மேகம் 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
MTN 12

மேகலா படுக்கையில் முகம் புதைத்தபடி விம்மி அழுதுக் கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த சுபா, பதறி ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

"என்னடி நடந்தது...? வரேக்க உன்ர மூஞ்சியே சரியில்ல... கேட்டதுக்கு தலையிடி எண்டு தானே சொன்னனீ... இப்ப ஏன் இப்படி அழுறாய்...? அப்பா வேற இப்ப எனக்கு கோல் எடுத்தவர்... உன்னோட கதைச்சவராம்... உன்ர குரலே சரியில்ல... வீட்டு நினைப்போ தெரியேல்ல.. என்ன எண்டு பாருங்கோமா எண்டு என்னட்ட கவலையா சொன்னவர்..."
என்று சுபா கூற, அவளது முதுகு குலுங்கியது.

"அடியேய்... என்ன எண்டு சொன்னா தானே தெரியும்... இப்படி அழுற அளவுக்கு என்ன நடந்தது... அங்க... ஏடி ஏதும் உன்னோட கதைச்சவனா..??? தப்பா ஏதும்...." என்று கேட்க,

இல்லையென்று வேகமாக தலையை ஆட்டினாள்.

மேகலாவை அதட்டி உருட்டி, எழுப்பி உட்கார வைத்த சுபா, அவள் கன்னத்தில் விழுந்திருந்த கற்றை முடிகளை காதோரமாகச் சொருகினாள். கண்ணிமைகள் வீங்கி, கன்னங்கள் சிவந்து, அவளது முகமே பரிதாபமாக மாறியிருந்தது.

"லவ்வர் செய்ய வேண்டிய வேலையெல்லாம் நான் செஞ்சுக்கொண்டு இருக்கிறன்... எல்லாம் என்ர தலைவிதி... பொடிகார்ட்டோட டூயட் ஆட வேண்டிய நான்... உன்னோட ரொமேன்ஸ் பண்ணிட்டு இருக்கிறன்..."
என்று சுபா சூழ்நிலையை இலகுவாக்க முயன்றாள்.

அந்தப் பேச்சைக் கேட்டு, மேகலாவின் உதடுகளில் ஒரு மெல்லிய புன்னகை கீற்றாய் தோன்றியது.

"சரி சொல்லு... ஏன் இப்படி அழுதனீ..??" என்று சுபா மெதுவாகக் கேட்க,

உதடுகள் நடுங்க மீண்டும் கேவினாள் மேகலா.

"எனக்கு விசர கிளப்பாம, அங்க என்ன நடந்தது எண்டு சொல்லு... திருப்பி திருப்பி ஒரே கேள்விய கேக்க வைக்காத என்ன..."
என்று சுபா அதட்ட, மேகலா மெல்ல வாயைத் திறந்தாள்.

அந்த பிரம்மாண்ட ஆடையகத்தில், தங்கள் தேவைகள் நிமித்தம் ஆளுக்கொரு பக்கம் செல்ல, சுபா பாதணி பிரிவைத் தேடிச் சென்றாள். மேகலாவோ மேல் தளத்திற்குச் சென்று ஆடை வகைகளைப் பார்வையிட்டபடி, ஒரு வரிசை அடுக்குகளின் பின்னால் நின்றிருந்தாள்.

அவள் கைகள் தன்னிச்சையாக ஆடைகளைத் தடவிக் கொண்டிருந்தாலும், மனம் மட்டும் சற்று முன் தரிந்து வீசிவிட்டுச் சென்ற அந்த ஒற்றைப் பார்வையில் உறைந்து போயிருந்தது.

திடீரென அவளது மணிக்கட்டை ஒரு ஆணின் கை அழுத்தமாகப் பற்றிக் கொண்டது. அதிர்ச்சியில் மேகலா நிமிர்ந்து பார்த்தாள். அங்கே, அனல் தெறிக்கும் கண்களுடன் அவள் முன்னால் நின்றிருந்தான் தரிந்து.

எதையும் பேசாமல், யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அவளை மெதுவாக ஆனால் உறுதியாக இழுத்துக்கொண்டு அங்கிருந்த ஒரு மறைவான பகுதியை நோக்கிச் சென்றான்.

அவளைச் சுவரோடு சாய்த்தபடி, தன் இரு கரங்களால் அவளைச் சிறைப்படுத்தினான். அவன் நெருக்கம் திடீரென அதிகரிக்க, அவனது சூடான மூச்சுக் காற்று அவள் முகத்தில் உரசியது.

விழிகளால் எரிப்பது போல அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“யாரவன்…?”

அந்த ஒற்றைக் கேள்விக்குள், அவனது கோபமும் பொறாமையும் சமமாகக் கலந்திருந்தது.

முதல் ஸ்பரிசம்... அதை இருவருமே உணரும் நிலையில் இல்லை...

மேகலா பயத்தில் மெலிதாக நடுங்கினாலும், அந்த நடுக்கத்தை மறைத்துக்கொண்டு ஆவேசமாக நிமிர்ந்தாள்.

"வழி விடுங்கோ எனக்கு... இதென்ன அடாவடித்தனம்... ஆராவது பார்த்தா என்ன நினைப்பினம்...??"
என்று அவனது கைகளைத் தட்டிவிட முயன்றபடி கோபமாகக் கேட்டாள்.

அவன் நகரவில்லை. இரும்புத் தூணாக அவள் முன் நின்றவன்,
"விடுறன்... முதல்ல என் கேள்விக்கு பதில சொல்லிட்டு போ... யாரவன்...??? அதுவும் அவ்வளவு நெருக்கத்தில..."
என்று வார்த்தைகளை ஒவ்வொன்றாக அழுத்திச் சொன்னான்.

அவனது ஆதிக்கம் அவளுக்குள் எரிச்சலைக் கிளப்ப,
"ஆரா இருந்தா உங்களுக்கு என்ன... முதல்ல அதைக் கேட்க நீங்க ஆர்...???"

மேகலாவின் வார்த்தைகள் அனலாகத் தெறித்தன.

அந்தப் பதில் அவனை இன்னும் மூர்க்கனாக மாற்றியது. சட்டென்று அவள் இரு தோள்பட்டைகளையும் இறுக்கிப் பிடித்து உலுக்கியவன்,

"நான் யாரா...??? உனக்கு தெரியாது... நான் உனக்கு யாரெண்டு...???"
என்று கிட்டத்தட்ட அவள் காதருகே உறுமினான்.

தோள்களில் இறங்கிய அவனது கைப்பிடியின் வலியில் முகம் சுளித்தவள், அவனை நேருக்கு நேர் வெறித்துப்பார்த்து,

"இல்ல... தெரியாது... எனக்கு நீங்க ஆருமில்ல..."
என்று கத்தினாள்.

தரிந்துவின் முகத்தில் ஒரு ஏளனமான சிரிப்பு வந்து மறைந்தது.

"ஹ்ஹ்ம்... உன்ர உதடு மட்டும்தான் பொய் சொல்லுது மேகலா... ஆனா உன்ர கண்ணு... அது உண்மையை அப்படியே காட்டிக் குடுக்குது.... உன்ர மனசக் கேட்டுப் பார்... அது சொல்லும்... நான் உனக்கு யாரெண்டு..."
என்று விரக்தியின் விளிம்பில் நின்று சொன்னான்.

மேகலா மெதுவாக மூச்சை இழுத்துவிட்டாள். விருப்புக்கும் வெறுப்புக்கும் இடையே ஒரு மெல்லிய திரைதான் இருக்கிறது என்பதை உணர அவளுக்கு அதிக காலம் பிடிக்கவில்லை.

உருவமில்லாத ஒரு இனிய அவஸ்தை தனக்குள் உருளுவதையும், ஒரு மெல்லிய காந்த விசை போல அவன் பால் தான் ஈர்க்கப்படுவதையும் கடந்த ஒரு வாரமாகவே அவள் உணர ஆரம்பித்திருந்தாள்.

ஆனால், அந்த உண்மையை அவனிடம் மட்டுமல்ல, அவளிடமே ஒத்துக்கொள்ள அவளது பிடிவாதமான மனது இடம் கொடுக்கவில்லை.

அவளது தோள்களைப் பற்றியிருந்த அவனது பிடி தளர்ந்தாலும், அவனது பார்வையின் வீச்சு குறையவில்லை. கண்கள் சிவக்க, ஒருவித தவிப்புடன் அவள் முகத்தையே பார்த்திருந்தவன், தன் உள்ளத்தில் தேக்கி வைத்திருந்த பாரத்தை வார்த்தைகளாய் கொட்டினான்.

"ஒரு கிழமை... மேகலா... இந்த ஒரு கிழமையா நான் ஒரு பைத்தியத்தைப் போல இருந்தன்.... ஒரு நிமிஷம்... ஏன், ஒரு வினாடி கூட உண்ட நினைப்பில்லாம என்னால இருக்க ஏலேல்ல.... பக்கத்துலதான் நீ இருக்கிறாய் எண்டு தெரிஞ்சும், உனக்கு இடையூறா நான் இருக்கக்கூடாது எண்டு, எண்ட மனச நானே இரும்புச் சங்கிலியால கட்டிப் போட்டு வச்சிருந்தன்..."

அவன் குரல் தழுதழுத்தது. மூச்சை ஆழமாக இழுத்துவிட்டுத் தொடர்ந்தான்.

"இண்டைக்கு... அங்க உண்ட குரலைக் கேட்டதும், என்னால ஒரு நொடி கூட அங்கிருக்க ஏலேல்ல... உன்ன பார்க்கப்போறோம் எண்ட சந்தோஷத்தில் ஓடி வந்தன்... ஆனால் அங்க... நீ வேறொருத்தனோட அத்தனை நெருக்கமா... அத்தனை மகிழ்ச்சியா... சிரிச்சுப் பேசிட்டு இருந்ததைப் பார்த்ததும் எண்ட நெஞ்சே வெடிச்சுடும் போல இருந்தது... கடந்த ஒரு கிழமையா நான் பட்ட கஷ்டத்தில… அந்தத் தவிப்பில... ஒரு வீதம் கூடவா நீ உணரேல்ல...?"

மேகலா எதுவும் பேசாமல் மௌனமாக நின்றாள்.

அவளது மௌனம் அவனை இன்னும் வாட்டியது. அவளது முகத்தை தன் கைகளுக்குள் ஏந்தத் துடித்தவன், தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டு கேட்டான்.

"சத்தியமாச் சொல்லு... உனக்கு என்னப் பிடிக்கேல்லயா...? உண்மையாவே உனக்கு என்னப் பிடிக்கேல்ல எண்டால், அத இப்பவே எண்ட முகத்தைப் பார்த்துச் சொல்லு.... ஆனால், அது உண்ட உள்ளத்திலிருந்து வரோணும்... உன்ர உதடு சொல்லுற பொய்களை நான் கேட்கத் தயாரில்ல... 'உன்னைப் பிடிக்கேல்ல' என்று உண்ட இதயத்திலிருந்து ஒரு வார்த்தை சொன்னால் போதும் மேகலா... சத்தியமாகச் சொல்கிறேன்... அதுக்குப் பிறகு என்ர மூச்சுக் காத்து கூட நீ இருக்கும் திசைப் பக்கம் வீசாது. நான் அப்படியே விலகிப் போயிருவன்... சொல்லு..." என்று உடைந்த குரலில் கூறினான்.

சொற்களைத் தொலைத்துவிட்ட மேகலா, கண்ணீரோடு அவனை வெறித்தாள். அவளது உதடுகளில் உறைந்திருந்த மௌனத்தை, ஆயிரம் கதைகள் பேசும் அவளது விழிச்சலனங்கள் உடைத்தெறிந்தன.

'எனக்கா உன்ன பிடிக்காது... உன்ன பிடிச்சு தொலைச்சதினால தானடா... இண்டைக்கு வார்த்தைகளற்று கண்ணீர் வடிக்கிறன்... புன்னகைய மட்டும் முகவரியா கொண்ட உன்ர முகம்... என்ர வைராக்கியத்த வேரோடு சாய்ச்சுப் போட்டுது... உன்ர பார்வை என்ர இதயத்தில ஊடுருவி, உனக்கும் எனக்குமான இடைவெளியை குறைச்சிட்டுது... ஆனால்... அங்க... என்ர குடும்பம்... உங்கட ஆக்களால் நாங்க பட்ட வலி... ஏலாது... எப்படி என்னால உன்ர காதலை மறுக்க ஏலாதோ... அதேபோல அவேயளின்ர உணர்வுகளைக் கொன்று, உன்ர காதலை என்னால ஏற்கவும் ஏலாது...'

ஒருபுறம் அவளது மனதைக் கொள்ளைகொண்ட, எதிர்பார்ப்பில்லாத இவனது ஆழ்ந்த நேசம்...

மறுபுறம் கடந்து வந்த காலத்தில், காயங்களை மட்டுமே பரிசாய்ப் பெற்று, அதன் ஆறாத வடுக்களை இன்றளவிலும் சுமந்து கொண்டிருக்கும் அவளது குடும்பத்தின் பாசம்...

இரண்டுக்கும் நடுவில் அவள் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள்.

கண்களில் திரண்ட நீர் தடையின்றி வழிந்து, கன்னங்களில் கோடுகளாய் ஓடியது. அதைத் துடைக்கும் தெம்பின்றி, மண்டியிட்ட மனதோடு அவனை இறைஞ்சும் பார்வை பார்த்தாள்.

"தயவுசெஞ்சு என்ன விட்டுவிடுங்கோ... என்னால... என்னால... இதுக்கு மேல தாங்கிக் கொள்ள ஏலேல்ல..."
உடைந்த குரலில் அவள் கைகூப்பினாள்.

அவளது அந்த இறைஞ்சலும், விம்மலும் அவனது உள்ளத்தை ஊடுருவியது.

அதுவரையில் கொதிக்கும் தணலாய் நின்று கொண்டிருந்த தரிந்துவின் கோபம், அந்த ஒரு துளி கண்ணீரில் பட்டெனப் பனியாக உருகியது.

அவளது சொல்லாத மௌனமும், கட்டுக்கடங்காத கண்ணீருமே அவளது உள்ளக்கிடக்கையைப் பறைசாற்றின. இதற்கு மேல் அவளது வாய்மொழி ஒப்புதல் அவனுக்குத் தேவைப்படவில்லை.

உள்ளம் இலேசாக, கண்களில் மென்மையைத் தேக்கியபடி, அவளது வழியைத் தளர்த்திவிட்டு...

"போ..."
என்றான் ஒற்றை வார்த்தையில்.

அந்தக் குரலில் அதிகாரமில்லை, மாறாக அவளது வலியைப் புரிந்துகொண்ட ஒரு மென்மை இருந்தது.

அவன் பிடியிலிருந்து விடுபட்ட மேகலா, தன் கண்ணீரைத் துடைக்கக் கூட நிற்காமல், விறுவிறுவெனப் பெண்கள் ஓய்வறையை நோக்கி ஓடி மறைந்தாள்.

கதவைத் தாழிட்டுக் கொண்டு, கண்ணாடியில் தெரிந்த தன் முகத்தைப் பார்த்தவள், தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் விம்மி அழுதாள்.

கண்ணாடியில் தெரிந்த பிம்பம் அவளைப் பார்த்து ஏளனம் செய்வது போலிருந்தது. அவளது ஆழ்ந்த நேசத்திற்கும், குடும்பத்தின் கௌரவத்திற்கும் இடையே நடக்கும் இந்தப் போரில் அவள் ஒவ்வொரு நொடியும் சிதைந்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது அவள் கையில் இருந்த அலைபேசி அதிர்ந்தது. திரை மின்னியது...

'அப்பா'.

அந்தப் பெயர் திரையில் தோன்றியதும், மேகலாவின் கண்ணீர் அணை கடந்த வெள்ளமாய் மேலும் பெருகியது. தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு, நடுக்கத்தை மறைத்து அழைப்பை ஏற்றாள்.

"ஹலோ... அப்பா..."

விம்மலை விழுங்கிக் கொண்டு கரகரப்பான குரலில் அழைத்தாள்.

"ஹலோ... என்ன மகள்... ஏன் உங்கட குரல் ஒரு மாதிரி இருக்கு...? ஏதும் மேலுக்கு சுகமில்லையா...?"
மறுமுனையில் அரவிந்தனின் குரலில் தந்தைக்கே உரிய அக்கறை ததும்பியது.

உதடுகளைப் பற்களால் கடித்து, தன் அழுகையை அடக்கிக் கொண்டு,

"இல்லையப்பா... இஞ்ச ஏசி கொஞ்சம் ஒத்து வரேல்ல... அதான் சின்னதா ஒரு தடிமனும், தலையிடியும்... வேறொண்டுமில்ல... நான் வைக்கட்டா...??? பிறகு எடுக்குறனான்..."
என்று தழுதழுத்த குரலில் பொய்க்கூறினாள்.

"சரி மா... உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கோ... குளுசை ஏதும் வேணுமெண்டால் சிவாகிட்ட வேண்டி கேளுங்க..." என்றார் அந்த பாசமுள்ள தந்தை.

"இல்லையப்பா... இஞ்ச மெடிக்கல் ரூம் இருக்கு.. நான் வேண்டி போடுறன்... நீங்க கவலைப்படாதேயுங்கோ..." என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள்.

கைபேசியை வைத்த அரவிந்தனுக்கு மனசு கேட்கவில்லை. தான் வளர்த்த மகள், தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்ற உள்ளுணர்வு ஒரு தந்தையாய் அவரைச் சுட்டது.

அங்கே மேகலாவின் நிலை இன்னும் மோசமாக இருந்தது. அவளது இதயம் அவனை நோக்கி ஓடிச் சென்று தஞ்சமடையத் துடித்த ஒவ்வொரு கணமும், சுவரில் எறிந்த பந்தாய் அவளது உறவுச் சங்கிலிகள் அவளைப் பின்னோக்கி இழுத்தன.

தன் காதலை வெளிப்படுத்துவது, தன் தந்தையின் நம்பிக்கைக்குச் செய்யும் துரோகம் என்ற எண்ணம் அவளைக் குடைந்தது.

முகத்தை அள்ளி அடித்துக் கழுவியவள், டிஸ்ஸுவினால் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு வெளியே வரவும், அங்கே சுபா அவளைத் தேடிக்கொண்டு வரவும் சரியாக இருந்தது.

மேகலாவின் வெளிறிப்போன முகத்தையும், வீங்கியிருந்த கண்களையும் கண்டதும்,

"என்னடி... உன்ர மூஞ்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு... கண்ணெல்லாம் ஏன் இப்படி வீங்கிப் போய்க் கிடக்கு...?" என்று பதற்றத்துடன் கேட்டாள்.

"ஒண்டுமில்லயடி... கொஞ்சம் தலையிடியா இருக்கு சுபா... எனக்கு இப்பவே சென்டருக்குப் போகோணும் போல இருக்கு சுபா..." என்று தளர்வாகச் சொன்னாள் மேகலா.

அவளது நிலையைப் புரிந்துகொண்ட சுபா, அவளைக் கையோடு அணைத்துக்கொண்டு வெளியே அழைத்துச் சென்றாள்.

அங்கே நின்றிருந்த நண்பர்களிடம்,
"மேகிக்கு கொஞ்சம் சுகமில்லாம இருக்கு... நாங்க ரூமுக்குக் வெளிக்கிடுறம்... நீங்க ஷொப்பிங் முடிச்சிட்டு வாங்க..." என்றாள்.

"நானும் உங்களோடயே வாறன் சுபா... இந்த நேரத்தில உங்களை மட்டும் தனியா அனுப்ப ஏலாது..."
என்று சிவாவும் அவர்களுடன் இணைந்து கொண்டான்.

மேகலாவின் வாடிய முகம் அந்த இடத்தையே ஒருவிதமான கனத்த அமைதிக்கு உள்ளாக்கியது.

மற்றவர்கள் அவளிடம் நலம் விசாரித்துவிட்டு அனுப்பி வைக்க, மேகலா பாரமான இதயத்துடன் அங்கிருந்து வெளியேறினாள்.

விடுதி அறைக்குள் நுழைந்ததுமே, தன் பாரத்தைத் தாங்க முடியாது கட்டிலில் வீழ்ந்தாள் மேகலா. அப்பொழுது சுபாவின் கைபேசிக்கு ஓர் அழைப்பு வரவும், அவள் பேசிக்கொண்டே வெளியேறியிருந்தாள்.

சிறிது நேரம் கழித்து உள்ளே வந்த சுபாவிடம், அதுவரை அணைபோட்டு வைத்திருந்த தன் மனக்குமுறல்கள் அனைத்தையும் அழுகையும் விம்மலுமாக அவள் கூறி முடிக்க, சுபாவுக்கோ அவளை எண்ணிப் பெரும் பாவமாக இருந்தது.

மேகலாவின் மனது ஒரு தெளிந்த நீரோடை போல சுபாவுக்குத் தெரிந்தது. அவளது இதயம் தரிந்துவை நோக்கி ஈர்க்கப்படுவதையும், அதே சமயம் குடும்பப் பாசம் அவளைப் பின்னோக்கி இழுப்பதையும் சுபா உணர்ந்தாள். ஆனால், இந்தப் போராட்டத்திற்குத் தீர்வுதான் என்னவென்று அவளுக்கும் புரியவில்லை.

இனப் பிரிவினை, கடந்த காலக் காயங்கள் என இவர்களுக்கு இடையே இருக்கும் அந்த இமாலயச் சுவரைத் தகர்ப்பது சாமானியமான காரியமல்ல என்பது சுபாவுக்குத் தெரியும்.

வார்த்தைகளால் அவளைத் தேற்ற முடியாது என்பதை உணர்ந்த சுபா, ஒன்றும் சொல்லாமல் மேகலாவைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள்.

அந்த மௌனமான அணைப்பில் 'நான் உனக்காக இருக்கிறேன்' என்ற உறுதி இருந்தது. சுபாவின் தோளில் முகம் புதைத்து அழுத மேகலாவுக்கு, அந்த ஆறுதல் ஒரு சிறு மருந்தாக அமைந்தது.

இதயக் கதவை நேசம் தட்டிட...
இனம் பட்ட காயம் இடையினில் மோதிட...
இரண்டுக்கும் நடுவில் அனலிலிட்ட புழுவாய் மேகப் பெண்...





 

Author: Sathya Karunya
Article Title: மேகம் 12
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Gowri Karthikeyan

Well-known member
May 5, 2026
1,290
384
83
Chennai
அச்சோ மேகியும் பாவம் தானே🥺🥺🥺🥺🥺🥺
இப்ப தரு மேகி கிட்ட பேசினது தமிழ்லையா இல்ல சிங்களத்திலா..... டவுட்டு 😁😁😁😁
 
  • Haha
Reactions: Sathya Karunya

Sathya Karunya

Well-known member
May 5, 2026
130
281
63
Sri Lanka 🇱🇰
அச்சோ மேகியும் பாவம் தானே🥺🥺🥺🥺🥺🥺
இப்ப தரு மேகி கிட்ட பேசினது தமிழ்லையா இல்ல சிங்களத்திலா..... டவுட்டு 😁😁😁😁
தமிழில் தான்...