பூவிழி வாசம் - 5

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Vishakini

Moderator
Staff member
Nov 7, 2025
1,634
6,876
113
பாகம் 5.
கூடையில் இருந்த பூக்களை இவ்விரண்டாக எடுத்து நளினமாக கைகளை வளைத்து மாலையாக தொடுத்துக்கொண்டிருந்தாள் இசைநிலா.
பக்கத்து வீடு ஒன்றில் மறுநாள் பூப்புனித நீராட்டுவிழா. ஊரில் யாருக்கு மாலை வேணும் என்றாலும் அவளிடம்தான் கேட்பார்கள். தம்பியையும் அழைத்துக்கொண்டு சைக்கிளில் சென்று அலைந்து திரிந்து பூக்களைப்பிடுங்கி வந்து, தங்கள் வீட்டில் இருக்கிற பூக்களையும் சேர்த்து வண்ணவண்ணமாக மாலைகளைக் கட்டுவதில் அவள் மிக கெட்டிக்காரி மட்டுமல்ல, அதில் அவளுக்கு அதிக விருப்பமும் கூட.
வெள்ளையும் சிவப்பும் மஞ்சளும் பச்சையுமாக இருந்த மாலையில் மினுங்கல் நூலைச்சுற்றி,விட்டு தூரத்தில் மாலைகளைப் பிடித்து அழகு பார்த்தவள், தனக்கு திருப்தி ஏற்படவே பெரிய வாழைத்தடலில் மாலையை வைத்து வாழைநாரால் மெல்லியதாக கட்;டினாள்.
ஒரு மாலையை முடித்துவிட்டு மற்ற மாலையை ஆரம்பிக்கவும் வாசலில் தபால்காரனின் மணிச்சத்தம் கேட்டது. எல்லாவற்றையும் அப்படியே வைத்துவிட்டுத் துள்ளி ஓடினாள் இசைநிலா.
வேலைக்காக விண்ணப்பித்திருந்தவள், எப்போதடா அழைப்பு வரும் என்று காத்திருந்தவள் அவள். ~அவர்களிடம் இருந்து நேர்முகத்தேர்விற்கான கடிதம் வரவில்லையே| என யோசித்துக்கொண்டிருந்தவள், தபால் மணிச்சத்தம் கேட்கவும் விரைந்துவிட்டாள்.
இப்போதெல்லாம் இப்படியான அலுவலகம் சார்ந்த விடயங்கள் தவிர வேறெதற்கு தபால் வரப்போகிறது. ஓடிச்சென்று வாங்கியவள், பிரித்துப் பார்த்தாள். ஆமாம்.....நகரில் இருந்த அந்தப் பெரிய கம்பெனியில் இருந்துதான் கடிதம் வந்திருந்தது. அவள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்தாள்.
கட்டுக்கடங்காத சந்தோசம் அவளுக்கு, எப்படியாவது இந்த வேலை மட்டும் அவளுக்கு கிடைத்துவிட்டால் போதும். வீட்டுக் கஸ்ரம், தம்பியின் வைத்தியம் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்ளலாம். மனதில் ஆயிரம் கணக்குகள் போட்டபடி கடிதக்கவரை தந்தையிடம் நீட்டினாள்.
~எப்போது நேர்முகத்தேர்வு?| சைகையில் கேட்ட தந்தைக்கு ~வரும் சனிக்கிழமை| என்பதை சைகையிலேயே சொன்னாள் அவள். அவரும் தலையை ஆட்டிக்கொண்டே. மனைவியிடம் சொல்ல,
'இசைநிலா மட்டும் எப்படி தனியாகப் போவது' என்ற கேள்வி எழுந்தது.
பெண்கள் இப்போது நிறைய முன்னேறிவிட்டார்கள், வெளிஉலகம் ஒன்றும் அவ்வளவு மோசமானது இல்லை எனவும் சைகையில் சொன்ன மகளை விசித்திரமாகப் பார்த்தார் தந்தையார்.
அதிகாலையில் வெளிக்கிட்டால் கூட மாலையில்தான் நகருக்குச் சென்றுசேரமுடியும். அதனால் முதல ;நாளே போவதென்றும் அத்தை வேலை செய்யும் வீட்டில் தங்கிவிட்டு நேர்முகத்தேர்வை முடித்துக்கொண்டு அன்று இரவே புறப்பட்டு ஊருக்குத் திரும்பிவிடுவதாகவும் அவள் சொன்னதும்தகப்பனார் ஏதும் சொல்லவில்லை.
அத்தை பத்மினி வேலை செய்யும் வீட்டில் இரவு தங்கலாமா என்பதைக் கேட்டுவிடுவோம் என்றதும், அவளும் சம்மதமாய் தலையை ஆட்டினாள்.
அத்தை பத்மினி, மீது இசைநிலாவிற்கு அதிக அன்பிருந்தது. அத்தை எப்போதும் எளிமையே உருவாக இருப்பார். அவள் பார்த்த நாள் தொடக்கம் நூல் சேலையும், நெற்றியில் சிவப்பு ஸ்ரிக்கர் பொட்டும் கழுத்தில் சின்ன மணிமாலையும் தான். அதிர்ந்துபேசத் தெரியாத அத்தையின் கள்ளங்கபடமில்லாத சிரிப்பில் அவள் எப்போதும் மெய்மறந்து போவதுண்டு.
அத்தை முதியோர் இல்லம் ஒன்றில்தான் முதலில் பணிசெய்தார், அதன் பிறகுதான், வேறொரு வீட்டிற்கு வீட்டுப்பணிக்காகச் சென்றிருப்பதாகச் சொன்னார். அத்தை வீட்டுவேலைக்கு போனது முதலில் அப்பாவிற்குப் பிடிக்கவில்லைதான் என்றாலும் அத்தையின் வேண்டுகோளுக்காக ஒன்றும் சொல்லவில்லை. அந்த வீடு பெரிய அழகான வீடு என்றும் சம்பளம் அதிகம் என்றும் அங்குள்ளவர்கள் மிகவும் நல்லவர்கள் என்றும் அத்தை ஒருமுறை வந்தபோது சொன்னது இசைநிலாவிற்கு தெரியும், வாய் பேசமுடியாத அவளிடம் அத்தைக்கு எப்போதுமே பரிவு அதிகம். அத்தைக்குத்தான் மாதாந்தம் மிகப்பெரியதொரு செலவு இருக்கிறதே, அதையும்தாண்டி அவளையும் படிக்கவைத்தது அத்தையின் கெட்டித்தனம் என்றுதான் சொல்லவேண்டும் என நினைத்தாள்.
அத்தை பணி செய்யும் அந்த வீடுதான் அவளது தலை எழுத்தையே மாற்றிவிடப்போகிறது என்பது அவளுக்கு அப்போது தெரியாது.
உடனேயே இசைநிலாவைப் பெற்றவரும் தமக்கையாரிடம் நிலைமையைச் சொல்லி, உதவி கேட்டார்.
முதலில் மருமகள் தனியே வரப்போகிறாள் என்பதில் அத்தைக்கும் மனதில் பயம் ஏற்பட்டது என்றாலும் பிறகு தன்னைத்தானே தேற்றிக்கொண்டார்.
~இன்றைய காலத்தில் பெண்பிள்ளைகள் எவ்வளவு சாதனைகளைச் செய்கிறார்கள், எல்லாவற்றிற்கும் பயந்து பயந்து வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் ஆகுமா?
வெளிஉலகத்தைப் பார்க்காமலே இருந்தால் எப்போதுமே அவர்கள் பயந்தாங்கொள்ளிகளாகவே வாழ வேண்டியது தான்..பத்தாம்பசலித்தனங்களை ஒதுக்கிவிட்டு, பெண்பிள்ளைகள் துணிவும் தைரியமும் கொண்டவர்களாக வாழ நாம் தான் வழிகாட்டவேண்டும்,| என பூவிழி அலைபேசியில் சொன்னதைக்கேட்ட பத்மினியம்மாவிற்கு உள்ளம் தெளிந்துவிட்டது.
இசைநிலா வாய்பேசமுடியாதவள் என்பதாலேயே அவளை வீட்டில் பொத்திப்பொத்தி பாதுகாத்தனர். ஆனால், அதுவே அவளுக்குள் ஒரு வைராக்கியத்தைக் கொடுத்தது. எந்தக்குறைபாடு அவளைப் பிடித்துப்பிடித்து வைக்கிறதோ அதை, ஒரு குறைபாடாகவே அவள் எடுத்துக்கொண்டதில்லை.
பேசினால் ஒளிய அவள் வாய்பேசமுடியாதவள் என யாராலும் கண்டுபிடிக்கமுடியாது. அதனால் அநாவசியமாக அவளும் யாரிடமும் பேசுவது கிடையாது.
அவளுக்கு ஐந்து வயதாக இருந்தபோது, அருகில் எறிகணை விழுந்து வெடித்ததைப் பார்த்ததில் இருந்துதான் அவளுக்கு பேச்சு வரவில்லை. தானும் மற்றவர்களைப்போல என்றோ ஒருநாள் பேசிவிடுவேன் என்ற தீராத நம்பிக்கை அவளிடம் இருந்தது.
தம்பியார் கேட்டதும் பத்மினியம்மாவும் அந்த வீட்டுப் பெரியவரிடம் பூவிழி மூலம் கேட்டு, சம்மதத்தை வாங்கிவிட்டார்.
~ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே புறப்படவேண்டும் என எண்ணமிட்டபடியே அடுத்த மாலையையும் கட்டிமுடித்தாள்.

காலை உணவை கொடுத்துவிட்டு மகனின் அருகில் அமர்ந்த தாயார் சொன்ன விடயங்கள் வானகனுக்கு உணவைக்கூட சாப்பிடவிடாமல் செய்துவிட்டது.
~அம்மா..அண்ணா வீட்டை போறதிலை எனக்கு ஒன்றும் இல்லை, ஆனா கொஞ்சநாள் வருகை விரிவுரையாளராக வேலை செய்யவேணும் எண்டுறதைத்தான் ஏற்கமுடியேல்லை..இஞ்சை ஏனம்மா வேலைசெய்ய, கனடா போயே வேலை செய்யிறனே...|தாயிடம் கெஞ்சிக்கொண்டிருந்தான் வானகன்.
~அது சரிவராது, போறதுக்கு எப்பிடியும் ஆறுமாசமாவது செல்லும், அதுவரைக்கும் சும்மா சுத்திக்கொண்டு திரியாமல், அண்ணாவோடைபோய் வேலைசெய், நான் அண்ணாட்டையும் அண்ணியிட்டையும் எல்லாம் கதைச்சிட்டன், பேசாமல் வெளிக்கிடு| என்ற அன்னையின் வார்த்தைகளை அதற்குமேல் அவனால் எதிர்க்கமுடியவில்லை.
வானகனின் பெரியப்பாவின் மகன், தலைநகரில் தனியார் பல்கலைக்கழகம் நடத்திக்கொண்டிருந்தார். அண்ணா அண்ணி இருவருமே விரிவுரையாளர்கள். பெரியப்பா பெரியம்மா இருவருமே இறுதி யுத்தத்தில் இறந்துவிட்டதால், இவனுடைய அன்னை தான், அண்ணனுக்கு பெண்பார்த்து திருமணம் செய்துவைத்தது எல்லாம். இவனுக்குமே அண்ணன் என்றால் மிகவும் விருப்பம்தான்.
அதெல்லாம் அவனுக்கு மனதிற்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால் ஆறுமாதங்கள் வேலை செய்வதென்பதுதான் அவனுக்கு பிடிக்கவில்லை.
வானகன், மிகவும் கெட்டிக்காரன், அவனுடைய தந்தையார் கப்பலில் கப்டனாக வேலை செய்தார். மகனின் திறமைகளைக் கண்டு, தனக்கு தெரிந்தவர்கள் மூலம் அவனுக்கு வெளிநாட்டில் தொழில்வாய்ப்பிற்கு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.
இன்னும் சில மாதங்களில் அவன் வெளிநாடு செல்வது உறுதியாகிவிட, அதுவரை வீட்டில் பொழுதுபோக்காது அண்ணாவுடன் வேலை செய,; என்ற தாயின் வார்த்தைகள் அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை தான் என்றாலும் அதைத் தட்டமுடியாமல் அண்ணனுக்கு அழைப்பு எடுத்தான்.
எதிர்முனையில் உடனேயே அழைப்பு இணைக்கப்பட்டது.
~என்னடா...சித்தி சொன்னதெல்லாம் விளங்கினதா? எப்ப வாறாய்? சிரிப்புடனே அண்ணன் கேட்ட கேள்வியில் தாயின் மீது சற்று கோபம் கொண்டவன்,
~ம்ம்...உங்கட சித்தி சொல்லிட்டா, பிறகு மீறமுடியுமா? அதுதான் நானே வெளிக்கிடப்போறன்...எப்ப வர்றது அண்ணா?| என்றான்.
ஞாயிற்றுக்கிழமை என்னுடைய நண்பன் ஒருத்தன் வீட்டிலை விருந்து இருக்கு, சேர்ந்துபோகலாம், சனிக்கிழமையே வா| என்ற அண்ணனுக்கு
~சரி...சரி..| என்றுவிட்டு ~அண்ணியிட்டை அலைபேசியைக் குடுங்கோ| என்றான்.
சிறிது நேரத்தில், சொல்லு வானு, என்ற அண்ணியிடம்
~சனிக்கிழமை வாறன் அண்ணி, கோழிப்புரியாணி செய்துவையுங்கோ| என்றான்.
~சரி..சரி..வா..அடுத்த நாளிலை இருந்து எங்களோடை வேலைக்குவரவேணும், ஞாபகம் இருக்கோ| என்ற அண்ணியிடம்
~நானே இன்னும் படிக்கிற மாணவனாத்தான் என்னை நினைச்சுக்கொண்டு இருக்கிறன், அப்பிடி இருக்க, உந்த படிப்பிக்கிற வேலை எல்லாம் எனக்கு சரிவருமொ தெரியேல்லை..| என்றவனிடம்,
~உந்தக்கதையெல்லாம் சரிவராது, உடனே வாறாய், எங்களோடை வேலையிலை சேருறாய், கொஞ்ச நாளைக்கு உன்னை இவையளோடை மல்லுக்கட்ட விட்டால்தான் நீ செய்த குளப்படி உனக்கு விளங்கும்| என்ற அண்ணியிடம்,
எல்லாம் தெரியும்..தெரியும்..வையுங்கோ..| என்றுவிட்டு அலைபேசியை அணைத்தான்.
~ஆளாளுக்கு கலாய்க்கிறாங்கடாப்பா...| தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன் எழுந்து வெளியே சென்றான்.
 

Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 5
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
  • Like
Reactions: ஷமீம்

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
வானகன்.....இவங்க அண்ணா அண்ணி யார்?????
இசை இப்ப போறது செழியன் வீட்டுக்கா????
அப்ப இசை இலாக்கு ஜோடியா