நிழலை கடந்த காதல் - 10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 24

Member
Jun 6, 2026
30
42
18
Kallakurichi
பிரியா அழுதுகொண்டே இருக்க, அவளருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் முன் வைத்தான் பரத்.

"முதல்ல தண்ணி குடிங்க.ரொம்ப உணர்ச்சிவசப்படறீங்க. அது உங்களுக்கும் நல்லதில்ல..."
என சிறிது இடைவெளி விட்டு தருணைப் பார்த்தான். "அவனுக்கும் நல்லதில்ல." என்றான்.


அவன் பார்வையைப் புரிந்துகொண்டவள், வேகமாக கண்ணீரைத் துடைத்துக் கொண்டு தண்ணீரை எடுத்துக் குடித்தாள்.

சில நிமிடங்கள் அமைதியாக அமர்ந்திருந்தவள் .மீண்டும் தன் கடந்த காலத்தைத் தொடர்ந்தாள்.

"அண்ணி இறந்தப்போ அவங்களோட அப்பா அம்மா வந்திருந்தாங்க.அப்போதான் முதல் முறையா நான் விக்ரமை பார்த்தேன்.அவனும் அன்னைக்குத்தான் என்னைப் பார்த்தான்.அதுக்கு முன்னாடி அவனைப் பத்தி அண்ணி சொல்லியிருக்காங்க. அவங்க தம்பி வெளியூர்ல படிக்கிறதா.
படிப்பு முடிஞ்சு நல்ல வேலைக்காக முயற்சி பண்ணிட்டு இருக்காரு.
இன்னும் கொஞ்ச நாள்ல வெளிநாட்டுக்குப் போகப் போறாருன்னு சொல்லியிருக்காங்க.ஆனா பெருசா அவனைப் பத்தி பேசினது கிடையாது. பணக்கார திமிர்ல வளர்ந்தவன். மிடில் கிளாஸ் கிட்ட அவ்வளவா பழக மாட்டான்.
அதனால நானும் பெருசா கவனிச்சது இல்ல"என்று கூறியவள் ஒரு பெருமூச்சு விட்டாள்.

"அன்னைக்கு அண்ணியோட கடைசி சடங்குக்காக மூணு பேரும் வந்திருந்தாங்க. அங்க வந்ததுல இருந்து எங்களைத் திட்டுறதுதான் அவங்க வேலையே..என் பொண்ண சந்தோஷமா வாழ வைக்கிறேன்னு சொல்லி கூட்டிட்டு வந்து கொன்னு புதைச்சிட்டீங்களே! நீங்க நல்லாவே இருக்க மாட்டீங்க!நாசமா போயிடுவீங்க! னு வாய்க்கு வந்தபடி பேசினாங்க.

ஏற்கனவே நாங்க எல்லாரும் உடைஞ்சு போயிருந்தோம்.
அதனால அவங்க பேசுனத எதையும் பெருசா காதுல வாங்கிக்கல. பெத்த பிள்ளைய இழந்த வலி என்னன்னு எங்களுக்கும் தெரியும்.அதனால நாங்க என்ன சொல்ல முடியும்? அமைதியா இருந்துட்டோம் "
என சொல்லும் போதே, அவளது குரல் மெதுவாகத் தளர்ந்தது.

"அந்த நேரத்துல...எங்களை உயிர்போட வச்சிருந்தது குட்டி பையன் மட்டும் தான். அவனோட அழுகை மட்டும் தான்.அவனைப் பார்த்து தான் நாங்க அடுத்த நிமிஷம் வாழணும்னு நினைச்சோம்." அவள் தழுவிக்கொண்டிருந்த தருணின் கன்னத்தை வருடினாள்.


"அப்போ நான் அவனைத் தூக்கி சமாதானப்படுத்திட்டு இருந்தேன்.
அவன் அழுது அழுது மூச்சு வாங்க தேம்பிட்டு இருந்தான்.
அப்போ விக்ரம் என்னையும் அவனையும் பார்த்துட்டு நின்னிருக்கான்.

திடீர்னு கை காட்டி,
இது யாரு?ன்னு கேட்டிருக்கான்.
அவன் யாரைக் காட்டி கேட்டான்னு அப்போ யாருக்கும் புரியலை.

அவனோட அம்மா, அப்பா ரெண்டு பேரும் அவன் தம்பிப் பத்தித்தான் கேட்கிறான்னு நினைச்சுட்டாங்க.

உடனே,அது உன் அக்காவோட பையன்.இந்த சனியன் வந்ததால்தான் அவ நம்மகிட்ட திரும்பி வராம போயிட்டா.
இல்லன்னா எப்படியாவது அவளை கூட்டிட்டு வந்திருக்கலாம். இவன் பிறந்ததால்தான் எல்லாமே கெட்டுப் போச்சுனு குழந்தையைப் பத்தி வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பிச்சுட்டாங்க.

அதை கேட்டப்போ எனக்கு அவங்க மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் போயிடுச்சு.பெத்த மகள் செத்துக்கிடக்கிறாள். அவங்க விட்டுட்டுப் போன குழந்தையைப் பார்த்து இப்படி பேசுறாங்கன்னு நினைச்சாலே அருவருப்பா இருந்துச்சு.ஆனா...
அப்புறம் தான் எனக்கு தெரிஞ்சது.

அவன் கேட்டது தம்பியைப் பத்தி இல்ல.என்னைத்தான் கை காட்டி கேட்டிருக்கானு.


அதுக்கப்புறம் தான் அவனுக்கு என்னைப் பிடிச்சிருக்குன்னு பின்னாடி தெரிஞ்சது. எனக்கு இன்னைக்கு வரை புரியல.
அக்கா இறந்து கிடக்கிற நேரத்துல...அக்காவைப் பத்தி யோசிக்காம... அவங்க குழந்தையைப் பத்தி யோசிக்காம...

அந்த இழவு வீட்டுல நின்னிருந்த என்னைப் பார்த்து மனசுல வேற எண்ணம் வர்ற அளவுக்கு... ஒருத்தன் எப்படி இருக்க முடியும்?"
என்று கூறியவள் வெறுப்போடு தலையசைத்தாள்.

"அப்போவே அவனைப் பத்தி எனக்கு நல்ல அபிப்பிராயம் இல்லை."என முகத்தை ஒவ்வொமையாக வைத்துக் கொண்டாள்.. இன்று நடந்தது போல.


பிரியா கூறியதை கேட்டுக் கொண்டிருந்த பரத்தின் கைகள் தன்னையும் அறியாமல் இறுக முறுக்கியது.

ஒரு பெண்...அதுவும் தன் அண்ணன்,அண்ணியின் இறப்பால் உடைந்து போயிருக்கும் பெண்...

தாய், தந்தை போல இருந்த அண்ணனையும் அண்ணியையும் ஒரே நாளில் இழந்து கதறிக் கொண்டிருக்கிறாள்.

அவளது கைகளில் எதுவுமே அறியாத ஒரு பச்சிளம் குழந்தை அழுது கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட நேரத்தில் கூட அவளைப் பார்த்து விருப்பம் கொள்வதும்...

அந்தக் குழந்தையை வாய்க்கு வந்தபடி வசைபாடுவதும்...
பரத்தால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பெற்ற மகள் உயிருடன் இல்லை.
ஆனால், அவள் விட்டுச் சென்ற பேரனைப் பற்றிக் கூட ஒரு துளி பாசம் இல்லாமல் பேசுகிறார்களே !என்ற எண்ணமே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.

'இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா?'என்று மனதிற்குள் கசப்பாக எண்ணிக் கொண்டான்.


பிரியா கூறிய ஒவ்வொரு வார்த்தையும் பரத்தின் மனதை கனக்கச் செய்தது. தன்னையும் அறியாமல் அவனது கைகள் இறுக முறுக்கியது. தாடை இறுகிக் கொண்டது. நரம்புகள் புடைக்க கையை மீண்டும் மீண்டும் திறந்தும் மூடியும் தன்னை சமாளிக்க முயன்றான். பெற்ற மகள் உயிரிழந்து கிடக்க, அவள் விட்டுச் சென்ற குழந்தையைப் பற்றி இப்படி பேச முடியுமா ?என்ற கோபம் உள்ளுக்குள் கொந்தளித்தது.



ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன். பார்வையை சில நொடிகள் தருணின் மீது பதித்தான். எதுவுமே அறியாத அந்தச் சிறுவன் அமைதியாக பிரியாவின் தோளில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். அண்ணன் ,அண்ணி என இருவரையும் ஒரே நாளில் இழந்து அழுது கொண்டிருந்த குடும்பத்தின் மீது கருணை காட்டாமல், அவர்களின் காயத்தில் மேலும் உப்பைத் தேய்த்தவர்களை நினைக்கவே அவனுக்கு அருவருப்பாக இருந்தது.

இருந்தாலும் இப்போது தனது கோபத்தை வெளிக்காட்ட விரும்பவில்லை. பல வருடங்களாக மனதுக்குள் புதைத்து வைத்திருந்த வலிகளை பிரியா முதன்முறையாக ஒருவரிடம் கொட்டிக் கொண்டிருக்கிறாள். அதனால் அமைதியாக அவள் கூறுவதை மட்டும் கேட்கத் தீர்மானித்தான்.


அவள் பேசட்டும்...அவள் மனதில் இருப்பதையெல்லாம் சொல்லட்டும்... அதற்குப் பிறகு பார்த்துக் கொள்ளலாம்.
என்று எண்ணியவன், எதுவும் பேசாமல் அமைதியாக அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

அவள் இன்னும் என்ன சொல்லப் போகிறாள் என்பதை அறிய காத்திருந்தான்.


தருணின் தலையை வருடியபடியே சில நொடிகள் அமைதியாக இருந்தவள் மீண்டும் பேச ஆரம்பித்தாள்.

"அன்னைக்கு விக்ரம் கேட்டது தம்பியைப் பத்தி இல்லை... என்னைத்தான்."என்று கூறியவளின் குரலில் வெறுப்பும் கசப்பும் கலந்திருந்தது.

"அவனோட அப்பா அம்மாவும், அவன் தம்பியைப் பற்றித்தான் கேட்கிறான்னு நினைச்சு பேசிட்டு இருந்தாங்க. ஆனா அவன் மறுபடியும் சத்தமா, நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கன்னு கேட்டான்.

அந்த நேரத்தில் அங்கிருந்த பலருடைய பார்வையும் அவர்கள் பக்கம் தான் திரும்பியிருந்தது.

ப்ச்! நான் அந்த பையனை கேட்கல. அந்த பையனை வச்சுட்டு இருக்கிறது அவ அவ யாரு?


உன் அக்காவோட நாத்தனார் டா... அதுக்கு என்ன இப்போ?ன்னு அவனோட அம்மா எரிச்சலா கேட்டாங்க.

அதுக்கு அவன்...எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. பேசி கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொன்னான்."அதை கூறும் பொழுதே அவளின் குரல் சிறிது நடுங்கியது.

"சொந்த அக்கா இறந்து கிடக்கிறாங்க.. அக்காவோட குழந்தை தாய் தந்தையை இழந்து அழுதுட்டு கிடக்கிறான். ஆனா அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. பார்த்த உடனே என்னைப் பிடிச்சிருச்சாம்." கசப்பாக சிரித்தாள்.

"அவன் அப்படிச் சொன்னதும் எனக்கு அதிர்ச்சியா இருந்துச்சு. என்ன நடக்குதுன்னே புரியல." அவளது விரல்கள் தருணின் முதுகை வருடின.

"அப்போ தம்பி வீல்னு அழ ஆரம்பிச்சான். நான் அவனை சமாதானப்படுத்துறதுல இருந்தேன்.அவனோட பெத்தவங்கதான் அதிர்ச்சி அடைஞ்சாங்க. இறப்பு வீட்டுல நின்னுக்கிட்டு இவன் என்ன பேசுறான்னு அவங்களுக்கே புரியல."சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.




"நீ படிச்ச படிப்பு என்ன? நம்ம அந்தஸ்து என்ன? யாரைப் பார்த்து என்ன பேசுறே?ன்னு அவனைத் திட்டினாங்க.என்னடா நீயும் உன் அக்கா மாதிரி இந்த கஞ்ச பிசினாரி குடும்பத்துல இருந்து பொண்ணு எடுக்கணும்னு நினைக்கிற.

நீ படிச்ச படிப்புக்கும் பாக்க போற வேலைக்கும் இவ உனக்கு ஏத்தவளா ? ஊர் உலகத்துல எத்தனையோ அழகான பொண்ணுங்க இருக்க.. நீ படிச்ச இடத்துலயும், இனி வேலைக்கு போற இடத்திலும் எத்தனையோ பொண்ணுங்களை பார்ப்ப.. அதை விட்டுட்டு போயும் போயும் இவ தான் வேணும்னு, அதும் இந்த வீட்டு பொண்ணு வேணும்னு கேட்கிற.. அப்படின்னு சத்தம் போடறாங்க.

எனக்கு உடம்பு கூசி போயிடுச்சு.. எனக்கு ,அப்பா அம்மாவுக்கு எல்லாருக்குமே தல கிறுகிறுன்னு வர ஆரம்பிச்சிருச்சு. என்ன குடும்பம்டா இதுனு? தான் தோணுச்சு. பெத்த புள்ள ,கூட பொறந்த அக்கா இறந்து கிடக்கும் போது கூட அத பத்தி யோசிக்காமல், வேறு எதையோ குடும்பமா யோசிச்சு, அதுக்கும் பிரச்சனை பண்ணிட்டு இருக்காங்கன்னு தோணுச்சு.."
சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.பின் கசப்பாகச் சிரித்தாள்.

"ஆனா அவன் அதையெல்லாம் காதுல வாங்கவே இல்ல.எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு. அவ்வளவுதான். நான் ஒன்னும் இங்க வந்து வாழப் போறது இல்லல. அவ நம்ம வீட்டுக்குத்தானே வரப் போறா? எனக்கு வெளிநாட்டு வாய்ப்பும் வந்திருக்கு. சீக்கிரமா கல்யாணத்தைப் பத்தி பேசுங்கனு சாதாரணமாக சொல்வது போல சொல்லிவிட்டு கிளம்பிட்டான்.. எனக்கு அந்த பொம்மை வேணும் வாங்கி தாங்கனு கேட்கிற மாதிரி இருந்துச்சு அவன் பேச்சு."என்று சொல்லும் போதே, பிரியாவின் கண்களில் வெறுப்பு மின்னியது.



"அந்த நிமிஷம்... தான் அவன் ஒரு மனுஷியா கூட என்னைப் பார்க்கலைன்னு எனக்கு தோணிச்சு. ஏதோ ஒரு பொருளைப் பார்த்த மாதிரி... தனக்கு பிடிச்சதை அடையணும் என்பதற்காக மட்டும் பார்த்த மாதிரி..."என்று கூறியவளின் குரல் மெலிந்தது.

"கடைசியா போறதுக்கு முன்னாடி என்னை ஒரு பார்வை பார்த்தான்."
அவள் அறியாமல் தருணை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.

"அந்த பார்வை...இன்னைக்கு வரைக்கும் எனக்கு மறக்கல.டிரஸ் போட்டிருந்தும், யாரோ என்னை நிர்வாணமா நிறுத்தி வேடிக்கை பார்க்கிற மாதிரி உடம்பெல்லாம் கூசிப் போச்சு." என்று கூறியவள் கண்களை மூடி ஒரு பெருமூச்சை வெளியேற்றினாள்.

"அதுக்கப்புறம் நான் அவன் பக்கம் கூட திரும்பி பார்க்கலை."


"அவன் அங்கிருந்து போன கொஞ்ச நேரத்திலேயே அவனோட அப்பா அம்மாவும் கிளம்பிட்டாங்க. பெத்த மகள் இறந்து கிடக்கிறாளே, கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து இருக்கணும்னு கூட அவங்களுக்கு தோணல.
பெத்த பொண்ணோட இறுதி சடங்குல கூட நிக்கல.. நாங்க எங்களோட துக்கத்துல இருந்தோம். அந்த விஷயத்தை அப்போ பெருசா யாரும் எடுத்துக்கவே இல்ல.

அதுக்கப்புறம் அண்ணனுக்கும் அண்ணிக்கும் தேவையான இறுதி மரியாதையை எல்லாம் செய்து முடிச்சுட்டு நாங்க வீட்டில இருந்தோம்.எங்களோட மொத்த உலகமும் தம்பி மட்டும் தான்."
என தருணின் தலையை மெதுவாக வருடினாள்.

"அவன் சிரிச்சா நாங்க சிரிப்போம்... அவன் அழுதா நாங்க பதறிப்போவோம்... அந்த நிலை.
எங்க வீட்டு ஆணிவேரே மொத்தமா சாஞ்சுடுச்சு.
அப்பா, அம்மா ரெண்டு பேரும் உடைஞ்சு போயிருந்தாங்க. ஒரு பக்கம் பச்சைக் குழந்தை. இன்னொரு பக்கம் அண்ணனும் அண்ணியும் இல்லாத வெறுமை.
எனக்கு என்ன செய்யணும்னே தெரியல.கண்ணைக் கட்டி காட்டுல விட்ட மாதிரி இருந்துச்சு."
ஒரு பெருமூச்சை வெளியேற்றியவள் மீண்டும் தொடர்ந்தாள்.

"அப்போ அக்கம் பக்கத்துல இருந்தவங்கதான் எங்களுக்கு ரொம்ப உதவி செஞ்சாங்க. நாங்க அந்த துக்கத்துல இருந்து கொஞ்சம் கொஞ்சமா வெளிய வர முயற்சி செஞ்சதும் அவங்களாலதான். ஆனா..."
அந்த ஒற்றை வார்த்தையிலேயே அவளது வெறுப்பு தெரிந்தது.

"நாங்க முழுசா அதுல இருந்து வெளிய வர்றதுக்கு முன்னாடியே மறுபடியும் விக்ரமும் அவனோட அப்பா அம்மாவும் எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க."

பரத்தின் புருவம் தானாகவே சுருங்கியது.

"வீட்டுக்கு போன பிறகு விக்ரம் அவங்க கிட்ட என்ன பேசினான்னு எனக்கு தெரியாது. ஆனா என்னை கல்யாணம் பண்ணியே ஆகணும்னு பிடிவாதமா நின்னிருப்பான் போல. ஏன்னா... ஒரு சக மனுஷியா, உணர்வுகள் இருக்குற ஒரு பொண்ணா அவன் என்னைப் பார்த்ததே இல்லை.
தனக்கு பிடிச்ச ஒரு பொருளைப் பார்க்கிற மாதிரிதான் பார்த்தான்.
அது எனக்கு அப்பவே புரிஞ்சிருச்சு."என்றவள் கண்களில் வெறுப்பு மின்னியது.

"எப்படியாவது அந்த பொண்ணு எனக்கு வேணும்... அவ எனக்குத்தான் சொந்தமா வரணும்...ன்னு பித்து பிடிச்ச மாதிரி பேசி இருப்பான் போல.
ஏற்கனவே மகள் மேல இருந்த பாசத்தை மொத்தமா தூக்கி போட்டிருந்தவங்க...இப்போ மகனோட விருப்பம் நிறைவேறணும்னு நினைச்சிருப்பாங்க. போல

சரி... அந்தப் பொண்ணையே கட்டி வச்சிடலாம். எப்படியும் கல்யாணம் ஆன பிறகு வெளிநாட்டுக்குத்தானே கூட்டிட்டு போகப் போறான்ன்னு யோசிச்சிருப்பாங்க போல" என கசப்பாக சிரித்தாள்.

"அண்ணன்,அண்ணி இறந்து ரெண்டு நாள் கூட ஆகலை.எங்க வீட்டுல இன்னும் துக்கம் முடியலை.அண்ணனும் அண்ணியும் இல்லாம நாங்க மூச்சு விடக்கூட கஷ்டப்பட்டுட்டு இருந்தோம்.அந்த நேரத்துல வந்து... பொண்ணு கேட்டு நின்னாங்க."என விரக்தியாக சிரித்தாள்.

"அவங்களை எல்லாம் பெத்தவங்கன்னு சொல்றதுக்கே எனக்கு வெட்கமா இருக்கு.
அற்ப புழுவா கூட என் கண்ணுக்கு அவங்க தெரியல.அதைவிடக் கீழே..."என்று கூறிவிட்டு அமைதியாகிவிட்டாள்.
 

Author: STN - 24
Article Title: நிழலை கடந்த காதல் - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ShaSri