• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 16

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 16



மேதினூர்:



இதோ, ஆறு மாதங்கள் கடந்திருந்தன. பாரியின் பிறந்தநாளில் தொடங்கிய அந்த மெல்லிய காதல், இன்று இரு வீட்டார் முன்னிலையில் ஒரு புனிதமான பந்தமாக மாறப்போகிறது.



மலர்விழியின் வீடு மாவிலை தோரணங்களாலும், மல்லிகைப் பூக்களின் நறுமணத்தாலும் நிறைந்திருந்தது. அறையினுள் தோழிகளுடன் அமர்ந்திருந்த மலர், இன்று ஒரு புது மணப்பெண்ணின் பொலிவுடன் காணப்பட்டாள். அடர் சிவப்பு நிறப் பட்டுப்புடவை, தலையில் சூடிய மல்லிகைச்சரம், கழுத்தில் ஜொலிக்கும் ஆபரணங்கள் என ஒரு தேவதையாய்ப் போலிருந்தவளின் முகத்தில், இப்போது குடும்பப் பொறுப்பேற்கப் போகும் ஒரு மெல்லிய முதிர்ச்சியும், ஆழமான காதலும் போட்டி போட்டுக் கொண்டிருந்தன.



"இவன் என்னுடையவன்" என்று ஊர் அறியச் சொல்லப்போகும் அந்த நிமிடம் நெருங்க நெருங்க, அவளுக்குள் ஒரு சொல்ல முடியாத பூரிப்பு உண்டானது. கண்ணாடி முன் நின்று தன்னைத்தானே பார்த்தவள், பாரியின் ரசனைக்குத் தகுந்தபடி தன் நெற்றிப் பொட்டைச் சரி செய்துகொண்டாள்.



நல்ல நேரம் ஆரம்பித்தது. நிச்சயதார்த்த மேடையில் பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக அமர்ந்திருந்தான் பாரி. அவன் கண்கள் ஆவலுடன் தன்னவளின் வருகைக்காகக் காத்திருந்தன. சரியாக மேள தாளங்கள் முழங்க, தோழிகள் சூழ மலர்விழியும் மெல்ல நடந்து வந்தாள். அவளது ஒவ்வொரு அடியும் பாரியின் இதயத் துடிப்பை மேலும் அதிகமாக்கியது. அவள் தலைகுனிந்து மேடையில் அவனருகில் அமர்ந்தபோது, அந்தப் பட்டுப்புடவையின் வாசனையும், அவளது கூந்தலின் மல்லிகை மணமும் அவனை ஒரு மாய உலகிற்கு அழைத்துச் சென்றதை அவன் மட்டுமே உணர்ந்தான்.



பின்னர் இரண்டு வீட்டின் பெரியவர்களும் தாம்பூலம் மாற்றி, லக்னப் பத்திரிகையை வாசித்தபோது, அந்த அறையே கைதட்டலால் நிறைந்தது. காஞ்சனா தனது மகனிடம் மோதிரத்தை நீட்ட, அதை வாங்கிய பாரி, அவளது கண்களை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டே புன்னகையுடன் மோதிரத்தை அணிவித்தான். "மலரு..." என்று சாந்தி கூப்பிடவும், மோதிரத்தை எடுத்தவள் பாரிக்கு அணிவிக்கும் போது, அவளது விரல்கள் லேசாக நடுங்கின. "கொஞ்சம் நிமிர்ந்து பாருடி," என்றான் பாரி மெதுவாக.



"முடியாது," என்று அவள் தலையசைக்க, அடுத்து என்ன நடக்குமென்று அவன் வார்த்தையை முடிப்பதற்குள் வேகமாக நிமிர்ந்தவளைப் பார்த்தவன், "இனி நீ என்னோட சரிபாதி," என்று அவன் கண்கள் சொல்ல, "நிச்சயமாக!" என்று அவள் கண்கள் பதில் சொன்னது.



பின்னர் வீட்டுப் பெரியவர்களும் வந்திருந்த உறவினர்களும் மேடைக்கு வந்து இருவரையும் ஆசீர்வதித்தனர். அனைவரும் உணவருந்தச் செல்ல, அந்தப் பெரியவர்கள் கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல் அவர்கள் இருவரின் கைகளும் ஒருவருக்கொருவர் உறுதியாகப் பிணைத்துக்கொண்டன. போட்டோகிராபரும் இருவரையும் விதவிதமாகப் புகைப்படம் எடுத்துத் தள்ளினார்.



இதையெல்லாம் வீடியோவில் பார்த்துக் கொண்டிருந்த ஒருத்தியோ, தனது அறையில் இருக்கும் அத்தனை பொருட்களையும் கீழே உடைத்துத் தள்ளிவிட்டு, "நோ!" என்று கத்தினாள்.

இங்கு நடப்பதையெல்லாம் இவ்வளவு நேரம் வீடியோ காலில் அங்கே கத்திக் கொண்டிருக்கும் மகளுக்குக் காட்டிய கார்மேகம், வேகமாக எழுந்து வெளியே வந்து அங்கிருந்த தனது காரில் ஏறி வீட்டிற்குச் சென்றவர் மகளுக்குக் கால் பண்ண, ரிங் போய்க்கொண்டே இருந்தது தவிர அவள் எடுக்கவில்லை.



"ஷாலினி... ஷாலினி..." என்று அந்தப் பெற்ற மனம் துடித்தது. பக்கத்து எஸ்டேட் ஓனர்தான் கார்மேகம். கார்மேகத்தின், மகளுக்கு மூன்று வயது இருக்கும் போதே அவரது மனைவி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். அதன் பிறகு வேறு ஒரு கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் மகளுக்காகவே தனது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார். பள்ளிப் பருவத்திலேயே ஷாலினிக்கு ஏனோ பாரியை ரொம்பப் பிடித்துவிட்டது.



இதன் காரணமாக அவனுடன் பழக, பாரியோ 'தோழி' என்ற எண்ணத்திலேயே ஷாலினியோடு நன்கு பழகினான். ஆனால், அவள் மனதில் இப்படி ஒரு ஆசை இருக்கும் விஷயம் பாரிக்குத் தெரியாமல் போனது. அப்போதுதான் இங்கே பள்ளிப் படிப்பை முடித்தவன், வெளிநாட்டிற்குப் படிக்கப் போவதாக ஷாலினியிடம் சொல்ல, அவளுக்கு முதன்முதலாக அவன் பிரிந்து போவதை நினைத்துத் தாங்க முடியவில்லை. ஒரு தோழியாக வருத்தப்படுகிறாள் என்று நினைத்துக்கொண்டு பாரியும் அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டான்.



கடந்த இரண்டு நாட்களாக மகளின் முகம் சரியில்லையே என்பதை யோசித்த கார்மேகம், "பேபி, என்னடா பிரச்சனை?" என்று கேட்கும்போதுதான் அவள் மனதில் இருக்கும் ஆசையைத் தன் அப்பாவிடம் சொன்னாள். ஒருபக்கம் தயங்கிய கார்மேகத்திற்கு, மாறனின் மகள் மலர்விழி இருக்கும்போது எப்படி நம் பொண்ணுக்குக் கேட்பது என்று யோசனை இருந்தாலும், ஒற்றை மகளின் ஆசைதான் பெரிது என்பதால், எப்படியாவது மலர்விழி சம்பந்தத்தை முறித்துவிடலாம் என்று அதற்கேற்பக் காய்கள் நகர்த்திக் கொண்டிருந்தார்.



ஆனால் அவர்கள் நேரமோ என்னவோ தெரியவில்லை, வெளிநாட்டிலிருந்து வந்த பாரிக்கு மலர்விழியை ரொம்பப் பிடித்துவிட்டது. அவனைப் போலவே வெளிநாட்டில் படிக்க ஆசைப்பட்டு, அவன் படித்த அதே நாட்டிற்கு ஷாலினியும் படிக்கப் போயிருந்த போதுதான் பாரியும் மலரும் தீவிரமாகக் காதலித்தனர். அதன் அடுத்த கட்டமாக இதோ நிச்சயதார்த்தமும் நல்லபடியாக முடிந்துவிட்டது.



இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் போது கார்மேகத்தின் போனுக்கு அழைப்பு வர, அதில் 'பேபி' என்பது தெரிய நடுங்கும் விரல்களோடு அட்டெண்ட் பண்ணினார். "அப்பா, எனக்கு ஒன்னும் இல்லை. என்னோட படிப்பு முடிச்சிட்டு நான் வருவேன். ஆனால் பாரி எனக்குத்தான் சொந்தம்!" என்றவாறு அழைப்பு கட் ஆனது. இதைக் கேட்ட கார்மேகத்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.



எப்பொழுது பாரிக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் முடிந்ததோ, அந்த நிமிடம் முதல் அவனை மருமகனாக ஏற்க அவருக்கு மனம் வரவில்லை. ஆனால் தனது மகளின் பிடிவாதம் பற்றி நன்கு தெரிந்ததால், இதற்கு உடனே ஏதாவது முடிவு எடுக்க வேண்டும் என்று யோசனையானார்.



"ஹப்பாடா, நல்லபடியாக நிச்சயம் முடிந்துவிட்டது. கையோடு கல்யாணத்தையும் முடித்துவிட்டால் நம் கடமை தீர்ந்துவிடும்," என்று பாரியின் வீட்டினர் பேசிக்கொண்டிருக்க, அங்கு வந்த பாரி, "அப்பா, நான் இன்று நைட் லண்டன் போறேன்," என்றான்.



"என்னப்பா இப்படித் திடீரென சொல்லுற?" என்று சேயோன் அதிர, "அந்த டேவிட் நமக்குத் தர வேண்டிய பேலன்ஸ் அப்படியே இருக்குதுங்கப்பா. ஏற்கனவே ஆறு மாதம் ஆயிடுச்சு. நீங்கள் சொன்னீங்க என்றுதான் சரக்கைத் தடை பண்ணாமல் அனுப்பி வைத்தேன். அதற்காக அமைதியாக இருக்க முடியாது. அதான் நேரில் போயிட்டு வரலாமென்று முடிவு பண்ணிட்டேன்," என்றான். மகன் சொல்வது வாஸ்தவம் தான்; இனி அவனைத் தடுத்து நிறுத்த முடியாது என்பதால் "சரிப்பா" என்றனர்.



அதேபோல் கிளம்பியவன் லண்டனுக்கு வந்து சேர, அவனை வரவேற்க டேவிட் மற்றும் பாரியின் ஆருயிர் நண்பன் விக்ரமும் அங்கு காத்திருந்தனர். இருவரையும் அணைத்தவன், பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டு காரில் ஏறி அவர்கள் பிளாட்டிற்குச் சென்றனர்.



ஒரு வாரம் கடந்திருந்தது. தனது தங்கை வீட்டிற்கு வந்த மாறன், "மாப்பிள்ளை, இந்தாங்க," என்று ஒரு கவரை நீட்டினார். "என்னங்க மச்சான்?" என்றவாறு வாங்கிப் பார்க்க, அதில் சேயோன் - காஞ்சனா இருவருக்கும் லண்டன் போவதற்கான டிக்கெட் இருந்தது. "என்ன மச்சான்?" என்று அவர் சிரிக்க, "எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம். இன்று இரவு பதினோரு மணிக்கு உங்களுக்கு ஃப்ளைட். கிளம்புற வேலையைப் பாருங்கள்," என்றார் மாறன்.



"உங்கள் வார்த்தைகளுக்கு அப்பீல் ஏதுங்க மச்சான்?" என்றவாறு சேயோனும் மாறனும் அணைத்துக்கொண்டனர். "எப்போதும் எங்கள் குடும்பம் இதே ஒற்றுமையோடு இருக்க வேண்டும்," என்று பானுமதியும் காஞ்சனாவும் மனதிற்குள் வேண்டிக்கொண்டார்கள்.



நேரமும் கடந்து செல்ல, இருவரும் மாறனோடு ஏர்போர்ட்டிற்கு வந்தனர். பின்னர் அவர்களுக்கான ஃப்ளைட் வந்ததும் அவரிடம் சொல்லிக்கொண்டு உள்ளே போக, மாறனும் தனது மருமகனுக்கு விஷயத்தைச் சொல்லிவிட்டார்.


லண்டன்:

லண்டனின் பனிக்காலப் பொழுது. பாரியின் அப்பா சேயோனிற்கும், அம்மா காஞ்சனாவுக்கும் இன்று 28-வது திருமண நாள். வழக்கமான ஒரு சின்ன ஷாப்பிங் என்று பாரி அவர்களை லண்டனின் மையப்பகுதியில் அமைந்திருந்த அந்தப் பிரம்மாண்டமான அலுவலக வாசலுக்கு அழைத்துச் சென்றான்.



சேயோன் ஒரு நிமிடம் ஆச்சரியத்துடன் காரை விட்டு இறங்கினார். இந்தியாவில் 'சேயோன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்' என்றால் தெரியாத ஆளே கிடையாது; அந்த அளவுக்கு அவர் ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர். ஆனால் லண்டனின் இந்த வீதிகளில் தன் பெயர் எதற்கு என அவருக்குப் புரியவில்லை.



செம்புலம் தொடரும்...

 
Top Bottom