• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 9

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 9:

மேதினூர்:

காஞ்சனா, சேயோனின் முன்பு டிரேவை நீட்டிக் கொண்டே நிற்க, "தம்பி" என்று பானுமதி தனது மகனின் தோளைத் தட்டவும், அதில் சுதாரித்தவன் பின்னர் அவளைப் பார்த்துக் கொண்டே டிரேவில் இருந்த டீயை எடுத்துக் கொண்டான்.

"அப்புறம் என்னங்க சம்பந்தி, நம்ம ஏற்கனவே பேசியது போல கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம்" என்று ராஜவேலு சொல்லவும், " காஞ்சனாவின் அப்பாவும் சரிங்க சார்" என்றார்.

"அட... இன்னும் என்ன சார் என்று கூப்பிடுகிறீர்கள்? தாராளமாக 'சம்பந்தி' என்று சொல்லுங்கள்" என ராஜவேலு சொல்ல, அவரோ மௌனமாகச் சிரித்தார்.

மேலும் சிறிது நிமிடங்கள் பொதுவாகப் பேசிக் கொண்டிருந்து விட்டு, சேயோனும் அவனது பெற்றோர்களும் வீட்டிற்கு வந்து விட்டனர்.

"தம்பி, காஞ்சனாவைத்தான் உனக்கு பார்த்திருக்கோம், சந்தோஷம்தானே?" என்கவும், அவன் முகத்தில் இருக்கும் மலர்ச்சியே அவனுக்குச் சம்மதம் என்று சொல்லாமல் சொன்னாலும், மகன் வாயால் கேட்கவே பெற்றோர்கள் இருவரும் விரும்பினர்.

"நீங்க எது பண்ணினாலும் எனது நல்லதுக்குத்தான் இருக்குமென்று எனக்குத் தெரியாதுங்களாப்பா?" என்று தனது சந்தோஷத்தை மறைமுகமாகச் சொல்லிவிட்டு மாடியில் இருக்கும் தனது அறைக்கு போனவனோ, தன்னவளோடு கலர் கலராகக் கனவுகள் கண்டு கொண்டிருக்க, நாட்களும் வேகமாக ஓடியது. இதோ இரண்டு மாதம் கடந்திருந்தது.

இந்த இடைப்பட்ட நாட்களில் அவன் ஆரம்பித்த அந்தப் புதிய வேலையை நல்லபடியாக முடித்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்து விட்டு, மீதப்பணத்தை வாங்கியவனோ வேலையாட்களுக்கெல்லாம் செட்டில் பண்ணிவிட்டு ஊருக்குள் வரவும், சேயோன் - காஞ்சனாவின் திருமண வேலைகளும் ஆரம்பமானது.

குறித்த நாளில் பெற்றோர்கள் ஆசீர்வாதத்துடன் சொந்த பந்தங்களின் முன்பு சீரும் சிறப்போடு இருவரின் கல்யாணமும் நடந்து முடிந்தது.

காஞ்சனாவின் தந்தை என்னதான் மேனேஜராக இவர்கள் எஸ்டேட்டில் வேலை பார்த்தாலும், அவர்களும் சொல்லிக்கொள்ளும்படி சொத்து உள்ளவர்கள் என்பதால், மற்றவர்கள் ஒரு வார்த்தை கைநீட்டிப் பேசக்கூடாது என்று தான் சேர்த்து வைத்த சொத்தில் மகளுக்குத் தேவையான சீர்வரிசைப் பொருட்களோடு அனுப்பி வைக்கவும், ராஜவேலு - பானுமதி இருவரும் "எதற்கு இதெல்லாம்?" என்றனர்.

"என்னுடைய மனதிருப்திக்காக என் பொண்ணுக்குக் கொடுக்கிறேன், அதை நீங்கள் மறுக்காமல் வாங்கிக் கொள்ள வேண்டும்" என்று சொல்லிவிட்டார். அதன் பின்னர் அவர்களாலும் மறுத்துப் பேச முடியவில்லை. பின்னர் வீட்டிற்கு அழைத்து வந்த புது மருமகளைப் பூஜையறையில் விளக்கேற்றச் சொல்லிவிட்டு, மற்ற சடங்குகளும் முடிய "போய் கொஞ்சம் ஓய்வு எடு காஞ்சனா" என்று அனுப்பி வைத்தனர்.

சிறுவயதில் இந்த வீட்டிற்கு வந்தவள்தான், அதன் பிறகு கடந்த சில வருடங்களாக இங்கு வந்ததில்லை. ஆனால் இதே வீட்டிற்கு மருமகளாக வருவோம் என்று காஞ்சனா நினைத்ததில்லை. இதையெல்லாம் யோசித்துக் கொண்டு அமைதியாக ரூமிற்குள் உட்கார்ந்திருந்தாள்.

நேரமும் கடந்து செல்ல, பின்னர் ஐயர் குறித்துக் கொடுத்த நேரத்தில் சேயோனின் அறைக்கு காஞ்சனாவை அனுப்பி வைத்தனர்.

மேலும் இரண்டு நாட்கள் சென்று புதுமணத் தம்பதிகள் இருவரும் பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு தங்களது தேன்நிலவுக்காக வெளிநாட்டுக்குச் சென்றனர். இதுதான் காஞ்சனாவிற்கு முதல் விமானப் பயணம் என்பதால் ஒருவித பயத்தோடு இருக்கவும், அவளை இயல்பாக்கிச் சாதாரணமாகப் பேச்சு கொடுக்க, இந்த விமானப் பயணத்திலேயே புதுமணத் தம்பதிகள் இருவரும் ஓரளவு மனதளவில் ஒன்றிப் போனார்கள்.

அதன் பின்னர் நல்லபடியாக வெளிநாட்டுக்கு வந்தவர்கள் தங்களது தேனிலவு வாழ்க்கையையும் ஆரம்பிக்க பத்து நாட்கள் கடந்திருந்தது. இருவரும் மனநிறைந்த சந்தோஷத்தோடு சிறிது மனமே இல்லாமல் இந்தியாவிற்கு வர, சேயோனும் வழக்கம்போல் தனது புது புராஜெக்ட்டை ஆரம்பித்துவிட்டான்.

காஞ்சனாவோ அவள் படித்த படிப்புக்குக் கிடைத்த அரசாங்க வேலையை மட்டும் விடவில்லை. மருமகளாகக் காலையிலேயே எழுந்து வருபவள் தனது பொறுப்பையெல்லாம் முடித்துவிட்டு வேலைக்குப் போவாள். தற்பொழுது அரசாங்க நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

திருமணம் முடிந்து மூன்று மாதங்கள் கடந்திருக்க, ஒரு நாள் வழக்கம்போல் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது வயிற்றைப் புரட்டிக்கொண்டு வரவும், வேகமாகப் போய் வாந்தி எடுத்தாள்.

"உணவு ஏதாச்சும் சரியில்லையா?" என்று சேயோன் கேட்க, பின்னர் கணவனிடம் சைகையில் விஷயத்தைச் சொல்ல, "அப்படியா?" என்று உள்ளுக்குள் அதிர்ந்தவன், பின்னர் மனைவியை அழைத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்குப் போய் செக்கப் பண்ணவும், காஞ்சனா கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரிந்தது.

இரண்டு பேர் வீட்டினர்களும் அவளைக் கையில் வைத்துத் தாங்க, நாட்களும் வேகமாகத் கடந்தன. ஒன்பதாவது மாதத்தில் ஒரு நல்ல நாளில் மகளுக்கு முறைப்படி வந்து வளையல் போட்டு வீட்டிற்கு அழைத்துப் போனார்கள். சேயோனும் தினமும் மனைவியைக் காலை, மாலை இரண்டு வேளையும் பார்த்துவிட்டுத் தனது வேலையைப் பார்ப்பான்.

வழக்கத்தை விட இடுப்பில் வலி அதிகமாக இருக்கவும், அன்று நடைப்பயிற்சியில் இருக்கும்போது "அம்மா" என்று தனது தாயின் கையை காஞ்சனாப் பிடிக்க, உடனடியாக அவளைப் பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலில் சேர்க்க, ஒரு மணி நேரத்தில் காஞ்சனாவின் மகனும் இந்த உலகத்தைப் பார்க்க வெளியே வந்தான்.

மகன் பிறந்த சந்தோஷத்தில் தனது ஆபீஸில் வேலை பார்ப்பவர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்தைப் போனஸாகவே சேயோனும், எஸ்டேட்டில் வேலை செய்பவர்களுக்குப் பேரன் பிறந்த குஷியில் புதுத் துணிகளோடு பணத்தையும் ராஜவேலுவும் வழங்கினர். குழந்தை பிறந்த பதினாறாம் நாளில் சொந்த பந்தங்களையும் தொழில் வட்டாரத்தில் தெரிந்தவர்கள் எல்லாரையும் அழைத்து, ஒரு பெரிய ஃபங்ஷனாக வைத்துத் தனது மகனுக்கு 'பாரி அலவன்' என்று சேயோன் பெயர் சூட்டினான்.

பின்னர் ஒரு நல்ல நாளில் குடும்பத்தோடு வந்து தனது மகளையும் பேரப்பிள்ளையையும் ராஜவேலு தம்பதியினர் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள். குழந்தை இருந்தாலே வீட்டில் ஒருவித மகிழ்ச்சி புதிதாக உருவாகும் என்பது போல, பிள்ளையின் வளர்ச்சியைப் பார்த்து அவர்களும் சந்தோஷப்பட்டனர்.

நாட்களும் வருடங்களாக ஓடியது. பாரிக்கு ஐந்து வயது இருக்கும்போது மீண்டும் கர்ப்பமான காஞ்சனாவோ இரண்டாவதாக மகளைப் பெற்றெடுக்க, தங்களது பரம்பரையில் நான்கு தலைமுறைக்குப் பிறகு பிறந்த பெண் குழந்தையை நினைத்துப் பூரித்துப் போனவர்கள், அவளுக்கு 'பவதாரணி ' என்று பெயர் சூட்டினர்.

காஞ்சனாவின் அண்ணன் மாறனோ பிரபல கம்பெனிகளில் ஆடிட்டராக இருக்கிறான். அதில் வரும் வருமானத்தின் மூலமாக காஞ்சனாவின் தந்தை வீட்டின் செல்வ வளமும் பெருகியது. "ஏம்பா, இந்த வருடம் உனக்கு கல்யாணம் பண்ணியே தீருவோம்" என்று தனது உறவினர் பெண்ணான சீதாவை மாறனுக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

மாறன் சீதாவும் தங்களது வாழ்கையை தொடங்கினர். ஆனால் துரதிஷ்டவசமாக அத்தம்பதியருக்கு முதல் குழந்தை அபார்ஷன் ஆகவும், அடுத்ததாகக் குழந்தை தள்ளிப் போகவும் தம்பதிகள் இருவரும் குழந்தையை நினைத்துக் கவலைப்பட்டனர்.

"இப்ப என்ன, கல்யாணம் ஆகி 10, 15 வருடமா ஆகிறது? எதற்கு இவ்வளவு வருத்தப்படுற?" என்று எல்லாரும் சொன்னாலும் அவளுக்கு இது பெரிய குறையாகவே இருந்தது. மனைவிக்கு மிகவும் இஷ்டமான தெய்வம் திருச்செந்தூர் முருகன் என்பதால், மாறன் இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு தனது மனைவியோடு திருச்செந்தூருக்கு வந்து முருகனைத் தரிசித்து விட்டு வந்த சில நாட்களில் மீண்டும் அவன் மனைவி கர்ப்பமானது தெரிந்தது.

"முருகா, உன்னோட தயவுதான்" என்று நன்றி சொல்ல மறக்கவில்லை. அவர்களுக்கும் ஒன்பதாவது மாதத்தில் வளையல் போட்டு வீட்டிற்கு அழைத்துப் போக ஒரு வாரம் கடந்திருந்தது. அன்று ஏனோ அவளுக்குத் திருச்செந்தூருக்குப் போக வேண்டும் என்று மனம் சொல்லிக் கொண்டே இருக்கவும், தனது பெற்றோர்களிடம் சொல்ல, "டெலிவரி நேரத்தில் எதற்குமா இப்படி?" என்று அவர்கள் தடுத்தும் கேட்கவே இல்லை.

"கடவுளைப் பார்க்கத்தானே கேட்க்கிறேன்" என்று பிடிவாதம் பிடிக்க, மாறனும் வேறு வழியில்லாமல் தனது மாமனார், மாமியாரோடு மனைவியை அழைத்துக்கொண்டு திருச்செந்தூருக்குப் போனான். தரிசனம் செய்துவிட்டு வரும் வழியில் பிரசவ வலி வரவும், அங்கிருக்கும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் பெண் குழந்தையும் பிறந்தது.

மூன்று நாட்களுக்குப் பிறகு டிஸ்சார்ஜ் பண்ணி அவளை அழைத்துக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டனர். அண்ணன் குழந்தையைப் பார்ப்பதற்காகக் காஞ்சனா தனது மகனையும், மகளையும் அழைத்துக்கொண்டு போனாள். பாரியோ தற்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.

தங்கையையும் மருமகனையும் பார்த்த மாறன், "தங்கம்" என்று தனது மருமகனைத் தூக்கிக் கொஞ்சியவன், "வாங்க வாங்க, வந்து மாமா பொண்ணைப் பாருங்கள்" என்று அழைத்துப் போய், அங்கு தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைக் காட்டினான். கொழுக் மொழுக் கன்னங்களோடு இருக்கும் பொம்மை போன்ற தனது மாமா மகளைப் பார்த்த உடனே பாரிக்கு ரொம்பப் பிடித்துவிட்டது. விடுமுறை நாட்கள் வந்தாலே தனது மாமன் மகளோடு விளையாடுவதற்காக அடம் பிடித்து வந்து விடுவான்.

அதோ இதோவென வருடங்களும் ஓடியது, பிள்ளைகளும் நன்கு வளர்ந்துவிட்டனர்...

இருபது வருடங்களுக்குப் பிறகு...

வழக்கத்தை விட அந்த வீடு வண்ண விளக்குகளின் அலங்காரத்தில் ஜெகஜோதியாக ஜொலித்துக் கொண்டிருந்தது. வெளிநாட்டிற்குப் படிக்கப் போன தங்களது மகன் பாரி அலவன் நல்லபடியாகப் படித்து முடித்துவிட்டு இன்றுதான் நாடு திரும்புகிறான் என்பதால், அதோடு இன்று அவன் பிறந்த நாளும் சேர்ந்து வர, இதைச் சிறப்பாகக் கொண்டாடுவதற்காகச் சேயோன் தம்பதியினர் பெரிய பார்ட்டியை ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.

நேரமும் கடந்து செல்ல, ஃபங்ஷனுக்கு அழைத்தவர்கள் எல்லாம் வந்து கொண்டிருந்தனரே தவிர, மகனை அழைக்கப்போன கார் மட்டும் இன்னும் வரவில்லை என்பதால், அவ்வப்போது வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

செம்புலம் தொடரும்…

 
Top Bottom