நிழலை கடந்த காதல் -15

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 24

Member
Jun 6, 2026
30
42
18
Kallakurichi
காலையில் எப்பொழுதும் போல பரத் டிரெயினில் ஏறினான். அவனுக்கு முன்பாகவே தருணிடம் பேசிக்கொண்டு அவனைத் தோளோடு அணைத்துப் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள் பிரியா. ஆனால் பரத் அவளை பெரிதாக கண்டும் காணாமல், அமைதியாக சிறிது இடைவெளி விட்டு நின்று கொண்டான்.

அவன் ஏறிய சிறிது நேரத்தில் பார்த்த பிரியாவும், அவன் தன்னிடம் மீண்டும் வந்து இதைப்பற்றி பேசாமல் இருப்பது நல்லது என்று யோசித்தாலும், உள்ளுக்குள் சிறிது நிம்மதி அடைந்தாள்.

சிறிது நேரத்திலேயே அங்கு இன்றும் விக்ரம் வந்திருந்தான். அதுவரை சிறிது இடைவெளி விட்டு நின்றிருந்த பரத், விக்ரம் பிரியாவின் அருகில் வந்தவுடன், இருவருக்கும் இடையில் சிறிது தூரம் விட்டு அவர்கள் பேசுவதைக் கேட்பது போல் நின்று கொண்டான் பரத்.

இவர்கள் இருவரும் பேசுவதை ஆடியோவோ, வீடியோவோ எடுப்பது சரிப்பட்டு வராது. இங்கிருக்கும் இறைச்சலிலும் கூட்டத்திலும் அது பயனளிக்காது என்பதை உணர்ந்தான்.

நேற்று சசி கூறிய வார்த்தைகள் அவன் நினைவிற்கு வந்தன.

"மச்சான், முடிஞ்சா விக்ரம் பேசுறதை வீடியோவோ, ஆடியோவோ எடுத்து வை. அது பின்னாடி நமக்கு யூஸ் ஆகலாம். இன்னொன்னு, நம்ம கூட படிச்ச சதீஷ் இருக்கான்ல? அவனை போய் பார். இந்த விஷயத்துல இருக்கிற சாதக பாதகங்களை அவன் சொல்லுவான். அதுக்கப்புறம் கேஸ் பைல் பண்றதுக்கும் ஹெல்ப் பண்ணுவான். ஆனா நீ நேரடியா உதவி செய்யக்கூடாது. மறைமுகமாத்தான் செய்யணும். விக்ரம் பிரியாவை வாட்ச் பண்ணலாம். நீ அவளுக்கு ஹெல்ப் பண்றது அவனுக்கு தெரியக் கூடாது."

அதன்படி தான் இப்போது அவன் நடந்துகொண்டான்.

எப்போதும் போல அவளின் அருகில் வந்த விக்ரம்,
"என்ன முடிவு பண்ணிட்டியா?" என்று கேட்டான்.

"நான் என்ன முடிவு பண்ணணும்?" என்றாள் பிரியா.

வேகமாக," என்னடி? துளிர் விட்டுப் போச்சா? தினமும் வந்து உன் பின்னாடி சுத்திக்கிட்டு திரிஞ்சிட்டு இருப்பேன்னு நினைக்கிறியா? எனக்கு வேற வேலை வெட்டி இல்லையா உன் பின்னாடி சுத்துறது தான் வேலையா?"

"பெருசா வேலை வெட்டி இருந்தா எதுக்கு தினமும் வந்து என்னைத் தொந்தரவு பண்ணணும்? உன் வேலையைப் போய் பார்க்க வேண்டியதுதானே? யார் வேணாம்னு சொன்னா?" என்றாள் அவளும் வேகமாக.

"ரொம்ப பேசுற. உன்னை மொத்தமா அடக்குறதுதான் என்னோட அடுத்த வேலை. இப்போ என்ன பண்ணலாம்னு இருக்க?"

"நான் ஏதோ பண்றேன். உனக்கு என்ன வந்துச்சு? எதுக்கு தேவையில்லாம எங்க வாழ்க்கையில தலையிடுற?"

"திரும்பத் திரும்ப பேசிட்டு இருக்க மாட்டேன். பப்ளிக் பிளேஸ்ல இருக்கோம்னு பார்க்குறேன். இல்லன்னா வச்சுக்கோ... என்ன செய்வேன் தெரியாது."பற்களைக் கடித்தபடி அவன் பேச,

"ப்ச்!"என சலித்துக் கொண்டாள்.

"தெளிவா சொல்லிட்டேன். ஒன்னு நான் சொன்னத செய். இல்லையா பிள்ளையை என்கிட்ட கொடு."

"ரெண்டுமே முடியாது."என்றாள் தீர்க்கமாக,

"இன்னும் நாள் கடத்திட்டு இருக்காத. இல்லன்னா நான் வக்கீலைப் பார்க்க வேண்டியதா தான் இருக்கும்.அடுத்து நீயும் நானும் கோர்ட்ல தான் சந்திக்கிற மாதிரி இருக்கும்."

"உன்னால முடிஞ்சா எதையோ செய். கோர்ட்ல தானே? நானும் பார்க்குறேன். உன்னால முடிஞ்சதை செய்."

"என்னடி புதுசா ஓவரா துள்ளுற? ரெண்டு மூணு நாளா பொட்டி பாம்பு மாதிரி அடங்கிட்டு இருந்த. இன்னைக்கு கோர்ட்ல சந்திக்கிற அளவுக்கு துணிச்சல் வந்திருச்சா? பணம் பாதாளம் வரைக்கும் பேசும்னு ஞாபகம் இருக்கா?"

"என்கிட்ட நியாயமும் தர்மமும் இருக்கு."

அதைக் கேட்ட விக்ரம் சட்டென்று கலகலவெனச் சிரித்தான்.

"உன்னோட நியாயமோ தர்மமோ என் காலுக்கு சமம். எந்த காலத்துல இருக்க? போயிட்டே இருடி.."

"காசுக்கு அடிபணியுறவங்களுக்கு மத்தியில தான் .எங்கள மாதிரி ஆளுங்களுக்கு உதவி பண்ற நல்லவங்களும் இருக்கத்தான் செய்கிறாங்க. நீ உன் வழியைப் பாரு. நான் என் வழியைப் பார்க்கிறேன்.நீ உன் வழியைப் பாரு. நான் என் வழியில இந்த கேஸை எனக்கு சாதகமா முடிச்சுக்கிறேன்.

பணம் இருக்கின்ற ஒரே காரணத்துக்காக இத்தனை நாள் என் புள்ளையைப் பற்றி கவலைப்படாத நீ, இன்னைக்கு கேஸ் போடப் போறேன்னு சொல்ற. பிறந்த நாளிலிருந்து இப்போ வரைக்கும் கண்ணுக்குள்ள வச்சு தாங்குற எனக்கு, என் புள்ளையை எப்படி பார்த்துக்கணும்னு தெரியும். அவனை எப்படி வாழ்க்கை முழுசும் என்னோட வச்சுக்கணும்னும் தெரியும். உன்னால முடிஞ்சதைப் பாருடா."
என கூறியவள் அவனை விட்டு சிறிது தள்ளி நகர்ந்து முகத்தைத் திருப்பி நின்றாள் பிரியா.

பற்களைக் கடித்த விக்ரம், பொதுவெளியில் இருப்பதையும் உணர்ந்து,"பார்த்துக்கிறேன் டி. உன்னை வச்சிக்கிறேன். ரொம்ப பேசிட்டு இருக்க. இன்னைக்கே நான் யாருன்னு உனக்கு காட்டுறேன். இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன். வெயிட் பண்ணிட்டு இரு. நோட்டீஸ் வரும். கோர்ட்ல மூவ் பண்ணிக்கலாம். அதுக்கப்புறம் நான் யாருன்னு உனக்கு காட்டுறேன்" என்று கூறிவிட்டு அடுத்த நொடியே அங்கிருந்து நகர்ந்தான்.


அதுவரை அமைதியாக இருந்த பரத், அப்போதுதான் பிரியாவை இன்னும் உற்றுப் பார்த்தான். பிரியாவுமே அவனைப் பார்த்தாள். அவ்வளவுதான். கண்மூடித் திறந்தானே தவிர, வேறு எந்த வார்த்தையையும் அவன் உதிர்க்கவில்லை.

மீண்டும் அவள் அருகில் வந்து, "என்ன பேசினான்? என்ன ஆயிற்று?" என்று எதுவும் கேட்கவில்லை. இருவரும் பேசிய உரையாடலை ஓரளவிற்கு அவனால் கேட்க முடிந்திருந்தாலும், அமைதியே காத்தான்.

பிரியா இறங்கியதும் எப்போதும் போல தன் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள்.

பரத் அலுவலகம் சென்றவுடன், சசியிடம் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.

"சரி மச்சான். இதுக்கு மேலயும் நேரம் கடத்த வேண்டாம்னு தான் தோணுது. நீ சதீஷைப் பார்த்து பேசிடு. இல்ல நான் போன் பண்ணி பேசிட்டா."

"நானே பேசுறேன். அதான் சரிப்பட்டு வரும்."

"சரி," என்று தலையசைத்தான் சசி.

அதன்பிறகு அமைதியாக இருந்தாலும், நொடிக்கு ஒரு முறை பிரியா போன் செய்ய மாட்டாளா ?என்று அவன் மனம் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தது.

அறிமுகமில்லாத எண் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தாலே, "அவளாக இருக்குமோ?" என்று வேகமாக எடுத்துப் பார்த்தான்.

அன்றைய நாள் முழுவதும் அவனது நிலையைப் பார்த்த சசிக்கு சிரிப்புதான் வந்தது.

'காதல் நோய்ல விழுந்துட்டானே!' என்று நண்பனை மனதிற்குள் கிண்டல் செய்துக் கொண்டான்.

பரத் அவனைப் பார்த்துவிட்டால் மட்டும் உடனே அமைதியாகி விடுவான்.

இரவு ஒன்பது மணி அளவில் பிரியாவிடமிருந்து அழைப்பு வந்தது.

அப்போதும் தெரியாத எண் என்பதால் வேகமாக எடுத்தவன்,
"ஹலோ..." என்றான்.

எதிர்முனையில்,"நான் பிரியா பேசுறேன்."என்றாள்.

"சொல்லுங்க பிரியா... உங்க போன் காலுக்காகத்தான் ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..." அவசரத்தில் உண்மையை உளறிவிட்டான்.

அடுத்த நொடியே அருகில் இருந்த சசி அவன் தொடையில் கிள்ளினான்.

அப்போதுதான் தான் என்ன சொன்னோம் என்பதை உணர்ந்த பரத், நாக்கைக் கடித்துக் கொண்டான்.

"என்ன சொன்னீங்க? புரியலையே...?" என்றாள் பிரியா.

"இல்ல... அது... சொல்லுங்க பிரியா. எதுக்குப் போன் பண்ணி இருக்கீங்க?" என்று பேச்சை மாற்றினான்.

அன்று நடந்த விஷயங்களை முழுவதுமாகக் கூறியவள்,
"எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?" என்று கேட்டாள்.

"அதுக்காகத்தானே வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..." என்று மீண்டும் உளறிவிட்டான்.

இந்த முறை சசி தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக அவனை முறைத்துப் பார்த்தான்.

மீண்டும் தன் தவறை உணர்ந்தவன்,"சொல்லுங்க பிரியா..." என்று சமாளித்தான்.

"இதை யார்கிட்ட பேசுறதுன்னு தெரியல. ஏதாவது தெரிஞ்சவங்க இருந்தா பரவாயில்ல. எனக்கு பெருசா யாரையும் தெரியாது. எங்க போய் யாரைப் பார்க்கிறது, எப்படி கேட்கிறது என்று தெரியல.
அதனால்தான் தம்பியை வேற கூட்டிக்கிட்டு அலையனும்.. அதான்.. நல்ல வக்கீல் யாருன்னு பார்க்கணும்னு நினைக்கிறேன். பணத்துக்காக இல்லாம நியாயமா பேசுற வக்கீலா இருந்தா இன்னும் நல்லா இருக்கும். உங்களுக்கு தெரிஞ்சவங்க அப்படி யாரும் இருந்தா சொல்றீங்களா?"

மூச்சு விட்டுச் சிரித்தவன்,
" என்னோட பிரண்ட் ஒருத்தன் இருக்கான். நம்ம வேணும்னா அவரைப் போய் பார்க்கலாமே. உங்களுக்கு ஓகேன்னா நான் அவர்கிட்ட பேசுறேன்."

"சரி. நம்பிக்கையான ஆளா இருந்தா பிரச்சனை இல்லை. நீங்களும் கூட வர முடியுமா? உங்களுக்கு ஏதாவது முக்கியமான வேலை இருந்தா பரவாயில்லை. தொந்தரவு பண்ணுறேன்னு..."

"அச்சோ! இதுல என்ன தொந்தரவு இருக்கு பிரியா? நானும் கூட வரேன். ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து போக வேண்டாம்."

"ஏன் சார்?"

"உங்களை விக்ரம் வாட்ச் பண்ண வாய்ப்பு இருக்கு இல்லையா? நீங்க சவால் விட்டிருக்கீங்க. அதனால நான் முன்னாடியே போயிடுறேன். உங்களுக்கு அட்ரஸ் மெசேஜ் பண்றேன். நீங்க நேரா அங்க வந்துருங்க. நம்ம அங்க மீட் பண்ணிக்கலாம்."

"சரி சார்"அதற்குப் பிறகு மேற்கொண்டு எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்து விட்டாள்.

போன் பேசி முடித்த பரத்தை பார்த்த சசி,"சரிடா. நாளைக்கு நீ முன்னாடியே போய் சதீஷ்கிட்ட விஷயத்தை சொல்லிடு. அவ வந்த பிறகு பேசலாம்."

"சரி."என்று தலையசைத்தவன், அடுத்த நொடியே சசியிடம் இருந்து முதுகில் ஒரு அடி வாங்கினான்.

"நல்லா உளறி வைக்கிற நாயே!" என்ற சசியின் வார்த்தையில் இருவருக்கும் சிரிப்பு வந்தது.

மறுநாள், பிரியா வருவதற்கு முன்பாகவே பரத் சென்று லாயர் சதீஷைச் சந்தித்து விஷயத்தை முழுவதுமாகக் கூறியிருந்தான்.


அவன் வந்த அரை மணி நேரத்திற்குப் பிறகு பிரியாவும் அங்கு வந்தாள்.

சதீஷின் அறைக்குள் நுழைந்தவள் சோர்வாகவும், சிறிது பதட்டத்துடனும் இருந்தாள்.

அவளைப் பார்த்த பரத், உடனே அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினான்.

சினேகமாக அவனைப் பார்த்துப் புன்னகைத்தவள், தண்ணீர் குடித்துவிட்டு,"நீங்க எப்போ சார் வந்தீங்க?" என்று கேட்டாள்.

"நீங்க வரதுக்கு முன்னாடியே வந்துட்டேன் பிரியா. நீங்க ஓகேவா?"

"நான் ஓகே சார்."

"விக்ரம் இன்னைக்கு வந்து ஏதாவது பேசினானா? இல்ல பாலோ பண்ணுற மாதிரி ஏதாவது இருந்ததா?"

"இல்ல சார். இன்னைக்கு அவன் என்னை மீட் பண்ணவே இல்லை. ஆனா நான் தான் திரும்பத் திரும்ப பார்த்துட்டு வந்தேன். அதனால கொஞ்சம் லேட் ஆயிடுச்சு."

அப்போது தங்களையே குறுகுறுவென பார்த்துக் கொண்டிருந்த சதீஷை கவனித்த பிரியா, மரியாதையாக புன்னகைத்தாள்.

சதீஷும் புன்னகைத்துவிட்டு,
"உட்காருங்க பிரியா."என்று கூறியவன், "நீயும் உட்காருடா," என்று பரத்திடம் சொன்னான்.

இருவரும் அமர்ந்ததும்,
"சரி பிரியா. பரத் ஏற்கனவே விஷயத்தைச் சொல்லியிருக்கான். இருந்தாலும் உங்க பக்கம் இருந்து நீங்க சொல்லும்போது, அவன் கவனிக்காத சின்ன விஷயங்கள் கூட எனக்குத் தெரிய வரும்.

அதனால இப்போ வரைக்கும் நடந்ததை எதையும் மறைக்காமல், ஒண்ணும் விடாம சொல்லுங்க. அப்போதான் உங்க பக்கம் இருக்கிற சாதக பாதகங்களை சரியா பார்க்க முடியும்."என்றான்.

அதற்கு பிரியாவும் நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறத் தொடங்கினாள்.

பிரியா அனைத்தையும் கூறி முடிக்க,

சதீஷ் பேச ஆரம்பித்தான்.."இப்போ முதல் விஷயம், பொருளாதார ரீதியாக கோர்ட்டில் பார்க்க வாய்ப்பு இருக்கும். அப்படி பார்க்கும்போது, உங்களை விட விக்ரம் பொருளாதார ரீதியாக ஓரளவு வலுவாக இருக்கிறான். அது நம்ம பக்கத்தில் ஒரு சின்ன மைனஸ் பாயிண்ட்.

ஆனா, அவங்க பக்கம் பார்க்க வேண்டிய விஷயங்களும் நிறைய இருக்கு. உங்க அண்ணி கல்யாணம் பண்ணிட்டு வந்ததிலிருந்து அவங்க பெற்றோர்களோட எந்த தொடர்பும் வச்சுக்கலை. குழந்தை பிறந்த பிறகும் கூட, அவங்க அப்பா அம்மா வந்து குழந்தையை பார்த்தது கிடையாது. ஏன், உங்க அண்ணி இறந்த பிறகுகூட குழந்தையை தங்களோட கூட்டிட்டு போறதா கேட்டதே கிடையாது.

இது எல்லாமே அக்கம் பக்கத்துல இருக்கிறவங்களுக்கும் தெரியும். அதனால இது நமக்கு பிளஸ் பாயிண்டா மாறும்.

நமக்கு சாதகமா விஷயங்களை சேகரிக்க அக்கம் பக்கத்துல இருக்கிறவங்ககிட்ட இருந்து வாக்குமூலம் வாங்க வேண்டி இருக்கும். நம்பகமான ஆட்களை கோர்ட்டில் நேர்ல வரவச்சு பேச வைக்கணும். நீங்களோ, உங்க அப்பா அம்மாவோ சொல்றதை விட, வெளியிலிருந்து பார்த்தவங்க சொல்றதை கோர்ட் அதிகமா கவனிக்கும்.

அவங்க அப்பா அம்மா இதுவரைக்கும் உங்க அண்ணியோட தொடர்பு வைக்கல, குழந்தையை பற்றியும் அக்கறை காட்டல, உங்க அண்ணியோட இறுதி சடங்குல கூட கடைசி வரை இருக்காம கிளம்பிட்டாங்கன்னு அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க சொன்னா அது மதிப்புள்ள சாட்சியா இருக்கும்.

அதே நேரத்துல, அந்த சூழ்நிலையில விக்ரம் உங்களை திருமணம் பண்ணிக்க கேட்டிருக்கான் என்பதும் ஒரு முக்கியமான விஷயம். இதையெல்லாம் அக்கம் பக்கத்துல இருக்கிறவங்க சொல்லும்போது, அது நமக்கு சாதகமா அமையும். மொத்தத்துல, இது நம்ம பக்கத்துக்கு ஒரு நல்ல பிளஸ் பாயிண்ட்." என்றான்.
 

Author: STN - 24
Article Title: நிழலை கடந்த காதல் -15
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ShaSri

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
பரத் உன் வாய் தான் டா உனக்கு எதிரி😂😂😂😂😂
சசி - பரத் பாண்டிங்🫰🫰🫰🫰🫰