குழலில் காற்றாகினாள் - 4

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 29

Member
May 5, 2026
30
83
6
Tamilnadu
குழல் - 4

இளங்கோவின் ஊன்றிய அழுத்தமான பார்வையில் திக்கென மூச்சடைத்துக் கொள்ள விரிந்திருந்த விழிகளை படக்கென மூடிக் கொண்டாள் திலோ. தியானத்தில் அமர்ந்திருப்பது போல் பாவனை செய்யத் தொடங்கினாள்.

‘அய்யய்யோ… நல்லா மாட்டிக்கிட்டேன் போல தெரியுதே… அந்த ஆளு குறுகுறுன்னு இங்கேயே பாக்குறானே…’

இதயத்தின் லப் டப் ஓசை எகிறிப் பாய்ந்தது.

சில நொடிகள் தாமதித்து கால் கண் திறந்து எதிரில் பார்க்க குனிந்து அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் இளங்கோ.

‘யோவ்… இங்க என்ன பார்வை..? போய் தொலையேன்… எனக்கு நேரமாச்சு… மிச்ச மீதி வேலையை பாக்கணும்… என் அமர் எழுந்து போயிட்டாரு… உனக்காக எவ்வளவு நேரம்தான் ஆக்ட் கொடுத்துட்டே உட்கார்ந்து இருக்கிறது… போய் தொலைய்யா… போயா… போஓஓஓ…’

“இளங்கோ…”

உள்ளிருந்து கணீர் என அமரனின் குரல் கேட்க பிடரியை வருடியபடியே திரும்பித் திரும்பி அவளை பார்த்தபடி உள்ளே சென்றிருந்தான் இளங்கோ.

இழுத்துப் பிடித்து வைத்திருந்த மூச்சை நிம்மதியாக வெளியேற்றினாள் திலோ. அப்படியே மண்டியிட்ட நிலையிலேயே பூனைபோல் வீட்டிற்குள் ஓடி இருந்தாள்.

அமரனின் வீடு முழுக்க கன்சீலிங் சவுண்ட் சிஸ்டத்தில் மெல்லிய ஒலியில் எந்நேரமும் பாடலோ இசையோ இசைத்துக் கொண்டே இருக்கும். அதனை ரசித்தபடியேதான் ஏதேனும் வேலையில் ஆழ்ந்திருப்பான் அமரன்.

கிச்சனில் சமையல் வேலையில் இறங்கி இருந்தான் அமரன். வீட்டின் முன்னே இருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் இளங்கோ. எதிர் வீட்டில் இருந்து ஸ்கூட்டியை கிளப்பிக் கொண்டு சிட்டாக பறந்த திலோத்தமாவை அவன் விழிகள் அவள் சென்று மறையும்வரை பார்த்துக் கொண்டிருந்தன.

யோசனையில் சுழலும் விழிகளோடு அவன் வீட்டிற்குள் நுழைய தான் சமைத்த உணவுகளை டைனிங் டேபிளில் அடுக்கி வைத்து ஆசுவாசமாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான் அமரன்.

“அமர்…”

“ம்ம்…”

“இன்னைக்கு நமக்கு என்ன வேலை..?”

“இன்னும் மூனு நாள்ல குக்கூ ப்ரோக்ராம் ஃப்ரீ பைனல் ஷோ இருக்கு. இன்னைக்கும் நாளைக்கும் ப்ராக்டிஸ்ல நாம டைட்டுதான். ஏன் உனக்கு தெரியாதா..?”

“எதிர்த்த மாதிரி கணேஷ் அங்கிள் வீடு இருக்குதுல்ல…”

“ஆமா…”

“அவங்க வீட்டு மாடியில ஒரு பொண்ணு குடி வந்திருக்கா…”

சம்பந்தமில்லாமல் ஏதோ பேசியவனை புரியாமல் திரும்பிப் பார்த்தான் அமரன்.

“சரி… அதுக்கு என்ன இப்போ..?”

“நாம ரெண்டு பேரும் மாடியில் எக்சர்சைஸ் பண்ணும்போது அவளும் அங்கேயேதான் இருக்கா. இந்த ஒரு வாரமா அவளை வாட்ச் பண்ணிட்டு இருக்கேன்…”

“அவ வீட்டு மாடியில் அவ உட்கார்ந்து இருக்கா… இதுல நீ வாட்ச் பண்ண என்னடா இருக்கு..?”

“ஜம்முன்னு சப்பணம் போட்டு உட்கார்ந்து நம்ம வீட்டையேதான் பாத்துட்டு இருக்கா. அவளை நான் எங்கேயோ அடிக்கடி பார்த்த மாதிரி ஃபீல் ஆகுது… எங்கேன்னுதான் சரியா யூகிக்க முடியல…”

“என்னடா ஏதேதோ சொல்ற…”

“ஆமாடா தியானம் பண்ற மாதிரி உட்கார்ந்து இருக்கா. ஆனா அவ தியானம் பண்ணல… அவ கவனம் முழுக்க…” என்று ஒரு நொடி நிறுத்தியவன் “நிச்சயமா என்மேல இல்ல உன்மேல…” என்று கூற சாவகாசமாக நிமிர்ந்து அமர்ந்தான் அமரன்.

“எதையாவது உளறாதடா… குளிச்சு கிளம்பு… டைம் ஆச்சு…” என்றபடியே எழுந்தான்.

“டேய்… நான் சொல்றது நிஜம்… அவ உனக்கு ரூட் விடுறா…”

இதனை கேட்டு சத்தமாக சிரித்தான் அமரன்.

“இது என்ன உனக்கோ எனக்கோ புதுசாடா… ரெண்டு பேரும் நிறையவே கடந்துதானே வந்துட்டு இருக்கோம்…”

“ஆனா இவளோட பார்வை…” என்று இழுத்து நிறுத்தியவன் தலையை சற்றே அண்ணாந்து கழுத்தை வருடியபடி கண்களை மூடினான்.

“கண்ட கண்ட ஆராய்ச்சி பண்ண இது நேரமில்ல சீக்கிரம் கிளம்பு… டைம் ஆச்சு…” என்ற அமரன் அதற்குமேல் அங்கு நிற்காமல் குளிக்கச் சென்றிருந்தான்.

அன்று இரவும் வழக்கம் போன்றே நண்பர்கள் இருவரும் பால்கனியில் சாவகாசமாக வேலைகளை முடித்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இளங்கோவின் விழிகள் அடிக்கடி எதிர்வீட்டைத்தான் நோட்டமிட்டுக் கொண்டிருந்தன.

சத்தமின்றி பூச்சிபோல் நான்கு காலில் நடந்து வந்து வழக்கம் போன்றே பால்கனையில் சம்மணமிட்டு இருட்டில் அமர்ந்து விழிகளால் தன்னவனை விழுங்கி கொண்டிருந்தாள் திலோ.

பால்கனி விளக்கை அணைத்துதான் வைத்திருந்தாள். அங்கிருந்த நாற்காலிக்கு அருகில் ஒண்டிக் கொண்டுதான் அமர்ந்திருந்தாள். ஆனாலும் சற்றுத் தள்ளி இருந்த தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் இளங்கோவின் விழிகள் அவளை தெளிவாகவே கண்டு கொண்டன.

அடுத்தடுத்து தொடர்ந்த இரண்டு நாட்கள் அவளை கண்டுகொள்ளாதது போன்றே கவனித்துக் கொண்டே இருந்தான் இளங்கோ.

அதற்கு அடுத்த நாள்தான் குக்கூ நிகழ்ச்சி. வழக்கம் போன்றே குறித்த நேரத்திற்கு ஓடிச் சென்று அங்கே அமர்ந்திருந்தாள் திலோத்தமா.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் அவரவர் அவரவருக்கான இடங்களில் வந்து அமர எதார்த்தமாக பார்வையாளர் பகுதியில் விழிகளை பதித்த இளங்கோவின் பார்வையில் திலோத்தமா தெளிவாகவே விழுந்திருந்தாள். அனைவரின் முகங்களும் நேர்கொண்டு இருக்க இவள் தலை மட்டும் பக்கவாட்டாக அமரன் இருக்கும் பகுதியில் திரும்பி இருந்தது.

இதழ்களில் மென் புன்னகை… விழிகளில்… அந்த விழிகளில்…

இன்று சற்று நெருக்கமாகவே அவளை பார்த்தவனுக்கு அந்த விழிகளின் வீரியம் ஏதேதோ கூறியது. அவளை எங்கோ பார்த்திருக்கிறோமே என்று மூளையை தட்டி தட்டி யோசித்தவனுக்கு இப்பொழுதுதான் அனைத்தும் புலப்பட்டது. ஒரு நிகழ்ச்சி தவறாமல் அவள் வந்து கொண்டிருக்கிறாள்.

நிகழ்ச்சியும் சிறப்பாக ஆரம்பித்திருக்க தத்தம் வேலைகளில் இறங்கி இருந்தனர் அனைவரும். ஆனாலும் இளங்கோவின் பார்வை அவளை கவனிக்கத் தவறவில்லை.

30 டிகிரி கோணத்தில் அவள் தலை அந்த நிகழ்ச்சி முடியும்வரை அவர்கள் பகுதியில்தான் வளைந்தே இருந்தது. அந்த விழிகள் அமரனை மட்டுமே அளந்து அள்ளிக் கொண்டிருந்தன.

ஆனால் அமரனோ கருமமே கண்ணாக இசையில் மட்டுமே தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதில் மட்டுமே ஆத்ம பிணைப்புடன் ஆழ்ந்திருந்தான்.

நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின்னும் அத்தனை எளிதாக அவள் கிளம்பி விடவில்லை. இசைக்குழு கிளம்பிச் சென்று மறையும்வரை அவன் சென்ற வழியிலேயே இவள் விழிகள் துரத்திக் கொண்டிருந்தன. அதனையும் தெளிவாக கவனித்திருந்தான் இளங்கோ.

தங்கள் வீட்டை நோக்கி காரை இளங்கோ கிளப்பி இருக்க அருகில் அமர்ந்து கொண்டான் அமரன்.

“எனக்கு கன்ஃபார்மா தெரியும்… அவ உனக்காகவே எதிர் வீட்டுக்கு குடி வந்து இருக்காடா…”

ஒன்றும் புரியாமல் அவன்புறமாக தலை திருப்பினான் அமரன்.

“அதான்டா… நான் சொன்னேனே… எதிர் வீட்டு மாடியில் ஒரு பொண்ணு.. அவ ரெகுலரா இந்த ப்ரோக்ராம்க்கு வர்றா… ப்ரோக்ராம்ல இருக்குற இன்ட்ரஸ்ட்னால இல்ல… உன்மேல இருக்கிற இன்ட்ரஸ்ட்னால…”

“எல்லாம் வயசு கோளாறு நண்பா…”

ஒரு பக்கமாய் இதழ் வளைத்து சிரித்தான் அமரன்.

“ம்ம்… இருக்கலாம்… ஆனா அவ கண்ணு வேற மாதிரி கதை பேசுதுடா…”

“கண்ணு கதை பேசுதா..?” என்றவன் ஏளனமாக சிரித்தான்.

அதற்குமேல் எதுவும் பேசாமல் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்து கொண்டான் அமரன்.

அன்றைய நாள் மிகவும் சோர்வாக இருந்ததால் நண்பர்கள் இருவரும் மாடிக்கு வந்திருக்கவில்லை. விரைவாகவே உணவு உட்கொண்டு தத்தம் அறையில் சென்று படுத்திருந்தனர்.

பால்கனியில் வந்து நெடுநேரம் அமர்ந்து பார்த்தவள் இன்றைய இரவு தரிசனம் இல்லை என்ற வேதனையோடு தானும் வீட்டிற்குள் சென்றிருந்தாள்.

மறுநாள் காலை இளங்கோ மட்டுமே உடற்பயிற்சி செய்து கொண்டிருக்க அமர் வந்திருக்கவில்லை. வழக்கம் போன்றே தியானம் செய்யும் பாவனையில் அமர்ந்திருந்தவள் தவிப்போடு நேரம் கடத்திக் கொண்டிருந்தாள்.

தனது பக்கவாட்டுப் பார்வையால் அவளை கவனித்தபடிதான் இருந்தான் இளங்கோ.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குமேல் அவன் வரப்போவதில்லை என்பது தெரிந்துபோக குழப்பத்தோடு வீட்டிற்குள் சென்றிருந்தாள். அவள் தவிப்போடு சென்றது இவனுக்கும் புரிந்தது.

“ஏன் அமர் வரல..? தூங்கிட்டாரா..? வேற ஏதாவது வேலை இருக்குமோ..? ஐயோ இன்னைக்கு முகத்தை பாக்கல… ஆபீஸ்ல வேலையே ஓடாதே…”

புலம்பியபடியே வேலைகளை முடித்துக் கிளம்பி கீழே வர வீட்டின் முன்பகுதியில் இருந்த சிட் அவுட்டில் கணேஷுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான் இளங்கோ.

“என்னம்மா திலோ… கிளம்பியாச்சா..?” சினேகப் புன்னகையுடன் கேட்டார் கணேஷ்.

“ஆமா அங்கிள்… ஆன்ட்டியை காணோம்…”

“அவ உள்ளே வேலையா இருக்கா…”

உரிமையோடு இவள் வீட்டிற்குள் நுழைந்திருக்க அவளையே கவனித்திருந்த இளங்கோ கணேஷிடம் திரும்பினான்.

“வீடு வாடகைக்கு விட்டிருக்கீங்களா அங்கிள்..?*

“ஆமாப்பா சொந்த யூஸுக்காகத்தான் வச்சிருந்தேன். இந்த பிள்ளை விடாம போராடி என்னையும் சாந்தியையும் மாத்தி மாத்தி காக்கா புடிச்சு வாடகைக்கு எடுத்துருச்சு…” என்றவர் சிரிக்க உதட்டை குவித்தபடி வீட்டிற்குள் கண் பதித்தான் இளங்கோ. உள்ளே சாந்தியுடன் இவள் ஏதோ சிரித்துப் பேசியது கேட்டது.

“கசகசன்னு கூட்டம் எல்லாம் கிடையாது… ஒரே பொண்ணுதான்… தனியாதான் இருக்கா… சொந்த பந்தம் எல்லாம் பெருசா இல்லையாம்… நல்ல வேலையில நல்ல சம்பளத்தில இருக்கா… சாந்திக்கும் பொழுதுக்கும் மேல போய் வீட்டை கிளீன் பண்ண முடியல… யாராவது புழங்கிட்டு இருந்தாதானே வீடும் நீட்டா இருக்கும்… அதான் அப்படியே வாடகைக்கு விட்டுட்டோம். ஆனா நல்ல பிள்ளை… நம்ம வீட்டு பிள்ளை மாதிரி பழகுறா… தனியா இருக்குற எங்களுக்கு இதுவும்கூட கொஞ்சம் நல்லாதான் இருக்கு…”

தோரணைக்கால் போட்டு அமர்ந்து ஒற்றைக்கால் பாதத்தை நீவியபடியே கணேஷ் பேசிக் கொண்டிருக்க வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த திலோத்தமாவை ஆழ்ந்து நோக்கினான் இளங்கோ.

“ஓகே அங்கிள்… நான் கிளம்புறேன்…” கணேஷிடம் விடை பெற்றவள் இளங்கோவை ஒரே ஒரு பார்வை பார்த்து எதிர் வீட்டை அழுத்தமாக பார்த்தபடியே தனது வண்டியை நோக்கிச் செல்ல வீட்டிற்குள் இருந்து வெளியேறி வந்திருந்தார் சாந்தி.

“இந்தா இளங்கோ… இதுல கஞ்சி சூடா இருக்…கு இதை கொடுத்துட்டு மாத்திரை போட வை. காய்ச்சல் இன்னும் குறையாம இருந்தா உடனே ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிரு… நம்ம இஷ்டத்துக்கு மாத்திரை சாப்பிடக்கூடாது…”

சாந்தி பேசியது திலோவின் செவிகளில் தெளிவாகவே விழுந்தது. வேகமாக அவர்கள்புறம் அவள் திரும்ப இளங்கோவும் அவளைத்தான் கவனித்தான். அவள் கண்களில் சட்டென ஒருவித பரிதவிப்பு… முகத்தில் வேறுவிதமான மாற்றம்… வண்டியை கிளப்பாமல் கைகளை பிசைந்தபடி அங்கேயே நின்றிருந்தாள்.

“என்னாச்சும்மா..? வண்டி ஏதும் ஸ்டார்ட் ஆகலையா..?” அவள் அதே இடத்தில் நிற்பதைக் கண்டு கேள்வி கேட்டார் கணேஷ்.

“இ..இல்ல அங்கிள்…”

சமாளிப்பாக சிரித்தவள் வண்டியை உருட்டியபடியே வாசலுக்கு சென்றாள். ஆனால் விழிகள் மொத்தமாக எதிர்வீட்டையே ஆக்ரமித்திருந்தன. வண்டியை கிளப்பிச் செல்ல மனமே இல்லாமல் குழப்பமாகவே நின்றிருந்தவள் பின் மீண்டும் வீட்டை நோக்கி திரும்பி நடந்து வந்தாள்.

“என்னாச்சும்மா..?”

“ஒ..ஒரு முக்கியமான ஃபைலை மறந்துட்டேன் அங்கிள்… அதான்…” சமாளிப்பாய் கூறியபடியே மீண்டும் மாடடி ஏறி இருந்தாள்.

அவள் தவிப்பை கவனித்தபடிதான் இருந்தான் இளங்கோ. அமரனுக்கு கஞ்சி வாங்கிச் செல்வதற்காக மட்டுமல்லாமல் அவளைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காகவும்தான் அங்கு வந்து அமர்ந்து கணேஷுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்ததே. ஓரளவு விஷயங்களை கிரகித்துக் கொண்டவன் தன் வேலையை பார்க்கச் சென்றிருந்தான்.

இளங்கோவிற்கும் ஒரு அளவுக்கு சமைக்க வரும்… ஆனால் உடல்நலம் இல்லாதவனுக்கு சரியான விகிதத்தில் கஞ்சி செய்யும் பக்குவம் தெரியாது. அதற்காகவே சாந்தியை நாடி இருந்தான். அந்த தெருவில் அவர்களோடு மட்டும் இவர்கள் இணக்கமாக பழகிக் கொள்வது உண்டு.

இல்லாத ஃபைலை எடுப்பது போல் சில நிமிடங்கள் பாவ்லா செய்தவள் இளங்கோ தன் வீட்டிற்குள் நுழைந்ததை உறுதி செய்து கொண்டு மீண்டும் கீழே இறங்கி வந்தாள்.

“என்னாச்சு ஆன்ட்டி..? யாருக்காவது உடம்பு சரியில்லையா..? கஞ்சி எல்லாம் வச்சு கொடுத்த மாதிரி இருந்தது…” எதார்த்தமாக கேட்பதுபோல் கேட்டாள்.

“ஆமாம்மா… அமரன் தெரியும்தானே… அவன்தான் ரொம்ப ஃபேமஸான ஆளாச்சே… அவனுக்கு உடம்பு சரியில்ல… காய்ச்சல்… அதான் கஞ்சி வச்சு கொடுத்தேன்…”

சரி என்று தலையாட்டி வண்டியில் ஏறி அமர்ந்தவளுக்கு மனம் பிசைந்தது. அவனை சென்று பார்க்க வேண்டும்போல் உள்ளம் துடித்தது. என்னவென்று செல்வது..? எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது..?

யோசையோடு நகம் கடித்தவள் வேறு வழியின்றி வண்டியை கிளப்பிச் சென்றிருக்க வீட்டிற்குள் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த இளங்கோ,

“பாவம்.. பட்சிக்கு முழு விபரமும் தெரியல… தெரிஞ்சா அடுத்த வாரமே வீட்டை காலி பண்ணிட்டு ஓடிடுவா… இதுக்கு முன்ன இவன் பார்க்காத காதல் ட்ராமாவா..? இவ மட்டும் என்ன விதிவிலக்கா..? டைம் வேஸ்ட் பண்ணாம வேற
வேலையை பாருன்னு சொல்லி இன்னைக்கே அவகிட்ட பேசிடணும்…”

கசந்த சிரிப்புடன் வாய்விட்டே கூறிக் கொண்டவன் அடுத்த வேலையை பார்க்கச் சென்றிருந்தான்.

(தொடரும்)
 
Last edited by a moderator:

Author: STN - 29
Article Title: குழலில் காற்றாகினாள் - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.