• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 16

நிதனிபிரபு

Administrator
Staff member
புனர்ஜென்மம் 16

மறுநாள் காலை அழகாகவே புலர்ந்தது.

பதற்றம் அவளுக்கு மட்டுமே இருந்தது, திருமணத்தை நிறுத்தி விடுவானோ என்று. அவன் எப்போது எதை செய்வான் என்று யாராலும் யூகிக்க முடியாது. கோபம் வந்தால் எதை வேண்டுமானாலும் செய்வான்.

‘தன் மேல் கோபம் இருக்க நியாயம் இல்லை. ஆனால் இத்தனை நாள் இதை ஏன் சொல்லவில்லை என்று கேட்டால், என்ன பதில் சொல்வது??’.

அதே பதற்றத்துடன் கிளம்பிக் கொண்டிருக்க, அவளுடைய தாய் அவள் முகச் சோர்வைப் பார்த்து, “சிரிச்சு தொலையேண்டி கல்யாணத்தப்ப, இப்படி உம்முன்னு இருந்தா நல்லா இருக்குமா?? மாப்பிள்ளை வீட்ல உனக்கு கல்யாணம் புடிக்கலைன்னு நினைச்சிட போறாங்க?” என்றார் கல்பனா.

‘தனக்கா திருமணம் பிடிக்கவில்லை’?.

தாயிடம் மறைப்பது எவ்வளவு பெரிய தவறு? தனக்காக பரிதவிக்கிறார். ஆனால் சொன்னாலும் அது தவறாகப் போய்விடும். பிற்காலத்தில் சொல்ல வேண்டும் என்று முடிவை எடுத்துக் கொண்டாள்.

எல்லாம் அவசர கதியில் தான் நடந்தது. அவன் அருகில் அமர வைக்கும் வரை அவளுக்கு பதற்றம் குறைந்தபாடில்லை. அவள் அமர்ந்ததும் அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்தான் ராஜ்.

ஆனால் அவளுக்கு அந்த தைரியம் வந்திருக்கவில்லை.

கோபத்தில் தான் மேடையில் அமர்ந்திருந்தான் ராஜ். ஆனால் கோபம் அவள் மீது அல்ல. தன் முன்னால் சட்டமாக, அதுவும் முதல் வரிசையில் அமர்ந்திருக்கும் தன்னை பெற்றவரின் மீது.

எவ்வளவு திமிரு இருக்க வேண்டும்? என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தமக்கையும் அவள் கணவனும் மட்டுமே ஓடி ஆடி வேலை செய்து கொண்டிருக்க, தாய் பரிதவிப்பாக மேடையையும் அவர் கணவனையும் பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது.

அவன் வெகு சிரமப்பட்டு தன் கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தான். முதல் நாள் கூட பின்னால் இருந்திருக்கிறார், அதனால் அவன் பார்க்கவே இல்லை. அதைவிட முக்கியமாக அவன் வேறு குழப்பத்தில் இருந்தான். ஓரளவிற்கு அதை முதல் நாள் இரவு தெளிவு படுத்திக் கொண்டான். இப்பொழுது முதல் வரிசையில் அவனைப் பார்த்தபடி அமர்ந்திருப்பது அவனுக்கு அவ்வளவு ரௌத்திரத்தை ஏற்படுத்தியது.

ஐயர் சொன்ன மந்திரங்களை ஓதிக்கொண்டே, அந்தப் பெண், அதுதான் அவருடைய மனைவி, தன் தாயின் வாழ்க்கையை கெடுத்தவர். எங்காவது அமர்ந்திருக்கிறாரா என்று சுற்றும் முற்றும் பார்த்தான்.

நல்ல வேளையாக அவன் கண்களுக்கு அந்தப் பெண்மணி அகப்படவில்லை. பட்டிருந்தால் மேடையில் இருந்து எழுந்தே இருந்திருப்பான்.

எங்கே அவன் அதைச் செய்து விடுவானோ என்று தவிப்பாக அமர்ந்து பார்வையால் இறைஞ்சிக் கொண்டிருந்த தன் தாயைப் பார்த்தான்.

முதுகெலும்பில்லாத இதுபோல பெண்கள் இருக்கும் வரை, இதுபோல ஆண்கள் தவறு செய்வார்களோ என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு. ஆனால் சரியாக அவன் அருகில் ஸ்ரீ வந்து அமர, அவன் சிந்தனை கலைந்தது.

இவளும் இதுபோல தானே?? ஒருவேளை தானே தவறு செய்தால் தன் சட்டையைப் பிடித்துக் கேட்க வேண்டும். அப்படிக் கேட்காமல் தன் தாயைப் போல ஒதுங்கிச் செல்லக்கூடாது. அவன் சிந்தனை சென்ற நொடி, அவள் புறமாக திரும்பினான். மந்திரங்கள் சொல்லிக் கொண்டிருந்த ஐயரின் முன்பு கை உயர்த்தினான்.

அவர் என்ன ஏது என்று தெரியாமல் திகைத்து விழித்தார்.

“உன்னை பத்தி எனக்கு முழுசா தெரியாது.. அப்ப இருந்த மாதிரி தான் நீ இப்பயும் இருக்க, பதட்டம், பயம், படபடப்புன்னு. ஆனா தவறுன்னு தெரிஞ்சா தட்டிக் கேட்கணும். கோழையா இருந்தா எனக்கு பிடிக்காது. அந்த தப்பை நானே பண்ணி இருந்தாலும் சரி, கேட்பியா??” என்று கேட்டான்.

அவளுக்கு தலையும் புரியவில்லை, வாலும் புரியவில்லை. அவள் அருகிலேயே தம்பியைக் கட்டுப்படுத்துவதற்காக நின்று கொண்டிருந்த அவனுடைய தமக்கை குனிந்து அவன் தோள்களைப் பற்றினாள் தனா.

“என்னடா இது எல்லாரும் உன்னையே பார்க்கிறாங்கடா?” என்றாள் பதற்றமாக.

“அக்கா, எங்க ரெண்டு பேருக்குள்ள நடுவில் வராதன்னு நான் நேத்தே உனக்கு சொன்னேன்?” என்று தமக்கையைப் பார்த்துக் கூறியவன், மீண்டும் அவள் புறம் திரும்பினான்.

அவளுக்கு எதுவும் விளங்கவில்லை, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று புரியவில்லை?? என்ன கேட்கிறான்? தான் என்ன செய்ய வேண்டும்?? இவன் ஏன் தவறு செய்யப் போகிறான்?? எதற்காகப் பேசுகிறான்? என்று எதுவும் விளங்காமல் போக, திருதிரு என்று விழித்துக் கொண்டிருந்தாள் ஸ்ரீ.

அவள் விழிப்பதே அவனுக்கு அதை புரிய வைத்திருந்தது.

“ஒருவேளை நான் ஏதாவது தவறு செய்யறேன்னு தெரிஞ்சு, அது எந்த தவறா வேணாலும் இருக்கலாம், அப்ப என் சட்டையை பிடிச்சு, ஏன் செஞ்சன்னு கேள்வி கேட்கணும். இந்த தவறு செய்யக்கூடாதுன்னு என்னைக் கண்டிக்கணும். தண்டிக்கிற அளவுக்கு தப்பா இருந்தா தண்டிக்கவும் தயங்கக் கூடாது. சொல்லு, செய்வியா?? எனக்கு முதுகெலும்பில்லாத மனைவி தேவை இல்லை” என்று அழுத்தமாகக் கேட்டான்.

அவள் தலை தானாக ‘செய்வேன்’ என்று ஆடியது. ‘இல்லை’ என்று சொன்னால், திருமணத்தை நிறுத்தி விடுவானோ என்ற பயத்தில்.

இவன் என்ன இப்படிச் செய்து கொண்டிருக்கிறான் என்று எல்லோருமே அதிர்ந்து பார்த்துக் கொண்டிருக்க, கல்பனாவும் ‘என்ன இது?’ என்ற ரீதியில் திகைத்து விழித்துக் கொண்டிருந்தார்.

சுந்தரத்திற்கு ஏதோ புரிவது போல இருந்தது. ஆனால் அவனுடைய தகப்பனுக்கு எல்லாம் தெளிவாகப் புரிந்தது.

அமைதியாக எழுந்தார்.. அவரை நோக்கி அஷ்டலட்சுமி வந்து, “பாத பூஜை” என்று இழுக்க, “நான் இங்க இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா உன் பையன் கல்யாணமே பண்ணிக்க மாட்டான். கண்டிப்பா என்னை பாத பூஜை வாங்க விடமாட்டான். அப்பா ஸ்தானத்துல நின்னு, எல்லாத்தையும் பண்ற நம்ம மருமகனுக்கே அது கிடைக்கட்டும்” என்று கூறிவிட்டு அவர் அமைதியாக வெளிநடப்பு செய்து விட்டார்.

அவள் தலையாட்டிய நொடி, கர்வமாகத் திரும்பி தனக்கு உயிர் கொடுத்தவனைப் பார்த்தான் ராஜ். அவர் தன் தாயிடம் எதையோ பேசி விட்டுச் செல்வது, அவனுக்கு மென்னகையை உதட்டில் உதிர வைத்திருந்தது.

ஆனால் சுந்தரத்திற்கு அது கர்வமாகத்தான் இருந்தது. தன் மகளின் காதல் ஒரு நல்ல ஆண்மகனிடம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை உணர்ந்தார்.

அதனால்தானே அவர் முயன்று திருமணத்தை முடித்து வைத்திருக்கிறார், இல்லை என்றால் இப்படிப்பட்ட ஒரு மருமகனை அவர் இழந்திருப்பார் அல்லவா??

அவனே தவறு செய்தாலும் தன்னைத் தண்டிக்க வேண்டும் என்று மணமேடையில் கேட்கிறான், யார் இப்படி கேட்பார்கள்?? அந்த தைரியம் தனக்குக் கூட வராது என்றுதான் தோன்றியது.

ஆனால் கண்டிப்பாக தன் மகளை இவன் கை மீது வைத்துத் தாங்குவான், முக்கியமாக துரோகம் செய்ய மாட்டான். அது மட்டும் உறுதி. கோபம் உள்ள இடத்தில் தானே குணம் இருக்கும்?? தன் மகளை இவன் நன்றாகப் பார்த்துக் கொள்வான். முக்கியமாக தன் மகளுக்குத் துரோகம் செய்ய மாட்டான், அதை விட பெரிய விஷயம் என்ன இருக்கிறது?? ஒரு தகப்பனாகப் பூரித்துப் போனார்.

உதட்டை மெச்சுதலாகச் சுளித்தார் சுந்தரம். அவர் சுளித்த உதட்டைப் பார்த்துவிட்டு, “என்னங்க இது??” என்று வந்து நின்றார் கல்பனா.

“அமைதியா இரு, எல்லாம் சரியா தான் நடக்குது. நான் பாத்துக்குறேன்” என்றார் சுந்தரம்.

அதன் பிறகு அவனும் கை ஜாடை காட்ட, ஐயர் மீண்டும் மந்திரங்களை ஓத ஆரம்பித்தார். கெட்டிமேளம் சத்தம் கேட்க, மூன்று முடிச்சு அவள் கழுத்தில் இட்டிருந்தான். அவள் கண்களை மூடி அதை அனுபவித்தாள்.

அவன் சொன்னது இன்னும் அவளுக்கு சரியாக விளங்கவில்லை. ஆனால் அவன் தாலியைக் கட்டி விட்டான், இனி அவள் அவனுடைய மனைவி. அதை அவன் ஏற்கிறானோ இல்லையோ, அவனுடைய மனைவியாக அவன் அருகில் இருப்பதே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

“கண்ணைத் திற” அவள் காதில் அவன் குரல் கேட்க, அவள் அமைதியாகக் கண்களைத் திறந்தாள்.

“என்னை பாரு” என்று அழுத்தமான குரலில் கூற, திரும்பி அவனைப் பார்த்தாள் ஸ்ரீ லீலா.

“நான் தாலியைக் கட்டும் போது உன்னை பார்க்கிறேன், நீ கண்ணை மூடுற. என்னத்தைச் சொல்றது?? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தலையாட்டின, நீ அதை செய்வியான்னு எனக்கு தெரியல?? ஆனால் நான் தப்பு செய்யக் கூடாது, செய்யவும் மாட்டேன்” என்று கூறிக்கொண்டே திலகத்தை எடுத்து அவள் நெற்றியில் இட்டிருந்தான்.

யாரும் பார்த்திராத திருமணம், யாரும் கேள்விப்பட்டிராத திருமணம். அங்கு இருப்பவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் குங்குமத்தை இடும்போது அவனை இமைக்க மறந்துதான் பார்த்துக் கொண்டிருந்தாள் பாவையவள்.

“இந்த நிமிஷம் வரைக்கும் நான் உன்னை காதலிக்கல. என் அம்மாவோட வற்புறுத்தலுக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா இந்த ஜென்மத்துக்கு நீ மட்டும் தான் என்னோட மனைவி. அது தொடர்வதும் தொடர்கதையாகுறதும் உன்கிட்ட தான் இருக்கு. நான் மாற மாட்டேன், என்னோட இந்த வாக்கு மாறாது. இந்த ஜென்மத்துக்கு மனைவின்னு ஒருத்தினா, அது நீ மட்டும் தான். அதை கண்டினியூ பண்றதா வேணாமான்றது உன் கைல மட்டும் தான் இருக்கு” என்று கூறினான்.

ஐயரே அவன் பேச்சில் எச்சிலை உள்கூட்டி விழுங்கினார். அவன் தோளில் அழுத்தம் கொடுத்தாள் தனா.

ஆனால் ஸ்ரீயின் கண்களில் பயமில்லை, தெளிவிருந்தது, திடமிருந்தது. ‘நான் உனக்கு ஏற்றார் போல நடந்து கொள்வேன்’ என்ற மொழி இருந்தது. ஆனால் அது அவனுக்கும் புரிந்ததோ???? இன்று எத்தனை கணவன்மார்கள் மனைவியின் முடிவு புரிந்து கொள்கிறார்கள்??

அவன் புருவம் இடுங்கப் பார்த்தான். பிறகு, சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் தடைகள் இல்லாமல் நடைபெற்றது.

உண்மையில் அவன் தந்தை இருந்திருந்தால் கூட அவனை மேடை ஏற்றி இருக்க மாட்டான். தாயை மட்டுமே அழைத்து மேலே ஏற்றி அவர் கால்களில் பணிந்தான்.

“இப்படியெல்லாம் பண்ணக்கூடாது. தம்பதி சம்மோதினராய் சேர்ந்து தான் பண்ணனும்” என்று ஐயர் மெல்ல கூறினார்.

அவருக்கும் பயம்தான், அவன் இதுவரை நடந்து கொண்டதை அவர்தான் கண்கூடாகப் பார்த்தாரே??

“என்னை கஷ்டப்பட்டு வளத்தது எங்க அம்மா தான். அவங்களுக்கான அந்த ஸ்தானத்தை நான் கொடுக்கணும்னு நினைக்கிறேன். என்ன பண்ணும் உங்க சாஸ்திரமும் சம்பிரதாயமும்?” என்று கேட்டான். அதற்கு மேல் அவர் வாயைத் திறப்பாரா என்ன?

ஆனால் அஷ்டலட்சுமி தனியாக மிகவும் தயங்கினார். கணவர் கூறியது வேறு அவர் முன்னால் நிழலாட, மகன் பிடிவாதமாக அவரை மட்டும் நிற்க வைத்து அவருக்கு பாத பூஜை செய்தான்.

ஆனால் பெண் வீட்டை சமாதானப்படுத்த முடியுமா?? சுந்தரம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கல்பனாவிற்கு என்னவோ போல இருந்தது.

“தம்பி, அதுதான் ஐயர் சொல்றாரு, உங்க அம்மாவுக்கு பாத பூஜை பண்ணிட்டீங்க, அது சந்தோஷம்தான். வேற யாராவது ஜோடியா இருக்கிறவங்களையும் சேர்த்து பண்ணிடுங்க” என்று தயக்கத்தோடு கேட்டார்.

அவன் திரும்பி தன் மாமனாரைப் பார்த்தான். அவர் முகத்தில் புன்னகைதான், அவருக்கு குழப்பம் இல்லை என்பது அவர் பார்வையிலேயே தெரிந்தது. ஆனால் சுற்றியும் இருந்த மக்களைப் பார்க்க, அவர்கள் எல்லாம் குழப்பத்தோடு நின்று இருப்பது தெரிந்தது.

“நான் எப்பயும் யாருக்காகவும் எதையும் பண்றது இல்ல. எனக்கு பிடிச்சதை மட்டும் தான் பண்ணுவேன். எனக்கு சரின்னு தோணறதைத்தான் செய்வேன். ஆனா கண்டிப்பா தப்பு செய்ய மாட்டேன், உங்க பொண்ணுக்கு துரோகமும் செய்ய மாட்டேன். ஆனா நீங்க என் மனைவியோட அம்மா, நீங்க ஏதோ தயக்கத்தில தான் இப்படி கேக்குறீங்கன்னு தோணுது. உங்களோட மனச கஷ்டப்படுத்த நான் விருப்பப்படல. உங்களோட நம்பிக்கையையும் நான் உடைக்க விரும்பல” என்று கல்பனாவைப் பார்த்துக் கூறியவன், “அக்கா, மாமாவை கூட்டிகிட்டு மேடைக்கு வாங்க” என்றான் அழுத்தமாக.

அவளும் தன் கணவனோடு வேகமாக வர, பிறகு அவர்கள் இருவர் காலிலும் பாத பூஜை செய்தான்.

இப்பொழுது கல்பனாவின் முகம் சற்று தெளிவடைந்திருந்தது. அதன் பிறகு மணமகள் தன் பெற்றோருக்கு பாத பூஜை செய்தாள்.

‘தன் தாய் கேட்டதற்காக அவன் இறங்கி வருகிறானா??? பெரிய விஷயம் தான்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டார்.

ஆனால் மனதிற்குள் சந்தோஷமாகத்தான் இருந்தது. அவன் தாயையும் விட்டுக் கொடுக்கவில்லை, தன் தாய் கேட்டதற்காக அவர் மனதையும் வருந்த விடவில்லை.

இதுதான் அவளுடைய கணவன். அவனிடம் கோபம் இருந்தாலும், குணம் அதைவிட அதிகமாக இருந்தது. அதனால் தான் அவனை அவளுக்கு பிடித்துத் தொலைத்தது. இத்தனை வருடங்களும் அவனைத் தவிர வேறு யாரையும் மனம் ஏற்க மறுத்தது.

அவள் பாத பூஜை செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தவனின் முகம் அவள் முகத்தில் படிய, அவள் மென்னகையோடு இருப்பதை அவதானித்தான்.

அதன் பிறகு நடந்த சம்பிரதாயங்கள் எல்லாம் தோய்வின்றி சிறப்பாகவே நடந்து முடிந்தது. ஒரு வகையில் அஷ்டலட்சுமிக்கு தன்னை விட்டுக் கொடுக்காத மகனின் மீது கர்வமாகவும் இருந்தது.


 
Top Bottom