம். அவர்கிட்டயும் என்னென்ன விஷயங்கள் பண்ணக் கூடாதுன்னு தெளிவா சொல்லி வச்சிருக்கோம். அதேதான் உங்களுக்கும். நான் சொன்னது ஞாபகம் இருக்கு இல்லையா..?”

ஆம் என்று இருவருமே ஆமோதிப்பாய் தலையாட்டிக் கொண்டனர்.

“நாங்க போய் அவரை செக் பண்ணிட்டு கூப்பிடும்போது நீங்க வாங்க…”

சொன்னவர் அந்த வெளிநாட்டு மருத்துவரையும் அழைத்துக் கொண்டு அமரனின் அறைக்குள் நுழைந்திருந்தார்.

அரைமணி நேரம் சென்றிருக்கும்… செவிலிப்பெண் மட்டும் வெளியேறி வந்தாள்.

“சார்… கண் கட்டை பிரிச்சாச்சு…நீங்கதானே மிஸ்டர் இளங்கோ…”

ஆம் என்றபடி எழுந்தான் இளங்கோ.

“பேஷன்ட் உங்களை மட்டும் வரச் சொன்னார்…”

புரியாமல் விழித்தவன் வேகமாக திலோத்தமாவை திரும்பிப் பார்த்தான்.

“ஏன் சிஸ்டர்..? ஒருத்தர்தான் வரணுமா..? நாங்க ரெண்டு பேரும் வரலாம்னு டாக்டர் சொன்னாங்களே…”

“டாக்டர் அப்படிதான் சொன்னாங்க… ஆனா பேஷண்ட் உங்களை மட்டும்தான் பாக்கணும்னு சொல்றார்… அந்த மேடம் வரவேண்டாம்னு சொல்லிட்டார்…”

அதிர்ந்து போய் அவளை பார்த்தவனிடம் மெல்லிய புன்னகையுடன் எழுந்து நின்றாள் திலோத்தமா.

“அண்ணா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும். என்னை பார்த்தவுடனே அவரை மீறி எமோஷனல் ஆவார். நானும்கூட உடையறதுக்கு வாய்ப்பு இருக்கு. அவர் முதன்முதல்ல என் முகத்தை பார்க்கும்போது கண்ணீரோட என்னை பார்க்கக் கூடாதுன்னுகூட நினைச்சிருக்கலாம் இல்லையா. அதுக்காகத்தான் உங்களை மட்டும் வரச்சொல்றார்.

“ஏன் அதுக்கப்புறம் நீ போய் பார்த்தாலும் அதே கண்ணீர் உனக்கு வராதா…?”

“அது அப்புறமா நடக்கப் போறது… ஆனா இப்போ ஃபர்ஸ்ட் டைம்… எனக்கு தெரியும்… நான் அழுதுடக் கூடாதுன்னுதான் அவர் இப்போ என்னை பார்க்க விரும்பல. அதைவிட நீங்க போய் அவர் முன்னாடி நிக்கிறதுதான் பொருத்தமா இருக்கும்ணா. இத்தனை வருஷம் அவருக்கு பார்வையா இருந்து அவர் உலகத்தை வெளிச்சமாக்கி வச்சவர் நீங்க. அதனால நீங்க மட்டும் போறதுதான் சரியா இருக்கும்…”

“இல்லம்மா... அது...”

“அண்ணா… எனக்கு எந்த சங்கடமும் இல்ல… அவர் சரியாத்தான் சொல்லி இருக்கார்… முதல்ல நீங்க போய் பாத்துட்டு வாங்க..”

மாறாத சிரிப்போடு கூறியவள் அவனை அனுப்பி வைத்திருந்தாள்.

கண்கள் மூடிய நிலையில் ஒரு இருக்கையில் அமர்த்தப்பட்டிருந்த அமரனின் இருபுறமும் மருத்துவர்கள் நிற்க சற்று இடைவெளி விட்டு தள்ளி நிற்க வைக்கப்பட்டு இருந்தான் இளங்கோ. அதிகம் வெளிச்சம் இல்லாத மெல்லிய வெளிச்சத்தை மட்டும் பாய்ச்சும் அறை… சுற்றிலும் இருந்த அனைவரும் முகக்கவசம் போட்டிருந்தனர்… இளங்கோவை மட்டும் அதே நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர்.

இதயம் அதிர கை கால்கள் தளர்ந்து தடுமாற ஏசி அறையிலும் வியர்த்துப் போய் நண்பன் விழிகள் திறப்பதற்காக வேட்கையோடு காத்திருந்தான் இளங்கோ.

அறுவை சிகிச்சை வெற்றி பெற்றது என்று மருத்துவர்கள் கூறியது உண்மைதான்… இருந்தாலும் அவன் விழித்திரையை திறந்து பார்வையை எந்த அளவுக்கு கிரகித்துக் கொள்கிறான் என்பது இனிமேல்தானே தெரியும்.

அங்கிருந்த அனைவருமே அளவு கடந்த ஆர்வத்துடன்தான் நின்றிருந்தனர்.

“மிஸ்டர் அமர்… யு கேன் ஓப்பன் யுவர் ஐஸ் நவ்…”

ஜாயின் குரலுக்கு அவனது மூடி இருந்த விழிப்படலங்கள் மெல்ல உருண்டன.

“அவசரம் இல்லாம மெல்ல கண்ணை விரிங்க… முதல்ல கொஞ்சம் கூச்சமா இருக்கும்… போகப் போக உருவங்கள் தெரியும்… கண்ணை கசக்க வேணாம்… கஷ்டப்பட்டு உருட்ட வேணாம்… அப்படியே முழிச்சுப் பாருங்க…”

மருத்துவர் சொன்னபடியே மெல்ல விழிகளை திறந்தவன் முதலில் கண்களில் கூச்சம் எழுந்து சிறிது சிரமப்பட்டான். பல ஆண்டுகளாக ஒரு சிறு வெளிச்சத்தை மட்டுமே பிம்பமாகக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு இந்த மாற்றம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் ஒருவித பதட்டத்தை தோற்றுவித்தது.

“ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்…”

அவன் முதுகை நீவி சமன்படுத்தினார் ரேஷ்மா.

இதற்குமுன் சாயம் போன வெள்ளைச்சுவர் போன்று வெறுமையை பிரதிபலித்த அந்த விழிகள் இன்று பளீரென கருமணிகளோடு திறந்து நின்றதை பார்த்த இளங்கோவிற்கு சொல்ல முடியாத உற்சாகமும் அழுகையும்… இதழ்களை கடித்து அழுகையை விழுங்கினான்.

முதலில் மங்கலாக ஓர் உருவம்… பின் சிறிது சிறிதாக அந்த உருவம் தெளிவு பெற்றது. எதிரில் அழகிய இளைஞனாக இளங்கோ தெரிந்தான்.

நிதானமாக அவன் உருவத்தை மேலிருந்து கீழாகப் பார்த்து மொத்தமாக உள்வாங்கினான் அமரன். உதடுகள் துடிக்க கண்கள் அழுகைக்கு தாவ முயற்சித்தன.

“அழக்கூடாது மிஸ்டர் அமர்… அமைதியா அப்படியே பாருங்க… அவர் தெரியிறாரா..?”

ஆம் என்று தலையாட்டியவன் “டேய் இளங்கோ…” நடுக்கமான குரலுடன் அழைக்க வாயில் கை வைத்தபடியே மண்டியிட்டு அமர்ந்து முதுகு குலுங்க அழத் தொடங்கி இருந்தான் இளங்கோ.

(தொடரும்)
 
Last edited by a moderator:

Author: STN - 29
Article Title: குழலில் காற்றாகினாள் - 26
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
போச்சி போச்சி.....ஏண்டா இப்படி பண்ற அமர்.....பாவம் டா அவ.....ரொம்ப பாவம்