செம்புலம் 22
மேதினூர்:
மழையில் நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்தவளைப் பார்த்த காமாட்சி பாட்டி, "இன்னைக்கு என்ன இப்படிப் பேய் மழை பெய்யுது ஆத்தா!" என்றவாறு துண்டை எடுத்துக்கொடுத்தார்.
"ஆமாம் பாட்டி, குடை எடுத்துட்டுப் போயிருந்தாலும் இப்படித்தான் நனைஞ்சு வந்திருப்பேன்" என்று சொல்லிக்கொண்டே, புடவையில் இருந்த ஈரத்தைப் பிழிந்துவிட்டு வீட்டிற்குள் சென்றவள், முதலில் தலையைத் துவட்டிவிட்டு ஈர உடையை மாற்றிக்கொண்டாள்.
மணி இரவு ஏழுதான் ஆகியிருந்தது; ஆனால் வெளியே பார்த்தால் 10 மணி போல இருட்டியிருந்தது. கயல் வேகமாக இரவுச் சமையலைச் செய்யப் போக, "இரு கண்ணு, நான் ஏற்கனவே ஆக்கி முடிச்சிட்டேன்" என்று பாட்டி சிரிக்க, "ஏங்க பாட்டி இப்படிச் செஞ்சீங்க?" என்றாள் கயல்.
"ஆமா கண்ணு, தெண்டமாத்தானே வீட்டில் இருக்கிறேன். முன்னாடியாவது ஆப்பம் , இட்லி தோசைனு சுட்டு வித்துக்கிட்டு இருந்தேன், பொழுது போச்சு. இப்ப ரெண்டு மூணு வருஷமா அதுவும் இல்லாமச் சும்மாவே இருக்கிறது பைத்தியம் பிடிக்காத குறை. உழைச்சு உழைச்சு உரம் ஏறிய உடம்பு சும்மா இருக்க முடியல. இதையாவது என்னைச் செய்ய விடு கண்ணு," என்றார்.
தூரத்தில் வந்த பஸ்ஸின் சத்தத்தில் அதிர்ச்சியில் இருந்து மீண்ட பாரி நிகழ்விற்கு வந்தான்.
"உண்மையிலேயே இதுவரை நாம் கண்டது கனவா இல்லை நிஜமா?" என்பது புரியாமல் காரை ஸ்டார்ட் பண்ணி, அவள் போன திசையில் சென்றான். அது வீட்டிற்குச் செல்லும் பாதையாக இருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் இருப்பது போலத் தெரியவில்லை.
அந்த யோசனையோடே வீட்டிற்கு வந்தவன், தாத்தா பாட்டியிடம் நலம் விசாரித்துவிட்டுத் தன் அறைக்குப் போனவன் ஃப்ரெஷ் ஆகிக் கீழே வர, "போன விஷயம் என்ன ஆச்சு?" என்று ராஜவேலு கேட்க, "எல்லாம் நல்லபடியாக முடிந்தது தாத்தா" என்று பேசினாலும், அவன் சிந்தனையோ சற்று முன்னால் மழையில் பார்த்த உருவத்தின் மேல்தான் இருந்தது.
"நீங்க இருக்கீங்களே!" என்று சிரித்தவள், பாட்டியுடன் பழைய கதைகளைக் கேட்டுக்கொண்டு இருவரும் சாப்பிட்டு முடித்தனர். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டுப் படுத்துவிட்டனர்.
மறுநாள் சனி, ஞாயிறு இரண்டு நாள் விடுமுறை என்பதால், கயல் கொஞ்சம் தாமதமாகவே தூங்கி எழுந்தாள். இரவு நனைந்த தலைமுடி காய வேண்டும் என்பதற்காக, விரித்துப் போட்டிருக்க, இப்போது தோட்டத்தில் நின்றவாறு கூந்தலைச் சீவிக்கொண்டிருந்தாள்.
வெகு நேரம் கழித்துத் தூங்கி எழுந்த பாரி, தனது அறைக் கதவைத் திறக்கும்போது, சற்று தூரத்தில் இருக்கும் வீட்டின் தோட்டத்தில் ஒரு பெண் நீண்ட கூந்தலைச் சீவுவது தெரிந்தது. கடந்த ஒரு மாதமாக அவர்கள் ஊரில் வி.ஏ.ஓ இல்லை என்பது தெரிந்த விஷயம் என்பதால், "அவங்களோட பொண்ணா இருக்கும்" என்று யோசித்தவன், "இவ்வளவு நீள முடி வைத்திருக்கிறாள்!" என்று முணுமுணுத்துக்கொண்டு ஃப்ரெஷ் ஆகிக் கீழே போனான்.
டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, "பாட்டி, தோட்டத்தில் இவ்வளவு இடம் சும்மாவே இருக்கே! இதுல ஏதாவது கீரையோ காய்கறியோ போட்டுக்கலாமா?" என கயல் கேட்க, "போடலாம் தான் தாயி, எதுக்கும் பெரிய வீட்டுல ஒரு வார்த்தை சொல்லிக்கிறது நல்லது," என்றார் பாட்டி.
"அப்படியா? எனக்கு ரெண்டு நாள் லீவுதானே, மழை வேற பேஞ்சு மண்ணு நல்லா இருக்கு. அப்பாவும் இதை யோசித்துதான் கொஞ்சம் விதை எல்லாம் வாங்கி வச்சுட்டுப் போயிருக்காங்க," என்றாள்.
"நல்ல விஷயம் தான், இப்போவே போய் ஒரு வார்த்தை கேட்டுட்டு வரலாம்," என்றார் பாட்டி. பின்னர் இருவரும் சாப்பிட்டு முடித்து வீட்டைப் பூட்டிக்கொண்டு, பெரிய வீட்டை நோக்கிப் பேசிக்கொண்டே போனார்கள்.
அந்த வீட்டின் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் காமாட்சி பாட்டியிடம் ஏதோ பேச வர, "நீ போய் கேட்டு வா கண்ணு, நான் பேசிட்டு வரேன்" என்று சொல்ல, "சரிங்க பாட்டி" என்ற கயல், ஒரு பாடலை முணுமுணுத்தபடி வீட்டிற்குள் சென்றவள் "பெரிய ஐயா!" என்று கூப்பிட, அந்த நேரம் மாடியில் இருந்து கீழே இறங்கி வந்த பாரி, கயல்விழியைப் பார்த்ததும் "விழி!" என்று அதிர்ந்து போனான்.
அவனின் சத்தத்தைக் கேட்டுச் சமையற்கட்டில் இருந்த பானுமதியும் வேகமாக வந்தார். வாசலில் கயல்விழி நிற்பதும், அவளைப் பார்த்துத் தனது பேரன் அதிர்ச்சியுடன் இருப்பதும் தெரிந்தது. "கடவுளே!" என்றவர், "வாமா" என்று கூப்பிட, அதில் சுதாரித்த பாரி வேகமாக அவளிடம் சென்றவனோ ஏதும் யோசிக்காமல், "விழி! எங்கடி போன என்னை விட்டு?" என்று அவளை இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
இதை எதிர்பார்க்காத பானுமதியும் கயல்விழியும் அதிர்ந்து போயினர். முதன்முதலாகத் தன்னை ஒரு ஆண்மகன் கட்டிப்பிடித்திருப்பதை உணர்ந்து உடல் சிலிர்த்துப் போனாலும், பெண்மைக்கே உள்ள எச்சரிக்கையுணர்வுடன் தனது பலத்தைத் திரட்டி அவனை விலக்கிய கயல், இடியட் என்றவாறு ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டு, வந்த வழியே திரும்பி ஓடி வந்தவள் சற்று தூரத்தில் பாட்டியும் அந்தப் பெண்மணியும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, "பாட்டி, பெரிய வீட்டுல யாரும் இல்லை போல, நான் அப்புறம் வர்றேன். போன் சார்ஜ் போட மறந்துட்டேன்," என்று கூறிவிட்டு அவர் பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து ஓடிவிட்டாள்.
வாங்கிய அறையில் நிகழ்வுக்கு வந்தவன் "ஓ ஷிட்!" என்று தலையில் தட்டிக்கொண்டு வெளியே வர, சற்று தூரத்தில் நீளமான கூந்தல் காற்றில் ஆட, தனது மனைவியைப் போலவே தோற்றம் கொண்டவள் ஓடுவது பாரியின் கண்களுக்குத் தெரிந்தது.
"முருகா! ஏதோ ஒரு திட்டத்தோட தான் நீ இதைச் செய்றேன்னு எனக்குத் தெரியுது. உன் சித்தப்படியே ஆகட்டும்," என்று பூஜை அறையில் இருக்கும் முருகனைப் பார்த்து மனதிற்குள் சொல்லிக்கொண்ட பானுமதி, நிதானமாக வெளியே வந்தவர் அங்கே நின்ற பேரனின் தோளைத் தொட்டு, "பாரி... பாரி..." என்றார்.
"பாட்டி!" என்று அதிர்ந்து திரும்பியவன், "என்னுடைய மலர்விழி எங்கே?" எனக் கேட்க, "அது நம்ம மலர்விழி இல்லப்பா, அவள் பேரு கயல்விழி. இந்த ஊருக்குப் புதுசாக வந்திருக்கும் வி.ஏ.ஓ," என்றார். "அப்படியா? இது எப்படிச் சாத்தியம் பாட்டி?" என்பவனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று டிபன் பரிமாறினார். தற்போது அவனுக்குச் சாப்பிடும் மனநிலையே இல்லை. நேற்று மழையில் பார்த்ததும் இன்று வந்ததும் ஒரே ஆள்தான் என்பது பாரிக்குத் தெரிந்துவிட்டது. பேரனின் குழப்பமான முகத்தைப் பார்த்த பானுமதி, "குழம்பிய குட்டையில் தானே மீன்பிடிக்க முடியும்" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டார்.
மூச்சுவாங்க வேகமாக வீட்டிற்குள் வந்து கதவைத் தாள்போட்ட கயல்விழி, அதன் மேலே சாய்ந்து உட்கார, இன்னமும் அந்த வலிமையான கரங்கள் அவளை அணைத்திருப்பது போன்ற உணர்வில் அவள் உடல் நடுங்கியது. காமாட்சி பாட்டியின் மூலமாக மலரைப் பற்றித் தெரிந்துகொண்டவளுக்கு, அந்தப் பெண்ணின் கணவன்தான் இவன் என்பது புரிந்துவிட்டது. "இருந்தாலும் எப்படி அவன் அணைக்கலாம்?" என்ற கோபம் ஒரு பக்கம், அவன் தொட்டதில் தனது உடல் சிலிர்த்துப் போனதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை.
பஸ்ஸிலும் ட்ரெயினிலும் செல்லும்போது யாராவது ஆண்மகன்கள் இடித்தால் கூட அவளுக்கு இதுவரை எந்த உணர்வும் வந்ததில்லை. கல்லூரியில் படிக்கும்போது எத்தனையோ மாணவர்கள் காதலைச் சொல்லியிருக்கிறார்கள்; ஆனால் யார் மேலேயும் அவளுக்கு எந்த எண்ணமும் வந்ததில்லை. அப்படி இருக்க, ஒருவன் அணைத்தபோது தனது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை அந்தப் பெண்ணால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
கடமைக்குச் சாப்பிட்டு எழுந்த பாரி, தயாராகி எஸ்டேட்டுக்குச் செல்லும்போது இடது பக்கமாக இருக்கும் கயல்விழியின் வீட்டை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே சென்றான். அவள் அங்கே இருப்பதாகத் தெரியவில்லை. அவனது காருக்கு எதிரே ஷாலினியின் கார் வந்தது. ஒரு வாரம் பாரி ஊரில் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு அவளும் இந்த பக்கம் வரவில்லை. அதனால்தான் கயல்விழி பற்றி அவளுக்குத் தெரியவில்லை.
ஹாரன் அடித்துப் பாரியின் காரை நிறுத்தியவள், "எப்ப வந்த பாரி?" என்று விசாரிக்க, "நேத்து நைட்டு வந்தேன் ஷாலு. நீ எப்படி இருக்க?" என்றான். "நல்லா இருக்கேன். அங்கிள், ஆன்ட்டி நல்லா இருக்காங்களா?" என்று அவள் கேட்க, "எல்லாரும் நல்லா இருக்காங்க," என்றான்.
"எங்கே இந்தப்பக்கம்?" என பாரி கேட்க, "உன்னைப் பார்க்கத்தான் வந்தேன்," என்றாள். "அப்படியா? நான் ஆபீஸ் போறேன், ஈவினிங் பார்க்கலாம்," என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பினான்.
காரில் போய்க்கொண்டிருந்த பாரிக்குக் காலையில் நடந்த அந்தச் சம்பவம்தான் நினைவுக்கு வந்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்ணை அணைத்தவுடன் தனது உணர்வுகள் தட்டி எழுப்பப்பட்டதை நினைத்துப் பார்த்தவனுக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. "இது எப்படிச் சாத்தியம்? என் மனைவியைத் தவிர என் மனதிற்கும் உடலுக்கும் வேறொரு பொண்ணுக்கு உரிமை இல்லையே!" என்று அவன் மனசாட்சி கேள்வி கேட்டது.
செம்புலம் தொடரும்...