நிழலை கடந்த காதல் - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 24

Member
Jun 6, 2026
30
42
18
Kallakurichi
விக்ரம் சென்ற பிறகு, அடுத்த சில நாட்கள் அமைதியாகவே கடந்தன. அந்த இடைப்பட்ட நாட்களில் கோர்ட்டு விசாரணைக்கான ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்க, இறுதியாக கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய நாளும் வந்தது.


இன்று கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய நாள். குழந்தையை அழைத்துக் கொண்டு, தனது பெற்றோர்களை வீட்டிலேயே விட்டுவிட்டு செல்லலாம் என்று அவள் முடிவு செய்திருந்தாள். ஆனால் அவர்களோ, "நாங்களும் வருவோம்" என்று உறுதியாகக் கூறினார்கள்.

அவர்கள் அங்கு நடக்கப் போகும் விஷயங்களைக் கண்டு பயந்துவிடுவார்களோ என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது. அதனால், "இந்த முறை வீட்டிலேயே இருங்கள். அடுத்த விசாரணை நாளில் அழைத்துச் செல்கிறேன்" என்று சொல்ல நினைத்தாள். ஆனால் எப்படியும் தங்களை வரச் சொல்வார்கள் என்பதும் அவளுக்குத் தெரியும். இருந்தாலும், இங்கு நடக்கவிருக்கும் விஷயங்கள் அவர்களை பாதித்துவிடுமோ என்ற கவலையில், வீட்டிலேயே இருக்குமாறு கூறினாள். ஆனால் அவர்கள் அதைக் கேட்காமல், "நாங்களும் வருகிறோம்" என்று அவளுடன் வந்தார்கள்.

அன்று சசியும் பரத்துடன் கோர்ட்டுக்கு வந்திருந்தான். சசியை தனது நண்பன் என்று மட்டுமே அறிமுகப்படுத்தியிருந்தான் பரத். அதற்கு மேல் அவனைப் பற்றி எதுவும் பெரிதாகக் கூறவில்லை.

அவனும் முகமெங்கும் புன்னகையுடன், "தங்கச்சி" என்று அழைத்து, அவளுக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூறினான். பின்னர் தருணை வாங்குவதற்காக கைநீட்டினான்.

பரத்திடம் கூட இதுவரை தருணை கொடுத்ததில்லை பிரியா. ஆனால் சசியின் "தங்கச்சி" என்ற அழைப்பிலும், உள்ளுக்குள் எழுந்த அண்ணன் என்ற பாச உணர்விலும், தன்னை மீறிய ஏதோ ஒரு உந்துதலால் தருணை அவனிடம் கொடுத்திருந்தாள்.

அதைப் பார்த்த பரத், புருவத்தை உயர்த்தி அவளைப் பார்த்தான். பிரியாவோ அவனது பார்வையைத் தவிர்த்தபடி வேறு பக்கம் திரும்பிக் கொள்ள, லேசாகப் புன்னகைத்தவன் அதற்கு மேல் எதுவும் கேட்காமல் அமைதியாகிவிட்டான்.

'என் மேல் நம்பிக்கை உள்ள போல...'என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.

ஆனால் அந்த முட்டாளுக்குத் தெரியவில்லை. நம்பிக்கை இல்லாமலா இவனிடம் அவள் தனது குடும்பச் சூழலைப் பற்றிக் கூறியிருப்பாள்? அதுவும் இப்போது அவனிடமே உதவி கேட்டு, இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள். அவன் மீது நம்பிக்கை இல்லையென்றால், அவள் வாழ்க்கையின் இத்தனை முக்கியமான தருணத்தில் அவனை துணையாகத் தேர்ந்தெடுத்திருக்கவே மாட்டாள்.


அதன் பிறகு நேரம் ஆகுவதை உணர்ந்து அனைவரும் உள்ளே செல்கின்றனர்.. நீதிபதியும் விசாரணையை ஆரம்பிக்கிறார்


"இது சிறுவன் தருணின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தொடர்பான வழக்கு தானே?இரு தரப்பினரும் இருக்கிறார்களா?
சரி. முதலில் மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்போம்."என்றார்..


விக்ரம் தரப்பு வக்கீல் (பிரபு)
"மாண்புமிகு நீதிபதி அவர்களே, என் கட்சிக்காரர் விக்ரம். சிறுவன் தருணின் தாய்மாமன். குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவனை தனது பாதுகாப்பில் வளர்க்க விரும்புகிறார்.

குழந்தைக்கு தேவையான கல்வி, மருத்துவம் மற்றும் பொருளாதார வசதிகள் அனைத்தையும் வழங்கும் நிலையில் என் கட்சிக்காரர் உள்ளார்.

எனவே குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு, அவனது பாதுகாப்பு உரிமையை என் கட்சிக்காரருக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்."என்றார்..



சதீஷ் எழுந்து பேச ஆரம்பித்தான்.. "மாண்புமிகு நீதிபதி அவர்களே, எதிர் தரப்பு தற்போது குழந்தையின் நலனை முன்னிறுத்தி பேசினாலும், இந்த சிறுவன் பிறந்த நாள் முதல் இன்று வரை என் கட்சிக்காரரான பிரியாவின் பராமரிப்பில்தான் இருக்கிறான்.

ஒரு குழந்தையின் வாழ்க்கையில் பொருளாதார வசதி மட்டுமே முக்கியமல்ல. அன்பு, அரவணைப்பு, உணர்வுப்பூர்வமான பிணைப்பு ஆகியவையும் முக்கியம்.

தருண் தனது அத்தையான பிரியாவையே தாயாக எண்ணி வளர்ந்திருக்கிறான்.தற்போது அவனை அந்த சூழலில் இருந்து பிரிப்பது குழந்தையின் மனநிலையை கடுமையாக பாதிக்கும்."என்றான்..


இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதலில் பிரியாவை அழைக்கிறார்..

"பிரியா, நீங்க இந்தக் குழந்தையை எத்தனை வருடங்களாக பார்த்துக் கொள்கிறீர்கள்?"

"அவனைப் பிறந்ததிலிருந்து நான் தான் பார்த்துக்கிறேன் சார்."



நீதிபதி "குழந்தையின் அன்றாட தேவைகளை யார் கவனிக்கிறார்கள்?"


பிரியா, "நான் தான் சார். பள்ளி,ஹாஸ்பிடல், சாப்பாடு ,டிரஸ் எல்லாமே நான்தான் பார்த்துக்கிறேன் சார்.."



நீதிபதி "குழந்தை உங்களுடன் எப்படி பழகுகிறான்?"


அவளோ,கண்கள் கலங்க, "என்னை விட்டுத் தூங்க மாட்டான் சார். நான் வேலைக்காக வெளியே போனாலும் தேடுவான்."


அதன் பின், நீதிபதி விக்ரமை அழைக்கிறார்

"விக்ரம், நீங்க குழந்தையை உங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறீங்க?"


விக்ரம், "அவன் என் அக்கா குழந்தை சார். அவனுடைய எதிர்காலம் நல்லா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்."



நீதிபதி, "இதுவரை குழந்தையின் வாழ்க்கையில் நீங்கள் எந்த அளவுக்கு பங்கேற்று இருக்கீங்க?"



விக்ரம் "முடிந்த அளவுக்கு உதவி செய்து இருக்கேன் சார். ஆனால் இனிமேல் முழுப் பொறுப்பையும் ஏற்க தயாரா இருக்கேன்."




சதீஷ் குறுக்கேக் கேள்வி
எழுப்பினான்.."விக்ரம், நீங்க சொல்வது போல குழந்தையின் மீது இவ்வளவு அக்கறை இருந்தால், கடந்த சில ஆண்டுகளில் அவனை உங்களுடன் வைத்துப் பார்த்த அனுபவம் இருக்கிறதா?"


"அவனுக்கு பிடித்த உணவு என்ன தெரியுமா? உடல்நிலை சரியில்லாத போது யார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் தெரியுமா?"


விக்ரம் ஒரு சில நொடி தடுமாறினான்..

விக்ரம் தரப்பு வக்கீல் எதிர்வாதம்
"மாண்புமிகு நீதிபதி அவர்களே, என் நண்பர் உணர்ச்சிகளை முன்வைக்கிறார். ஆனால் நீதிமன்றம் பார்க்க வேண்டியது குழந்தையின் எதிர்காலம்.

என் கட்சிக்காரர் குழந்தைக்கு சிறந்த கல்வி, பாதுகாப்பு மற்றும் நிலையான வாழ்க்கையை வழங்கும் நிலையில் இருக்கிறார்.




நீதிபதி இறுதியாக, "இரு தரப்பின் வாதங்களையும் கேட்டேன்.
குழந்தையின் நலனே இந்த நீதிமன்றத்தின் முதன்மை கவலை.தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யுங்கள். அடுத்த விசாரணை தேதியில் தொடர்ந்து விசாரிக்கப்படும்."என்றவர் பேச்சு முடிந்ததாக எழுந்து கொள்ள..


முதல் ஹியரிங் முடிந்து அனைவரும் வெளியே வந்தனர். விக்ரம், கண்களில் அனல் பறக்கப் பிரியாவை முறைத்தபடி நின்றான்.

பிரியாவோ தருணைத் தூக்கிக்கொண்டு அமைதியாக வெளியே வந்து நின்றாள். அவள் அருகே நெருங்கி வந்தவன்,
"என்னடி... ரொம்ப துணிச்சலா பதில் சொல்லுற போல?" என்று பற்களைக் கடித்தபடி கேட்டான்.

ஏற்கனவே இருந்த தைரியம் சற்றும் குறையாமல் அவனை நேராகப் பார்த்தவள்,
"ஏற்கனவே சொன்னதுதானே. என் பக்கம் நியாயமும் தர்மமும் இருக்கு. உன்னால ஆனதைப் பாத்துக்கோ." என்று கூறிவிட்டு நகர முற்பட்டாள்.

"ஏய்..." என்று அவள் கையைப் பிடித்தான் விக்ரம்.

வேகமாக அவன் கையைத் தட்டிவிட்டவள், அருவருப்பாக அவனை நோக்கினாள்.
"இந்தத் தொட்டுப் பேசுற வேலையெல்லாம் வேற யார்கிட்டயாவது வச்சுக்கோ. என்ன செய்வேன்னு தெரியாது."

"கோர்ட் வாசல்ல நிக்கிறன்னு இவ்வளவு தைரியமா பேசுற. இதையும் ஞாபகத்துல வச்சுக்கோ. இன்னும் இந்த ஆட்டம் எத்தனை நாளைக்குன்னு நானும் பார்க்கிறேண்டி."

"உன்னால முடிஞ்சதைப் பாருடா. "

"நீ என்ன பண்றேன்னு பார்க்க தாண்டி போறேன்."

"அதேதான் நானும் சொல்றேன். நீ என்ன பண்றேன்னு நானும் பார்க்கிறேன். ஆனா அவசரம் இல்லை. பொறுமையா பார்க்கிறேன்."

அவளின் கைகளில் இருந்த தருணைப் பார்த்தான்.

"என் புள்ளையை என்கிட்ட இருந்து பிரிச்சு வைக்க முடியும்னு மட்டும் கனவு காணாதே."என்றாள்..

"யாருக்குடி வேணும் உன் புள்ள? எனக்கு இவன் தேவையே கிடையாது. எனக்கு நீதான் வேணும்."

அவன் சொன்ன வார்த்தையில் அதிர்ந்து நின்றாள் பிரியா.

"ஏற்கனவே சொன்னேன்... இப்பவும் சொல்றேன். எனக்கு இவன் முக்கியமில்லை. நீதான் முக்கியம்.ஆனா உன்னை அடைய இவனை ஒரு துருப்புச் சீட்டா பயன்படுத்த வேண்டிய நிலை வந்தா, அதையும் நான் செய்ய தயங்க மாட்டேன்.நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா. நான் நினைச்சதை அடைய எந்த எல்லைக்கும் போவேன்."என அவளை அர்த்தம் பொதிந்த பார்வையுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் விக்ரம்.

அவன் சென்ற திசையையே சில நொடிகள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த பிரியா, தன்னையும் மீறி தருணை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.


விக்ரம் பேசி முடித்துவிட்டு அங்கிருந்து நகரும் வரை, சசியும் பரத்தும் தனியாக நின்றிருந்தனர். சதீஷிடம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவனும் அடுத்தடுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தான்.

விக்ரம் சென்ற பிறகு மூவரும் பிரியாவிடம் வந்தனர். பிரியாவும் நடந்ததைச் சுருக்கமாகக் கூறினாள்.

"சரி பிரியா, நீங்க எதையும் நினைச்சு குழப்பிக்காதீங்க. அடுத்து என்ன செய்யணும்னு நான் பாத்துட்டு உங்களுக்கு கால் பண்றேன்" என்ற சதீஷ் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

பரத் அமைதியாக பிரியாவையே பார்த்துக் கொண்டிருக்க, சசிதான் அவளிடம் பேசினான்.

"சரிம்மா... சரி தங்கச்சி. நீ ரொம்ப அவனைப் பற்றி யோசிக்காத. நம்ம பக்கம் இருக்கிற நியாயத்தை சொல்ல ஆரம்பிச்சுட்டோம். கோர்ட்டுலயே கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அந்தப் பயத்துலதான் இப்போ உன்கிட்ட வந்து உளறிட்டு போறான்.நாம பாத்துக்கலாம். சதீஷ் இருக்கான். நாங்க இருக்கோம். உன் கூட நானும் பரத்தும் இருக்கோம். சரியா?"என்றான் சசி.

அவள் மெதுவாகத் தலையசைத்தாள்.

"எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு மா. நான் கிளம்புறேன்," என்றவன் பரத்தின் தோளைத் தட்டிவிட்டு, தருணைக் கொஞ்சிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

பரத்தும்,"சரி பிரியா. நீங்க தைரியமா இருங்க. அடுத்தது என்னன்னு பாத்துக்கலாம். இப்போ அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வீட்டுக்குப் போங்க. அவங்க ரொம்ப நேரமா உட்கார்ந்து இருக்காங்க" என்றான்.

அதன் பிறகுதான் தனது தாய், தந்தையைப் பார்த்தாள் பிரியா.

அவர்களும் அவளிடம் வந்தனர்.
"விக்ரம் என்னடி பேசிட்டு போறான்?" என்று செல்வி பதற்றத்துடன் கேட்டார்.

"ஒண்ணும் இல்லம்மா. அவன் என்ன புதுசா மிரட்டப் போறான்?" என்று சாதாரணமாகக் கூறினாள் பிரியா.

"எனக்கு அடிவயிறு கலங்குதுடி. பெத்தவளா ஏற்கனவே ஒரு பிள்ளையைத் தூக்கி வாரிக் கொடுத்துட்டு உட்கார்ந்திருக்கேன். இப்போ இருக்கிற உன்னையும் பொதக்குழியில தள்ளுற கணக்கா, நீதான் வேணும்ன்னு நின்னுட்டு இருக்கான்.

ஊர் உலகத்துல வேற பொண்ணே இல்லையா? ஏண்டி உன் பின்னாடியே வந்து நம்ம தாலியை அறுக்கப் பார்க்கிறான்? வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி இருக்கு.

என் பேரப்புள்ளையையும் என் பொண்ணையும் அவன்கிட்ட இருந்து காப்பாத்துறதுக்குள்ள நானும் போய்ச் சேர்ந்துடுவேனோன்னு பயமா இருக்கு.

சீக்கிரம் நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா கூட நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம்."என்றார் பயத்துடன் கவலையாக..

அதைக் கேட்ட பிரியா வேகமாக, "என்னம்மா? திரும்பத் திரும்ப கல்யாணத்தைப் பற்றியே பேசுறீங்க? எனக்கு கல்யாணம் வேணாம்னு எத்தனை தடவை சொல்றது?எனக்கு தருண் மட்டும் போதும். என் வாழ்க்கை அவன் மட்டும்தான்."

"லூசு மாதிரி ஏதாவது பேசாத பிரியா ..உனக்கு நாட்டு நடப்பு புரியுதா இல்லையா?"

"எனக்கு எதுவும் புரிய வேண்டாம். தெரியவும் வேண்டாம். நீங்க கொஞ்ச நேரம் அமைதியா இருக்கீங்களா? கொஞ்சமாவது நிம்மதியா இருக்கணும். மூச்சு விடுறதுக்குள்ள அடுத்த பிரச்சனையை நீங்களே கொண்டு வர்றீங்க."

"கல்யாணம் பண்ணிக்கறது பிரச்சனையாடி?" என்று செல்வி கேட்டார்.

"கல்யாணம் பண்ணிக்கறது பிரச்சனை கிடையாது. எனக்கு கல்யாணம் வேணாம் என்பது தான் விஷயம்.இதுக்கு மேல இந்த விஷயத்தைப் பற்றி பேசாதீங்க. நீங்களும் அப்பாவும்."
என்று கூறிவிட்டு அமைதியாக
விநாயகத்தைப் பார்த்தாள்.

ஆனால், பரத் அருகில் இருந்ததால் அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

செல்விதான் பதற்றத்திலும் வேகத்திலும் மனதில் இருந்ததை வெளிப்படையாகக் கூறிவிட்டார். ஆனால் விநாயகத்தால் அப்படிப் பேச முடியவில்லை.


விநாயகமோ தன்னைத்தானே சமாளித்துக் கொண்டவர்,

"செல்வி, கொஞ்ச நேரம் கம்முனு இரு" என்று தனது மனைவியை அடக்கிவிட்டு மகளை நோக்கினார்.

"வீட்டுக்குப் போகலாமா பிரியா? ரொம்ப நேரமா நீயும் எதுவும் சாப்பிடல. பாரு, தருணும் சோர்வா இருக்கான்" என்று பேரனைக் குறிப்பிட்டுக் காட்டினார்.

அதன்பிறகு பரத்திடமும் சொல்லிக்கொண்டு, தனது தாய் தந்தையை அழைத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள் பிரியா.

அவர்கள் செல்லும் திசையையே பார்த்தபடி நின்றிருந்தான் பரத்.

அவளது தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, அவனுக்குள் ஏதோ ஒரு பாரம் அழுத்தியது. ஏற்கனவே ஒரு பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவளின் வாழ்க்கையில், அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து குவிந்துக் கொண்டே இருப்பதாகவே அவனுக்குத் தோன்றியது.

'இறுதிவரை அவளுக்குத் துணையாக இருக்க வேண்டும்' என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.

ஆனால் அதற்காக இனி என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.

பல யோசனைகளுடன் அங்கேயே சில நொடிகள் நின்றவன், பின்னர் தானும் அங்கிருந்து நகர்ந்தான்.
 

Author: STN - 24
Article Title: நிழலை கடந்த காதல் - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ShaSri

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
பரவலா....இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நீதி, நியாயம் எல்லாம் நல்லா தான் இருக்கு