நிழலை கடந்த காதல் -5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 24

Member
Jun 6, 2026
30
42
18
Kallakurichi
பரத், தனது நண்பன் சசியை அழைத்துக்கொண்டு அவசரமாக மருத்துவமனைக்குள் நுழைந்தான். ரேகா பிரசவ வார்டுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தாள்.

வெளியே குடும்பத்தினர் அனைவரும் பதட்டத்துடன் காத்திருந்தனர். ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாக நகர்ந்தது. குறிப்பாக சசி, அமைதியாக அமர்ந்திருந்தாலும் மனதிற்குள் ஆயிரம் கவலைகளோடு தவித்துக் கொண்டிருந்தான்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பிரசவ அறையிலிருந்து வெளியே வந்த செவிலியர்,

"வாழ்த்துக்கள்! அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறாள்."
என்று கூறியதும் அங்கே இருந்த அனைவரின் முகத்திலும் நிம்மதி பரவியது.

அதுவரை வலியுடனும் பதற்றத்துடனும் அமர்ந்திருந்த சசியின் தோளை தட்டிய பரத்,
"மச்சான்..."என்று அழைத்தான்.

அடுத்த நொடியே அவனை இறுகக் கட்டியணைத்த சசி, கண்களில் தேங்கியிருந்த கண்ணீரை மறைக்க முடியாமல் விட்டுவிட்டான். வார்த்தைகள் எதுவும் வெளிவரவில்லை. ஆனால் அந்த கண்ணீர் அவனது மகிழ்ச்சியை முழுவதுமாக சொல்லிவிட்டது.

சிறிது நேரத்தில் குழந்தையை சசியின் கையில் கொண்டு வந்து கொடுத்தனர்.

நடுங்கும் கரங்களால் தனது மகளை ஏந்தியவன், அவளது சிறிய பாதங்களை மெதுவாக முத்தமிட்டான். பின்னர் நெற்றியிலும் முத்தமிட்டு, கண்கள் கலங்கியபடியே அவளை ரசித்தான்.

பிறகு குழந்தையை தனது தாய், தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு,
"என் மனைவியை பார்க்கலாமா?"
என்று ஆவலுடன் கேட்டான்.

"நார்மல் டெலிவரி தான் சார். கொஞ்சம் இருங்க. அவங்களை சுத்தம் பண்ணிட்டு இருக்காங்க."
என்று செவிலியர் கூறிவிட,

மேலும் பதினைந்து நிமிடங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

அந்த பதினைந்து நிமிடங்களும் அவனுக்கு பதினைந்து ஆண்டுகளாகவே தோன்றின.

இறுதியாக ரேகாவைப் பார்க்க அனுமதி கிடைத்தது.

வேகமாக உள்ளே சென்றவன், படுக்கையில் சோர்வாக படுத்திருந்த மனைவியைப் பார்த்ததும் அவளது நெற்றியில் மெதுவாக முத்தமிட்டான்.
ஆனால் அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை.

அவளது கண்களையே உற்றுப் பார்த்தபடி நின்றான்.

ரேகா மெதுவாக அவனது கையைப் பிடித்தாள்.

உடனே அவளது கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டவன், இன்னும் அமைதியாகவே இருந்தான்.

"சசி..."என்று மெதுவாக அழைத்தாள் அவள்.

பதில் இல்லை.

"என்னங்க...?" என்று மீண்டும் அழைத்தவள், அவனது முகத்தை ஆராய்ந்தாள்.

சிறிது நேரம் கழித்து வலியில் முகத்தைச் சுருக்கினாள்..

"என்னடி? எதாவது பண்ணுதா? டாக்டரைக் கூப்பிடட்டுமா?"
என்று பதறியபடி கேட்டான்.

"என்கிட்ட பேச மாட்டீங்களா?"என்றாள் வலியுடன்.

அப்போதும் அவன் அமைதியாகவே இருந்தான்.

அவன் மனதில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவள் மெதுவாக,"நான் உங்களுக்கு தான் முதல்ல போன் பண்ணேன். ரீச் ஆகல. அதனால தான் அண்ணனுக்கு கூப்பிட்டேன்." என்றாள்.

சசியின் பார்வை அவள் மீது நிலைத்தது.

"முதல்ல உங்ககிட்ட சொல்லணும்னு தான் நினைச்சேன். உங்க போனும் ரீச் ஆகல. ஆனா அந்த நேரத்துல பயமா இருந்துச்சு. ரத்த சொந்தம் இல்லன்னாலும், எனக்காக ஓடி வந்து நிக்கிறவரு அண்ணன் தான்.அதுவும் அவருக்குச் சொன்னா, அவர் உங்களையும் கூட்டிட்டு வருவாருன்னு தெரியும்.
அதனால தான் அவருக்குக் கூப்பிட்டேன்."என்று கூறியவள், கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்.

அடுத்த நொடியே அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு, கன்னத்தை மெதுவாக ஏந்திய சசி "லூசு..."என்று புன்னகைத்தவன்,
"அதுக்காக அழுவாங்களா டி?" என்றான்.

"பின்ன.நீங்க முகத்தை திருப்புறீங்க?"

"எனக்கு கோபம் இல்லைடி. சின்ன வருத்தம் தான்.இந்த மாதிரி நேரத்துல எனக்கு போன் பண்ணலையேன்னு தோணிச்சு.
அவ்வளவுதான்.

அப்படி ஏதாவது பிரச்சனை இருந்தாலும் கூட, இந்த நேரத்துல நான் உன் பக்கத்துல இருக்கணும்னு தான் நினைப்பேன். அதனால இனிமே இப்படிப்பட்ட நேரம் வந்தா, முதல்ல எனக்குத்தான் போன் பண்ணணும்.சரியா?" என்றவன், மீண்டும் அவளது நெற்றியில் முத்தமிட்டான்.

ரேகாவும் கண்ணீரோடு தலையசைத்தாள்.

அப்போது, வெளியிலிருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்க,"எங்க குட்டி தேவதை வந்துட்டாளே...! அவளுக்கு பசிகிதாம்.. "என்று சிரித்துக் கொண்டே கூறியபடி குடும்பத்தினர் அனைவரும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தனர்.

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டிய நேரம் என்பதால், ரேகாவிடம் குழந்தையை கொடுத்துவிட்டு ஆண்கள் அனைவரும் வெளியே வந்தனர்.

வெளியே வந்த சசியின் தோளை தட்டிய பரத்,"என்னடா மச்சான், ஓகேவா?"என்று கேட்டபடியே அவன் தோளில் கை போட்டான்.

"ஒன்னுமில்லடா... ஓகே தான்..."
என்று புன்னகைத்தான் சசி.

"அவ்வளவுதான் டா எரும! அதுக்கு எதுக்கு முகத்தைத் தூக்கி வச்சிட்டு திரிஞ்ச? உன்னால தங்கச்சியும் அழுதுட்டா இல்ல?"
என்று பரத் சிரித்தபடி கேட்க,

"ஆமா... உன் தங்கச்சி என்னை அழ வைக்கலையா அப்போ?"
என்று சசி முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"உங்களை வச்சிக்கிட்டு எப்படித்தான் அத்தையும், மாமாவும் பொழுதுக்கும் சமாளிக்கிறாங்களோ தெரியல!"
என்று பரத் சிரித்தான்.

அப்போது, வெளியே வந்த வினிதா,"மாமா! பாப்பா பொறந்துருக்கு. எனக்கு ட்ரீட் எங்க?"என்று சசியின் முதுகில் தட்டினாள்.

"உனக்கு இல்லாததாடி வினி குட்டி!"என்று புன்னகைத்தான் சசி.

"சரி, பேசிட்டு இருங்கடா. வர்றேன்."என்று கூறிவிட்டு பரத் வேகமாக வெளியே சென்றான்.

சில நிமிடங்களில் பெரிய ஸ்வீட் பாக்ஸ்களுடனும் ,சாக்லேட் பாக்ஸ்களுடனும் மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைந்தான்.

மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்கள் முதல், பிரசவ வார்டில் இருந்த மற்ற நோயாளிகளின் உறவினர்கள் வரை அனைவருக்கும் இனிப்புகளை வழங்க ஆரம்பித்தான்.

" நான் மாமா ஆகிட்டேன்! எனக்கு மருமக பொறந்திருக்கா" என்று பெருமையாக உற்சாகமாக சொல்லிக்கொண்டே சாக்லேட்களை நீட்டினான்..

வினிதாவின் கையில் ஒரு பெரிய சாக்லேட் பாக்ஸையும், ஸ்வீட் பாக்ஸையும் திணித்தான் பரத்.

அதைப் பார்த்த வினிதா, "நீ சரியான கேடி மாமா! இப்போ கூட அண்ணனை விட்டு வாங்க வச்சு கொடுக்கிறத பாரு!"என்று சிரித்தாள்."வர வர ரொம்ப கஞ்சன் ஆயிட்ட. அதுவும் பொம்பள புள்ள வேற பெத்து வச்சிருக்க."
என்று கேலி செய்ய,

"நான் வாங்கி கொடுத்தா என்ன? என் மச்சான் வாங்கி கொடுத்தா என்ன? ரெண்டும் ஒண்ணுதான்."
என்று கூறிய பரத், தங்கையின் தலையை மெதுவாக கலைத்தான்.

அதன்பிறகு உள்ளே சென்று மற்றவர்களுக்கும் இனிப்புகளை வழங்கிவிட்டு, தனது நண்பனின் மகளான மருமகளைத் தூக்கிக் கொஞ்ச ஆரம்பித்தான்.

ரேகா மட்டும் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதை கவனித்த பரத்,
"என்னடா மா?"என்று கேட்டான்.

"ஒன்னுமில்ல..."என்று தலையசைத்தாள் அவள்.

ஆனால், அவளது பார்வையில் நன்றியும் பாசமும் நிரம்பி இருந்தது.

அதை உணர்ந்தவன், ஒரு சிறிய இனிப்புத் துண்டை எடுத்து அவளது வாயில் வைத்தான்.

"எனக்கு தாய் மாமாவா ப்ரமோஷன் கொடுத்து இருக்கிற உனக்கு ஸ்வீட் தர வேண்டாமா?"
என புன்னகையுடன் கேட்டான்.

ரேகா சிரித்துவிட்டாள்.

அவளது தலையை மெதுவாக வருடியவன்,"நிம்மதியா இரு. எதையும் யோசிக்காத."


அவனது வார்த்தைகளே ரேகாவின் மனதை முழுவதுமாக அமைதிப்படுத்தின.

சிறிது நேரம் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிக்கொண்டிருந்த பரத்துக்கு ஒரு போன் கால் வந்தது.

போனை எடுத்துப் பேசியவன்,
"சரி... கொஞ்ச நேரத்துல வந்துடுறேன்."என்று கூறிவிட்டு வெளியே வந்தான்.

சசியிடம் வந்து,"மச்சான், ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போயிட்டு வந்துடுறேன்.

வினிதா இங்கதான் இருப்பா. ஏதாவது அவசரம்னா அவளை வச்சு பார்த்துக்கோ." என்றவன்.. இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு நின்று,"மவனே! இங்கே இருந்து எங்கயாச்சும் நகர்ந்தா கொன்னு போட்டுருவேன்." என்று நண்பனை விரல் நீட்டி மிரட்டினான்.

"புள்ள பொறக்குற வரைக்கும் தான் காரணம் சொல்லிட்டு இருந்த. இப்போ என் தங்கச்சியையும் என் மருமகளையும் பார்த்துக்கறது மட்டும் தான் உன் வேலை. புரியுதா?"என்று கூற,

"சரிங்க சார்!"என்று சசி சல்யூட் அடித்தான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

வினிதாவிடமும், வீட்டில் இருந்த மற்றவர்களிடமும் சொல்லிவிட்டு, தனது தாய் பானுமதியை அழைத்துக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டான் பரத்.

பிரசவமான பெண்ணுக்கு வீட்டுச் சாப்பாடு செய்து எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்பதால், பானுமதியும் மகனுடன் கிளம்பிச் சென்றார்.


மீண்டும் பரத் வீட்டிற்குத் திரும்பியபோது இரவு வெகு நேரம் ஆகியிருந்தது.

அதற்குள் பானுமதி மருத்துவமனையில் இருந்த அனைவருக்கும் தேவையான உணவுகளைச் செய்து முடித்திருந்தார். தனது மகள் வினிதாவிற்கு அழைத்து, தன்னை வந்து அழைத்துக்கொண்டு போகச் சொல்லியிருந்தார். அவளும் ஸ்கூட்டியில் வந்து அவரை அழைத்துச் சென்றாள்.

இரவில் நேரம் சென்றே மருத்துவமனைக்கு வந்த பரத், நேராக நண்பனின் மகளிடம் தான் சென்றான். வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு மருத்துவமனைக்கு வந்திருந்தான்..குழந்தையை பார்க்கப் போவதால்,

தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சிறு மொட்டை மெதுவாகத் தூக்கிக் கொண்டு கொஞ்சியவன், அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

தெய்வாவைப் பார்த்து,"அத்தை... அம்மா... இன்னைக்கு நைட் இங்க இருந்துப் பாத்துப்பாங்க. நீங்க வீட்டுக்குப் போயிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில வாங்க" என்றான்.

உடனே சசி,"இல்லடா, நான் இருக்கேன். வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறேன்? நான் பாத்துக்குறேன்.."


அப்போது, பானுமதி,"டேய் பொம்பளைங்க யாராவது கூட இருக்கணும்"என்றார்.

"சரி விடுடா. இன்னைக்கு அண்ணி இருந்துட்டுப் போகட்டும். நாளைக்கு நான் இருக்கிறேன். பகல் ஒரு ஆள், ராத்திரி ஒரு ஆள்னு மாத்தி மாத்தி இருந்துக்கலாம்."என்றார் பானுமதி.

இப்போது, வினிதாவிற்கு காலேஜ்ல எக்ஸாமுக்கு லீவ் விட்டிருப்பதால் , "நானும் குழந்தையையும் அக்காவையும் பார்த்துக்குவேன் ..அவங்க கூட இருந்து".என்றாள் வேகமாக..

பரத் எவ்வளவு கூறியும் சசி வீட்டிற்குப் போக மறுத்தான்.
அவனைப் பார்த்து சிரித்த பரத்,
"நீ வரேன்னு சொன்னாலும் உன்னை வீட்டுக்கு அனுப்ப மாட்டேன். உன்ன இங்க யாரும் வீட்டுக்கு போக சொல்லல. ஆனா போய் குளிச்சிட்டு வா.."


சசி பரத்தை முறைக்க,

"என்ன டா?"என்றான் புன்னகையுடன்

"எனக்கு தெரியும் போ டா.."என முகத்தைத் திருப்பினான்.

அவன் முதுகில் மெதுவாக தட்டி விட்டு,"என் தங்கச்சியும் மருமகளும் வீட்டுக்குப் போற வரைக்கும் நீ இங்கதான் மகனே."
என்று சொல்ல,

அங்கிருந்தவர்கள் அனைவரும் சிரித்தனர்.

இறுதியாக சுந்தரத்தை மட்டும் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, தனது தாய், தங்கையுடன் பரத் வீட்டிற்குக் கிளம்பினான்.


ஒரு வாரம் முழுவதும் ரேகாவும் குழந்தையும் மருத்துவமனையிலேயே இருந்தனர்.

அந்த ஒரு வாரமும் வீட்டில் இருந்தவர்கள் ஆள் மாற்றி ஆள் இரவில் தங்கிப் பார்த்துக்கொண்டனர்.

பகலில் வீட்டிலிருந்து உணவு சமைத்து கொண்டு வந்து கொடுத்து விட்டு, சில மணி நேரம் உடன் இருந்து பார்த்துவிட்டு திரும்பிச் சென்றனர் ஆள் மாற்றி ஆள்.

அதுவரை சசியை வேலைக்குக் கூட வர விடாமல் பார்த்துக் கொண்டான் பரத்.

"இப்போ உன் வேலையே.. என் தங்கச்சியையும் , மருமகளையும் பார்த்துக்கிறது தான்."என்று சொல்லி அவனை மருத்துவமனையிலேயே இருக்க வைத்தான்.


குழந்தையுடன் ரேகாவை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பே வீட்டிற்கு வந்திருந்தனர் பரத், சசி வினிதா மூவரும்.

மூவரும் சேர்ந்து வீட்டையே தலைகீழாக மாற்றியிருந்தனர்.

ஒட்டடை அடித்து, தரையை கழுவி, பொருட்களை ஒழுங்குபடுத்தி, வீடு முழுவதையும் பளிச்சென்று சுத்தம் செய்திருந்தனர்.

ரேகா தங்கும் அறையில் ஒரு தொட்டிலும், ஹாலில் ஒரு தொட்டிலும் காட்டன் புடவையில் கட்டி வைத்து இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல் குழந்தைக்காக தனியாக ஆடும் தொட்டில் ஒன்றையும் வாங்கி வந்திருந்தான் பரத்.

அதைப் பார்த்த சசி,
"எதுக்குடா இவ்வளவு செலவு?"
என்று கேட்டான்.

உடனே பரத்,"என் மருமகளுக்கு தாய் மாமன் நான் செய்யாம வேற யாருடா செய்வாங்க?"என்று பெருமையாகக் கூறினான்.

அவனது வார்த்தையில் இருந்த பாசத்தைப் பார்த்து சசி சிரித்தபடியே அவனை அணைத்துக் கொண்டான்.

மருத்துவமனையில் இருந்த நாட்களில், ரேகாவின் தாய் மாமாவும் வந்து குழந்தையைப் பார்த்துவிட்டு சென்றிருந்தார்.

பிரசவச் செலவுக்காக என்று பணம் கொடுத்தார் .

ஆனால் சசி உடனே மறுத்துவிட்டான்."நானே பார்த்துக்கறேன் சித்தப்பா."
என..

"பரவாயில்ல மாப்பிள்ளை. இது எங்க பொண்ணுக்காக..."என்று அவர் மீண்டும் மீண்டும் கூறியும், சசி ஏற்கவில்லை.

இறுதியில்,"தப்பா எடுத்துக்காதீங்க சித்தப்பா. உங்ககிட்ட வாங்கக் கூடாதுன்னு நான் சொல்லல. ஆனா என் பொண்டாட்டிக்கும் என் பிள்ளைக்கும் தேவையானதை நான் பார்க்கணும். அது என் பொறுப்பு."என்றான்.



அவன் பேச்சில் இருந்த மரியாதையையும் பொறுப்புணர்வையும், அன்பையும் ,அக்கறையையும் பார்த்தவர் அமைதியாகிவிட்டார்.

"சரி மாப்பிள்ளை."என்று கூறி அவனது தோளைத் தட்டி சென்று விட்டார்.


ஒரு வாரத்துக்கு பிறகு குழந்தையையும், ரேகாவையும் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வந்தார்கள்.வினிதா தான் ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.


குழந்தையை வீட்டிற்கு அழைத்துக்கொண்டு வரும்போது உடன் வந்தார் ரேகாவின் மாமா.

தனது தங்கை மகளின் முகத்தைப் பார்த்தபடியே சில நிமிடங்கள் நின்றிருந்தவர்,
"நல்லா இரு கண்ணு...இப்ப போல எப்பவும்..நீயும் உன் மகளும்.. இந்த குடும்பத்தோட சந்தோஷமா இருக்கணும்.."என ஆசீர்வதித்து விட்டு, மனநிறைவுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

தனது தங்கை மகளும், அவளது குழந்தையும் நலமாக இருப்பதை விட அவருக்கு வேறு மகிழ்ச்சி தேவையில்லை. அந்த நிம்மதியுடனே அவர் வீட்டிற்குத் திரும்பினார்.
 

Author: STN - 24
Article Title: நிழலை கடந்த காதல் -5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
Nice ❤️❤️❤️❤️ எங்க பா ...நம்ம ஹீரோயின் இன்னும் கண்ணில் காட்டவே இல்லையே