பாகம் 6
நேரம், மாலை நான்கு மணியைத் தொட்டுக்கொண்டிருந்தது. கடற்கரையை ஒட்டியிருந்த அந்த மழலையர் பூங்காவில், இருந்த கல் நாற்காலியில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர் பூவிழியும் பரிதியும். கடலோரக் காற்று சில்லென்று வீசியது.
"காத்து சில்லென்று இருக்கு" என்றாள் பரிதி.
"ம்ம்...கடல் காத்து அப்பிடித்தான் இருக்கும், இயற்கையின் அற்புத சத்தங்களில இதுவும் ஒண்டுதானே, அதனால இனிமையாதானே இருக்கும்" என்றாள் பூவிழி.
"அதென்னடி, இயற்கையின் அற்புத சத்தங்கள்?" என்ற தோழியிடம்,
"மழையின் ஓசை, காற்று வீசி மரத்தில மோதும்போது, உண்டாகிற ஓசை, அடுத்தது இந்த கடல் அலையின் சத்தம்"
"ஓ.....அபாரம்...அபாரம் பூவிழி," என்றாள் பரிதி.
மென்மையாய் சிரித்தாள் பூவிழி.
"பூவிழி, இப்ப சொல்லு, எதைப்பத்தி யோசிச்சுக் கொண்டிருக்கிறாய், உணர்வே இல்லாம யோசிக்கிற அளவுக்கு அப்பிடி என்னதாண்டி பிரச்சினை," எனக்கேட்க,
"பிரச்சினை எண்டு பெரிசா எதுவும் இல்ல, ஆனா...." இழுத்தாள் பூவிழி.
"சொல்லு பூவிழி, சொன்னாத்தான் உன்ர மனப்பாரம் குறையும், எனக்கு தெரிஞ்ச தீர்வையும் நான் சொல்லலாம், இப்பிடியே உனக்குள் வைச்சிருக்கிறதால என்னதான் நடக்கப்போகிது," எனப்பரிதி சொல்ல,
"பரிதி, இவ்வளவு நாளா என்ர மனசுக்குள்ள மட்டும் இருந்ததை இப்ப உன்னட்டச் சொல்லப்போறன்," என்றாள்.
பூவிழிக்குத் தெரியும், பரிதியிடம் சொல்லப்பட்ட ஒரு விடயம், எந்தக் காரணம் கொண்டும் வெளியே போகாது என்பது, அதுவும் பூவிழியைப் பற்றியதென்றால் பரிதி மூச்சும் விடமாட்டாள், ஏனெனில், மிக ஏழ்மையான குடும்பத்தில் இருந்து, படித்து பட்டம்பெற்று, நல்லதொரு உத்தியோகத்தில் இருக்கும் பரிதி, வீணான பேச்சுக்களையோ, மற்றவர்களைப்பற்றிய விடயங்களையோ பேச விரும்பாதவள், அதனால் தானோ என்னவோ, அதே குணங்களைக் கொண்ட பூவிழியிடம் மட்டும் அவள் அதிகமாய் பேசிப்பழகுவாள்.
இருவரும் நான்கு ஆண்டுகளாக அந்த வைத்தியசாலையில் தோழிகளாக பணிபுரிந்து கொண்டிருந்தனர். ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டவர்களாகவும், இருவருமே வறுமையை வென்றவர்களாகவும் இருந்தனர். பெருமூச்சொன்றை, வெளிவிட்ட பூவிழி,
"பரிதி, வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி அமையாது இல்லையா, எனக்கு அமைஞ்சது ஒருவிதம், எங்கட ஊர், மருதநில வகை, நான் பிறக்கும் போதே அம்மா இறந்திட்டா, எனக்கு ஆறு மாசம் இருக்கும்போதே அப்பா, வேற ஒரு கலியாணம் செய்துகொண்டு போயிட்டார், இதெல்லாம் பாட்டி சொல்லித்தான் எனக்குத் தெரியும்," என்விட்டு, மௌனித்த தோழியை ஈரவிழிகளோடு பார்த்தாள் பரிதி.
'என்னை வளக்கிறது கஸ்ரம் எண்டு, தெரிஞ்ச ஒரு பாதர் மூலமா, என்னை விடுதிக்கு அனுப்பிப்போட்டா பாட்டி. பாவம், அவவுக்கும் வயசுபோட்டுது, சின்ன வயசில இருந்தே விடுதியில தங்கித்தான் படிச்சன், விடுமுறைக்கு மட்டும் பாட்டியோட போய் இருக்கிறது, மற்றபடி விடுதி வாசம் தான்' சற்று நிறுத்தியவள்,
'எனக்கு சிநேகிதம் எண்டு அங்க ஒருத்தரும் இல்லை, தனியத்தான், விடுதியிலயும் யாரிட்டயும் அதிகமா பேசிப்பழகினது கிடையாது, என்னைச் சுத்தி, ஒரு சின்னவட்டத்தைப் போட்டு நான் அதுக்குள்ளயே வாழ்ந்திட்டன். என்னுடைய குழந்தைப் பருவம் ரொம்ப கொடுமையானது எண்டு நினைக்கிறன், ஏனெண்டா, நான் சின்னவயசில, எப்பவும் எங்கயோ ஒரு வெளியைப் பாத்தபடி வாயில கையைவைச்சுக்கொண்டு இருப்பனாம், என்னைப் பாக்கவே பரிதாபமா இருக்கும் எண்டு சிஸ்ர்ர் அடிக்கடி சொல்லியிருக்கிறா,
அப்பிடியே, அங்கயே இருந்து வளந்திட்டன், படிப்பில ஓரளவுக்கு கெட்டிக்காரியா இருந்ததால, அங்க என்னை படிப்பிக்கிற செலவை, எங்கட வைத்தியர் அம்மாவும் வைத்தியர் ஐயாவும்தான் ஏற்றுக்கொண்டிருந்தவையள். அது உனக்கும் தெரியும்தானே...
விவரம் தெரிஞ்ச பிறகு, எல்லாருக்கும் பிடிக்கிற ஒருத்தியா இருக்கவேணும் எண்டு நினைச்சு, என்னுடைய எல்லாச் செயல்களையும் நான் பாத்துப் பாத்துச் செய்வன்,
உயர்தரம், முடிச்சிட்டு இருந்த காலத்தில பாட்டிக்கு வருத்தம் எண்டு தகவல் வந்ததும் சிஸ்ரர் ஊருக்கு அனுப்பிவிட்டவா, சில மாதங்கள் ஊரில நிண்டன், அப்பதான், நடந்தது அந்த விபத்து.
"விபத்தா," அதிர்ச்சியாய் கேட்டாள் பரிதி.
"ம்ம...அது விபத்துதான், சொல்லுறன், பொறு, எங்கட ஊர் அவ்வளவு இயற்கை அழகான ஊர், இந்த இயற்கையின்ர அழகிலதான் நான் நிறையத்தடவை என்னுடைய மனக்குறைகளை மறந்திருக்கிறன், எங்கட ஊருக்கு ஒரு பக்கம் சின்னதா ஒரு காடு இருக்கு, காடு தொடங்கிற இடத்தில வயலும அதையொட்டி கிணறும், தாமரைக் குளமும் இருக்கு,அந்தக்கிணத்திலதான் நாங்கள் குடிதண்ணீர் எடுக்கப்போறது,
எப்பவாவது கோயிலுக்கும் போயிட்டு தாமரைக்குளத்தில் தாமரைக்காய் புடுங்கிக்கொண்டு வருவன். எல்லாமே தனியத்தான், அந்த நேரம், ஒவ்வொருநாளும் மாலைநேரம் தண்ணி எடுக்கப்போறதை, வழக்கமாக்கியிருந்தன்.
பாட்டி சொன்ன கதைகளாலயோ, இயல்பா எனக்கிருந்த எண்ணமோ, ஏதோ ஒன்று, என் கஷ்ரங்களில இருந்து, என் வேதனைகளிலை இருந்து மீட்க ஒருத்தன் வருவான் என்ற எண்ணத்தை எனக்குள்ள தந்திருந்தது. அந்தத் தடவை ஊருக்குப் போனபோதுதான், அவரை, அதுதான், பொற்செழியனைச் சந்திச்சன், அவர் ஒரு வைத்தியர்,
பல்கலைக்கழக படிப்பை முடிச்சிட்டு வைத்தியர் பயிற்சிக்காக அங்க எங்கட ஊருக்கு வந்திருந்தார், முதல் நாள், நான் கோயிலுக்கு போனதைக் கண்டிருக்கிறார், என்ன நினைச்சாரோ, அடுத்தநாளும் அதே நேரம் நான் வரக்கூடும் எண்டு நினைச்சாராம், வந்து நிண்டார். தனிய நிண்ட எனக்கு, அதுவரை ஏற்படாத அனுபவம் அது, முதலில நல்லா பயந்திட்டன், நான் நின்ற தோற்றம் அவருக்கும், ஒருமாதிரி இருந்திருக்கவேணும்,
"பயப்பிடாதேங்கோ, நான் சும்மாதான், வந்தன்" என்றுவிட்டு,
"உங்கட பெயர் என்ன?" என்றார்,
நானும் விளையாட்டாக, "சுரபி" என்றேன். பின்பு கதைக்கத் தொடங்கினார். ஏனோ, அவரை முதல் முதலா பாத்த உடனே, ~என்னை மகிழ்ச்சிப்படுத்த ஒருத்தன் வருவான் எண்டு பாட்டி சொன்னது இவரைத்தானோ எண்டுதான் நினைக்கவைத்தது, அதுக்குப் பிறகுதான், அடிக்கடி சந்தித்தோம், அவர் தன்னைப்பற்றி எல்லா விசயத்தையும் சொன்னார், நானும் என்னைப்பற்றி சொன்னன், முதலில் நல்ல நண்பர்களாகத்தான், நாங்கள் பழகினம்,
திடீரெண்டு ஒரு நாள், ஒரு கடிதத்தைத் தந்துவிட்டு,
~வீட்டபோய் வாசியுங்கோ| எண்டு சொன்னார், நானும் பரபரப்போட வீட்ட வந்து கடிதத்தைப் பாத்தன், என்னைக் காதலிக்கிறன், எண்டு சம்மதம் கேட்டிருந்தார், மனசுக்குள்ள பயமா இருந்தது, சம்மதம் எண்டால் நாங்கள் இருந்து கதைக்கிற மரத்தில ஆம், என்று எழுதிவிடச் சொல்லியிருந்தார், எனக்கு இருந்த பயத்தில அடுத்த நாள் நான் தண்ணிக்குப் போகவே இல்லை, பேசாமல் வீட்ட நிண்டிட்டன், ஆனா, என்னை மீட்கவந்தவர் அவர்தான், எண்ட எண்ணம் எனக்குள்ள ஆழமா இருந்து துலைச்சதால, அடுத்தநாள், தண்ணிக்குப்போகேக்கை மரத்திலை ஆம் என்று எழுதிவைச்சிட்டு வந்திட்டன்.
"அட.....சம்மதம் சொன்னியா, என்ன சொல்லுறாய் பூவிழி, நீயா, என்னால நம்பவேமுடியேல்ல, சொல்லு.....சொல்லு" என்றாள் பரிதி.
~உனக்காக காத்துக்கொண்டிருந்தவரோ?|
மரத்தடியில காத்துக்கொண்டிருந்தார், பாக்க பாவமா இருந்தது, நான் போன உடனே,
"ஏன் நேற்று வரேல்ல?" எண்டுதான் கேட்டார். நான் பதில் சொல்லாமல், மரத்தில ஆம் எண்டு எழுதிப்போட்டு நிண்டன். கிட்ட வந்து பாத்தவர், சிரிச்சதைப் பாத்து நானும் சிரிச்சன்,
~அவருக்கு சரியான சந்தோசம், நேரடியாகவே என்னைக்கேட்டதும், நானும் சம்மதம் சொல்லிப்போட்டன்,|
பிறகென்ன, பாட்டியிட்ட, அது இதெண்டு சொல்லிப்போட்டு, நானும், வேளைக்கே போவன், அவரும் வேலை முடிஞ்சதும், வந்திடுவார், கதைச்சம், நிறைய கதைச்சம்,
தனக்கு ஒரு தங்கச்சியும் தம்பியும் இருக்கெண்டு சொன்னார், அம்மா அப்பா இருக்கினம், அம்மா எண்டா தனக்குசரியான பயம் எண்டும் சொன்னவர், நானும் என்னுடைய அநாதரவான நிலையைச் சொல்ல, வேண்டாம், வேண்டாம், எண்டு தடுத்துப் போட்டார்.
~இனி உனக்கு நான் இருக்கிறன், என்ர குடும்பம் தான், உனக்கு உறவு எண்டு சொன்னார், நான் வீட்ட சமைக்கிறதை எடுத்துக்கொண்டு போவன், பாத்துப் பாத்து ருசிச்சு சாப்பிடுவார்,| என்றவள்,
"ஒரு நாள், அது..." அவள் திக்கித் திணறினாள்,
"என்ன பூவிழி, சொல்லு, என்னாச்சு?" பரிதி கேட்க
கழுத்திலிருந்த கறுப்பு கயிற்றை எடுத்துக் காட்டினாள், 'இதைக் கொண்டுவந்து, கட்டினார், என்ன எண்டு கேட்டதற்கு, எனக்கும் உனக்குமான உறவின் அடையாளம்' என்றார். எனக்கு ஒருமாதிரியாகிவிட்டது, ஏதேதோ யோசித்தேன்,
என் எண்ணங்கள் அவருக்குப் புரிந்திருக்கவேண்டும், 'பயப்படாத சுரபி, நான் நாளைக்கு ஊருக்குப் போறன், இத உனக்கு தரவேணும் எண்டு நினைச்சன், விரும்பினா தர்றன், இல்லாட்டி வேண்டாம்,' என்றார்.
அதுக்குப்பிறகு நான் சம்மதிச்சதும், என்ர கழுத்தில அவரே கட்டினார், ஆனால், அவரிட்ட எனக்கு பிடிச்ச ஒரு விடயம், அந்த ஒரு மாதத்தில ஒருநாள் கூட அவரின்ர விரல் கூட என்னில பட்டதில்லை, அவ்வளவு கண்ணியமா காதலிச்சவர் அவர்,
"பிறகு ...என்ன நடந்தது பூவிழி?"
பிறகென்ன, அவர் போகப்போறார், எண்டதும் நான் அழுதன், அவரும் கண்கலங்கினார், 'போய் கெதியா வந்திடுவன்' என்றுவிட்டு போனவர்தான், அதுக்குப்பிறகு நான் அவரைக் காணவேயில்லை,
"என்னடி சொல்லுறாய், " அதிர்ச்சியாய் கேட்டாள் பரிதி.
'ஒரு மாசத்தில பாட்டியும் செத்துப்போக, திரும்பவும் சிஸ்ரர் மடத்துக்குப் போனன், அங்க இருந்துகொண்டே, படிக்கிறதுக்கு விண்ணப்பிச்சு, அதோட சேர்த்து உளவியலும் படிச்சு, சிஸ்ரர் மூலமாவே இந்தப் பெரிய கொஸ்பிற்றலில வேலையும் கிடைச்சிட்டுது, அதுக்குப்பிறகு தெரியும்தானே"
"எனக்கு கஸ்ரமா இருக்கு பூவிழி, வாழ்க்கையில எவ்வளவு கஸ்ரத்தை அனுபவிச்சிருக்கிறாய், அது சரி, இதெல்லாம் நடந்து முடிஞ்சிட்டுது, இப்ப ஏன் அழுதனி?"
'இஞ்ச வந்து ஒரு ஆறு மாசத்தில ஒருநாள், முகநூலில அவரின்ர படம் இருந்ததைப் பாத்தன், கலியாண நாளுக்கு அவரின்ர தங்கச்சி வாழ்த்தியிருந்தா, அதுக்குப்பிறகு, அவையளைப்பற்றி தேடிப்பாத்தன், அவருடைய குடும்பம் இதே ஊரில இருக்கிறது தெரிஞ்சுது,'
"என்னடி, வேற கலியாணம் செய்திட்டாரோ?" என்ற பரிதியிடம்
"அதைவிடு பரிதி, இவ்வளவு வருசம், யாரெண்டாலும் செய்திடுவினம் தானே, அவரைப் பிழை சொல்லாத, என்ர தலைவிதி," என்றாள் பூவிழி வேதனையுடன்.
~நல்லா சொல்லுறாய், உதுதான், எங்களில இருக்கிற பலவீனம், எவ்வளவுதான் துயரத்தைச் சுமந்தாலும் எல்லாத்தையும் விதியெண்டு நினைச்சு வாழ ஆரம்பிச்சிடுவம|; கோபமாய் சொன்னாள் பரிதி.
"அதைவிடு பரிதி, நான் சொல்லுறதைக் கேள்," என்றாள் பூவிழி மீண்டும்.
பூவிழி, பேச்சை மாற்றுகிறாள் என்பது பரிதிக்குப் புரிந்தது. ~ஏனோ பொற்செழியனைக் குறைசொல்வதை அவளால் தாங்கமுடியவில்லை போல| என நினைத்தபடி,
"சரி சொல்லு" என்றாள்.
"உனக்கு நினைவு இருக்கே, ஒருநாள், வயசுபோன ஒரு ஐயாவை பைபாஸ் செய்த பிறகு நானும் நீயும் நிண்டு கவனிச்சம், அவரை எங்கயோ பாத்தமாதிரி இருக்கே எண்டு நினைச்சன், பிறகுதான் நினைவு வந்தது, அவரின்ர தங்கச்சியின்ர முகநூலில் இருந்த படத்தில இருந்தவர், அவரின்ர அப்பா, அதுக்குப்பிறகு அடிக்கடி அவரைப்போய் பாத்து, கதைச்சு, அவர் தன்ர வீட்டுக்கு வரச்சொல்லி, நானும் அங்கதானே இருக்கிறன்"
"ஓ...நீ பரமானந்தம் ஐயா வீட்ட இருக்கிறதைச் சொன்னனி தானே, அப்பிடியெண்டா, மாமனார் வீட்டிலதான் இருந்திருக்கிறாய்," கேலியாகச் சொன்னாள் பரிதி.
"சீச்சீ.....அவையளோட கொஞ்ச நாளைக்கு இருப்பம் எண்டு நினைச்சன், பெரியவர் பாவம், என்னில சரியான பாசம், அவருக்காகத்தான், இப்ப திடீரெண்டு அங்கயிருந்து போகவேண்டி வந்திட்டுது, அதுதான் மனசு தாங்கேல்ல, அவரின்ர அப்பா, தம்பி தங்கச்சியைப் பாத்துக்கொண்டு அங்க இருக்கிறது எனக்கு மனநிறைவாய் இருந்தது, அதுகூட கடவுளுக்குப் பொறுக்கேல்ல, அதையும் பறிக்க நினைக்கிறார்" சோகமாய்ச் சொன்னாள்.
"ஏன் பூவிழி, என்ன அங்க ஏதும் பிரச்சினையே, போகச்சொல்லிப்போட்டினமே?" பரிதி கேட்க,
"ஐயோ...அவையள் பாவம், எல்லாரும் நல்லவையள், இப்ப அவர் வந்திட்டார், என்னை அங்க பாத்தா என்ன நினைப்பார், மனைவியும வருவாவாம்;" என்றாள்.
"ஓ...அவரைப்பாத்தா உனக்கும் சங்கடம், அவருக்கும் சங்கடம் தான்." பரிதி சொல்ல,
"நான் அப்பாட்ட கொஞ்சநாள் கொஸ்ரலில இருக்கிறன் எண்டு கேட்டுப் பாத்தன், அப்பா வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டார், அதுதான் என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல," என்றாள் பூவிழி.
"பூவிழி, பெரியவர் பாவம்தானே, நீ திடீரெண்டு போனா அவர் யோசிப்பார், இவ்வளவு நாளா நீ அவையளில காட்டின அன்பு அர்த்தமில்லாமப் போயிடும், பொற்செழியன் நிக்கிறவரைக்கும் அவரின்ர கண்ணில படாமல் இரு, வேலை எண்டு சொல்லி எங்களோட நில்லன்," எனச்சொன்ன பரிதியை நன்றியோடு பார்த்த பூவிழி "ஓமோம் ...நீ சொல்லுறது சரிதான் அப்பிடியே செய்யிறன்" என்றாள்.
பருதியும் அங்கு பணிபுரியும் இன்னும் சில பெண்களும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். வைத்தியசாலை நிர்வாகமே அந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது.
பூவிழி, இப்பவும் உனக்கு அவரிலை பாசம் இருக்கோ? என்ற பரிதியிடம், ~சீச்சீ...எனக்கு இனிமேல் அவரிலை அந்த வீட்டு மூத்தமகன் என்கிற உறவும் மரியாதையும் மட்டும்தான் இருக்கும்| என்றாள் அவசரமாக.
மனம் சற்றே இலேசாக இருக்க, கண்களைத் துடைத்தபடி, இருவரும் எழுந்து நடந்தனர்.
Author: Vishakini
Article Title: பூவிழி வாசம் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: பூவிழி வாசம் - 6
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.