• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தகிக்காதே குளிர்நிலவே..!(31)

STN46

Member
அறைக் கதவை திறந்து கொண்டு அருண்மொழியும் நந்தினியும் வெளியே வர , சுகன்யாவின் துவைத்த துணிகளை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்தான் இளமாறன்.

சட்டையின் முன்னிரு பட்டன்கள் பிய்ந்திருக்க , தலை கலைந்து வெளியே வந்தவனை ஒரு‌ மார்க்கமாக பார்த்து விட்டு அவனை தடுத்து நிறுத்தினான் இளமாறன்.

நந்தினி அங்கு நிற்க முடியாமல் கீழே இறங்கி சென்று விட்டாள்.

“ எக்ஸ்கியூஸ் மீ…உள்ள போய் எவ்வளவு நேரமாச்சு? என்ன நடந்தது? இது வீடு தானே? கொஞ்சமாவது டீசென்சி இருக்கா..? ஆளாளுக்கு நடு வீட்டுல நின்று கிஸ் அடிச்சிட்டு இருக்கீங்க? இதெல்லாம் நல்லதுக்கெ இல்லை தெரியுமா?

“ ஹலோ…! டீசென்சி பத்தி நீ பேசாத டா. பத்து பிகருங்களோட ஸ்விம்மிங் பூல்ல ஆட்டம் போட்டவன் தானே நீ… இப்ப நீ திருந்திட்டதுனால நல்லவன் மாதிரி பேசாத சரியா?” என்று கூறி விட்டு தலைமுடியை கோதி சரி செய்தபடியே முன்னே சென்றவன் சட்டென்று நின்று அவனை திரும்பி பார்த்தான்.

“ஆமா…இப்ப என்ன சொன்ன நீ..? நடு ஹால்ல நின்னு கிஸ் அடிக்குறோமோ? வேற யாரு கிஸ் அடிச்சி நீ பார்த்த?” என்றான் புரியாமல்.

“ நேரம் டா… வேற யாரு அந்த வர்மன் தான். பாரதி பொண்ணை கடிச்சு திங்குற மாதிரி கிஸ் அடிச்சிட்டு இருந்தான். அதை என் கண்ணால வேற பாத்தேன்…போங்க போங்க நல்லா இருந்தா சரி..” என்றவன் மாடியில் சென்று சுகன்யாவின் துணியை காயப் போடச் சென்றான்..

இளமாறன் கூறியது‌ அவனது மூளைக்குள் சென்றடையவே சில கணங்கள் ஆனது.

வேக வேகமாக மாறவர்மனின் அறைக்குள் நுழைந்தான்.

அறையின் பின்புறமிருந்த பால்கனியில் வர்மனும் பாரதியும் கரங்களை கோர்த்துக் கொண்டு அமர்ந்திருந்தனர்.

இருவரும் தங்களை மறந்து வேறு உலகத்தில் மிதந்து கொண்டிருந்தனர்‌. அவர்களை தொந்தரவு செய்யாமல் உதட்டில் உறைந்த புன்னகையுடன் நகர்ந்தான் அருண்மொழி.

சுகன்யாவிற்கு அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்கள் தான் ஆகியிருந்தது. முழு ஓய்வு தேவைப்படுவதால் படுத்துக் கொண்டிருந்தாள் சுகன்யா.

தனக்காக ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்யும் இளமாறனைக் கண்டு கண்கள் கலங்கியது. இதயம் அவனுக்கென கசிந்து உருகிக் கொண்டிருந்தது.

“ கொஞ்சமாவது உனக்கு சூடு சொரணை இருக்குதா மாறா..? உங்கப்பாவை ஜெயில்ல தூக்கி வச்சிருக்காங்க..நீ என்னடான்னா எனக்கென்ன னு இருக்குற. அவரை வெளியே எடுக்குறதுக்கு ஏதாவது முயற்சியாவது செய்யலாம் ல? “ என கடுகடுத்தார் மந்தாகினி.

“ ம்மா…இதைப்‌ பத்தி பேசாதீங்கன்னு சொல்லிட்டேன்.. அவர் என்ன பண்ணுனாருன்னு பாத்துட்டு தானே இருந்தீங்க? எப்படி இப்படி மனசாட்சியே இல்லாம உங்களால பேச முடியுது? யாரு மன்னிச்சாலும் நான் அவரை மன்னிக்கப் போறதில்ல. அவருக்கானதை எல்லாமே செஞ்சி வசதியோட தானே தாத்தா வச்சிருந்தார். அப்படியிருந்தும் அவருக்கு ஏன் இப்படி புத்தி போச்சு? போங்க மா…இருக்குற கொஞ்ச நஞ்ச மரியாதையை காப்பாத்திட்டு இருக்கப்‌ பாருங்க…அவரோட தண்டனை காலத்தை முடிச்சிட்டு வெளியே வரட்டும். திருந்தினா வீட்டுக்குள்ள சேர்த்துக்கலாம்.இல்லன்னா அவரை அப்படியே வெளியே எங்கயாவது தங்கிக்க சொல்லுங்க…அவ்வளவு தான் …” என்று உறுதியாக கூறி விட்டு சுகன்யாவிற்கு உணவை கொடுத்தான்.

அதைப் பார்த்த மந்தாகினிக்கோ பற்றிக் கொண்டு வந்தது. எதுவும் பேச முடியாத சூழ்நிலை. அனைவரையும் அனுசரித்து செல்வது தான் புத்திசாலித்தனம் என்று புரிந்ததால் அமைதியாகி விட்டார்.

ஆறு‌‌ மாதங்கள் சென்றிருந்தது. சுகன்யாவின் உடல்நிலை நன்றாகவே தேறியிருந்தது.

வீர ராஜசிம்மர் அமர்ந்திருந்தார்.

அவருக்கு அருகில் இரு மகன்களும் மந்தாகினியும் நின்றிருந்தனர்.

மறுபுறம் இளமாறன்- சுகன்யா, அருண்மொழி -நந்தினி, மற்றும் மாறவர்மன் -பாரதியும் நின்றிருந்தனர்.

அருண்மொழி வீர ராஜசிம்மரிடம் மூவரின் திருமணத்தை பற்றி கூறி விட்டான்.

மூன்று பேரன்களின் வாழ்க்கை ஒவ்வொரு விதமாக இருந்ததில் கவலைப்பட்டு கொண்டிருந்தவர் மூவரும் ஒரு வழியாக திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்திருந்ததை தடை சொல்லாமல் மனப்பூர்வமாக வரவேற்றார்.

“அடுத்த மாசம் இருபதாம் தேதி நல்ல முகூர்த்த நாளா இருக்கு. அப்பவே ஒரே மேடையில மூணு பேருக்கும் கல்யாணத்தையும் நடத்திடலாம். ஆனா கல்யாணத்தை நாம இந்தியாவுல தான் நடத்தப் போறோம். நிறைய வாடிக்கையாளர்களும் , நம்மளோட சொந்தங்களும் அங்க தான் இருக்குறாங்க. அதனால அங்கயே எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிடலாம். வேற ஏதாவது சொல்லணுமா?” என்றார் அனைவரையும் பார்த்து ‌.

“தாத்தா…இன்னொரு முக்கியமான விஷயம் “ என்று கூறி விட்டு நிறுத்தினான் அருண்மொழி ‌.

“ என்ன அருண்? என்ன விஷயம்?”

“ தாத்தா…நான் இந்தியாவுலயே போய் செட்டில் ஆகிடலாம்னு இருக்கேன். அதனால இந்த பொறுப்புகளையும் அதிகாரத்தையும் வர்மா அண்ணனே பாத்துக்கட்டும். இங்க இருக்குற பிசினஸை ஓரளவுக்கு சரி பண்ணி வச்சிட்டேன். முக்கிய முடிவுகளையும் , ட்ரஸ்ட் மெயிண்டனஸ், கம்பெனியோட நிர்வாகம் பத்தின முடிவுகள் , பணத்தை ஹேண்டில் பண்றது, ஷேர்ஸ் இன்வெஸ்ட்மென்ட், எல்லாத்தையும் வர்மன் அண்ணனும் இளமாறனும் பாத்துக்கட்டும். நான் இந்தியாவுல இருக்குற நம்ப சாப்ட்வேர் கம்பெனியை பாத்துக்குறேன் தாத்தா…” என்றான்.

“டேய் என்ன பேசிட்டு இருக்க?” என்றபடி மாறவர்மன் முன்னே வர, "டேய் அண்ணா..நான் என் பொண்டாட்டி ஊருக்கு போய் இருக்கப் போறேன். ஜாலியா இருக்க‌ விடேன் ‌டா… உன்னோட ஆஃபிஸ் டைம் போக மத்த நேரத்துல கம்பெனியை கவனிச்சுக்கோ…இங்க இருக்குற மக்களுக்கும் என்ன‌ பண்ணனுமோ அதைப் பண்ணு…நான் கொஞ்சம் வருஷம் அங்க இருந்துட்டு அப்பறம் இங்க வர்றேன்…” என்றான்.

தனஞ்செயருக்கோ மகனது முடிவை நினைத்து பெருமையாக இருந்தது.

ஆதிரையின் அருகில் வந்து, “ நீங்களும் அப்பாவும் கூட‌ அங்க வந்து கொஞ்ச நாள் இருங்க…கவலைப்படாதீங்க இனிமே உங்களை பிரிஞ்சி இருக்க‌ மாட்டேன்.”என்றான்.

மந்தாகினிக்குமே அருண்மொழியின் முடிவு வியப்பைத் தந்தது. கணவனின் செயலால் தலை குனிந்து நின்றிருந்தார்.

அருண்மொழியின் கூற்றிற்கு மறுப்பேதும் கூறாமல் அவனை அணைத்து விடுவித்தார் வீர ராஜசிம்மர்.

அவரது அணைப்பில் ஆயிரம் அர்த்தங்கள்.

வீர ராஜசிம்மர் கூறியதைப் போலவே சென்னையில் உள்ள அந்த பிரம்மாண்டமான திருமண‌ மண்டபத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமுதனும் குழலியும் கூட திருமணத்தை வந்திருந்தார்கள்.

பழங்கால அரச பரம்பரைப் போல அனைத்தும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டிருந்தது.

பட்டு வேஷ்டி சட்டையில் மூன்று ஆண்மகன்களும் கம்பீரமாக அமர்ந்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்தில் பாரதி, நந்தினி, சுகன்யா ஆகியோர் மணமேடைக்கு அழைத்து வரப்பட்டனர்.

தத்தம் இணையருகே அமர்ந்திருந்தனர்.

நந்தினியின் தந்தை விஜயேந்திரனின் உடல்நிலை சற்று தேறியிருந்தது. மகள் திருமணமே செய்து கொள்ளாமல் இருந்து விடுவாளோ என நினைத்து வருந்தியவருக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

அருண்மொழி அவரிடம் சென்று நேரடியாகவே அவரது நிறுவனத்தின் கோப்புகளை ஒப்படைத்தான்.

கண்ணீர் மல்க அதனை வாங்கிக் கொண்டார்.

“ கெட்டிமேளம்..கெட்டிமேளம்..” என அய்யர் கூற மூவரும் தங்களுடைய இணைக்கு மங்கல நாண் அணிவித்து சரி பாதியாக ஏற்றுக் கொண்டனர்.

சுற்றமும் நட்பும் மணமக்களை மனமாற வாழ்த்தினர்.

மூன்று ஜோடிகளின் மனநிலையும் ‌வெவ்வேறு நிலையில் இருந்தது.

அனைத்து சம்பிரதாயங்கள் முடிந்தது.

ஒருவரையொருவர் வம்பிழுத்துக் கொண்டும், சிரிப்பும் கும்மாளமுமாக பொழுதை கழித்தனர்.

முதலிரவுக்கென ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது .

மாறவர்மன் இருந்த அறையில் நுழைந்தாள் பாரதி‌.

கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றிருந்தான் வர்மன்.

பால் சொம்பை மேசையில் வைத்து விட்டு அவனருகே நின்றாள் பாரதி.

“என்ன அப்படி பாத்துட்டே இருக்கீங்க?”

“அவ்வளவு அழகா இருக்க. அதான் பாத்து ரசிச்சிட்டே இருக்கேன்…இந்த மாதிரி பைத்தியக்காரன் மேல உனக்கு எப்படி லவ் வந்துச்சு னு யோசிக்குறேன்”

“ போதும் ரொம்ப பேசாதீங்க…முதல்ல யெல்லாம் எனக்கு ரொம்ப கடுப்பான இருக்கும். எப்ப பார்த்தாலும் என்னையே தேவி தேவின்னு சுத்தி சுத்தி வந்துட்டு இருப்பீங்க. நின்னா தேவி, பார்த்தா தேவி, பேசுனா தேவி....அப்பப்பா...! ஓரே தேவி புராணம் தான். தேவிக்கான காதலை உங்க கண்ணுல பாத்தப்ப எனக்கே ஆச்சர்யமா இருந்தது.,.எப்ப எப்படி உங்க மேல காதல் வந்ததுன்னு சரியா சொல்லத் தெரியல. ஆனா உங்களுக்கு உடம்பு சரியாகும் துக்கு முன்னமே எனக்கு உங்களை பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு. நடுவுல உங்களுக்கு அடிபட்டதுல துடிச்சி தான் போயிட்டேன். அப்ப தான் உங்க மேல இருந்த அன்பை என்னால உணர முடிஞ்சது. ஆனா உங்க உயரம்‌ என்னை பயமுறுத்திடுச்சு. அதனால் தான் நான் இந்தியா போறதுக்கு முடிவு பண்ணுனேன். தேவி உண்மையிலேயே துரதிர்ஷ்டசாலி . இத்தனை காதலையும் விட்டுட்டு போயிட்டாங்க. ஆனா நான் ரொம்ப லக்கி…” என்று கூறி விட்டு அவனது முகத்தை பார்த்தாள்.

அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் வர்மன்.

“ என்னப்பா பாக்குறீங்க?”

“ ஒண்ணு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..”

“ ம்ம்கூம்.”

“ ரெண்டு பேருக்குமே முதல் காதல் கைக்கூடல…ஏதோ ஒரு வகையில அதுவும் நல்லதுக்கு தான் போல.. காலம் நமக்கானவங்களை கொண்டு வந்து சரியான நேரத்துல சேர்த்திருக்கு… தேவியோட அத்தியாயம் அவளோட முடிஞ்சி போச்சு. அவளோட ஃபோட்டோவை இங்கிருந்து எடுக்கச் சொல்லிடுறேன்…உனக்கு அன்ஈசியா இருக்கும். அது மட்டும் இல்ல...நீ கண்ணு முன்னாடி நடமாடுறப்ப இந்த போட்டோ இருக்குறது எனக்கும்‌ கொஞ்சம் நெருடலா தான் இருக்கும்.அதனால அவ‌ ஃபோட்டோவை எடுத்துடலாம்..” என்றான்.

“ அவங்க ஃபோட்டோ ஹால்ல இருக்குறது வித்தியாசமா இருந்ததுன்னா…சாமி ரூம்ல வச்சிடலாம்..எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை..அவங்களோட நீங்க வாழ்ந்த வாழ்க்கை உண்மை…அவங்க இருந்ததும் உண்மை..அது அப்படியே இருக்கட்டும். நமக்கான வாழ்க்கையை நாம வாழ ஆரம்பிக்கலாம்..” என்றாள் தெளிவாக.

மூன்றாண்டுகளில் பாதி நேரம் அவனுடன் இருந்தவளுக்கு அவனைப் பற்றி நன்றாகவே அறிந்து கொள்ள முடிந்தது.

அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன் அவளது செவி மடலருகே குனிந்து முத்தமிட்டவன், “என்னடா மடையா..? இன்னும் டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கன்னு சொல்லாம சொல்றியா…” என கிசுகிசுத்தான்.

வெட்கத்துடன்,” சொல்லாம சொல்லல…நேரடியாகவே தான் சொல்றேன். ஹப்பா..! ஒரு வழியா இப்பவாவது புரிஞ்சுதே…!” என்று கூறி அவனது மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.

அவளை கைகளில் ஏந்தியவன் புதிய அத்தியாயத்தை அவளுடன் இணைந்து எழுத ஆரம்பித்தான்.

இளமாறன் அறையில் சோகமே உருவானதாக அமர்ந்திருந்தாள் சுகன்யா.

முதலிரவைப் பற்றி எத்தனையெத்தனை ஆசைகளும் கனவுகளும் அவனுக்கிருக்கும்.

தன்னால் இல்லற வாழ்வில் அவனுடன் ஈடுபட்டு அவனை மகிழ்விக்க முடியாது என்பதே அவளுக்கு குற்றவுணர்ச்சியை கொடுத்தது.

அதை எண்ணியவளுக்கு கண்கள் கலங்கத் தொடங்கியது.

மனம் முழுவதும் தன்னவனைப் பற்றிய நினைவுகள் சூழ்ந்து கொண்டு அவளை அதிக அழுத்தத்திற்கு தள்ளியது.

அலைப்பேசியில் ஏதோ பேசிக் கொண்டே கதவைத் திறந்து கொண்டு வந்தான் இளமாறன்.

“ ஹய்…பேப்…! என்ன நீ…இப்ப வந்து என்னை டிஸ்டர்ப் பண்ணுற? நான் தான் நெக்ஸ்ட் வீக் டேட்டிங் போகலாம்னு சொன்னேனே…அதுக்குள்ள என்ன அவசரம் உனக்கு? ம்ம்ச்…ஆனாலும் உனக்கு பொறுமையே இல்ல…டார்…லி..ங்…உம்மா…” என்று கூறி கொண்டு இருக்கும் போதே பத்ரகாளியாக மாறியிருந்தாள் சுகன்யா..

அருகிலிருந்த தலையணையை எடுத்து அவனை அடித்து துவைத்து விட்டாள்.


“ பொறுக்கி….பொறுக்கி…உனக்கு ஒரு பொண்டாட்டி போதாதா? என்ன கொழுப்பு உனக்கு? ஃபர்ஸ்ட் நைட் ரூம்ல வந்து எவளோடவோ கொஞ்சி குலாவிட்டு இருக்க….திருந்தவே மாட்டல…நீயெல்லாம் நேவில வெர்க் பண்ணுறேன்னு வெளியே சொல்லிக்காத…பேசுவியா…பேசுவியா.. என் முன்னாடி மத்த பொண்ணுங்க கூட பேசுவியா.? வேற பொண்ணை இனி வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என்னை வெறுப்பேத்துவியா…? .இனி ஆயுசு‌ பூராவும் உனக்கு நான் மட்டுந்தான்…என்ன புரியுதா? ” என கண்களை உருட்டிக் கொண்டு அவனது தலைமுடியைப் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டினாள்.

“ஹா…! அய்யோ..! ராட்சசி…வலிக்குது டி..விடு டி… தலை முடியை பிடிச்சி ஏன்‌ டி மாவாட்டுற? விடு டி..வலிக்குது.. லில்லி பாவம்…வருத்தப்படுவால்ல‌‌..” என மீண்டும் அவளைச் சீண்ட, அதில் அதிக கோபம் கொண்டு மலையேறியவள் , “ எத்தனை தடவை தான் டா சொல்றது…நீ எனக்கு மட்டுந்தான்னு…உன் வாழ்க்கையில என்னைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை புரியுதா? மீறி எவ கிட்டயாவது போன… உடம்புல உயிர் இருக்காது…அவளுக்கில்ல..உனக்குக் தான்…” என மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிய படி முகம் சிவக்க அமர்ந்திருந்தவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.

“இவ்வளவு ஆசை இருக்குல்ல…பின்ன ஏன் டி உன்னையே போட்டு நீ குழப்பிக்குற? திரும்பவும் சொல்றேன்…நீ மட்டுந்தான் இனி என்னோட வாழ்க்கையில இருப்ப.. இதோ இதெல்லாம் ஒரு பத்து நிமிஷம் சந்தோஷத்துக்காக அலங்கரிச்சது. நீ என் கூட இருந்தாலே நிரந்தரமான சந்தோஷம் என் கிட்ட இருக்கும். உன்னையே நீ வருத்திக்கிட்டு இருந்தன்னா என்னால நிம்மதியா இருக்க முடியாது சுகன்யா. கடவுளோட குழந்தைகள் ‌எத்தனையோ பேர் இந்த உலகத்துல இருக்காங்க. அவங்களை நம்ப குழந்தைகளா எடுத்து வளர்ப்போம். இப்ப என்ன உன்னால எந்த சந்தோஷத்தையும் எனக்கு குடுக்க முடியாதுன்னு நீ நினைக்கிறியா.? எனக்கான சந்தோஷத்தையும் உனக்கான சந்தோஷத்தையும் உன் கிட்ட இருந்து எப்படி எடுக்கணும்னு எனக்குத் தெரியும்…” என்றவன்‌ அதற்கு ‌மேல் அவளை யோசிக்க விடாமல் அவளது இதழ்களை சிறை செய்தான்.

கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டாள் சுகன்யா.

“என்ன நந்தினி சொல்ற…? பீரியட்ஸ் ஆயிடுச்சா…? இது எப்ப ? கிட்டத்தட்ட ஐஞ்சு வருஷமா…இதுக்காக காத்துக் கிட்டு இருந்தேன். ‌எந்த நேரத்துல வந்து என்ன‌ சொல்ற? கொஞ்சம் கூட உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா?” என புலம்பித் தள்ளினான்‌ அருண்மொழி.

கைகளைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தவள் , "அதுக்கு நான்‌ என்ன‌ பண்ண‌ முடியும்? இதெல்லாம் சொல்லிட்டா ‌வருது.. ம்ம்… போய்‌த் தூங்குங்க…இதெல்லாம் அப்பறமா பாத்துக்கலாம்..” என்றாள் அலட்சியமாக.

வேஷ்டியை மடித்துக் கொண்டு, “ எப்ப பார்த்தாலும் நீ என்னை சுத்தல்லயே விடுற…ம்ம்.. எல்லாம் என்னோட நேரம்…” என்றவன் மெத்தையில் தொப்பென்று விழுந்தான்.

இதழுக்கடியில் சிரிப்பை ஒளித்த படி அவனது அவஸ்தையை ரசித்துக் கொண்டு இருந்தாள் நந்தினி.

“ பாலிருக்கு….பழமிருக்கு.... ஃபர்ஸ்ட் நைட் தான் நடக்காது…” என புலம்பிய படி பூக்களை பிய்த்து போட்டுக் கொண்டே விட்டத்தை பார்த்தபடி படுத்திருந்தான்.

நாட்டுச் சிரிப்புடன் அவனருகே வந்தவள் அவனது பரந்து விரிந்த மார்பில் தலை வைத்துப் படுத்துக்கொண்டாள்.

அதில் திடுக்கிட்டவன் அவளது தலையை வருடியபடியே ,” இன்னும் எவ்வளவு நாள் காத்திருக்கணும்?” என்றான்.

“ காத்திருக்கலாம் வேணாம்…நான் சும்மா தான் பீரியட்ஸ் ஆச்சுன்னு சொன்னேன்…நான் நார்மலா தான் இருக்கே…...” என்று கூறி முடிப்பதற்குள் பட்டென்று எழுந்தவன் விளக்கை அணைத்து விட்டு மீண்டும் சந்தோஷ மிகுதியால் தொம்மென்று கட்டிலில் குதித்தான்.

பாவம் இம்முறை அவனது பாரம் தாங்காது கட்டிலின் ஒரு கால் உடைந்து அவனுக்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியது.

ஆனால் மனம் தளராமல் காரியமே கண்ணாக இருந்தான்.

இனியும் கண நேரத்தை வீணடிக்க அவன் விரும்பவில்லை . நீண்ட‌ காத்திருப்பிற்கு பிறகு இருவரது காதலும் கைகூடி இல்லற பந்தத்தில் அடியெடுத்து வைத்தனர்.
 
Last edited:
Top Bottom