குழல் யாசிக்கும் புயலே - 7

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜன்

Administrator
Staff member
Nov 11, 2018
1,727
1,147
113
புயல் 7

அமிர்தா, ஆர்யங்காவின் கையைப் பிடித்து நாடித் துடிப்பைப் பார்த்தார். அடுத்த நொடியே அவள் கர்ப்பமாக இருப்பதைத் தெரிந்துகொண்டவர், அதிர்ச்சியுடன் குடும்பத்தினரிடம் அதைப் பகிர, அவர்களும் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்த எவருமே இதை எதிர்பார்க்கவில்லை.

"என்ன சொல்ற அமிர்தா? இந்தப் பொண்ணு பிரக்னன்ட்டா இருக்காளா?"


"ஆமா அண்ணி! பிரக்னன்ட்டா தான் இருக்கா" என்று கூறிவிட்டு அவ்விடம் விட்டு எழுந்து நகர்ந்தார்.



உச்சக்கட்ட கோபத்திலிருந்த ராஜேஸ்வரியின் தாடை இறுகியது. "சாந்தி! அவளை எழுப்பு" என்றார். சாந்தியும் நீர் தெளித்து அவளை எழுப்ப முயன்றார்.


மெதுவாகக் கண்களைச் சுழற்றினாள் ஆர்யா. இன்னும் தெளிவு பிறக்கவில்லை. மெதுவாகக் கண் விழித்தவள் சாந்தியின் முகத்தைக் கண்டாள்.


"எழுந்திருங்கம்மா" எனக் கனிவாகச் சொன்னார் சாந்தி.


அவள் எழுந்து அமரும் முன், வேகமாக அவள் அருகே வந்த ராஜேஸ்வரி, அவளது தலைமுடியைக் கொத்தாகப் பிடித்துத் தூக்கி நிற்க வைத்தார்.

"ஸ்... ஆ... வலிக்குது! விடுங்க... ப்ளீஸ் விடுங்க, வலிக்குது!" எனத் தள்ளாடியபடி கதறினாள்.


"யார்டி நீ? எதுக்காக அவனை கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்திருக்க? எவன் கிட்டயோ பிள்ளையை வாங்கிட்டு, இந்த வீட்டுக்கு மருமகளா வருவியோ? ச்சீ... உண்மையச் சொல்லு, அவனுக்கு நீ கர்ப்பமா இருக்கிறது தெரியுமா? அவனை ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்கியா? சொல்லுடி, எதுக்காக அவனை கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு வந்திருக்க? உன் வயித்துல வளர குழந்தைக்கு யாருடி அப்பன்? சொல்லுடி!" என மேன்மேலும் முடியைப் பிடித்து ஆட்டினார்.



அந்த வலியை அவளால் தாங்க முடியவில்லை. "ப்ளீஸ் விடுங்க! வலியைத் தாங்க முடியல... விடுங்க!" எனக் கெஞ்சினாள்.


"உண்மையைச் சொல்லுடி! எதுக்காக இங்க வந்திருக்க? யார் உன்னை இங்க அனுப்பி வச்சது? எதுக்குடி அவனை கல்யாணம் பண்ணின? நீ சொகுசா வாழ, உன் பிள்ளைக்கு இனிஷியல் கொடுக்க என் வீடுதான் கிடைச்சதா உனக்கு?! சொல்லுடி, இதுக்குக் காரணமானவன் யாரு? எங்க இருக்கான்? என்னடி உன் திட்டம்?" என அழுத்தமாகப் பற்றி இழுத்து ஆட்டிக்கொண்டே கேட்டார். வலியிலும் கண்ணீரிலும் கூட அவள் வித்யூவைப் பார்க்கவில்லை.



ஆனால் வித்யூவோ அச்சத்தில் நின்றிருந்தான். 'இவன் தான்' என்று கையைச் காட்டிவிடுவாளோ என்ற பயத்தில் வெடவெடத்துப் போனான். அவள் கையை காட்டினாலும் யாரும் நம்பப்போவதில்லை என்ற உறுதி ஒருபுறம் இருந்தாலும், உள்ளுக்குள் ஒரு சிறு பயத்துடன் நின்றிருந்தான்.



"இப்ப நீ உண்மையைச் சொல்லலைனா, எங்க வீட்டுல நீ திருடிட்டேன்னு பொய் சொல்லி போலீஸ்கிட்ட கம்ப்ளைண்ட் கொடுத்து உன்னை உள்ள தள்ளிடுவேன். உண்மையச் சொல்லுடி! உன் வயித்துல வளர குழந்தைக்கு யார் அப்பன்?" என முடியைப் பிடுங்குவது போல மேலும் இழுத்தார்.


"அம்மா!" என வாசலிலிருந்து கர்ஜித்தான் பிருத்வி.


நாலு எட்டில் ராஜேஸ்வரியை அவன் நெருங்க, அவரது கை அவளது முடியிலிருந்து தளர்ந்தது. வேகமாக ஆர்யாவைத் தன்னோடு இழுத்து அணைத்துக்கொண்டான்.


"உங்களுக்கு என்ன தெரியணும்? இவ வயித்துல இருக்கிற குழந்தைக்கு யார் அப்பான்னு தெரியணுமா?" எனக் கேட்டவனின் பார்வை அடுத்த நொடியே வித்யூவின் மேல் படிய, அவன் எச்சில் விழுங்கியபடி நின்றிருந்தான்.

கேலியாக உதட்டை வளைத்த பிருத்வி தாயிடம், "நான்தான்!" என்றான்.



"நீ அப்பாவா? இதை எங்களை நம்ப சொல்றியா பிருத்வி? உன்னால..." என நக்கலாகப் பேச வந்த செல்வராணியை அடக்கினார் ராஜேஸ்வரி.


"ராணி! வாயை மூடு" என்றவர், "இந்தக் குழந்தைக்கு நீ அப்பா இல்லைன்னு எங்களுக்குத் தெரியும். எதுக்காக இவளைக் கல்யாணம் பண்ணிட்டு வந்திருக்க? இவளைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் என்ன? இன்னும் இந்த வீட்டோட கொஞ்ச நஞ்ச மானத்தையும் வாங்கக் காத்திருக்கியோ? எதுக்காக இவளை உன் மனைவியா கூட்டிட்டு வந்திருக்க? ரெண்டு பேரும் சேர்ந்து என்ன திட்டம் போட்டு இருக்கீங்க? இன்னும் என்னென்ன அசிங்கத்தையெல்லாம் இந்தக் குடும்பம் பார்க்கணும்னு நினைக்கிறீங்க?" என இருவரையும் பார்த்துக் கேட்டார்.


"எனக்குன்னு ஒரு குடும்பம் அமைச்சுக்கிறது அசிங்கமா? அப்போ குடும்பமா இருக்குற உங்களைப் பார்க்கவும் எனக்கு அசிங்கமாத்தான் தெரியுது..." எனப் பல்லைக் கடித்தான்.


"ஒத்துக்கிறேன், இந்தக் குழந்தை என் மூலமா உண்டாகலை! அதுக்காக ஒரு பொண்ணை இப்படித்தான் நடு வீட்டுல நிக்க வச்சுக் கேள்வி கேட்பீங்களா? நீங்களும் ஒரு பொண்ணு தானே! அதுவும் பிரக்னன்ட்டா இருக்கான்னு தெரிஞ்சும் இப்படிச் செய்ற உங்களுக்குக் கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லையா?"


"ஈவு இரக்கம் எதுக்குக் காட்டணும்? இவ எனக்கு யாரு?"


"சரிதான்! பெத்த பிள்ளை மேலேயே காட்டாத உங்ககிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டது தப்புதான் மிஸஸ் மௌலி! இட்ஸ் ஓகே! இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்? இந்தக் குழந்தையோட அப்பா யாருன்னு தானே? சொல்றேன்..." என்றவன் பெருமூச்சை விட்டபடி தொடர்ந்தான்.


"இப்ப இருக்கிற டெக்னாலஜி மூலமா ஒரு பொண்ணால இண்டிமசி (Intimacy) இல்லாமலே குழந்தை பெத்துக்க முடியும். அப்படித்தான் இவளும் கர்ப்பமாக இருக்கா! எனக்கு ஒரு குடும்பம் தேவைப்பட்டது. நான் எனக்குன்னு ஒரு குடும்பம் அமைச்சுக்கணும்னு நினைச்சேன். நானும் ஆர்யங்காவும் லவ் பண்ணினோம், லிவிங்-டு-கெதர்ல இருந்தோம். என்னைப் பத்தி அவளுக்கு நல்லாவே தெரியும். சோ, எங்களுக்கு ஒரு குழந்தை வேணும்னு நினைச்சோம். IUI ட்ரீட்மென்ட் மூலமா குழந்தையும் உண்டாச்சு! அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிட்டோம். தட்ஸ் ஆல்... இன்னும் ஏதாவது விளக்கம் வேணுமா உங்களுக்கு?" எனக் கேட்டிட, அதற்கு மேல் அவனிடம் வாதாட விரும்பாமல் ராஜேஸ்வரி விறுவிறுவெனச் சென்றுவிட்டார்.

மற்றவர்களும் அங்கிருந்து நகர, வித்யூ மட்டும் அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்தான்.


தன் கை வளைவுக்குள் இருந்த ஆர்யாங்கா சற்றுத் தள்ளாட, அவளைக் கைகளில் ஏந்திக்கொண்டவன், வித்யூவை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மாடியேறினான்.


அவளை ஏசும் போதும், வலிக்க வலிக்கத் துடிக்க வைக்கும் போதும் வராத கோபம், பிருத்வி அவளைத் தூக்கிச் செல்லும் போது வித்யூவுக்கு வந்தது. தன்னை அறியாமல் வந்த கோபத்தில் கை முஷ்டியை இறுக்கியவன் அங்கிருந்து சென்றான்.


மெத்தையில் அவளைப் படுக்க வைத்தான் பிருத்வி. அவளும் வாகாகப் படுத்துக்கொள்ள, கோபத்தில் நரம்புகள் புடைக்க அங்கிருந்த சுவரை அவன் குத்தினான்.


பயத்தில் எழுந்து அமர்ந்தவள், "பிருத்வி, என்ன பண்றீங்க?" என்றாள்.


மேலும் இரண்டு மூன்று தடவை குத்தியவன், அதே கோபத்துடன் அவள் புறம் திரும்பி, "உன்னை கீழே இறங்கக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? என் பேச்சை மீறி எதுக்கு நீ கீழே இறங்கின? உனக்கு என்ன வேணுமோ சாந்தி அக்கா கிட்ட கேட்க வேண்டியதுதானே! கீழே இறங்கினதால என்ன நடந்ததுன்னு பார்த்தியா?" என மீண்டும் கோபத்தில் சுவரைக் குத்தினான்.


"ப்ளீஸ், கோபப்படாம நான் சொல்றதைக் கேளுங்க! நான் கீழே இறங்கவே இல்லை" என்றவள் நடந்ததை ஒன்றுவிடாமல் கூறி முடித்தாள்.


"ச்ச..." என்று கண்ணாடி முன் இருந்த பொருட்களைத் தட்டிவிட்டவன் அப்படியே கீழே மடங்கி அமர்ந்தான்.

அவளாலும் அங்கு நடந்ததை ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் பேசிய வார்த்தைகளில் உடல் கூசிப்போனது. இப்படியான வார்த்தைகளைக் கேட்கக் கூடாதென்று தானே தற்கொலை செய்ய நினைத்தாள்? அவளைக் காப்பாற்றிய கையோடு இங்கு அழைத்து வந்தவனால்கூட அதைத் தடுக்க முடியவில்லை. எங்கோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்து கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தாள் ஆர்யா.


அவளை நிமிர்ந்து பார்த்தான் பிருத்வி. "இப்படி எதுவும் நடந்திடக் கூடாதுன்னு தான் உன்னை கீழே போகாதேன்னு அத்தனை முறை சொன்னேன்!"


கண்ணீர் விட்டவள், அவனது சீற்றமான முகத்தைக் கண்டாள். கொஞ்சம் தயங்கியபடியே, "ஏன் பொய் சொன்னீங்க?" எனக் கேட்டாள்.

"உண்மைக்கு இங்க மதிப்பு இல்லை. சாட்சியும் ஆதாரமும் இல்லையே! எப்படி நீ அங்கே உன்னை நிரூபிப்ப?"

அவளிடம் பதில் இல்லை.


"உங்களால..." என்றவள், அதற்கு மேல் கேட்கத் துணியாமல் வாய் மூடித்தலை குனிந்தாள்.


அவளைக் கண்டு விரக்திச் சிரிப்புடன், "என்னால குழந்தை பெத்துக்க முடியாது! ஒரு ஆக்சிடென்ட்ல அந்தத் திறனை நான் இழந்துட்டேன். இதை யாருக்கும் தெரியாம மறைச்சு வச்சிருந்தேன். வீட்ல எனக்குக் கல்யாணம் பேசினாங்க. நான் முடியாதுன்னு மறுத்தேன். அதையும் மீறிப் பெண் வீட்டுக்காரங்களை வீட்டுக்கு வரவச்சுப் பேசினாங்க. எனக்குக் கல்யாணம் வேணாம்னு அவங்க முன்னாடியே சொன்னேன். அதையும் மீறிப் பேசவும், எல்லார் முன்னாடியும் உண்மையைச் சொல்ல வேண்டியதாப் போச்சு.


என் அம்மாவுக்கும் இந்தக் குடும்பத்துக்கும் அந்த இடத்துல அவமானத்தைத் தந்ததால, என்னை இங்கே அசிங்கமாத்தான் பார்க்குறாங்க. இவங்க என் மேல வச்சிருந்த பார்வையே மாறிடுச்சு! எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சுட்டாங்க. என்னால இந்தக் குடும்பத்துக்கு வாரிசு கொடுக்க முடியாத காரணத்தால, என் அப்பாவைத் தவிர இங்கே யாரும் என்னை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கிறது இல்லை.


இப்போ நான் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்த நீ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சதும் அவங்க உன் மேல கோபப்பட்டாங்க. என்னை மீறி நடந்த விபத்து அது! அதுக்காக நான் என் ஆண்மையை இழந்ததுல என் தப்பு என்ன இருக்கு? எனக்கு ஆதரவா இருக்க வேண்டிய குடும்பம், என்னை ஒரு மனுஷனா கூட மதிக்கல! எனக்கு இங்கே இருக்கப் பிடிக்கல, ஆனாலும் அப்பாவுக்காக இருக்கேன்" என்று தன்னை பற்றி அவளிடம் கூறினான்.


அவனைப் பாவமாகப் பார்த்தவள், அவன் நிமிர்ந்து பார்த்ததும் வேறெங்கோ பார்வையைத் திருப்பினாள்.


"ஐ யம் சாரி! என்னால தானே உனக்கு இந்த அவமானம்?" என மென்மையாக மன்னிப்பு வேண்டினான்.

"இந்த வார்த்தைகளையெல்லாம் கேட்கக் கூடாதுன்னு தான் தற்கொலை பண்ணிக்கப் போனேன். தற்கொலையே மேல்னு தோணுது எனக்கு" எனத் தலையணையில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.

அவளுக்கு வித்யூவின் நினைப்புதான் வந்தது.



'இவனையா உயிருக்குயிராகக் காதலித்தோம்?' என்று நினைக்கவே உடல் கூசிப்போனது. காதலோடு தேகத்தைப் பகிர்ந்து, அவனது ஆசைக்கு இணங்கி, கருவில் அவன் உயிரைச் சுமந்ததோடு அவனால் அவமானத்தையும் சுமக்கிறாள். அவன் காட்டிய காதல் என்றோ கானல் நீராகிப் போனதை இன்னும் நம்பாமல், அங்கே தனக்காகப் பேச வருவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவனது முகத்தில் இளக்காரப் பார்வையும் வன்மமும் மட்டுமே பிரதிபலித்தது.


காதலித்ததைத் தவிர அவள் செய்த தவறு, அவன் மீது கண்மூடித்தனமாக வைத்த நம்பிக்கைதான். அதன் விளைவுதான் இன்று யார் யார் வாயிலோ விழுந்து எழுகிறாள். காப்பாற்ற வரவேண்டியவனோ வன்மத்துடன் நிற்கிறான். இனி வரும் நாட்களில் தனது நிலை என்னவாகும் என்பதை எண்ணிக் கண்ணீர் வடித்துக் கிடந்தாள் ஆர்யா.

.
 

Author: ரோசி கஜன்
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
போடி லூசு.....இன்னுமா அவனை நம்பர😬😬😬
அன்னைக்கு ராணி பையன் birthday function la இருந்தான்..... போன epi la அவன் வெளிநாட்டில் இருக்கானா.????