குழல் யாசிக்கும் புயலே - 13

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
புயல் 13
"என்ன பார்க்கிற? என்னை நீ கல்யாணம் பண்ணிக்கிறீயானு கேட்டேன்?" என்றதுமே, வாயில் ஒரு விழ்ளல் உள்ளே வைத்தவளுக்கு அது இறங்கும் முன்னே புரையேறி அடைத்துக் கொண்டது.
தண்ணீர் கண்ணாடியை அவள் பக்கம் நகர்த்தினான்.
அவளும் தண்ணீரை எடுத்து மடக் மடக்கென்று குடிக்க ஆரம்பித்தாள்.
அவனோ பொறுமையாக சப்பாத்தியைப் பிய்த்து வாயில் திணித்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
குடித்து முடித்து மேசையில் கண்ணாடியை பொத்தென்று வைத்தவளின் கோபத்தின் அளவை உணர்ந்தான்.
"என்ன பேசுறீங்க நீங்க? உங்க தங்கை கல்யாணத்தை நிறுத்த என்னை ஆதாரமா காட்டணும்னு கூட்டிட்டு வந்தீங்க. இப்போ, நான் சொல்றதை நம்ப மாட்டாங்கன்னு சொன்னதும் கல்யாணம் பண்ணிக்கலாமா கேட்கிறீங்க? என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க? உங்களை கல்யாணம் பண்ணிக்கிட்டா கல்யாணம் நின்னுடுமா? என்ன லாஜிக் இது?" என்று புரியாமல் கேட்டாள்.
"லாஜிக் நிறையவே இருக்கு! சொல்றேன்..." என்றவன் தனது திட்டத்தை கூற, அதனை அசட்டையாக எடுத்தாள்.
"ஹே! என்ன?"
"இதெல்லாம் நடக்கும் நினைக்கிறீங்களா? நிச்சயமா வாய்ப்பே இல்லை."
"நடக்கும். எனக்கு என்னமோ அவன் இன்னமும் உன்னை லவ் பண்றான் தான் தோணுது," என்றதுமே விரக்தியாகச் சிரித்தவன்,
"லவ் பண்றவன் தான் வப்பாட்டியா வச்சிக்கிறேன்னு கேட்பானா? ப்ளீஸ்... வித்யூவைப் பற்றி பேசாதீங்க! உங்க திட்டத்துக்கு நான் ஒத்துக்கிறேன். நீங்க நினைச்ச மாதிரி தங்கச்சி கல்யாணம் நின்னதும் நான் போயிடுவேன். நீங்க என்னைத் தடுக்கக் கூடாது."
"ஷ்யூர்! பட் உன்னோட ஹெல்ப்புக்காக கண்டிப்பா உன்னோட ஃப்யூச்சருக்கு நான் கேரண்டி தருவேன். உன்னை கை விட மாட்டேன்," என்று வாக்குக் கொடுக்க, அதை அவள் நம்பினாளோ இல்லையோ, "நன்றி..." மட்டும் சொன்னாள்.
"அப்புறம் இன்னொரு விஷயம் சார்..."
"என்ன?"
"கல்யாணம் பண்ணிக்கப் போறோம் சொன்னீங்களே... எல்லார் முன்னாடியுமா? இல்லை நாம மட்டுமா?"
"நாம மட்டும் தான்," என்றதுமே ஆசுவாசமடைந்தாள்.
"அப்போ நானே எனக்கு தாலி கட்டிக்கட்டுமா?"
"ஓய்! நாட்! நானும் அதைத்தான் சொல்ல வந்தேன். நாம பிரியும் போது நமக்கு எந்த பீலிங்கும் இருக்கக் கூடாது. சோ, உனக்கு நீயே தாலி கட்டிக்க. ஆனா என்னைத்தான் நீ புருஷன்னு சொல்லணும்," என்றான்.
அவளும் "சரி..." என்று தலையசைத்தாள். இருவரும் சாப்பிட்டு முடிக்க, தட்டை கழுவ கையில் எடுத்தாள்.
"வெயிட்டரை கூப்பிட்டுக்கிறேன். நீ போய்த் தூங்கு! அண்ட், நான் தூங்கினதுக்கப்புறம் தப்பிச்சுப் போகணும்னு நினைக்காத. எனக்கு இங்க நிறைய ஆட்கள் உண்டு... பார்த்துக்க!" என்று மிரட்ட, அவளும் சிறு சிரிப்புடன் அங்கிருந்து அகன்றாள்.
அவளது சிரிப்பின் அர்த்தம் புரியாமல் தோளைக் குலுக்கிவிட்டு, தனது வெயிட்டரை அழைத்தான். அவன் வந்து சுத்தம் செய்து எடுத்துச் சென்ற பின் கதவைச் சாத்திவிட்டு உறங்கச் சென்றான்.
அறையை வெறித்துக் கொண்டிருந்தவள் எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை.
மறுநாள் காலையில் பூ, புடவை, குங்குமம், அதில் மஞ்சள் கயிறு வேறு என தட்டு நிறைய இருந்தன. கைகள் நடுங்க, அதை அவனிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.
அறைக்குள் சென்று புடவை அணிந்து, தலையை வாரி பூ வைத்து, வகிட்டில் குங்குமம் இட்டு, மஞ்சள் கயிறில் மூன்று முடிச்சு போட்டு கழுத்தில் அணிந்துக் கொண்டு அவன் முன்னே வந்து நின்றாள்.
"பர்ஃபெக்ட்!" என்றான்.
அப்படியே திருமணமான புதுப் பெண்ணைப் போல இருந்தாள்.
"ஓகே... வா, போலாம்," என்றவன், "ஒரு நிமிஷம்..." என்று அவள் அருகே வந்து தோளில் கையை பட்டும் படாமல் வைத்து ஒரு செல்ஃபி எடுக்க வர, முதலில் பயந்து பின்வாங்கினாள்.
"ஹே, ரிலாக்ஸ்... தப்பான நோக்கத்துக்காக இல்லை. என் அப்பாவுக்கு அனுப்பி விஷயத்தை முன்னாடியே சொன்னா கொஞ்சம் ரெடியா இருப்பார். அதுக்குத்தான்," என்றான்.
அவளும் ஓரடி முன்னே வந்து நின்றாள்.
இருவரும் சேர்ந்து இருப்பது போல புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
தந்தையிடம் அந்தப் புகைப்படத்தை அனுப்பிய நொடியே அவர் பார்த்துவிட்டு அதிர்ந்து, அடுத்த நொடியே மகனை அழைத்தார்.
"பிருத்வி! யாருப்பா அது? எதுக்கு இந்த போட்டோவை எனக்கு அனுப்பி இருக்க?" என்று பதற்றத்துடன் கேட்டார்.
"அப்பா... அவ ஆர்யாங்கா. நானும் அவளும் லவ் பண்ணினோம். இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டோம்," என்றவனின் வார்த்தைகளில் துளிகூட உற்சாகமில்லை. ஏதோ செய்தியைச் சொல்வது போலச் சொன்னான்.
நெஞ்சைப் பிடித்துக் கொண்டவர்,
"என்ன சொல்ற பிருத்வி? நீயும் அந்தப் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா?" என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
"ஆமாப்பா..." என்றவனின் குரல் உள்ளே போயிருந்தது.
"உங்க அம்மா பேச்சைக் கேட்டு உனக்கு எந்த நல்லதும் செய்ய மாட்டேன்னு நினைச்சிட்டு நீயே கல்யாணம் பண்ணிக்கிட்டியா பிருத்வி?" என்று விரக்தியோடு கேட்டார்.
"அப்பா! என்ன பேசுறீங்க? இதுவரைக்கும் எனக்கு நடந்த நல்ல விஷயங்கள்ல எல்லாம் உங்க பங்கு அதிகம் ப்பா! நீங்க போய் அப்படி சொல்லலாமா?"
"அப்புறம் ஏன் ப்பா? ஒரு வார்த்தை சொல்லிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்ட நீ?"
"என்னை மன்னிச்சிடுங்க பா! நான் சொன்னா எனக்காக நீங்க விமர்சையாக கல்யாணம் பண்ணி வைப்பீங்க. ஆனா எனக்கு இதுல உடன்பாடு இல்ல. சிம்பிளா பண்ணிக்கணும்னு நினைச்சேன் பா..." என்றான் சமாளிப்பாக.
"அதுக்காக பெத்தவங்க நாங்க கூட இல்லாமையா கல்யாணம் பண்ணுவே பிருத்வி?"
"அம்மாவை கூப்பிட்டிருந்தா வந்திருப்பாங்களா ப்பா?" என்று அவன் கேட்டதும் அமைதியாக இருந்தார் அவர்.
"அப்பா..."
"அந்தப் பொண்ணு வீட்டுல நம்மளைப் பற்றி என்ன நினைப்பாங்க? வசதி இருந்தும் யாருமே இல்லாம கல்யாணம் பண்ணிக்கிறாங்களேன்னு பேச மாட்டாங்களா?"
"அப்பா! அவளுக்கு என்னைத் தவிர யாரும் இல்லப்பா. ஹோம்ல வளர்ந்த பொண்ணு. அவ பக்கத்துல யாரும் இல்லாத போது என் பக்கத்துல நீங்க இருந்தா பீல் பண்ணுவாள்னு உங்களை கூப்பிடல. சாரிப்பா..." என்றான்.
அவரும் சூழ்நிலை புரிந்து கொண்டு,
"சரிப்பா... வீட்டுக்கு வாங்க," என்றார்.
"ப்பா..." என்று தயங்க,
"அது உன் வீடு! தயங்கணும் அவசியம் இல்லை. அவங்க அவங்க இஷ்டத்துக்கு எல்லாம் செய்யும் போது, நீயும் உன் இஷ்டப்படி நடந்துக்கிறதுல தப்பு இல்லை. நீ வா... பார்த்துக்கலாம்," என்று நம்பிக்கையூட்ட, இதழ் விரித்தவன்,
"வர்றேன் பா... உங்க மருமகளோட," என்று வைத்து விட்டான்.
அவனை வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தாள் ஆர்யாங்கா. ஆனால் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. அவனும் சொல்லவில்லை. அங்கிருந்து கிளம்பி இருந்தார்கள்.
அனைத்தையும் நினைத்துப் பார்த்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிந்தது. அழுது கொண்டே கிடந்தவள் அப்படியே உறங்கிப் போனாள்.
அவள் உறங்கிய பின் தனது மடிக்கணினியை எடுத்து வைத்து வேலை பார்த்தான். மதியம் சாந்தி அக்கா இருவருக்கும் சேர்த்தே உணவு எடுத்து வந்து கொடுத்தார்.
உறங்கிக் கொண்டிருந்தவளைத் தட்டி எழுப்பினான். மெல்ல விழி திறந்து அவனைப் பார்த்தாள்.
"வா... சாப்பிடலாம்!" என்று அழைத்தான்.
காலையில் சாப்பிடாதது வேறு வயிற்றைக் கிள்ளியது. ஆனாலும் இந்த உணவிற்காகத்தானே அத்தனை அவமானம் என எண்ணியவளுக்கு சாப்பிடத் தோன்றவில்லை. வெறுப்பாக இருந்தது.
"எனக்கு வேணாம் ப்ளீஸ்... நீங்க சாப்பிடுங்க," என்றாள் எங்கோ பார்த்தபடி.
"உனக்கு வேணாம்... உள்ள இருக்க பாப்பாக்கு? அது என்னம்மா தப்பு செஞ்சது? என்னைப் போல தப்பி உருவான குழந்தைகளைத்தான் வஞ்சிக்கணும்னு தோணுமோ பெத்தவங்களுக்கு! ஒரு பாவம் அறியாத எங்களை ஏன் தண்டிக்கிறீங்க?" என விளையாட்டாக கேட்டாலும், அர்த்தத்தோடுதான் கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டதும் நிமிர்ந்து பார்த்தாள்.
"சாப்பிடாம எத்தனை நாள் இருக்கப் போற? குழந்தையை சுமக்கிறோம்ன்ற எண்ணமே உனக்கு இல்லையா? அது சரி... அந்த எண்ணம் இருந்த நீ ஏன் தற்கொலை பண்ணிக்கப் போற? இங்க பாரு! உனக்கு உன் குழந்தை வேண்டாம், சுமையா நினைச்சா, குழந்தையை பெத்து எங்கிட்டுக் கொடுத்துட்டு நீ எங்க வேணாம் போ. என்ன வேணாம் பண்ணிக்க. ஐ டோன்ட் மைண்ட்! ஆனா குழந்தைக்கு ஏதாவது பிரச்சனைன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்..." என்றான் மிரட்டலாக.
"என்ன சும்மா மிரட்டுறீங்க? இது ஒண்ணும் உங்க குழந்தை இல்லை! என் குழந்தை. பெத்தெடுக்கவும் கொல்லவும் எனக்குத்தான் உரிமை இருக்கு. உங்களுக்கு உரிமை இல்லை," என்றதுமே—
"ஏய்!" என்ற கர்ஜனையோடு கழுத்தை நெறிக்க வந்தவன், கையை மடக்கி சுவரில் குத்திக் கொண்டான்.
அவளோ மிரண்டு போய் அவனைப் பார்த்திருந்தாள்.
"என்னை பேச வைக்காத! வந்து சாப்பிடு!" என்றான்.
அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு எழுந்து வந்து, அவன் எதிரே பயத்துடனே அமர்ந்தவள் அவனை ஒரு பார்வை பார்த்தபடி சாப்பிட்டாள். இதழுக்குள் மூண்ட சிரிப்பை அடக்கியபடி அவனும் சாப்பிட்டான்.
பின் சாந்தி அக்காவை அழைக்க, அவர் வந்து பாத்திரங்களை எடுத்துக் கொண்டு போனார்.
அடுத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. தலைகுனிந்தபடி அமர்ந்திருந்தாள்.
அவனும் மடிக்கணினியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தவன், திரும்பி அவளையே பார்த்தான்.
"சாரி..." என்றான்.
நிமிர்ந்து அவனை எதற்கு என்பது போல பார்த்தாள்.
"அம்மா, சித்தி... உன் கிட்ட ஆக்வர்ட்டா பிஹேவ் பண்ணதுக்காக மன்னிப்பு கேட்கிறேன்..."
எதுவும் பேசவில்லை. அமைதியாக தலைகுனிந்தபடி அமர்ந்து விட்டாள்.
"நாளையிலிருந்து நீ என்னோட ஃபேக்டரிக்கு வா," என்றதுமே ஆவலாக அவனைப் பார்த்தாள்.
"என்ன பார்க்கிற? உன்னால முடியும் தானே?" எனக் கேட்டதும் வேகமாக "ஆம்..." என்றாள்.
"ஓகே... எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. நீ ரெஸ்ட் எடு," என்று பால்கனிக்குச் சென்று விட்டான்.
போகும் அவனைப் பார்த்தவள் தொலைக்காட்சியை உயிர்ப்பித்து மெல்லிய சத்தத்தில் பார்க்கலானாள்.
இரவில் வேலை முடிந்து வீடு திரும்பி இருந்தனர் மௌலியும் ரவியும்.
அறைக்குள் நுழைந்ததுமே ராஜேஸ்வரி,
"உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்," என்றார்.
எப்படியும் பஞ்சாயத்தாகத்தான் இருக்கும் என எண்ணியவர்,
"இப்போவே பேசணுமா? இல்ல சாப்பிட்டு ஆற அமர பேசலாமா?" என்றார்.
அதில் கடுப்பானவர்,
"அப்பாவும் பிள்ளையும் என்னோட நிம்மதியை பறிக்கணும்ன்றதுல குறிக்கோளா வச்சிருக்கீங்களா?" என பல்லைக் கடித்தபடி வெளியே சென்று விட்டார்.
அவரோ தோளைக் குலுக்கிவிட்டு குளியலறைக்குள் சென்று சுத்தம் செய்து கொண்டு வந்தவர், சாப்பிட அமர்ந்தார். சாந்தி அக்கா பரிமாற, சாப்பிட்டார்.
"பிருத்வியும் மருமகளும் சாப்பிட்டாங்களா?"
"சாப்பிட்டாங்க ஐயா..."
"ம்ம்..." என்று ஒரு வாய் வைத்தவர்,
"எதுவும் பிரச்சனையா?"
"ஐயா..." என தயங்க,
"சரி, சரி! அதை சொல்லத்தானே உங்க முதலாளியம்மா காத்துட்டு இருக்காங்க! என்னன்னு அவ கிட்டயே கேட்டுக்கிறேன்," என்றவர் சாப்பிட்டு கையை கழுவிவிட்டு எழுந்து சென்றார்.
சாந்தி பயத்துடன் மேஜையை சுத்தம் செய்தார்.
மனைவியை நோக்கிச் சென்றார்.
"என்ன பிரச்சனை ராஜி? எதுக்காக இவ்வளவு கோபமா இருக்க?" என அருகே இருந்த கதிரையில் அமர்ந்தபடி கேட்டார்.
"கோபமா இல்லாம வேற என்னங்க பண்ண சொல்றீங்க! உங்க புள்ளை மட்டும் தான் இந்த வீட்டோட அவமானம்னு நினைச்சிட்டு இருந்தேன். ஆனா உங்க புள்ளை கூட்டிட்டு வந்தவளும் இந்த வீட்டு அவமானம்தான்..."
"ராஜி! முதல்ல என் மகனை அவமானம்னு சொல்றதை நிறுத்து! அவனால இந்த வீட்டுக்கு பெருமைதான்... அவமானம் கிடையாது. புதுசா வந்த மருமகளை இப்படி தான் பேசுவியா? மனுஷங்களை மதிக்கவே மாட்டியா?"
"நான் மதிக்கணும்னு நினைக்கிறவங்களுக்கு கொஞ்சம் தகுதி இருக்கணும். அது அவன் கூட்டிட்டு வந்திருக்காளே ஒருத்திக்கிட்ட சுத்தமா இல்லை. அவளை மருமகள்னு சொல்லி இந்த வீட்டை அசிங்கப்படுத்தாதீங்க..."
"இப்போ உனக்கு அந்தப் பொண்ணால என்ன பிரச்சனை?"
"உங்க பிள்ளையால இந்த வீட்டுக்கு அவமானம் போல, அவளும் அவமானம்தான்..."
"ராஜி!"
"உங்க பிள்ளையால குழந்தை பெத்துக்க முடியாதுனு, கர்ப்பமா இருக்கிறவளை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கான்! இதைக் கேட்டதுமே உங்க மனசு குளிர்ந்துபோயிருக்குமே! உங்க மகனால பெருமையா இருக்குமே!"
"என்ன சொல்ற ராஜி?"
"எல்லாரும் களையான பெண்ணைத்தான் பார்ப்பாங்க. உங்க புள்ளை மட்டும் தான் கர்ப்பமான பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கான்! உங்க புள்ளை பண்ணத நினைச்சு உங்களுக்கு பெருமையா இருக்கும்ல?" என்றவர் குத்தலாகப் பேச, அவரோ வார்த்தைகள் எதுவும் இல்லாமல் அதிர்ச்சியில் தடுமாறிப் போயிருந்தார்.
 

Author: Vishakini
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 13
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
இந்த ரணகளத்திலும் உங்களுக்கு ஹ்யூமர் ஜாஸ்தி ராஜி🤣🤣🤣🤣🤣🤣
களையான பெண்.... கர்ப்பமான பெண்......
இப்ப மௌலி என்ன சொல்ல போறார்????