• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மரகத மாமன் - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் 1

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான்-விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினால்
கண்ணிற் பணிமின் கனிந்து.

திருநெல்வேலியிலுள்ள மகிழங்காடு எனும் கிராமத்தில் உடலைச் சில்லெனக் குளிர்விக்கும் அதிகாலைப் பொழுதில் மரகதமணீஸ்வரர் ஆலயத்தின் ஒலிப்பெருக்கியில் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் வெங்கலக் குரலில் பாடிக் கொண்டிருக்க,

"இன்னிய யாவாரத்த (வியாபாரத்தை) செழிப்பா நடத்தித் தரனுங்சாமி" சிரசின் மேல் கரங்கூப்பிக் கோபுரத்தைப் பார்த்து இறைவனை வணங்கியவனாய் கடையைத் திறந்தான் மணிவாசகம்.

தென்தமிழக ஆணின் உயரத்துடனும் முகக்களையுடனும் தினவெடுத்த தோளுடனும் வாட்டம் சாட்டமாய்க் கால்சாரையும் சட்டையும் அணிந்திருந்த மணிவாசகத்தின் மீசையிலும் தலையிலும் ஆங்காங்கே முளைத்திருந்த வெண்மயிர்கள் அவன் முப்பது வயதைக் கடந்திருப்பவன் என்று பறைச்சாற்றின.

கூரை வேயப்பட்ட அச்சிறிய கடையைத் திறந்து, தனது குட்டியானை வண்டியில் வைத்திருந்த உதிரிப்பூக்கள் நிறைந்த கோணிப் பைகளை எடுத்து வந்து கடையினுள்ளே இருந்த கல்மேடை மீது வைத்தவனாய் வாசல் பெருக்கி தண்ணீர் தெளித்துக் கோலமிட்டான் மணிவாசகம்.

ஒரு கோணிப் பையினுள் இருந்த உதிரிப் பிச்சிப் பூக்களை மேடை மீது சிறிதளவு கொட்டியவன் விறுவிறுவென நொடிப் பொழுதில் சரமாய்த் தொடுத்தான்.

கடையினுள் இருந்த சிவன் படத்திற்கு அச்சரத்தைச் சாற்றியவன் விளக்கேற்றி வழிபட்டவனாய் நெற்றி நிறையத் திருநீற்றைப் பூசிக் கொண்டான்.

மீதமுள்ள பைகளிலுள்ள பூக்களை எல்லாம் பூவாரியாகக் கொட்டி வைத்துவிட்டு நீளமான பூ நாரை கையில் எடுத்தான். செவ்வந்திப்பூ கொஞ்சம், செவ்வரளிப்பூ கொஞ்சம், வங்காளப் பச்சை கொஞ்சம் என எடுத்துத் தொடுத்து மாலையாகக் கட்டத் தொடங்கினான்.

மாலையைக் கட்டியவாறே கடையினுள் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தான். காலை ஐந்து மணி எனக் கடிகாரம் நேரத்தைக் காண்பிக்க, சட்டைப் பையினுள் இருந்து கைப்பேசியை எடுத்து யாருக்கோ அழைப்பு விடுத்து விட்டு கைப்பேசியைக் காதினுள் பொருத்தி தலையைச் சாய்த்து தோளோடு பற்றிக் கொண்டு இரு கரங்களாலும் மாலை தொடுப்பதைத் தொடர்ந்தான்.

மறுபக்கம் கைப்பேசி அழைப்பு எடுக்கப்படவும், "ஏலே பாண்டி, தூங்கு மூஞ்சு பயலே! இன்னமுமா உறங்குறவ? செத்த மூதி! சாமிக்கு சங்கு ஊதுறதுக்குள்ள வந்து நிக்கல உனக்குச் சங்கு ஊதிப்புடுவேன் பாத்துக்க" என்று திட்டியவனாய் கைப்பேசியை வைத்தவன், சில நிமிடங்களில் அவன் இடுப்புயரத்திற்கு மாலையைக் கட்டியிருந்தான்.

அடுத்தப் பத்து நிமிடத்தில் அவனின் வேலையாள் பாண்டி வந்துவிட, "ஏம்ல அன்னாடம் சீக்காளி கணக்கா வந்து நிக்குத! போலே, போயி அண்ணாச்சி கடைல காபி தண்ணி வாங்கிக் குடிச்சிக்கிட்டு எனக்கும் வாங்கியா" என்று அனுப்பி வைத்தான்.

பாண்டி வாங்கி வந்த தேநீரைக் குடித்து விட்டு இருவருமாக இணைந்து பூக்களைச் சரமாகவும் சிறிய பெரிய மாலைகளாகவும் தொடுத்து கடையின் வாயிலில் கட்டித் தொங்க விட்டனர்.

அடுத்தச் சில நிமிடங்களில் கோவிலில் பூசை ஆரம்பிக்கத் தொடங்கவும் மக்கள் ஒவ்வொருவராக வந்து மணிவாசகத்தின் கடையில் பூக்களையும், வில்வ இலைகளையும், அர்ச்சனைப் பொருள்களையும் விளக்கையும் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் செல்லத் தொடங்கியிருந்தனர்.

*****

அதே நேரம் இக்கோவிலில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் மரத்தினால் தூண்கள் அமைத்து நிறைய அறைகள் வைத்துக் கட்டப்பட்டிருந்த பாரம்பரியமான வீட்டில் இருந்து வெளியே வந்தாள் அவள்.

ஒல்லியான தேகத்தில் பச்சை வண்ணப் பாவாடையும் சிவப்பு வண்ணத் தாவணியும் அணிந்து கழுத்து வரை வெட்டப்பட்டிருந்த கூந்தலை ஆண்களைப் போல் முன்னே கோணல் வகுடு எடுத்து வாரி விரித்து விட்டிருந்தவளோ கண்ணனின் நிறத்தவளாய் இருந்தாள். கண்களில் மைத் தீட்டப்பட்டிருக்க, நெற்றியில் புள்ளி அளவில் கருப்புப் பொட்டை வைத்திருந்தாள்.

வேட்டி சட்டை அணிந்து அவ்வீட்டின் வாசலில் நின்றிருந்த மகிழுந்தின் மீது சாய்ந்து நின்றவனாய் கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவன், எதிரில் தாவணியில் வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்து, "என்ன இது கோலம்?" என்று சிரித்தான்.

"ஏன்டா, நல்லா இல்லையா?" எனக் கேட்டாள் அவள்.

"ஒட்டடைக்குச்சிக்கு துணி சுத்தி விட்ட மாதிரி இருக்கு? உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை" என்று அவன் சிரிக்க,

"ப்ரோ திஸ் இஸ் டூ மச்" என்று முறைத்தவள்,

"அம்மா தாவணி கட்டிக்கோனு எப்ப கோவிலுக்குக் கிளம்பினாலும் சொல்லுவாங்கடா. இது அவங்க எனக்காக வாங்கி வச்சது. சரி அவங்களோட சொந்த ஊருக்கு வந்திருக்கோம். அவங்க ஆசையா வாங்கிக் கொடுத்ததைக் கட்டிக்கலாமேனு நானே யூ டியூப் வீடியோ பார்த்துக் கட்டிக்கிட்டேன்" என்று பெருமூச்சுடன் சோகக் குரலில் கூறினாள்.

அவளின் அருகில் சென்று தோளைத் தட்டிக் கொடுத்தவனாய் பெருமூச்சு விட்டவன்,

"இப்ப அம்மா உன்னைப் பார்த்தாங்கனா என்ன நினைப்பாங்க தெரியுமாடா அப்பு?" எனக் கேட்டான்.

"என்ன நினைப்பாங்கண்ணா?" அதே சோகக் குரலில் அவள் கேட்க,

"சாரிமா நீ தாவணில இவ்ளோ கொடூரமா இருப்பனு தெரியாம உன்னைக் கட்டச் சொல்லிட்டேன்னு வருத்தம் தெரிவிச்சிருப்பாங்க" என்று வாய்க்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அவன் கூறவும்,

அது வரை மறைந்த தாயை எண்ணி சோகமாய் இருந்தவள், அவனின் கேலியில் உக்கிரமானவளாய்,

"டேய் மாறா! உன்னை" என்று அவனை அடிக்கப் பாய்ந்தாள்‌.

"அடியேய் நீ கண்ணாடியைப் பார்த்தியா இல்லயா? என்னமோ நான் பொய் சொல்ற மாதிரி வெறியாகுற" என்று கத்திக் கொண்டே அவன் ஓட,

"ஆமா இவரு பெரிய மன்மதரு? என்னைச் சொல்ல வந்துட்டான்! உன் மூஞ்சியை நீ கண்ணாடில பார்த்திருக்கியாடா குரங்கு?" கோபத்துடன் உரைத்தவளாய் தாவணியை இடுப்பில் சொருகியவாறே அவனை அடிக்கத் துரத்தினாள் இவள்.

இருவரும் மகிழுந்தைச் சுற்றியே வலம் வர, சட்டைப்பையில் இருந்த கைப்பேசி அலறவும் நின்றவனின் முதுகில் படபடவென அடித்திருந்தாள் அவள்.

"ஆஆஆஆ பிசாசே" என்று திட்டியவாறே முதுகில் சுளீரென வலித்த இடத்தில் கைக்கொண்டு தடவியவாறே கைப்பேசியை இயக்கினான்.

"கிளம்பிட்டீங்களா ரெண்டு பேரும். நேரம் ஆகிடுச்சே" என்று கைப்பேசியில் அழைத்தவர் கேட்கவும்,

"கிளம்பிட்டோம் மாமா" மகிழுந்தில் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவனாய் இவன் கூறவும், மகிழுந்தின் மறுபுறமாய் வந்து முன்னிருக்கையில் அமர்ந்து கொண்டாள் அவள்.

கைப்பேசியை மகிழுந்தின் ப்ளூடூத்தில் இணைத்து அழைப்பை ஒலிபரப்பியில் போட்டு விட்டு மகிழுந்தை இயக்கினான் கதிர்மாறன்.

"அங்கே அர்ச்சகர்கிட்ட எல்லாம் சொல்லி வச்சிட்டேன் கதிரு! நீங்க போனதும் அவங்க பூஜை ஆரம்பிச்சிடுவாங்க. ரெண்டு மாலையும் அர்ச்சனையும் மட்டும் வாங்கிட்டுப் போங்க" என்று அவனின் மாமா வித்யாதரன் கூற,

"சரிங்க மாமா" என்றான்.

"நீங்களும் அத்தையும் வந்திருந்தா எங்களுக்கு ஒத்தாசையா இருந்திருக்கும்ல மாமா" என்று அவள் கேட்க,

"அடடே அப்பு பக்கத்துல தான் இருக்கியா?" என்று கேட்ட அவளின் மாமா வித்யாதரன்,

"எங்களுக்கும் வரனும்னு தான் ஆசை அப்பு. ஆனா சங்கரனுக்கு ஆபிஸ் வேலை வந்துடுச்சு‌. பேரன் பேத்திகளுக்கும் ஸ்கூல் லீவ் சொல்லலை. நாங்க அங்கே வந்துட்டா என் மருமவளுக்குப் பிள்ளைங்களைத் தனியா சமாளிக்கக் கஷ்டமா இருக்கும்" என்றவர்,

"கதிரு நான் சொன்னது நினைவு இருக்குல. கோவிலுக்குப் போய்ட்டு அப்படியே நான் சொன்ன அந்தப் பையன் வீட்டையும் பார்த்துட்டு வந்துடு" என்றவராய் இணைப்பைத் துண்டித்தார்.

"எல்லா மனுசங்களும் எப்படிச் சுயநலவாதி ஆகிட்டாங்க பார்த்தியா மாறா" என்றாள் அவள்.

"ஏன் அப்படிச் சொல்ற அப்பு" எனக் கேட்டான்.

"நம்ம அப்பாகிட்ட பணம் இருக்கிற வரைக்கும் இவர் வந்த வரத்து என்ன? நான் தான் உன் பிள்ளைகளுக்கு முன்ன நின்னு கல்யாணம் செஞ்சி வைப்பேன் தங்கச்சினு அப்படிப் பேசினாரு. நம்ம அப்பா சொத்துலாம் கை மீறிப்போய் அவங்க இறந்த பிறகு நாம ஃபாரீன் போய்ட்ட இத்தனை நாள்ல என்ன ஏதுனு கேட்டிருப்பாரா?
அவரோட சொந்த தங்கச்சி தானே நம்ம அம்மா! அவங்க இறந்தப்பவாவது வந்தாரா?
அப்பா அம்மா இல்லாத பிள்ளைகளுக்கு நாம தான் முன்ன நின்னு கல்யாணம் செஞ்சி வைக்கனும்னு இத்தனை நாளா நினைச்சாரா? எங்கே அவர் கூடப் போய் ஒட்டிக்கிட்டு நம்ம கல்யாணச் செலவை அவர் தலைல கட்டிருவோமோனு ஒதுங்கத் தானே பார்த்தாரு.
இப்ப இந்த ஊரு சொத்துல நம்மளுக்கும் பங்கு இருக்குனு தெரிஞ்ச பிறகு, நமக்குக் கல்யாணம் ஆகி நாம கையெழுத்துப் போட்டா தான் முழுச் சொத்தும் அவர் கைக்குப் போய்ச் சேரும்னு உயில் இருக்கிறது தெரிஞ்ச பிறகு, இப்ப நமக்கு முப்பது வயசுக்கு மேல ஆனப் பிறகு வந்து நான் தான் முன்ன நின்னு உங்க கல்யாணத்தை நடத்தி வைப்பேன்னு நம்ம வேலை வெட்டியெல்லாம் விட்டுட்டு இங்கே வர வச்சிருக்காரே! அதைச் சொன்னேன். பணம் மனுஷங்களை எப்படி எல்லாம் மாத்துது பாரேன்" என்று விரக்தியாய் புன்னகைத்தாள் அவள்.

மெல்லப் புன்னகைத்தவனாய், "நாம ஒன்னும் அவருக்காக வரலையே! அம்மா வாழ்ந்த ஊரைப் பார்க்கனும்னு ஆசைப்பட்டோம். அதுக்காக வந்திருக்கோம்" என்றிவன் கூறிக் கொண்டிருக்கும் போது தான் துண்டிக்கப்பட்ட அந்தக் கைப்பேசியின் முகப்பில் தெரிந்த ஒளிப்படத்தைப் பார்த்தாள்.

"அடேய் உண்மையைச் சொல்லு, அம்மாக்காக வந்தியா? இல்ல இந்தப் பொண்ணுக்காக வந்தியா?" கைப்பேசியில் முகப்புப் படமாய் இருந்த பெண்ணின் படத்தைக் காண்பித்துக் கேலிச் சிரிப்புடன் கேட்டாள்.

சட்டென முகிழ்த்த புன்னகையுடன், "பொண்ணுன்னா இப்படி இருக்கனும். நீயும் இருக்கியே" என்று அவளைச் சீண்டினான்.

"நம்மளாலலாம் இப்படிப் பட்டிக்காட்டான் மாதிரி பின்னல் ஜடையும் பெரிய பொட்டும் சேலையும் தாவணியுமாலாம் இருக்க முடியாதுப்பா! ஏன்டா பதினாறு வருஷமா சிங்கபூர்ல ஐடி வேலை பார்க்கிறியே! இன்னுமாடா உன் ரசனை மாறலை" என்று கேலி செய்தாள் அவள்.

"அதெப்படி மாறும் அப்பு. 'இந்தப் பொண்ணு அழகா இருக்காலடா மாறானு' அம்மா எனக்குக் கடைசியா அனுப்பின மெசேஜ் இது தானே. அம்மா எனக்காகப் பார்த்த பொண்ணாச்சே" என்றான் அவன்.

"ஆனா அந்தப் பொண்ணு யாரு? எங்கே இருக்கா? கல்யாணம் ஆகிடுச்சா இல்லையானு தான் கண்டுபிடிக்கவே முடியலையே! எத்தனை புரோக்கர் பார்த்திருப்போம். மேட்ரிமொனில தேடியிருப்போம். சோசியல் மீடியால தேடியிருப்போம். எங்கேயுமே இந்தப் பொண்ணு பத்தின டீடெய்ல்ஸ் கிடைக்கவே இல்லயே" என்று சற்றுச் சோகமாய் உரைத்தாள்.

"அம்மா ஊருக்கு வந்திருக்கோம்ல அப்பு. அம்மா நமக்கு வழி காட்டுவாங்க" என்றவனாய் அவன் மகிழுந்தை அக்கோவிலின் தரிப்பிடத்தில் நிறுத்த,

"பார்த்தியா அப்ப நான் சொன்னது உண்மை தான். நீ அம்மாக்காக அம்மா ஊருக்கு வரலை. அந்தப் பொண்ணுக்காகத் தான் வந்திருக்க" என்று கேலிச் செய்தவளாய் வண்டியிலிருந்து இறங்கினாள் அவள்.

இருவருமாகக் கோவிலின் அருகில் இருக்கும் மணிவாசகத்தின் பூக்கடையை நோக்கிச் சென்றனர்.

புலர்ந்த அக்காலை பொழுதினில் அன்று பூத்த புது மலராய் தனது கடையின் முன்பு தாவணியில் வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்தான் மணிவாசகம்.

'பொண்ணுகளுக்கு நீளமான முடியும் கொஞ்சம் உடம்புல சதையும் இருந்தா தானே அழகு. இந்தப் பொண்ணு என்ன இப்படிக் கிராப்பு வெட்டிக்கிட்டு எலும்பு கூட்டுல தாவணி கட்டிட்டு வந்து நிக்குது' என்று நினைத்தவாறே மணிவாசகம் அவளைப் பார்த்திருக்க,

அவள் அவனைக் கண்டுகொள்ளாது பூக்கடையில் இருந்த பூக்களை எல்லாம் ஆசையுடன் பார்த்திருந்தாள்.

"ரெண்டு மாலை வேணும்" என்றவனாய் மணிவாசகத்தின் சிந்தனையைக் கலைத்தான் கதிர்மாறன்.

"என்ன மாதிரி வேணும்? சிறுசா பெரிசா?" என்று மணிவாசகம் கேட்க,

"அது தெரியலையே" என்றவனாய் தனது கைப்பேசியை எடுத்து மாமனுக்கு அழைக்கப் போக,

"என்ன விசேசத்துக்கு வாங்குறிய? சாமிக்குனா உள்ளே எந்தச் சாமிக்காக வாங்குறியனு சொல்லுங்க. என்ன மாலை எவ்ளோ சைஸ்ல சாத்துவாவனு நான் சொல்லுதேன்" என்றான் மணிவாசகம்.

"கல்யாணப் பரிகாரம்" என்றான் கதிர்மாறன்.

'ஓ இந்தப் பொட்டப் புள்ளைக்கு இன்னும் கண்ணாலம் ஆகலையோ? இப்படி எலும்பு கூடா இருந்தா எவன் கட்டிப்பான்' என்று எண்ணியவனாய்,

"அப்ப உள்ளே சாமிக்குச் சாத்துறதுக்கு ஒன்னும், யாருக்குப் பரிகாரமோ அவியளுக்குத் தக்கனாப்ல ஒன்னும் வாங்குனியல்னா சரியா இருக்கும்" என்றவாறு இரு மாலைகளை எடுத்துக் காண்பித்தான்.

"ப்ரோ இந்த பிச்சிப்பூ வாங்கித்தா" என்று கதிர்மாறனைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

"இல்லாத கொண்டைல எங்கன போயி பூவ வைப்பிய தாயி" என்று கேலிச் சிரிப்புடன் கேட்டிருந்தான் மணிவாசகம்.

தாயி என்ற அவனின் அழைப்பில் அவனைக் கனிவாய் பார்த்தாள் அவள்.

தனது தங்கையை அவன் கேலியாய் பேசியது பிடிக்காமல்,

"ஹலோ கொண்டைல வைக்கிறோம் இல்ல மண்டைல வைக்கிறோம் அது எங்க பிரச்சனை. நாங்க உங்ககிட்ட கருத்து ஒன்னும் கேட்கலையே! பூ கொடுக்குற வேலையை மட்டும் பாருங்க. எங்கப் பேச்சுக்குள்ள மூக்கை நுழைக்காதீங்க" என்று காரமாய் உரைத்திருந்தான் கதிர்மாறன்.

"ம்ப்ச் விடு மாறா" என்றவள் கூற,

"தப்பா எடுத்துக்கிட்டியலா! நான் வினயமா எதுவும் சொல்லலை தம்பி. மனசுல பட்டதைச் சொல்லிப்புட்டேன். மன்னிச்சிக்கிடுங்க" என்றவன் கதிர்மாறனிடம் பிச்சிப்பூவை எடுத்துக் கொடுத்தவாறு,

"ஆமா நீங்க ஊருக்குப் புதுசோ?" என்று பேச்சை மாற்றினான்.

"இல்ல இந்த ஊரு தான்" என்ற கதிர்மாறன் பணத்தைக் கொடுத்து மாலைகளை வாங்கிக் கொண்டு பிச்சிப்பூவைத் தங்கையிடம் கொடுத்தான்.

அந்தப் பூவை வாங்கியவள் வாசத்தை நுகர்ந்தவளாய், "அம்மாக்கு இந்தப் பூ ரொம்பப் பிடிக்கும் மாறா" என்றவாறு காதினோரம் இருபுறமும் இரு முடிகளை எடுத்து மத்தியில் இணைத்து முடிச்சுப் போட்டு அதனுள் பூவைச் சொருகியவாறு வைத்தாள்.

அவளையே பார்த்துக் கொண்டிருந்த மணிவாசகம் அவளின் அம்மாவைப் பற்றி அவள் கூறியதைக் கேட்டு,

"உங்க அம்மா இந்த ஊருக்காரவிய தானா தாயி? ஆனா இத்தனை நாளா உங்களை ஊருக்குள்ளாற காண்கலையே! இந்த ஊருல இருக்க அம்பிட்டு பேத்தையும் எனக்குத் தெரியும் தாயி. நீங்க எந்த வூட்டுக்கு வந்திருக்கிய?" என்று கேட்டான்.

"எல்லாரையும் தெரியுமா? அப்ப எங்கம்மாவை உங்களுக்குத் தெரியுமா?" எனக் கண்கள் மின்னக் கேட்டாள் அவள்.

"உங்கம்மா பேரு சொல்லு தாயி! இந்த ஊருக்காரம்மானா கண்டிப்பா எனக்குத் தெரிஞ்சவியலா தான் இருப்பாவ" என்றான் மணிவாசகம்.

"எங்க அம்மா பேரு அன்னக்கிளி" அத்தனை ஆவலுடன் அவனைப் பார்த்தவாறு அவள் உரைக்க,

இன்ப அதிர்ச்சியில் விரிந்த கண்களுடன், "அன்னக்கிளியக்கவா?‌‌ மணியக்காரய்யா வீட்டு பிள்ளையலா நீங்க! எம்பிட்டு பெரிய மனுசரு!" என்று உரைத்தவனின் குரல்மொழியே அவர்கள் மீது அவன் வைத்திருக்கும் மரியாதையைப் பறைசாற்றியது.

"ஆமா ஆமா" என்று ஒரு சேர மகிழ்வுடன் உரைத்தனர் அண்ணனும் தங்கையும்.

மணிவாசகத்தின் முகத்திலும் அத்தனை மகிழ்வு தென்பட்டது.

"உங்க வீட்டுக்குப் பக்கத்துல தான் எங்க வீடும் இருந்துச்சு. அன்னக்கிளி அக்காவை எனக்கு நல்லாவே தெரியும். சின்ன வயசுல என்னை தம்பி தம்பினு தான் கூப்பிடுவாவ அக்கா. அவிய கல்யாணம் முடிஞ்சி ஊரு விட்டு போனப் பொறவு தான் பார்க்க முடியாமப் போச்சு. அக்கா இப்ப எங்கன இருக்காவ?" என்று பூரிப்புடன் கேட்டான் மணிவாசகம்.

"அம்மா சாமிக்கிட்ட போய் மூனு வருஷம் ஆகுது" என்றான் கதிர்மாறன். சட்டென சோர்ந்த முகத்துடன் தலையைக் குனிந்து கொண்டாள் அவள்.

"அப்படியா?" என்று அதிர்ச்சியுடன் கேட்ட மணிவாசகம்,

"நல்லவியலலாம் ஏன் தான் இந்தச் சாமி இத்தனை சீக்கிரமா கூப்பிட்டுக்கிடுதோ தெரியலை" என்று பெருமூச்சு விட்டான்.

"மணியக்காரய்யா வீட்டுல இப்ப தான் யாருமே இல்லையே? எல்லாரும் ஊரு விட்டுப் போய் பல வருஷம் ஆகுதே! எங்கன தங்கியிருக்கிய ரெண்டு பேரும்?" எனக் கேட்டான்.

"ஊருக்கு வெளியே பண்ணையாரோட கெஸ்ட் ஹவுஸ் இருக்குல! அங்கே தான் வாடகைக்குத் தங்கியிருக்கோம்" என்றான்‌ கதிர்மாறன்.

"சரிங்க தம்பி. ஊருக்குள்ளாற ஏதாவது உதவி வேணும்னா தயங்காம என்னைக் கூப்பிடுங்க. பூ மாலை ஏதாவது வேணும்னாலும் சொல்லுங்க" என்றவனாய் தனது முகவரி அட்டையைக் கொடுத்தான் மணிவாசகம்.

அதனை வாங்கிக் கொண்டவனாய் தலையசைத்து விடைப்பெற்றுக் கொண்டு தங்கையுடன் கோவிலினுள் நுழைந்தான் கதிர்மாறன்.

மணிவாசகத்தின் கைகள் மாலையைக் கோர்த்திருந்தாலும் மனமோ அன்னக்கிளி அக்காவுடன் செலவழித்த சிறு வயது நினைவுகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தன.

கோவிலினுள் சென்ற கதிர்மாறனின் தங்கையோ, "டேய் மாறா! அம்மா சொன்ன மாதிரியே, அவங்க பேரைச் சொன்னாலே ஊருக்குள்ள எல்லாருக்கும் தெரியுது பாரேன்" என்று ஆச்சரியத்துடன் உரைத்தாள்.

"ஆமா ஊருக்கே ஜமீன் மாதிரி வாழ்ந்தவங்களை யாருக்குத் தான் தெரியாம இருக்கும்" என்றான் கதிர்மாறன்.

"இந்தப் பூக்கடைக்காரரை முன்னாடியே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குடா மாறா? உனக்கு அப்படித் தோணலையா?" எனக் கேட்டாள்.

"இல்லையே! ஆனா ஒரே ஊருக்காரங்ககிட்ட எல்லாம் ஒரே மாதிரி சாயல் இருக்கும்னு அம்மா அடிக்கடிச் சொல்லுவாங்க அப்பு. அதனால உனக்கு அப்படித் தோணுதா இருக்கும்" என்றான்.

கதிர்மாறனும் அவனின் தங்கையும் பேசியவாறே கோவிலின் கருவறைக்கு அருகே செல்லவும் ஐயர் பூசையைத் தொடங்கினார்.

அடுத்து ஒரு மணி நேரம் கழித்து கோவிலினுள் நடைத் திறக்கும் மணியோசை கேட்கவும், "ஏலே பாண்டி, நடை திறந்துட்டாவ போல! நான் போய்ச் சாமிய ஒரு எட்டு பார்த்துட்டு வாரேன். கடையைப் பார்த்துக்கிடுடா" என்றவனாய் விறுவிறுவெனக் கோவிலினுள்ளே சென்றான் மணிவாசகம்.

அங்குச் சாமி கருவறையின் முன்பு அண்ணனும் தங்கையும் நின்று அர்ச்சனைத் தட்டை அர்ச்சகரிடம் கொடுத்த போது அவர்களின் அருகே சென்று நின்றான் மணிவாசகம்.

கதிர்மாறன் அவனின் பெயரையும் ராசி நட்சத்திரக் கோத்திரத்தையும் சொல்லி முடித்ததும், அர்ச்சனை தட்டின் மீது கை வைத்து தனது பெயரை மரகதம் என இவள் கூறிய நொடி விருட்டெனத் திரும்பி அவளைப் பார்த்தான் மணிவாசகம்.

சட்டென அவனின் கண்கள் மென்மையாகி விட, இத்தனை நேரமாய் எலும்புக் கூடாய் தெரிந்த பெண், மரகதம் என்ற பெயரினால் அவனுக்கு அழகியாய் தெரிந்தாள்.

மரகதமணீஸ்வரர் ஆலயத்தினுள் ஒன்றாய் நின்று சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த மரகதத்தையும் மணிவாசகத்தையும் ஒன்றாய் இணைக்கும் காலம் கூடிவிட்டதை மணியோசை மூலம் உணர்த்தினார் எம்பெருமான் ஈஸ்வரன்‌.
 
Last edited:
Top Bottom