நெஞ்சில் நிறைந்தவள் - 21

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
அத்தியாயம் 21


குமரனும் தேவயானியும் அந்த கோவிலின் குளக்கரையில் வந்து அமர்ந்தார்கள்,

" என்ன தேவா ஏதோ பேசணும்னு சொன்னீங்க ஆனா இப்போ வரைக்கும் எதுவும் பேசல "

அவள் அவனை பார்த்தாள் இப்போது தானே பேசுவதற்கு வந்து அமர்ந்து இருக்கிறோம் என்பதை போல ஆதலால் அடுத்த நொடியே அவளின் பார்வையின் அர்த்தத்தை விளங்கியவனாய் பேசினான்,

" அது நாம பேசறதுக்கும் நேரம் கிடைக்கல இல்ல, நீங்க சாமி கும்பிடறதுல ஆர்வமா இருந்ததுனால பேசுறதுக்கான நேரம் அமையல, அதான் பேசல " ஒருவாறு சமாளித்தான்.

" பாத்திங்களா குமரன், என்கூட சாமி கும்பிட நீங்களும் தான வந்தீங்க. நீங்களும் தானே சாமி கும்பிடீங்க.
இப்ப என்ன மட்டும் குறை சொல்றீங்க பாத்தீங்களா? " அவள் அவள் பாணியில் பேச,

" அய்யய்யோ தேவா அப்படி எல்லாம் இல்லை, நீங்க வேற அப்படி நினைக்காதீங்க நா சும்மா சொன்னேன் அவ்வளவுதான்.
குறை எல்லாம் இல்லை நிறைவா சாமி கும்பிட்டு வந்தோம் அதுவும் நீங்க கும்புடுற அந்த அழகியல், அடடா ரொம்ப தனித்துவமா இருந்துச்சு " சமாளிப்போடு, ரசனை கலந்த சிரிப்பும் சேர்ந்து கொண்டது குமரனிடம்,

" என்ன சொன்னீங்க குமரன்? அழகியலா? "

" ஆமா தேவா ஏன்? எதுவும் தப்பா சொல்லிட்டேனா? "

" இல்ல இல்ல குமரன், பொதுவா எல்லாரும் அழகுன்னு தான சொல்லுவாங்க, நீங்க அழகியல்ன்னு சொன்னீங்களே அதான் கேட்டேன் "

" அழகுன்னு சொன்னா அது குறிப்பிட்ட ஒரு விஷயத்தை மட்டும் சொல்லற மாதிரி ஆகிடும். அதுவே அழகியல்ன்னு சொல்லும் போது அந்த மொத்த செயலையும் சொல்லுறதா அர்த்தம் "

" அப்படியா இதுக்கு இப்படி கூட அர்த்தம் இருக்கா குமரன்? "

" அர்த்தம் இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது தேவா, ஆனா என்னோட அகராதியில் நான் இப்படி அர்த்தம் வச்சுக்கிட்டேன் " தோள் குலுக்கி சொல்ல,

" அட புது அகராதியா இருக்கே " அவனின் விளக்கம் அவளிடம் வியப்பை ஏற்படுத்த,

" இதுவுமே புதுசா பழசான்னு தெரியல தேவா, நமக்கு தெரியாத விஷயம் இப்போ நாம இப்படி அர்த்தம் செஞ்சு தெரிஞ்சுக்குறதால இது நமக்கு புதுசு அவ்வளவு தான். ஏன்னா இங்க இல்லாதது எதுவுமே இல்லையே, எல்லாமே இருக்குறது தான, அதுல இருந்து தான் நாம ஒவ்வொன்னா எடுத்துக்கிட்டு அதன் போக்கில் அப்படியே போய்கிட்டே இருக்கோம் " தன்னிலை விளக்கம் கொடுத்தான்

" பரவாயில்லையே குமரன் உங்க வேலைய போலவே உங்க பேச்சும் ரொம்ப அழகா ம்ஹும் அழகியலா இருக்கே " அவனை போலவே அவளும் அழகாய் சிரித்து சொன்னாள்,

" ரொம்ப சந்தோஷம் தேவா, உங்களை மாதிரி எதார்த்தமா இருக்கிற ஆளுங்க கிட்ட இருந்து இப்படி எதார்த்தமா ஒரு வார்த்தை கேட்கிறது உண்மையிலேயே மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு " என்று குமரன் சொல்லியபோது அவள் அதற்கு சிறிய சிரிப்பை மட்டும் காட்டினாள் பின் சிறு இடைவெளி விட்டு,

" குமரன் நீங்க இதுக்கு முன்னாடி தனியா ஒரு நிறுவனம் வச்சிருந்தீங்க இல்லையா? " என்று தான் பேச வந்த விஷயத்திற்கு நேராக வந்தாள்

" ம்ம்ம் ஆமா தேவா, அத என்னோட சுயவிபர குறிப்புலயே சொல்லிருக்கேனே... " அவள் ஏன் கேட்கிறாள் என்பது புரியாமல் பதில் கொடுத்தான்

" ம்ம்ம் நானுமே அதை பார்த்தேன் "

" அப்புறம் ஏன் தேவா இப்போ கேக்குறீங்க? "

" அந்த நிறுவனம் நஷ்டமாகி தான் அத மூடுனீங்களா? "

" ம்ம்ம் ஆமா "

" எப்படி நஷ்டம் ஆச்சுன்னு நா தெரிஞ்சுக்கலாமா? "

" இத ஏன் கேக்கறீங்கன்னு எனக்கு தெரியல தேவா ஆனாலும் நீங்க கேட்டுட்டீங்க அதனால சொல்றேன். " என்று சொன்னவனிடம் ஒரு சிறிய திணறல் பின் சமாளித்து கொண்டு சொன்னான்,

" நம்பிக்கை துரோகம் " என்று, அவன் பேச ஆரம்பித்தவுடன் அவனது முகத்தை கவனமாக கவனிக்க ஆரம்பித்தாள் தேவயானி. குமரன் தொடர்ந்தான்,

" என் கூட இருந்த அண்ணன் ஒருத்தர் தான் அதுக்கு காரணம். அவர நா முழுசா நம்பிட்டேன், பாவம் அவருக்கு என்ன கஷ்டமோ தெரியல என்னோட நம்பிக்கைக்கு பாத்திரமா இருக்க முடியல.
அவரு தனிப்பட்ட முறையில் அவரோட தேவைகளுக்கு எல்லாம் அதுல இருந்தே காச ஒதுக்க ஆரம்பிச்சாரு அது ஒரு கட்டத்துல எனக்கு தெரியவரவும் அதை பத்தி நான் அவங்க கிட்ட கேட்டேன்.

நம்ம ஊர்ல எப்பவுமே தப்பு பண்றது தப்பு கிடையாது, ஆனா கணக்கு கேட்டா அது மகா தப்பு தானே.
நா சாதாரணமா அணுகுன விஷயத்தை அவரு பெரிய பிரச்சினையாக்க நினைச்சாரு.
ஆனா நா அத விரும்பல அவரை ஒரு உயர்ந்த இடத்தில வச்சி பார்த்த என்னால ஏனோ அவரை தாழ்த்தி பாக்க முடியல என் நிறுவனத்தில இருந்து அவரை விலகிக்க சொல்லிட்டேன், அவர் விலகின பின்ன தான் எனக்கு தெரிஞ்சது என்னோட நிறுவன பெயரை பயன்படுத்தி எனக்கே தெரியாமல் என்னோட பேருல பல லட்சம் கடன் வச்சிட்டு போயிட்டாருன்னு.

சட்டுனு வந்த பிரச்சனை அதுவும் பெரிய பிரச்சனையா, அதனால அதை என்னால சரியா கையாள முடியல என்னோட நிறுவனம் அந்த கடன்ல மூழ்க போச்சு.
எனக்கு கொஞ்சம் நீச்சல் தெரியும் அதனால அந்த நம்பிக்கையில கொஞ்சம் எதிர் நீச்சல் போட்டு பார்த்தேன், எப்படியாவது அந்த சூழல்ல சிக்கிக்காம வெளிய வர துடிச்சேன்,

அப்புறம் தான் புரிஞ்சது என் தலைக்கு மேல வெள்ளம் போயிட்டு அது தெரியாம இவ்வளவு நாளும் தண்ணிக்குள்ளயே தான் நீச்சல் அடிச்சு இருக்கேன்னு " அவனிடம் வெறுமையான சிரிப்பு.

" ஒரு கட்டத்துக்கு மேல என்னால அதை சமாளிக்க முடியலங்குற நிதர்சனம் எனக்கு புரிஞ்சது, தோள் கொடுத்து தூக்கி நிறுத்த எனக்கு அப்பாவும் கிடையாது, விடுடா பாத்துக்கலாம்ன்னு துணை நிக்க உடன் பிறப்பும் இல்ல ஆறுதல் கொடுக்குற அம்மா மட்டும் தான் இருந்தாங்க.

நான் உடைஞ்சு போறத பாத்துட்டு அவங்களால நிம்மதியா இருக்க முடியல, பிள்ளைக்கு நாம எதாவது செய்யணுமேன்னு என்கிட்ட சொல்லாமலே அவங்களோட நகை, அவங்க பேர்ல இருந்த எங்க வீடு, கொஞ்சமா இருந்த ஒரு நிலம்ன்னு எல்லாத்தையும் வித்து எடுத்து கொண்டு வந்து என் கையில காசா கொடுத்தாங்க.
நான் அவங்க மேல பயங்கரமா கோபப்பட்டேன்.
ஆனா அவங்க அதை பெருசா எடுத்துக்கல என் புள்ள கஷ்டப்படும்போது என்கிட்ட இதெல்லாம் இருந்து என்ன புண்ணியம்? இதையெல்லாம் வச்சு உன்னோட சுமையை கொஞ்சமா குறைச்சுக்கோன்னு சொன்னாங்க, நா மாட்டேன்னு பிடிவாதமா இருந்தேன்.

அப்போ அவங்க ஒரு வார்த்தை சொன்னாங்க

டேய் தம்பி நம்மள மாதிரி ஆளுங்களுக்கு இந்த மாதிரி பொருள் எல்லாம் அவசரத்துக்கு வைக்கிறதுக்கு தான் டா.
வாய்ப்பு இருந்தா வச்சி பொழைக்கணும் இல்லனா வித்து பொழைக்கனும்.
இதெல்லாம் நமக்கு சாதாரணம் தான் டா நம்மளால உருவாக்கிக்க முடியும் ஏன்னா நம்மளை மாதிரி ஆளுங்க கிட்ட எப்பவுமே உருவாக்கக்கூடிய தன்மை ரொம்ப அதிகம் அதனால நீ இதை பத்தி எல்லாம் பெருசா கவலைப்படாம உன்னோட கடன அடைக்க பாரு.

அடைச்சுட்டு கொஞ்சமாவது நிம்மதியா இரு. நீ நிம்மதியா இருந்தாலே போதும் எல்லாத்தையும் சீக்கிரம் சரி பண்ணிடலாம்,
இக்கட்டான சூழல் நம்மகிட்ட இருக்கிற வரைக்கும் நம்மளால சாதாரணமா இருக்க முடியாது.
நம்மளால சாதாரணமா இருக்க முடியலன்னா நம்மளால ஜெயிக்க முடியாது நாம ஜெயிக்கணும்னா முதல்ல நாம சாதாரணமா நம்ம இயல்போடு இருக்கணும்ன்னு அன்னைக்கு அம்மா எனக்கு மிகப்பெரிய வாழ்க்கை பாடம் எடுத்தாங்க,

அது எனக்குள்ள மிக பெரிய உத்வேகத்தை கொடுத்தது, அந்த உத்வேகம் அம்மாவை எதுவுமே இல்லாம ஆக்கி சும்மா வைக்கிறதுக்கு இடம் கொடுக்கல,

உங்க மகன் பழைய மாதிரி நல்லபடியா வந்து நிற்பேன் அதை நீங்க பார்ப்பீங்கன்னு அவங்க கிட்ட உறுதி கொடுத்துட்டு அவங்க யாருகிட்ட வித்தாங்களோ அந்த தொகையை அப்படியே அவங்க கிட்ட மறுபடியும் கொண்டு போய் கொடுத்து அம்மாவோட நகையையும், வீட்டையும் மீட்டு கொண்டு வந்துட்டேன்.
அத அம்மா கையில கொடுத்துட்டு தான் நம்ம நிறுவனத்தில வந்து வேலைக்கு சேர்ந்தேன், ஒரு நிறுவனத்தை வச்சி நடத்தி முதலாளியா இருந்த என்னை வேலைக்காரனா பாக்குறதுல அம்மாவுக்கு விருப்பம் இல்ல அவங்க வேண்டாம்ன்னு தடுத்தாங்க நா கேட்கல அதுல இருந்து அம்மாவுக்கு என் மேல கோபம் என் கூட சரியா பேச மாட்டாங்க, என்னைக்கு என் பிள்ளைய நா விரும்புன மாதிரி பாக்குறேனோ அன்னைக்கு நான் உன்கிட்ட பேசிக்கிறேன்னு சொல்லிட்டாங்க.

அவங்க பொருளை கொடுத்தும் அதை வாங்காம நான் வேலைக்கு வந்ததில் அம்மாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லை அவங்களோட விருப்பம் எல்லாமே நான் மறுபடியும் அந்த நிறுவனத்தை நடத்தணும்ங்கறது தான் ஆனா அதுல நிறைய சிக்கல்கள் இருக்கிறதுனால இப்போதைக்கு அதை தொட வேண்டாம்ங்கிற முடிவோட நான் வேலைக்கு வந்துட்டேன் " என்று குமரன் சொல்லி முடிக்கும் போது தேவயானியிடம் மிக நீண்ட அமைதி.


நெஞ்சில் நிறைவாள்.....
 

Author: Vishakini
Article Title: நெஞ்சில் நிறைந்தவள் - 21
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.