புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 17

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
புனர்ஜென்மம் 17

நாட்கள் அதன் போக்கில் உருண்டோடின. அவர்கள் ஊருக்கு வந்து நாட்களும் கடந்திருந்தன.

அர்ஜுனும் ஆராதனாவும் கூடத் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டிருந்தார்கள். அவ்வப்போது ஆராதனா, ராகேஷிடம் புலம்பிக்கொண்டு தான் இருந்தாள். அங்கு என்ன நடந்தது என்று தெரியாத நிலையில், நிரோஷாவின் நிலையைப் பற்றியும் புலம்பினாள்.

ராகேஷ்தான் அர்ஜுனின் மனநிலையை கூறி, அவளைத் தேற்றிக்கொண்டு இருந்தான். ஒரு வாரம் சென்ற நிலையில், அன்று மாலை அர்ஜுன் ஆராதனாவின் வீட்டிற்கு வந்திருந்தான். அதுவும் சரியாகத் தானியா பள்ளியிலிருந்து வரும் நேரத்திற்கு அவனும் அவளோடு சேர்ந்து உள்ளே நுழைந்தான்.

அவன் முகம் சற்று தெளிவாகத்தான் இருந்தது. மழலையோடு சேர்ந்து அவனும் கதைக்க ஆரம்பித்துவிட்டான். இருவரும் தங்கள் உலகத்திற்குள் மூழ்கினர். அவள் பள்ளியில் நடந்த விஷயங்களை மழலை மாறாமல் பேச, அவனும் அதைக் கேட்டு ரசித்து அவளுடன் விளையாட ஆரம்பித்துவிட்டான்.

“தானி குட்டி, உனக்கு நிறைய ஹோம் ஒர்க் இருக்குமில்ல? அதைப்போய் பாரு,” என்றாள் ஆராதனா.

“அம்மா, நான் நைட்டுக்கு எழுதுறேன். மாமு வந்திருக்காங்கல்ல?” என்று சிறியவள் ராகம் இழுத்தாள். அர்ஜுனும் அதற்கு ஒத்து ஊதினான்.

இது வேலைக்காகாது என்று நினைத்தவள், “அர்ஜுன், அன்னைக்கு என்ன ஆச்சு? அந்தப் பொண்ணு முகமே வாடி இருந்துச்சு. நீ முன்ன மாதிரி இல்ல, யார் மேலையோ இருக்குற கோபத்தை மத்தவங்க மேல காட்டக்கூடாது. அந்தப் பொண்ணு உண்மையிலேயே நல்ல பொண்ணு தெரியுமா?” என்று ஆராதனா கேட்டு வைக்க, தன் தமக்கையை முறைத்துப் பார்த்தான்.

அவள் இதை எத்தனையாவது முறை கேட்கிறாள் என்று அவளுக்கு தெரியுமே? ஆனாலும் கேட்டுக்கொண்டிருந்தாள்.

“சோ, நீங்க இதைத் தெரிஞ்சுக்காம விட மாட்டீங்க, அப்படித்தானே?” என்று அர்ஜுன் கேட்டதற்கு அவள் மௌனமாக இருந்தாள்.

“அன்னைக்கு மொட்டை மாடியில நான் கோபமா எல்லாம் பேசல. ரொம்ப ரொம்ப நிதானமா அந்தப் பொண்ணுக்கு நிதர்சனத்தைப் புரிய வச்சேன். இனிமே அவள் வாழ்க்கையை அவள் வாழ்ந்துப்பாள். நானும் என் வாழ்க்கையை வாழப்போறேன், எல்லாத்தையும் மறந்துட்டு,” என்றான்.

“அப்போ நீ என்ன பேசினேன்னு சொல்ல மாட்ட, அப்படித்தானே?” என்று ஆராதனா கேட்க,

“சொல்லவே மாட்டேன் அக்கா. சொன்னா, இப்படி ஏன் பேசல, அப்படி ஏன் பேசலன்னு எனக்கு நீ அட்வைஸ்தான் பண்ணுவ. எனக்கு அதைக் கேக்குறதுக்கு இப்போ பொறுமை இல்லை. நானும் தவறாக எதுவும் பண்ணல. எனக்கே தோணுச்சு, நான் ரொம்ப கோபமா தேவையில்லாமல் நடந்துக்கிறேன்னு. அதனால நிதானமாதான் பேசினேன். கூட அவளோட தங்கச்சியும் இருந்தாள். தேவையில்லாம அந்தப் பொண்ணுகிட்டயும் கோபப்படக்கூடாதுன்னு, ரொம்ப ரொம்பத் தெளிவா பேசினேன். எப்படியும் நான் இனிமே மாமா ஊருக்கு வரப்போறது கிடையாது. என்னோட கரியரைப் பார்க்கப்போறேன். அதனால நாம சந்திக்கப்போறது இதுதான் கடைசி. தேவையில்லாம உன் மனசுல கற்பனைகளை வளர்த்துக்காதன்னு சொல்லிட்டேன். அவளும் புரிஞ்சுகிட்டாள், அவ்வளவுதான். நீங்க வருத்தப்படும்படியா நான் எதுவும் பேசி வைக்கல. அண்ட் ப்ளீஸ், இனிமே இந்தப் பேச்சு வேண்டாமே?” என்றான்.

அப்போது சரியாக ராகேஷும் வந்துவிட, தன் மனைவியைக் கூர்ந்து பார்த்தான். அவள் இருவருக்கும் முகத்தைக் கோணலாகக் காட்டிவிட்டுச் சமையலறைக்குள் புகுந்துகொண்டாள்.

தன் மைத்துனனை ஒரு வாரம் கழித்துப் பார்ப்பதனால், சாதாரணப் பேச்சுக்களுக்குப் பிறகு, “அப்புறம் அர்ஜுன், என்ன பண்ணப்போறதா உத்தேசம்? ஐ மீன் ஹையர் ஸ்டடிஸா, இல்ல கரியரா? நீ முதல்ல மேல்படிப்பு படிக்கப்போறதா சொன்ன?” என்று ராகேஷ் கேட்டான்.

“இல்ல மாமா, முதல்ல நாங்க...” என்று சொல்ல வந்தவன் தயங்கி நிறுத்தினான். அதுவே அவன் யாரைக் குறிப்பிடுகிறான் என்று ராகேஷிற்குப் புரிய வைத்தது.

“சரி, வேலை தேடுறதுக்கு அப்ளிகேஷன் போட்டுட்டியா?” என்று உடனே பேச்சை மாற்றினான் ராகேஷ்.

“நிறைய கம்பெனிக்குத் போட்டிருக்கேன் மாமா. ஆனா அப்படியே ஹையர் ஸ்டடிஸைக் கரஸ்ல பண்ற ஐடியாவும் இருக்கு. ஆனா நான் அப்ளை பண்ண எல்லா இடத்திலேயும் எக்ஸ்பீரியன்ஸ் கேக்குறாங்க. வேலை கிடைக்கிற வரைக்கும், அப்பாகூடவே நம்ம கம்பெனிக்குப் போகலாம்னு இருக்கேன்,” என்றான்.

“நல்ல ஐடியா, எக்ஸ்பீரியன்ஸும் கிடைச்சிடும். உன்னோட ஹையர் ஸ்டடிஸையும் உன்னால கான்சன்ட்ரேட் பண்ண முடியும். அதே சமயத்துல, நீ எதிர்பார்க்கிற மாதிரி ஒரு வேலையையும் உன்னால தேடிக்க முடியும். எல்லாத்தையும் விட முக்கியமா நாலேஜ் கெயின் பண்ண முடியும். நாட்டு நடப்பு, மக்களின் வாழ்வாதாரம், சூழல், நிதர்சனம் எல்லாமே உனக்குப் பிடிபடும். எனக்குத் தெரிஞ்சு இது ஒரு நல்ல ஐடியா. ஆமா, மாமாகிட்ட பேசிட்டியா?” என்று கேட்டான்.

“இல்ல மாமா, உங்ககிட்ட ஒரு சின்ன டிஸ்கஷன் பண்ணிட்டு, அதுக்கப்புறம் பேசலாம்னு ஒரு ஐடியா இருந்துச்சு. இன்ஃபேக்ட், தானியாவைப் பார்த்துட்டு உங்ககிட்ட இதைப் பத்திப் பேசலாம்னுதான் வந்தேன். இப்போ கிளியர் ஆயிடுச்சு, அப்பாகிட்ட இன்னைக்கு நைட்டே பேசிடுவேன்,” என்றான் அர்ஜுன்.

அப்போது சரியாகக் காபி கோப்பையுடன் வந்த ஆராதனா, “அப்போ என்னைப் பார்க்க வரலையா?” என்று கேட்டாள்.

“அக்கா, மாமாவும், என் செல்லக்குட்டி தானியும் உன்னாலதான் எனக்குக் கிடைச்சாங்க. உங்க ரெண்டுபேர்கிட்டயும் சேர்ந்து டிஸ்கஸ் பண்றதுக்குத்தான் வந்தேன். மாமா அதைப் பத்திக் கேட்டதுனால அப்படியே சொல்லிட்டேன். இப்போ நீங்க சொல்லுங்க, நான் எடுத்திருக்கிறது சரியான முடிவா?” என்று அவளிடமும் கேட்டான்.

“எனக்கும் சரின்னுதான் தோணுது. உங்க மாமா சொல்ற மாதிரி உனக்குச் சிறந்த அனுபவம் கிடைக்கும். அனுபவத்தை விடச் சிறந்த ஆசான் இல்லை. உன்னோட கரியருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்,” என்று தன் தம்பிக்குக் கைகுலுக்கினாள்.

பிறகு அவர்களின் பேச்சு திசைமாறிச் சென்றது. அன்று இரவு உணவையும் அங்கேயே முடித்துக்கொண்டுதான் வீட்டிற்குத் திரும்பினான். அவன் திரும்பும்போது தாயும் தந்தையும் டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்டுக் கொண்டிருந்தார்கள்.

வந்தவன் டிவியைப் போட்டுக்கொண்டு வரவேற்பறையில் அமர்ந்துவிட்டான். சாப்பிட்டு முடித்துவிட்டு குமார் அவன் எதிரில் வந்து நின்றார். “என்கிட்ட பேசணும்னு சொன்னியாமே அர்ஜுன்? உங்க அம்மா சொன்னாள், என்ன பேசணும்?” என்றபடி மகனின் எதிரில் அமர்ந்தார்.

அவனும் தமக்கை, மாமனிடம் கூறிய அதையே அவரிடமும் கூறினான். அதைக் கேட்டவர்,
“குட் டிசிஷன் அர்ஜுன். ஆனா, நம்ம கம்பெனிக்கு நீ வரணும்னா ஒரு எம்ப்ளாயியாத்தான் நீ வரணும். அப்பதான் உன்னால நிறைய கத்துக்க முடியும், என்னோட பையனா நீ வரக்கூடாது. நான் சொல்ல வர்றது உனக்குப் புரியுதா?” என்று கேட்டார்.

“ஐ அக்ரி இட் பா. நீங்க இதைத்தான் சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும். நானும் இப்படித்தான் யோசிச்சு வச்சிருந்தேன். நான் உங்களை அப்பான்னு அங்க கூப்பிட மாட்டேன், சார்னு கூப்பிடறேன். என்னோட படிப்புக்கு என்ன வேலையோ, அதை மட்டும் கொடுங்க. நான் கீழிருந்து உயரத்தான் நினைக்கிறேன். என்னோட ஹையர் ஸ்டடிஸ் முடியுற வரைக்கும் நான் அங்க வேலை செய்யறேன்பா. அதுக்கப்புறம் தனியா பிசினஸ் ஸ்டார்ட் பண்றதா, இல்ல என்னோட படிப்புக்கும் அனுபவத்திற்கும் ஏற்ற வேலையைத் தேர்ந்தெடுத்துக்கிறதான்னு நான் முடிவு பண்ணிக்கிறேன்,” என்றான்.

எழுந்து நின்றவர் அவன் தோளைத் தட்டிவிட்டு, “ரொம்பத் தெளிவான பேச்சு உன்கிட்ட தெரியுது. ஐ அம் ரியலி ப்ரவுட் ஆஃப் யூ. வாழ்க்கையில நமக்குச் சறுக்கல் ஏற்படும், ஆனா அதிலேயே நிற்கக் கூடாது, கடந்து வரணும். அப்பத்தான் அதைவிட நல்ல எதிர்காலம் நம்ம முன்னாடி நிற்கும்,” என்றபடி, அவர்கள் இருவருக்கும் எதிரில் வந்து நின்ற தன் மனைவியைக் காதலாகப் பார்த்தார்.

அதுவரை அவர்கள் என்ன பேசினார்கள் என்று தெரியாமல், பாத்திரங்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு லீலா அங்கு வந்தார். தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை என்னவாக இருக்கும் என்று அவருக்குத் தெரியவேண்டி இருந்தது. கடைசி வாக்கியத்தில் அவருக்கு என்ன புரிந்ததோ, வெட்கம் வேறு ஏற்பட்டது.

“வாமா, இங்க வந்து உட்காரு. உன் பையன் சொல்றதைக் கேளு. அவன் எடுத்திருக்கிற இந்த முடிவுல எனக்குப் பரமத் திருப்தி. எங்க பழைய நினைவுகளை வச்சுக்கிட்டு அப்படியே துவண்டு போயிடுவானோன்னு ரொம்ப வருத்தப்பட்டேன். என் மகன்றதை ப்ரூஃப் பண்ணிட்டான். ஐ அம் ரியலி ஹேப்பி ஃபார் ஹிம்,” என்று நெகிழ்வாகக் கூறினார்.

அது அவர் மனைவியையும் தொற்றிக்கொண்டது. மகனுக்கும் மனதில் நிம்மதி பரவியது. தந்தையிடம் பேசுவதற்கு அவனுக்கு எப்பொழுதுமே தயக்கங்கள் இருக்கும். தன் முதல் காதலைக்கூடத் தாய் மூலமாகத்தான் தந்தையிடம் எடுத்துச் சென்றான். அதுவும் கடைசி வருடத்தில்தான் கொண்டு சென்றான். தாய்க்கும் தமக்கைக்கும் முதல் வருடத்திலேயே அவனுடைய காதல் தெரியும். ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே அது அடங்கியும்விட்டது அவனுக்கும் வருத்தம்தான்.

ஆனால், அதை அவனாக ஏற்படுத்திக்கொள்ளவில்லை அல்லவா? தன்னை ஏமாற்றியவளுக்காக தான் ஏன் தன் வாழ்க்கையைத் துறந்து நிற்க வேண்டும்? தீவிரமாக யோசித்துத்தான் இந்த முடிவை எடுத்திருந்தான். சும்மாவே இருக்கும்போது பழைய கசடுகளைக் கிளறும் கரண்டியாக மனம் மாறிவிடக்கூடாது.

இந்த ஊர்ப் பயணம் அவனுக்கு நிறையவே தெளிவையும், ஆலோசிக்கும் திறனையும் கொடுத்திருந்தது. தன்னை எதிலாவது ஈடுபடுத்திக்கொண்டால் பழைய கசடுகள் மறக்கின்றன என்பதையும் அவனுக்குப் புரிய வைத்திருந்தது. அதனாலேயே வேலை கிடைக்கும் வரை சும்மா இருக்காமல், தந்தையுடன் செல்லலாம் என்ற முடிவை எடுத்துவிட்டான்.

தந்தை அந்தக் கம்பெனியை ஆரம்ப நிலையிலிருந்துதான் தொடங்கிச் சற்று மேம்படுத்திக்கொண்டு வந்திருக்கிறார். தானும் அதேபோல ஆரம்ப நிலையிலிருந்து தன் வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்று நினைத்தான்.

அன்று இரவு தன் மனைவியிடம் மகனைப் பற்றிக் கர்வமாகப் பேசினார் குமார்.
“அவன் உங்க பையனாச்சே, உங்களைப் போலத்தானே இருப்பான்? எனக்கும் பயம் இருந்துச்சு, நம்ம பையனுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம்னு கவலையும் இருந்துச்சு. அதே சமயத்துல, உங்களுடைய பையன்ற நம்பிக்கையும் இருந்துச்சு. இருந்தாலும் ஆரம்பத்துல அவன் செஞ்ச அலப்பறைகளைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருந்தது. ஆனா, நீங்க சொன்னாப்போல அவன் அவனே தேத்திக்கிட்டான். இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு,” என்றார் லீலா.

அவருக்குள்ளும் ஒரு கவலை இருந்தது. தன்னைப் போலவே தன் மகனுக்கும் ஏமாற்றமா? என்று வருந்தியவர், அவனை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை. காவல் நிலையத்திலிருந்து அவனை அழைத்து வந்தவர் கோபமாகத்தான் இருந்தார், ஆனால் அதை அவனிடம் வெளிகாட்டக் கூடாது என்று அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். பிறகு என்ன நடந்தது என்று மனைவியிடம் கேட்டுத் தெரிந்துகொண்டவருக்கு மனதில் பாரம் ஏறிய உணர்வுதான்.

ஆனால், மகள் அர்ஜுனைத் தேற்றும் பொறுப்பை எடுத்துக்கொள்ள, அவரும் சற்று நிம்மதி அடைந்தார். மருமகனின் ஊர்த் திருவிழாவிற்குச் செல்வதாகச் சொல்லும்போது, அவர்கள் அவனின் மனம் மாற்றத்திற்காகத்தான் கூட்டிச் செல்கிறார்கள் என்று அவருக்கும் புரிந்தது.

அதனால் பெருத்த அமைதியை அவர் கையில் எடுத்துக்கொண்டு, மகனிடம் சிறு கேள்விகூடக் கேட்கவில்லை. அது அவனை எந்த அளவு பாதிக்கும் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. காலம் ஒரு சிறந்த மருந்து, அவனாகத் தேறி வரட்டும் என்றுதான் நினைத்தார். இப்பொழுது நிம்மதியாக உணர்ந்தார்.

…….

மறுநாளிலிருந்தே, தந்தையுடைய இண்டஸ்ட்ரிக்குத் தன் ரெஸ்யூமைக் கொண்டு சென்று வேலையில் சேர்ந்துகொண்டவன், சாதாரண எம்ப்ளாயியாகத் தன் கரியரை ஆரம்பித்தான். அங்கு அவனுக்குப் பாடம் மட்டுமல்ல, நல்ல தோழமையும் உருவானது. தோழமையும் வேலையும் அவன் பழைய கசடுகளை மறக்கடித்திருந்தன.

வாரத்தின் கடைசி விடுமுறை நாளில், தமக்கையின் வீட்டிற்கு எப்பொழுதும் போலச் சென்று தன் பொழுதைக் கழித்தான். மகனைப் பற்றிய கவலைகள் பெற்றோருக்கும் மறைந்திருக்க, ஆராதனாவும் ராகேஷும் கூட நிம்மதியாக உணர்ந்தார்கள்.






 

Author: நிதனிபிரபு
Article Title: புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 17
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அர்ஜுன் அப்பா பேரு குமார், அம்மா பேரு லீலா.....
அப்ப ராம் குமார் - ஶ்ரீ லீலா பையன் தான் அர்ஜுனா?????
இப்ப குமார் வருத்த படரது அவருக்கும் லவ் failure அப்படின்னு thanaa????
So இவங்க ரெண்டு பேரும் அப்பா - மகன்