புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 19

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,210
16,607
113
Germany
புனர்ஜென்மம் 19





ஆண்டுகள் நகர்ந்தன.





தோழன் ஒருவனுக்குத் திருமணம் என்பதற்காக, பரிசுப் பொருளை வாங்கிவிட்டு, அதே ஷாப்பிங் மாலில் இருந்த பொக்கே ஷாப்பிற்குச் சென்றான் அர்ஜுன்.





அர்ஜுனுக்கு, எல்லோரும் வாங்குவது போல இல்லாமல் வித்தியாசமான மலர்கள் பிடிக்கும். ரோஜா, லில்லி என்று இல்லாமல் தேடினான். உதவி செய்யும் பெண்ணும் அவனுக்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்க, வித்தியாசமாக இருந்த பொக்கேயைப் பார்த்து அவன் கைகள் அதைக் காட்டியது.





ஆந்தூரியம் (Anthurium) என்று பெயரிடப்பட்டு இதய வடிவில் இருந்த மலர்களைக் காட்டியவன், அதை எடுக்கச் சொன்னான்.





“சாரி சார், அது புக் ஆயிடுச்சு. ரொம்ப ரேராகத்தான் கிடைக்கும்” என்றாள் அவள்.





“வேற இல்லைங்களா?”.





“இல்ல சார், இப்போதைக்கு ஸ்டாக் இல்ல” என்றாள்.





“சேல்ஸ் ஆனதை எதுக்குங்க ஷோவில் வச்சிருக்கீங்க?” சற்று அழுத்தமாகக் கேட்டான்.





“சாரி சார், இப்பதான் ஆன்லைன்ல புக்காச்சு” அந்தப் பெண் தடுமாறினாள்.





“புக் ஆயிடுச்சுல்ல? அப்போ உள்ளதானேங்க வச்சிருக்கணும்? கஸ்டமர் கேட்கும்போது இல்லைன்னு சொல்றது நல்ல ஷாப்புக்கு அழகு இல்லைங்க” என்று மீண்டும் உயர்ந்த குரலில் பேசினான்.





“சாரி சார், ஜஸ்ட் நவ்தான் ஆச்சு” என்று அவள் மீண்டும் மன்னிப்புக் கேட்டாள். அதற்குள் உள்ளே அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த பெண், சத்தம் கேட்டு வேகமாக வெளியில் வந்தாள்.





யாரோ ஒருவனின் முதுகுதான் தெரிந்தது. சேல்ஸ் செய்யும் பெண் பரிதவித்து நிற்பது புரிந்தது. உடனே அதைத் தன் கையில் எடுத்துக் கொண்டவள்,





“ஐ அம் ரியலி சாரி ஃபார் தட் சார். கண்டிப்பா நெக்ஸ்ட் டைம் நாங்க இதைக் கவனத்தில் வச்சுக்கிறோம். உங்களுக்கு இதுதான் வேணும்னா, ஒரு ஹாஃப் அன் ஹவரில் நான் உங்களுக்கு இதை வரவச்சுக் கொடுக்கிறேன்” படபடவென்று பேசியபடி அவன் முன்னால் வந்து நின்றவள், அவன் முகத்தைப் பார்த்ததும் வாயைப் பிளந்து கொண்டு நின்றாள்.





அவன் புருவமும் அவளைப் பார்த்ததும் இடுங்கியது. ஆனால், சரியாக நினைவலைகளில் அவள் யார் என்று தெரியவில்லை. அவனுடைய தெளிவில்லாத முகமே, அவனுக்குத் தன்னைத் தெரியவில்லை என்பதை அவளுக்குப் புரிய வைத்திருந்தது.





“அர்ஜுன் சார், நீங்களா? வாட் எ பிக் சர்ப்ரைஸ்! நீங்க எங்கே இங்கே?” என்று முகமலர்வோடு கேட்டாள்.





“எக்ஸ்கியூஸ் மீ, ஐ அம் சாரி, உங்களைப் பார்த்த மாதிரி இருக்கு. ஆனால், எனக்குச் சரியா ஞாபகம் வரல” மிகுந்த தயக்கத்தோடு கூறினான் அர்ஜுன்.





“கண்டிப்பா நான் இதுக்கு ஆச்சரியப்பட மாட்டேன். ஏன்னா உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். ஐ அம் அனன்யா, காக்களூர் திருவிழாவில் பார்த்திருக்கோம். உங்க மாமா வீடும் எங்க பெரியப்பாவின் வீடும் எதிரெதிரே இருந்தது. என்னை மறந்தாலும் எங்க அக்காவை மறந்திருக்க மாட்டீங்க. அவங்க பேரு நிரோஷா. இப்போ ஞாபகம் வருதா இல்ல இன்னும் டீடைலா சொல்லணுமா?” என்று அவள் தலையை ஆட்டி ஆட்டி, கண்களில் பாவனை பிடித்துத் துள்ளலுடன் பேசிய பேச்சில், அவனுக்கு அந்தப் பெண்ணை ஞாபகம் வந்திருந்தது.





“எஸ், அந்தச் சின்னப் பொண்ணு” என்று அவன் நினைவலைகளைத் தட்டி எழுப்பிக் கொண்டிருந்தவனுக்கு, அவள் கண்களை உருட்டிப் பேசிய விதமும் அவள் பாவனையும் அவளைச் சீக்கிரமாக அவன் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியது.





“தேங்க் காட்!” என்று நெஞ்சில் கையை வைத்துக் கொண்டாள்.





அவளின் செயலில் அவன் முகம் பெரிதாக விகாசித்தது.





“உங்களைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு. ஆனா அப்படியே இருக்கீங்க? அன்னைக்கு உங்க முகத்தில் இந்தச் சிரிப்பைப் பார்க்க முடியல. ஆனா இன்னைக்குப் பார்க்கும்போது தெரியுது, நீங்க எவ்வளவு அழகுன்னு”.





பெண்ணின் புகழ்ச்சியில் அவனுக்கு லேசாக வெட்கம் ஏற்பட்டது.





“கமான் கேர்ள், ஆமா நீ எங்கே இங்கே? அப்போ சின்னப் பொண்ணா பார்த்தது, இப்போ எவ்வளவு வளர்ந்துட்ட?”. பக்கவாட்டாக அவன் கையை இடுப்பு வரை கீழே இறக்கிக் காட்டியபடி கேட்டான்.





“ஹலோ சார், அப்பயும் நான் ஒன்னும் சின்னப் பொண்ணு கிடையாது. அப்பவே பிளஸ் டூ படிச்சிட்டு இருந்தேன். உங்களோட பார்வை, அதுல இருக்கிற கோவம், இதெல்லாம் எனக்குப் புரிஞ்சுது. ஆனா எங்க அக்காவுக்குத்தான் புரியல. பட், உங்களைப் பார்க்கும்போது எனக்கு டிஃபரண்டா தோணுச்சு” என்றாள்.





“அப்போ நீ பிளஸ் டூ படிச்சியா, என்னால நம்பவே முடியல. நான் உன்னை அதை விடவும் கம்மியா யோசிச்சேன். ஐ மீன் எய்ட்த் ஆர் நைன்த்?” முகத்தைச் சுருக்கி கேள்வியாக நிறுத்தினான்.





“நான் கொஞ்சம் ஷார்ட்தான். அதுக்காக என்னை அவ்வளவு சின்னப் பொண்ணாவா நினைச்சுட்டீங்க? அப்படியே இருந்தாலும் இந்தக்காலப் பசங்க எல்லாருக்கும் எல்லாமே தெரிஞ்சுதான் இருக்கும். நானும் அது போலப் பார்வைகளைக் கடந்து வந்திருக்கேன், நீங்க சொன்ன அந்த எய்ட்த், நைன்த்தில் இருந்தே” என்றாள்.





அவன் மீண்டும் அழகான பல்வரிசையைக் காட்டிப் புன்னகைத்தான்.





“எங்க அக்கா ஏன் பார்த்தவுடனே சொக்கிப் போனாள்னு இப்பதான் தெரியுது” என்றாள் அனன்யா.





அவன் மீண்டும் புருவத்தைச் சுருக்கி அவளை ஆராய்ச்சியாகப் பார்த்தான்.





“நீங்க சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க. அப்பவே நானும் கவனிச்சிருக்கேன். பிள்ளைகளோட இருக்கும்போது மட்டும்தான் உங்களோட சிரிப்பு வெளிப்படும், அது ரொம்ப வசீகரிக்கும்” என்றாள்.





அவள் மீண்டும் மீண்டும் வர்ணிக்க, அவன் தடுமாறினான். பேச்சையும் மாற்ற நினைத்தான்.





“உங்க அக்கா எப்படி இருக்காங்க? அவங்க பேரு?” என்று அவன் மீண்டும் தன் நினைவலைகளைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்க, அவனைச் சிரமப்படுத்தாமல் அந்தப் பெயரை அவளே சொல்லியிருந்தாள்.





“ஹான், நிரோஷா எப்படி இருக்காங்க? கல்யாணம் ஆயிடுச்சா?” தடுமாற்றத்தோடு கேட்டான்.





“ஹான், மூணு வருஷத்துக்கு முன்னாடியே ஆயிடுச்சு. இப்போ ரெண்டு வயசுல குழந்தை இருக்கான். ரொம்ப க்யூட்டான என்னோட பேபி டால். அவன் பெயர் என்ன தெரியுமா?” அவள் கேள்வியாக நிறுத்தினாள்.





அவளுக்குத் திருமணம் ஆனது தெரிந்த நொடி அவ்வளவு நிம்மதி ஏற்பட்டது அர்ஜுனுக்கு. “எனக்கு எப்படித் தெரியும்? நான் அதுக்கப்புறம் உங்க ரெண்டு பேரையும் சுத்தமா மறந்துட்டேன்” என்றான்.





“ஐ நோ தட். நீங்க எங்களை மறந்துடுவீங்கன்னு எனக்குத் தெரியும். அண்ட் அவளோட பையன் பேரு கேட்டா கண்டிப்பா நீங்க ஷாக் ஆகுவீங்க. ஏன்னா நாங்க ரெண்டு பேரும் உங்களை மறக்கவே இல்லை. எங்க அக்கா மறக்க விடவும் இல்லை. அப்புறம் உங்களோட அந்த மேனரிசமும் என்னை மறக்க விடவில்லை” மிக வெளிப்படையாகப் பேசிக்கொண்டே அவள் பீடிகை போட்டுக் கொண்டிருந்தாள்.





“எனக்கு புரியல?” என்றான்.





“என்னோட கேபினுக்கு வரீங்களா? முதல் முறையா என்னோட ஷாப்புக்கு வந்திருக்கீங்க. உங்களைக் கொஞ்சமே கொஞ்சம் ரிசீவ் பண்ணி வரவேற்கணும் இல்லையா? அண்ட் இங்கே நின்னு எல்லாத்தையும் பேச முடியாது” என்றாள்.





அவன் கைக்கடிகாரத்தைப் பார்த்தான். நேரமிருந்தது. முன்பாகவேதான் வந்திருந்தான்.





“கவலைப்படாதீங்க அர்ஜுன் சார், உங்க நேரத்தை நான் வீணாக்க மாட்டேன். இங்கே இன்னும் ரெண்டு சேல்ஸ் கேர்ள் இருக்காங்க. அவங்க எதிரே பேச வேணாம்னு யோசிக்கிறேன்” என்றாள்.





அவனுக்கும் நிரோஷாவின் நிலை அறிய வேண்டிய அவசியம் இருந்தது. கடந்த இந்த வருடங்கள் அவனுக்குப் பக்குவத்தையும் அனுபவத்தையும் கொடுத்திருக்க, இத்தனை நாள் மறந்திருந்த சம்பவங்கள் ஞாபகம் வந்துவிட, மிக மோசமாக இரண்டு சிறிய பெண்களைத் தன் வார்த்தைகளால் தாக்கிவிட்டோம் என்பதும் புரிய, நிரோஷாவைக் கை ஓங்கியது வேறு ஞாபகம் வந்தது. அவள் நிரோஷாவின் பெயரைக் கூறும்போது தன் இடது கன்னத்தைத் தடவியபடி கூறியதும் அவனுக்கு அதை இப்போது புரிய வைத்திருந்தது.





அவளோடு சேர்ந்து அவள் கேபினுக்குள் சென்று அமர, அவள் கண்ஜாடை காட்டியபடி இரண்டு என்று விரல்களையும் காட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.





“உட்காருங்க, அப்புறம் சார் எப்படி இருக்கீங்க? என்ன பண்றீங்க? லைஃப்ல யாராவது பொண்ணு வந்துட்டாங்களா இல்லையா?” அவனைக் கூர் பார்வை பார்த்துக் கொண்டே கேட்டாள்.





“ப்ளீஸ், முதல்ல நீங்க போட்ட பீடிகையை கிளியர் பண்ணிட்டு அதுக்கப்புறம் கேள்வி கேளுங்க. நான் பதில் சொல்றேன்” என்றான் அர்ஜுன்.





அவள் தன் தாடையில் ஒரு விரலை வைத்து யோசிப்பது போலப் பாவனை செய்துவிட்டு, “ஹான்” என்று ஆரம்பித்தாள்.





“நான் சொன்னா நீங்க ஷாக் ஆகக்கூடாது. எங்க அக்கா அட்ரஸைக் கேட்டு வீட்டுக்குப்போய் சண்டை பிடிக்கவும் கூடாது. ஓகேவா? பிராமிஸ் பண்ணுங்க, அப்புறம் நான் சொல்றேன்” என்று அவனின் பொறுமையைச் சோதித்தாள்.





ஆனால், இந்த முறை அவன் நிதானமாகக் கையாண்டான்.





“ஓகே, போக மாட்டேன். அன்னைக்கே கொஞ்சம் ஓவரா ரியாக்ட் பண்ணிட்டேன்னு இப்போ யோசிக்கும்போது தோணுது. உங்க அக்காவுக்குக் கல்யாணமாகி அவங்கள் நல்லபடியா வாழ்றாங்கன்றது எனக்குச் சந்தோஷம்தான். மனசுக்குள்ள கொஞ்சம் நிம்மதியாக ஃபீல் பண்றேன். அதனால் கண்டிப்பா வாழ்ந்துட்டு இருக்கவங்க வாழ்க்கையைக் கெடுக்கிற மாதிரி அவங்க வீட்டுல போய் சண்டை போட மாட்டேன். ஐ பிராமிஸ் யூ. நான் கொஞ்சம் நல்லவன்தான். நீங்க யோசிக்கிற அளவுக்கு மோசமானவன் இல்லை”.





நீட்டிக்கொண்டிருந்த அவள் கைகளைத் தொடாமல், ஆனால் அதற்கு மேலே சிறு இடைவெளி விட்டு அதே போலத் தன் வலது கையை வைத்தபடி கூறினான்.





அவள் அவனை ஆழமாகப் பார்த்துவிட்டு, அவர்கள் இரு கைகளுக்கும் இடையே இருக்கும் இடைவெளியைக் குனிந்து பார்த்தபடி புன்னகைத்து நிமிர்ந்தாள்.





“நீங்க மாறவே இல்லை அர்ஜுன் சார். பட், ஐ லைக் இட். உங்களோட இந்த வார்த்தையை நான் நம்பிச் சொல்றேன். குட்டி டாலோட பேரு அர்ஜுன் ஹரிதாஸ்” அந்தக் கடைசி வாக்கியத்திலும் அவன் பெயர் உச்சரிப்பிலும் அவள் கண்களில் மின்னிய மின்னலை அவனால் கண்டுகொள்ள முடிந்தது.





“பேபி டால், அர்ஜுன் ஹரிதாஸ்” இரண்டு பெயர்களையும் தனித்தனியாக இழுத்து உச்சரித்தவன், “இந்த பேபி டால், அர்ஜுன், ஹரிதாஸ் இவங்க எல்லாம் யாரு?” என்று கேட்டான்.





“என்ன சார் இப்படிச் சில்லியா கேக்குறீங்க? ரெண்டு வருஷத்துல எத்தனை குழந்தைகள் பிறக்கும்? ட்வின்ஸ் பிறக்கலாம். ஆனா அவளுக்கு ஒரு பையன்தான் பிறந்திருக்கான். அவன்தான் என்னோட பேபி டால். அவன் பேருதான் அர்ஜுன் ஹரிதாஸ். பிக்காஸ், ஹரிதாஸ் என் மாமாவோட பேரு” என்று முடித்தாள்.





“அப்போ இந்த அர்ஜுன்?” என்று அவன் கேள்வியாக நிறுத்தினான்.





“அப்வியஸ்லி! அது உங்க பேருதான்” என்றதும் அவன் முகம் ரௌத்திரத்தைத் தத்தெடுக்கத் தயாராக இருந்ததை அவள் உடனே புரிந்து கொண்டாள்.





தண்ணீரை அவன் முன்பாக நீட்டியபடி, மீண்டும் அவள் கன்னத்தில் இடது கையை வைத்துக் கொண்டாள். “கூல் கூல் சார். இந்த அர்ஜுன் மாதிரி அந்த அர்ஜுனும் ரொம்ப அழகா இருப்பான். முக்கியமா ரொம்ப அழகாச் சிரிப்பான். அவன் சிரிச்சா பார்த்துட்டே இருக்கலாம். இப்போ உங்களைப் பார்க்கும்போது அப்படித்தான் தோணுது” என்றாள்.





உண்மையில் அந்தத் தண்ணீர் அவனுக்குத் தேவைப்பட்டது. வாங்கிப் பருகியவன் நிதானமாகப் பார்த்தான் அவளை.





“நீங்கெல்லாம், சாரி, ஐ மீன் ஆண்கள் எல்லாம் தங்களோட முதல் காதல் பெயரைத்தான் பொண்ணுக்கு வச்சு அழகு பார்ப்பாங்கல்ல. அது போல எங்க அக்காவோட முதல் காதலை அவள் பையனுக்குப் பெயர் வச்சிருக்கா. ஆக்சுவலி அவன் பிறக்கும்போது ‘அ’, ‘ஆ’ எழுத்துக்கள் சொன்னவுடனே, அவள் வாயிலிருந்து அர்ஜுன்னு வந்துருச்சு. அதுக்கப்புறம் பேய் விழி விழிச்சா பாருங்க, எனக்கு அங்கேயே சிரிப்பு வந்துருச்சு. என் மாமாவுக்கு அந்தப் பெயர் பிடிச்சதுனால அர்ஜுன் ஹரிதாஸ்னு அப்பவே வச்சுட்டாரு. பாவம் அந்த மனுஷனுக்கு அது தெரியாது, தெரியப்போறதும் கிடையாது. அவங்க ரெண்டு பேரும் ரொம்பச் சந்தோஷமா வாழ்றாங்க. மேட் ஃபார் ஈச் அதர் மாதிரி. மாமாவும் ரொம்ப நல்லவர்தான் உங்களைப் போல. அப்புறம் நீங்க நினைக்கிற மாதிரி எங்க அக்கா ஒன்னும் தப்பானவள் இல்லை. ஒரே லவ்தான். சிங்கிள் சைட் லவ் வேற, அதுவும் ஆரம்பிக்கும்போதே புட்டுக்குச்சு. கொஞ்ச நாள் அழுதாள், ரொம்ப வருத்தமா இருந்தாள். தாடி வளர்க்காத தேவதாஸாகத் திரிந்தாள். இப்படியே ஒரு ஒன் இயர் போயிருக்கும். அப்புறம் கொஞ்சம் மனசைத் தேத்திக்கிட்டாள். அதற்குள் அவளுக்கு வேலையும் கிடைச்சிடுச்சு. நர்ஸ் வேலையில எவ்வளவு டென்ஷன் இருக்கும்னு தெரியுமில்ல? ரொம்ப பிசியாகிட்டாள். அதனால் எல்லாத்தையும் மறந்து, அவள் லைஃபை வாழ ஆரம்பிச்சிட்டாள். அப்புறம் இந்தப் பெயர் எப்படின்னு கேட்காதீங்க, அவளையும் அறியாமல் வந்துருச்சு. அதுக்கப்புறம் ரொம்ப பீல் பண்ணி என்கிட்ட சொன்னாங்க. நான்தான் அவங்களைக் காம்ப்ரமைஸ் பண்ணேன். ஆறுதல் படுத்தினேன். மாமாவுக்கு அந்தப் பெயர் பிடிச்சிருச்சு, இனிமேல் மாத்த முடியாது. ஆனா வீட்ல அவனை பேபி டால்னுதான் கூப்பிடுவோம். அந்தப் பேரை நான்தான் வச்சேன். நல்லா இருக்குல்ல?” என்று தலையாட்டிக் கேட்டாள்.





“நீ அப்பெல்லாம் இவ்வளவு பேசலையே? இப்போ ரொம்பப் பேசுற?” என்று புன்னகையோடு கேட்டான்.





அவள் கூறிய விளக்கம் அவனுக்குப் பிடித்திருந்தது. அதுவும் அவள் கூறிய விதமும் அவனுக்குப் பிடித்திருந்தது.





“அதுவா? கன்னத்தைக் காப்பாத்திக்க நினைச்சேன். அதான் அப்போ வாயைத் திறக்கலை” என்றாள் புன்னகையோடு.





அவன் பொய்க் கோபத்தோடு அவளைப் பார்த்தான்.





















 

Author: நிதனிபிரபு
Article Title: புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 19
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
706
581
93
Pondicherry
ராஜ்- ஸ்ரீலீலா கதையும் அர்ஜுன் கதையும் வேறு வேறா? அப்படி என்றால் என்ன தொடர்பு, எந்த புள்ளியில் கதை இணையும்??