நான் அறிய நீ - 03

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
நான் அறிய நீ - 03

திருகோணமலை - மூதூர் இடையிலான தூரம் 30 km வரும்.

சன நெரிசலுடன் பிதுங்கிய ‘மூதூர்’ பஸ்ஸில் இருந்து இறங்கினான் வரோதயன். அவனுக்காக காத்திருந்தான் அவன் தாய் மாமன் மகன் பஞ்சலிங்கம்.

"இங்க நிக்கிறன் மச்சான்.." மோட்டார் சைக்கிளில் இருந்து கை காட்டினான்.

திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் இருந்து கிலோ மீட்டர் கிழக்கே உட் செல்ல வேண்டும் அவர்கள் செம்மண் கிராமத்திற்கு.

ஏழு மணி இருட்டுச் சந்தியில் தேநீர் கடை திறந்திருக்க, ட்யூப்லைட் வெள்ளை ஒளியில் வெட்டிக் கதை பேசியபடி அமர்திருந்தனர் சில பெரியவர்கள்.

"யாரு வரோதயனா?"

"ஓம் மாமா!"

"தம்பிக்கு உத்தியோகம் கிடைச்சிட்டாம் எண்டு கேள்விபட்டம்.."

"அவனுக்கு ஏது பெரியப்பா தம்பி.. அவனுக்கு தான் வேலை கிடைச்சிருக்கு"

"அது யாரு பாலன்ர மகனா?"

"ஓம்! ஓம்! கண் எல்லாம் பவர் தான் அப்பப்பாக்கு.."

"உத்தியோகம் செய்ய போனா பயிர் நிலங்கள்ட நிலம என்ன மகன்??"

"நான் இல்லாட்டி என்ன, நீங்க எல்லாம் சேர்ந்து பாத்துக் கொள்ள மாட்டிங்களா.."

"அதுக்கென்ன.. தங்கவேலுட மக்களுக்கு செய்யாமலா.."

"அதானே.."

சுற்றி வளைத்து எல்லாரும் சொந்தபந்தம் தாம். அவர்களுக்கு பதில் தந்துகொண்டே தோள் பையை கழற்றி பஞ்சலிங்கம் தோளில் மாட்டியவன் அவனை இறங்கச் செய்து தனது வண்டியில் ஏறி அமர்ந்து முறுக்கினான்.

"எல்லா பாட்சும் நல்லா தான் மச்சான் இருக்கு. கை காச போட்டு ஃபுல் டேங் பெற்றோலும் அடிச்சி வச்சிருக்கன். பைக்க பத்தி யோசிக்காம உனக்கு முதல் நாள் அனுபவம் எல்லாம் என்ன மாதிரி எண்டு சொல்லு?"

"ஒண்டும் கேட்காத என்னிட்ட. பேசாம ஏறு"

"ஏன் மச்சான் முட்டுறாய்.. பசிக்குதோ?"

"வாய மூடிக் கொண்டு வாடா"

"ஏன் சினக்குறான்.. பஸ்ல கூட்டமோ!"

பஞ்சலிங்கம் வரோதயனுக்கு ஒரு வருடம் மூத்தவன். இருவரும் அக்கா தம்பி பிள்ளைகள். சின்ன வயதில் இருந்து நகமும் சதையும் போல வளர்ந்தவர்கள்.

மூதூர் மணல் பாதைகள் எல்லாம் யுத்தத்திற்குப் பிறகு காங்ரீட் சாலைகளாக மாற்றம் கண்டிருக்க, சாலை விளக்குகளும் சம அளவு இடைவெளியில் ஒளிர்ந்தன.

'அந்தக் காலத்தில்..' என கதை சொல்லும் அளவுக்கு யுத்தத்திற்கு முன்பே நில புலன்களுடன் வாழும் பெரிய குடும்பம் வரோதயனின் தகப்பன் தங்கவேலுவுடையது. மனைவி காமாட்சியை இரண்டு மகன்களுடன் விட்டு தாக்குதல் சம்பவத்தில் தங்கவேலு குண்டடி பட்டு காலமாகிய போது இளைம மகன் விரோதயனுக்கு பதினான்கு வயது. அவனை விட ஆறு வருடங்களுக்கு மூத்த அண்ணன் சுரேந்தருக்கு கல்யாணம் ஆகி இரண்டு மகன்களும் பிறந்து இருந்தனர்.

இடம்பெயர்வு மறுவாழ்வு எல்லாம் பார்த்த பல்லாயிரக்கணக்கான தமிழ் குடும்பங்களில் இவர்கள் குடும்பங்களும் அடங்கும்.

பதினைந்து வருடங்கள் கடந்து, பல பேர் வெளிநாடு திருகோணமலை டவுண் என குடிபெயர்ந்திருக்க, நமது மண் நமது ஊர் என பிடிவாதமாக சொந்த மண்ணில் விவசாயம் பார்த்துக் கொண்டு சந்தோஷமாக சீவிக்கும் சில நூறு குடும்பங்களுள் வரோதயன் குடும்பமும் அவன் தாய் தந்தை வழிச் சொந்தங்களும் அடங்கும்.

வீடு வந்தவனை வரவேற்க வராண்டாவில் காத்திருந்தார் வரோதயனை பெற்றவர் காமாட்சி.

முதலில் அவனுக்குக் பருக தண்ணீர் கொடுத்தவர் "ஏழு மணி ஆகுது தம்பி.. ஒவ்வொரு நாளும் இப்புடி தானா நேரம் போகும்?" எனக் கேட்டார் கவலையாக.

"இல்லை அம்மா, நாலே காலுக்கே ஒஃபிஸ் டைம் முடியும். நாலரைக்கு பஸ் எடுத்தாலும் இங்க அஞ்சரைக்குள்ள வந்திடலாம். முதல் நாள் தானே, பஸ் நேரங்கள் தெரியாம பிந்திட்டன் நான்" ஒரு வாய் தண்ணீர் பருகி சொம்பை கொடுத்தவன்"நீ வா!" என பஞ்சலிங்கத்தையும் அழைத்து கொல்லைக்கு போனான்.

கிணற்றடிக்கு வந்து சட்டையை கழற்றி கால் சராய் காலை மடித்து "சிரிப்பா சிரிச்சி பொயிட்டுடா என்ர பிழைப்பு இண்டைக்கு, உன்னால" என்றான் வெறுப்பாக.

"என்ன மச்சான், விளக்கமா கதை மொட்டையா கதைக்காத. நான் உன்ன மாதிரி படிச்சவன் இல்ல!"

"என்னடா விஷயம், உனக்கு விளங்காம என்ன விஞ்ஞானத்த சொல்லிட்டான் அவன்?" பக்கத்து வீட்டு படலை திறந்து ராசு என்கிற ராஜன் வந்தான். இவனும் வரோதயனுக்கு ஒன்று விட்ட மச்சான் முறை தான். வரா பஞ்சு ராசு மூவரும் சிறுப்ப கால நண்பர்கள்.

"என்னவோ நடந்து இருக்கு, என்ன எண்டு சொல்லாம வள் வள் எண்டு விழுறான்டா பஸ்ஸால இறங்கின நேரம் இருந்து.."

"என்ன வரா?" ராசு கேட்க பஞ்சலிங்கத்தை கடுப்பாக பார்த்தவன் "காலையிலயே வந்துட்டான்டா.. மோட்ட சைக்கிள கேட்டு.."

"ஏன்டா.. அவன் இண்டைக்கு வேலைக்கு போறான் எண்டு தெரியாதா உனக்கு? பிறகு எப்டி மச்சான் நீ போன.."

"சித்தப்பாட பைக்ல"

"தனஞ்சயன் சித்தப்பாவோ? அவர் அங்க திருகோணமலை சந்தையில வரவு வசூலிக்க கிடக்கு எண்டு சொன்னவர் தான்.. வழியில உன்ன இறக்கி விட்டவரா?"

"ஓமடா, அந்த மனிசன்ர பைக்க பத்தி தெரியாதா உனக்கு.. சீற் ஒரு பக்கம் கிழிஞ்சி தொங்கும்.. கைபிடி ஒரு பக்கம் ஆடும்.."

"ஓம், அது மோட்ட பைக் எண்டு ஆர் சொன்னது.. மரக்கறி லோட் ஏத்துற மினி லொறி எல்லோ. கண்டிஷன் மோசம் தான். அதை நம்பி நீ போனியா"

"ஓம்! அதுல ஏறிப் போனதுக்கு தான் நல்ல பரிசு கிடைச்சது"

"என்ன மச்சான்.. உன்னையும் மரக்கறி கடையில இறக்கி போட்டாரா?"

"செய்த காரியத்துக்கு ஜோக் வேற அடிக்கிறியோ நீ?" பஞ்சுவின் விலாவில் ஒரு குத்து வைத்தான்.

"அவனப் பிறகும் அடிக்கலாம். இப்ப என்ன நடந்த எண்டு சொல்லு.."

"அவமானமா பொயிட்டுதடா ராசு.. சீட் கம்பி ஒண்டு நீட்டிக் கொண்டு நிக்கும் சித்தப்பான்ர பைக்ல. பாத்திருக்கியா.. அது என்ர ரவுசர் பின் பக்கத்தில கிழிச்சி வச்சிற்றடா.."

கொல் என சிரித்தனர் நண்பர்கள் இருவரும். ராசுவை விட்டவன் பஞ்சுவின் முதுகில் பஞ்ச் வைத்தான்.

"வெளுத்து விட்டன் எண்டா.. சிரிக்கிறாய் நீ.. "

"சரி விடடா.. எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கும் வந்து சேர்ந்துட்டாய் தானே. எப்ப கண்ட நீ.. வேற யாரும் காண இல்லயே.."

"பயித்தியமா உனக்கு? வேற யாரும் காணாட்டி ஏன் நான் இவன்ர முதுக பிளக்குறன்.. பாத்துட்டாங்களடா.. அதுவும் பஸ்ல வச்சே ஒரு பிள்ள பாத்துட்டடா.."

"என்ன!!" இருவரும் அதிர்ச்சி உற்று அடுத்த கணமே 32 பற்களையும் வெளிக் காட்டினர்.

"பாத்துட்டு அந்த பிள்ள தான் எனக்கு சொல்லிச்சு" என்றவன் கொலை வெறியுடன் பஞ்சுவை பார்த்தான்.

சத்தமாக சிரித்த ராசு "இவன நீ அடிச்சு காய போடு, நான் உன்னோட நிக்கிறன். கெத்தா வெளிக்கிட்டு போனவன, பரம்பரையில முதல் முதலா பட்டம் படிச்சி அரசாங்க வேலை எடுத்தவன்ர மானம் போயிருக்கு உன்னால் பஞ்சி.."

"சும்மா இருடா நீ.. மச்சான், பிள்ளை பாத்துட்டு வந்து உனக்கு சொல்லிச்சாடா.. உண்மையாவா?" வரோதயன் தோளை சுரண்டி குஷியாகவே வினவினான் பஞ்சு.

"ஓம டா.. தமிழ்ல தானே சொல்றன்.."

"எப்படி டா.."

"ஒரே வெக்கமா போச்சுது.. நம்ம தான் பொம்பிள பிள்ளைகளோட கதைச்சதே இல்லயே. ஏறின ஸ்டாப் பஸ் முழுக்க அதுகள் தான். அதுலயும் ஒரு பிள்ள என்னயே பாத்துட்டு வந்திச்சு. ஒரு மாதிரியா போக நான் திரும்பி நிண்டு கொண்டன்.."

"பிள்ள எப்டி இருந்ததடா?"

"நல்ல வடிவான பிள்ள தான்.."

"ஓஹோ.. பிறகு?" கதையில் சுவாரஸ்யம் ஏற மச்சான்கள் இருவரும் அவனை நெருங்கினர்.

"அந்த பிள்ள பார்க்குதே எண்டு நான் இந்தப் பக்கம் பார்த்து வந்தன் இறங்க வேண்டிய இடத்த விட்டுட்டன்.."

"பிறகு?"

"பிறகு கொஞ்ச தூரம் போக தான் எடிவிகேஷன் எல்லாம் இறங்கியாச்சோ எண்டு கண்டக்டர் கேக்குறான்"

"பயித்தியக் காரன்.. இவ்வளவு அசமந்தமாவா இருப்பான். செவிட்டுல ஒண்டு போட வேண்டியது தானே அவனுக்கு.."

"நிப்பாட்டி இறங்கி ஓடுறன், அதே பிள்ள எனக்கு முதல் இறங்கி என்னையே பாத்துட்டு நிக்குது"

"மச்சான் நல்லா இருக்குடா கதை. மேல சொல்லு.."

"நாயே, வெளுப்பன் உன்ன. கதையில்லைடா உண்மையா காலையில நடந்தது.."

"அவன்ர கதைய விட்டுட்டு நீ சொல்லு வரா.."

"நம்மளயயே பார்த்து வந்த பிள்ளை அதுல நிக்குது. அதுவும் நானும் ஒரே ஒஃபிஸோ எண்டு சந்தோஷமா பொயிட்டு. வாயாலயே கேட்டுட்டன் நீங்களும் எடிவிகேஷன் ஒஃபிஸோ எண்டு.."

"ஹா ஹா! என்ன சொல்லிச்சு?"

"ஓம் எண்டது.."

"பிறகு?"

"பிறகு தான் எல்லாம் புஷ்வானமா போச்சுது. என்ர மானம் காத்துல பறந்துட்டு. உங்கட உடுப்புல பின்னால கிழிஞ்சிருக்கு எண்டு சொல்லிட்டு திரும்பி பார்க்காம பொயிட்டுது"

கொல் என சிரித்தவர்கள் உடனே மச்சானுக்காக துக்கப்பட்டு "என்ன வெட்கமா இருந்து இருக்கும் உனக்கு. ச்சே இப்புடி ஆகிட்டே.." ராசு தான் பரிதாபப்பட்டான்.

"அப்ப அந்த பிள்ள ஆரம்பத்தில இருந்து உன்னையே பார்த்தது ரவுசர் கிழிஞ்சி இருந்ததால தானா?" எனச் சிரித்துக் கடுப்பேற்றினான் பஞ்சு.

முதுகில் நாலு போட்டு பழி தீர்த்துக் கொண்டவன் தண்ணி அள்ளி கை கால் முகம் கழுவ, அவன் பின்னால் வந்து பிரிஸ்டத்தில் ஆராய்ந்தனர் இருவரும்.

"என்னடா பாக்குறயள்?"

"எங்கடா கிழிஞ்சிருக்கு, நல்லா தானே இருக்கு டவுசர்.."

முகத்தில் வடிந்த நீரை கையால் வழித்து இருவருக்கும் உதறியவன் "அப்டியே இருப்பனாடா.. அங்கயே வச்சி ஒரு ஆட்டோ பிடிச்சி டவுண் போய் கடையில புது ரவசர் வாங்கி மாத்திட்டு தான் ஒஃபிஸ் வந்தன்.."

"அது சரி! வரோதயனா கொக்கா.." என்றவர்கள் "பிறகு அந்த புள்ளைய பாத்தியா மச்சான்!" என விட்ட கதையை தொடர,

சில வினாடிகள் மௌனம் சாதித்தவன், இடுப்பில் கை ஊன்றி சிரிக்க, அவன் பேசுவதற்கு வாய்ப்பு தரவில்லை தாய் காமாட்சி.

"வா தம்பி, சூடா இருக்கு சாப்பாடு. சாப்பிட வா.. பஞ்சு ராசு நீங்களும் வாங்க தம்பி" என அழைத்து உணவு பரிமாறினார்.

வரோதயன் சரம் மாற்றி வந்து உட்கார அவன் அண்ணன் சுரேந்தரும் வந்தான். தங்கள் பெயரில் உள்ள பல ஏக்கர் நிலங்களில் நெல் மற்றும் உழுந்து விதைத்துள்ளனர். காய் கறிகளும் பயிரிட்டுள்ளனர். தினம் அவைகளை கவனித்து பாடு பட வேண்டும்.

இன்று ஒரு நாள் அவர்களுடன் அவன் இல்லாமல் என்ன என்ன வேலை ஓடியது எதெல்லாம் ஓடவில்லை என கலகலப்பாக கதைத்துக் கொண்டே இரவுணவை முடித்தனர்.

"மச்சான், வாறியா சந்திக்கு போய் வருவம்" பஞ்சு கூப்பிட "இல்ல மகன்.. அவன் களைச்சி இருப்பான். இன்னொரு நான் லீவா நிக்கிற நேரம் எப்புடி வேணும் எண்டாலும் இருங்க. இப்ப அவன் கொஞ்சம் ஓய்வா இருக்கட்டும்" என தடுத்து விட்டார் காமாட்சி.

அவன் இல்லாமல் ராசு பஞ்சுவுக்கும் சந்திக்கு போய் உல்லாசமாக காற்று வாங்கி ஊர் வம்பு கதைக்கும் ஆசை இல்லை.

அங்கேயே சாப்பிட்டு விட்டதால் சற்று நேரம் உட்கார்ந்து பொதுவாக சிலதை கதைத்து சிரித்து விட்டு தூங்க போய் விட்டனர் தங்கள் வீட்டுக்கு.

"ஏன் ஐயா, வேலை எல்லாம் கடுமையா இருக்கா? கஷ்டம் இல்லயே!" பாய் விரித்து அமர்ந்த மகனை கேட்டார் காமாட்சி.

"இல்லம்மா. இண்டைக்கு முதல் நாள் ஒண்ணும் தர இல்ல. நாளைக்கு பார்ப்பம். அதெல்லாம் கஷ்டமா இருக்காது..நீங்க யோசிக்காதிங்க" என்றான்.

அவரை பொறுத்த வரை மண்ணில் பாடு படுவது சிரமம் இல்லை தம் மக்களுக்கு. அரசாங்க அலுவலகத்தில் அதிகாரி பணிப்புரைக்கு ஆடுவதும் பொறுப்பு எடுத்து செய்வது தான் பெரும் பாடு.

கைபேசியை தடவிக் கொண்டிருந்தவன் நாளை பற்றி சிந்தித்தான். பெயர் அறியாத பிரார்த்தனா அவன் சிந்தையை வியாபித்தாள்.

பஸ்ஸில் வைத்து அவனைப் பார்த்ததும் தனக்காக நின்று தயக்கம் உதறி பேசியதும் ஓய்வில்லாமல் படமாக ஓடியது.

வெட்கம்! அப்படி ஒரு வெட்கம்!

இந்தக் கூச்சத்திலும் ஒரு கிளுகிளுப்பு உண்டு.

முன் அனுபவம் இல்லாத புதுவித சுவாரஸ்யம் தன் பயணத்தில் சேர்ந்திருப்பதை அறிவு உணர்ந்தது.

"என்னய்யா, சிரிச்சிக்கொண்டு இருக்கிற.. படுக்கல்லயா? நாளைக்கு ஒஃபிஸ் இருக்கே.." கூடத்தில் தனக்காக பாய் விரித்த தாயார் கேட்க அலைபேசியை வைத்து விட்டு தலையணையில் சரிந்தவன் விட்டம் பார்த்தான்.

பிரார்த்தனா அவனை பாவமாக பார்த்தாள்.

நான் புது ரவுசர் வாங்கி போட்டுக் கொண்டு தான் திரும்பவும் ஒஃபிஸ் போனன் என்றது அவவுக்கு தெரியுமா...

ஓட்டையோடவே திரிச்சிருப்பன் எண்டு நினைச்சிருப்பாவோ..

பாவம் மாதிரியே பார்த்தாவே..

மனசுக்குள் பேசிக் கொண்டு படுத்திருந்தான்.
 
Last edited by a moderator:

Author: நிதனிபிரபு
Article Title: நான் அறிய நீ - 03
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.