பாவை 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

STN - 94

Active member
Staff member
May 5, 2026
42
142
33
chennai

“ரிஷி, இப்போ நாம எங்கே தங்க போறாம்?”

அவளை திரும்பி அழுத்தமாக பார்த்தவன், “உன்னை வீட்ல டிராப் பண்ணிட்டு, நான் ஹோட்டல்ல ரூம் எடுத்துக்கறேன். எதுவா இருந்தாலும் எனக்கு போன் பண்ணு”

“என்ன? என்வீட்டுக்கா? நான் எப்படி அங்கே தனியா போய் தங்க முடியும்? அதுவும் இந்தமாதிரி சூழ்நிலையில?”

“நீ அங்கே தங்கறது தான் சரியா இருக்கும் நிரு. காரணமா தான் சொல்றேன்”

“முடியாது, நானும் உங்க கூடவே ஹோட்டல்ல தங்கிக்கிறேன்”

“அப்போ நான் கொடுத்த வாக்க காப்பாத்த முடியாது, பரவால்லயா?” காரை செலுத்தியபடி அவளை அழுத்தமாக பார்த்தான்.

“என்ன வாக்கு கொடுத்தீங்க?”

“உன் மனசு மாறும் வரைக்கும் காத்திருக்கேன்னு சொன்னேன். நாம ஒரே ஹோட்டல்ல வேற வேற ரூம்ல தங்கினா கூட என்னால காத்திருக்க முடியாது நிரு”

“எனக்கு புரியல”

காரை ஓரமாக நிறுத்தியவன் அவளின் கழுத்தை பற்றி தன்னருகே இழுத்து அழுத்தமாக இதழ்பதித்தான்.

“ரிஷி” அவன் உதட்டுக்குள் முனகி கொண்டே அவன் நெஞ்சில் கைவைத்து அவனை தள்ளிவிட்டாள். அப்போதும் அவள் கன்னத்திலும் நெற்றியிலும் இதழ்பதித்தே அவளை விட்டவன் “இது தான் நடக்கும் பரவால்லயா?”

அவளால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது. ‘ஒரு காலத்துல நான் வேணாம்னு சொல்ல சொல்ல என் பின்னாடி சுத்துனா, இப்போ என்னை சுத்தல்ல விடறா’ என்று மனதில் நினைத்தவன் தொண்டையை செருமி “சாரி” என்றான்.

“எனக்கு வேற ஹோட்டல்ல வேற ரூம் பாருங்க” என்றாள்

“நிரு, நான் சொல்றத புரிஞ்சுக்க டிரைபண்ணு. உன் வீட்டு சாப்பாடு சாப்பிட்டு தான் உன் அப்பாவுக்கு ஸ்லோ பாய்ஸ்ன் போயிருக்கு. நீயும் உன் அம்மாவும் அதை செய்யலனா வேற யார் செஞ்சிருப்பா? அத நீ எப்படி தெரிஞ்சுப்ப? உன் வீட்ல தங்கினா தானே அது தெரியும்?”

“ஆனா, அங்கே யாரெல்லாம் இருப்பாங்கனு தெரியாது, என்னை எதாச்சும் பேசினாங்கன்னா என்ன பண்றது ரிஷி”

“யாராச்சும் இருக்கட்டும் என்னவேணா பேசட்டும், நீ’ எதுக்கு ஓடி ஒளியணும். உன் அம்மா தான் இத செஞ்சதுனு இன்னும் நிருபணம் ஆகலயே, அதையே அவங்க கிட்ட சொல்லி தைரியமா இரு. உனக்கு தனியா இருக்க கஷ்டமா இருந்தா புவன் புவனிகாவையும் அழைச்சிட்டு போ”

“ஆனா, நான் சொத்துக்காக தான் வந்ததா அவங்க நினைச்சுப்பாங்க ரிஷி. எனக்கு அப்பாவோட சொத்து எதுவும் வேணாம். அவர் குணமானா அதுவே போதும்”

“எனக்கு உன்னை பத்தி தெரியாதா நிரு? உன் அப்பா பழைய நிலைமைக்கு வர வரைக்கும் நீ இதையெல்லாம் பேஸ் பண்ணி தான் ஆகணும். ஓடிஒளிஞ்சா உங்க மேல வந்திருக்கற பழி உண்மைனு ஆயிடாதா?”

நிருஷிகா ரிஷியை திகைப்புடன் பார்த்தாள். “ஆமா நிரு, பிரச்சனை எங்கே நடந்துச்சோ, அங்கே இருந்து தான் அதை சந்திக்கணும். நீ வேற இடத்துக்கு போறதால உன் மேல நம்பிக்கை குறையும்”

“அப்போ நான் கோவைக்கு போகாம சென்னையிலயே இருந்திருக்கணுமா?”

“ஆமா, ஆனா அன்னைக்கு தனியா உன்னால அதை ஹேண்டில் பண்ணியிருக்க முடியாது தான். யார் துரோகினு தெரியாம உன் நிலைமை மோசமாகியிருக்கலாம். நீ கோவைக்கு வந்ததால தான் நான் உன்னை பாக்க முடிஞ்சது, இதுவும் நல்லதுக்கு தான். இனி உன் வீட்ல புவன் புவனிகாவோட இரு, அவங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு உன் அப்பாவோட ஆபிஸ்க்கு போ”

“அங்கே எதுக்கு?”

“ஆபிஸ்க்கு போனா தான் உண்மையான நிலவரம் என்னனு தெரியும் நிரு. உன்னோட வரவு அங்கே யாருக்கெல்லாம் பிடிக்கலங்கறத கவனி. யாருக்கெல்லாம் உன் அப்பாவ கொல்லணுங்கிறது மோடிவ்வா இருக்கும்னு யோசி”

“அப்பாவ கொல்லணும் நினைச்சவங்க என்னையும் கொல்ல முயற்சி பண்ணா என்ன பண்றது?”

“அதுக்கும் வாய்ப்பிருக்கு. ஆபிஸ்க்கு வேணும்னா நான் உன்கூட வரேன்”

“நீங்களா? உங்கள என்னு சொல்லி நான் அழைச்சிட்டு போறது?”

“எனக்கு எதாச்சும் வேலை போட்டு கொடு”

“என்ன வேலை?” என்றவளை அழுத்தமாக பார்த்தவன், “உன்னோட பெர்சனல் பிஏ வேலைக்கு நான் பொருத்தமா இருப்பேன், என்ன சொல்றே?”

சற்று நேரம் தீவிரமாக யோசித்தாள், “ரொம்ப யோசிக்காதே, சம்பளம் எல்லாம் கேட்கமாட்டேன்” என்றான் சின்ன சிரிப்புடன்

“அப்போ சரி” என்று அவளும் இலகுவாய் புன்னகைத்தாள்.

இருவரும் புவன்புவனிகா தங்கியிருந்த விடுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் சிறுவர்கள் ஓடிவந்து நிருஷிகாவை கட்டிக் கொண்டனர். அவர்களின் அம்மாவையும் அப்பாவையும் கேட்டு நச்சரித்தவர்கள், அவளருகில் பச்சை நிற விழிகளுடன் பார்த்துக் கொண்டிருந்த அன்னியனை பார்த்ததும் அமைதியாகி விட்டனர். புவனிகா அவளின் ஆடையை இழுத்து முகத்தை மூடிக் கொள்ள “அக்கா யார் இந்த அங்கிள்?” கேட்டான் புவன்

“நான் உங்க மாமா, நீங்க எனக்கு மச்சான்” என்றபடி அவனை தூக்கி கொண்டான் ரிஷி.

நிருஷிகா அவனை முறைப்பதை கண்டு கொள்ளாமல், “மச்சான் வயசு சின்னதா இருக்கறதால நமக்கு பொண்ணு பொறந்தா வெளிய மாப்பிள்ள தேடாம இவனுக்கே கட்டி வச்சிடலாம் இல்ல நிரு” என்றான்.

“அக்கா நீங்க இந்த மாமாவ லவ் பண்றீங்களா?” என்று புவன் பளிச்சென்று கேட்க, நிருஷிகாவால் முறைக்க மட்டுமே முடிந்தது.

“மச்சான் ரொம்ப ஷார்ப் போல” என்று தொண்டையை செருமிக் கொண்டு முன்னாள் நடக்க, புவனிகா நிருஷிகாவின் கையை பிடித்துக் கொண்டு நடந்தாள்.

அவர்கள் மூவரையும் வீட்டு வாசலில் டிராப் செய்து விட்டு, அவளின் போனிலிருந்து அவனுக்கு போன் செய்து பின் காலை கட் செய்து அவளிடம் நீட்டினான்.

“நிரு, நான் இங்கே மூணு கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற ஹோட்டல்ல தான் தங்கியிருக்கேன். எதாச்சும் பிரச்சனைனா நடுராத்திரியா இருந்தாலும் தயங்காம நீ எனக்கு போன் பண்ணு, நான் யாருக்கும் தெரியாம வீட்டை சுத்தி தான் நடந்துட்டு இருப்பேன். உடனே வந்து நிப்பேன். பயப்படாம இரு, ஓகேவா”

பயத்துடனே தலையாட்டினாள். அவளின் நெற்றியில் இதழ்பதித்து, “என்னை தேடி ஆபிஸ்ல வந்து அழிசாட்டியம் பண்ண நிருவா நீ இப்போ மாறணும். எதுக்கும் யாருக்கும் பயப்படாதே, நான் இருக்கேன்” என்று அவளின் கன்னத்தை தட்டி மூவருக்கும் விடை கொடுத்தான்.

நிருஷிகா தன் தம்பி தங்கையை அழைத்துக் கொண்டு உரிமையுடன் சென்று வந்த வீட்டிற்குள் ஒரு அகதியை போல தயங்கி கொண்டே நுழைந்தாள். அவர்களை கண்டதும் டிரைவர் ஓடி வந்தார்.

“சின்னம்மா எங்கே போயிட்டீங்கம்மா? உங்கள எங்கெல்லாம் தேடறது? திடீர்னு ஐயா கண்ணுமுழிச்சு உங்கள கேட்டா நான் என்ன சொல்றதுனு ஊரெல்லாம் தேடினேன், போன் நம்பரும் வேலை செய்யல. இவ்வளவு நாளா எங்கேம்மா இருந்தீங்க?”

அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “டிரைவர் அண்ணா, வீட்ல யார் இருக்காங்க”

“ஐயாவோட அக்கா மாலினி அம்மா அப்பப்போ வந்து பாத்துட்டு போறாங்கம்மா. சம்பளம் கூட அவங்க தான் கொடுக்கறாங்க. வேலைக்காரங்கள தவிர யாருமில்ல. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க”

“சரி” என்றவள் உள்ளே சென்றாள். மூவரையும் கண்டு திடுக்கிட்ட வேலைக்காரப்பெண் சில விநாடிகளில் சுதாரித்து “வாங்கம்மா, ஜூஸ் கொண்டு வரட்டுமா?” என்று உபசரித்தாள்.

டிரைவர் ஒருகணம் கூட யோசிக்காமல் அவளை கண்டதும் ஓடிவந்தார், ஆனால் இந்த வேலைக்கார பெண்ணின் முகம் ஏன் திடுக்கிட்டு உடனே மாறியது? யோசனையோடு அவளை பார்த்துக் கொண்டே, “வழக்கமா கொடுக்கற ஜூஸ் எடுத்துட்டு வா” என்றாள் அதிகார தோரணையில்

சமையலறையை நோக்கி சென்ற அந்த பெண்ணின் முகம் கடுகடுத்ததை குறித்து கொண்டாள். ‘ஸ்லோ பாய்ஸன் உன் வீட்ல இருந்து தான் போயிருக்கு, நீயும் அம்மாவும் கொடுக்கலனா வேற யார் கொடுத்திருப்பா?’ என்ற ரிஷியின் கேள்வி ரீங்காரமாய் ஒலித்தது

அந்த பெண் கொண்டு வந்து கொடுத்த பழரசத்தை பருகியபடி அவளையே அழுத்தமாக பார்த்திருந்தாள் நிருஷிகா. அவளால் நிருஷியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவிப்பது புரிந்தது.

“சின்னம்மா நீங்க வருவீங்கனு தெரியாது, அதனால சமைக்கல. சாப்பிட்டு போறீங்களா? சமைக்கட்டுமா?” என்றாள்

“இங்கே தான் இருக்க போறேன், பொறுமையா சமைச்சுட்டு கூப்பிடு” என்றவள் தம்பி தங்கையை அழைத்துக் கொண்டு ராஜ் மற்றும் மைதிலியின் தனிப்பட்ட அறைக்குள் சென்றாள்.

ராஜ் மைதிலி ஜோடியாக இருந்த பெரிய சைஸ் பாேட்டோவில் இருவரையும் பார்த்தாள். பின்பு அவரின் அலமாரியை எடுத்து பார்த்தாள். ராஜ் சிறு வயது போட்டோவில் அவருடைய அப்பா அம்மா தாத்தா மூவரும் இருந்தனர். இன்னொரு குடும்ப புகைப்படத்தில் ஒரு தம்பதியும் அவர்களின் பெண்ணும் இருந்தனர். இது யாரு எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கே? யோசித்தவளின் முன்னால் நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள் மாலினி நின்றிருந்தார்.

“இந்த போட்டோல இருக்கறது நான் தான்” என்றபடி அவளருகே அமர்ந்தார்.

“ஆன்ட்டி நீங்க எப்போ வந்தீங்க? நான் வந்ததை அதுக்குள்ள யார் உங்களுக்கு சொன்னாங்க?”

“யாரும் சொல்லல, இந்தபக்கமா போகும் போது சும்மா வந்து விசாரிச்சுட்டு போவேன். அந்த பழக்கத்துல வந்தேன், நீயிருக்கவே ரூமுக்குள்ள வந்தேன். ஆமா இவ்வளவு நாளா நீ எங்கே போயிட்ட? நாங்க உன்னை தேடிட்டு இருந்தோம்”

“அப்படியா? எதுக்கு ஆன்ட்டி?”

“என் தம்பி ஆசைப்பட்ட மாதிரி உனக்கும் அஸ்வினுக்கும் கல்யாணம் நடக்க வேணாமா?”

“இன்னுமா எங்க கல்யாணத்த நடத்தணும்னு நினைக்கறீங்க?”

“என்னம்மா இப்படி சொல்லிட்ட? என் தம்பியோட கடைசி ஆசை, அதை நிறைவேத்தறது என்னோட கடமையில்லயா?”

“ஆனா என் அம்மா குற்றவாளியா ஜெயில்ல இருக்காங்களே?”

“உன் அம்மா தான் உனக்கும் விஷம் கொடுத்ததுக்கும் சம்மந்தமில்லனு சொல்லிட்டாங்களே?”

“என் அம்மாவுக்கும் கூட அதுல சம்மந்தமில்ல ஆன்ட்டி”

“அப்படியிருக்கனும்னு தான்மா நானும் ஆசப்படறேன். எல்லாம் நல்லதாவே நடக்கும்” பணிப்பெண் சாப்பாடு தயார் என்று சொல்லவும், அனைவரும் சாப்பாட்டு மேஜைக்கு சென்றனர்.

சாப்பாட்டு மேஜையருகே சென்றதும் அவளுக்காக காத்திருக்கும் ராஜ்ஜும் மைதிலியும் நினைவிற்கு வந்தனர். கண்ணெதிரே இருந்த சொர்க்கத்தை மதிக்காமல் இருந்துவிட்டாளே. “நிருஷிகா கவலப்படாதம்மா, சாப்பிடு. அஸ்வினை வரச்சொல்றேன், ரெண்டு பேருமா போய் கல்யாணத்துக்கு டிரஸ் எடுத்துட்டு வந்துடுங்க”

“என் அப்பாவுக்கு குணமாகாம நான் கல்யாணம் பண்ணிக்க போறதா இல்ல ஆன்ட்டி” என்று உறுதியாக சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தவளுக்கு ஏதோ தோன்ற வேலைக்கார பெண்ணிடம், “எப்பவும் நீ தானே வீட்ல சமைப்பே?” என்று கேட்க, அந்த பெண்ணின் முகம் வெளிறிவிட்டது, அவள் மாலினியை பதட்டத்துடன் பார்க்க, “என்ன திருதிருனு முழிச்சிட்டு இருக்கே, கேக்கற கேள்விக்கு பதில் சொல்ல முடியாதா? வாயில என்ன கொழுக்கட்டையா இருக்கு?” சீறினார் மாலினி

“சின்னம்மா, நான் ஐயா ஊர்ல இல்லாதப்போ தான் சமைப்பேன். ஐயாவுக்கு அம்மாவோட சமையல் தான் பிடிக்கும். அவருக்கு சமைக்கும் போது என்னை கிட்ட கூட விடமாட்டாங்க. திடீர்னு நீங்க கேட்டதும் சமைக்கறதில்லனு சொன்னா வேலைய விட்டு அனுப்பிடுவீங்களோனு பயந்துட்டேன்” என்றாள்

நிருஷிகா வேறு கேள்வி எதுவும் கேட்காமல் சாப்பிட்டு விட்டு புவன்புவனிகாவுடன் படுக்க சென்று விட்டாள். அவர்கள் உறங்கியபின்பு ரிஷிக்கு அழைத்து நடந்ததை சொன்னாள்.

“நாளைக்கு ஆபிஸ்க்கு போகலாம், அங்கே என்ன நடக்குதுனு பார்த்துட்டு அடுத்து என்ன பண்றதுனு யோசிக்கலாம்”

(தொடரும்)
 
Last edited:

Author: STN - 94
Article Title: பாவை 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.