புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 25

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
புனர் ஜென்மம் 25

சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அவன் வந்து விட்டான். குறிப்பிட்ட இடத்தில் அவன் வந்து பார்க்கும்போது, அவளும் போனை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். இதழ்களில் மெல்லிய புன்னகை படர, அவளை நோக்கி நடந்து வந்தவன் அவள் முன்னால் அமர்ந்தான்.

அலைபேசியில் கவனமாக இருந்தவள், “சாரி சார், புக்குடு” என்றபடி நிமிர்ந்து பார்த்தாள். அவனைப் பார்த்ததும் புன்னகை பூத்தாள். பிறகு ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தவள், அவன் உடையையும் தன் உடையையும் பார்த்தாள்.

இருவரும் ஒரே நிறத்தில் உடை அணிந்திருந்தார்கள். அவன் கரும்பச்சை சட்டை அணிந்திருக்க, அதே நிறத்தில் அவள் பிராக் அணிந்திருந்தாள்.

“வாவ், சேம் டு சேம்!” என்றாள் துள்ளலுடன். அவனும் ஆச்சரியமாக பார்த்தான்.

‘இருவரும் இதைப் பற்றி எதையும் பேசிக்கொள்ளவில்லை. பிறகு எப்படி இந்த ஒற்றுமை?’ என்று அவனுக்குமே புரியவில்லை. குறித்த நேரத்திற்கு அரை மணி நேரம் முன்பாக அவன் வந்திருக்க, அவள் அதற்கும் முன்பாக வந்திருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருந்தது. இப்போது ஒரே நிறத்தில் இருப்பது இன்னும் ஆச்சரியத்தை மேல் எழுப்பியது. அவன் கண்களும் மின்னின. அவனுக்குமே அந்த துள்ளல் ஏற்பட்டது. ஆனால் ஆண் அல்லவா? வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.

அவன் அமர்ந்ததும், தனக்கு இடப்பக்கமாக இருந்த ஒரு பெரிய பேகில் இருந்து பூங்கொத்தை எடுத்து அவனுக்கு முன்பாக நீட்டினாள்.

இதய வடிவிலான அதே வகை பூக்கள். அவனுக்காகவே கொண்டு வந்திருக்கிறாள் என்று தெரிந்தது. ஆனால் இந்த இதய வடிவத்திற்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? அவன் மனம் தேவையில்லாமல் கேள்வி கேட்டது.

“தேங்க்ஸ்” என்று சொல்லி வாங்கிக் கொண்டவன்,
“இதை கண்டிப்பா பத்திரமா வச்சிருப்பேன்” என்றான்.

அவள் எழுந்து கொடுத்துவிட்டு புன்னகையோடு அமர்ந்தாள்.

அவன் தன் பாக்கெட்டில் இருந்து பெரிய வகை டைரி மில்க் சாக்லேட் எடுத்து நீட்டினான்.

அவள் முகமும் அதில் மலர்ந்தது. “டு பீ பிராங்க், உனக்கு என்ன வாங்கறதுன்னு எனக்கு தெரியல. நார்மலா கேர்ள்ஸ் பார்க்க போகும்போது பூ வாங்கிட்டு போகலாம். பட், உறவு முறையைப் பொறுத்து அது வேரியேஷன் ஆகும். பிரெண்ட்ஸ்னா பொக்கே வாங்கிட்டு போகலாம். ஆனா பொக்கே கடைக்கு வாங்கிட்டு போகக் கூடாது இல்லையா? அடுத்ததுன்னு யோசிச்சா, சாக்லேட் பெண்களுக்கு ரொம்ப பிடிச்சது. அதுவும் டைரி மில்க் பிடிக்காதவங்க யாரும் இருக்க மாட்டாங்கன்னு நினைச்சு வாங்கிட்டு வந்தேன். உனக்கு இது பிடிச்சிருக்கா?” என்று கேட்டான்.

“ரொம்ப, அதுவும் எனக்கு பிடிச்ச பிளேவர். சாக்லேட்டை என்னால பத்திரமா அப்படியே வச்சிருக்க முடியாது. ஆனா கண்டிப்பா கவரை வச்சிருப்பேன். ஐ நோ, உங்களாலயும் பூவை வச்சிருக்க முடியாது. காஞ்சி போயிடும். ஒரு ஒன் வீக் அப்படியே இருக்கும். மிஞ்சி போனா டூ வீக்ஸ் வச்சிருக்கலாம். அவ்வளவுதான்.”

ஆனால் அவன் அதை பராமரிக்க வேண்டும் என்று அப்போது முடிவு செய்து விட்டான். உண்மையில் அவள் சொல்வது போல சாக்லேட்டை அவளால் எடுத்து வைக்க முடியாது. அது அவனுக்கும் புரிந்தது.

“என்ன சாப்பிடுற?” ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டே கேட்டான்.

“முதல்ல ஒன்னு பேசிக்கலாம். பில் யார் பே பண்றதுன்னு. நார்மலா நாங்க பிரெண்ட்சுங்களோட வெளியே போனா, ஒரு நாள் நான் பே பண்ணுவேன். ஒரு நாள் அவங்க பே பண்ணுவாங்க. ஒத்த தலையிலேயே மிளகாய் அரைப்பது எல்லாம் எங்களுக்கு ஆகாது. உங்கள பில் பே பண்ண சொல்லிட்டு, என்னால இருக்க முடியாது. அடுத்த வாட்டி மீட் பண்றதா இருந்தா, அப்ப நான் தான் பே பண்ணுவேன். அப்படி இல்லை, இதுதான் ஃபர்ஸ்ட் அண்ட் லாஸ்ட்டுனா, ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கலாம். ஓகேவா?” என்று தலையாட்டி கேட்டாள்.

“ஓகே, ஓகே. இன்னிக்கு நான் பில் பே பண்றேன். அடுத்த வாரம் நீ பில் பே பண்ணு. ஐ மீன், அடுத்த வாட்டி” என்று மாற்றினான்.

அந்த டீல் அவனுக்கு பிடித்திருந்தது. அவனும் தோழிகளோடு, காதலியோடு சென்றிருக்கிறான். வீட்டு பெண்களோடு கூட சென்றிருக்கிறான். அப்படி சென்றால், ஆண்கள் தானே பில் பே பண்ண வேண்டும்? அது எழுதப்படாத சட்டம் அல்லவா? இவள் மாற்றிக் கூறுகிறாளே, அது அவனுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தியது.

“நீங்க சொல்லுங்க?” என்றாள்.

அவன் சிந்தித்துக் கொண்டிருக்க, அவள் எதற்காக கேட்கிறாள் என்று அவனுக்கு தெரியவில்லை.

“இல்ல, என்ன சாப்பிடலாம்னு முதல்ல நீங்க சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன். ஒரே டிஷ்ஷோட நிறுத்திக்க வேண்டாம். கொஞ்ச நேரம் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம். கொஞ்ச நேரம் டைம் ஸ்பென்ட் பண்றதுக்கு சரியா இருக்கும். அதுக்கப்புறம் திரும்பவும் வேற ஏதாவது டிஷ் ஆர்டர் பண்ணிக்கலாம்” என்றாள்.

நேரத்தை பார்த்தான்.

“இப்ப டைம் லெவன் ஓ கிளாக் ஆகுது. இப்ப எது சாப்பிட்டாலும் நம்மளால மத்தியான சாப்பாடு சாப்பிட முடியாது. சோ, லைட்டா ஃப்ரூட் ஜூஸ் மாதிரி எடுத்துக்கலாம்” என்றான்.

அவள் ‘டன்’ என்பது போல கட்டை விரலை உயர்த்திக் காட்டினாள்.

“உனக்கு என்ன ஃப்ரூட் பிடிக்கும்னு சொல்லு” என்று வந்து நின்ற பேரரிடம் அவன் சொல்லச் சொன்னான்.

“வாட்டர்மிலான்” என்றாள் அவள்.

பேரரை பார்த்தவன், “இரண்டு வாட்டர்மிலான்” என்றான்.

“நீங்க உங்களுக்கு புடிச்சதை சொல்லுங்க சார்” என்றாள்.

“எனக்கும் வாட்டர்மிலான் ஜூஸ் ரொம்ப பிடிக்கும். வெயிலுக்கு இதமா இருக்கும்” என்று புன்னகையோடு கூறினான்.

அதில் அவள் முகத்திலும் ஒரு மலர்வு தெரிந்தது.

ஜூஸை குடித்துக் கொண்டே ஏதேதோ பேசினார்கள்.

“அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. உங்கள பாத்ததை பத்தி அக்கா கிட்ட சொன்னேன். அக்காவும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. உங்கள கண்டிப்பா மீட் பண்ணனும்னு சொன்னாங்க” என்று குதூகலமாக கூறினாள்.

அது அவனுக்கு இயர்புடையதாக தெரியவில்லை.

“நோ அனன்யா. சும்மா சும்மா நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல உன் அக்காவை கொண்டு வராத. ப்ளீஸ். எனக்கு அன்கம்ஃபர்டபுளா இருக்கு” என்றான்.

“ஈசி, ஈசி. எதுக்கு இவ்ளோ அன்கம்ஃபர்டபுலா பீல் பண்றீங்க? அதெல்லாம் பப்பி லவ். முடிஞ்சிடுச்சு. கிரஷ்னு கூட சொல்லலாம். அவங்க படிச்சது ஃபுல்லா கேர்ள்ஸ் ஸ்கூல். அப்புறம் ட்ரெய்னிங் சென்டர்லயும் ஃபுல்லா கேர்ள்ஸ். அதனால பாய்ஸ் அவ்வளவா அவளுக்கு பழக்கம் இல்லை. எங்க ரெண்டு பேரோட அண்ணனுங்கள தவிர. நீங்க ஓவர் ஸ்மார்ட், குட் லுக்கிங், ஹேண்ட்சம். அதனால பார்த்தவுடனே இம்ப்ரஸ் ஆகிட்டாங்க. அவ்வளவுதான். நீங்க எங்க மாமாவ பாக்கலையே. அவரும் சூப்பரா இருப்பார். முதல்ல கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தவங்க. அவர பார்த்து பேசினதுக்கப்புறம், அந்தர் பல்டி அடிச்சுட்டாங்கனா பாருங்க. இருங்க, உங்களுக்கு போட்டோ காட்டுறேன்” என்றவள் தன் அலைபேசியை எடுத்து ஓப்பன் செய்தாள்.

வேண்டாம் என்று கையை உயர்த்திவிட்டவன், அவள் கவனிக்கவில்லை என்றதும் கையை கீழே இறக்கிக்கொண்டான். இப்போது அவனுக்குமே குட்டி அர்ஜுனை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அப்படி என்ன அவன் தன்னைவிட அழகாக இருக்கிறான் என்று அர்ஜுன் தந்தையையும் பார்க்கத் தூண்டியது.

அவன் சிந்திப்பதற்குள் அவள் அலைபேசியில் அவர்கள் புகைப்படத்தை எடுத்து காட்டினாள். குடும்பமாக மூவரும் நிற்கும் புகைப்படம் அது.

நிரோஷாவை அவனுக்கு ஞாபகமும் இருந்தது. அவள் அருகில் அவளைவிட உயரமாக இருந்தவனை பார்த்தான். வடக்கத்தியன் போல மிக அழகாகவே தெரிந்தான்.

“ஸ்மார்ட்” என்று அவன் உதடுகள் முணுமுணுத்தன.

அடுத்தது அவர்களின் குட்டி அர்ஜுன் மீது பார்வை சென்றது.

அவன் தகப்பனை விடவும் அழகாக இருந்தான். அவனைப் பார்க்கும்போது, அர்ஜுனுக்கும் அவனை கொஞ்ச வேண்டும் என்ற பேராவல் எழுந்தது. கொழு கொழு கன்னங்களோடு ஜம்ப்பியாக இருந்தான். ஆர்வக்கோளாறில் அவளுடைய அலைபேசியை தன் கைக்கு இடமாற்றி விட்டான் அர்ஜுன்.

“நான் சொன்னது சரிதானே? எவ்வளவு ஸ்மார்ட்டா இருக்காரு பாருங்க?” என்று ஒத்து ஊதினாள் அனன்யா.

அவள் வேறு ஒருவனை மிக அழகு என்று வர்ணிப்பது அவனுக்கு அசௌகரியத்தை கொடுத்தது. அது ஏன் என்று அவனுக்கே தெரியவில்லை.

“அஃப்கோர்ஸ், உங்க மாமா அழகா தான் இருக்காரு. பட், நீ சொன்ன மாதிரி அர்ஜுன் ரொம்ப அழகா இருக்கான். என்னை போல” என்று அலைபேசியையும் அவளையும் மாறி மாறி பார்த்துக் கொண்டே பேசியவன், கடைசியில் காலரை தூக்கிவிட்டுக் கொண்டான்.

அவன் கண்களில் பொறாமை அப்பட்டமாக தெரிந்தது அவளுக்கு. இதழ்களில் அதை வெளிப்படுத்தாமல் உள்ளே அடக்கினாள்.

“இது தானே சார் நான் அன்னைக்கு சொன்னேன்?” என்று அவளும் புன்னகைத்தாள்.

“எனக்குமே அர்ஜுனை பாக்கணும் போல இருக்கு” என்ற வார்த்தைகள் அவனையும் மீறி வந்தன.

“அக்காவ பாக்காம, அர்ஜுனை மட்டும் பாக்கணும்னா, அது கொஞ்சம் கஷ்டம் தான். அவன் சரியான அம்மா பிள்ளை” என்று அவள் யோசிப்பது போல பாவனை செய்தாள்.

“சந்தர்ப்பம் கிடைக்கும் போது பாத்துக்கலாம்” என்றான்.

நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“அப்புறம் சொல்லுங்க. வேற ஏதாவது பொண்ணு மேல உங்களுக்கு இன்ட்ரஸ்ட் வந்துச்சா?” என்று கேட்டாள்.

“அந்த சைடு நான் போகல. அதை பத்தி யோசிக்கவுமில்லை” என்று புன்னகை முகமாக கூறினான்.

“அப்ப ஐயா, அரேஞ்ச் மேரேஜ் தான் பண்ணிப்பாங்களோ?” கேள்வியாக அனன்யா நிறுத்தினாள்.

“தெரியல” என்று உதட்டை பிதுக்கினான்.

“இது என்ன பதில்?” என்று அவள் புருவங்களை சுருக்கினாள்.

“ஆக்சுவலி, மேரேஜ் பண்ற ஐடியா இல்ல. அதனால நீ கேட்கும் போது எனக்கு பதில் சொல்ல தெரியல. பட், அம்மா வரன் பாக்குறேன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. நான் வேணாம்னு தட்டி கழிச்சுக்கிட்டே இருக்கேன்” என்றான் பொதுப்படையாக.

“எல்லாரும் ஒன்னும் கெட்டவங்க இல்ல சார். என்னை போல நல்லவங்களும். ஐ மீன், நம்மள போல நல்லவங்களும் உலகத்துல வாழ்ந்துட்டு தான் இருக்காங்க. அந்த ஒருத்தவங்கள தேடி பிடிச்சு கல்யாணம் பண்ணிக்கலாமே?” என்றாள்.

அவள் குறிப்பு காட்டுகிறாளோ என்ற சந்தேகம் எழுந்தாலும், அவன் பதில் சொல்லவில்லை. புன்னகையோடு நன்றாக பூம்பூ மாடு போல தலையாட்டினான்.

“நான் வேணும்னா உங்களுக்கு பொண்ணு பார்க்கவா? உங்க கேரக்டருக்கு பொருத்துற மாதிரி” என்று நீட்டி முழக்கி கேட்டாள் அனன்யா.

“நீ செகண்ட் பிசினஸ் ஏதாவது ஓபன் பண்ணிருக்கியா?” என்று அலட்டிக் கொள்ளாமல் கேட்டான்.

முதலில் புரியாமல் விழித்தவள், பிறகு புரிந்து கொண்டு புன்னகைத்தாள்.

“நோ நோ, உங்களுக்காக மட்டும். ஸ்பெஷல். உங்களுக்கு எப்படி பட்ட பொண்ணு வேணும்னு சொல்லுங்க. நீங்க எதிர்பாக்குற மாதிரி பொண்ணு இல்லனாலும், புதுசா உருவாக்கிடலாம்” கைகளை ஆட்டி பாவனை பிடித்து பேசினாள்.

“நீ பரதநாட்டியம், குச்சிப்புடி ஏதாவது கத்துக்கிட்டியா?” என்று அவன் சம்பந்தமே இல்லாமல் கேட்டான்.

“இல்லையே. பட், கத்துக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா டான்ஸ் நல்லா ஆடுவேன்” என்றாள்.

“ஆடுவேன்னு சொல்லு. நல்லா ஆடுவேன்னு நீயே சொல்லக்கூடாது. அதை மத்தவங்க பார்த்துத்தான் சொல்லணும்” என்றான்.

“நீங்க சொல்றதா இருந்தா, நான் இப்பவே ஆடி காட்டுறேன். அதுக்கப்புறம் நல்லா இருக்கா இல்லையான்னு நீங்களே சொல்லுங்க” என்றாள் லகுவாக.

“உண்மையிலேயே உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது போல. எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு பதில் வச்சிருக்க.”

“ஆனா உன்கிட்ட இப்படி பேசுறது உங்களுக்கு பிடிச்சிருக்கு. அதனாலதான் அமைதியா கேக்குறீங்க. இல்லன்னா எழுந்து போய்கிட்டே இருப்பீங்க. ஐ நோ இட்” என்றாள்.

அவள் சொல்வதென்னவோ உண்மைதான். தன்னை அவள் கணிப்பது அவனுக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி தான். ஆனால் முகத்தில் காட்டிக் கொள்ளவில்லை.

திடீரென்று வயிற்றில் கையை வைத்துக் கொண்டாள். முகத்தை சுருக்கியவள், “அர்ஜுன் சார், பசிக்குது. லஞ்ச் ஏதாவது சாப்பிடலாமா?” என்றாள்.

அவன் பயந்துவிட்டான். அவள் பேசிய பிறகுதான் சற்று சமாதானம் அடைந்தான். அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு அதையே ஆர்டர் செய்தான்.

அவள் எல்லாவற்றையும் சைவத்தில் கேட்டது அவனுக்கு புரிந்தது.

“எந்த டிஷ்ஷும் அசைவத்துல கேட்கலையே?” அவன் கேள்வியாக நிறுத்தினான்.

“இன்னைக்கு சஷ்டி விரதம்” என்று கண்களை சிமிட்டினாள்.

“விரதம்னா சாப்பிடாம தானே இருப்பாங்க?” என்று அவன் சந்தேகம் கேட்க,

“ஹலோ, எங்களுக்கு பசிக்குமில்ல. சாப்பிடாம எல்லாம் விரதம் இருக்க முடியாது. நான்வெஜ் சாப்பிடாம வேணா விரதம் இருக்கலாம்” அவள் வியாக்கியானம் பேசினாள்.

அதில் அவன் புன்னகை பெரிதாக மலர்ந்தது. அவனுக்குமே வெஜிடேரியன் ஆர்டர் செய்தான்.

“பரவால்ல, நீங்க நான்வெஜ் சாப்பிடுங்க. எனக்கு ஏதும் பிரச்சனை இல்ல” என்றாள்.

“உனக்கு ஆசையை தூண்டி, வயிறு வலிக்க வைக்கிற அப்படி ஒரு சாப்பாடு எனக்கு வேண்டாம். இது தான்னு இல்ல, எது கொடுத்தாலும் சாப்பிடுவேன். நல்லா இருக்கணும். அவ்வளவுதான்” என்றான்.

“சூப்பர் சூப்பர் அர்ஜுன் சார். உங்கள கட்டிக்க போறவங்க ரொம்ப குடுத்து வெச்சவங்க. உங்கள போல ஒரு ஹஸ்பண்ட் எல்லாம் ரொம்ப ரேர் பீஸ் தான். அதனால தயவு செஞ்சு கல்யாணம் பண்ணிக்காம இருக்காதீங்க. ஒரு நல்ல பொண்ணுக்கு ஒரு நல்ல ஹஸ்பண்ட் கிடைக்கட்டுமே?” மூக்கை சுருக்கி பேசினாள்.

அவன் பதில் சொல்லவில்லை. தலையாட்டினான். அதன் பிறகு அவர்கள் பேச்சு தொடர்ந்து கொண்டே சென்றது.

இதில் அதிகமாக யார் பேசினார்கள் என்றால், அது அனன்யாவாகத்தான் இருக்கும். அவள் பேசுவதை கேட்பது கூட அவனுக்கு பிடித்திருந்தது. அதனாலேயே பொறுமையாக அமர்ந்திருந்தான் என்று சொல்லலாம்.

அவளுக்கு அழைப்பு வந்ததும் தான் இருவருமே துணுக்குற்றார்கள்.

“அவ்வளவுதான். டைம்ஸ் அஃப். அம்மா இஸ் காலிங். அவங்க கொடுத்த டைமிங் முடிஞ்சு போச்சு” என்றபடி அலைபேசியை அவன் முன்பு காட்டினாள்.

அவள் தாயின் புகைப்படத்தோடு எண்ணும் மின்னிக் கொண்டிருந்தது.

“உங்க அம்மா உன்ன மாதிரி இருக்காங்க” என்றான்.

“இல்ல, அவங்கள மாதிரி தான் நான் இருக்கேன்” என்றவள் உதட்டில் உஷ் என்று அமைதியாக இருக்கும் படி கையை வைத்தாள். “எடுக்கலனா, திரும்பி திரும்பி கால் பண்ணுவாங்க. நான் பேசிட்டு வரேன்.”

அவள் தாயிடம் பவ்யமாக பேசுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான். வேண்டுமென்றே வம்பு செய்யலாமா என்று தோன்றியது. ஆனால் தாயின் முன்பு அது சரி இல்லை என்று தோன்றிவிட, அமைதி காத்தான்.

“ஓகே சார். இன்னொரு நாள் மீட் பண்ணலாம். அடுத்த வாரமேன்னாலும் ஓகே தான் எனக்கு. நான் குட்டி அர்ஜுன கூட்டிட்டு வர ட்ரை பண்றேன்” என்றாள்.

அவனும் சரி என்று தலையாட்டினான். இருவரும் பிரிந்து சென்றார்கள்.
 

Author: Vishakini
Article Title: புனர்ஜென்ம பந்தமடி நீ எனக்கு - 25
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அனன்யா....cute ஆ irukaa🤩🤩🤩🤩
குழந்தை கூட என்ன டா பொறாமை அர்ஜுன்