• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மேகம் 1

STN-116

Member
MTN 1

நண்பகல் நேரம்.

விமானநிலையத்துக்கே உரிய அந்த ஓயாத பரபரப்பில் கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையம் இயங்கிக்கொண்டிருந்தது.

காத்திருப்பு அறையின் பெரிய கண்ணாடி சுவர்களைத் தாண்டி வெயில் பிரகாசித்தது.

வெளியில் மேகங்கள் திரண்டு கொண்டிருந்தாலும், உள்ளே மனிதர்களின் அலை குறையவில்லை.

கொழும்பிலிருந்து சிங்கப்பூரை நோக்கி புறப்படும் UL 308 விமானத்தின் கதவுகள் திறக்கப்பட்டு முதற்கட்டமாக வணிகவகுப்பு (Business Class) பயணிகள் ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்கப்பட்டுக்கொண்டு இருந்தனர்.

அந்த பரபரப்பின் மத்தியில், நெஞ்சுரமிக்க தோள்களை கொண்ட ஒருவன் நிமிர்ந்த நடையுடன் தன் உயரத்தால் அனைவரையும் குள்ளமாக்கியப்படி, பயணப்பெட்டியை உருட்டிக்கொண்டு விமானத்தினுள் நுழைந்தான். அவனது புறத்தோற்றமும் அவன் அணிந்திருந்த நீலநிற சீருடையின் தோள்பட்டையில் இருந்த மூன்று தடித்த பட்டைகளும் எதுவும் சொல்லாமலே பறைசாற்றியது அவன் யாரென்று.

அவன் ‘தரிந்து சேனாநாயக்க.’ முன் முப்பதுகளில் இருப்பவன். விமானப்படையில் இணைந்து பத்து ஆண்டுகளில் விங் கொமாண்டர் பதவியை எட்டிப்பிடித்திருப்பவன். கூடவே அதே நீல நிற விமானப்படை சீருடையில் பிளைட் லெப்டினன்ட் அனுஷ்கா பல்லியகுருவும் அவனது வேகத்திற்கு ஈடுகொடுத்து நடந்து வந்தாள். சிங்கப்பூரில் நடக்கவிருக்கும் ஆசியா- பசுபிக் வான்வழி பாதுகாப்பு மாநாட்டுக்கு (Asia Pacific Air Defence Conference) இலங்கை வான்படையை பிரதிநிதித்துவப்படுத்தி இருவரும் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

"வெல்கம் அபோர்ட் சேர் அண்ட் மெடம்” என்ற விமானப்பணிப்பெண்ணின் கிள்ளை மொழியை புறக்கணித்துவிட்டு வழக்கம் போல தன் ஆஸ்தான ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கண்கள் மூடினான். இதுவெல்லாம் தனக்கு பழக்கம் தான் என்பதை போல அனுஷ்காவும் பணிப்பெண்ணுக்கு சிறுதலையசைப்பை கொடுத்துவிட்டு அவனுக்கு பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள். அவளுக்கு தெரியும் அவளது தரிந்து அய்யேவை, விமானம் என்று வந்தாலே அவன் இயல்புநிலை மாறிவிடும். இயன்றவரை விமானப்பயணங்களை தவிர்த்து விடுவான். இந்தப்பயணம் இன்றியமையாதது. அவனுக்கு கிடைத்த அங்கீகாரம். அதனாலேயே தன் சுய விருப்பு வெறுப்புக்களை தாண்டி வந்திருந்தான். மூடிய அவன் விழிகளில் ஒரு அழைப்புறுதல். கண்ணாடி சிதறல்களாய் சிறு சிறு நிகழ்வுகளின் நிழல்கள். நினையாதே என்று சொன்னால் தான் அதிகமதிகம் நினைக்கும் தறிகெட்ட மனது. விமானம் ஓடுபாதையில் ஓடி மேகக்கூட்டத்தின் ஊடே பறக்கும் போது அதன் வேகத்திற்கு ஏற்ப அவன் மேகப்பெண்ணின் நினைவுகளும் ஓட்டம் எடுத்தன. வருடங்கள் ஐந்து கடந்த போதும் நெஞ்சில் மாறா ரணமாய் அவளவனின் நினைவுகள். தன் இனத்தவர்கள் செய்த அநீதியால் தவறேயிழைக்காமல் தண்டிக்கப்பட்டது அவனது காதல். எதிர்த்து நின்றால் எதிர்வினையாற்றலாம். ஆனால் மன்றாடும் போது என்ன செய்வது... அவளின் கண்ணீரின் முன்னே தன் காதலை அடமானம் வைத்து மண்டியிடத்தான் முடிந்தது.

கசப்பான பக்கங்களை மீட்டும் போது "வெல்கம் ட்ரின்க் சேர்...”என்று ஆங்கிலத்தில் இனிப்பான ஒரு குரல். திடுக்கிட்டு கண்களை திறக்க அங்கே மங்கையொருத்தியின் கையில் மாம்பழச்சாறு. அதனை கையில் வாங்கியவன் நினைவில் மீண்டும் அனுமதியில்லாமலே உள்ளே நுழைந்தாள் அவள்.

"இந்த துரியனில் என்ன தான் இருக்கோ. இப்படி சாப்பிடுறீங்க. எனக்கு இதோட வாசமே பிடிக்காது. என்ன என்டாலும் எங்கட யாழ்ப்பாணத்து மாம்பழம் போல வருமா..!!! மாம்பழ சீசன் வரட்டும். கொண்டு வந்து தாறன். தின்டுபோட்டு சொல்லுங்கோ உங்கட துரியனா எங்கட மாம்பழமா என்டு."

அன்று அவள் கூறியது காதில் ரீங்கரித்தது. அவள் எப்பொழுதும் அப்படித்தான். தேனீ போல சுறுசுறுப்பாக இயங்குவது மட்டுமில்லாது வாயை மூடாமல் ரீங்கரித்துக்கொண்டே இருப்பாள். அது தானே அவனை கவர்ந்ததும் அவளை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியதும். எப்பொழுதுமே அவள் ஊரையோ மக்களையோ விட்டுக்கொடுக்க மாட்டாள். ஆரம்பத்தில் அவனை பார்த்து அந்த முறை முறைத்தாளே என்னவோ அவன் அவளது சொத்தை களவாட வந்தவன் போல. இறுதியில் அவளல்லவோ அவன் இதயத்தை களவாடிசென்றவள். திரும்ப கொடுக்கவே இல்லையே.

“பொன்ன நெத்துவ மொன ஹீனயக்த அய்யே?” (குடிக்காமல் என்ன கனவு அண்ணா?) அனுஷ்காவின் குரலில் மீண்டும் நனவுலகம் வந்தான்.

"ஹீனயக் வெலா தமய்" (கனவாகி விட்டது தான்) என்று முணுமுணுத்துவிட்டு ஜுசைப் பருகினான்.

“அய்யே, சிங்கப்பூர் பிரீபிங் பைல் ஒயா லங்க தியனவத?” (சிங்கப்பூர் பிரீபிங் பைல் உங்களிடம் இருக்கின்றதா?) என்று அனுஷ்கா கேட்க, காதலன் தரிந்து மறைந்து கமாண்டர் தரிந்து வெளியே வந்தான். அவன் முதுகு நேரானது, பார்வை கூர்மையானது, குரல் நிலையானது.

“ஒவ், மம பலலா இவரய். ஒயா பிரெசென்ட்டேஷன் ஸ்லைட் டிக செக் கலாத?" (ஓம், நான் பார்த்துவிட்டேன். நீங்க ப்ரெசென்ட்டேஷன் ஸ்லைடை செக் பண்ணுனீங்களா?)

"ஒவ் அய்யே, சிங்கப்பூர் எஜெண்டா கென ஒப கிவ்வ ஏ பொயிண்ட் எக்க… ஐ திங்க் வீ ஷுட் எம்பசைஸ் இட்..” (ஓம் அண்ணா, சிங்கப்பூர் பற்றி நீங்க சொன்ன அந்த கருத்து... இதை நாம் வலியுறுத்தணும் என்று நினைக்கிறேன்)

தரிந்து அவளை நோக்கி சரிந்து, “குட் ஒப்செர்வேர்ஷன்...” என்று மெதுவாக சொன்னான்.

அங்கே ஒருத்தி உள்ளுக்குள்ளே வெந்துகொண்டிருக்கிறாள் என்பதை அறியாதவர்களாக அவர்கள் இருவரும் சற்று நெருங்கி தாழ்ந்த குரலில் பேசிக்கொண்டிருந்தார்கள். அதை பார்த்துக் கொண்டிருந்த அவளின் விரல்கள் கைகளில் இருந்த தட்டின் விளிம்பை சற்றே இறுக்கியது. அவள் முகத்தில் மாற்றமில்லை. ஆனால் அவள் விழிகள் அவர்கள் அருகருகே சாய்ந்திருக்கும் தூரத்தை அளந்தன.

அவள் ‘மேகலா அரவிந்தன்’. அவனைப்போலவே விமானப்பணிப்பெண்ணுக்கான மயிலிறகு வண்ணம் பாதிக்கப்பட்ட, மரகதப் பச்சை நிற சீருடையில் நின்றிருந்தாள். அந்த சீருடை அவளுக்கு வெறும் வேலைக்கான உடை அல்ல, அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கையின் அடையாளம். கடந்த சில வருடங்களாக 'ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்' விமானசேவையில் விமானப்பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறாள். அவளின் பெயருக்கு ஏற்றபடி மேகங்கள் என்றால் அவளுக்கு அளவில்லா பற்று. வானம் என்றாலே அவள் இதயம் இலகுவாகும். அதற்காகத்தான் படித்த படிப்பிற்கே சம்பந்தமில்லாமல் விமானப்பணிப்பெண் நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பித்தாள். தேர்ச்சி பெற்ற நாளில் தன் வாழ்க்கை உயரப் போகிறது என்று நினைத்தாள்.

அது தன் வாழ்வையே திசைதிருப்பும் என்று அன்றே அறிந்திருந்தால்? அவள் பெற்றோர் விரும்பியது போல கணக்காளர் ஆகியிருப்பாளோ என்னவோ. இந்த மனவேதனையில் இருந்து தப்பியிருக்கலாம். எண்கள் குறைந்தபட்சம் பொய் சொல்லாது. கணக்கில் இழப்புகள் இருந்தாலும் இதயத்தில் இவ்வளவு இழப்பு இருக்காது. காலம் போடும் கணக்கை யாராலும் முன்கூட்டியே கூட்டிப் பார்த்துவிட முடியுமா?

அவள் வானத்தைத் தேர்ந்தெடுத்தாள். ஆனால் வானமே அவளது காதலை சாட்சியாக்கும் என்று அவள் அறிவாளா? அவள் வேலை செய்யும் இந்த வான்வழிப் பயணமே அவள் தவிர்க்க நினைத்த மனிதனை மீண்டும் அவள் முன் நிறுத்தியுள்ளது. மேகங்கள் அவளுக்கு பிடித்தவை. ஆனால் இன்று, அதே மேகங்கள் அவளது கண்களில் நீராகக் குவிகின்றன.

இன்று டியூட்டிக்காக வந்தபொழுதே அவளுக்கு தெரிந்திருந்தது அவர்களுடன் தரிந்துவும் பயணம் செய்யப்போகிறான் என்று. முக்கிய பிரமுகர்கள் யாரும் பிரயாணம் செய்யவிருந்தால் வழக்கமாக பணியாளர் செயல்பாட்டு (Crew Operation) பகுதியில் விமானப் புறப்பாட்டுக்கு முன் அவர்களுக்கான மேலதிக உதவிகள் மற்றும் உணவுகள் பற்றிய விளக்கக் கூட்டம் நடைபெறும். குறிப்பாக வணிக வகுப்பு பிரயாணிகளின் பெயர்பட்டியல் விபரங்கள் சரிபார்க்கப்படும் (Pre flight-Briefing).

அன்றும் அப்படித்தான் மூத்த விமானப்பணியாளர் பயணிகள் விவரப்பதிவேட்டை ( Passenger Manifest) திறந்து வாசித்தார். “வணிகவகுப்பில் பன்னிரண்டு பயணிகள் உள்ளனர். இலங்கை வான்படை அதிகாரிகள் இருவர் அதிகாரப்பூர்வ பணிக்காக பயணம் செய்கின்றனர்."

‘வான்படை’ என்று காதில் விழுந்ததும் அதுவரை அலட்சியமாக செவிமடுத்துக்கொண்டிருந்த மேகலாவின் கண்கள் மின்னின. மெதுவாக சீனியரின் கையில் இருந்த பதிவேட்டை எடுத்துப்பார்த்தாள்.

'விங் கொமாண்டர் தரிந்து சேனநாயக்க' என்று கோட்டை எழுத்துக்களில் ஆங்கிலத்தில் போடப்பட்டிருந்தது. அந்த ஒரு வரி போதும். அவளது விரல்கள் தாமாகவே அந்த காகிதத்தில் அவனது பெயரை மென்மையாகத் தடவிக்கொண்டது. அந்த பெயர்... ஐந்து ஆண்டுகளாக உச்சரிக்கத் துணியாத பெயர், மறக்க முயன்ற பெயர், மறந்துவிட்டதாக நினைத்த பெயர். இதயம் ஒருமுறை தாளம் தப்பியது. முகத்தில் மாற்றம் வரக் கூடாது என்று யாரும் கவனிக்கும் முன்னே முயன்று தன்னை அடக்கிக்கொண்டாள்.

"மேகலா, முன்புற வணிகவகுப்பு பிரிவை நீங்கள் பொறுப்பேற்கவும்,” என்று மூத்த விமானப்பணிப்பெண் அறிவுறுத்தினார்.

ஒரு நொடி தயக்கம், வேண்டுமானால் வேறொரு கேபின் பணியாளருடன் தன் பிரிவை மாற்றிக் கொண்டிருக்கலாம். “ஷுவர்" என்ற ஒரே ஒரு வார்த்தை. அவள் என்னவோ சொல்லிவிட்டாள் தான். ஆனால், அவன் நீல சீருடையில் விமான இணைப்பு பாலம் (Boarding Bridge) வழியாக தூரத்தில் நடந்து வருவதை கண்டதும் உள்ளுக்குள் ஒரு போர் தொடங்கிவிட்டது. முன்பை விட அவன் மெருகேறியிருந்தான் கூடவே முகத்தில் முதிர்ந்த அழுத்தமும். பதவி உயர்ந்தது போலவே பொறுப்பும் அவன் தோள்களில் தெளிவாக தெரிந்தது. இதற்குமேல் முடியாது என்று தன்னை சீர்படுத்திக்கொள்ள மெதுவாக உள்ளே நகர்ந்து மறைவாக நின்று கொண்டு அவனது வருகை தொடக்கம் அனைத்தையும் பாரம் தாங்கிய மனத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுக்கு அவனின் வருகை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் அவனை கண்களால் கண்ட அந்த நொடி முன்னே உருப்போட்டு கல்லாய் உறைந்திருந்த மனம் துகள்களாய் சிதறியது. பெயரைப் படிப்பது வேறு, கண்களால் காண்பது வேறு அல்லவா. அவன் நெருங்கும் ஒவ்வொரு அடியும் அவளது இதயமும் துடிப்பை அதிகரித்துக்கொண்டே வந்தது. அவன் முன்னால் தன் சுயம் இழந்து அழுதுவிடுவோம் என்று பயந்து தான் சகப்பணிப்பெண்ணிடம் வரவேற்பு பானத்தை கொடுத்துவிட்டாள். அவர்கள் என்ன பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெளிவாக தெரியாவிட்டாலும் அவர்களது நெருக்கம் அவளை ஏதோ செய்தது. அவள் பெருமூச்சை விட்டாள், அதில் காதல், கோபம், குற்றவுணர்ச்சி, பொறாமை எல்லாம் கலந்திருந்தன. அவள் தன்னை சீர்செய்துக் கொண்டாள். 'நீ இஞ்ச ஒரு கெபின் க்ரூ, அவர் ஒரு பெசெஞ்சர். அதுக்கு மேல ஒண்டும் இல்ல.' என்று தன்னை திடப்படுத்திக்கொண்டாள். முடிந்தால் தானே, அனுஷ்காவின் அசாத்திய அழகும் அவன் அவளிடம் சாய்ந்து பேசும் ஒவ்வொரு நொடியும் அவளது நெஞ்சில் ஒரு மெல்லிய எரிச்சலை விதைத்தது.

சீட்பெல்ட் அறிகுறி விளக்கு அணைந்தவுடன் கெபின் பணியாளர்கள் தங்கள் வழக்கமான சேவையில் ஈடுபட்டனர். மேகலா தனக்கான உணவு பரிமாறும் வண்டியைத் தள்ளிக்கொண்டு அவர்களது வரிசை நோக்கி மெதுவாக நகர்ந்தாள்.

அவர்களது வரிசைக்கு அருகில் வந்தபோது அவளது கைகள் நடுக்கம் எடுத்தன. அவனை எப்படி அணுகப்போகிறோம் என்று தெரியாமல் மெதுவாக விழியுயர்த்திப் பார்க்க, அவன் ஜன்னலுக்கு வெளியே மேகங்களை பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால் அவனது தாடை நரம்புகள் இறுக்கமாக இருந்தன. அவளது பார்வை அனுஷ்காவை அளவிட்டது.

பின் முகத்தில் ஒட்ட வைத்த தொழில்முறை புன்னகையுடன்,
“குட் ஆப்டெர்நூன் மேம்... வெஜ் ஓர் நொன்-வெஜ்..?” என்று வினவினாள்.

அனுஷ்காவின் பார்வை மேலெழுந்து மென்மையாக பதிலளிக்கும் முன்,

அந்தக்குரலில் அவன் சடாரென திரும்பினான். அவர்களின் கண்கள் நேராக சந்தித்தன. அவன் பார்வை கூர்மையானது. அவன் இதயத்தில் குதிரைகள் ஓடும் சத்தம். பார்த்தக்கணமே 'ஓ' என்று ஓலமிட்டது அவன் மனது. யாருக்காக விமானப் பயணங்களை வெறுத்தானோ, மீண்டும் யாரை காணக்கூடாது என்று ஒருபக்கம் நினைத்தானோ, யாரை கண்டுவிடமாட்டோமா என்று மறுபக்கம் தவமிருந்தானோ அவள், அவனின் மொத்த தவிப்பிற்கும் சொந்தக்காரி. அவனை இப்படி நடைப்பிணமாய் ஆக்கிய தேவதை. அன்று விட்டுச் சென்ற அதே இடத்தில் மீண்டும் ஒரு சந்திப்பு.

வானில் வேகமாக பறக்கும் போர் விமானங்களை கையாளும் அனுபவமுடையவனின் இதயம் தன் கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என்றது. எதையும் கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்கும் அவன் மூளையின் சமிக்ஞையில், முயன்று தன்னை அடக்கிக்கொண்டான்.

மேகங்கள் வெளியே அமைதியாக இருக்க விமானத்தின் உள்ளே இரண்டு இதயங்களில் புயல் வீசிக்கொண்டிருந்தன.
 
Last edited:
Top Bottom